Author: admin

  • மகளிர்க்காக!

    – சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்
    womens' day

     

     

     

     

     

     

     

     

    அன்பை வழங்குதலில் ஆனாய் அன்னையே
    ஆறுதல் அளித்துத் தேற்றுவதில் தோழியே
    இல்லறத்தை நல்லறமாக்கும் இனிய துணைவியே
    ஈடற்ற குலக்கொழுந்தே ஆனாய் நீ நன்மகளே
    உறைக்கக் கூறி குறை களைதலில் உன்னத சகோதரியே
    ஊர் உலகமே போற்றட்டும் நீ வாழி என இன்றுனையே
    எத்துணை பேரிடர்  உன் வாழ்வதினிலே தான் வரினும்
    ஏற்றதனை வெற்றி கொள்வதனில் நீயே மகா சக்தியடி
    ஐ! நின் பெருமை என் சொல்ல மாற்றுக் குறையா பொன்னே!
    ஒன்றா இரண்டா பலகோடி பாமாலையாய் அதைத்  தொடுத்துச்
    சீராக அதனையுமே சிறப்புறவே  உந்தனுக்கே
    சென்று எட்டுத் திக்குமே ஒலிக்கச் செவ்வனே செய்திடுவோம்!

     

     

    Share
  • இன்னும் விழித்துக் கொள்ளாதது ஏன்?

    உமாராணி. ந.

    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த விவாதம் பெரும்பாலும் விவசாயிகளின் தற்கொலைக்கு ஒரு தற்காலிகமான ஒரு பதிலை தருவதாகவே உள்ளது. இனியும் எந்த விவசாயியும் தற்கொலை செய்யக்கூடாது என்பதற்கான முடிவாக அவை அமைவதில்லை. இதுவும் கடந்துபோகும் என்பதுபோல், ஒவ்வொரு விவசாயியின் இறப்பு எண்ணிக்கை நம்மைக் கடந்து சென்று கொண்டே இருக்கின்றன. ஆனால் இதற்கான முடிவு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தவறு எங்கு ஏற்படுகிறது, அதை எவ்வாறு சரிசெய்வது என்பதே இங்கு விவாதமாக உள்ளது. இவை எல்லாவற்றையும் விட இதைப்பற்றி அரசு கூறும் பதில் அதிருப்தி தருவதாக உள்ளது. அவை தன் பங்கிற்குப் பதில் சொல்ல வேண்டுமே என்பதற்காகச் சொல்வதாக உள்ளது.

    விவசாயத்தின் மூலம் 40 சதவிகித வேலையை மக்களுக்குத் தரமுடியும் என்று ஐ. நா. குறிப்பிடுவது மிக முக்கியமான ஒன்று. விவசாயியின் ‘தற்கொலை’ என்ற ஒற்றை வார்த்தைக்குப் பின்னால் மறைந்து இருக்கும் பருவ நிலை மாற்றம், நீர் பற்றாக்குறை, பொருளாதாரப் பிரச்சனை, இளமை, வறுமை, மழையின் அளவு குறைந்து போதல் அல்லது அதிகப்படியான மழை மற்றும் நிலம் இல்லாமல் கூலி வேலைக்குச் செல்வது என நீண்டு கொண்டே செல்லும் காரணங்கள் தெரிவதில்லை. நமக்குத் தெரிவது விவசாயி ‘தற்கொலை’ என்ற ஒற்றை வார்த்தையின் காரணமான எண்ணிக்கைகளில் அடங்கும் செய்திகள் மட்டுமே. நாம் எதிர் கொள்ள வேண்டிய ஒரே கேள்வி, இதற்கு முன்னர் நாம் விவசாயிகளின் தற்கொலை பற்றிய செய்தியை கேட்டதே இல்லையா? நிறையப் பார்த்து இருக்கிறோம் என்பதை நம் வரலாறு காட்டுகின்றது.

    அவற்றில் இருந்து நாம் தெரிந்து கொண்ட படிப்பினை என்னென்ன? அப்படித் தெரிந்து கொண்டோம் என்றால் ஏன் இன்றுவரை விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது? அவற்றை ஏன் இன்னும் தடுத்து நிறுத்த முடியவில்லை? என்பது தான் நமது அடுத்தடுத்த கேள்விகள்.

    இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது 1990 ன் இடைப்பட்ட காலத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விவசாயிகளின் தற்கொலை என்பது 1966-ல் இருந்து தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகவே அமைந்துள்ளது. அன்றிலிருந்து இதன் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவின் தேசிய குற்றப்பிரிவு துறை 1950-ல் இருந்து விவசாயியின் தற்கொலை பற்றிய தகவல்களை சேகரித்து வெளியிட்டும் வருகிறது.

    இதன்படி பார்த்தால் இந்திய அளவில் இதுவரை 1995 இல் இருந்து இன்றுவரை தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 2,96,438 ஆக உள்ளது. 1995-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 10,720; 1996-ல் இதன் எண்ணிக்கை உயர்ந்தது, 1997- ல் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 13,622, இன்ன பிற. இவ்வாறு 1995- இல் இருந்து நாம் பல காரணங்களுக்காக விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை உயர்வதைப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால், இத்தனை ஆண்டுகள் ஆகியும் நாம் இன்று வரை விவசாயிகளின் தற்கொலைகள் பற்றிப் பார்த்தாலும், விவாதங்கள் மட்டுமே செய்து கொண்டு இருக்கின்றோம். அப்படியெனில் அவற்றினால் தெரிந்து கொண்ட காரணங்களை சரிசெய்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, விவசாயிகளின் தற்கொலையை தடுத்து நிறுத்த ஏன் முடியவில்லை என்பது தான் இன்றைய கேள்வி.

    2006 ல் இந்தியா, தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் உள்ள மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைத் தேர்ந்தெடுத்து ஒரு சிறப்பு மறுவாழ்வு அமைப்பை நிறுவியது. அதன் பிறகு 2008- ல் இந்திய அரசு ஒரு நிவாரணத் திட்டத்தையும் நிறுவியது. இவ்வாறு பல திட்டங்களை அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. அதன் மூலம் பல செயல் திட்டங்கள் உதவுகின்றன. ஆனாலும் ஏன் விவசாயிகளின் தற்கொலை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது? இதற்கான மாற்று வழிதான் என்ன?

    அரசு தான் தரும் நிவாரணப் பணிகள் மற்றும் நலத் திட்டங்கள் மூலம் விவசாயிகளின் நிலைமையை முன்னேற்ற முடியும். மேலும், அவற்றின் மூலம் விவசாயிகளைத் தற்கொலை வரை கொண்டு செல்லாமல் தடுத்து நிறுத்தவும் முடியும் என நம்புகின்றது. ஆனால், நம் மக்கள், இதற்கான மாற்றுவழியை யோசிக்காமல் அரசு தான் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகவும் உள்ளனர்.

    விவசாயிகளின் தற்கொலை தினமும் நிகழ்வதால் இதற்கான முடிவை விரைவில் எடுக்க வெண்டும் என்ற அவசர நிலையில் இந்திய அரசு உள்ளது. ஐ. நா. வுடனும், பல நாடுகளுடனும் இணைந்து எடுத்த 17 நோக்கங்களில், நிலையான விவசாயத்தை உருவாக்குவது என்பதும் ஒரு முக்கியமான நோக்கம் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

    ஒவ்வொரு ஆண்டும் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள், அதற்கான காரணம் என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக மட்டுமே குழு அமைக்காமல், நலத்திட்டங்கள் சரியாக சென்று சேர்கின்றனவா? ஒவ்வொரு விவசாயியும் அவற்றினால் பயன் பெறுகின்றார்களா என்பதைக் கண்டறியவும்; அவற்றையும் தாண்டி தவறுகள் எங்கே நிகழ்கின்றன என்பதைக் கண்டறியவும் குழு அமைக்க வேண்டும். ஆனால், திட்டங்களை வகுப்பதும், அதைச் செயல்படுத்துவது மெதுவாகவும், பெயரளவிலும் நடைபெறுகின்றன என்பதே யதார்த்தமான உண்மை.

    மத்திய அரசும், பல சமுகத் தொண்டு நிறுவனங்களும் விவசாயிகளின் தற்கொலைகளுக்கு ஒரு நிரந்தரமான முடிவுகட்டவே மிகப் பெரிய அளவில் செயல்படுகின்றனர். ஆனால், அவற்றின் விளைவுகளை இன்று எந்த இடத்திலும் நம்மால் காண இயலவில்லை. விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக நிகழ்ந்து கொண்டே இருக்கும் போதே அரசும் விழித்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் இதற்கான செயல்திட்டங்கள் குறைவாகவும், தீவிரமற்றும் இருப்பதைக் காண முடிகிறது.

    1994 – பஞ்சாயத் ராஜ் சட்டத்தின் படி விவசாயத்தைச் செம்மைப்படுத்துவதில் கிராம பஞ்சாயத்துகளுக்குப் பெரும் பங்கு உண்டு. இவை யாவும் சரிவர தனது பணியை செய்திருந்தால், ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயமும், விவசாயிகளின் வாழ்வும் செம்மையடைந்திருக்கும். இதன் மூலம் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை ஒவ்வொரு பக்கமும் அதிகரித்துக் கொண்டே வந்தாலும், மற்றொரு பக்கம் இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய நல்லதொரு மாற்றாகக் கிராம பஞ்சாயத்து என்ற அமைப்பு முறையும் நம்மிடம் உள்ளது தெரிகிறது.

    ஒவ்வொரு கிராமத்திலும் கிராம பஞ்சாயத்து சரியான முறையில் தனது பணியைச் செய்யுமேயானால் நிச்சயம் விவசாயமும் செம்மையடையும், விவசாயியின் வாழ்வும் செம்மையடையும்; அதேநேரம் விவசாயியின் தற்கொலை என்ற ஒன்றும் இல்லாமல் போகும். இந்தியா முழுவதும் சமூக பங்கேற்புடன் கூடிய வறுமை குறைப்பு, வாழ்வில் தாழ்வுற்றோரை அதிகாரப்படுத்துதல், மக்கள் பங்கேற்புடன் வளர்ச்சி மற்றும் மேம்பாடு அனைத்தும் வெற்றித் தடங்களை பதிக்கின்ற போது, விவசாயியின் தற்கொலையை தடுத்து நிறுத்துவதில் மட்டும் ஏன் இந்த பொறுப்பற்றத் தன்மை?

    நாம் உண்ணும் உணவை உற்பத்திசெய்யும் ஒவ்வொரு விவசாயியும் கடவுளுக்குச் சமமானவர். ஒவ்வொரு விவசாயியும் தற்கொலை செய்துகொள்வது ஒவ்வொரு கடவுளும் தற்கொலை செய்து கொள்வதற்கு இணையானது. எல்லாப் பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. முதலில் நம் வாழ்வாதாரத்திற்குத் தேவையான ஒரு வழியை நாம் தேடிக்கொள்ள வேண்டும். எப்போதும் அரசின் உதவியையே எதிர்பார்ப்பதும் அவை சரிவர கிடைக்கவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வதும் ஏற்புடையதல்ல.

    விவசாயத்தில் சிக்கிம் மாநிலம் இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது. விவசாயமே அங்குப் பிரதான தொழில். விவசாயத்தைச் செம்மைப்படுத்த இம்மாநில மக்கள் கடுமையாக முயற்சித்துள்ளனர். சிக்கிம் மாநிலத்தில் மட்டும் எவ்வாறு இந்த அமைப்பு முறை சாத்தியமானது? மற்ற மாநிலத்தில் ஏன் இவை முடியவில்லை? எங்கு மாற்றம் தேவை படுகிறது?

    அது மட்டுமல்லாமல், பொதுமக்களை அரசு கட்டமைப்புகளுடன் இணைத்தும் வைக்க வேண்டும். இந்தச் சூழல் உருவானால், பொதுமக்களுக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும் அவர்கள் முழுப் பொறுப்புடன் முழு வேலையில் ஈடுபடுவார்கள். ஆனால், நம் அரசு கட்டமைப்புகள் பொதுமக்களைத் தொலைவில் தனித்து வைத்துவிடவே எண்ணுகின்றன. அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஓர் இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றன. இதற்கு அரசு மட்டுமே காரணம் இல்லை என்றாலும் இந்த இடைவெளியில் நடக்கும் செயல் வேக மற்ற ஒரு மந்த நிலையே அரசின்மீது சந்தேகப்பட வைக்கிறது. இடைவெளி இல்லை என்றால் அரசின் அனைத்துத் திட்டங்களும் சரியான நேரத்திலும், வேகமாகவும் பொதுமக்களை சென்றடைய முடியும். அதனால் அனைத்து பொதுமக்களும் பயனடைந்திருப்பார்கள்.

    உள்ளாட்சியையும், கிராம பஞ்சாயத்தையும் வலுப்படுத்தாமல் இருப்போமானால் பொதுமக்களையும் ஒருங்கிணைக்க வழியில்லை. இன்றுள்ளது போல, பொதுமக்களின் பிரச்சனைகளை அரசு தெரிந்து கொள்வதிலும், அரசின் நலத் திட்டங்கள் பொதுமக்களைச் சென்றடைவதிலும் பெரிய இடைவெளி வரவே செய்யும். இடைவெளியில் அரசியல்வாதிகளும் லாபம் பார்க்கவே செய்வார்கள். அதையும் தவிர்க்கவே முடியாது.

    எனவே, விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த ஒரு மாற்று வழியைக் கண்டு பிடிக்க வேண்டும். மேலும், அரசும் விவசாயம் மற்றும் விவசாயிகளின் நிலைபற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கான நலத்திட்டங்களும், பாதிக்கப்படும் போது அதற்கான செயல்பாடுகளும் எந்தவித தாமதமும் இன்றி சரியான முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சென்றடைய வெண்டும். அதேநேரம் விவசாயிகளுக்கும் தற்கொலைதான் முடிவு என்ற எண்ணத்தைக் கைவிடும் வகையில் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வெண்டும். இனியும் எந்த விவசாயியும் தற்கொலை செய்யக்கூடாது. இதுதான் இன்றைய மிக முக்கியமானத் தேவை.

    _________________________________

    உமாராணி. ந
    அரசியல் அறிவியல் மற்றும் வளர்ச்சி நிர்வாகத் துறை
    காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம்
    கந்திகிராம்

    Share
  • மயான வெட்டியான் தொழில் புனிதமா? சாபமா?

    து. ஆர்த்தி சரவணன்

    மரணத்தைப் பற்றி நான் என்றுமே சிந்தித்துப் பார்த்ததில்லை. பெண்ணாகப் பிறந்தகாரணத்தால் மயானம் செல்லும் வாய்ப்பு கிட்டியதில்லை. நகரத்தில் பிறந்ததாலே இறப்பிற்குப் பின் செய்யப்படும் சடங்குகளைக் கூட முறையாகப் பார்த்ததில்லை. ஆனால் என் திருமணத்திற்கு பின்பு நகரத்தில் இருந்து தென்மாவட்டம் வந்து விட்டேன். ஒரு முறை இங்கு ஓர் இறப்பில் கலந்து கொள்ளும் போதுதான் வெட்டியான் தொழில் செய்பவர்களை இப்பகுதி மக்கள் நடத்தும்விதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

    இச்சடங்கிற்காக அவர்கள் பணம் பெற்றதைப் பார்த்தேன். அந்த வெட்டியான் தன் தோளில் இருந்த துண்டை தன் கையில் ஏந்தி அந்த பணத்தை மிகப் பணிவோடு பெற்றுக் கொள்ள, அதைப் போட்ட பெரியவரோ சற்று தள்ளி நின்று அதை அந்தத் துண்டில் போட்டதைப் பார்த்து அதிர்ந்து போனேன். அன்றுதான் என் மனதில் இவர்கள் செய்யும் தொழில் புனிதமா? இல்லை சாபமா? என்ற வினா எழும்பியது.

    இந்த நிலையைப் பார்த்தபோது இவர்களைப் பற்றி இவர்களின் வாழ்க்கையின் சில அவலங்களைப் பகிர விரும்பி இக்கட்டுரையை நான் எழுத விளைகிறேன்.

    பொதுவாக இந்த வெட்டியான் தொழில் செய்பவர்களைப் பற்றியக் கட்டுரைகள் சிலவற்றை நான் படித்திருக்கிறேன். அதில் அவர்கள் செய்யும் தொழில் புனிதமான தொழில், இறந்த உடலை முறையான எரியூட்டுவது மிகவும் சிறந்த ஒரு செயல் என்றெல்லாம் நான் படித்திருக்கிறேன்.

    ஆனால் ஒரு கேள்வி? ஏன் இதை ஐந்தாறு தலைமுறைகளாக தொடர்ந்து ஒரு சமூக மக்களே செய்து கொண்டு வரவேண்டும்? ஒரு வெட்டியானின் மகன் ஏன் ஒரு மருத்துவராகவோ, மாவட்ட நிர்வாகியாகவோ, ஒரு மந்திரியாகவோ, ஒரு முதலமைச்சராகவோ ஆகக் கூடாது. ஏன் ஆகவில்லை? ஏன் ஒரு வெட்டியான் சொந்த வீடு, நல்ல உணவு, நல்ல உடை என்ற ஒரு வாழ்க்கையை வாழ இயலவில்லை?

    எனக்குத் தோன்றிய இக்கருத்துகள் அனைத்தும் இப்போது உங்கள் மனதிலும் எழுகிறது அல்லவா!

    நம் தமிழகத்தில் வெட்டியான் தொழில் செய்பவர்களில் 98 சதவிகிதம் பேர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் பல தலைமுறைகளாகத் தொடர்ந்து இத்தொழிலை மட்டுமே செய்து வருகின்றனர். அவர்களின் வறுமையின் காரணமாகவோ அல்லது மாற்றுத் தொழில் பெறும் வாய்ப்பு குறைவாக இருப்பதாலோ ஏனோ இதே தொழிலை தொடர்ந்து செய்ய வேண்டிய அவலத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.

    பிணம் எரிப்பதற்கு அனுபவம் அவசியம் தேவை. பிணம் சீராக எரிய சில நுணுக்கங்களை இவர்கள் கையாளுகின்றனர். எனவே பிணம் எரிப்பது எளிதானது அல்ல. வருடத்தில் எல்லா நாளும் இவர்களுக்குத் தொழில் இருக்குமா என்றால் அது கேள்விக்குறிதான். சில முறை தொடர்ந்து 42 நாட்கள் கூட தொழில் இல்லாமல் இருப்பதும் உண்டு.

    பிணம் எரிக்கும் தொழில் தவிர இவர்கள் எதற்கெல்லாம் அமர்த்தப்படுகின்றார்கள் என்றால், இறந்த விலங்குகளை அகற்றவும் (மாடு, ஆடு, பூனை, நாய்) சாலைகளில் விபத்தால் இறந்த உடல்களை அகற்றவும், இரயிலில் அடிபட்டு இறந்த விலங்குகள் மற்றும் மனித உடல்களை அகற்றவும் பயன்படுத்தப்படுகின்றனர். இதற்கு அவர்களுக்கு அளிக்கப்படுவது 100 லிருந்து 150 ரூபாய் மற்றும் ஒரு கால்பாட்டில் மதுபானமும் வழங்கப்படுகிறது.

    அது மட்டுமின்றி பிணவறைகளில் பிரேத பரிசோதனை செய்யவும் பல நாட்களாகப் பல மாதங்களாக யாராலும் வாங்கப்படாத உடல்களை நல்லடக்கம் செய்ய இன்னும் சில நேரங்களில் இயற்கை சீற்றத்தால் இறந்த உடல்களை எல்லாம் அகற்றவும் பயன்படுத்தப்படுகின்றனர். மொத்தத்தில் மிகவும் மோசமான பாதுகாப்பற்ற தொழிலை மேற்கொண்டு வருகின்றனர் என்பது மறக்க முடியாத உண்மை.

    மேற்கூறிய எந்த வேலையும் இல்லாத நிலைகளில்; கல்லுடைத்தல், மண் வெட்டுதல் போன்ற கூலி வேலைகளுக்கும் இவர்கள் செல்வதுண்டு. மொத்தத்தில் வாழும் காலத்தில் கைக்கும் வாய்க்கும் போதாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விடுகின்றனர். இத்தொழில் செய்பவர்கள் பலர், மயானத்தின் உள்ளோ அல்லது மயானத்தில் மிக அருகிலேயோ குடியிருக்கும் நிலையில் உள்ளனர். எனவே இவர்களுக்கு மற்றவர்களோடு இணையும் வாய்ப்பும் மிகக் குறைவாக இருப்பதாலோ என்னவோ தாழ்த்தப்பட்ட சமூகத்தின் அரசாங்க சலுகைகள் கூடக் கிடைப்பதில்லை என்பதே உண்மை.

    அவர்களுடைய குடும்பத்தில் உள்ள பெண்கள் குழந்தைகள் யாவரும் பிணம் எரிக்கும்போது உதவுவது என்பது தலைமுறை தலைமுறையாக ஏற்படும் ஒரு நிகழ்வாகவே உள்ளது. எனவேதான் இவர்களது தலைமுறையினர் வெகு சுலபமாக இத்தொழிலைக் கையிலெடுத்து கொண்டு குடும்ப வறுமை காரணமாக சம்பாரிக்க துவங்குகின்றனர். வெட்டியான்களின் மனைவிகள் கூட கணவரின் உதவியே இல்லாமல் இரண்டுபேர்கள் மட்டுமே இணைந்து பிணத்தை எரிப்பதும் உண்டு என்று கேட்ட தகவல் எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.

    அரசு தரப்பில் இவர்களுக்கான நலத்திட்டங்கள் என்று பார்த்தால் மிகவும் விரல்விட்டு எண்ணும் அளவிற்கே உள்ளது. நடைமுறையில் இத்திட்டங்கள் உள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
    2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம், திரு.ஸ்டாலின் அவர்கள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த போது சென்னை மாநகராட்சியில் நிரந்தரப் பணியில் இல்லாமல் தற்காலிகப் பணியில் இருந்த 173 பிணம் எரிக்கும் தொழிலாளிக்கு ‘மயான உதவியாளர்கள்’ என்று பணிநியமனக் கடிதம் வழங்கப்பட்டது. மாதச் சம்பளமாக ரூ.5,000 வழங்குமாறும் பண நியமனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இம்மயான உதவியாளர்களுக்கு சென்னை மாநகராட்சியில் பணிநியமனம் அளித்தது போல கூடிய விரைவில் தமிழகம் முழுவதும் கிராமங்களில் இருக்கும் பிணம் எரிக்கும் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், அப்படி நடக்கவில்லை. இந்த 173 தொழிலாளர்களை தற்போதைய நிலை என்ன என்பதைக் குறித்த சரியான விவரமும் தற்போது இல்லை. இதைத் தொடர்ந்து, “மயான வெட்டியான்கள்” சங்கம் என்று ஒரு சங்கம் நிறுவப்பட்டு அதன் முதல் மாநில அளவிலான மாநாடு, 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மதுரையில் நடந்தேறியது. இம்மாநாட்டில், பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. மாத ஊதியம், வெட்டியான் தொழில் செய்யும் பெண்களுக்கான பிரசவ கால உதவித்தொகை, மருத்துவக் காப்பீடு, தடுப்பூசிகள் போடுவது, மருத்துவ பரிசோதனைகள், மாற்றுத் தொழில் வழங்குவது போன்றவை.

    ஆனால், அதற்குப் பின் அந்த சங்கத்தைப் பற்றியோ கோரிக்கைகள் பற்றியோ தொடர்ந்து செய்திகள் வரவில்லை என்பதே உண்மை. இத்தொழிலாளர்கள் பலருக்கு இச்சங்கத்தைப் பற்றியே தெரியவில்லை. இந்த மாநாடு அப்போது இருந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவாரிய அமைச்சர் திருமதி.ஏ. தமிழரசி முன்னிலையில் நடந்தது என்பது கூடுதல் தகவல். அரசாங்கத்தில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கும் அரசாங்கத்தின் பல சலுகைகள் கிடைக்கப்படுகின்றன. தலைமை பதவியில் இருப்பதில் இருந்து கடை நிலை ஊழியர் வரை அனைவரும் சம்பளம் சார்ந்த மற்றும் சம்பளம் சாராத பல உதவியைப் பெறும் நிலையில், (மயானங்களில்) தலைமுறை தலைமுறையாக பணிபுரியும் ஊழியர்களில் நிலைதான் என்ன? சமூக நீதியில் இருந்து இம்மக்களுக்கு சமஉரிமை கிடைக்கவில்லை (என்பதுதானே உண்மை).

    மனிதக் கழிவினை அகற்றும் ஊழியர்கள் இருக்கக் கூடாது என்பதற்காகவும், மனித கழிவகற்றும் ஊழியர்களுக்கு மறுவாழ்வு வழங்குவதற்காகவும் அரசாங்கத்தால் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பிணங்களை எரிக்கும் தொழில் செய்பவர்களுக்கும் இப்படிப்பட்ட மறுவாழ்வு திட்டங்களும், நலவாழ்வு திட்டங்களும் நிச்சயம் வேண்டும். இறந்தவர்கள் பல காரணங்களுக்காக இறந்திருக்கலாம். தொற்று நோய்கள், ரேபிஸ் என்று சொல்லக் கூடிய நாய்க்கடியால் கூட இறந்திருக்கலாம். இறந்தவரின் உறவினர்கள் இதைப் பற்றி வெட்டியான்களிடம் தெரிவிப்பது மிகவும் அரிதே என்ற நிலையில் பாதுகாப்பு சாதனங்களான கையுறை, காலுறை போன்றவை அல்லாமல் இவர்கள் அப்பிணங்களைக் கையாண்டு எரிப்பதனால் இவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

    தொடர்ந்து இப்பிணவாடைகளை சுவாசிப்பதாலும் இவர்களில் பலருக்கு சுவாச சம்பந்தமான பிரச்சினைகள் அதிகமாகவே இருக்கிறது. பல காரணங்களுக்காக இறந்து போன உடல்களையும் சில சிதைந்து போன எரிந்து போன உடல்களையும் தகனம் செய்யும் போது இவர்களுக்கு மன ரீதியான பாதிப்புகள் கூட ஏற்படலாம் என்பதே உண்மை. இதனால் தான் இவர்களில் அனைவருமே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். 25 பிணம் எரிக்கும் தொழிலாளர்களில் ஒருவர் கண்டிப்பாக நுரையீரல் பாதிப்புக்குள்ளாகின்றார்(என்பது உண்மை).

    திண்டுக்கல் மாவட்டம், குமரன் நகரைச் சேர்ந்த நடராஜன் என்ற இளைஞர் தனது தந்தை இறந்த பின் தனது 17 ஆவது வயதில் இருந்து இத்தொழிலைச் செய்து வந்தார். அவர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி நோய்வாய்ப் பட்டு சிகிச்சை அளிக்க பணம் இல்லாத காரணத்தால் தனது 37 வயதில் இறந்து போனார் என்பதையும் அவர் சகோதரி தற்போது தான் அனாதையாக நிற்பதைக் கண்ணீரோடு கூறியபோது அது நெஞ்சை உருக்கச் செய்தது. சிலர் இறப்பிற்குக் காரணம் கூடத் தெரிவதில்லை. அவர் தொற்று நோயால் கூட இறந்திருக்கலாம் என்பதை விழிப்புணர்வு இல்லாமல், வெள்ளந்தியாக இம்மக்கள் கூறுவது மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது.

    மயானங்களைப் பராமரிப்பது, மயானங்களை ஏற்படுத்துவது, அரசாங்கம் மற்றும் அரசாங்கங்களின் பணி என்றால் மயான பணியாளர்களை நியமிப்பது அவர்களுக்கான சலுகைகள் வழங்குவதும் அரசாங்கத்தின் பணி என்பது மறுக்க முடியாத உண்மை.

    இப்படி பிணம் எரிக்கும் தொழில் செய்யும் ஊழியர்களுக்கான பணி நியமனம், மாதச்சம்பளம், மருத்துவப் பரிசோதனை முறைகள், தடுப்பு ஊசிகள், எரிப்பதற்கான தற்காப்பு சாதனங்கள் போன்ற அனைத்திற்கும் வழி வகுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

    தலைமுறை தலைமுறையாக இப்பணியைச் செய்யும் தொழிலாளிகளின் இன்றைய தலைமுறையினருக்காக கல்வி உதவி, மாற்றுத் தொழிலுக்கான உதவிகளையும் அரசாங்கம் மனதில் கொள்ள வேண்டும்.பிணம் எரிப்பதைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பவர்களின் மனநிலை பாதித்து குடிப்பழக்கத்திற்குப் பலியாகாமல் இருக்க மனநிலை நிபுணர்களைக் கொண்டு சிறப்பு கலந்தாய்வு கூட வழங்கலாம் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்.

    ஐந்தறிவு படைத்த யானைகளுக்குப் புத்துணர்வு அளிக்கப் புத்துணர்வு முகாம் நடத்தும் போது, இறந்து போன நமது உறவினரையும் நமது நண்பர்களையும் நமது உற்றார்களையும் சீராக தகனம் செய்யும் நம் வெட்டியான் நண்பர்களுக்கான அனைத்து அடிப்படை மற்றும் நிதி வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துவது நம்மைப்போன்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடமை என்பதை உணர்ந்து இக்கட்டுரையை வழங்குகிறேன். நிச்சயம் மாற்றம் உருவாகும் என்ற நம்பிக்கையோடு!.

    __________________________________

    து. ஆர்த்தி சரவணன்
    ஆராய்ச்சியாளர்
    காந்திகிராம பல்கலைக் கழகம்
    [அரசியல் அறிவியல் துறை]
    திண்டுக்கல்

    Share
  • கிராமங்களின் சேரி

    — க. சிவா.

     

    Capture

    இந்தத் தலைப்பினைப் பார்த்தவுடன் அனைவர் மனத்திலும் எழும் ஒரே ஐயம், “கிராமங்களில் சேரியா?” என்பதாகத் தான் இருக்கும். ஆம், நம் இந்திய நாட்டில் நகரங்களில் மட்டும் சேரிகள் கிடையாது, கிராமங்களிலும் உண்டு. சேரிகள் என்றாலே நம் மனதில் நம் மனதில் தோன்றுவது சேறு, சகதிகள் நிறைந்த இடத்தில் மக்கள் வாழ்வதையே நகரங்களில் சேரிகள் என்று அழைப்போம். பெரும்பாலும் இந்தச் சேரிகளில் வாழும் மக்கள் சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் போன்றவற்றில் பின் தங்கியவர்களாகவும் புறம் தள்ளப்பட்டவர்களாகவும் வாழ்கின்றனர். இந்த ஆய்வுக்கட்டுரையில் நான் கிராமங்களின் சேரிகள் என்று குறிப்பிடுவது கிராமங்களில் காணப்படும் காலனி (colony = குடியிருப்புப்பகுதி) வீடுகளைத் தான்.

    அடுத்து, நான் ஏன் காலனி வீடுகளைக் கிராமங்களின் சேரிகள் என்று குறிப்பிடுகிறேன் என்ற வினா எழும்? நம் கிராமங்களில் பெரும்பாலும் காலனி வீடுகள் கிராமத்தின் மையப் பகுதிகளில் அமைவது கிடையாது, காலனி என்றாலே ஒரு கிராமத்தின் கடைக் கோடியிலேயே காணப்படுகின்றன. அல்லது ஒரு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமமாக இருப்பின் காலனிகள் மட்டும் தனி ஊராகவோ அல்லது தனித் தெருவாகவே கருதப்படும். கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிராமத்திற்கு சென்றால் அங்குக் குடிசைகள் நிறைந்த பகுதிகள் தான் கிராமங்களில் சேரிப் பகுதிகளாகத் திகழ்ந்தது. ஆனால், இப்பொழுது அந்தச் சேரிகள் நவீனமயமடைந்து உள்ளன. நவீனமடைதல் என்பது ஒன்றும் இல்லை, அது அரசால் கட்டித்தரப்பட்டுள்ள இந்திரா நினைவு குடியிருப்பு மற்றும் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டித்தரப்பட்டுள்ள வீடுகள் தான் ஆகும். வீடுகள் நவீனமடைந்தாலும் வீதிகள் இன்னும் நவீனமடையவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

    வீடுகள் நவீனமாவதால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரலாம். தெருக்களின் தரம் உயர்த்தப்பட்டாலே மக்களின் சுகாதாரத்தினை பேணிக் காத்திடல் முடியும். பொதுவாக நாம் ஒரு கிராமத்திற்கு சென்றால் அங்கு உள்ள காலனி வீதிகளையும் அந்த வீதிகளில் எந்த மக்கள் குடியிருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்தாலே தெரிந்து விடும். மக்களுக்கு வீடுகளை மட்டும் நன்றாகக் கட்டித்தந்த இந்த அரசு ஏன் அனைவரும் பயன்படுத்தும் வீதிகளைக் கண்டுகொள்வதில்லை. சமீபத்தில் நான் ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தேன், அப்பொழுது அங்கு நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. அந்த மழை பெய்து முடித்தவுடன் கிராமத்திற்கு சென்று பார்த்தால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. அந்தக் கிராமத்தின் மறு பகுதிக்கு சென்று பார்த்தால் அங்குத் தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன. அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளைப் பார்த்தால் அனைத்தும் சிமெண்ட் கான்கிரீட் கட்டிடங்களான தொகுப்பு வீடுகள் என்று அழைக்கப்படும் இந்திரா நினைவுக் குடியிருப்பு திட்ட வீடுகளும் பசுமைத்திட்ட வீடுகளும் அவரவர் சொந்த வீடுகளும் அடங்கும். இப்படி நன்றாகக் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மத்தியில் தண்ணீர் தேங்கி சேறும் சகதிகளும் நிறைந்து காணப்பட்டன. இந்தப் பகுதி மட்டும் ஏன் இவ்வாறு இருக்கின்றன என்று பார்த்தால் அது தான் கிராமங்களின் சேரியான காலனிப் பகுதி.

    இதுவே பெரும்பாலான கிராமங்களில் உள்ள காலனிப் பகுதிகளின் நிலையாக உள்ளது. நகரத்தில் உள்ள சேரிகளைக் கூட குடிசை மாற்று வாரியத்தில் இருந்து மாற்றும் பொழுது அவர்களுக்கு நல்ல தரமான தார் சாலையே, சிமெண்ட் சாலையே அமைத்துத் தரப்படுகிறது. ஆனால் கிராமங்களில் உள்ள அனைத்துக் குடிசைகளும் மாற்றப்பட்ட பின்னரும் கூட பெரும்பாலான கிராமங்களில் எவ்வித சாலைகளும் அமைக்கப்படாமல் மழைக் காலங்களில் மக்கள் சேற்றில் தான் நடந்து சென்றாக வேண்டும். சிறுவர்களும் கூட சகதிகளில் தான் விளையாடுகின்றனர். மழைக்காலங்கள் வந்தால் போதும் சேரி மக்களுக்குத் தொற்று நோய்களும் வந்துவிடும். இதுதான் இந்தச் சேரிகளின் காலங்காலமாக உள்ள நிலையோ? இந்த நிலை எப்பொழுது மாறுமோ? சேரிகள் என்றாலே ஊரின் மையப் பகுதியை விட்டு ஒதுக்கியும் அதில் வாழ்பவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவும் இருப்பதுவும் தான் இந்தச் சேரிகளின் நிலையாக உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் கடந்து விட்ட சூழ்நிலையிலும் கூட இந்தியாவில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் சேரிகளாகவே இருக்கின்ற அவலம் இன்றளவும் தொடர்கின்றன. கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லும் பாரதத்தில் கிராமங்கள் சேரிகள் ஆக்கப்படுவதால் முதுகெலும்புகள் மெல்ல மெல்லத் தேய்மானம் அடைவதற்குள் இந்த அரசும் நாட்டு மக்களும் இதனைக் கவனித்து காப்பாற்றியாக வேண்டும்.

    __________________________________________

    க. சிவா,
    ஆராய்ச்சியாளர்,
    அரசியல் அறிவியல் மற்றும் வளர்ச்சி நிர்வாகவியல் துறை,
    காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்,
    காந்திகிராமம். திண்டுக்கல்- 624302.
    Email: yaswanthshiva@gmail.com

    __________________________________________
    படம் உதவி:

    வெள்ளத்தில் மிதக்கும் காஞ்சிபுரம் – வறட்சியில் வாடும் தருமபுரி

    Share
  • சமூகத்தின் பார்வையில் – மூன்றாம் பாலினம்

    சு.காந்திமதி ஆராய்ச்சியாளர்
    அரசியல் அறிவியல் மற்றும் நிர்வாக வளர்ச்சித் துறை
    காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகம்.
    காந்திகிராம்

    “கவுரமான பெயரில் கடவுளை அழைப்பவர்கள் தான் மிகக் கொச்சை மொழியில் திருநங்கைகளாக அழைக்கிறார்கள். கேவலப்படுத்துகிறார்கள். இவர்களின் வாழ்க்கை நுட்பமான உணர்வுநிலை சார்ந்தது. பிறந்தது முதல் ஆணாகவோ , பெண்ணாகவோ வளரும் பருவத்தில்தான் தாங்கள் உண்மையில் யார் என்பதை உணருகிறார்கள். மூன்றாம் பாலினத்தவரின் அன்றாட சமூகத்தில் என்ன என்ன பிரச்சனைகளுக்கு உள்ளாக்கப்டுகின்றன என்பதைப் பற்றி நான் பார்த்த சிலவற்றை உங்களுக்கும் தெரியப்படுத்துகிறேன். அவர்கள் அன்றாட வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகளை சந்திக்கின்றனர் என்பதைப் பற்றி சிலவற்றை பார்ப்போம். திருநங்கைகள், அரவாணிகள் என பலப் பெயர்கள் வைத்து கூறப்படுகின்றார்கள். இவர்களுக்கு மூன்றாம் பாலினத்தவர்கள் என்று 15.04.2014 உச்சநீதிமன்றம் அங்கீகாரம் கொடுத்தது. இவர்களின் மக்கள் தொகை இந்தியாவில் 5 கோடியும் தமிழ்நாட்டில் 4,88 இலட்சம் பேர் உள்ளனர். 2011 கணக்கெடுப்பின்படி. இதில் தற்சமயம் மூன்றாம் இனத்தவரை சார்ந்த கிர்த்திகா பிரியதர்ஷினி சார்பு ஆய்வாளராக தற்சமயம் தேர்ச்சி பெற்றவர். தேர்ச்சி பெற்ற பொழுதிழும் கூட சார்பு ஆய்வாளர் பதவியில் அமர்வதற்குள் பல பிரச்சனைககளை சந்தித்து பதவியில் அமர்ந்துள்ளார். பதவியில் அமர்வதற்கு ஒவ்வொரு முறையும் நமது உயர்நீதிமன்றத்தை நாடி உள்ளார். அவரின் கடின உழைப்பிற்கும். திறமைக்கும், உரிமைக்கும் கிடைத்த பரிசுதான் சார்பு ஆய்வாளர் பதவி. இவர் படிக்கும் பொழுதே பள்ளியிலும், கல்லூரியிலும் ஒரு சிலர் செய்யும் கேலி கிண்டலுக்கு மனவுளைச்சல் ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இடையில் மூன்றாம் இனத்தவர்களுக்கென்று சமூகத்தில் பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், கோவில்கள் போன்ற இடங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித் தனியாக கழிப்பறை வசதிகள் உள்ளன. ஆனால் மூன்றாம் இனத்தவர்களுக்கு கழிப்பறை வசதிகள் செய்து தரவில்லை. இரண்டாவதாக வீடு வாடகைக்கு கேட்டால் சாதாரணமான ஆட்களுக்கு மாத கட்டணமாக 2000 முதல் 3000 வரை வசூல் செய்கின்றனர். ஆனால் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு என்றாலே 4000 முதல் 6000 வரை வசூல் செய்கின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களை விசித்திரமாகப் பார்க்கின்றனர். பொது இடங்களில் ஒரு சிலர் செய்யும் கேலி கிண்டலலால் மனவுளைச்சலுக்கு ஆளாகப்படுகின்றனர். ஒரு சிலர் செய்யும் பாலியல் செயலுக்கு ஒட்டு மொத்த மூன்றாம் இனச் சமுதாயத்திற்கே அவப் பெயர் வருகிறது. நம்முடைய சார்பு ஆய்வாளார் கிர்த்திகா பிரியதர்ஷினி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பொது மக்களிடையே உள்ள கண்ணோட்டம் மாற வேண்டும். பொது மக்கள் மூலியமாக மூன்றாம் பாலினத்தவருக்கு விழிப்புணர்வு ஏற்பட வழிவகை செய்ய வேண்டும். குறிப்பாக சேரிப் பகுதியில் உள்ள மூன்றாம் இனத்தவர்கள் மனவுளைச்சலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இது மாற வேண்டும். இப்படி செய்தல் மட்டுமே நாம் அவர்களுக்குக் கொடுத்த அங்கீகாரம் சரியானவையாக அமையக்கூடும்.

    Share
  • விடியல் இன்று…

    — பால நிவேதிதா.

    “எதுக்கும் இன்னொரு டாக்டர்கிட்ட கேட்கலாமா…”, கீதாவின் குரல் கம்மி ஒலித்தது.

    “ப்ச் ……பார்ப்போம் ….”, நம்பிக்கை இல்லா ரமேஷின் குரல் கீதாவை என்னவோ செய்தது.

    “இன்னைக்கு கருணை இல்லத்தில் இருந்து போன் வந்தது கீதூ …”, திரும்பிப் படுத்து தூங்குவதாகப் பாவனை செய்தாள் கீதா.

    ரமேஷ், கீதா தம்பதியருக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை.

    ஒரு குழந்தையை தத்து எடுப்போம் என ரமேஷ் கூறிய போதும் ஏனோ கீதாவின் மனம் அதை ஏற்க மறுக்கிறது.

    பொழுது புலர்ந்த அதிகாலை வேளையில் வாசலில் தண்ணீர் சத்தம் கேட்டு கண் விழித்தாள் கீதா. அதற்குள் வந்து விட்டாளா கிருஷ்ணம்மா பாட்டி…

    ஜன்னல் வழியே பார்த்த கீதா கதவை திறந்து வெளியே வந்தாள்.

    அவள் செல்ல டாமி வாலை ஆட்டியபடி கீதாவிடம் பாய அதை வாஞ்சையுடன் தடவிய படியே,” என்ன பாட்டிமா இன்னிக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க? ” என்றாள்.

    “எனக்கு என்ன கண்ணு…ஒத்தக்கட்ட விடிஞ்சதும் அப்படியே நடந்துட்டேன்”….கூறிய கிருஷ்ணம்மாவை ஏறெடுத்த கீதா,

    “என்ன பாட்டி கைய நல்லா கழுவ மாட்டீங்களா பாருங்க அங்க சுவர்ல உங்க கைத்தடம் அழுக்காய்……போனவாரம் தான் ஒயிட் வாஷ் பண்ணினோம்…..ப்ச். ..” எரிச்சலுடன் உள்ளே போன கீதாவை பரிதாபமாய் பார்த்த படியே மீதி வேலைகளைச் செய்ய நகர்ந்தாள் கிருஷ்ணம்மா.

    ரமேஷும் கீதாவும் ஆபிசுக்கு ரெடியாகி ஹாலுக்கு வரும் போது வேலைகள் அனைத்தையும் முடித்து இருந்த கிருஷ்ணம்மா வாசலில் யாரிடமோ பேசிய படி உள்ளே பார்த்து,

    “கண்ணு….அந்தியில வாரேன். ..ரேஷன் கடை சோலி இருக்கு…”, கீதாவின் ஒப்புதலை எதிர்பாராதவளாய் நடையைக் கட்டினாள்..

    ஆளுக்கு ஒரு புறமாக ரமேஷும் கீதாவும் தங்கள் அலுவலுக்குப் பறந்தனர். ..

    மதிய உணவு இடைவேளை.

    “அப்ப தத்து எடுக்க விரும்பலைன்னு ரமேஷிடம் சொல்லி விட வேண்டியது தானே “உயிர்த் தோழி சுரேகாவின் குரல் தெளிவாய் தான் விழுந்தது கீதாவிற்கு.

    ” ஆமாம்டி …என்னையறியாம என்னமோ தடுக்குது என்னை. .. எப்படியும் இன்னிக்கு உறுதியா சொல்லிடுவேன்”.

    வழிநெடுக இதை யோசித்தபடியே மாலை வீடு வந்து சேர்ந்தாள். ..

    பக்கத்து வீட்டு சுட்டிப் பெண் ஓடி வந்து “ஆன்ட்டி, கிருஷ்ணம்மா பாட்டி வரவே இல்லை, இந்தாங்க ….எனச் சாவியை கொடுத்து ஓடியது.

    ஸ்ஸ் எப்ப பார்த்தாலும் சொல்லாம லீவ் போடுவதில் இந்தப் பாட்டிக்கு ஈடு இணை வராது. .. நாளை வரட்டும் ..நல்லா நாலு வார்த்தை போட்டாதான் சரிவரும்…மனசுக்குள் திட்டியபடியே வீட்டிற்குள் நுழைந்தாள். ..

    அவளுக்குத் தெரியுமா நாளைய விடியலின் பயங்கரம். .

    இரவு டாமியின் குரல் கீதாவின் அடிவயிற்றைப் புரட்ட… ஊளளளள….. என்னாச்சு இதுக்கு. .. அபாய மணிக்குரலாக தோண …ரமேஷை எழுப்பினாள்.

    அவனுக்கும் முரணாகப் பட, இருவரும் எழுந்து வெளிவராண்டா விளக்கைப் போட்டு வாசலுக்கு வரவும் அது நடந்தது. ஆம். ..கணநேரத்தில். ..நிலநடுக்கம். …பெரிய சத்தத்துடன் தாறுமாறாய் நிலை குலைய கண்ணிமைக்கும் நேரத்தில் பூகம்பம் நடந்தேறி முடிந்தது. .

    ஆங்காங்கே கட்டிடங்கள் இடிந்து விழுவதும்,, பெரிய பெரிய பிளவுகளும் கண்ணெதிரே பார்க்க முடிந்தது.

    ரமேஷும் கீதாவும் டாமியை பார்க்க வெளியே வந்ததால் தடுமாற்றத்துடன் தப்பினர்.

    இயற்கையின் செயல்களுக்கு தடுப்பு சுவர் ஏது ?என்ன கொடுமை ..மனித வலிகளுக்கு மருந்திடக் கடவுள் இப்படியும் வருவாரா? இல்லை இயற்கை தன் அன்பைக் காட்டும் விதமோ? நடந்தேறியது என்னமோ பயங்கரம் தான். ….

    ஆயிற்று இன்றோடு பத்து நாட்களுக்கு மேல். … அனைவரும் சிரமங்களுக்கு நடுவில் இயல்புக்குத் திரும்பி கொண்டு இருந்தனர்.கீதாவும் ரமேஷும் உறவுகளுக்கு எல்லாம் தாங்கள் நன்றாக இருப்பதைத் தெரிவித்து ஓய்ந்து போனார்கள்.

    தொடர் விடுப்புக்குப் பிறகு அலுவலைத் தொடரத் தீர்மானிக்கும் போது தான் கீதாவிற்கு கிருஷ்ணம்மா பாட்டி நினைவே வந்தது .

    ஐயையோ கிருஷ்ணம்மா பாட்டி இருந்தது ரொம்பவும் நெருக்கடியான ஒரு பகுதியாச்சே, இந்தப் பத்து நாட்களாக எந்தத் தகவலும் இல்லையே ….ஒண்டி கட்டை என அடிக்கடி புலம்புவாளே ..என்ன ஆனாள் ?..இயற்கையோடு ஐக்கியமாகிப் போனாளா ?…எப்படி நான் அவளை மறந்தேன் ? உயிர் உடைமை என வரும் போது தன்னைக் காப்பாற்றத் தோன்றியதே தவிர வேலை பார்க்கும் கிருஷ்ணம்மாவா நினைவிற்கு வருவாள் .இருந்தாலும் இத்தனை வருடம் பழகிய ஆன்மா …

    விடு விடுவென தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள் கீதா, கிருஷ்ணம்மா இருப்பிடத்தை நோக்கி ……

    சுக்கு நூறாய் மாறி இருந்தது அந்த இடம் ..இங்கு தானே அவள் வீடு .சுற்றும் முற்றும் பார்த்தாள் .பல இடங்களில் பருந்துகள் வட்டமிட்டபடி இருந்தது .தென்பட்ட சிலரிடம் அவ்விடத்தில் இருந்தவர்களை பற்றி விசாரித்தாள். பாதிக்கும் பேர் இறந்து போனதாகவும், பாதி பேர் மருத்துவமனையிலும், எஞ்சியவர்கள் கோயில் மண்டபத்திலும் இருப்பதாகக் கூறினர்.

    குளமாகிய கண்களுடன் கோயில் மண்டபத்தை நோக்கி தொய்ந்து நடந்தாள். அன்று சுவரில் அவள் அழுக்கு கைப் பட்டதற்குத் திட்டினேன். இன்று அந்த சுவரே இல்லை ..தான் நடந்து கொண்ட விதத்தை நினைத்து அவளுக்கே அவமானமாய் இருந்தது. விழும் கண்ணீரைத் துடைக்க கூடத் தோன்றாமல் நடந்தவளுக்கு ,..

    “சாப்பிடு கண்ணு ..என் செல்லம், ராசா…கிருஷ்ணம்மாவின் குரல் …கிருஷ்ணம்மா இருக்கிறாள்.

    திரும்பி குரல் வந்த திசையை நோக்கிப் பாய்ந்தாள். அங்கே கிருஷ்ணம்மா தன் இடுப்பில் ஒரு குழந்தையும், இடக்கையில் ஒரு குழந்தையும் பிடித்தபடி அழுது கொண்டிருந்த மற்றொரு சிறு குழந்தைக்குத் தட்டில் இருந்த உணவை ஊட்டிக் கொண்டு இருந்தாள். அந்தக் குழந்தை வாங்க மறுக்க அதனைச் செல்லம் ,ராசா எனத் தாஜா பண்ணிக் கொண்டு இருந்தாள்.

    திகைக்க இக்காட்சியைப் பார்த்தபடி நின்றாள் கீதா.

    தற்செயலாய் இவள் பக்கம் திரும்பிய கிருஷ்ணம்மா துள்ளி ஓடி வந்தாள் ….”ஏ ..கண்ணு ..எப்டிமா இருக்க ….?இன்னிக்கி நானே வரணும்னு நினைச்சேன் தாயி ..” சொல்லும் போதே கண்ணீர் முட்டி இருந்தது .

    “உங்களுக்கு ஒண்ணும் இல்லையே பாட்டி ….?”

    “நான் நல்லா இருக்கேன் தாயி …இன்னும் நான் இருக்கணும்னு எழுதி இருக்கான் போல..”

    “நீங்கப் பிழைத்ததே சந்தோஷம் பாட்டி ….கூறிய கீதாவின் கண்கள் கிருஷ்ணமாவிடம் இருந்த குழந்தைகளை பார்த்தது

    புரிந்தவளாய் குழந்தைகளை உட்கார வைத்து விட்டு “கொஞ்சம் அப்டி வா கண்ணு ..எனச் சற்று தள்ளி வந்து குழந்தைகள் அறியாவண்ணம் …”அந்த சின்னதுக இரண்டும் எங்க தெருவுல தான் இருந்தாக. அதுங்க தாயும் தகப்பனும் போய்ட்டாக …”கைகளை வானத்தை நோக்கி காமித்த பாட்டியால் விழும் கண்ணீரை துடைக்க முடியவில்லை ..” தெய்வ புண்ணியத்துல பிள்ளைகளுக்கு ஒண்ணும் ஆகலை ….”

    அவளிடம் சாப்பிட மல்லுக்கட்டிக் கொண்டிருந்த சிறுவனைக் காமித்து ,”இவன் யாருன்னு தெரியல கண்ணு ,அவனுக்கு சரியாப் பேசவும் வரல, இங்கன அழுதுகிட்டு நேத்துல இருந்து சுத்தி சுத்தி தேடிகிட்டு அலையறான் ….பச்சபுள்ள வயித்து பசி கூட தெரியாம தேடுது …அதான் சாப்பாட்டுப் பொட்டலம் வாங்கியாந்து ஊட்டினேன் “

    காதுகள் அடைத்து கண்ணீரை விழுங்கிய கீதா, “எப்படி பாட்டி சிறு குழந்தைகளை ……கீதா முடிக்கவில்லை .

    “எது யார் கைல இருக்கு கண்ணு …போன வாரம் வரைக்கும் வாழ்நாள் முழுதும் தன் தாய் தகப்பனோட வாழுற நினைப்புல தான் பிறந்திருக்கும், இப்போ அவுக இல்ல நான் பார்த்துக்குறேன் ….இதோ இவனுக்கு நேத்துவரை யாரோ, இன்னைக்கு தாயாய் ஊட்டுறேன் ..நாளைக்கு என்னமோ நடந்துட்டு போகுது ..எத்தனை யோசனையாய் இருந்தாலும் நிமிஷத்துல ஆண்டவன் தான் இருக்கேன்னு காமிக்கிறானே ..இருக்கிறவரை இந்தப் பிள்ளைகளுக்கு தாயா இருக்கேன் “……இன்னும் கிருஷ்ணம்மா சொல்லி கொண்டே போக, கீதாவிற்கு எதுவும் காதில் விழவில்லை .எத்தனை உண்மை வார்த்தைகள் பெரியவளிடமிருந்து ….

    பெற்று வந்த பாசமா இது …தாயின் முகங்கள் தான் வேறு, தாய்மை எனும் குணம் ஒன்று தான் என்பது “ணங் “என்று கீதாவின் மண்டையில் பட்டது.கிருஷ்ணம்மாவின் கண்ணீர் கண்களைத் துடைத்து விட்டு வீடு வந்தாள் தெளிவாக ….

    அவள் கைபேசியிலிருந்து கருணை இல்லத்திற்குப் போன் பறந்தது ..தான் வளர்க்கப் போகும் குழந்தையின் வரவுக்காக…தாயாய் காத்திருந்தாள். .

    Share
  • பன்முக நோக்கில் நாட்டுப்புறப்பாடல்கள்

    — முனைவர் மீ.இராசேசுவரன்.

    nattupurap paadalgal
    முன்னுரை:
    ஒரு நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தின் முக்கிய அம்சம் அந்நாட்டில் வழங்கும் நாட்டுப்பாடல்கள். அவை, லட்சக் கணக்கான கிராமிய மக்களின் இசையாக அமைகின்றன. வியர்வை சிந்தி உழைக்கும் மக்களின் இழப்புகளை, சோகங்களை, காயங்களை, கண்ணீர் சிந்தும் ஓலங்களை, ஒப்பாரிகளை, குருதிச் சிந்தல்களை, அடிமை மக்களின் உரிமைக் குரலாய், உக்கிர முரசாய், உணர்ச்சிக் குவியலாய் அமைவது நாட்டுப் புறப்பாடல்கள் ஆகும். இதன் பரிமாணங்களை எடுத்துக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    பாடலின் வகைகள்:
    மனித சமுதாயத்தின் தொடக்க காலந்தொட்டு பாமர மக்களின் உணர்ச்சிப் பெருக்காகக் கொந்தளித்தோடும் நதிப்பிரவாகமே நாட்டுப்புறப்பாடல்கள். இதனை பல்வேறு வகையாகப் பிரிக்கலாம். அவையாவன,
    1.தாலாட்டுப்பாடல்கள்
    2.குழந்தைப் பாடல்கள்
    3.காதல் பாடல்கள்
    4.தொழில் பாடல்கள்
    5.பக்திப் பாடல்கள்
    6.ஒப்பாரிப் பாடல்கள்

    தாலாட்டு:
    தாலாட்டு எனும் சொல்லைத் தால்+ஆட்டு என்று பிரித்து பொருள் கொண்டால் அச்சொல் இருவிதமான பொருள்களைத் தருகிறது. ‘தால்’ என்றால் ‘நாக்கு’ என்றும் ‘தொட்டில்’ என்றும் பொருள்படும். நாக்கு என்று பொருள் கொண்டால் நாக்கினை அசைத்துத் தாய் பாடுகின்ற பாடல் என்று பொருள் கொள்ளலாம். தொட்டில் என்று எடுத்துக் கொண்டால், தொட்டிலை ஆட்டித் தாய் பாடுகின்ற பாடல் என்று பொருள் கொள்ளலாம்.

    குழந்தைக்குத் தாய், தந்தை என்ற இரு உறவுகளுமே இன்றியமையாத உறவுகள்தான் என்றாலும், குழந்தைக்காகத் தாய் மட்டுமே தாலாட்டுப்பாடும் மரபைக் காணமுடிகிறது. தந்தை குழந்தைக்காகத் தாலாட்டுப்பாடும் மரபைக் காண்பது அரிது. குழந்தையின் சிறுவயதில் நடக்கின்ற நிகழ்ச்சிகள் அப்படியே மனத்தில் பதியும் என்பதால் குழந்தையின் மன நிலையைச் சமூகத்திற்கேற்ப தன் தாலாட்டுப்பாடலின் மூலம் உருவாக்குகிறாள் தாய். தாய் தாலாட்டும் போது தன் வறுமை நிலையை மறந்து தன் மகனின் எதிர்காலம் சிறப்புடையதாக இருக்க வேண்டும் என எண்ணும் நிலையைக் கீழ்க்கண்டவாறு,

    “குறிஞ்சி மலைத்தேனே! கொண்டாடும் சந்தனமே!
    சரிஞ்சிப்படுத்திருக்கும் செண்பகமே கண்ணுறங்கு!
    கண்ணுறங்கு ராசாவே! கால் மொளச்ச பின்னாலே!
    ஒண்ணு ரெண்டு கத்துக்கொள்ள ஓடவேணும் கண்ணுறங்கு”[1 ]

    என்று பாடுகிறாள். தாய் வறுமையில் வாழ்ந்தாலும் தன் மகனைப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்,

    “மாடு மேய்க்க எங்கண்ணே ஒன்னே!
    நானனுப்ப மாட்டெண்டா!
    பாடுபட்டு நானுழைச்சு! பள்ளிக்கூடம் சேர்ப்பேண்டா!
    ………………
    சந்தனத்தில் தொட்டில் செய்து தாலாட்ட முடியாது
    வெள்ளியிலே சங்கு செய்து பாலூட்ட முடியாது
    ஓலக்குடிசை தாண்டா ஒரு மொழ பாயிதாண்டா
    கூழுகஞ்சியடா நீ குடிச்சு வளர்ந்துக்கடா!” [2 ]

    என்று பாடுகிறாள். இப்பாடலில் தாய் தன் வறுமையுடன் கூடிய ஏக்கத்தை வெளிப்படுத்துவதாகத் தெரிகிறது.

    தொழிற்பாடல்:
    வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட வேண்டியுள்ளது. செய்யும் தொழில்கள் வேறுபட்டாலும் கூட அவற்றின் நோக்கம் ஒன்றே. தொழிலில் ஈடுபட்டிருக்கும் சூழலில் தொழிலின் கடுமை தெரியாமல் இருக்கும் பொருட்டும் தொழிலுக்குத் துணை புரிய வேண்டியும் பாடல்கள் பாடப்படுவதுண்டு. இவ்வகைப் பாடல்கள் தொழிற்பாடல்கள் எனலாம்.

    உழைக்கும் மக்கள், வயலில் வேலை செய்கின்றவர்கள், நாற்று நடுகின்றவர்கள், களை எடுப்பவர்கள், ஏர் உழுகின்றவர்கள், அறுவடை செய்கின்றவர்கள், இப்படிப் பல்வேறு தொழில் செய்கின்றவர்கள், தங்களுடைய களைப்பு தெரியாமல் இருக்க பாடல்களைப் பாடுவது இயல்பு. உழவுத் தொழிலில் உழுதல் முதல் விளைந்தவற்றை வீட்டிற்குக் கொண்டுவருவது வரை எனப் பலதரப்பட்ட தொழிலின் போதும் பாடல்கள் பாடப்படுகின்ற உழைக்கும் மக்களின் அவல நிலையை உணர்த்தும் பாடல் ஒன்று,

    “ஏழாறு வருஷமாக என்னாத்த கண்டோம்
    ஏறுபுடிச்சி உழுத நாம எதத்தான் கண்டோம்
    தோட்டம் துறப்பு வயல்களெல்லாம்
    காலம் பூரா உழைச்சாலும்
    நம்ம வீடு இடிஞ்சிபோயி கிடக்குது
    அத எண்ணி தாங்க எம்மனசு தவிக்குது” [3]

    என்ற பாடலும்,

    “வேர்வைகளைத் தூவினோமோ முத்து முத்தாக- அது
    வெளஞ்சிருக்கு நெல்வயலில் கொத்து கொத்தாக
    களஞ்சியத்தில் போய் பதுங்கும் கட்டு கட்டாக நம்
    கண்ணிரெண்டும் நீர் வடிக்கும் சொட்டு சொட்டாக” [4]

    என்ற பாடலும் நம்மைச் சிந்திக்க தூண்டும் வகையில் உள்ளன.

    காதல் பாடல்கள்:
    மனித இனம் தோன்றிய காலத்தே காதல் உணர்வும் தோன்றியிருக்க வேண்டும். இன்ப உணர்ச்சிக்குக் காதலையும், அன்பு உணர்ச்சிக்குத் தாலாட்டுக்களையும், துன்ப ஊணர்ச்சிக்கு ஒப்பாரிப் பாடல்களையும் எடுத்துக் கூறுவர்.

    காதல் என்பது மனிதனது பருவ காலங்களின் வசந்தப் பாடல். ஆண், பெண் என்ற தத்துவத்தின் வித்தாகவும் அவற்றின் வாழ்வுக்கும், வளமைக்கும் அடிப்படையாகவும் காதல் விளங்குவதைக் காணலாம். ஆதாம் ஏவாள் தொடங்கி இன்று வரை காதலை உயிராகக் கருதுகின்றனர். உலகில் உயிர்கள் தோன்றிய போதே காதலும் உடன் தோன்றியிருக்க வேண்டும். நாட்டுப்புறப் பாடல்களில் பெண்ணின் வருணனைகள் அதிகம் இடம்பெறுவதுண்டு.

    “தேக்கு மரமாட்டம் தெளிவாக இருந்த என்னை
    முருக்கு மரமாட்டம் முறிச்சிப்போட்டுப் போனவளே
    பாக்கு மரமாட்டம் ஒசந்துதான் நின்ன என்னை
    கோரப்புல்லாட்டம் நறுக்கிப் போட்டு போனவளே
    என் உசுர பாட்டாக்கி உனக்காகப் பாடுறேன்
    உன் பூஞ்சிரிப்ப பாக்க தாண்டி உசுரோடு….
    உசுரோடு… உசுரோடு… வாழுறேன்” [5]

    என்று காதலிக்கு காதலன் பாடும் பாட்டு வழியாக அறியமுடிகிறது.

    திருமணம் செய்துகொள்ள ஆசை கொண்டு ஒருபெண் ஆணைப் பார்த்தோ, ஓர் ஆண் பெண்ணைப் பார்த்தோ பாடுவதாக வருவது ஆசைப் பாடல். இது காதலுக்குப் பிறகு வெளிப்படும். இரண்டு உள்ளங்கள் காதல் கொள்ளும் போது அதனைப் பிறர் பார்த்துக் கேலி செய்து பேசுவதை,

    “மண் குடத்தை தூக்கிக்கிட்டு
    மலையோரம் போனவளே
    உன் மண் குடத்தை வச்சிப்புட்டு
    இந்த மாமனையோ பாரடியோ
    அடி நீ சிவப்பு நான் கருப்பு ஏலேலோ
    இந்த ஊரு பய மக்களுக்கு நம்
    நினைப்புதான் ஏலேலோ அதனாலே
    ஊரக்கூட்டி பேசிடுவோம்” [6 ]

    என்று காதலன் கூறுவதும் தெரிகிறது.

    ஒப்பாரி:
    ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஏற்படுகின்ற இன்ப துன்ப உணர்வுகளை வெளிப்படுத்த மனிதனுக்கு ஏதோ தேவைப்படுகிறது. அவ்வுணர்வுகளை வெளிப்படுத்தத் தம் மொழியைத் துணைக்கு அழைத்துக் கொள்கின்றான். அம்மொழியின் வெளிப்பாடே பாடல் வடிவம். ஆண்கள், பெண்கள், கணவனை இழந்த பெண்கள், தாயை இழந்த மகள், மகனை இழந்த தாய், விதவை பாடும் ஒப்பாரிப் பாடல்களைப் பலவகையாகப் பிரிக்கலாம்.

    ஒப்பாரிப்பாடலின் கருப்பொருளாக இறந்தவரின் பெருமை, குணம், ஒப்பாரிப் பாடுகின்றவர்கள் இறந்தவர்களை நேசித்த முறை, விதவையின் வேதனை, இறந்தவரால் ஏற்பட்ட இழப்பு போன்றவை அமையும். துன்பத்தை வாய்விட்டுச் சொன்னால் மனத்தளவு, மன அழுத்தம் நீங்கும். அந்த அடிப்படையில் பிறந்ததுதான் ஒப்பாரிப் பாடல்கள். வாழ்க்கை இன்பங்களைக் கணவனோடு பகிர்ந்து வாழாத பெண்கள் கணவன் இறந்தவுடன் வைக்கும் ஒப்பாரி ஏனைய அழுகை ஒலிகளை விட அவலச்சுவை மிகுந்ததாகும்.

    “பூ முடிச்சி பொட்டு வச்சி
    பொன் நகையும் போட்டு வச்சி
    கல்யாணம் முடிச்சி வைச்சே யம்மா
    நான் கண்கலங்கி நிக்கிறேனே யம்மா
    ……….
    தன்ன னன்னெ னான னன்னே
    ………” [7]

    சமுதாயப்பாடல்:
    மாறும் என்ற வார்த்தையைத் தவிர மற்றவை அனைத்தும் மாறும் என்ற பொன்மொழிக்கு ஏற்ப உழைப்பவர்களுக்குச் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

    “மனிதா… மனிதா…
    இதை மாற்ற வேண்டாமா? உனை
    வாட்டி வதைக்கும் கொடுமைகளைத்
    தீர்க்க வேண்டாமா?
    உப்புத்தண்ணி இனிக்கும் என்றால்
    உனக்கெங்கே மதிப்போச்சி
    செத்தபின்பு சொர்க்கம் என்றால்
    இப்பிறவி என்னாச்சி?”

    என்று கூறுவதும்,

    “ஆத்தா உன்சேல – அந்த
    ஆகாயத்த போல
    தொட்டில் கட்டி தூங்க
    தூளி கட்டி ஆட
    ஆத்துல மீன்பிடிக்க
    அப்பனுக்கு தலதொவட்ட
    பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்
    நான் செத்தாலும் என்ன போத்த வேணும்
    இடுப்புல கட்டிக்கிட்டு நீச்சல் பழகினதும்
    ஓஞ்சேலதானே வண்ண பூஞ்சோலதானே
    ஈரசேல காயும்போது வானவில்லா தெரியும்
    இத்துபோன சேலையில் உன் சோகக்கத புரியும்”

    என்று தாயின் சேலையின் மதிப்பைக் கூறுவதும்,

    “காலேஜ் படிக்க வைக்க கண்ணுல உசுர
    வைச்சிக்கிட்டு கறவை மாடு
    மேக்கிறண்டா வாய்க்க வரப்புல
    கருத்தா படிக்கணும் நிறைய
    மார்க் வாங்கணும் கண்டபடி சுத்தாதப்பா
    கலெக்டர் ஆக்கி பார்க்கணும்”

    என்ற பாடல்கள் சமூகத்தின் விழிப்புணர்வுக்குப் பெரிதும் உதவுவதாக அமைகிறது..

    முடிவுரை:
    நாட்டுப் புறப் பாடல்கள் பல ஆண்டு காலமாகத் தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வருகின்றன, நாட்டுப்புறப்பாடல்கள் வளர்ச்சி அடைந்து உலகளவில் புகழ் அடைய வேண்டும். நாட்டுப்புறப்பாடல்களை அனைவரும் தெரிந்து கொள்வது தமிழ் மக்களின் கடமையாகும்.

    குறிப்புகள்: 
    1.விழிப்புணர்வு
    2.மேலது.ப.12
    3.மேலது.ப.10
    4.மேலது.ப.5
    5.மேலது.ப.16
    6.மேலது.ப.19
    7.மேலது.ப.21

    முனைவர் மீ.இராசேசுவரன்,
    உதவிப்பேராசிரியர்,
    தமிழ்த்துறை,
    பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி,
    நன்னிலம்.
    அலை:9942004767
    மின்:23575rajeswaran@gmail.com

    படம் உதவி: http://www.tamilvu.org/

    Share
  • சமய நோக்கில் ஐம்பெருங்காப்பியங்கள்

    –முனைவர் பெ.செல்லதுரை.

    ஐம்பெருங்காப்பியங்கள்

    முன்னுரை:
    தனக்கு உவமை இல்லாதவன் இறைவன் ஆவான். உலகப் படைப்பில் இறைவனை முன் வைத்தே ஒவ்வொரு ஆக்கங்களும் உருபெறுகின்றன என்பதும் உண்மை என்பதை ஐம்பெருங்காப்பியங்களில் காணலாகும் சமயப் பதிவுகளைக் கொண்டு உறுதிப்படுத்துகின்றன.

    சமயம்-வரைவிலக்கணம்:

    “பொங்குபல சமயமெனும் நதிகள் எல்லாம்
    புகுந்து கலந்திட நிறைவாய்ப்
    பொங்கி போங்கும் கங்குகரைக்
    காணாத கடலே” (இராமலிங்கம்)

    மேற்கண்ட தத்துவங்களில் பொங்கிப் பெருக்கெடுத்து வருகின்ற நதிகள்(சமயங்கள்) நிறைவில் கங்கு கரை காணாத கடலை(கடவுள்) சென்றடைகின்றன. இத்தகையக் கருத்துக்களில்தான் காப்பியங்களும் இவற்றில் காணப்படும் சமயப் பதிவுகளும் இடம்பெறுகின்றன.

    சிலப்பதிகாரமும் சமய நெறிகளும்:
    கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தில் காண்டங்கள் மூன்றும், முப்பது காதைகளும் இடம்பெறுகின்றன. கோவலன் கண்ணகி முதன்மைப் பாத்திரங்கள், எதிர்முனைப்பாத்திரம் பொற்கொல்லன், துணைப்பாத்திரங்கள் மாதவி, கவுந்தியடிகள், மாதரி, பாண்டியன் நெடுஞ்செழியன், பாண்டிமாதேவி, சேரன் செங்குட்டுவன்,மாடலன் போன்றோர்கள் இடம்பெறுகிறார்கள் அகவற்பாக்களைக் கொண்ட பாடல் வகையும் பதிகம் உட்பட 4899 மொத்த அடிகள் உள்ளன.

    இளங்கோவடிகள் சமணர் அவரால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம் சமணசமயக் கோட்பாடுகள் நிறைந்த காப்பியமாக உள்ளது.

    “கண்டேதும் செவ்வேள்”
    செம்பொருளாம் சிவனை இவர்”
    “பிறவா யாக்கை பெரியோன்”
    “உமையவள் ஒரு திறனாக ஓங்கிய இமையவள்”[கடவுள் வாழ்த்து]

    “பெரியவனை மாயவனைப் பேருலகமெல்லாம்
    குரியவளைக் காணாத”[ஆய்ச்சியர் குரவை]
    “சீர்கெழு செந்திலும் சென்கோரும்
    வெண்குன்றும்”[குன்றக்குரவை]

    மேற்கண்ட சமணக் கொள்கை கவுந்தியடிகள் மூலம் பேசப்படுகின்றது.

    இளங்கோவடிகள் சமரச நோக்கத்தோடு சிவன், திருமால், அருகதேவன், கொற்றவை, முருகன் போன்ற தெய்வங்களைப் பாடியுள்ளதால் பொதுவுடைமைச் சமயப்பதிவுகளை ஒருங்கிணைத்துக் காண முடிகிறது.

    மணிமேகலையில் சமயக்கூறுகள்:
    கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியம் மணிமேகலை மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் எழுதியது. கதா நாயகி மணிமேகலை எதிர்முகம் சித்ராபதி(பாட்டி) துணைப்பாத்திரங்களாக அறவணடிகள், மாதவி, சுதமதி, தீவதிலகை, உதயகுமரன், காஞ்சனன், காயசண்டிகை, மணிமேகலை தெய்வம், ஆபுத்திரன், ஆதிரை போன்றோர்களாவர். அகவற்பாக்களைக் கொண்டு 4856 அடிகளைக் கொண்டுள்ளன.

    “நுதல்விழி காட்டத்திறையோன்”[மணி:1-54]
    “கிந்தா தேவி நந்தாவிளக்கு நாமிசைப்பாவாய்
    வண்ணோர் தலைவி மண்ணோர் தலைவி மண்ணோர் முதல்வி”
    [14:17-19]

    எனக் கலைமகள் பக்தியும் மணிமேகலையின் வேண்டுகோளுக்கிணங்கி மாவண் கிள்ளி சிறைச் சாலையைத் தகர்த்து அவ்விடத்து பெளத்த கோயில் எழுப்பியதும் காணலாம்.

    புத்தர் பெருமானை மகாயான பௌத்தர்கள் பரம் பொருளாகவே துதித்துப் பரவினர். பெளத்த கோயில்களில் புத்தரின் திருவுருவ வழிபாடும், பாதபீடிகை வழிபாடும், மணிபல்லவத் தீவின் அமைப்பு, கோமுகிப் பொய்கை ஆதி முதல்வன் ஆதிசால் முனிவன், ஆதி சினேந்திரன், பகவான், முதல்வன், தொல்லோன் நாதன், எங்கோன் அண்ணல் அறவோன் போன்ற திருப்பெயர்கள் புத்தரையே குறிக்கின்றன. பெளத்த சமயம் அறவண அடிகள் மூலம் பேசப்படுகிறது.

    சீவக சிந்தாமணியில் சமய நெறிகள்:
    திருத்தக்க தேவர் கி.பி.ஏழாம் நூற்றாண்டில் சீவக சிந்தாமணியை இயற்றினார். நாயகன் சீவகன், நாயகி எண்மர் ஆவர். துணைப்பாத்திரங்கள் சச்சந்தன், விசயை, நந்தட்டன், கந்துக்கடன் நண்பர்கள் போன்றோர்கள். இந்நூல் 3145 விருத்தப் பாடல்களைக் கொண்டுள்ளன பதிமூன்று இலம்பகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

    சீவக சிந்தாமணி சமண சமயத்தின் பதிவுகளைக் கொண்டுள்ளது. சிந்தாமணியில் கடவுள் வாழ்த்துப் பாடலே அருகப் பெருமானை வணங்கினால் வீடு பேறு கிட்டும் என நம்பிக்கைக் கொண்ட மக்கள் இறைவழிபாட்டிற்குச் சாந்து, மலர்மாலை, சுண்ணப்பொடி, அகிற்புகை முதலிய பொருள்களைக் கொண்டு சென்றனர்(சிந்தா. 1604). அருகப் பெருமானுக்கு முக்குடை மூர்த்தி, முக்குடைச் செல்வன், முக்குடையான், முக்குடைதாதை, அறவழி அண்ணல், பிண்டி வேந்தன், பிண்டி நாதன், பிண்டி பகவான், பண்ணை, பரமன், வாமன், நேமி நாதன், தேவாதிதேவன் என்று சமண சமயப்பதிவுகளை சீவக சிந்தாமணி பிரதிபலிக்கிறது.

    வளையாபதியில் சமய கோட்பாடுகள்:
    வளையாபதி நூல் முழுவதும் கிடைக்கவில்லை 66 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. கி.பி.ஏழாம் நூற்றாண்டு நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. சமண சமய நூல் ஆகும். நாயகன் நவகோடி நாராயணன் ஆவான்.சமண மத கடவுளின் பெருமைகளையும் பதிவுகளையும் கொண்டுள்ளது.

    “உலக மூன்றும் ஒருங்குடன் ஏத்துமாண்
    திலக மாயதிறல் அறிவான் அடி
    வழுவில் நெஞ்சோடு வாலிதின் ஆற்றவும்”(வளையாபதி:கடவுள் வாழ்த்து)

    வளையாபதி முற்றிலும் பற்றொழித்து பிற உயிர்களுக்கு அருள் செய்தலே பெரிய தவ ஒழுக்கம் எனக் குறிப்பிடுகின்றது (வளை:43)

    பொருளின் பால் உள்ள மயக்கம் நீங்கல் மனம் மொழி மெய்களையடக்கி நன்றின்பால் உய்த்தல், விருப்பு வெறுப்பு. பற்றியிருத்தல் பொய்ப்பொருளைப் பற்றி கிடவாமை போன்றன தவசிகளுக்கு வேண்டிய பண்பெனப் பகரும், முதுமைப் பருவத்துத் துறவொழுக்கம் ஆற்றியே ஆக வேண்டும். (வளை:25:2444) போன்ற சமண மதப்பதிவுகளைப் பெற்று இக்காப்பியம் விளங்குகிறது.

    குண்டலகேசியில் சமய சிந்தனைகள்:
    குண்டலகேசி கி.பி.ஏழாம் நூற்றாண்டு நூலாகும் இதுவும் பெளத்த சமயம் பற்றியதாகும். நூல் ஆசிரியர் நாதகுத்தனார் கதா நாயகி குண்டலகேசி எதிர்ப்பாத்திரம் கத்துவான்(கணவன்) விருத்தப்பாக்களால் ஆனது. நூல் முழுவதும் கிடைக்கவில்லை. 19 பாடல்களே கிடைத்துள்ளன. கதா நாயகியின் பெயரே நூலுக்கும் பெயராயிற்று அவள் துறவியாக மாறினாள்.

    “தனக்கென்று
    ஒன்றானும் உள்ளான் பிறர்க்கே
    உறுதிக்கு உழந்தான்” (குண்டல:1)

    கடவுள் வாழ்த்தில் புத்தரைப் பற்றிய பதிவுகளுடன் காப்பியம் தொடங்குகிறது. பெளத்த காப்பியமாகிய குண்டலகேசி துறவினைப் பெரிதாக வலியுறுத்துகின்றது. காவி ஆடையினால் உடம்பைப் போர்த்து கொள்ளல், கோடையின் கண் தீயில் நிற்றல், மனம் பொறிகள் வழியாகப் புலன்களிடத்தே செல்லாமல் அடங்கி ஒழுக்கமே உண்மைத் தவவொழுக்கம் (குண்ட:4) போன்ற சமயப் பதிவுகளை வலியுறுத்துகிறது.

    தொகுப்புரை:
    பொதுவாக தமிழ்ப் பெருங்காப்பியங்களில் சமயப் பதிவுகள் பரவலாகவே இடம் பெற்றுள்ளன. சமண சமயம் ஆசிரியர் வருகைக்கு முன்னரே இந்தியாவில் வேரூன்றியிருந்து, வேதங்களில் காணப்படும் தீர்த்தங்கரர் பற்றிய குறிப்புகள் சமணத்தின் தொன்மைக்குச் சான்றாகும். சமணரின் உயிர்ப்பகுப்பு முறையே தொல்காப்பியத்தில் காணப்படுகிறது. பொறியுணர்வுகளுக்கு ஏற்ப உயிரினங்களைப் பிரித்துக் காட்டும் உயிரியல் பகுப்பு தனித்தன்மைகள் காப்பியங்களில் காணப்படுகிறது.

    தமிழ்க் காப்பியங்களில் கூறும் பௌத்தம் சமணம் மனிதனை மனிதனாக மதித்து முக்கியத்துவங்களைக் கொடுத்து மேலோங்கி நிற்கின்றன.

    பிற்கூறுகள் மூட நம்பிக்கை, தீண்டாமை, தனிமனித உயர்வுக்குத் தடை, மனிதனை மலத்தை விடக் கீழாக மதித்தல் போன்றவற்றைக் கடவுள் சமயக் கொள்கைகளாகப் புகுத்தியதால் தற்காலத்தில் சமயக் கொள்கைகள் வற்றிப்போயின.

    சமயக் கொள்கைகளை வளர்க்க, அறிவியல் கொள்கைகளை முடக்கி வைக்கும் நோக்கம் கொண்டதாக பிற்கூறு சமயப்பதிவுகள் உள்ளன”

    மனிதனை மனிதனாக மதிக்கும் சமண பெளத்த மதக் கொள்கைகள் தமிழ்க் காப்பியங்களில் பெரும் பதிவுகளைக் கொண்டு மகத்துவம் வாய்ந்ததாகக் காண முடிகிறது.

    முனைவர் பெ.செல்லதுரை,
    உதவிப்பேராசிரியர்,
    பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி,
    நன்னிலம்.
    அலை:9976378412
    மின்:5674selladurai@gmail.com

    படம் உதவி: http://www.edubilla.com/onbooks/tamil/ilakkiyam/

    Share
  • பென்டிரைவ்களுக்கான Recycle Bin – iBin

    – எஸ். நித்யலக்ஷ்மி

     

    Create-USB-Flash-Drive-Recycle-Bin-iBin_BIGRecycle Bin பற்றி நாம் அனைவருக்கும் தெரியும். நாம் டெலிட் செய்யும் ஃபைல்கள் தற்காலிகமாக இங்கே இருக்கும். நாம் தவறுதலாக டெலிட் செய்யும் ஃபைல்களை இங்கிருந்து எடுத்து விடலாம். ஆனால் பென்டிரைவ் உபயோகிப்பவர்கள் பென்டிரைவ்வில் இருந்து டெலிட் செய்த ஃபைல்களை நாம் மீட்டெடுக்க File Recovery மென்பொருள்கள் பயன்படுத்த வேண்டும். iBin என்ற இந்த மென்பொருள் பென்டிரைவ்களுக்கு Recycle Bin போலச் செயல்படுகிறது.

    முதலில் iBin டவுன்லோட் செய்து அதில் உள்ள iBin.exe என்ற ஃபைலை உங்கள் பென்டிரைவ்வில் copy செய்து கொள்ள வேண்டும். இது வெறும் 218kb அளவு கொண்டதுதான். முதன்முதலில் ஒரு ஃபைலை டெலிட் செய்யும் போது iBin உங்கள் பென்டிரைவ்வில் உள்ள கோப்பை டெலிட் செய்து விடவா? அல்லது iBin ஃபோல்டரில் தற்காலிகமாக வைத்துக் கொள்ளவா? எனக் கேட்கும். Dump into iBin என்பதை கிளிக் செய்தால் உங்கள் பென்டிரைவ்வில் iBin என்ற folder ஐ உருவாக்கும். இது தான் உங்கள் பென்டிரைவ்களுக்கான Recycle Bin folder. இது உங்கள் பென்டிரைவ்வின் அளவிலிருந்து 10% எடுத்துக் கொள்ளும். வேண்டுமென்றால் நாம் அளவை நாம் நிர்ணயம் செய்து கொள்ளலாம். இதற்கு உங்கள் system tray ல் உள்ள iBin icon ஐ கிளிக் செய்து கொள்ள வேண்டும். இதில் custom options என்பதை கிளிக் செய்து கொள்ள வேண்டும். இதில் சென்று உங்களுக்குத் தேவைக்கு ஏற்ப அளவைக் கூட்டவோ, குறைக்கவோ செய்து கொள்ளலாம். மேலும் பல வசதிகளும் உள்ளன.

    எளிதாக நாம் டெலிட் செய்த ஃபைல்களை பார்க்கவோ அல்லது நீக்கவோ Dumping mgmt என்பதை கிளிக் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் ஃபைல்களை நீக்கவோ அல்லது மீண்டும் சேமிக்கவோ முடியும்.

    படம் உதவி: http://blog.premiumusb.com/2011/04/create-recycle-bin-on-usb-flash-drive/

    Share
  • ரிஷான் ஷெரிஃபின் ‘காக்கைகள் கொத்தும் தலைக்குரியவன்’ – மாய யதார்த்தத்தின் வலிமை

    சத்யானந்தன்

    (சிறுகதை குறித்த திறனாய்வுக் கட்டுரை)

    ரிஷான் ஷெரிஃபின் ‘காக்கைகள் கொத்தும் தலைக்குரியவன்’ சிறுகதைக்கான இணைப்பு இது

    http://mrishansharif.blogspot.qa/2011/10/blog-post.html

    வாசிப்பிலும் படைப்பிலும் சிறுகதையின் இடமே முதன்மையானது. இருப்பினும் படைப்பாளிகளால்  சிறுகதை என்னும் உருவம் உள்ளடக்கத்தை ஒட்டியே தேர்ந்தெடுக்கப் படுகிறது. நவீனத்துவத்தில் சிறுகதையின் வீச்சு மேம்பட்டு ஆகச் சிறந்த வடிவம் இதுதானோ என்று அதிசயிக்க வைக்கிறது. ஆனால் சிறுகதை வடிவத்துக்கு வரம்புகள் உண்டா? என்ன வரம்புகள்? படைப்பாளிக்கு மட்டும் சில இடத்தில் முட்டி நின்று விட நேர்வதா? ஏன் அப்படி ஆக வேண்டும்? அடுத்ததாக வாசகனுக்கு சில தடைகள் உண்டா? சொற்களின் ஆற்றலுக்கும் வாசகனுக்கும் கூட தாண்டிச்செல்ல முடியாத இடங்கள் உண்டா?

    உண்டு. நம்மால் நுட்பமாகப் புரிந்து கொள்ள முடியாத உணர்வுக் கோடுகள் வெட்டிக் கொள்ளும் புள்ளிகள் உண்டு. நுட்பமான தருணங்கள் ஆழ்மன பிரக்ஞை அல்லது வெளிமனப் பிரக்ஞை எனப் பகுத்தறிய முடியாத தளத்தில் சலனப்பட்டு மறைபவை. அவற்றை நாம் புழங்கும் சொற்களால் நம் மனம் பழக்கப்படுத்தப்பட்ட வாசிப்பு மற்றும் உள்வாங்குவது நம் உள்ளார்ந்த தடைகளால் இயலாத ஒன்று.

    இந்த இடத்தில் தான் மாய யதார்த்தத்தின் வீச்சு படைப்பாளி வாசகன் இருவருக்கும் இவற்றைத் தாண்டிச் செல்ல உதவுகிறது. காட்சி என்னும் ஊடகம் வாசிப்பு ஊடகத்தை ஒப்பிட நுட்பங்களைப் புரிய வைப்பதில் கையாலாகாதது. மாய யதார்த்தம், வார்த்தை என்னும் வடிவம் செயலிழக்கும் இடத்தை எளிதாகக் கடந்து செல்லுகிறது. நவீன கவிதையின் பலம் நாம் பழக்கப்பட்ட காட்சி அல்லது உரையாடலைக் காட்டி நாம் தடுமாறும் புள்ளியைத் தாண்டி ஒரு ஆழ் தரிசனத்துக்கு இட்டுச் செல்வது. மாய யதார்த்தம் காட்சி வழி நவீன கவிதை நம்மை உடன் அழைத்துச் செல்லும் மாயத்தை புனைகதைக்குள் கொண்டு வருவது.

                ரிஷானின் தலைப்பே அந்தக் கதையின் சுருக்கம் என்று கூறி விடலாம். சரி காக்கைகள் ஏன் அவன் தலையைக் கொத்த வேண்டும்? கதையின் இந்தப் பகுதியில் நமக்கு ஒரு முனை கிடைக்கும்:

    …. விந்தி விந்தி ஓடித் துரத்துவான். அவன் ஓடுவதைப் பார்க்க, தவளையின் பாய்ச்சல் போலவும் நண்டின் நகர்வினைப் போலவும் இருக்கும்.

    ஒழுங்காக ஓட முடியாமல் அவனது முழங்கால்கள் இரண்டும் பிறப்பிலேயே வளைந்திருந்தன. இன்னும் அவன் மிகவும் ஒல்லியானவன். அவனது முகம் போஷாக்கேதுமற்று மெலிந்த ஒரு இரண்டு வயதுக் குழந்தையைப் போன்று சிறியது. நெடிய இமைகளைக் கொண்ட சிறிய விழிகளைப் பார்க்கப் பாவமாகவும் இருக்கும். கருத்த சருமம் உடையவனல்ல. அதற்காக சிவப்பானவனாகவும் இல்லை. ஒரு மாதிரியாக வெள்ளைக் காகிதத்தில் செம்மண் தூசு அப்பியதைப் போன்ற வெளிறிப் போன நிறம். நெற்றியிலிருக்கும் சுருக்கக் கோடுகளை வைத்து மட்டுமே அவனது வயது முப்பதுக்கும் நாற்பதுக்குமிடையிலிருக்குமென அனுமானிக்கலாம். குட்டையானவன். வளைந்த கால்கள் அவனை இன்னும் குட்டையாகக் காட்டின. ஒருபோதும் அச் சிறுவர்கள் எவரும் அவனிடம் அகப்பட்டதில்லை….

                கதை நெடுக நாம் காக்கைகள் அவனைக் கண்ணில் படும் போதெல்லாம் துரத்தித் தலையில் கொத்தின என்பதையும், அவன் முதலாளி அவனுக்கு மந்திரித்த கயிறு தாயத்து எல்லாம் வாங்கித் தந்தார் எனவும் படிக்கிறோம். கதையில் மேற்கண்ட பத்தியின் வழியாகவே நாம் கதையின் உள்ளே போகிறோம். நமக்கு நன்றாகவே தெரியும் விளிம்பு நிலையில் உள்ளவர் தோற்றத்திலும் குறையுள்ளவராக இருந்தால் நாம் எப்படி அவரை நடத்துவோம் என்பது..

    ஆனால் நமக்குத் தெரியாதது அக்கறையில்லாதது ஒன்று அவரிடம் இருக்கிறது. அது தான் நிராகரிப்பாலும், இழிவு படுத்தப்படுவதாலும் நிகழும் வலி. அந்த வலி எப்படிப்பட்டது என்பது அனுபவித்தவருக்கு மட்டும் தான் புரியும். நாம் எந்தக் விதத்திலும் கண்டுகொள்ளாத அந்த வலி மிகவும் ஆழ்ந்தது. அல்லும் பகலும் மனதை கத்தியால் கீறும் மாறா ரணம்.

    இந்த ரணத்தை, வலியை, அவஸ்தையை நாம் உணரும் துவங்கு புள்ளியில் இல்லை என்பது எளிய உண்மை அது நமக்கு என்றுமே அக்கறையில்லாத விஷயம். நமக்கு அன்னியமானதும் நம் மரத்துப் போன மனித நேயத்தால் உணர முடியாததுமான அதை இந்த மாயயதார்த்தத்தின் மூலம் காண்கிறோம். பிறர் கண்ணால் இழிவாகப் பார்க்கப் படுவதும் வார்த்தைகளால் காயப்படுத்தப்படுவதும் எத்தனை துன்பம் தருவது என்பதையே பகலில் துரத்திக் கொத்தும் காகங்கள் வடிவில் காண்கிறோம். அதே காகங்கள் வழி வேறு ஒன்றும் நமக்கு உணர்த்தப் படுகிறது. இறுதியில் வரும் இந்தப் பத்தியைப் பார்ப்போம்:

    …. குளிக்கப்போன அவ்வூர் மருத்துவச்சிக் கிழவிதான் கரையோரப் பாறையொன்றில் வழுக்கிவிழுந்து மண்டை உடைந்து பெரிய சிவப்பு எறும்புகள் மொய்க்க, குருதி காயச் செத்துக்கிடந்தவனைக் கண்டு அலறினாள். ஆற்றங்கரையின் மருத மரத்தில், அயல்மரங்களிலென எல்லாவற்றிலும் கருப்புத் திட்டுக்களாய்க் காக்கைகள் அவனைச் சுற்றிலும் கரைந்தபடி இருந்தன. அவன் எழவில்லை. எனினும் அவ்வூர்க் காக்கைகளெல்லாம் ஒன்று சேர்ந்தாப்போலக் கூட்டமாக இருந்து அவனைப்பார்த்துக் கரைந்தன. இரை தேடி அலைதல் மறுத்து அப் பிணம் அகற்றப்படும் வரையில் அங்கேயே கிடந்தன. இனிமேல் அவனது தலை வானொலிப்பெட்டியை அழுத்தி, ஒலிக்கவைக்கச் செய்யமுடியாதென அறிந்தோ என்னமோ, அவை அவனைக் கொத்தவுமில்லை, துரத்தவுமில்லை.

                காக்கைகள் தமது இனத்தில் ஒரு காக்கைக்கு அடிபட்டாலோ அல்லது இறந்து போனாலோ மட்டுமே அவ்வாறு  கூடி  வருந்தும் எனவே அவனுக்காக இன்று கூடும் காக்கைகள் அவனை இத்தனை நாளாகவே தமது இனம் என்றே கருதி வந்தன. அவைகளைத் தவிர அவனைத் தன் இனம் என எண்ணுவோர் யாரும் இல்லை. இதை இந்த மாய யதார்த்தம் வாயிலாக அவர் எடுத்துரைக்கிறார்.

    மிகவும் நுட்பமாகவும் விரிவாகவும் அவர் இந்த மாயயதார்த்தத்தை கதைக்குள் சேர்த்திருக்கிறார். அப்படி சேர்த்திருப்பது பிழையென்று சொல்ல முடியாது. அதே சமயம் அது மாய யதார்த்தம் சுட்டும் புரிதலை  சற்றே நீர்க்க அடித்து விடுகின்றது.

    கதையின் இறுதி பத்தி அந்த நீர்க்கடித்தலைத் தாண்டி நம்மை ஆழ்ந்த புரிதலுக்கு இட்டுச் செல்வதால் நாம் ரிஷான் தமது முயற்சியில் வெற்றி கண்டார் என்றே கூறலாம். மூத்த எழுத்தாளர்கள் பலரும் மாய எதார்த்தம் தேவைப்படாத சூழலில் அதைப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். ரிஷான் பொருத்தமான கதையில் அதை சரியாகப் பயன் படுத்தி இருக்கிறார்.

    திண்ணையில் வெளியாகி நான்கு ஆண்டுகள் கழித்தாலும், இதை நான் வாசிப்பதற்குக் காரணம் மாய யதார்த்தம் பற்றி சக எழுத்தாளரிடம் விவாதித்த போது அவர் இதற்கான இணைப்பை எனக்குத் தந்ததே. ஓர் அசலான படைப்புக்குக் கிடைக்கும் அங்கீகரிப்புக்கு இது ஒரு நல்ல எடுத்துக் காட்டு.

    • சத்யானந்தன் (பதிவுகள்)

    sathyanandhan.mail@gmail.com

    Share
  • பொங்கல் திருநாளும் வந்ததே!

    -சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்

    அகமோடு முகமும்   மலர
    ஆதவனை வணங்கி வரவேற்று
    இல்லத்தில் பொங்கல் வைத்து                         pongal4
    ஈடற்ற மகிழ்ச்சி தானும் பொங்க
    உள்ளத்தே நல்லன மட்டும் விதைத்து
    ஊராரோடும் நாம்தான் ஒன்றுகூடி
    எப்போதும் சமத்துவமே மேலோங்க
    ஏகமனதுடன் வாழ்த்துக்கள்  பரிமாறி
    ஐ! நம் தை மகளுக்கும் நன்றிசொல்லி
    ஒப்பற்ற சமுதாயம் உருவாகவே
    ஓயாது நாமும் தான் பாடுபடுவோம்!
    பொங்கல் நல்வாழ்த்துக்கள் அனைவர்க்கும்!

    வாழ்க வளமுடன்!

     

     

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் – குழந்தைகளுக்கான இணைய தளங்கள்

    – எஸ். நித்யலக்ஷ்மி

    குழந்தைகளுக்கான இணைய தளங்கள்

    INTERNET SITES FOR KIDS

    1. கல்வி விளையாட்டுக்கள், வேடிக்கையான கேம்ஸ், ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமான தகவல்கள், கலை அம்சம் நிறைந்த பலவற்றிற்கு 20 ஆயிரத்திற்கு மேலான இணைய தொடர்புகள், வண்ணம் தீட்டி பழக தளங்கள், கணக்கு பழக பயிற்சிகள் மற்றும் டவுன்லோட் செய்து வைத்து விளையாட கேம்ஸ் என அனைத்து வகைகளிலும் குழந்தைகளுக்கான இணையக் களஞ்சியமாக இயங்குகிறது www.links4kids.co.uk என்ற முகவரியில் உள்ள தளம்.

    2. நூற்றுக் கணக்கில் இன்டர்நெட் இணைப்பில் விளையாட கேம்ஸ், கார்ட்டூன், மூவி கிளிப்கள், மியூசிக் வீடியோ, புதிர்கள், கற்பனைத் திறனை ஊக்கப்படுத்தும் செயல்பாடுகள், பக்கங்களுக்குக் கலர் தீட்டுதல், பாதுகாப்பான வழிகளில் இணையத் தேடல் என வேடிக்கை விளையாட்டுக்களையும் கல்வி கற்றலையும் இணைத்துத் தருகிறது www.alfy.com என்ற முகவரியில் உள்ள இணைய தளம்.

    3. www.surfnetkids.com என்ற தளத்தில் பலவாறான வித்தியாசமான கேம்ஸ், வேடிக்கை விளையாட்டுக்கள், குழந்தைகளுக்கான தகவல்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தர விரும்பும் விஷயங்கள், நினைவாற்றலை வளர்க்கும் விளையாட்டுக்கள் எனப் பல வகைகளில் குழந்தைகளுக்கான அனைத்து விஷயங்களும் வித்தியாசமான முறையில் தரப்பட்டுள்ளன.

    4. குழந்தைகளுக்கான இணைய தளங்கள் அனைத்தையும் நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களா? அனைத்தையும் தராவிட்டாலும் பெரும்பான்மையான தளங்களைப் பட்டியலிடுகிறது www.kidsites.org என்ற முகவரியில் உள்ள தளம்.

    5. குழந்தைகளுக்கு கணக்குகளைத் தந்து அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்கும் தளமாக விளங்குகிறது www.coolmath4kids.com உலக அளவில் இது சிறந்த தளம் என்ற பாராட்டினைப் பல அமைப்புகளில் இருந்து பெற்றது. குழந்தைகளுக்கு கூட்டல், கழித்தலில் தொடங்கி அல்ஜிப்ரா, பின்னங்கள், டெசிமல் கணக்குகள் எனக் கணக்கின் அடிப்படையையும் அதன் தொடர்பான பிறவற்றையும் கற்றுத்தரும் பல தளங்கள் இணையத்தில் உள்ளன. இவை அனைத்தும் கணக்கியலை விளையாட்டுக்கள் மூலமும் புதிர்கள் மூலமும் கற்றுத் தருகின்றன. அவற்றின் முகவரிகள்: www.coolmath.com, www.coolmath4kids.com, www.sciencemonster.com, www.spikesgamezone.com

    6. www.kids.yahoo.com என்ற முகவரியில் இன்னொரு அருமையான குழந்தைகளுக்கான தளம் உள்ளது. கேம்ஸ், மியூசிக், குறும் திரைப்படங்கள், ஜோக்ஸ், விளையாட்டுக்கள் மற்றும் படித்துப் பாருங்கள் எனப் பல பிரிவுகளில் இந்தத் தளம் குழந்தைகளுக்காகவே உருவாக்கப் பட்டுள்ளது.

    7. உங்கள் குழந்தை, தான் கம்ப்யூட்டரில் விளையாடும் கார்ட்டூன் படங்களையும் மற்ற கேரக்டர்களையும் தன் கம்ப்யூட்டரில் (ஏன், உங்கள் கம்ப்யூட்டரிலும் கூட) திரையில் வைத்துக் கொள்ள விரும்புகிறதா? அல்லது ஹோம் பேஜாக வைத்து இண்டர்நெட்டை இயக்கியவுடன் வர வேண்டும் என விரும்புகிறதா? இத்தகைய ஆவலை நிறைவேற்ற www.hitentertainment.com என்ற தளம் இயங்குகிறது. குழந்தைகள் உலகின் பல கேரக்டர்கள் இங்கு உள்ளன. இந்த கேரக்டர்கள் பங்கு கொள்ளும் சிறிய கதைகள் குழந்தைகளின் மனதில் நல்ல உறுதியை வளர்க்கின்றன.

    8. இரண்டு வயதிலிருந்து எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கான அனைத்து விளையாட்டுக்களையும் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய தகவல்-களையும் தருகிறது www.pbskids.org என்ற முகவரியில் உள்ள தளம். இந்த வகையில் இன்னும் சேர்க்கப்பட வேண்டிய தளங்களாக www.nickjr.com , www.uptoten.com, www.kidsgames.org, www.gameskidsplay.net ஆகியவை உள்ளன.

    9. இத்தகைய விளையாட்டுக்களோடு குழந்தைகளுக்கான அடிப்படை அறிவியல் விஷயங்களையும் சேர்த்து விளையாட்டுக்கள் மூலமாகத் தரும் ஓர் இணைய தளம் www.playkidsgames.com இந்தத் தளத்தில் குழந்தைகள் செயல்படுகையில் பெற்றோர்களும் உடன் இருந்து அவர்களுக்கு வழி காட்ட வேண்டும். கம்ப்யூட்டர், மேத்ஸ், பிரச்சினைகளைத் தீர்த்து வெற்றிகாணும் வழிகள், படித்துச் சிந்தித்து தகவல்களைக் கைக் கொள்ளும் வழிமுறைகள் எனப் பல வகைகளில் குழந்தைகளின் பொழுது போக்கும் வழிகளிலேயே நிறைய அறிவு வளர்க்கும் விஷயங்களையும் தருகிறது இந்தத் தளம்.

    10. அனைத்து வயதிலும் உள்ள குழந்தைகளுக்கான தளம் www.funbrain.com என்பது. கேம்ஸ் விளையாடுகையில் குழந்தைகளிடம் தகவல்களைப் பெற்று தொடரும் வகையில் கேம்ஸ்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் விளையாடும் ஆசையுடன் வரும் குழந்தைகளின் ஆர்வம் தூண்டப்பட்டு அவர்கள் கற்றுக் கொள்ளக் கூடிய வழிகளையும் மேற்கொள்கிறது இந்தத் தளம். சொற்களைப் படிப்படியாகக் கற்றுக் கொடுக்கிறது. குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு அவர்களுக்கான பாடத்திட்டத்திற்கேற்ப விளையாட்டுக்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் பல விளையாட்டுக்கள் வடிவமைக்கப்பட்டுத் தரப்படுகின்றன.

    Share
  • அமைதி

    -மெய்யன் நடராஜ் 

    பூங்காற்றின் அரவணைப்பில் பூவிதழை மெத்தையாக்கிப்
    -பொன்னெழிலாய் பனியுறங்கும் அமைதி
    நீங்காமல் நெஞ்சமதில் நிலைத்திருக்க நாள்தோறும்
    -நினைக்கின்ற சுகமுமொரு அமைதி.

    தேங்காய்க்குள் ளிருக்கின்ற தீர்த்தத்தைப் போலினிக்கும்
    -தெய்வீகத் தன்மையுள அமைதி
    வாங்காத கடனுக்கு வட்டியுடன் முதலாக
    -வந்துவிடும் ஆனந்தம் அமைதி.

    தூங்காமல்  வதைக்கின்ற  துயரத்தில் வாடுகையில்
    -தூரத்தே போய்நிற்கும் அமைதி
    தாங்காத துயரங்கள் தனைஏந்தி வைத்தமனம்
    -தூர்வார ஊற்றெடுக்கும் அமைதி.

    ஏங்காத இதயத்தில் இதமாகப் பதமாக
    -என்றென்றும் குடியிருக்கும் அமைதி
    தீங்கற்ற எண்ணத்துள் திளைக்கின்ற ஆசைக்குத்
    -தேனாலே நீராட்டும் அமைதி.

    இல்லாத பேருக்கு இருப்பதிலே ஏதேனும்
    -ஈவதிலே கிடைக்கின்ற அமைதி
    பொல்லாத மனிதர்களின் புகழ்வாக்கின் போதையிலே
    -புளகாங்கிதம் கொள்ளாத அமைதி.

    கல்லாத பேர்களிடம் கவலையற்றுக் கிடந்தேனும்
    -கண்ணுறக்கம் கொடுத்துவிடும் அமைதி
    சொல்லாத வார்த்தைகளின் சுகமான அர்த்தத்தில்
    -சுகராகம் இசைத்துவிடும் அமைதி.

    உனக்குள்ளே உனைத்தாங்கும் உயிர்த்தூணாய் இருக்கின்ற
    -உள்ளத்தின் உறுதியெனும் அமைதி
    தனக்கென்ற கொள்கைக்குத் தடைபோட்டு பிறர்க்கென்று
    -தான்வாழச் சொல்கின்ற அமைதி.

    இனத்துக்கும் சனத்துக்கும் எப்போதும் போராடி
    -இழக்கின்ற சந்தோசம் அமைதி
    எனக்கென்றும் உனக்கென்றும் எல்லாமே பொதுவானால்
    -இழப்பற்று இருந்துவிடும் அமைதி

     

     

    Share
  • ரஷிய இலக்கிய உருவவியல் கட்டமைப்பு தழுவலும் எதிர்த்தழுவலும் (19ஆம் நூற்றாண்டு)

    ரஷிய இலக்கிய உருவவியல் கட்டமைப்பு

    தழுவலும் எதிர்த்தழுவலும் (19ஆம் நூற்றாண்டு)

    சு. விமல்ராஜ்.

    இலக்கியம் என்பது மனித இனத்தின் உணர்வுகளை பரிமாறிக்கொள்ள உதவும் கருவி மட்டும் அல்ல, அது சமூகம் என்னும் அமைப்புக்குள் கீழே விழுந்துவிட்டவனைக் கைப்பிடித்து தூக்கி நிறுத்தவும் உதவும். மனித இனம் காலங்காலமாய் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள, மாற்றிக்கொள்ள இலக்கியத்தை ஒரு கருவியாகக் கொண்டு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரஷிய இலக்கிய வரலாற்றின் ஆழமான பார்வைப் பதிவுகளில் படைப்பின் முக்கியத்துவம் சாதாரண மக்களுக்கான இலக்கியமாக, இலக்கியம் தன்னை மாற்றிக்கொள்ளும்போதுதான் அதன் அடர்த்தி உண்மையானதாக இருக்கும் என்ற நிலை உள்ளது. உருவம், உள்ளடக்கம், இலக்கணத்தன்மை இவை இலக்கியத்தை ஒரு மேல் தளத்தில் வைத்துப் பார்க்காமல் சாதாரண குடிமக்களின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்வதாக இருக்கவேண்டும் என்பது ஒரு கருத்து. இதற்கு எதிரிடையான கருத்து வழியும் உண்டு. ஏனென்றால் இலக்கியம் என்பது எப்போதும் இலக்கியமாக இருக்க வேண்டும் என்ற ஒரு கூற்று உண்டு.

    அதிகார வர்க்கங்களின் முகமூடியைக் கிழித்து எறியும் விதமாக உருவான ரஷிய இலக்கிய முகம் நடுத்தர மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களுக்காகப் போராடும் கருவியாகவும் பயன்பட்டது. நவம்பர் புரட்சிக்குப் பிறகு ரஷ்யாவில் இலக்கியத்துறையில் காணப்பட்ட மாற்றம் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்து ஒன்றிலிருந்து இருபத்து ஐந்தில் உருவான உருவவியல் கோட்பாட்டின் வெற்றி என்று சொல்லுகிற அளவுக்கு அது அமைந்திருந்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுகளில் ‘ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹிஸ்ட்ரி ஆஃப் ஆர்ட்’ என்னும் அரசு நிறுவனம் நிறுவப்பட்டு அதனுடைய இலக்கிய வரலாற்றுப் பிரிவாக ஒன்று இயங்கியது. இந்நேரத்தில் உருவவியல் இயங்குதளம் விரைவாக இயங்கியது. அங்கே காணப்பட்ட மார்க்சியத்தின் அழகியலுக்கு நேர் எதிரான ஒரு திறனாய்வுக் கோட்பாட்டை திட்டவட்டமான முறையில் உருவவியல் முன் வைத்தது. அது, ஒரு இலக்கியப்படைப்புக்கு சமூகவியல் அல்லது உளவியல் விளக்கத்தையோ அல்லது படைப்பாளிகளின் வாழ்க்கை வரலாற்றினை அடிப்படையாகக் கொண்ட விளக்கத்தையோ கொடுப்பதைப் புறக்கணித்தது. கவிதைப் படைப்பு, அதன் கட்டுமானம், அதன் சீர்கள், தளைகள், பாணிகள் ஆகியவற்றின் மீது அக்கறை காட்டியது.

    ஓபாயாஸ் என்ற பெயரில் விக்டர் ஸ்க்ளொவ்ஸ்கி என்பவரின் தலைமையில் இயங்கிய உருவவியலை சார்ந்தவர்கள் ஒரு படைப்பின் உள் அடக்கத்தைப் பொருட்படுத்தாமல் அதிலுள்ள சிறப்பான இலக்கிய உத்திகளை மட்டுமே ஆய்வு செய்ய தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டனர். கலை இலக்கியப்படைப்புகளுக்கு அதன் உள் கட்டமைப்புக்கு மட்டுமே முதன்மைக்கொடுத்தும் அவற்றை வெறும் சமூகவியல் நோக்கில் மட்டுமே பார்த்தும் வந்த பிளாக்கானோவியப் பார்வைக்கான எதிர்ப்பாகவே உருவவியல் என்றே கூறலாம். புரட்சிக்கு முந்தைய ரஷியாவில் இருந்த மொழியியல் ஆய்வுகளில் ஏற்பட்டிருந்த முன்னேற்றங்களைப் பயன்படுத்திக் கொண்ட உருவவியல் ஆய்வாளர்கள், ஃப்யூச்சரிசம் போன்ற நவீனப்போக்குகளை ஆதரித்தனர். பாட்டாளி வர்க்கம் பழைய சமுதாயத்தை உதறித்தள்ளியதைப் போல் தாங்கள் பழைய மரபுகளை எதிர்ப்பதாகக் கூறினர். தோஸ்தோவெஸ்கியின் படைப்புகளிலோ அல்லது நிகோலாய் பெர்டியெவின் தத்துவத்திலோ காணப்படுகின்ற கருத்துகளின் செல்வாக்கில் இருந்து இலக்கியத் திறனாய்வை விடுவிக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணம் உருவவியலை ஆதரித்தவர்களுக்கு இருந்தது. ஏன் என்றால் ரஷியர்களிடம் இறை நம்பிக்கை அதிகமாக இருந்தது.

    உருவவியல் கோட்பாட்டாளர்களின் கருத்துகள் விமர்சனங்களுக்கு உள்ளானது. முழுவதும் கடவுள் இல்லை என்னும் கொள்கை உடையவர்கள் என்று கருதத்தக்கவர்களால் ஏற்பட்ட புரட்சியால் மயக்கப்பட்டவர்கள் என்ற நிலையிலும்கூட கடவுள் செயல் என்ற தன்மையில் இருந்து அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள மிகவும் சிரமப்படுகின்றனர் என்று உருவவியல் கோட்பாடு கொண்டவர்கள் கருதுகின்றனர். ரஷிய நாட்டின் குறியீட்டுக்கவிஞர் அலெக்சாண்டர் பிளாக்கை அவர்கள் சுட்டிக்காட்டினர் (ரஷிய புரட்சி இலக்கியம்.ப.85 .ராஜதுரை) தமது பன்னிருவர் என்ற கவிதையில் ஏசு கிருத்துவை செங்காவலரை வழி நடத்திச் செல்பவராக வர்ணிக்கிறார்.

    கவிதைப்பாணியினை விடுதலை செய்வதும் பணிந்து போகும் சிம்பலிஸ்டுகளை மேன்மேலும் அடிமைப்படுத்தி வந்துள்ள தத்துவ சமயப் போக்குகளுக்கு தலை வணங்க மறுப்பதும் உருவவியலாளர்களின் முதன்மையான நோக்கமாகும் என்று போரிஸ் ஐசன்பாம் கூறுகிறார். எனவே, ஓபாயாஸ் குழுவானது மார்க்சிய அழகியல் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அது, கட்சிக்குத் துணை புரிகின்ற இலக்கிய விமர்சனப் போக்குதான் என்று கட்சித்தலைவர்கள் சிலர் கருதியதில் நியாயம் இருந்தது. உருவவியலாளர்கள் தங்கள் கருத்துகளை தடையேதும் இல்லாமலும், மிகுந்த செருக்கோடும் பிரகடனப்படுத்தினர். இலக்கியத்தை வெறும் மேல் கட்டுமானம் என்று கருதுவதை முற்றிலும் மறுத்த ஐசன் பாம் ஏதாவது ஒரு பொருளாதார அல்லது சமூக அறிவியல் அடிப்படையில் ஒரு இலக்கியப் படைப்பை விளக்க முயற்சி செய்வது இலக்கியத்தின் உள் இயக்கங்களை அல்லது அதன் தனித்த இயக்கத்தை மறுப்பதற்கு ஒத்ததாகும் என்றும் கூறினார்.

    உருவமும் உள் அடக்கமும் ஒன்றுக்கு ஒன்று நெருக்கமான தொடர்பு உள்ளவை என்பதைக் கேள்விக்கு உட்படுத்தும் அளவுக்கு ஸ்க்ளோவ்ஸ்கியால் தன் கருத்துகளை அன்று அச்சமின்றி வெளிப்படுத்த முடிந்தது. “கலையின் வடிவங்கள் அவற்றில் கலைக்குரிய நியாயங்கள் உண்டா இல்லையா என்பதைக் கொண்டே மதிப்பிட வேண்டும். ஒரு புதிய வடிவம் ஏதோவொரு புதிய உள்ளடக்கத்தை வெளியீடு செய்வதாகத் தோன்றுவதில்லை. மாறாக தன் இலக்கிய மதிப்பை இழந்துவிட்ட பழைய இலக்கியத்துக்கான மாற்றீடாகத்தான் அப்புதிய வடிவம் தோன்றுகிறது.”(சான்று. விக்டர் க்ளொவ்ஸ்கி, கார்னல் யுனிவர்சிடி பிரஸ், லண்டன்.1977பக்கம்.85)

    செயலின் ஒளிசார்ந்த நிழல்:
    ஆரம்ப காலகட்டத்தில் உருவ இயல் மீதான போல்ஷ்வில் தலைவர்களின் நிலைப்பாடு இறுக்கமானதாக இருக்கவில்லை. பொதுவாக அவர்கள் இலக்கிய விவகாரங்களை எச்சரிக்கையுடன் அணுகுவதையே விரும்பினர். கருத்துப் போராட்டத்தின் மூலம் எதிர்தரப்பினரை முறியடிப்பதிலும் வென்று எடுப்பதிலும் நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்கள் கடைப்பிடித்த அளவுகோல் எழுத்தாளர்கள் புரட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்களா? இல்லையா? என்பதுதான்.

    உருவ இயலாளர்கள் கவிதையின் உத்தி நிலையைப் பற்றி ஒரு பட்டியலை உருவாக்கினார்கள். இத்தகைய பகுப்பு ஆய்வுக்காக அவர்களைப் பாராட்ட வேண்டும் என்று புகாரின் கூறினார். இலக்கியத்தைப் பற்றிய காரண காரிய விளக்கம் தரக்கூடிய ஒரே தத்துவம் மார்க்சியம் மட்டுமே என்றும் ஒரு குறிப்பிட்ட போக்கு ஏன் எவ்வாறு தோன்றியது என்பதை மார்க்சியத்தால் மட்டுமே விளக்கமுடியும் என்றும் கூறினார் த்ரோத்ஸ்கி.

    அழகியல் பற்றிய மதிப்பீடுகளுக்கான அளவுகோல்கள் அனைத்தையும் மார்க்சியத்தால் மட்டுமே வழங்கிவிட முடியாது என்றும் ஒரு இலக்கிய வடிவத்திலுள்ள குறிப்பிட்ட கலையம்சங்கள் மீது அழுத்தம் தருவதில் நியாயம் உண்டு என்றும் ஒப்புக்கொண்ட த்ரோத்ஸ்கி உருவ இயல் பகுப்பாய்வு நுட்பங்களைப் புறக்கணிக்கவில்லை. ஏனெனில் கலை, உலகை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடி அல்ல; மாறாகக் கலைக்கே உரிய விதிகளுக்கு ஏற்ப எதார்த்தத்தை உருமாற்றம் செய்வதாகும். ஆனால் கலைகளை அவற்றின் நுட்பங்களை மட்டும் கொண்டு விளக்குவதோ அல்லது இலக்கியம் முழுவதையும் சொல்வெளியீட்டு பாணியாகக் குறுக்கி விடுவதோ தவறானது என்று அவர்கூறினார். ஒரு கவிதையின் உயிரெழுத்து, மெய்யெழுத்து, வேர்ச்சொல், வாக்கியத்தின் அமைப்பு ஆகியவற்றைப் பற்றிய புள்ளி விவரம் சொல்வது மட்டும் ஒரு திறானாய்வாளனின் பணியல்ல என்ற அவர், “ உருவ இயலாளர்கள் புனித ஜானின் சீடர்கள். முதலில் சொல் இருந்தது என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் நாங்கள் கருதுகிறோம்; ஆரம்பத்தில் இருந்தது செயல்- பிறகே சொல் வந்தது- செயலின் ஒலி சார்ந்த நிழலாக ” (சான்று:பக்கம் லியோ த்ரோஸ்கி தி பார்மலிஸ்ட் ஆஃப் பொயட்ரி அண்ட் மார்க்சிஸ்ட் டேவிட் கிரெய்க் பெங்குயின் , லண்டன்,1975ப.374.)

    அகத்தூண்டல்:
    கலைப்படைப்புக்கு அகத்தூண்டுதல் என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது என்பது ஒரு கோட்பாடு. கலைப்படைப்பில் தர்க்கத்திற்கு மாறான அம்சங்கள் உள்ளன. நனவிலி என்னும் மனத்தின் செயல்பாட்டை அதில் காணலாம் என்ற கருத்துகளையும், கலையின் உளவியல் செயல்பாட்டையும் உருவவியல் கோட்பாட்டை உடையவர்கள், மயாகோவ்ஸ்கி, ஓசிப் ப்ரிக், புரோலிட்கள் ஆகியோரையும் சேர்த்து மறுத்தனர். இந்த அம்சங்களை மரபான மார்க்சிய இலக்கிய விமர்சகர்கள் சக பயணிகள் த்ரோஸ்கி முதலானோர் ஒப்புக்கொண்டனர். கட்சி-அரசு தலைவர்களில் உருவ இயல் பற்றிய கடுமையான திறனாய்வைச் செய்தவர்கள் லுனாசார்கிஸ்தான். உள்ளடக்கத்தைத் தவிர்த்து கவிதை உத்திகளை மட்டுமே கருத்தில் கொள்ளும் உருவ இயல் இலக்கிய விமர்சனம் உண்மையான மனிதப் பிரச்சனைகளை தவிர்க்கின்ற நழுவுதல் தொடர்பானதே என்றும் நசிந்து போன ஆளும் வர்க்கத்தின் மலட்டுப் படைப்பே என்றும் கூறினார். “நவீன முதலாளி வர்க்கத்தால் அனுபவித்து மகிழக்கூடிய புரிந்து கொள்ளப்படக் கூடிய ஒரே கலை வகை, புற உலகம் சாராத வெறும் உருவம்மட்டும் உள்ள கலைதான். அக்டோபர் புரட்சிக்கு முன்பு உருவவியல் பழுத்துக் கொண்டு வந்த ஒரு காயமாக இருந்தது. இன்று அது பழைய அமைப்பின் பிடிவாதமிக்க எச்சமாக உள்ளது. இன்னும் மாற்றத்துக்கு உட்படாத ஐரோப்பிய முதலாளி வர்க்கத்தைப் பார்த்து கள்ளத்தனமாகக் கண் சிமிட்டுகிற அறிவாளிகளின் கடைசிப் புகலிடமாக உள்ளது ” [சான்று: 87]

    இலக்கியமும் எடுத்தியம்பலும்:
    இலக்கியத்தை எடுத்து இயம்புவதின் மொழியைப் பல்வேறு சொற்களைப் பயன்படுத்திப் பாகுபடுத்தி ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஒவ்வொரு சொல் வகைகளையும் கிட்டத்தட்ட ஒரு உரையாடலின் வடிவம் ஆகும். எடுத்து உரைத்தலின் நீண்ட பகுதிகள் கதையைச் சொல்பவனின் குரலில் எழுதப்பட்டிருப்பதாக தோன்றுவதாகத் தெரிந்தாலும் இரண்டு அல்லது அதற்கும் கூடுதலான குரல்கள் இயக்க அசைவுடன் நல்ல தொடர்பு கொண்டிருப்பதாகக் கொள்ளமுடியும். வெவ்வேறு கால வரலாற்று நிலைகளின் இந்தச் சொல் அமைப்புகளின் தொடர்பு உடைமை வேறு வகையானதாக இருக்கின்றன. உண்மைத் தன்மையின் உயிர் குரலாக எது ஒலிக்கிறதோ அது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

    தோயஸ்தோவ்ஸ்கியின் படைப்புகள் பலகுரல் தன்மையுடையவை ஆகும். இந்தக் குரல்களில் எதையுமே படைப்பாளியின் குரலாக எடுத்துக்கொள்ள முடியாது. படைப்பின் உச்சம் என்பது குரலின் மொழி என்ன சொல்கிறது என்பதுதான். ஆனால், இது படைப்பாளியின் எதேச்சகார குரலுக்குக் கட்டுப்படும் அமைப்பிலும் இல்லை. அந்தக் குரல்கள் தம்மைப் படைத்துவிட்ட ஆசிரியனுக்கும் அவனது குரலுக்கும் அருகில் நிற்கக்கூடியவை. அவனுடன் ஒத்துப்போக மறுப்பவை. அவனுக்கு எதிராகக் கலகம் செய்யவும் தயங்காது. ஆனால் இதைப் பல பாணிகளின் வேறுபட்ட புதிய வடிவம் என்றும் எடுத்துக்கொள்ளக்கூடாது. இவரின் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தன் தனித்த தன்மைக்கே உரிய தனித்த பாணியில் பேசுவதில்லை. இவரின் இரட்டை ஆளுமையை நாம் உணரவும் முடியும். லுனா சார்க்கியின் நூலின் இருந்து தோவ்ஸ்தயோஸ்கியின் உயிர்ப்பை உணரமுடியும். லூனாசார்க்கின் தனித்தன்மையையும் தெரிந்துகொள்ள முடியும். இவரது நாவல்களில் இந்த பல குரல்கள் கொள்ளும் முரண்பாடு, மோதல் ஆகியவை ஒன்றாக இணைந்து முழுமையான படைப்பு உருவாக்கும் படைப்பு ஆசிரியனின் குரல் இவரின் இரட்டை ஆளுமையைத் தனித்துக் காட்டுகிறது.

    சு.விமல்ராஜ்,
    உதவிப்பேராசிரியர்,
    அ.வ.அ.கல்லூரி,
    மயிலாடுதுறை.
    அலை:8220470590
    thamizhvimal@gmail.com

    Share
  • புத்தாண்டுக்கான  புதுக்குறள்

    -முனைவர் து. சந்தானலெட்சுமி
      உதவிப்பேராசிரியர்,தமிழாய்வுத்துறை,
     அ .வ .அ. கல்லூரி,
     மன்னம்பந்தல், மயிலாடுதுறை. 

    இனிமை நிறைந்து  இயற்கை செழித்து
    மனிதம் நிலைக்கச்
    செய்!

    அதிக வளமும் அளவாய் மழையும்
    எதிலும் நிறைவும்  கொடு!

    சிறந்த மனமும்  செறிந்த குணமும்
    நிறைந்த மனமும் அருள்!

    மடமை  அகற்றி மனிதம் போற்றி
    இடரைக்  களைந்துவிடு!

    கொடுமை அகன்று
    குடிகள் தழைக்க
    இடும்பை  ஒழித்துவிடு!

    நடுநிலை நற்செயல்
    நற்பண்பு   நாட்டில்
    குடிகொள வேண்டும் இன்று!

    நன்மையும் உண்மையும்
    நேர்மையும் செம்மையும்
    தண்மையும்  வேண்டும்  எமக்கு!

    லஞ்சமில்லா நாட்டில்
    நலமுடன்  வாழ்ந்திட
    லஞ்சமென்ன வேண்டும் உனக்கு?

    இயற்கையைக் காத்து
    இடரின்றி வாழ
    முயற்சியை மேற்கொளச் செய்!

    உழைப்பால் உயர்ந்து
    சிறப்பாய்த் திகழ
    அழைப்பாய் உலகை அணைத்து!

     

     

    Share