— க. சிவா.

 

Capture

இந்தத் தலைப்பினைப் பார்த்தவுடன் அனைவர் மனத்திலும் எழும் ஒரே ஐயம், “கிராமங்களில் சேரியா?” என்பதாகத் தான் இருக்கும். ஆம், நம் இந்திய நாட்டில் நகரங்களில் மட்டும் சேரிகள் கிடையாது, கிராமங்களிலும் உண்டு. சேரிகள் என்றாலே நம் மனதில் நம் மனதில் தோன்றுவது சேறு, சகதிகள் நிறைந்த இடத்தில் மக்கள் வாழ்வதையே நகரங்களில் சேரிகள் என்று அழைப்போம். பெரும்பாலும் இந்தச் சேரிகளில் வாழும் மக்கள் சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் போன்றவற்றில் பின் தங்கியவர்களாகவும் புறம் தள்ளப்பட்டவர்களாகவும் வாழ்கின்றனர். இந்த ஆய்வுக்கட்டுரையில் நான் கிராமங்களின் சேரிகள் என்று குறிப்பிடுவது கிராமங்களில் காணப்படும் காலனி (colony = குடியிருப்புப்பகுதி) வீடுகளைத் தான்.

அடுத்து, நான் ஏன் காலனி வீடுகளைக் கிராமங்களின் சேரிகள் என்று குறிப்பிடுகிறேன் என்ற வினா எழும்? நம் கிராமங்களில் பெரும்பாலும் காலனி வீடுகள் கிராமத்தின் மையப் பகுதிகளில் அமைவது கிடையாது, காலனி என்றாலே ஒரு கிராமத்தின் கடைக் கோடியிலேயே காணப்படுகின்றன. அல்லது ஒரு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமமாக இருப்பின் காலனிகள் மட்டும் தனி ஊராகவோ அல்லது தனித் தெருவாகவே கருதப்படும். கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிராமத்திற்கு சென்றால் அங்குக் குடிசைகள் நிறைந்த பகுதிகள் தான் கிராமங்களில் சேரிப் பகுதிகளாகத் திகழ்ந்தது. ஆனால், இப்பொழுது அந்தச் சேரிகள் நவீனமயமடைந்து உள்ளன. நவீனமடைதல் என்பது ஒன்றும் இல்லை, அது அரசால் கட்டித்தரப்பட்டுள்ள இந்திரா நினைவு குடியிருப்பு மற்றும் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டித்தரப்பட்டுள்ள வீடுகள் தான் ஆகும். வீடுகள் நவீனமடைந்தாலும் வீதிகள் இன்னும் நவீனமடையவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

வீடுகள் நவீனமாவதால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரலாம். தெருக்களின் தரம் உயர்த்தப்பட்டாலே மக்களின் சுகாதாரத்தினை பேணிக் காத்திடல் முடியும். பொதுவாக நாம் ஒரு கிராமத்திற்கு சென்றால் அங்கு உள்ள காலனி வீதிகளையும் அந்த வீதிகளில் எந்த மக்கள் குடியிருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்தாலே தெரிந்து விடும். மக்களுக்கு வீடுகளை மட்டும் நன்றாகக் கட்டித்தந்த இந்த அரசு ஏன் அனைவரும் பயன்படுத்தும் வீதிகளைக் கண்டுகொள்வதில்லை. சமீபத்தில் நான் ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தேன், அப்பொழுது அங்கு நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. அந்த மழை பெய்து முடித்தவுடன் கிராமத்திற்கு சென்று பார்த்தால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. அந்தக் கிராமத்தின் மறு பகுதிக்கு சென்று பார்த்தால் அங்குத் தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன. அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளைப் பார்த்தால் அனைத்தும் சிமெண்ட் கான்கிரீட் கட்டிடங்களான தொகுப்பு வீடுகள் என்று அழைக்கப்படும் இந்திரா நினைவுக் குடியிருப்பு திட்ட வீடுகளும் பசுமைத்திட்ட வீடுகளும் அவரவர் சொந்த வீடுகளும் அடங்கும். இப்படி நன்றாகக் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மத்தியில் தண்ணீர் தேங்கி சேறும் சகதிகளும் நிறைந்து காணப்பட்டன. இந்தப் பகுதி மட்டும் ஏன் இவ்வாறு இருக்கின்றன என்று பார்த்தால் அது தான் கிராமங்களின் சேரியான காலனிப் பகுதி.

இதுவே பெரும்பாலான கிராமங்களில் உள்ள காலனிப் பகுதிகளின் நிலையாக உள்ளது. நகரத்தில் உள்ள சேரிகளைக் கூட குடிசை மாற்று வாரியத்தில் இருந்து மாற்றும் பொழுது அவர்களுக்கு நல்ல தரமான தார் சாலையே, சிமெண்ட் சாலையே அமைத்துத் தரப்படுகிறது. ஆனால் கிராமங்களில் உள்ள அனைத்துக் குடிசைகளும் மாற்றப்பட்ட பின்னரும் கூட பெரும்பாலான கிராமங்களில் எவ்வித சாலைகளும் அமைக்கப்படாமல் மழைக் காலங்களில் மக்கள் சேற்றில் தான் நடந்து சென்றாக வேண்டும். சிறுவர்களும் கூட சகதிகளில் தான் விளையாடுகின்றனர். மழைக்காலங்கள் வந்தால் போதும் சேரி மக்களுக்குத் தொற்று நோய்களும் வந்துவிடும். இதுதான் இந்தச் சேரிகளின் காலங்காலமாக உள்ள நிலையோ? இந்த நிலை எப்பொழுது மாறுமோ? சேரிகள் என்றாலே ஊரின் மையப் பகுதியை விட்டு ஒதுக்கியும் அதில் வாழ்பவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவும் இருப்பதுவும் தான் இந்தச் சேரிகளின் நிலையாக உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் கடந்து விட்ட சூழ்நிலையிலும் கூட இந்தியாவில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் சேரிகளாகவே இருக்கின்ற அவலம் இன்றளவும் தொடர்கின்றன. கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லும் பாரதத்தில் கிராமங்கள் சேரிகள் ஆக்கப்படுவதால் முதுகெலும்புகள் மெல்ல மெல்லத் தேய்மானம் அடைவதற்குள் இந்த அரசும் நாட்டு மக்களும் இதனைக் கவனித்து காப்பாற்றியாக வேண்டும்.

__________________________________________

க. சிவா,
ஆராய்ச்சியாளர்,
அரசியல் அறிவியல் மற்றும் வளர்ச்சி நிர்வாகவியல் துறை,
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்,
காந்திகிராமம். திண்டுக்கல்- 624302.
Email: yaswanthshiva@gmail.com

__________________________________________
படம் உதவி:

வெள்ளத்தில் மிதக்கும் காஞ்சிபுரம் – வறட்சியில் வாடும் தருமபுரி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *