சமய நோக்கில் ஐம்பெருங்காப்பியங்கள்

0

–முனைவர் பெ.செல்லதுரை.

ஐம்பெருங்காப்பியங்கள்

முன்னுரை:
தனக்கு உவமை இல்லாதவன் இறைவன் ஆவான். உலகப் படைப்பில் இறைவனை முன் வைத்தே ஒவ்வொரு ஆக்கங்களும் உருபெறுகின்றன என்பதும் உண்மை என்பதை ஐம்பெருங்காப்பியங்களில் காணலாகும் சமயப் பதிவுகளைக் கொண்டு உறுதிப்படுத்துகின்றன.

சமயம்-வரைவிலக்கணம்:

“பொங்குபல சமயமெனும் நதிகள் எல்லாம்
புகுந்து கலந்திட நிறைவாய்ப்
பொங்கி போங்கும் கங்குகரைக்
காணாத கடலே” (இராமலிங்கம்)

மேற்கண்ட தத்துவங்களில் பொங்கிப் பெருக்கெடுத்து வருகின்ற நதிகள்(சமயங்கள்) நிறைவில் கங்கு கரை காணாத கடலை(கடவுள்) சென்றடைகின்றன. இத்தகையக் கருத்துக்களில்தான் காப்பியங்களும் இவற்றில் காணப்படும் சமயப் பதிவுகளும் இடம்பெறுகின்றன.

சிலப்பதிகாரமும் சமய நெறிகளும்:
கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தில் காண்டங்கள் மூன்றும், முப்பது காதைகளும் இடம்பெறுகின்றன. கோவலன் கண்ணகி முதன்மைப் பாத்திரங்கள், எதிர்முனைப்பாத்திரம் பொற்கொல்லன், துணைப்பாத்திரங்கள் மாதவி, கவுந்தியடிகள், மாதரி, பாண்டியன் நெடுஞ்செழியன், பாண்டிமாதேவி, சேரன் செங்குட்டுவன்,மாடலன் போன்றோர்கள் இடம்பெறுகிறார்கள் அகவற்பாக்களைக் கொண்ட பாடல் வகையும் பதிகம் உட்பட 4899 மொத்த அடிகள் உள்ளன.

இளங்கோவடிகள் சமணர் அவரால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம் சமணசமயக் கோட்பாடுகள் நிறைந்த காப்பியமாக உள்ளது.

“கண்டேதும் செவ்வேள்”
செம்பொருளாம் சிவனை இவர்”
“பிறவா யாக்கை பெரியோன்”
“உமையவள் ஒரு திறனாக ஓங்கிய இமையவள்”[கடவுள் வாழ்த்து]

“பெரியவனை மாயவனைப் பேருலகமெல்லாம்
குரியவளைக் காணாத”[ஆய்ச்சியர் குரவை]
“சீர்கெழு செந்திலும் சென்கோரும்
வெண்குன்றும்”[குன்றக்குரவை]

மேற்கண்ட சமணக் கொள்கை கவுந்தியடிகள் மூலம் பேசப்படுகின்றது.

இளங்கோவடிகள் சமரச நோக்கத்தோடு சிவன், திருமால், அருகதேவன், கொற்றவை, முருகன் போன்ற தெய்வங்களைப் பாடியுள்ளதால் பொதுவுடைமைச் சமயப்பதிவுகளை ஒருங்கிணைத்துக் காண முடிகிறது.

மணிமேகலையில் சமயக்கூறுகள்:
கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியம் மணிமேகலை மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் எழுதியது. கதா நாயகி மணிமேகலை எதிர்முகம் சித்ராபதி(பாட்டி) துணைப்பாத்திரங்களாக அறவணடிகள், மாதவி, சுதமதி, தீவதிலகை, உதயகுமரன், காஞ்சனன், காயசண்டிகை, மணிமேகலை தெய்வம், ஆபுத்திரன், ஆதிரை போன்றோர்களாவர். அகவற்பாக்களைக் கொண்டு 4856 அடிகளைக் கொண்டுள்ளன.

“நுதல்விழி காட்டத்திறையோன்”[மணி:1-54]
“கிந்தா தேவி நந்தாவிளக்கு நாமிசைப்பாவாய்
வண்ணோர் தலைவி மண்ணோர் தலைவி மண்ணோர் முதல்வி”
[14:17-19]

எனக் கலைமகள் பக்தியும் மணிமேகலையின் வேண்டுகோளுக்கிணங்கி மாவண் கிள்ளி சிறைச் சாலையைத் தகர்த்து அவ்விடத்து பெளத்த கோயில் எழுப்பியதும் காணலாம்.

புத்தர் பெருமானை மகாயான பௌத்தர்கள் பரம் பொருளாகவே துதித்துப் பரவினர். பெளத்த கோயில்களில் புத்தரின் திருவுருவ வழிபாடும், பாதபீடிகை வழிபாடும், மணிபல்லவத் தீவின் அமைப்பு, கோமுகிப் பொய்கை ஆதி முதல்வன் ஆதிசால் முனிவன், ஆதி சினேந்திரன், பகவான், முதல்வன், தொல்லோன் நாதன், எங்கோன் அண்ணல் அறவோன் போன்ற திருப்பெயர்கள் புத்தரையே குறிக்கின்றன. பெளத்த சமயம் அறவண அடிகள் மூலம் பேசப்படுகிறது.

சீவக சிந்தாமணியில் சமய நெறிகள்:
திருத்தக்க தேவர் கி.பி.ஏழாம் நூற்றாண்டில் சீவக சிந்தாமணியை இயற்றினார். நாயகன் சீவகன், நாயகி எண்மர் ஆவர். துணைப்பாத்திரங்கள் சச்சந்தன், விசயை, நந்தட்டன், கந்துக்கடன் நண்பர்கள் போன்றோர்கள். இந்நூல் 3145 விருத்தப் பாடல்களைக் கொண்டுள்ளன பதிமூன்று இலம்பகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

சீவக சிந்தாமணி சமண சமயத்தின் பதிவுகளைக் கொண்டுள்ளது. சிந்தாமணியில் கடவுள் வாழ்த்துப் பாடலே அருகப் பெருமானை வணங்கினால் வீடு பேறு கிட்டும் என நம்பிக்கைக் கொண்ட மக்கள் இறைவழிபாட்டிற்குச் சாந்து, மலர்மாலை, சுண்ணப்பொடி, அகிற்புகை முதலிய பொருள்களைக் கொண்டு சென்றனர்(சிந்தா. 1604). அருகப் பெருமானுக்கு முக்குடை மூர்த்தி, முக்குடைச் செல்வன், முக்குடையான், முக்குடைதாதை, அறவழி அண்ணல், பிண்டி வேந்தன், பிண்டி நாதன், பிண்டி பகவான், பண்ணை, பரமன், வாமன், நேமி நாதன், தேவாதிதேவன் என்று சமண சமயப்பதிவுகளை சீவக சிந்தாமணி பிரதிபலிக்கிறது.

வளையாபதியில் சமய கோட்பாடுகள்:
வளையாபதி நூல் முழுவதும் கிடைக்கவில்லை 66 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. கி.பி.ஏழாம் நூற்றாண்டு நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. சமண சமய நூல் ஆகும். நாயகன் நவகோடி நாராயணன் ஆவான்.சமண மத கடவுளின் பெருமைகளையும் பதிவுகளையும் கொண்டுள்ளது.

“உலக மூன்றும் ஒருங்குடன் ஏத்துமாண்
திலக மாயதிறல் அறிவான் அடி
வழுவில் நெஞ்சோடு வாலிதின் ஆற்றவும்”(வளையாபதி:கடவுள் வாழ்த்து)

வளையாபதி முற்றிலும் பற்றொழித்து பிற உயிர்களுக்கு அருள் செய்தலே பெரிய தவ ஒழுக்கம் எனக் குறிப்பிடுகின்றது (வளை:43)

பொருளின் பால் உள்ள மயக்கம் நீங்கல் மனம் மொழி மெய்களையடக்கி நன்றின்பால் உய்த்தல், விருப்பு வெறுப்பு. பற்றியிருத்தல் பொய்ப்பொருளைப் பற்றி கிடவாமை போன்றன தவசிகளுக்கு வேண்டிய பண்பெனப் பகரும், முதுமைப் பருவத்துத் துறவொழுக்கம் ஆற்றியே ஆக வேண்டும். (வளை:25:2444) போன்ற சமண மதப்பதிவுகளைப் பெற்று இக்காப்பியம் விளங்குகிறது.

குண்டலகேசியில் சமய சிந்தனைகள்:
குண்டலகேசி கி.பி.ஏழாம் நூற்றாண்டு நூலாகும் இதுவும் பெளத்த சமயம் பற்றியதாகும். நூல் ஆசிரியர் நாதகுத்தனார் கதா நாயகி குண்டலகேசி எதிர்ப்பாத்திரம் கத்துவான்(கணவன்) விருத்தப்பாக்களால் ஆனது. நூல் முழுவதும் கிடைக்கவில்லை. 19 பாடல்களே கிடைத்துள்ளன. கதா நாயகியின் பெயரே நூலுக்கும் பெயராயிற்று அவள் துறவியாக மாறினாள்.

“தனக்கென்று
ஒன்றானும் உள்ளான் பிறர்க்கே
உறுதிக்கு உழந்தான்” (குண்டல:1)

கடவுள் வாழ்த்தில் புத்தரைப் பற்றிய பதிவுகளுடன் காப்பியம் தொடங்குகிறது. பெளத்த காப்பியமாகிய குண்டலகேசி துறவினைப் பெரிதாக வலியுறுத்துகின்றது. காவி ஆடையினால் உடம்பைப் போர்த்து கொள்ளல், கோடையின் கண் தீயில் நிற்றல், மனம் பொறிகள் வழியாகப் புலன்களிடத்தே செல்லாமல் அடங்கி ஒழுக்கமே உண்மைத் தவவொழுக்கம் (குண்ட:4) போன்ற சமயப் பதிவுகளை வலியுறுத்துகிறது.

தொகுப்புரை:
பொதுவாக தமிழ்ப் பெருங்காப்பியங்களில் சமயப் பதிவுகள் பரவலாகவே இடம் பெற்றுள்ளன. சமண சமயம் ஆசிரியர் வருகைக்கு முன்னரே இந்தியாவில் வேரூன்றியிருந்து, வேதங்களில் காணப்படும் தீர்த்தங்கரர் பற்றிய குறிப்புகள் சமணத்தின் தொன்மைக்குச் சான்றாகும். சமணரின் உயிர்ப்பகுப்பு முறையே தொல்காப்பியத்தில் காணப்படுகிறது. பொறியுணர்வுகளுக்கு ஏற்ப உயிரினங்களைப் பிரித்துக் காட்டும் உயிரியல் பகுப்பு தனித்தன்மைகள் காப்பியங்களில் காணப்படுகிறது.

தமிழ்க் காப்பியங்களில் கூறும் பௌத்தம் சமணம் மனிதனை மனிதனாக மதித்து முக்கியத்துவங்களைக் கொடுத்து மேலோங்கி நிற்கின்றன.

பிற்கூறுகள் மூட நம்பிக்கை, தீண்டாமை, தனிமனித உயர்வுக்குத் தடை, மனிதனை மலத்தை விடக் கீழாக மதித்தல் போன்றவற்றைக் கடவுள் சமயக் கொள்கைகளாகப் புகுத்தியதால் தற்காலத்தில் சமயக் கொள்கைகள் வற்றிப்போயின.

சமயக் கொள்கைகளை வளர்க்க, அறிவியல் கொள்கைகளை முடக்கி வைக்கும் நோக்கம் கொண்டதாக பிற்கூறு சமயப்பதிவுகள் உள்ளன”

மனிதனை மனிதனாக மதிக்கும் சமண பெளத்த மதக் கொள்கைகள் தமிழ்க் காப்பியங்களில் பெரும் பதிவுகளைக் கொண்டு மகத்துவம் வாய்ந்ததாகக் காண முடிகிறது.

முனைவர் பெ.செல்லதுரை,
உதவிப்பேராசிரியர்,
பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி,
நன்னிலம்.
அலை:9976378412
மின்:5674selladurai@gmail.com

படம் உதவி: http://www.edubilla.com/onbooks/tamil/ilakkiyam/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *