ரஷிய இலக்கிய உருவவியல் கட்டமைப்பு தழுவலும் எதிர்த்தழுவலும் (19ஆம் நூற்றாண்டு)

1

ரஷிய இலக்கிய உருவவியல் கட்டமைப்பு

தழுவலும் எதிர்த்தழுவலும் (19ஆம் நூற்றாண்டு)

சு. விமல்ராஜ்.

இலக்கியம் என்பது மனித இனத்தின் உணர்வுகளை பரிமாறிக்கொள்ள உதவும் கருவி மட்டும் அல்ல, அது சமூகம் என்னும் அமைப்புக்குள் கீழே விழுந்துவிட்டவனைக் கைப்பிடித்து தூக்கி நிறுத்தவும் உதவும். மனித இனம் காலங்காலமாய் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள, மாற்றிக்கொள்ள இலக்கியத்தை ஒரு கருவியாகக் கொண்டு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரஷிய இலக்கிய வரலாற்றின் ஆழமான பார்வைப் பதிவுகளில் படைப்பின் முக்கியத்துவம் சாதாரண மக்களுக்கான இலக்கியமாக, இலக்கியம் தன்னை மாற்றிக்கொள்ளும்போதுதான் அதன் அடர்த்தி உண்மையானதாக இருக்கும் என்ற நிலை உள்ளது. உருவம், உள்ளடக்கம், இலக்கணத்தன்மை இவை இலக்கியத்தை ஒரு மேல் தளத்தில் வைத்துப் பார்க்காமல் சாதாரண குடிமக்களின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்வதாக இருக்கவேண்டும் என்பது ஒரு கருத்து. இதற்கு எதிரிடையான கருத்து வழியும் உண்டு. ஏனென்றால் இலக்கியம் என்பது எப்போதும் இலக்கியமாக இருக்க வேண்டும் என்ற ஒரு கூற்று உண்டு.

அதிகார வர்க்கங்களின் முகமூடியைக் கிழித்து எறியும் விதமாக உருவான ரஷிய இலக்கிய முகம் நடுத்தர மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களுக்காகப் போராடும் கருவியாகவும் பயன்பட்டது. நவம்பர் புரட்சிக்குப் பிறகு ரஷ்யாவில் இலக்கியத்துறையில் காணப்பட்ட மாற்றம் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்து ஒன்றிலிருந்து இருபத்து ஐந்தில் உருவான உருவவியல் கோட்பாட்டின் வெற்றி என்று சொல்லுகிற அளவுக்கு அது அமைந்திருந்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுகளில் ‘ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹிஸ்ட்ரி ஆஃப் ஆர்ட்’ என்னும் அரசு நிறுவனம் நிறுவப்பட்டு அதனுடைய இலக்கிய வரலாற்றுப் பிரிவாக ஒன்று இயங்கியது. இந்நேரத்தில் உருவவியல் இயங்குதளம் விரைவாக இயங்கியது. அங்கே காணப்பட்ட மார்க்சியத்தின் அழகியலுக்கு நேர் எதிரான ஒரு திறனாய்வுக் கோட்பாட்டை திட்டவட்டமான முறையில் உருவவியல் முன் வைத்தது. அது, ஒரு இலக்கியப்படைப்புக்கு சமூகவியல் அல்லது உளவியல் விளக்கத்தையோ அல்லது படைப்பாளிகளின் வாழ்க்கை வரலாற்றினை அடிப்படையாகக் கொண்ட விளக்கத்தையோ கொடுப்பதைப் புறக்கணித்தது. கவிதைப் படைப்பு, அதன் கட்டுமானம், அதன் சீர்கள், தளைகள், பாணிகள் ஆகியவற்றின் மீது அக்கறை காட்டியது.

ஓபாயாஸ் என்ற பெயரில் விக்டர் ஸ்க்ளொவ்ஸ்கி என்பவரின் தலைமையில் இயங்கிய உருவவியலை சார்ந்தவர்கள் ஒரு படைப்பின் உள் அடக்கத்தைப் பொருட்படுத்தாமல் அதிலுள்ள சிறப்பான இலக்கிய உத்திகளை மட்டுமே ஆய்வு செய்ய தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டனர். கலை இலக்கியப்படைப்புகளுக்கு அதன் உள் கட்டமைப்புக்கு மட்டுமே முதன்மைக்கொடுத்தும் அவற்றை வெறும் சமூகவியல் நோக்கில் மட்டுமே பார்த்தும் வந்த பிளாக்கானோவியப் பார்வைக்கான எதிர்ப்பாகவே உருவவியல் என்றே கூறலாம். புரட்சிக்கு முந்தைய ரஷியாவில் இருந்த மொழியியல் ஆய்வுகளில் ஏற்பட்டிருந்த முன்னேற்றங்களைப் பயன்படுத்திக் கொண்ட உருவவியல் ஆய்வாளர்கள், ஃப்யூச்சரிசம் போன்ற நவீனப்போக்குகளை ஆதரித்தனர். பாட்டாளி வர்க்கம் பழைய சமுதாயத்தை உதறித்தள்ளியதைப் போல் தாங்கள் பழைய மரபுகளை எதிர்ப்பதாகக் கூறினர். தோஸ்தோவெஸ்கியின் படைப்புகளிலோ அல்லது நிகோலாய் பெர்டியெவின் தத்துவத்திலோ காணப்படுகின்ற கருத்துகளின் செல்வாக்கில் இருந்து இலக்கியத் திறனாய்வை விடுவிக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணம் உருவவியலை ஆதரித்தவர்களுக்கு இருந்தது. ஏன் என்றால் ரஷியர்களிடம் இறை நம்பிக்கை அதிகமாக இருந்தது.

உருவவியல் கோட்பாட்டாளர்களின் கருத்துகள் விமர்சனங்களுக்கு உள்ளானது. முழுவதும் கடவுள் இல்லை என்னும் கொள்கை உடையவர்கள் என்று கருதத்தக்கவர்களால் ஏற்பட்ட புரட்சியால் மயக்கப்பட்டவர்கள் என்ற நிலையிலும்கூட கடவுள் செயல் என்ற தன்மையில் இருந்து அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள மிகவும் சிரமப்படுகின்றனர் என்று உருவவியல் கோட்பாடு கொண்டவர்கள் கருதுகின்றனர். ரஷிய நாட்டின் குறியீட்டுக்கவிஞர் அலெக்சாண்டர் பிளாக்கை அவர்கள் சுட்டிக்காட்டினர் (ரஷிய புரட்சி இலக்கியம்.ப.85 .ராஜதுரை) தமது பன்னிருவர் என்ற கவிதையில் ஏசு கிருத்துவை செங்காவலரை வழி நடத்திச் செல்பவராக வர்ணிக்கிறார்.

கவிதைப்பாணியினை விடுதலை செய்வதும் பணிந்து போகும் சிம்பலிஸ்டுகளை மேன்மேலும் அடிமைப்படுத்தி வந்துள்ள தத்துவ சமயப் போக்குகளுக்கு தலை வணங்க மறுப்பதும் உருவவியலாளர்களின் முதன்மையான நோக்கமாகும் என்று போரிஸ் ஐசன்பாம் கூறுகிறார். எனவே, ஓபாயாஸ் குழுவானது மார்க்சிய அழகியல் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அது, கட்சிக்குத் துணை புரிகின்ற இலக்கிய விமர்சனப் போக்குதான் என்று கட்சித்தலைவர்கள் சிலர் கருதியதில் நியாயம் இருந்தது. உருவவியலாளர்கள் தங்கள் கருத்துகளை தடையேதும் இல்லாமலும், மிகுந்த செருக்கோடும் பிரகடனப்படுத்தினர். இலக்கியத்தை வெறும் மேல் கட்டுமானம் என்று கருதுவதை முற்றிலும் மறுத்த ஐசன் பாம் ஏதாவது ஒரு பொருளாதார அல்லது சமூக அறிவியல் அடிப்படையில் ஒரு இலக்கியப் படைப்பை விளக்க முயற்சி செய்வது இலக்கியத்தின் உள் இயக்கங்களை அல்லது அதன் தனித்த இயக்கத்தை மறுப்பதற்கு ஒத்ததாகும் என்றும் கூறினார்.

உருவமும் உள் அடக்கமும் ஒன்றுக்கு ஒன்று நெருக்கமான தொடர்பு உள்ளவை என்பதைக் கேள்விக்கு உட்படுத்தும் அளவுக்கு ஸ்க்ளோவ்ஸ்கியால் தன் கருத்துகளை அன்று அச்சமின்றி வெளிப்படுத்த முடிந்தது. “கலையின் வடிவங்கள் அவற்றில் கலைக்குரிய நியாயங்கள் உண்டா இல்லையா என்பதைக் கொண்டே மதிப்பிட வேண்டும். ஒரு புதிய வடிவம் ஏதோவொரு புதிய உள்ளடக்கத்தை வெளியீடு செய்வதாகத் தோன்றுவதில்லை. மாறாக தன் இலக்கிய மதிப்பை இழந்துவிட்ட பழைய இலக்கியத்துக்கான மாற்றீடாகத்தான் அப்புதிய வடிவம் தோன்றுகிறது.”(சான்று. விக்டர் க்ளொவ்ஸ்கி, கார்னல் யுனிவர்சிடி பிரஸ், லண்டன்.1977பக்கம்.85)

செயலின் ஒளிசார்ந்த நிழல்:
ஆரம்ப காலகட்டத்தில் உருவ இயல் மீதான போல்ஷ்வில் தலைவர்களின் நிலைப்பாடு இறுக்கமானதாக இருக்கவில்லை. பொதுவாக அவர்கள் இலக்கிய விவகாரங்களை எச்சரிக்கையுடன் அணுகுவதையே விரும்பினர். கருத்துப் போராட்டத்தின் மூலம் எதிர்தரப்பினரை முறியடிப்பதிலும் வென்று எடுப்பதிலும் நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்கள் கடைப்பிடித்த அளவுகோல் எழுத்தாளர்கள் புரட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்களா? இல்லையா? என்பதுதான்.

உருவ இயலாளர்கள் கவிதையின் உத்தி நிலையைப் பற்றி ஒரு பட்டியலை உருவாக்கினார்கள். இத்தகைய பகுப்பு ஆய்வுக்காக அவர்களைப் பாராட்ட வேண்டும் என்று புகாரின் கூறினார். இலக்கியத்தைப் பற்றிய காரண காரிய விளக்கம் தரக்கூடிய ஒரே தத்துவம் மார்க்சியம் மட்டுமே என்றும் ஒரு குறிப்பிட்ட போக்கு ஏன் எவ்வாறு தோன்றியது என்பதை மார்க்சியத்தால் மட்டுமே விளக்கமுடியும் என்றும் கூறினார் த்ரோத்ஸ்கி.

அழகியல் பற்றிய மதிப்பீடுகளுக்கான அளவுகோல்கள் அனைத்தையும் மார்க்சியத்தால் மட்டுமே வழங்கிவிட முடியாது என்றும் ஒரு இலக்கிய வடிவத்திலுள்ள குறிப்பிட்ட கலையம்சங்கள் மீது அழுத்தம் தருவதில் நியாயம் உண்டு என்றும் ஒப்புக்கொண்ட த்ரோத்ஸ்கி உருவ இயல் பகுப்பாய்வு நுட்பங்களைப் புறக்கணிக்கவில்லை. ஏனெனில் கலை, உலகை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடி அல்ல; மாறாகக் கலைக்கே உரிய விதிகளுக்கு ஏற்ப எதார்த்தத்தை உருமாற்றம் செய்வதாகும். ஆனால் கலைகளை அவற்றின் நுட்பங்களை மட்டும் கொண்டு விளக்குவதோ அல்லது இலக்கியம் முழுவதையும் சொல்வெளியீட்டு பாணியாகக் குறுக்கி விடுவதோ தவறானது என்று அவர்கூறினார். ஒரு கவிதையின் உயிரெழுத்து, மெய்யெழுத்து, வேர்ச்சொல், வாக்கியத்தின் அமைப்பு ஆகியவற்றைப் பற்றிய புள்ளி விவரம் சொல்வது மட்டும் ஒரு திறானாய்வாளனின் பணியல்ல என்ற அவர், “ உருவ இயலாளர்கள் புனித ஜானின் சீடர்கள். முதலில் சொல் இருந்தது என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் நாங்கள் கருதுகிறோம்; ஆரம்பத்தில் இருந்தது செயல்- பிறகே சொல் வந்தது- செயலின் ஒலி சார்ந்த நிழலாக ” (சான்று:பக்கம் லியோ த்ரோஸ்கி தி பார்மலிஸ்ட் ஆஃப் பொயட்ரி அண்ட் மார்க்சிஸ்ட் டேவிட் கிரெய்க் பெங்குயின் , லண்டன்,1975ப.374.)

அகத்தூண்டல்:
கலைப்படைப்புக்கு அகத்தூண்டுதல் என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது என்பது ஒரு கோட்பாடு. கலைப்படைப்பில் தர்க்கத்திற்கு மாறான அம்சங்கள் உள்ளன. நனவிலி என்னும் மனத்தின் செயல்பாட்டை அதில் காணலாம் என்ற கருத்துகளையும், கலையின் உளவியல் செயல்பாட்டையும் உருவவியல் கோட்பாட்டை உடையவர்கள், மயாகோவ்ஸ்கி, ஓசிப் ப்ரிக், புரோலிட்கள் ஆகியோரையும் சேர்த்து மறுத்தனர். இந்த அம்சங்களை மரபான மார்க்சிய இலக்கிய விமர்சகர்கள் சக பயணிகள் த்ரோஸ்கி முதலானோர் ஒப்புக்கொண்டனர். கட்சி-அரசு தலைவர்களில் உருவ இயல் பற்றிய கடுமையான திறனாய்வைச் செய்தவர்கள் லுனாசார்கிஸ்தான். உள்ளடக்கத்தைத் தவிர்த்து கவிதை உத்திகளை மட்டுமே கருத்தில் கொள்ளும் உருவ இயல் இலக்கிய விமர்சனம் உண்மையான மனிதப் பிரச்சனைகளை தவிர்க்கின்ற நழுவுதல் தொடர்பானதே என்றும் நசிந்து போன ஆளும் வர்க்கத்தின் மலட்டுப் படைப்பே என்றும் கூறினார். “நவீன முதலாளி வர்க்கத்தால் அனுபவித்து மகிழக்கூடிய புரிந்து கொள்ளப்படக் கூடிய ஒரே கலை வகை, புற உலகம் சாராத வெறும் உருவம்மட்டும் உள்ள கலைதான். அக்டோபர் புரட்சிக்கு முன்பு உருவவியல் பழுத்துக் கொண்டு வந்த ஒரு காயமாக இருந்தது. இன்று அது பழைய அமைப்பின் பிடிவாதமிக்க எச்சமாக உள்ளது. இன்னும் மாற்றத்துக்கு உட்படாத ஐரோப்பிய முதலாளி வர்க்கத்தைப் பார்த்து கள்ளத்தனமாகக் கண் சிமிட்டுகிற அறிவாளிகளின் கடைசிப் புகலிடமாக உள்ளது ” [சான்று: 87]

இலக்கியமும் எடுத்தியம்பலும்:
இலக்கியத்தை எடுத்து இயம்புவதின் மொழியைப் பல்வேறு சொற்களைப் பயன்படுத்திப் பாகுபடுத்தி ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஒவ்வொரு சொல் வகைகளையும் கிட்டத்தட்ட ஒரு உரையாடலின் வடிவம் ஆகும். எடுத்து உரைத்தலின் நீண்ட பகுதிகள் கதையைச் சொல்பவனின் குரலில் எழுதப்பட்டிருப்பதாக தோன்றுவதாகத் தெரிந்தாலும் இரண்டு அல்லது அதற்கும் கூடுதலான குரல்கள் இயக்க அசைவுடன் நல்ல தொடர்பு கொண்டிருப்பதாகக் கொள்ளமுடியும். வெவ்வேறு கால வரலாற்று நிலைகளின் இந்தச் சொல் அமைப்புகளின் தொடர்பு உடைமை வேறு வகையானதாக இருக்கின்றன. உண்மைத் தன்மையின் உயிர் குரலாக எது ஒலிக்கிறதோ அது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

தோயஸ்தோவ்ஸ்கியின் படைப்புகள் பலகுரல் தன்மையுடையவை ஆகும். இந்தக் குரல்களில் எதையுமே படைப்பாளியின் குரலாக எடுத்துக்கொள்ள முடியாது. படைப்பின் உச்சம் என்பது குரலின் மொழி என்ன சொல்கிறது என்பதுதான். ஆனால், இது படைப்பாளியின் எதேச்சகார குரலுக்குக் கட்டுப்படும் அமைப்பிலும் இல்லை. அந்தக் குரல்கள் தம்மைப் படைத்துவிட்ட ஆசிரியனுக்கும் அவனது குரலுக்கும் அருகில் நிற்கக்கூடியவை. அவனுடன் ஒத்துப்போக மறுப்பவை. அவனுக்கு எதிராகக் கலகம் செய்யவும் தயங்காது. ஆனால் இதைப் பல பாணிகளின் வேறுபட்ட புதிய வடிவம் என்றும் எடுத்துக்கொள்ளக்கூடாது. இவரின் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தன் தனித்த தன்மைக்கே உரிய தனித்த பாணியில் பேசுவதில்லை. இவரின் இரட்டை ஆளுமையை நாம் உணரவும் முடியும். லுனா சார்க்கியின் நூலின் இருந்து தோவ்ஸ்தயோஸ்கியின் உயிர்ப்பை உணரமுடியும். லூனாசார்க்கின் தனித்தன்மையையும் தெரிந்துகொள்ள முடியும். இவரது நாவல்களில் இந்த பல குரல்கள் கொள்ளும் முரண்பாடு, மோதல் ஆகியவை ஒன்றாக இணைந்து முழுமையான படைப்பு உருவாக்கும் படைப்பு ஆசிரியனின் குரல் இவரின் இரட்டை ஆளுமையைத் தனித்துக் காட்டுகிறது.

சு.விமல்ராஜ்,
உதவிப்பேராசிரியர்,
அ.வ.அ.கல்லூரி,
மயிலாடுதுறை.
அலை:8220470590
thamizhvimal@gmail.com

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ரஷிய இலக்கிய உருவவியல் கட்டமைப்பு தழுவலும் எதிர்த்தழுவலும் (19ஆம் நூற்றாண்டு)

  1. பழமைவாத இலக்கிய கட்டமைப்பை உடைத்து புதிய இலக்கிய கட்டமைப்பில் உருவ வியல் என்னும் புதிய இலக்கிய தடத்தை நவீன சித்தாந்திகள் உருவாக்கினார்கள். இத்தகைய பொதுமைச் சிந்தனையுடன் இலக்கியத்தை அணுகவேண்டும் என்கின்ற சிந்தனையை இக்கட்டுரையை சிறப்பாக எழுதி தடம்பதித்திருக்கிறார்உருவவியல் கோட்பாடுப் பற்றி விமல்ராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.