விஷ்ணுசித்தரும் வாத்சல்ய பாவமும்
-முனைவர் நா.கவிதா
கண்ணன் கோகுலத்தில் வளர்ந்து வந்த வரலாறு மட்டுமே தனது உயிர் மூச்சாகக் கொண்டு பாசுரங்கள் இயற்றியவர் பெரியாழ்வார். ”மன்னர்கள் யாவரும் உய்யவரு கோமான் தன் கண்ணன் என” கோகுலத்தில் அனைவரும் கொண்டாடும்பொழுது, யசோதையாகத் தன்னைக் கருதி எல்லையின்றிப் பெருகும் அன்பால் பெருமாள்மீது இன்தமிழால் பாசுரங்கள் பாடியுள்ளார்.
பெரியாழ்வார், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பெருமாளிடம் தாய்ப்பாவனையில் பாசுரங்கள் பாடியவர்கள் ஆவர். இவர்களில் குலசேகராழ்வார் மட்டும் தந்தை நிலையிலும் பாசுரங்கள் பாடியுள்ளார். இவற்றில் பெரியாழ்வாரின் தாய்ப்பாவனைப் பாசுரங்களின் சிறப்புகளையும், தாய் சேய் பாவ உணர்வாகிய வாத்சல்ய பாவம் எங்ஙனம் அமைந்துள்ளது எனும் கருத்தினை எடுத்துரைப்பதாகவும் இவ் ஆய்வுக் கட்டுரை அமைந்துள்ளது.
வாத்சல்ய பாவம் (தாய் – சேய் பாவம்):
திருமாலுக்குரிய பண்புகளில் ஒன்றாக
“வாத்சலயம்”என்பது குறிக்கப்படுகின்றது. “வத்ஸ்லா” என்பது கன்றினைக் குறிக்கும் வடமொழிச் சொல்லாகும். கன்றின் மேல் பசு கொள்ளும் அன்பினைப்போல் இறைவனும் உயிர்கள்மேல் அன்பு உடையவன் என்னும் கருத்தினையே இப்பண்பு உணர்த்துகிறது. அதுவே, தாய் – சேய் அன்பு நிலையே வாத்சல்ய பாவமாக எடுத்துரைக்கப்படுகின்றது. இத்தகைய பாவ உணர்வில் இறைவனின் உயர்ந்த நிலையையும், தனது தாழ்ந்த நிலையையும் முற்றிலும் அடியவர்கள் மறந்து விடுகின்றார்கள். இறைவனைத் தம்முடைய குழந்தையாகப் பாவித்துத் தம்மைத் தாயாகவும், தந்தையாகவும் எண்ணி உண்மையான அன்பினை வெளிப்படுத்துகின்றனர். இப்பூலோகத்தைக் காப்பவனையே தனது அரவணைப்பால் காக்கப்பட வேண்டிய குழந்தையாக எண்ணி பாடுகிறார் விஷ்ணுசித்தர்.
தாய் – சேய் பாவ பாசுரங்கள்
| வ.எண் | பதிகங்களின் தொடக்கம் | பாசுர எண் | உள்ளடக்கம் |
|
1. |
வண்ண மாடங்கள் | 13-22 | கண்ணன் பிறந்தான் |
|
2. |
சீதக் கடலுள் | 23-43 | திருமேனி எழில் |
|
3. |
மாணிக்கங்கட்டி | 44-53 | கண்ணன் தாலாட்டு |
|
4. |
தண்முகத் துச்சுட்டி | 54-63 | அம்புலிப்புருவம் |
|
5. |
உய்ய வுலகுபடைத்து | 64-74 | செங்கீரைப்பருவம் |
|
6. |
மாணிக்கக் கிண்கிணி | 75-85 | சப்பாணிப்பருவம் |
|
7. |
தொடர்சங் கிலிகை | 86-96 | தளர்நடைப்பருவம் |
|
8. |
பொன்னியற் கிண்கிணி | 97-107 | அச்சோப் பருவம் |
|
9. |
வட்டு நடுவே | 108-117 | புறம் புல்கல் |
|
10. |
மெச்சூது சங்க | 118-127 | அப்பூச்சி காட்டுதல் |
|
11. |
அரவணையாய் ஆயரேறே | 128-138 | தாய்ப்பாலுண்ண அழைத்தல் |
|
12. |
போய்ப்பா டுடைய | 139-151 | காதுகுத்தல் |
|
13. |
வெண்ணெய் | 152-161 | நீராட அழைத்தல் |
|
14. |
பின்னை மணாளனை | 162-171 | குழல்வாரக் காக்கையை வா எனல் |
|
15. |
வேலிக்கேல் வெட்டி | 172-181 | காக்கையைய் கோல் கொண்டு வரக் கேட்டல் |
|
16. |
ஆனிரை மேய்க்கநீ | 182-191 | பூச்சூட அழைத்தல் |
|
17. |
இந்திர னோடு | 192-201 | காப்பிடல் (திருஷ்டி கழித்தல்) |
|
18. |
வெண்ணெய் விழுங்கி | 202-212 | பிள்ளை விளையாட்டு |
|
19. |
தன்னே ராயிரம் | 223-233 | தாய்பாலூட்ட அஞ்சுதல் |
பெரியாழ்வாரது பாசுரங்களில் ஏறக்குறைய பாதிக்கும் மேலாக தாய் – சேய் பாவமே காணப்படுகின்றது. “தாயார் மகிழ ஒன்னார் தளரத் தளர்நடை நடந்தனை” என்று தனது குழந்தை வளர்கின்ற நிலையைக் கண்டு அவனது லீலைகளைப் பாடியுள்ளார். சொற்சுவையும், பொருட்சுவையும் கொண்டதாக, இசையோடு பாடி மகிழும் வகையில் இப்பாடல்கள் யாவும் அமைந்துள்ளன.
தேவகி யசோதையாக யசோதை பெரியாழ்வாராக
பெரியாழ்வார் பாசுரங்களில் தாய்மை உணர்வு மிகுதியும் மிளிர்கின்றது என்பதைத் தொடக்கத்தில் இருந்தே கண்டுவருகிறோம். அதிலும் தொடக்கப் பாசுரங்களில் எல்லாம் பெரியாழ்வார் கண்ணனைத் “தேவகியின் குழந்தையாகவே” மறக்காமல் தேவகியை நினைவூட்டுகிறார். பின்னர், “யசோதையின் குழந்தை” என்பதையும் முன்வைத்ததோடு, ஒரு கட்டத்தில் தேவகி, யசோதை என்பதெல்லாம் மறைந்து – என் பிள்ளை, என்மகன் கோவிந்தன், என் சிறுக்குட்டன் என்று தன் மகனாகவே எண்ணிப்பாடி மகிழ்கின்றார்.
”சீதக் கடலுள் ளமுதன்ன தேவகி
கோதைக் குழலா ளசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி!” (நாலாயிர திவ்யப் பிரபந்தம் – 23) என்பதில் கண்ணன் தேவகி குழவியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளான்.
பின்னர்,
”மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுபிள்ளை!” (நாலாயிர திவ்யப் பிரபந்தம்-34) என்று யசோதை வளர்க்கும் நீலநிறமான சிறுபிள்ளை என்று அடைமொழியிட்டுப் பாடுகிறார். அதனை அடுத்து, யசோதை மறைந்து பெரியாழ்வார் வெளிப்படையாக என்மகன் என்று கூறுகின்ற முறைமையை,
”என் மகன் கோவிந்தன்கூத்தினை இள மாமதீ
நின்முகம் கண்ணுள ஆகில்,நீயிங்கே நோக்கிப் போ” (நாலாயிர திவ்யப் பிரபந்தம்-54) என்ற பாசுரத்தில் காணலாம். குழந்தைக்கு அம்புலியைக்காட்டி அமுது கொடுக்கும் இப்பதிகத்தில் பெரியாழ்வார் தனது குழந்தையைக் கோவிந்தா, பெருமான் என்று பதிவு செய்துள்ளார்.
”என் சிறுக்குட்டன் எனக்கோர் இன்னமுது எம்பிரான்
தன் சிறுக் கைகளால் காட்டிக் காட்டி யழைக்கின்றான்” (நாலாயிர திவ்யப் பிரபந்தம்-55)
“என் குழந்தை மிகச் சிறியவன், இனிய அமுது போன்று இனிக்கக்கூடியவன் என்னைக் கண்டு வரும்படியாகக் கைகளால் சைகை காட்டி அழைக்கிறான்” என்பதில் பெருமிதத்துடன் எனது குட்டன், என்மகன் என்று கூறுவதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். ஆக, மேற்கூறிய பாசுரங்களால் பெருமாளை வளா்ப்பதில் தனது அன்பினைப் பதிவுசெய்தவர்களாகத் தேவகி யசோதையாக யசோதை பெரியாழ்வாராக மிளர்வதைக் காண இயலுகின்றது.
திருமேனி அழகில் மயங்கும் தாய்உள்ளம்
தாய் தனது குழந்தையின் எல்லாச் செயல்களிலும் தனது மனத்தினைப் பறிகொடுக்கிறாள். தனது குழந்தை தூங்கினாலும், அழுதாலும் அழகுடையதாகவே தாயின் பார்வையில் காண்ப்படுகிறது. அவ்வகையில் உலகையே படைத்த இறைவன் குழந்தையாக அவதரித்தவுடன் அழகில் மயங்கிய தாய்உள்ளம் கோகுலத்தில் உள்ள கோபியர்கள் அனைவரையும் அழைத்துக் கண்ணனின் அழகைக் காணவரும்படி அழைக்கிறது. பாதாதி கேச வருணனையாகப் பெருமாளின் பாதத்தில் தொடங்கிக் கால்விரல், முழந்தாள், தொடை, முத்தம், இடை, உந்தி, வயிறு, மார்பு, தோள்கள், கைகள், கழுத்து, வாய், மூக்கு, கண்கள், புருவம், மகரக்குழை, நெற்றி, குழல் என்று அனைத்து உறுப்புகளின் அழகையும் அணுஅணுவாக இரசிக்கிறார்.
இங்கு யசோதையாகவே பெரியாழ்வார் மாறிவிட்டார் என்தற்கான மற்றொரு சான்று புலப்படுகிறது. தாயின் பார்வையில் குழந்தையின் உறுப்புகளில் வேறுபாடு இல்லை. அதனால்தான் ஆண் குழந்தையின் பிறப்பு உறுப்பை முத்தம் என்ற சொல்லினால் எடுத்துரைத்து வருணனை செய்கின்றார்.
“பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே, பவளவாயீர்! வந்து! காணீரே!” (நாலாயிர திவ்யப் பிரபந்தம்-23)
என்று பாதாதிகேச வருணனையில் பாதத்தினைக் காணக் கோபியர்களை அழைக்கின்றார். அப்பாதாதிகேச வருணனையின் உள்ளடக்கத்தைப் பின்வரும் பகுதியில் காணலாம்.
- பாதம் – தாமரை மலர் போன்ற பாதங்களை வாயில் வைத்து சுவைக்கும் அழகு.
- பத்து விரல்கள் – முத்தும், மணியும், வயிரமும், நன்பொன்னும் கலந்தாற் போன்ற பத்து விரல்களின்அழகு.
- கணுக்கால் – வெள்ளித்தண்டை பெருமானின் கணுக்காலில் இருப்பதால் தண்டைக்கு என்னே ஒரு பெருமை.
- முழந்தாள் – கயிற்றால் அடிக்க வரும் யசோதையிடம் இருந்து தப்பிக்க கண்ணன் தவழும் பொழுது உள்ள முழந்தாள் அழகே அழகு.
- தொடை – பூதனை, இரணியன் என்ற இருவரையும் கொன்ற கண்ணனின் தொடை அழகினைக் கோபியர்களே காண்பீர்களாக.
- முத்தம் – அஸ்த நட்சத்திற்கு பத்து நாட்கள் முன்பு தேவகியின் வயிற்றில் பிறந்த கண்ணனின் முத்தத்தின் அழகை ஆனந்திக்கிறாள்.
- இடை – இடையில் உள்ள அரைஞாண், பவழவடம், முத்துவடம் இவற்றின் பெருமையைக் கூறல்.
- உந்தி – குட்டியானை போன்று யாதவச் சிறுவர்களை வெற்றிபெறும் கண்ணனின் உந்தி அழகை அவன் துயிலும் பொழுது மட்டுமே காண இயலும்.
- உதரம் – கண்ணனது விஷமம் தாங்காமல் கட்டப்பட்ட தாம்புக் கயிற்றால் உண்டாகிய தழும்பினைக் காணுங்கள்.
- திருமார்பு – கௌஸ்துப மணி துலங்கும் கண்ணனது மார்பழகு.
- தோள்கள் – சகடாசுரனை நாலைந்து மாதக் குழந்தையாக இருந்த கண்ணன் சிறிய பாதத்தால் உதைத்தழித்தான். அவனது தோள் அழகினைக் காண்பித்து மகிழ்தல்.
- கைகள் – சங்கு, சக்கர ரேகைகள் பொருந்திய களவுசெய்து உண்ட நெய்ப்பசையுடைய கைகளின் அழகைத் தோழியரிடம் காட்டல்.
- கண்டம் – நந்தகுமாரன் வயிற்றில் பிரளய காலத்தில் உலகங்களே அடைக்கலமாயின. அத்தகைய கழுத்து அழகினைக் கண்டு மெய்சிலிர்த்தல்.
- வாய் – கொவ்வைக் கனியை ஒத்த வாயை உடைய சிங்கக் குட்டி கண்ணனே.
- எள்ளுப்பூ நாசி – கண்ணனைக் குளிப்பாட்ட மஞ்சளால் நாவினை தேய்க்கும் பொழுது – கண்ணழகால், உதட்டில் தோன்றும் குறும்புச் சிரிப்பழகால், எள்ளுப்பூ நாசி அழகால் யசோதையையும் கோகுலத்தில் உள்ள அனைவரையும் பூரிப்படையச் செய்வான்.
- கண்கள் – அசுரர்களின் தீமையை அழித்து வளர்கின்ற கண்ணனின் கண் அழகே அவனுக்கு அப்பெயரை இட்டுத்தந்தது. அக்கண்ணழகைக் காண இரு கண்கள் போதுமா?
- புருவம் – கருப்பு வைரம் போன்ற புருவ அழகைக் காரிகையீரே காண்பீர்களாக.
- காது – மகரகுண்டலங்களைக் காதில் அணிந்து அவற்றுக்குக் கண்ணன் பெருமை சேர்க்கிறான்.
- நெற்றி – சிறுமிகளது விளையாட்டுப் பொருட்களான சிறுமுறம், குட்டிப்பானை, வளர்ப்பு மைனா ஆகியவற்றைப் பிடுங்கிக் கொண்டு நெற்றியில் முத்து முத்தாக வியர்வை அரும்ப ஓடும் கண்ணன் அழகைக் காணுங்கள்!
- கூந்தல் – கன்றுகளை மடக்கக் கண்ணன் பொன்கொம்பினைப் பிடித்துக் கொண்டு ஓடும்பொழுது காற்றில் கண்ணனின் சுருண்ட முடிகள் அசைகின்ற அழகைக் காண விரைந்து வருவீர்களாக.
இவ்வாறு கண்ணனின் அழகைக் கூறும் 21 பாசுரங்களை எவா் பக்திமையுடன் இயம்புகின்றனரோ அவர்கள் பெருமானுடன் பரமபதத்தில் பிரியாது இருப்பர் என்று கூறி இப்பாசுரப் பகுதியினை நிறைவு செய்கிறார்.
”சுருப்பார்குழலி யசோதை முன் சொன்ன
திருப்பாத கேசத்தைத் தென்புதுவைப் பட்டன்
விருப்பால் உரைத்த இருபதோ டொன்றும்
உரைப்பார் போய் வைகுந்தத் தொன்றுவர் தாமே!” (நாலாயிர திவ்யப் பிரபந்தம்-43)
இப்பதிகப் பகுதியில் பெரியாழ்வார் தன்னை முழுமையாக யசோதையாக மாற்றிக் கொண்டமைக்குப் பல சான்றுகள் காணக் கிடக்கின்றன.
வாய்மொழி இலக்கியப் பதிவாகத் தாலாட்டு :
குழந்தையைத் தூங்கச் செய்வதற்காக உறவினர்கள் அளிக்கும் பரிசுப் பொருட்களை வரிசைப்படுத்திக்கூறித் தாலாட்டுப் பாடும் இயல்பான தாயாக பெரியாழ்வார் “தாலாட்டு” என்ற பாசுரப் பகுதியில் மிளிர்கிறார். வாய்மொழி இலக்கியமாக மிளிரும் நாட்டுப்புற இலக்கியத்தில் குழந்தையைத் தூங்க வைக்கும் தாலாட்டுப் பாடல்களில் உறவினர்கள் பரிசுப் பொருட்களுடன் வந்து பார்க்கும் நிலை நவிலப்பட்டுள்ளது.
“சின்னண்ணன் வந்தானோ கண்னே! – உனக்கு
சின்னச் சட்டை கொடுத்தானோ? – உனக்கு
பட்டு ஜவுளிகளும் கண்ணே! – உனக்கு
பலவர்ணச் சட்டைகளும்
பட்டுப் புடவைகளும் கண்ணே! – உனக்கு
கட்டிக்கிடக் கொடுத்தானோ?”
என்ற வாய்மொழி இலக்கியக் கருத்தினைப் பதிவுசெய்வது போன்று உலகின் முழுமுதல் கடவுளான பெருமாளுக்குப் பிரம்மா, சிவன் முதலிய கடவுளர்களும் ஏனைய தேவர்களும் பரிசுப் பொருட்களுடன் வந்த தத்தமது தகுதிக்கேற்ற இடத்தில் நின்றனர் என்று பெரியாழ்வார் பாடுகிறார்.
“மாணிக்கங் கட்டி வயிர மிடைகட்டி
ஆணிப்பொன் னாற்செய்த வண்ணச் சிறுதொட்டில்
பேணி யுனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ” (நாலாயிர திவ்யப் பிரபந்தம் – 44)
திருமாலின் உந்தியில் இருந்து பிறந்தமையால் பிரம்மனுக்குத் திருமால் தந்தை உறவாகும். அதே திருமால் கண்ணனாக அவதரித்த பொழுது பிரமன் ஆணிப்பொன்னால் சிறுதொட்டிலைத் தருகிறான். இந்திரனோ அழகான சதங்கையைத் தருகிறான். பரிசுப்பொருளைத் தந்துவிட்டு வெகுதூரத்திலும் இல்லாமல் அருகிலும் இல்லாமல் நடுவில் நின்றான் என்று கூறித் தாலாட்டுப் பாடிக் கண்ணனைத் தூங்கவைக்க முயல்கிறார்.
சிவந்த திருக்கண்களை உடைய கருமேகம் போன்ற கண்ணனே, உனக்கு அனைத்து தேவர்களும் சங்கில் உயர்ந்ததாகத் திகழும் வலம்புரியையும், உனது திருவடிக்குச் சதங்கைகளையும், அழகிய முன்சரிவளையும், தங்க அரைஞாண் கயிறும், திருமார்பில் அணிய நாணும் அனுப்பியுள்ளனர் என்று பரிசுப்பொருட்களின் பட்டியலைக் குழந்தைக்கண்ணனிடம் கூறிவிட்டுத் தாலாட்டுப் பாடுகின்றார் பெரியாழ்வார். இதனை,
“சங்கின் வலம்புரியம் சேவடிக் கிண்கிணியும்
அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்
செங்கண் கருமுகிலே! தாலேலோ! தேவகி சிங்கமே தாலேலோ!” (நாலாயிர திவ்யப் பிரபந்தம் – 47)
என்ற பாசுரத்தில் அறியலாம். அத்துடன் கண்ணனுக்கு வந்த பரிசுப் பொருட்கள் பற்றிப் பெரியாழ்வார் கூறும் கற்பனை வளத்தைப் பின்வரும் பட்டியல் பகுதியில் காணலாம்.
பெரியாழ்வாரின் கற்பனையும் ஆழ்ந்த அன்பும்
| வ.எண் | பரிசுப் பொருட்கள் | பரிசுவழங்கியவா் |
| 1. | ஆணிப்பொன் தொட்டில் | பிரம்மன் |
| 2. | இடைச் சுரிகை | ஈசன் |
| 3. | சதங்கை | இந்திரன் |
| 4. | தேவர்கள் | வலம்புரிச்சங்கு,சதங்கை,அரைஞாண் கயிறு,
முன்சரிவளை |
| 5. | குபேரன் | ஐம்படைத்தாலி,ஆரம் |
| 6 | வருணன் | முத்தாரம்,சங்குவளை |
| 7 | திருமகள் | துளசிமாலை |
| 8 | பூமாதேவி | கச்சை,உடைவாள், தங்கவளையல், நவரத்தினச்சுட்டி, தங்கப்பூ |
| 9 | பார்வதி | வாசனைப்பொருட்கள்,
கண்ணுக்கு மை, சிந்துரம் |
இத்தகையப் பரிசுப் பொருட்கள் பற்றிய விளக்கத்தில் பட்டா்பிரானின் கற்பனையும் பெருமாள்மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பும் புலப்படுகின்றது. எவர் இத்தகைய பத்து பாசுரங்களை பக்தியோடு படிப்பரோ அவர்களுக்கு எக்காலத்திலும் துன்பம் இல்லை.
கருமலைக்குட்டியின் தளர்நடையில் மகிழும் விஷ்ணுசித்தர்:
பாதங்களை முழுவதும் தரையில் பதிக்காமல் தத்தி நடைபயிலும் குழந்தையின் தளர்நடையில் யசோதை மனம்விரும்பி மூழ்கி காணப்படுகிறாள். ஓரடி எட்டு வைத்து நடைபயிலும் குழந்தை, தான் சாதித்த மனவுணர்வினால் பெரும் புன்னகையை வெளிப்படுத்தும். இதில் மனம் மகிழ்ந்து யசோதை இருப்பதை,
“முன்நல் ஓர் வெள்ளிப் பெருமலைக்
குட்டன் “மொடு மொடு” விரைந்தோட
பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக்
குட்டன் பெயர்ந்தடியிடுவது போல்
பன்னியுலகம் பரவிஓ வாப்
புகழ் பலதேவன் என்னும்
தன் நம்பியோடப் பின்கூடச்
செல்வான் தளர்நடை நடவானோ!” (நாலாயிர திவ்யப் பிரபந்தம் – 90)
என்ற பாசுரத்தில் காணலாம். வெண்மலைக்குட்டி போல பலராமன் முன்னே ஓட, கருமலைக்குட்டி போன்ற கிருஷ்ணன் பின்னே தளர்நடை மிளிர உடன்பிறந்தோனைத் துரத்துகிறான். இத்தகைய நடையழகை யசோதையுடன் பெரியாழ்வாரும் மானசீகமாகக் கண்டு மனம்மகிழ்கின்ற பகுதியே மேற்கூறிய பகுதியாகும்.
மேலும், எம்பெருமானது தளர்நடை எவ்வாறு இருக்கவேண்டும் என்று தனது மன விருப்பத்தினை எடுத்துரைக்கிறார். பகைவர்களை வென்று, அவர்களின் தலையின் மேல் தளர்நடை எடுத்து நீ நடக்க வேண்டும். அந்நடை நடவானோ? என்று கேட்பதில் கண்ணன் அவதாரமூர்த்தி என்பதை உணர்த்திச் செல்கிறார். இதனை,
“தன்னைப் பெற்றோற்குத் தன்வா யமுதம்தந்
தென்னைத் தளிர்ப்பிக்கின்றான்
தன்னெற்று மாற்றலர் தலைகள்
மீதெ தளர் நடை நடவானோ!” (நாலாயிர திவ்யப் பிரபந்தம் – 89)
என்ற பாசுரத்தால் அறியலாம். கண்ணனை நோக்கி நடவானோ? எனத் தனது வினாவினைக் கேட்பதன் வாயிலாகக் கண்ணன் அவதராமூர்த்தி என்பதையே கூறிச்செல்கிறார்.
குழந்தைப் பராமரிப்பில் பெரியாழ்வார் உள்ளம்:
பெரியாழ்வாரின் பாசுரங்களில் காணலாகும் சொல்லாட்சியில் ஓர் அன்னையின் கவலையும், ஆதங்கமும், உண்மையான அன்பு மிகுதியும் மிளிர்கின்றன. ஓர் ஆண்மகனால் குழந்தைப் பராமரிப்புச் செயல்களாகிய நீராட்டுதல், பூச்சூடுதல், அணிகலன்கள் அணிவித்து அலங்கரித்தல், தூங்கச் செய்தல் போன்ற பணிகளைச் சிறப்பாக, அன்பாகச் செய்ய இயலுமா? என்பதைத் தனது நுட்பமான உணர்ச்சிகளால், நளினமான மன உணர்வுகளால் தன்னை யசோதையாகப் பாவித்து மிகச் சிறப்பாக, யதார்த்தம் புலப்படும் வகையில் பாசுரங்களைப் படைத்துச் செல்கிறார் பெரியாழ்வார்.
“கறந்தநற் பாலும் தயிரும் கடைந்தஉறிமேல் வைத்த வெண்ணெய்
பிறந்ததுவே முதலாகப் பெற்றுஅறியேன் எம்பிரானே
சிறந்த நற்றாய் அலர்தூற்றும் என்பதனால் பிறா்முன்னே
மறந்தும் உரையாட மாட்டேன்! மஞ்சனம் ஆடநீ வாராய்.” (நாலாயிர திவ்யப் பிரபந்தம் -158)
என்ற பாசுரத்தில் முழுமையாக ஒரு தாயின் மனஉணர்வுகளோடு கண்ணனிடம் உரையாடும் பெரியாழ்வாரைக் காண இயலுகின்றது. கண்ணா! நீ பிறந்தநாள் முதற்கொண்டு கறந்த பாலையும் கட்டித்தயிரையும் உறியில் வைத்த வெண்ணெயையும் ஒருசேர நான் ஒருபொழுதும் பார்க்கவில்லை. நான் உனக்குச் சிறந்ததாயாக இருந்து நீ செய்த தீம்புகளை மற்றவர்முன் மறந்தும் பேசமாட்டேன்! என்று உறுதிமொழி தருகிறாள். ஆக, ”கண்ணா மஞ்சனம் ஆட வருவாயாக!” என்று தாய்மையுடன் அழைக்கிறார் பெரியாழ்வார்.
நீராடும் முறைமைப்பற்றிக் கூறுகையில் குளிர்ச்சிக்காக நெல்லிக்காய் இட்ட நீரை நீராடுதலும், உடலுக்குப் பாதுகாப்பாக மஞ்சள் பயன்படுத்திய முறைமையையும் காண முடிகின்றது.
“காய்ச்சின நீரொடு நெல்லி கடாரத்தில பூரித்து வைத்தேன்
வாய்த்த புகழ்மணி வண்ணா! மஞ்சனம் ஆடநீ வாராய்.” (நாலாயிர திவ்யப் பிரபந்தம் – 154)
என்பதிலும்,
“மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகையும் நாறு சாந்தும்
அஞ்சனமும் கொண்டு வைத்தேன், அழகனே! நீராட வாராய்.” (நாலாயிர திவ்யப் பிரபந்தம் -155)
என்ற பகுதியிலும், குறும்புகள் செய்யும் மாயக்கண்ணனை நீராட வருமாறு அழைப்பதையும், நீராடப் பயன்படுத்திய பொருட்கள் பற்றியும் காணமுடிகின்றது. இன்றும் கோயில்களில் திருமாலின் திருமஞ்சனத்தின் போது பெரியாழ்வார் இயற்றிய நீராட அழைக்கும் பாசுரங்களைப் பாடுவது வழக்கமாகும்.
காப்பிடும் வழக்கு:
பெரியாழ்வார் தம்மைத் தாயாகவும், யசோதையாகவும், ஆயர்பாடியின் ஆய்ச்சியாகவும், செவிலித் தாயாகவும், பல தாயர்களின் கூற்றுகளில் தமது பாசுரங்கள் அனைத்தையும் அமைத்துள்ளார். பக்திமை உணர்வின் பெட்டகமாக அன்பின் களஞ்சியமாகத் திகழும் இப்பாசுரங்கள் தாய் சேய் பாவத்திற்கு நல்லதோர் சான்றாகத் திகழ்கின்றது. இப்பகுதியில் காப்பிடல் (திருஷ்டி கழித்தல்) என்கின்ற பகுதி தாய்மையின் ஆழ்அன்பின் பதிவாகத் திகழ்கின்றது.
கண்ணனின் அழகினைக் கண்டு, குறும்புகளைக் கண்டு கண்ணேறு வராதபடி காப்பிட வேண்டும் என்று யசோதை எண்ணுகிறாள். குழந்தைகள் உள்ள வீட்டில் கண்டிப்பாகக் கண்ணேறு கழித்தல் செய்வர். ஏனெனில் சில கண்களுக்குத் தீமை விளைவிக்கும் சக்தி உண்டு என்ற நம்பிக்கை உண்டு. அதன்படியே யசோதை கண்ணனுக்குக் கண்ணேறு படாமல் இருக்கவும் அந்திப்பொழுதில் தீயசக்திகள் நெருங்காமல் இருக்கவும் கண்ணனைக் காப்பிட அழைக்கிறாள்.
“மன்றில் நில்லேல். அந்திப் போது மதிள்திரு வெள்ளறை நின்றாய்!
நன்று கண்டாய் என்றன் சொல்லு நான் உன்னைக் காப்பிட வாராய்” (நாலாயிர திவ்யப் பிரபந்தம் – 193)
என்ற அடிகளில் சந்திவேளையில் கெட்ட தேவதைகள் நாற்சந்தியில் நிற்கும். அதனால் கண்ணனுக்கு ஏதேனும் துன்பம் உண்டாகுமோ என்று யசோதை அஞ்சும் உள்ளத்தைக் காணமுடிகின்றது.
மேலும் அந்திப்பொழுதில் விளக்கேற்றி அந்தணர்கள் சங்கிலே நீர் கொண்டு மந்திரம் கூறிக் காப்பிடும் வழக்கு உண்டு என்பதைப் பின் வரும் பாசுர அடிகளில் காணலாம்.
“இருக்கொடு நீர்ச்சங்கிற் கொண்டிட்
டெழில் மறையோர் வந்து நின்றார்
தருக்கேல்நம் பிசந்தி நின்று
தாய்சொல்லுக் கொள்ளாய் சிலநாள்
திருக்காப்பு நானுன்னைச் சாத்தத்
தேசுடை வெள்ளறை நின்றாய்
உருக்காட்டு மந்தி விளக்கின்
றொளிகொள்ள ஏற்றுகேன் வாராய்!” (நாலாயிர திவ்யப் பிரபந்தம் – 200)
இங்கு யசோதையின் புலம்பல்மொழிகள் பதிவாகியுள்ளன. ”வேதம்கூறிக் கொண்டு நல்ல நீரை சங்கிலே ஏந்திக்கொண்டு வரும் பிராமணர்கள் கண்ணா உனக்கு இரட்சையிட வந்துள்ளார்கள். ஆனால் நீயோ நாற்சந்தியிலே நின்று கொண்டிருக்கிறாய். அழகிய இரட்சையை உனக்கு இட, உன் வடிவத்தைக் காட்டும் அந்தி விளக்கை ஒளியுடன் நான் ஏற்றுவேன் என்றும் அதைக் காண விரைந்து வருவாயாக!” என்றும் யசோதை அழைக்கிறாள்.பண்டைக்கால காப்பிடும் வழக்கு முறைமைகளையும் இங்கு அறிய இயலுகின்றது.
இவ்வாறாக, தாய்பாவனை என்ற பகுதியில் அவதார நாயகனுக்குத் தமிழகக் குழந்தையின் வளர்ப்புமுறையை ஏற்றிக்கூறும் பொழுது பல்வேறு வழிமுறைமைகளைப் பதிவுசெய்துள்ளார் பெரியாழ்வார். தமிழக மக்களின் குழந்தை தொடர்பான காதுகுத்தல், தொட்டிலிடுதல், குழந்தையின் உணவினைத் தேர்ந்தெடுத்தல், யானைத்தந்தத்தால் செய்த சீப்பால் குழல்வாருதல், பூச்சூடல் போன்ற இன்னும் பல தரவுகளைப் பதிவுகளாக்கிப் பாசுரத்திற்குப் பொலிவும், படிக்கும் அடியவர்களுக்கு நெகிழ்வும், ஈடுபாடும் தோன்றும் வகையில் பாசுரங்கள் யாவற்றையும் சிறப்புடன் அமைந்துள்ளார்
*****
முனைவர் நா.கவிதா,
உதவிப்பேராசிரயர், தமிழ்த்துறை,
எஸ்.எஃப்.ஆர். மகளிர் கல்லூரி,
தன்னாட்சி,
சிவகாசி.
