ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 53
–சி. ஜெயபாரதன்.
(1883-1931)
ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்
மூலம் : கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“நான் நண்பன் ஒருவனிடம் பேச உட்காரும் போது திருவாளர் பிதற்றுவாய் அழைக்கப் படாமலே மூன்றாவது நபராய் எம்மோடு ஒட்டிக் கொள்வார். நான் ஒதுக்கினாலும் எப்படியாவது நெருங்கிக் கொண்டு தன் பிதற்றலை எதிரொலித்து எனக்குச் சின மூட்டுவார். அது என் வயிற்றைக் கலக்கிக் கெட்டுப் போன புலாலாகத் தொல்லை கொடுக்கும்.”
கலில் கிப்ரான். (Mister Gabber)
___________________
இசை ஆத்மாவின் நாதம்
___________________
என்னிதயம் கவர்ந்த
வனிதை அருகே அமர்ந்து அவள்
வாய்மொழி கேட்டேன்.
அலையத் தொடங்கும் என் ஆத்மா
யாதும் கனவாய்த் தோன்றும்
வரம்பற்ற
பிரபஞ்ச வெளியில் !
உடலொரு
முடங்கிய சிறை போல் தெரியும் !
என்னரும் காதலி
வழிபடும் மந்திர மொழிகள்
நுழைந்திடும்
என் இதயத்தின் ஊடே !
___________________
இதுதான் இசை நாதம்
என்னரும் நண்பரே !
கேட்டேன் அதைக் காதலியின்
பெரு மூச்சில் !
வாய் மொழியில் அது
வந்தது !
சொல்லியும் சொல்லாத இதழ்களின்
மெல்லோசையில்
எழுந்தது !
என் செவி வாயிலில்
தடம் வைத்த
இசை நாதத்தில் கண்டேன்
என் காதலி இதயம் !
___________________
இசை என்பது
இனிய ஆத்மாக் களின் நாதம் !
அதன் மெல்லிசை
விளையாடும் தென்றல் !
காதல் நாண்களை
மீட்பது இசை நாதம் !
மென்மை யாய் இசை விரல்கள்
நமது உணர்வுக் கதவைத்
தட்டும் போது
விழித்தெழும் முன்னால்
கழிந்து போன
நீண்ட காலப் புதை
நினைவுகள் !
___________________
சோக முறிவு இசை நாதம்
துக்க நினைவுகளை
முன்னிறுத்தும் !
இசையின் மௌன ராகங்கள்
இனிய நினைவையும்
எதிர் நிறுத்தும் !
நாண்களின் சோக நாதம்
நம்மை அழ வைக்கும்
நமக்கினியோர் மரண இழப்பில் !
அல்லது
கடவுள் அளித்த அமைதியில்
களிப்புண் டாக்கும்
நமக்கு !
___________________