தமிழ் இலக்கியங்களில் தாவர அறிவியல்

0

-சு.விமல்ராஜ்

சங்க இலக்கியங்கள் பழையனவற்றைப் பாதுகாக்கின்ற ஆவணங்களாக விளங்குகின்றன. பழந்தமிழர்கள் இயற்கையோடு இயைந்து அதன் முழுமைத்தன்மையைச் சிதைத்துவிடாமல் மிக நுணுக்கமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த இலக்கியங்கள் மிகச்சரியான சான்றுகளாக விளங்குகின்றன. தமிழர்களின் இந்த நுணுக்கம், வானியல்,தாவரவியல்,விலங்கியல்,உளவியல், மொழியியல் போன்ற பல்துறைப் புலமை இவைகளெல்லாம் பல நூற்றாண்டுகள் காடு, மலை, கடல், விலங்கு, பறவை, வானம் என்ற இயற்கையின் எல்லா நிலைகளையும் அதன் ஆழ அகலங்களில் நுழைந்து அனுபவித்து வாழ்ந்ததன் மூலம் பெற்ற பட்டறிவின் வெளிப்பாடே என்று சொல்லலாம்.

தமிழிலக்கியத்தில் இருக்கக்கூடிய தாவார அறிவியல் உண்மைகள், தாவர மேலாண்மை, சுற்றுச்சூழல் அல்லது இயற்கை மீதான முழுமையான அன்பு இவைகளைப் பார்ப்பதற்குமுன்னால் தமிழர்களின் உயிர்க்கொள்கையைச் சற்று நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். காரணம், அந்த உயிர்க்கொள்கையே மிக அற்புதமானது. மேலைநாட்டு அறிஞர் பெருமக்கள் உயிர்க்கொள்கை, தாவரம் சார்ந்த கொள்கை இவைகளைப் பதிவுசெய்தது 19ஆம் நூற்றாண்டு. ஆனால் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாக இலக்கிய இலக்கண நூல்களின் வாயிலாகப் பல்வேறு அறிவியல் நுணுக்கங்களைத் தமிழர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அவற்றோடு நாவே
மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே
ஆறறி வதுவே அவற்றோடு மனனே
(தொல்.மர.1526)

என்று உயிர்களை அதன் அறிவின் தன்மைக்கேற்ப வகைப்படுத்துகிறார் தொல்காப்பியர். கரோலஸ் லின்னேயஸ் உலக உயிர்களை இரண்டு பிரிவாக பிரித்தார். ஒன்று தாவர உலகம், மற்றொன்று விலங்கு உலகம். தொல்காப்பியர் சுட்டும் ஓரறிவு உயிர் தாவர உலகம். ஏனைய நான்கு உயிர்களும் விலங்கு உலகத்தைச் சார்ந்தது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து புலன்களின் அறிவுகளை வைத்தே உயிர்களின் வகைப்பாட்டியலைத் தொல்காப்பியர் முன்வைக்கிறார். ஆறாவது புலனாக மனத்தைச் சுட்டியே மனத்தின் ஆற்றல் பயன்படுத்தப்படுகிற உயிராக மனித விலங்கை அடையாளப்படுத்துகிறார். அதுமட்டுமின்றி மனிதனை உயர்திணை என்று பிரித்துக்காட்டி, மனிதனைத் தவிர்த்த ஏனைய உயிர்களை அல்திணை என்றார் அவர். ஹிப்போகிரேட்டஸ், அரிஸ்டாடில், தியோஃபரஸ்டஸீம், ப்ளைனி த எல்டர், ஜான்ரே, கரோலஸ் லின்னேயஸ், அகஸ்டின் பாரமஸ்டின் கண்டோல் ஆகிய இவர்களெல்லாம் உயிரினம் தொடர்பாகவும், தாவரத்தின் வகைப்பாடுகள் தொடர்பாகவும் விதியைப் படைத்தவர்கள்.

தொல்காப்பியர் புலன் அறிவை வைத்துப்பேசுகிறார். மேலை நாட்டு அறிஞர் பெருமக்கள் உயிர் இயங்குதல் அல்லது திசுக்களின் அடிப்படையில் பிரிக்கிறார்கள். 19-ஆம் நூற்றாண்டில் வார்மிங் நீர்வாழ் தாவரங்கள், இடைனிலைத் தாவரங்கள், வறள்நிலத் தாவரங்கள் என்று மூன்றாகப் பிரித்தார். தாவர வகைப்பாடு என்பது அதன் வளரும் தன்மையை வைத்துத்தான் பிரிக்கப்படுகிறது. தாவரங்கள் வளரும் இடம், அதன் சூழல் எது என்பதை வைத்து அதன் தன்மையைப் பிரிக்கிறார்கள் அறிவியலாளர்கள். தமிழர்களின் தாவர வகைப்பாடு வளர்நிலை அடிப்படையில் இருந்தது, மேலை நாட்டு வகைப்பாடும் வளர்நிலை அடிப்படையில் இருந்தபோதும் 18-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு நுண்ணோக்கி கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாகத் தாவரங்களின் இனப்பெருக்க உறுப்பு அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டது. தமிழில் இத்தகைய செயல்முறை அறிவியல் வளர்ச்சி இல்லை.

மேனாட்டு அறிஞர்களின் பார்வையில் தாவரங்கள் தாலோபைட்டா, பிரையோபைட்டா, டெரிட்டோபைட்டா என்று மூன்று பெரும்பிரிவாகப் பார்க்கப்படுகிறது. தாலோபைட்டாவை தகட்டுத்தாவரங்கள் என்றும் பிரையோபைட்டாவை பாசத்தாவரங்கள் என்றும் டெரிட்டோபைட்டாவை குழாய்த்தாவரங்கள் என்றும் தமிழில் அழைப்பர். குழாய்த்தாவரம் என்னும் அமைப்பில்தான் பெரும்பாலான புல், மரம், செடி, கொடி ஆகிய அனைத்தும் அடங்கும். மேலும் விதைமூடிய தாவரம் விதைமூடாத தாவரம் என்றும் சுட்டுவர். விதை மூடியது ஆஞ்சியோஸ்பெர்ம் என்னும் பொதுவானது. விதை மூடாதது ஜிம்னோஸ்பெர்ம். இது குளிர்பகுதிகளில் வளரக்கூடியது.

இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்று அறிஞர்கள் கருதும் தொல்காப்பியர் ஓரறிவு உடையது என்று தாவரத்தையே சுட்டுகிறார். “புல்லும் மரனும் ஓரறி வினவே”(தொல்.மர.1527) என்கிறார். இந்த இடத்தில் புல் என்றும், மரம் என்றும் தாவரத்தை இரண்டாக பிரிக்கிறார். புறக்காழ் உடையது புல், அகக்காழ் உடையது மரம், காழ் என்பதை வைரம் என்று பேச்சு வழக்கில் கூறுவார்கள். இந்த வகைப்பாடு உள்ளீடு அடிப்படையிலானது. உலகில் உள்ள அனைத்துத் தாவரங்களையும் இந்த வகைப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்பது தொல்காப்பியரின் எண்ணம். புறவயிர்ப்பு உடைய புல்லின வகைத் தாவரத்திற்குரிய உறுப்புகளைக் குறிப்பதற்கென்று தனியே பெயர் வழக்குகள் உள்ளனவென்பதைத் தொல்காப்பியர்,

தோடே மடலே ஓலை என்றா
ஏடே இதழே பாளை என்றா
ஈர்க்கே குலையென நேர்ந்தன பிறவும்
புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்
(தொல்.மர.1586)

என்று குறிப்பிடுகிறார். புல்லினத்தின் இலை தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ் என்னும் பெயர்களால் வழங்கப்படுகிறது. அவற்றின் பூவுறுப்பு பாளை எனப்படுகிறது. பழம் கொத்தாகத் தோன்றுவதால் அவை குலை என்று பெயரிட்டுக் கூறப்படுகிறது. நீண்ட இலையின் மைய நரம்புகள் ஈர்க்கு என்று அழைக்கப்படுகிறது.

அகவயிர்ப்பு உடைய மரவகைத் தாவரத்திற்கு உரிய உறுப்புகளைக் குறிப்பதற்கு தொல்காப்பியர்,

இலையே முறியே தளிரே தோடே
சினையே குழையே பூவே அரும்பே
நனையே உள்ளுறுத்த அனையவை எல்லாம்
மரனோடு வரூஉம் கிளவி
(தொல்.மர.1587) என்கிறார்.

புல்லினம் மரஇனம் என்ற இரண்டிற்கும் பொதுவான உறுப்புகளைச் சுட்டிக்காட்டுவதற்கு,

காயே பழமே தோலே செதிளே
வீழோடு என்றாங்கு அவையும் அன்ன
(தொல்.மர.1588)

என்கிறார். தென்னையும் கமுகு என்னும் பாக்கும்  புல்வகையைச் சார்ந்தது இதன் காய் தேங்காய் கமுகங்காய் எனப்படுகிறது. வேம்பு மருதம் இவ்விரண்டும் மரவகையைச் சார்ந்தது. இதன் காய் வேப்பங்காய் மருதங்காய் எனப்படுகிறது. பழத்திற்கும் இதையே கூறுவர். பனை புல்வகையைச் சார்ந்தது; வேம்பு மரவகையைச் சார்ந்தது. இவ்விரண்டிற்கும் பனந்தோல், வேப்பதந்தோல், பனஞ்செதில் வேப்பஞ்செதில் என்பன பொதுவாக உள்ளன.

புல் மரம் என்ற பகுப்பு அதன் உள்ளீடு தொடர்பானது. அதுமட்டுமல்லாமல் தமிழில் வளரியல்பு நோக்கில் தாவரம் வகைப்படுத்தப்படுகிறது. அவை மரத்தாவரம், கொடித்தாவரம், நிலத்தாவரம், நீர்த்தாவரம் என்பனவாகும். இந்த வகைப்பாடு பூவை முன்னிலைப்படுத்தியே பிரித்துப்பார்க்கப்படுகிறது. இந்த அடிப்படையில் பூவை மரத்தில் பூக்கக்கூடிய கோட்டுப்பூ, கொடிப்பூ, செடி அல்லது புல்லினங்களில் பூக்கக்கூடிய நிலப்பூ, நீர்ப்பூ என்று நான்காக வகைப்படுத்தப் படுகிறது.

கோட்டுப்பூ கொடிப்பூ நீர்ப் பூவொடு
புதல்பூ
என்று இவை நால்வகைப் பூவே ( பிங். நிகண்.2781) என்கிறது பிங்கல நிகண்டு. இந்த நான்குவகை அடிப்படையில் பல்வேறு சான்றுகளைத் தாங்கி நிற்கிறது சங்க இலக்கியங்கள். கோங்க மரத்தின் பூந்தாதினைச் சொல்லும்பொழுது அகநானூற்றில் சினைப் பூங் கோங்கின் நுண் தாது’ (அகம்.25.10) என்று இடம்பெற்றிருக்கிறது. சினை என்பது மரத்தாவரத்தின் உறுப்புப்பெயர். வண்டுகள் மாலை நேரத்தில் கூம்பும் இயல்புடைய நீர்ப்பூக்களில் இருந்து விலகி மரத்தின் பூக்களைப் போய்ச்சேர்ந்தன என்னும் செய்தியை அகநானூற்றின் ஒரு பாடல் வழியே பெறமுடிகிறது.

அதாவது,
வண்டினம்
சுனைப்பூ நீத்துச் சினைப்பூப் படர
(அகம்.71.4) என்று சுட்டுகிறது.

புதலில் பூக்கள் பூத்திருந்ததைப் புறநானூற்றுப்பாடல் “வயலகம் நிறைய புதல்பூ மலர” (புறம்.117.3) என்கிறது.

சங்க இலக்கியத்தில் இருக்கக்கூடிய வகைப்பாடுகளை எடுத்துக்கொண்டால், மரம், கொடி, புதல், செடி, பூண்டு, பயிர், நீர்த்தாவரம், புல், பாசி, காளான், நார், புலன் உணர்வுத்தாவரங்கள், விரிவாக எடுத்துக்கொண்டால் அதில் மரங்கள் வளரியல்பு அடிப்படையில் எடுத்தாளப்படுகிறது. மரம் என்ற சொல் திராவிட மொழிகளில் மரம், மரனு, மர, மேன், மர்ம், மாக், மக் என்று ஒரே பொருளை உணர்த்தியும் ஒலித்திரிபு அடைந்தும் வழங்கப்படுகிறது. மரவழிபாடுதான் மிகப்பழமையான வழிபாடு.

சங்க இலக்கியம், வாவல் பழுமரம் (குறுந்.172), காடே நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த ( நற்.256), மரம் தலை மணந்த நனந்தலை கானத்து ( நற்.246) என்று மரவகையைச் சுட்டி நிற்கிறது. மரவகைக்கு மேலை நாட்டு அறிவியல் அறிஞர்கள் கூறும் நெறிமுறைகள் சங்கத்தமிழில் நிறைந்து காணப்படுகிறது. பராரை (அகம்.69) என்னும் அதன் திண்மையுடைய வைரம் அகநானூற்றில் குறிப்பிடப்படுகிறது. மீமிசைச்சாந்து (நற்.1), வான் பொரு நெடுஞ்சினை ( நற்.3) என்ற நற்றிணைப்பாடல் வரிகள் மரம் உயர்ந்து வளரக்கூடியது என்பதை எடுத்துக்காட்டுகிறது. தொல் மூதாலம் (குறுந்.15) என்னும் குறுந்தொகைக் கவிதை மரம் நீண்டநாள் உயிர் வாழக்கூடியது என்பதை உணர்த்துகிறது. காழ் என்னும் மரத்தின் வயிர்ப்பை உணர்த்துவது போல் வெளிறுஇல் காழ்வேலம் [வேல மரம்] (நற்.302.), நறுங்காழ் ஆரம் [சந்தன மரம்] ( நற்.5) புறக்காழ் உடைய புல் இனமான மூங்கிலைக் குறுந்தொகைப்பாடல் (304) ‘முளிவெதிர் நோன்காழ்’ என்கிறது.

அரைப்புல்லுருவி வகையாகச் சந்தனத்தைக் கூறுகிறது,

குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்
நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப
( நற்.5) என்பது நற்றிணைப்பாடல். இது தமக்கு உரிய உணவைத் தயாரித்துக்கொண்டு மீதமுள்ள உணவுக்கு ஏனைய தாவரங்களில் இருந்து எடுத்துக்கொள்ளும். புல்லுருவி வகை என்பது உண்டு. இது தமக்கு உரிய உணவைத் தாமே தயாரிக்கும் ஆற்றல் இல்லாமல் பிற தாவரம் அல்லது உயிர்களைச் சார்ந்து அவற்றிலிருந்து உணவைப் பெறுபவை ஆகும். இதைப் புல்லுருவி அல்லது சாறுண்ணி என்று அழைப்பர்.

அடுத்து கொடிவகைகள் நீண்டு வளரக்கூடியவை. ஆனால் தாமாகவே தனித்து நிற்கும் ஆற்றல் இல்லாமல் பிறவற்றைச்சார்ந்து நிற்கக்கூடியது. இவற்றின் தண்டுப்பகுதி மிக மெல்லியவை. கயிறு போன்று இருக்கக்கூடியவை. வேர்க்கொடி, படர்க்கொடி, பற்றுக் கம்பிக்கொடி, சுற்றுக்கொடி, பெருங்கொடி என்று ஐந்துவகையாகக் கொடியைப் பிரிப்பர். கொடியின் மெலிந்த தன்மையை நுண்கொடி(அகம்.237), புன்கொடி(மலைபடு.101), மென்கொடி(குறுந்தொ.186) என்பனவும், பரூஉக்கொடி (மலைபடு.216) தண்டின் பருத்த தன்மையைக் காட்டுகிறது. நெடுங்கொடி(ஐங்குறு.6),  மாக்கொடி(குறுந்தொ.256) என்பன கொடியின் வளமான தன்மையை எடுத்துக்காட்டுகிறது. வெண்கொடி(ஐங்.456),கருங்கொடி(மலைபடு.521),செங்கொடி(ஐங்குறு.25),பைங்கொடி(பெரும்பாண்.337) என்பன கொடியின் நிறத்தை உணர்த்துகிறது. நறுங்கொடி தாமலம்(நற்.292) என்பது மணத்தைக் குறிக்கிறது. இவர் கொடிப்பீரம் (ஐங்.464), இவர்ந்த அதர்கொடி அதிரல் (அகம்.159), இவர்ந்த பைங்கொடி அவரை (குறுந்தொ.240), தவழ்கொடி(கலி.102), நெடுங்கண் ஆரத்து அலங்குசினை வலந்த பசுங்கேழ் இலைய நறுங்கொடித் தமாலம்  ( நற்.292),  குறவர் கொன்ற குறைக்கொடி நறைப்பவர் நறுங்காழ் ஆரம் சுற்றுவன( நற்.5) என்னும் இடங்கள் எல்லாம் படரியல்பு அடிப்படையில் படர்கொடி இதனை ஆங்கிலத்தில் கிரீப்பர் என்பர், ஏறுகொடி என்பதை ஆங்கிலத்தில் கிளைம்பர் என்பர். இவ்வகை கொடிக்கு இவை சான்றாக அமைகின்றன. கொடிக்கு பவர் என்னும் பெயரும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

புதல் வகையை எடுத்துக்கொண்டால் செடி என்|றும் பொருள் கொள்ளலாம். ஏனெனில் இது நிலத்தில் புதர் புதராய் மண்டி வளரக்கூடியது.  சிறு செடிகளையும், குற்று மரங்களையும் செடி என்று வழங்குவர். செடியை அவற்றின் வாழ்நாள் அடிப்படையில் ஒரு பருவச்செடி, இருபருவச்செடி, பல பருவச்செடி என்று மூன்றாகக்கொள்வர். ஒரு பருவச்செடி ஒரு குறிப்பிட்ட பருவத்தில் தோன்றிச் சிலவாரம் அல்லது மாதங்களில் இலையும், பூவும் கனியும் உண்டாகி விதைமுற்றி அப்பருவத்திலேயே பட்டுப்போகும். இருபருவச் செடியில் முறையே சேமித்தல் முதல் பருவத்திலும் அவ்வுணவைக் கொண்டு பூவும் கனியும் உண்டாக்குதல் இரண்டாம் பருவத்திலும் நிகழும். இரண்டாம் பருவத்தின் முடிவில் அத்தாவரம் முழுமையும் பட்டுப்போகும். பல பருவச்செடியில் ஒருமுறை செடி தோன்றியபின் அது வளர்ந்து பூ, கனிகளை உண்டாக்கியதும் மேற்புறமிருக்கும் தண்டுக்கிளை மட்டுமே அழிந்து போகும். நிலப்பரப்பின் உட்புறம் உள்ள கிழங்கு அல்லது மட்டத் தண்டுக்கிழங்கு முதலியவற்றிலிருந்து புதிய தண்டுக்கிளை முளைத்து வளரும் இத்தகைய வளர்ச்சி முறை மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் வரை நிகழும். இந்த பகுப்பை வைத்துப்பார்த்தால் பலபருவச்செடி என்பது குறுமர வகுப்பு அல்லது புதலை குறிப்பதாகும். இருபருவ வாழ்விகளை செடி என்று கொள்ளலாம். ஒரு பருவ வாழ்விகளைப் பூடு என்று அழைக்கலாம்.

அணிலின் வால்போல் கதிர்கொண்ட ஊகம்புல், மணமிக்க புல்லாகிய நரந்தம், பசும்புல், நுண்புல் முற்றா இளம்புல், முளிபுல் என்று ஊகம்புல்லும், நரந்தம்புல்லும், பொது நிலையில் புல்லின் வளரி இயல்பும் கோடிட்டுக்காட்டப்படுகிறது.

விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா
வழும்பு கண் புதைத்த நுண்ணீர்ப் பாசி
அடிநிலை தளர்க்கும் அருப்பம்
(மலைபடு.220-22) என்ற மலைபடுகடாம் வரிகள் பாசித்தாவரத்தின் வழுக்கும் இயல்பை வழும்பு என்ற சொல்லால் குறிக்கிறது. பாசியின் வழுக்கும் தன்மைக்குக் காரணம் மியூக்கஸ் என்னும் நெய்ப்புத்தன்மையுடைய ஒரு திரவம்தான். அந்த மியூக்கஸை வழும்பு என்ற சொல்லால் சங்க இலக்கியம் குறித்துவைத்திருக்கிறது.

கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான்யாற்று
கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ (நற்.65.2-3) என்று நீரின் அலையால் பிரிந்தும் சேர்ந்தும் பரவும் தன்மைக்கொண்ட பசிய நிறமுடைய பச்சைப்பாசியை குறிக்கிறது., இவை அன்றி இழைப்பாசி, கொட்டைப்பாசி ஆகியனவும் காட்டப்படுகிறது. பசுங்கனிகங்கள் பொருந்தித் தம் உணவைத் தாமே தயாரித்துக்கொள்ளும் இயல்பால் அமைந்த இதைத் தாவரமாக உணர்ந்து பாசி என்று பெயரிட்டு அழைத்திருக்கின்றனர் சங்கக்கவிஞர்கள்.

தம் உணவைத் தாமே தயாரிக்காமல் பிறவற்றைச் சார்ந்து வாழக்கூடியவை காளான்கள். இது பெசிடியோமைசீட் என்னும் வகையைச் சார்ந்தது. சங்க இலக்கியத்தில் காளான்கள், காளான், ஆம்பி என்ற பெயரால் வழங்கப்பட்டுள்ளது.

ஆம்பி வான் முகை அன்ன கூம்பு முகிழ்
உறையமை தீந்தயிர் கலக்கி நிரைதெரிந்து
(பெரு.157-58)

ஆடு நனி மறந்த கோடுயர் அடுப்பின்
ஆம்பி பூத்த
(புறம்.164)

புல்லென் அட்டில்
காழ் சேர்முது சுவர்க் கணச்சிதல் அரித்த
பூழி படர்ந்த புழற்காளாம்பி
(சிறுபாண்.132-34)

என்று காளான் குறிக்கப்படுகிறது. காளானின் தன்மை ஈரப்பசை பொருந்திய இருண்ட இடங்களில் குறிப்பாக புழுதியில் தோன்றுவன. அதையே, பல நாள்கள் அடுதொழில் நடைபெறாத அடுப்பு, சமையலறைச் சுவர்கள் ஆகியவற்றின் மீது முளைத்திருப்பதைக் காட்டியிருக்கிறது.

நார் என்பது மிக முக்கிய ஒன்றாகும். தாவரங்களின் சத்துக்களைக் கடத்துவதற்கு இந்த நார் பங்குவகிக்கிறது. முருங்கை மரத்தின் நார் தொடர்ச்சியற்றது. இதை,

சுரம் புல்லென்ற அற்ற அலங்குசினை
நாரில் முருங்கை நவிரல் வான்பூ
(அகம்.1)

என்ற அகநானூற்றுப்பாடல் சுட்டிக்காட்டுகிரது. எளிதில் முறியும் இயல்பினாலே இது முருங்கை என்னும் பெயர் பெற்றதென்பர்.

வாழை, தென்னை, மரல், சணல், பாலை, ஆம்பல் ஆகியவற்றில் நீர் கடத்தும் நார் பற்றிய உண்மை சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புலன் உணர்வுபெற்ற தாவரங்களாக நெருஞ்சி, அனிச்சம் ஆகியன காட்டப்பெறுகிறது. தரைத்தாவரமான நெருஞ்சி மலர்ந்ததும் கதிரவனின் ஒளியை நோக்கி திரியும் தன்மையை,

சுடரொடு திரிதரும் நெருஞ்சி(அகம்.336)

பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ ஏர்தரு சுடரின் எதிர்கொண்டாஅங்கு(புறம்.155)

என்ற பாடல் வரிகளும்,

தூநீர் பயந்த துணையமை பிணையல்
மோயினள் உயிர்த்த காலை மாமலர்
மணியுரு இழந்த அணி அழிதோற்றம் (அகம்.5)

என்ற வரிகளும் தாவரங்களின் புலன்உணர்வை எடுத்துக்காட்டுவனவாக உள்ளன.

உலகில் தற்போது வாழ்ந்து வரும் தாவரங்கள் ஏறத்தாழ 3,63,730 தாவரப் பேரினங்களில் அடங்கும். இவை பரிணாம முறையில் நுண்மங்கள், பாசிகள், காளான்கள், ஈரற்செடிகள், பெரணைகள், விதை மூடாத தாவரங்கள் பூக்கும் தாவரங்கள் எனப் பாகுபடுத்தப்பட்டுள்ளன. பூக்கும் தாவரங்களில் மட்டும் 96,680 பேரினங்கள் உலகெங்கிலும் வளர்கின்றன. ஒரு பேரினத்தில் பல சிற்றினங்கள் உண்டு. பண்டைய இந்திய நாட்டில் மட்டும் வளரும் சற்றேறக்குறைய 47,200 சிற்றினங்கள் பற்றிய விளக்கங்களை ஜெ.டி.ஹூக்கர் (1897) என்பவர் எழுதியுள்ளார்.பழைய சென்னை மாநிலத்தில் 9300 சிற்றினங்கள் பற்றிய விளக்கங்களை ஜெ.எஸ். காம்பில்(1915) எழுதியுள்ளார். இம்மாநிலத்தில் வளரும் ஏறக்குறைய 10,640 மரம், செடி, கொடிகளின் தாவரச் சிற்றினப் பெயர்களையும் அவற்றின் தமிழ்ப்பெயர்களையும் ஏ.டபுள்யூ.லஷிங்டன் (1915) என்பவர் பட்டியலிட்டுள்ளார்.

சங்க இலக்கியங்களில் மட்டும் 210 மரம் செடி கொடிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட தாவரங்கள், இனி புதிய தாவரத்தைக் கண்டறிந்தாலும் அதை இண்டர்நேஷனல் கொட் ஆஃப் பொடான்னிகல் நோமென்க்லேச்சர்- ஐ சி பி என் என்ற விதிமுறைக்கு உட்பட்டே பகுக்கின்றனர். புதிய அனுமதி பெறுவதற்கு லண்டல் கியூ நிறுவனத்தை நாடவேண்டும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தாவரப்பட்டியல் வெளியிடப்படுகிறது., அதற்கு இண்டெக்ஸ் கெவென்சிஸ் என்று பெயர்.

பழந்தமிழர்கள் இயற்கையை மிக ஆழமாக நேசித்திருக்கிறார்கள். தங்களின் ஒவ்வொரு அசைவையும் இயற்கையின் விதியை மீறாமல் நடத்தியிருக்கிறார்கள். இன்று இயற்கையை மதியாத பல விதிமீறல்கள்  நடைபெறுவதால் தான் வானம் பொய்க்கிறது; இல்லையேல் காலம் மாறிப் பெய்கிறது. சுற்றுச்சூழலை மனிதன் மதித்து நடக்கவேண்டும். கவிஞர் வைரமுத்து அவர்கள் மரத்தின் பயனாகா பட்டியலிடுவார்,

“பிறந்தோம்
தொட்டில்
மரத்தின் உபயம்
நடந்தோம்
நடைவண்டி
மரத்தின் உபயம்
………………………………………
இறந்தோம்
சவப்பெட்டி பாடை
எரிந்தோம்
சுடலை விறகு
மரத்தின் உபயம்”(இ.பூ.168)

மரம் மனிதனுக்குக்கொடுப்பது…..

உண்ணக்கனி- ஒதுங்க நிழல்
உடலுக்கு மருந்து – உணர்வுக்கு விருந்து
அடையக்குடில் – அடைக்கக் கதவு
அழகு வேலி – ஆடத்தூளி
தடவத் தைலம் – தாளிக்க எண்ணெய்
எழுதக் காகிதம் – எரிக்க விறகு (இ.பூ.166)

இத்தனைப் பயன்களையும் பெற்றுக்கொண்டு இயற்கையை

மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான் என்று மரத்தை உயர்த்தியும் மனிதனின் தவற்றை உணர்த்தியும் கூறியிருக்கிறார். இயற்கையை இனிது போற்றுவோம்; எழிலார்ந்த வாழ்வை கூடிப்பெறுவோம்.

*****

சு.விமல்ராஜ்
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
அ.வ.அ.கல்லூரி(தன்.)
மன்னன்பந்தல்.
அலை:8220470590
மின்:thamizvimal@gmail.com

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.