இலக்கியம்கவிதைகள்

எமைப்பார்த்து நகைத்துவிடும்!

 -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

இலக்கியங்கள் இலக்கணங்கள் எவ்வளவு படித்தாலும்
தலைக்கனங்கள் போகாமல் தடுமாறி நிற்கும்பலர்
இருக்கின்றார் எம்மிடத்தில் எனநினைக்கும் வேளையிலே
இலக்கியமும் இலக்கணமும் எமைப்பார்த்து நகைத்துவிடும்!

பட்டங்கள் பலபெற்றும் பண்புதனைப் பறக்கவிட்டு
துட்டகுணம் மிக்கோராய்த் தூய்மையற்று நிற்குமவர்
பட்டங்கள் அத்தனையும் வட்டமிட்டு வானில்செல்லும்
காகிதப் பட்டங்களாகவன்றோ கண்ணுக்குத் தெரிகிறது!

பாடுபட்டுப் படிக்கின்றார் பலபதவி வகிக்கின்றார்
கூடுவிட்டுப் பாய்வதுபோல் குணம்மாறி நிற்கின்றார்
கேடுகெட்ட செயலாற்றிக் கிராதகராய் மாறுமவர்
பாடுபட்டுப் படித்ததெல்லாம் பயனற்றே போகிறதே!

படிப்பறியார் பலபேர்கள் பண்புணர்ந்து வாழ்கின்றார்
பட்டம்பெற்ற படித்தவர்க்கோ பண்புபற்றிக் கவலையில்லை
மனம்போன போக்கிலவர் வாழவெண்ணி நிற்பதனால்
நயமான கல்வியினை நாசம்பண்ணி நிற்கின்றார்!

கீதையொடு குறள்படித்தும் பாதை தடுமாறுகின்றார்
போதையிலே நாளுமவர் புரண்டுமே உழலுகின்றார்
காதிலெவர் சொன்னாலும் கவனமதில் கொள்ளாமல்
மோதியே மிதிப்பதையே முழுமையாய் நம்புகின்றார்!

கற்றதனால் பயனென்ன எனக்கேட்ட வள்ளுவனார்
கண்திறந்து பார்த்தவர்க்குக் கருத்துரைக்க வந்தாலும்
கற்றகல்வி பட்டங்கள் காற்றிலவர் பறக்கவிட்டுக்
காசையே அணைத்தபடிக் கண்ணியத்தைப் பாரார்கள்!

 

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க