Author: admin

  • மணமகளே உன் மணவறைக்கோலம் – 2

    வாராயென் தோழி வாராயோ…

    — வைதேகி ரமணன்.

    சரண்யாவின் திருமணம், அவளே தேடிக்கொண்ட பையன்தான். அவருக்கு வேறுமொழி என்றாலும் அவரும் இந்து மதம்தான். அவரது தோற்றமும் வெகு சுமார்தான். வேலையில்லாத பட்டதாரி; பார்க்கச் சிறிய உருவம். என்ன காதலோ!!! சரண்யாவிற்குத் தந்தையில்லை, அவளது தாய்க்கும் வேறு வழியில்லை, அவளது தம்பிகளுக்கோ முடிவெடுக்கும் வயதுமில்லை. எனக்கும் இந்தத் திருமணத்தில் உடன்பாடில்லை, ஆனால் வேறு வழியில்லை. இவளின் பிஹெச்டி படிப்பும் முடிந்தபாடில்லை. இதைப் பேசி முடித்தவர்கள் யார் தெரியுமா? வியக்காதீர்கள்… நான்தான்.

    எனது வலது பக்கத்தில் என்னைவிட ஏழு வயது குறைந்த வேதியியலில் ஆராய்ச்சி செய்யும் மாணவன் மாதவன், இடதுபக்கம் சரண்யாவின் இரண்டு தம்பிகள். தோழியோ மாடிப்படியில், அறைக்கு வெளியே அவளின் அம்மா! கணவர் இல்லாததால் அவர் உள்ளே உட்கார அனுமதிக்கப்படவில்லை. அதைவிட நகைச்சுவை என்னவென்றால், என் முன்னே ஜோடி ஜோடியாக இருபது பெரியவர்கள். ஒரே விவாதம்தான்.

    முதல் கேள்வியே எனக்குப் பிடிக்கவில்லை. எங்க பையனுக்கு உங்கள் பெண்ணைத் தர சம்மதமா என்பதுதான் அது. நான் சொன்னேன் சம்மதிக்காமலா உங்களின் வருகைக்கு நாங்கள் ஒத்துக் கொண்டோம். அதெல்லாம் பேச்சில்லை. சம்மதம் என்றால்தான் அடுத்த கட்டம் என்றார்கள். நான் முரண்பட்டேன். பிறகு சரண்யாவின் அம்மா சொல்லும்மா என்றதால் சம்மதம் என்ற சொல் என் சம்மதம் இல்லாமலே வந்தது.

    அதன் பிறகு, என்ன செய்வீர்கள்? என்ற சம்பிரதாயமான கேள்வி. இதிலும் எனக்கு உடன்பாடில்லை. இருவரும் ஒருமனமாகி நடக்கப் போகும் திருமணத்தில் ஏன் இந்த வேண்டாத பேச்சு. பிறகு ஒரு முடிவுக்கு வந்தோம். அதன் பிறகுதான் பிரச்சனையே!!! திருமணச் செலவில் பாதி ஒப்புக் கொள்ள வேண்டும் என்று நான் எகிறிவிட்டேன் … முடியவே முடியாதென்றும் … எங்களிடம் பைசா இல்லை … வேலையும் இல்லை… கடன் தருவாரும் இல்லை… பின் எப்படி நடத்துவது??? என விவாதம் தொடர்ந்தது. பேச்சு ஒரு முடிவுக்கே வரவில்லை.

    பிறகு ஆளுக்குப் பாதி என ஒப்புக்கொண்டு செலவைப் பற்றிய திட்டம் போடப்பட்டது. எனக்கோ எரிச்சல். சரண்யாவின் தம்பிகளோ விவரம் புரியாமல் மற்றவர்கள் மூக்கில் விரல் வைக்கும்படி அக்காவின் திருமணம் நடக்க வேண்டும் என்று விரும்பினார்கள். என்ன செய்ய? சரண்யாவிடம் தேவையான நகைகள் இருந்தன, ஆனால் கல்யாணச் செலவை யார் செய்வார்கள்?

    தோழிகளில் ஒருவரின் நகைகளை அடகு வைத்து பணம் கிடைத்தது. அவர் வங்கியில் பணி புரியவே நகை பத்திரமாகவும் இருந்தது; எங்கள் செலவுக்குத் தேவையான பணமும் கிடைத்தது. ஒரு வழியாகத் தோழிகளின் தலைமையில் திருமணம் இனிதே முடிந்தது. திருமண நிகழ்ச்சிகள் படம் எடுக்கப்பட்ட போது நான் ஒரு படத்திலும் நிற்க மறுத்துவிட்டேன். எவ்வளவு கட்டாயப் படுத்தியும் மறுத்துவிட்டேன். இரவு பெண் வீட்டில்தான் மணமக்கள் தங்கினார்கள். நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரும் மொட்டை மாடியில் அரட்டைக் கச்சேரி செய்து விட்டுத் தூங்க ஏற்பாடு செய்யப்பட்டு, வீட்டின் கீழே இருந்த ஒரே அறை மணமக்களுக்குத் தரப்பட்டது.

    அவர்களின் குடும்ப வாழ்க்கை கொல்கத்தாவில் துவங்கியது. ஊர் போய் சேர்ந்ததும் பெரிய கடிதம்… ஆளுக்கு ஒன்று என, இருவரும் தனித்தனியே எனக்குத்தான் முதலில் எழுதினார்கள். எனக்கு பெரிய மகிழ்ச்சி ஏதும் அதனால் இருக்கவில்லை.

    அந்தத் திருமணத்தால் எனக்கு வருத்தம் உண்டு. சரண்யாவின் பி ஹெச் டி ஆராய்ச்சி இன்றுவரை முடியவில்லை. அவளின் குடும்பம் அவளை ராணி போல வளர்த்தது. அதற்குக் கைமாறாக அவள் எதுவுமே அவர்களுக்குச் செய்யவில்லை. தந்தை இல்லாத குடும்பத்திற்கு அவள் தலைமை ஏற்க வேண்டும் என நான் விரும்பினேன். அவளும் அதைச் செய்யவில்லை, அவளது கணவரும் அந்தப் பொறுப்பை ஏற்க முன்வரவில்லை. மேலும், அந்த மனிதரும் குடித்து குடித்தே ஐந்து வருடங்களுக்கு முன்னர் போய்ச் சேர்ந்தார்.

    அதற்கு முன்னர் சிலமுறை அவர் என்னைப் பார்த்தபோதுதான் அவர் மேலிருந்த என் கோபம் தணிந்திருந்தது. எனக்கும் வயதானதாலோ அல்லது இனிமேல் என்னதான் செய்ய முடியும் என்பதாலோ, ஆணொன்று பெண்ணொன்று என அவர்களின் இரண்டு நல்ல பிள்ளைகளைப் பார்த்ததாலோ என்னவோ … அவரை மனம் ஏற்கத் தொடங்கியது. இப்பொழுது அவரை என்மனம் ஒப்புக்கொள்ளத் துவங்கிய நேரத்தில் போய்ச் சேர்ந்துவிட்டாரே என்ற வருத்தமும் உண்டு.

    சரண்யாவைப் போன்ற தோழி இதுவரை எனக்கு அமையவில்லை. இனியும் அமைய மாட்டார்கள். அவளுடைய இந்தப் பிரச்சனைக்கெல்லாம் காரணம் எனது மற்றொரு தோழியான விசாலிதான். சரண்யாவின் ஆங்கிலத்தில் அவர்கள் மயங்கி, அவளுக்குப் பிடிக்காத ஒரு ஆய்வில் அவளை ஈடுபட வைத்ததுதான் பெரிய தவறு என்பது எனது கருத்து. அவர்கள், அழகாக ஆங்கிலத்தில் உரையாடும் சரண்யாவின் திறமையை வைத்து, அவள் ஒரு பெரிய அறிவாளி என்றும், உடனே வெளிநாடு சென்று கைநிறைய சம்பாதிக்கப் போகிறாள் என்றும் மனமார நம்பினார்கள். நம் மக்களுக்குத்தான் மொழிக்கும் அறிவிற்கும் உள்ள இடைவெளி பற்றிய ஞானம் கொஞ்சமும் இருப்பதில்லையே.

    ஆனால் இதையெல்லாம் நான் செய்தேன். வெளிநாடு சென்றேன். வாழ்க்கையை வளமாக்கினேன். உடன் பிறந்தவர்களுக்கும், என் நண்பர்களுக்கும், படிக்க உதவி கேட்டவர்களுக்கும், திருமண உதவி கேட்டவர்களுக்கும் இன்றளவில் கை நிறைய, மனம் நிறையச் செய்கிறேன். இதை யாரிடமும் இதுவரை நான் சொன்னதில்லை. முதன்முறையாக இப்பொழுதுதான் பதிவு செய்கிறேன். இதே மாதிரி சரண்யாவும் அவளின் குடும்பத்திற்குச் செய்ய வேண்டும் என நான் எதிர்பார்த்தேன். அது தவறான கருத்தாக பிறருக்குத் தெரியலாம். ஆனால், என் எதிர்பார்ப்பில் தவறில்லை என்பது எனது உறுதியான எண்ணம்.

    ________________________

    Share
  • மணமகளே உன் மணவறைக்கோலம் – 1

    கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே …

     

    — வைதேகி ரமணன்.

     

    எதைப்பற்றி எழுத என்று யோசித்தபோது, ஏன் திருமணத்தைப் பற்றி எழுதக்கூடாது என்ற சிந்தனைதான் முதலில் தோன்றியது. திருமணம் செய்யாதவள் எப்படி திருமணம் பற்றி எழுதலாம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஏன் கூடாது?

    நான் பார்த்த, செய்து வைத்த திருமணங்களைப் பற்றி எழுதலாமே என்ற எண்ணத்தில் எழுதத் துணிந்துவிட்டேன்.

    நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது என் மூத்த அக்காவின் திருமணம் நடந்தது நான் பிறந்து வளர்ந்து இப்போது பிரிந்திருக்கும் ஊரில்தான். அதன் பேர் என்ன என்றுதானே யோசிக்கிறீர்கள்? அது எதுக்கு இப்ப??? பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக்கூடாதுதானே!!!

    விடிய காலையில் சூரியோதயத்திற்கு முன்னர் நடந்தது. புதுச்சட்டை போட்டிருந்ததும், அக்கா மணவறையில் உட்கார்ந்திருந்ததும் லேசாக நினைவில் இருக்கு. அதன் பின்னர் பக்கத்து வீடு மாமா பெரிய அண்டாவில் சோறு, குழம்பு, காய்களை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து ஒரு கையில் பெரிய கரண்டியும் மறுகையில் பெரிய கழியும் வைத்து குறவன், குறத்தி, பிச்சைக்காரர்களை வரிசைப்படுத்தியும், அடித்தும் அந்தச் சோறு முழுவதையும் பகிர்ந்து அளித்ததும் லேசாக நினைவில் வருது.

    அந்த மாமாவின் திருமணம்தான் அடுத்து நான் பார்த்தது. அது எதுவும் நினைவில் இல்லை. அதில் மீந்து போன சாம்பாரை மறுநாள் சூடாக்கியது மட்டும் நினைவில் இருக்கு. அதன் சுவை இன்னும் நாவில் இருக்கு. நாங்கள், சிறுவர்கள் எல்லாம் புதுச்சட்டை போட்டு நேரம் காலம் தெரியாமல் விளையாண்டதும் நினைவில் இருக்கு.

    அப்படியே பதினோராம் வகுப்பிற்கு வந்துவிட்டேன். என் தோழிக்குத் திருமணம் பேசினார்கள். பள்ளியில் செய்தி பரவத் தொடங்கியது. ஆசிரியர்கள் அவளைக் கேட்டால் உடனே அழத் தொடங்கிவிடுவாள். நாங்கள் கேட்டாலும் அப்படித்தான். இத்தனைக்கும் நானும் அவளும் ஒரே பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையும், பிறகு ஆறாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை பெண்கள் பள்ளியிலும் ஒன்றாகவே படித்தோம். நான்கு தெரு தள்ளியிருந்தாலும் ஒன்றாகவே பள்ளி முடிந்து திரும்புவோம். மதிய சாப்பாட்டிற்கு அந்த நாட்களில் வீட்டிற்கு வருவோம். அத்தனை நெருக்கமான நான் கேட்டாலும் கூட உடனே அழுது விடுவாள். நானும் அவளும் ‘திக்’ தோழிகள் என்றாலும் பக்கத்தில் உட்கார முடியாது. அவள் நல்ல உயரம். அந்தக் காலத்தில் உயரப்படிதான் வரிசையாக வகுப்பில் உட்கார வைப்பார்கள்.

    அவளின் திருமண நாளும் வந்தது. பக்கத்துத் தெருவில் என் அக்காவிற்கு நடந்த அதே கல்யாண மண்டபத்தில்தான் திருமணம் நடந்தது. விடுமுறை நாள்தான் அது. நாங்களும் போகலை. அவளும் கூப்பிடலை. வீட்டில் ஒருமுறை, ஒரே ஒருமுறை அம்மாவிடம் அவள் திருமணம் பற்றிக் கூறியபோது… ம்ம்… ம்ம்… போதும் போதும்… திருமணம் பற்றியெல்லாம் சிறுவர்கள் பேசக்கூடாது என்று கூறிவிட்டார்கள். பிறகெங்கே வீட்டில் வாயைத் திறப்பது. அதே வயதில் ஒரு பெண்ணுக்குத் திருமணமே நடக்கிறது. ஒருத்திக்கு அதைப்பற்றிப் பேசக்கூட அனுமதியில்லை. எதிர்த்து பேசத் தெரியாத சூழலில் வாழ்ந்த காலகட்டம் அது.

    திருமணம் முடிந்து பள்ளி திரும்பினாள். கழுத்தில் கறுப்பு மணி இருந்தது தவிர வேறு மாற்றம் ஏதும் இல்லை. அப்போதும் ஏதாவது சிறிய கேள்வி கேட்டால் உடனே அழுவாள். திருமணம் ஏன் செய்து கொள்கிறார்கள் என்பது கூடத் தெரியாத வயது, சூழல், குடும்பம் இப்படிப் பல காரணங்கள்.

    ஐந்து வருடங்களுக்கு முன்னர் அக்கா அவளைப் பார்த்துப் பேசியிருக்கிறார்கள். அவள் மகளை அவளது தம்பிக்கே கொடுத்ததாகவும், அவளது கணவர் இறந்துவிட்டதாகவும், நான் சென்னை வந்தபிறகு அவளைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறினார்கள். நானும் வந்து நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனாலும் சந்திக்க நேரம் வரவில்லை.

    அவள் தம்பியும் என் தம்பியும் ஒரே வகுப்பு. அவள் தம்பி அவனுடைய பெயரை ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டிச் சொல்லுவான். காரணம், அவன் பெயர் நாலே எழுத்து R–A–V–I. என் தம்பியால் முடியாது. அந்தக் காலத்தில் ஆங்கிலப் பாடப்புத்தகங்களில் ‘ரவி’ அல்லது ‘ராமா’ என்ற பெயர்தான் அதிகம் இருக்கும். என் தம்பியின் நீளமான பெயரெல்லாம் புத்தகத்தில் வராது. எனக்கு என் பெற்றோரின் பெயரில் கோவமாக வரும். ஏன் இப்படி இவனுக்குப் பெரிய பெயர் வைத்தார்கள் என்று. பெயரை ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டி உச்சரிப்பதெல்லாம் , பெரிய ….. திறமையாக மதிக்கப்பட்ட காலம் அது.

    அதன் பிறகு கல்லூரி. அப்போதெல்லாம் யார் திருமணத்திற்கும் போக வீட்டில் அனுமதியில்லை. எனவே போனதாக நினைவுமில்லை. பிறகு, பல்கலைக்கழகம். அப்போதும் போனதில்லை. நான் மாஸ்டர்ஸ் டிகிரிக்குப் படிக்கும் போது என் இரண்டாவது அக்காவின் திருமணம் நடந்தது. நானும் என் தம்பியும் போகலை. அதனால் எப்படியிருந்தது என்று சொல்ல முடியலை. ஆனால் அவர்களுக்கு நடந்த ரிசப்ஷனுக்கு என் தோழிகள் எல்லாம் வந்தார்கள். பரிசளித்தார்கள். கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது.

    பின் ஆராய்ச்சிப் படிப்பில் என் தோழியாக ஒரு ‘டுயூட்டர்’ வந்தார். அவரும் அதே வகுப்பில் ஒன்றாகப் படிக்கவே, ‘கம்பைன் ஸ்டடி’ என்று இருவரும் நெருங்கிப் பழகினோம். அவருக்குத் திருமணமாகவில்லை என்பது அவருடைய பெரிய கவலையாக இருந்தது. உண்மையாகவே மிகவும் கவலைப்பட்டார்கள். யார் யாரெல்லாமோ மாப்பிள்ளை பார்த்தும் கடைசியாக எங்கள் பேராசிரியரின் மாணவன் ஒருவரைத் திருமணம் செய்தார்கள்.

    அதில் ஏகப்பட்ட பிரச்சனைகள். கொஞ்சம் நஞ்சமல்ல. என் சகோதரிகள் இருவரும், அவருடைய பழைய நண்பர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, கோவைக்குப் பயணப்பட்டு சிலபல பிரச்சனைகளை மணமகன் வீட்டாரோடு பேசி சரிசெய்த பிறகு நடந்த திருமணம் அது. அதற்குப் போக வீட்டில் அனுமதி கிடைத்தது. திருமண மேடையிலேயே மணமகனும் மணமகளும் நண்பர்களும் அரட்டை. திருமணமே ஏதோ டிப்பார்ட்மென்ட் மீட்டிங் போல நடந்தது. பதினைந்து ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து, இரண்டு பிள்ளைகளையும் பெற்ற பிறகு, இப்பொழுது பதினைந்து ஆண்டுகளாகப் பிரிந்து தனித்தனியே வாழ்கிறார்கள். இன்னமும் அவர்கள் இருவருக்கும் தோழி நம்பர் ஒண்ணு நான்தான்.

    அதன்பிறகு எனக்கு சீனியரான தோழி சாந்தியின் திருமணம் நடந்தது. நண்பர்கள் எல்லோரும் தஞ்சைக்குப் போனோம். அதிகாலையில் திருமணம், மாலையில் ரிசப்ஷன். எனவே இடையில் கல்லணை, கோவில் என்று செம்ம சுற்றல். நன்றாக என்ஜாய் செய்தோம். மற்றதெல்லாம் அவ்வளவாக நினைவில் இல்லை. எப்படிப் போனோம்; வந்தோம் என்பதெல்லாம் தெரியவில்லை.

    அதன்பிறகு, எங்கள் துறை டைப்பிஸ்ட் அலமேலு திருமணம் உள்ளூரில் நடந்தது. அதற்கும் கும்பலாகப் போய் மகிழ்ச்சியாக இருந்தோம். இவ்வாறு தோழிகளின் திருமணங்களில் கொண்டாட்டம் போட்டதற்கும் ஒருபடி மேலே சென்று எனது தோழிகளின் திருமணங்களை நானே நடத்தி வைத்த அனுபவங்களும் உண்டு.

    ________________________

    Share
  • நவீன முறையில் பொம்மலாட்ட வழிக்கல்வி

    — தாமஸ் ஆண்டனி.

     

    7

     

    கடந்த 2004 ம் ஆண்டு அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியேற்றுக் கொண்டது முதல் மாணவ, மாணவியரிடையே நல்லொழுக்க பண்புகளை வளர்த்து வருகிறேன். சமுதாய அக்கறையுடன், ஊர் பொதுமக்களும், சமுதாயத்தினரும் போற்றத்தக்க வகையில் மாபெரும் அறிவியல் கண்காட்சி, முதியவர்களுக்கு உதவிப் பொருட்கள் அளித்தல், பெண் குழந்தைக் கல்வி மற்றும் பாதுகாப்பு அவசியம் குறித்த விழிப்புணர்வு, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி, தூய்மை பாரத திட்டப்பணி, பள்ளி நூலகத்திற்குப் புத்தகங்கள் வழங்குதல், பல்வேறு திறமை வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களை கொண்டு திருக்குறள் நடனம் ஆடிக் கற்பித்தல் பயிற்சி, கைவண்ண பொருட்கள் பயிற்சி என பல்வேறு பயிற்சிகளை மாணவர்களுக்குக் கொடுத்து ஊக்குவித்து வருகிறேன்.

    மேலும் தமிழ், ஆங்கில தினசரி நாளிதழ்கள் எமது பள்ளியில் நடத்திய நிகழ்ச்சிகள் குறித்து பிரசுரம் செய்து எங்கள் பள்ளிக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளன. ”தினத்தந்தி” தமிழ் நாளிதழில் திங்கள் கிழமை தோறும் வெளிவரும் மாணவர் ஸ்பெசல் கட்டுரைப் பகுதியில் தமிழ் அறிஞர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள், சாதனையாளர்கள், வரலாற்று வீரர்கள் என இது வரை 44 கட்டுரைகள் எழுதி சாதனைப் படைத்துள்ளனர் எமது பள்ளி மாணவர்கள். கடந்த 2013 முதல் எனது பள்ளி மாணவர்களுக்கு இக்கட்டுரைகளுக்குக் குறிப்பு கொடுத்து எழுதப் பயிற்சி அளித்து வருகிறேன். இக்கட்டுரைகள் குறித்து ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பாராட்டுகள் கிடைத்துள்ளன.

     

    12

     

    2

     

    3

     

    நாம் மறந்துவிட்ட பாரம்பரிய கலைகளில் பொம்மலாட்டமும் ஒன்று. அதை மீட்டெடுத்து பள்ளி மாணவர்களுக்குக் கற்பித்தல் உரமூட்டி வருகிறேன். ஈரோடு மாவட்டம் நாதகவுண்டன்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில்படிக்கும் குழந்தைகள் பெற்றோர்களால் கைவிடப்பட்டு ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்து படிக்க வருபவர்கள். சிலரது பெற்றோர்கள் நாள் முழுவதும் உழைக்க வேண்டி இருப்பதால் தங்கள் குழந்தைகளைக் கவனிக்க முடியாதவர்கள். இவ்வாறு பல்வேறு சூழ்நிலைகளில் உள்ள குழந்தைகளின் கவனத்தைப் பொம்மலாட்டம் மூலமாகக் கவர்ந்து பாடம் நடத்த முடிவு செய்தேன்.

    நான் சின்ன வயதில் இருந்தே பல குரல்களில் மிமிக்ரி செய்வேன், நான் பல இடங்களில் அலைந்து திரிந்து இறுதியில் சென்னைக்கு வந்து எனது சொந்த செலவில் பொம்மைகள் வாங்கினேன். பொம்மலாட்ட திரைச் சீலை நானே வடிவமைத்தேன். திரைச்சீலைக்குப் பின்னால் நின்றுக்கொண்டு பொம்மைகள் மட்டும் தோன்றுமாறு செய்து நான் முழுவதுமாக மறைந்து கொள்வேன். பாடங்களில் உள்ள பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இவர்களின் பாடல்களை ஒரு சின்னக்குழந்தை பாடினால் எப்படி இருக்குமோ அப்படி எல்லாம் பொம்மைகள் பாடுவது மாதிரி பாடிக்காட்டுவேன். பெண்குரல், வயதானவர்கள், தடித்த அப்பாவின் குரல், பிரபல நடிகர்களின் குரல் என எட்டுக்கும் மேற்பட்ட குரல்களில் மாற்றி மாற்றிப் பேசி பாடத்தை மனதில் பதிய வைப்பதுடன் உற்சாகம் குறையாமலும் பார்த்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு நீண்ட நேரம் குழந்தைகளுக்கு தெரியாதவாறு பொம்மைகள் உயர்த்திப் பிடித்தவாறு பாடம் நடத்துவதால் பயங்கரமாக கைகள் வலிக்கும். ஒரே சமயத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட பொம்மைகளை கைகளில் மாட்டிக்கொண்டு பாடத்திட்டங்களை பார்த்துப் படித்தல், பொம்மைகளை அசைத்தல், குரல்களை மாற்றி மாற்றிப் பேசுதல் என செய்து கொண்டே இருப்பது சவாலான விஷயம் தான். ஆனால் எனது உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது . ஆசிரியர் முன்னாள் இருந்தால் தப்பாகி விடுமோ, தண்டனை கிடைக்குமோ என்ற பயமும், தயக்கமும் இல்லாமல் பொம்மைகள் முன்பாக தங்கள் கருத்துகளை மாணவர்கள் இயல்பாக வெளிப்படுத்துகின்றனர். பலமுறை தங்கள் சந்தேகங்களை கேட்டுத் திருத்திக் கொள்கின்றனர். மாணவர், ஆசிரியர் இடையே இடைவெளி மறைந்துவிட்டது. இப்போது எந்தக் குழந்தைகளும் விடுமுறை எடுப்பதில்லை. குழந்தைகளின் நினைவாற்றல் திறன் பன்மடங்கு அதிகரித்து உள்ளது.

     

    1

     

    11

     

    10

     

    ஒரே மாதிரியான பொம்மைகளை வைத்து பாடம் நடத்தினால் மாணவர்களுக்குப் அலுப்பு ஏற்படும் என்பதால் 2000 ரூபாய் செலவில் பெரிய குரங்கு பொம்மை வாங்கி வந்து அதன் மூலம் பாடம் நடத்துகிறேன். இந்தக் குரங்கு பொம்மை பெயர் டிங்கு, எனது இடுப்பில் உட்கார்ந்து இருக்கும். மாணவர்களிடமும் குரங்கு பொம்மையிடமும் நான் பேச வேண்டும். அதே நேரத்தில் பதிலுக்கு குரங்கு பொம்மை பேசுவதுபோல லிப் மூவ்மெண்டுடன் எனது கையை குரங்கு பொம்மைக்குள் விட்டு, குரங்கு பேசுவதுபோல மிமிக்கிரியும் செய்ய வேண்டும். அப்பொழுது எனது வாய் அசையக்கூடாது. அசைந்துவிட்டால் குரங்கு பேசவில்லை, நான்தான் பேசுகிறேன் என்று மாணவர்களுக்குத் தெரிந்துவிடும். இந்த முறைக்கு வெண்ட்ரிலோகிசம் என்று பெயர். இந்த முறையைக் கற்றுக்கொள்ள எனது சொந்த முயற்சியில் ஆறு மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டேன்.

    இந்த டிங்கு மூலம் நீதிக்கதைகள், சிந்திக்க வைக்கும் நகைச்சுவை துணுக்குகள், அறிவூட்டும் பட்டிமன்றங்கள் எல்லாம் நடத்துவேன், டிங்குவை நடுவராக வைத்து பட்டிமன்றம் நடத்தினால் மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு கலந்து கொள்வர். இதனால் தங்கள் பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது என்று பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

     

    5

     

    9

     

    4

     

    கற்கும் கல்வியானது மாணவர்களின் நினைவாற்றல் திறனை வளர்ப்பதற்கும், மகிழ்ச்சியைக் கொடுப்பதற்கும், வாழ்க்கை பாதையில் முன்னேற்றம் காண்பதற்கும் வாய்ப்பளிக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு நவீன முறையில் பொம்மலாட்ட வழிக்கல்வி மூலம் கற்பித்தல் பணியைச் செய்து வருகிறேன். இந்தப் புதுமையான கற்பித்தல் பணி குறித்து பிரபல மாத இதழ்களான ”சுட்டி விகடன்” இதழின் “கனவு ஆசிரியர்” என்ற பகுதியில் ஈரோடு மாவட்டத்திலேயே முதல் முறையாக இடம் பெற்றுள்ளேன். மேலும் பிரபலமான கல்கி, புதிய தலைமுறைக் கல்வி, ஜன்னல், குங்குமம், பாவையர் மலர், கல்வி டுடே, புதிய ஆசிரியன், தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செய்தி, தினமணி கதிர் போன்ற வார, மாத இதழிலும் என மொத்தம் 12 புத்தகங்களில் இடம் பெற்றுள்ளேன். எனது பொம்மலாட்ட வழிக்கல்வி குறித்த சிறப்புக் கட்டுரை பாரதி புத்தகாலயம் சார்பில் பேராசிரியர் நா. மணி அவர்கள் மீண்டெழும் அரசுப்பள்ளிகள் என்ற தலைப்பில் புத்தகம் வெளிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தமிழ் நாளிதழ்களான தினத்தந்தி ஞாயிறு மலர், தினமலர், தி இந்து [தமிழ் &ஆங்கிலம் ], தினகரன், காலைக்கதிர், தினமணி, இண்டியன் எக்ஸ்பிரஸ், தி டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கான் க்ரானிகல் போன்ற பத்திரிகைகளில் தமிழக அளவில் எனது பொம்மலாட்ட வழிக் கல்வி குறித்த செய்திகளை வெளியிட்டு தொடக்கக் கல்வி துறைக்கும் ஈரோடு மாவட்டத்திற்கும், எனக்கும் பெருமையை தேடித் தந்துள்ளனர். இக்கல்வி முறைக்கு பல்வேறு கல்வித்துறை உயர் அதிகாரிகளும், ஆசிரியப் பெருமக்களும், பல்வேறு சமுதாய தன்னார்வ அமைப்பினரும் வெகுவாக பாராட்டி ஆதரவு அளித்து வருகின்றனர். மேலும் என் கற்பித்தல் பணியை ஊக்குவிக்கும் பொருட்டு 6 விருதுகளும், பாராட்டு சான்றிதழ்களும் கொடுத்துள்ளனர்.

     

    6

     

    8

     

    கடந்த 07-07-2015 அன்று எனது பொம்மலாட்ட வழி கற்பித்தல் முறை குறித்து கோவையில் செயல்பட்டு வரும் “தூர்தர்சன் பொதிகை” தொலைக்காட்சியில் படப்பிடிப்பு நடைபெற்றது. 31-08-2015 அன்று தூர்தர்சன் பொதிகை தொலைக்காட்சியில் சின்ன சின்ன நட்சத்திரங்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சியானது ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலேயே தொடக்கக் கல்வித் துறையில் முதன் முறையாக “தூர்தர்சன் பொதிகை” தொலைக்காட்சியில் இடம் பெற்றது. இன்னும் தொடரும் எனது கற்பித்தல் மற்றும் சமுதாய பணிகள்.

    __________________________________________________________________________________________

     

    தே. தாமஸ் ஆண்டனி, பி .ஏ .[ தமிழ் ] , பி .எட்
    இடைநிலை ஆசிரியர்
    ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
    நாதகவுண்டன் பாளையம் , 638115
    மொடக்குறிச்சி ஒன்றியம்
    ஈரோடு மாவட்டம்
    தொடர்பு எண் : 99769-71697
    மின்னஞ்சல்: thomas1111981@gmail.com

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் – பலவகைக் கோப்புகளையும் கையாளும் மென்பொருள்

    – எஸ். நித்யலக்ஷ்மி.

    80 வகையான Fileகளை கையாளும் ஒரே மென்பொருள் உங்களுக்காக …

    ஒரு டாக்குமென்ட் பைலை எடுத்துக் கொண்டால் அந்த பைலை வெறும் படிக்க மட்டும் அனைத்து மென்பொருளையும் நிறுவ வேண்டும். எல்லா விதமான பைல்களையும் படிக்க மட்டும் என்றால் அல்லது வியூ மட்டும் செய்வதாக இருந்தால் அதற்கு ஒரு மென்பொருள் உள்ளது இதன் பெயர் ஃப்ரீ ஒபனர் (சோடா ஒபனர் போல!!).

    Free Opener ஆதரிக்கும் பைல் வகைகளைக் கீழே பட்டியலிட்டுள்ளேன். இது மொத்தம் 80 க்கும் மேற்பட்ட பைல்களை ஆதரிக்கிறது.
    இந்த இணையதளத்தின் பெயர் www.freeopener.com

    free-opener

    — சோர்ஸ் கோடுகள் – Code Files (.c, .cs, .java, .js, .php, .sql, .vb)
    — இணைய பக்கங்கள் – Web Pages (.htm, .html)
    — போட்டோஷாப் கோப்புகள் – Photoshop Documents (.psd)
    — புகைப்படங்கள் – Images (.bmp, .gif, .jpg, .jpeg, .tiff)
    — எக்ஸ்எம்எல் கோப்புகள் – XML Files (.resx, .xml)
    — பவர் பாயிண்ட் கோப்புகள் – PowerPoint® Presentations (.ppt, .pptx)
    — வீடியோ கோப்புகள் – Media (.avi, .flv, .mid, .mkv, .mp3, .mp4, .mpeg, .mpg, .mov, .wav, .wmv)
    — மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பு கோப்புகள் – Microsoft® Word Documents (.doc, .docx)
    — 7ஜிப் வகை – 7z Archives (.7z)
    — சப்டைட்டில் கோப்புகள் – SRT Subtitles (.srt)
    — ரா இமேஜஸ் – RAW Images (.arw, .cf2, .cr2, .crw, .dng, .erf, .mef, .mrw, .nef, .orf, .pef, .raf, .raw, .sr2, .x3f)
    — ஐகான்கள் – Icons (.ico)
    — எக்எஸ்எம்எல் பேப்பர் கோப்புகள் – Open XML Paper (.xps)
    — டொரென்ட்கள் – Torrent (.torrent)
    — ப்ளாஷ் கோப்புகள் – Flash Animation (.swf)
    — ஜிப் வகைகள் – Archives (.jar, .zip)
    — ரிச் டெக்ஸ்ட் கோப்புகள் – Rich Text Format (.rtf)
    — டெக்ஸ்ட் கோப்புகள் – Text Files (.bat, .cfg, .ini, .log, .reg, .txt)
    — ஆப்பிள் பேஜஸ் – Apple Pages (.pages)
    — எக்ஸல் கோப்புகள் – Microsoft® Excel Documents (.xls, .xlsm, .xlsx)
    — சிஎஸ்வி கோப்புகள் – Comma-Delimited (.csv)
    — அவுட்லுக் மெஸேஜ்கள் – Outlook Messages (.msg)
    — பிடிஎப் கோப்புகள் – PDF Documents (.pdf)
    — விகார்டு கோப்புகள் – vCard Files (.vcf) .etc…………

    Share
  • வாழும் தமிழ்!

     –மெய்யன் நடராஜ்

    நாளை தமிழும் தமிழரும் இங்கோங்கும்
    வேளை அதற்காக இன்றெங்கள் – தோளை
    நிமிர்த்தித் தொலைதூர நோக்கோடு செய்வோம்
    அமிர்த  மொழிக்கு அரண்.

    பழமை மறவாப் புதுமை படைத்து
    அழகும் பொலிவும் அமைய – வழங்கும்
    புலமைத் தமிழைப்  புவனம் முழுதும்
    உலவ விடுவோம் உவந்து.

    தமிழராய் வாழும் தரம்மிகுந்த வாழ்வை
    அமிலம் தெளித்தழிப்போர் முன்னால் – நிமிர்ந்தே
    எதிர்நின்று எம்தமிழை ஏற்றி  விளைந்த
    கதிராகச் செய்வோம்  தெளிந்து.

    மூத்த மொழியாய் முகிழ்த்த மொழியென்றே
    பார்த்து அறிந்து பழகிட – ஈர்த்தெடுக்கும்
    எம்மொழி இன்னல் எதிர்கொண்டு நிற்பினும்
    செம்மொழி யானதே சீர்.

    ஓசோன் துளைவழியே ஓர்நாள் உலகத்தில்
    வீசும் வழியற்றுப் போனாலும் – பேசும்
    மொழியாய்த்  தமிழ்வாழ முன்னெடுத்துச் செல்லும்
    வழியமைத்தால் வாழும் தமிழ்.

     

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் – விகாஸ்பீடியா

    – எஸ். நித்யலக்ஷ்மி.

    vikaspedia

    http://ta.vikaspedia.in/

     

    நாம் அனைவரும் விக்கிப்பீடியா கேள்விப்பட்டிருப்போம்.

    அது என்ன “விகாஸ்பீடியா” என்று கேட்கத் தோன்றும். அனைவரும் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய பயனுள்ள இணையதளம்.இதில் வேளாண்மை, கல்வி, உடல்நலம், சமூகநலம், எரிசக்தி, மின்னாட்சி போன்ற தகவல்கள் உள்ளன.

    1. வேளாண்மை : வேளாண் இடுபொருட்கள், தொழில்நுட்பங்கள், கால்நடை பராமரிப்பு, வேளாண் சார்ந்த தொழில்கள், பண்ணை சார் தொழில்கள், சிறந்த நடைமுறைகள், அரசு திட்டங்கள், விவசாய கடன் , வேளாண் காப்பீடு, வேளாண்மையும் சுற்றுச்சூழலும், பயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள், வேளாண்மை-கருத்து பகிர்வு போன்ற பயனுள்ள தகவல்கள் உள்ளன.

    2. உடல்நலம் : பெண்கள் உடல்நலம் , குழந்தைகள் உடல்நலம், அரசு திட்டங்கள், ஆயுஷ் , ஊட்டச்சத்து , நோய்கள், ஆரோக்கியக் குறிப்புகள், தெரிந்து கொள்ள வேண்டியவை , மூலிகை மருத்துவம் , உடற்பயிற்சிகள் போன்ற தகவல்கள் உள்ளன.

    3. கல்வி : குழந்தைகளின் உரிமைகள் ,கொள்கைகள் / திட்டங்கள், குழந்தைகள் பகுதி , ஆசிரியர்கள் பகுதி , ஆன்லைன் மதிப்பிடுதல், சிறந்த செயல்முறைகள், கல்வியின் முக்கியத்துவம் , பல வகையான படிப்புகள் , வேலைவாய்ப்பு வழிகாட்டி , பயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள் , அரசு சலுகைகள்-உதவித்தொகை , வேலைவாய்ப்பு பட்டியல் , கல்வி சார்ந்த நிறுவனங்கள் , பொது அறிவு வினா விடைகள்.

    4. சமூக நலம் : ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை, மலைவாழ் மக்கள் நலம் ,முறைப்படுத்தப்படாத துறை, மூத்த குடிமக்கள் நலம், கிராமிய வறுமை ஒழிப்பு, நகர்ப்புற வறுமை ஒழிப்பு, அரசு சார்பற்ற தன்னார்வ துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம், தமிழ்நாடு அரசுத் திட்டங்கள் போன்ற தகவல்கள் உள்ளன.

    5. எரிசக்தி : எரிசக்தி அடிப்படைத் தகவல்கள், எரிசக்தி சேமிப்பு, எரிசக்தி திறன், எரிசக்தி உற்பத்தி, சிறந்த செயல்முறைகள், பெண்களும் எரிசக்தியும், அரசு உதவிகள், கிராமப்புற கண்டுபிடிப்புகள் போன்ற பல தகவல்கள் உள்ளன.

    6. மின்னாட்சி : இந்தியாவில் மின்னாட்சி , தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005, பொதுமக்களுக்கான இணையவழி சேவைகள் , வி.எல்.ஈ க்கான ஆதாரங்கள், மொபைல்வழி சேவைகள் போன்ற தகவல்கள் உள்ளன.

    7. சேவைகள் : இ-வியாபார், வல்லுநரிடம் கேளுங்கள், மதர், இணையவழி பாடங்கள், பல்லூடக குறுந்தகடுகள் , ரீகாலர் ,வி.எல்.ஈ கார்னர் , பள்ளி மாணவர்களுக்கான பொது அறிவு வினாடி வினா போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    Share
  • நேற்று…

    — மாதவன் ஸ்ரீரங்கம்.

    புவன் எம்ஜியாருடன் கனவில் காப்பி குடித்தபடி பேசிக்கொண்டிருக்க, பட்டென்று கிறிஸ்டோபர் நோலன் அவனை துப்பாக்கியால் சுட்டபோது, அதிலிருந்து டுமீல் ஓசைக்கு பதிலாக அவன் மொபைலின் ரிங்டோன் ஒலித்து அவனை உறக்கத்திலிருந்து எழுப்பிவிட்டது. பாண்டித்துரைதான் அழைத்திருந்தான். எடுப்பதற்குள் நின்றுவிட்டது. எழுந்து உட்கார்ந்தபோது நிறைய வியர்த்திருந்தது.

    ஒரு பேச்சிலர் அறைக்குண்டான அனைத்து அம்சங்களுடன் அலங்கோலமாய் கிடந்தது அறை. நாளை ஞாயிறு. நாளைக்காவது சுத்தம் செய்யவேண்டுமென்று நினைத்துக்கொண்டான். பாத்ரூம் இதாயாதிகளை முடித்துக்கொண்டு, தானே தயாரித்த தேநீருடன் மொட்டைமாடிக்கு வர, காலை ஒன்பதுமணி வெயில் இதமாகத்தான் இருந்தது.

    கீழே நகரம் பெரிய சந்தடிகளின்றி இருந்தது. சுற்றிலும் பெரிய பெரிய டிஷ் ஆண்டனாக்களும் கேபிள் வயர்களும், பாதியில் துருத்திநிற்கும் பில்லர்களுமாக, ஒரு டிஜிட்டல் உலகின் சகல சாத்தியங்களுடன் விளங்கியது. நகரத்தில் நிறைய அலைக்கழிந்து, நெருக்கடிகளை எல்லாம் கடந்துதான் இந்த அறையை அடையமுடிந்தது. பில்டிங்கின் முதலாளி ஒரு அப்புராணி. இத்தனைகாலமாக இத்தனை சொத்துக்களுடன் இந்த நகரத்தில் அவர் குப்பைகொட்டுவது குறித்து அவனுக்கு ஆச்சரியம்தான். மிகக்குறைந்த வாடகைக்கு இந்த அறையைக்கொடுத்திருக்கிறார். என்ன, அவ்வப்போது கரண்ட்பில்லோ வீட்டுவரியோ ஆன்லைன் ஷாப்பிங்கோ செய்வதற்கு இவன் உதவியை எதிர்பார்ப்பார். அவ்வளவுதான்.

    முன்பு தட்டுமுட்டுச்சாமான்கள் அடைத்துவைத்திருந்த இடம் அது. இன்னும் அதன் பழைய வாசனைகள் எஞ்சியிருக்கின்றன. ஆனால் இந்த அறையும் மொட்டைமாடியும் சொர்க்கம். வெக்கைப்போதில் காற்றாட வெளியில் படுத்துக்கொள்ளலாம். துவைத்த துணிகளை சவுகரியமாக காயப்போடலாம். மிக முக்கியமாக வார இறுதியில் நண்பர்களுடன் பீர் அருந்தலாம். சத்தமாக சிரித்துக் கும்மாளம் போடலாம். டைரி எழுதலாம். டைரி நினைவு வந்ததும் இன்றைய நாளின் வேலைகள் பற்றி யோசனை வந்தது. எழுந்து கோப்பையை கழுவிக் கவிழ்த்துவிட்டு டைரியை எடுத்துப்புரட்டினான்.

    நேற்று சந்தித்த கிளையண்டுகள் பற்றிய குறிப்புகளிருந்தன. இன்று சனிக்கிழமை. இன்றைய நிகழ்ச்சி நிரல்கள் என்ன என்று தேடினான். எல்லாமே மனதில் பாடமாக இருப்பதுதான். என்றாலும் ஒருமுறை தவறுதலாக பிக்ஷாட் ஒருவரின் அப்பாய்ன்மெண்ட்டை இழந்துவிட்டான். மிகப்பெரிய அமவுண்டிற்கு பாலிஸி கிடைத்திருக்கவேண்டியது சிறு பிழையால் தவறிவிட்டது. அன்றிலிருந்துதான் புவனுக்கு டைரி எழுதும் வழக்கம் உண்டாயிற்று. ஒவ்வொரு நாளிலும் என்னென்ன நிகழ்ந்தன, யாரையெல்லாம் சந்தித்தோம், மறுபடி அவர்களை சந்திக்கவேண்டிய நாள் கிழமை நேரம் எல்லாம் அதில் குறித்துவைக்கத் துவங்கினான்.

    இன்று மங்களம் ஜுவல்லர்ஸ் சித்ரஞ்சனை பார்க்கவேண்டும். மதியம் 3 மணிக்குத்தான் சொல்லியிருக்கிறார். அவன் பணிபுரியும் தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு வெளியில் நல்ல பெயரும் விளம்பரமும் இருந்தன. அதை சரியாக மார்க்கெட் செய்யும் வித்தையும் அதற்கான பயிற்சியும் இவனுக்கு இருந்தது. இருந்தும் சற்று கடினமாகவே ஓடுகிறது பிழைப்பு. இந்த வாழ்வு ஒரு பகாசுரன். எத்தனை சம்பாதித்தாலும் லபக் லபக்கென்று விழுங்கிவிட்டு, இன்னும் கொண்டா என்று கேட்கிறது.

    என்னவோ இன்று வேலை பார்க்கவே தோன்றவில்லை. ஒரு விடுமுறைக்கொண்டாட்ட மனநிலைதான் இருந்தது. அவன் தயாராகி தன் டிஸ்கவர் பைக்கில் வெளிவந்தபோது சாலை நெறிசலின்றி வெறிச்சென்று கிடந்தது. சிக்னல்களிலும் அதிகம் கும்பலில்லை. கடைகள் ஷோரூம்கள் எல்லாம் ஷட்டர் இறங்கி இருந்ததையும், பள்ளிச்சீருடையில் ஒரு குழந்தைகளைக்கூட காணவில்லையே என்றும் வியந்துகொண்டிருந்தபோது செல்போன் ஒலித்தது. வண்டியை ஓரங்கட்டி நிறுத்தி எடுத்துப்பார்க்க பாண்டித்துரைதான்.

    “சொல்லு மச்சி எங்க இருக்க”

    “ஏண்டா கூ…. நேத்துபூராம் நீ எங்கபோய்த்தொலஞ்ச”?

    ” என்னடா லூசுமாதிரி பேசுற ? நேத்து நைட்டு நம்ம பார்ல நாம ஒன்னாத்தான இருந்தோம்”?

    “மூதேவி அது முந்தாநேத்துடா. நேத்து எங்கபோன ? த்தா எத்தனவாட்டி போன் பண்ணேன் ? அப்புடியென்ன பிஸி மசிறு ஒனக்கு”?

    புவனுக்கு குழப்பமாக இருந்தது. என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் அமைதியாக இருக்க, பாண்டித்துரையே மறுபடிப் பேசினான்.

    “சரி விடு இப்ப நீ எங்கயிருக்க”!

    “இப்பத்தாண்டா ரூம்லருந்து கெளம்புனேன். மெஸ்ல சாப்டுட்டு அப்டியே ஒரு கிளையண்ட்ட பார்க்கனும். நீ எங்கருக்க”?

    “நா நம்ம சேட்டன் கடைலதான் இருக்கேன் வா”

    சரியென்று அழைப்பைத்துண்டித்து மொபைலை பாக்கெட்டில் வைத்துவிட்டு பைக்கை நகர்த்தினான். நிரம்ப யோசனையாக இருந்தது. என்னாயிற்று பாண்டிக்கு ? நேற்று இரவு இருவரும் ஒன்றாகத்தான் பீர் சாப்பிட்டோம். பிறகு ஏன் குழப்புகிறான் ? நேற்றைய பீர் இன்னும் தெளியவில்லைபோல என்று தனக்குள் சிரித்துக்கொண்டான். பயங்கரமாக பசித்தது. மெஸ்ஸில் நிறுத்தி எதையேனும் அள்ளித்தின்றுவிட்டுப் போகலாமா என நினைத்தபடி மெஸ் வாசலில் நிறுத்த கேட் பூட்டியிருந்தது. முதலியாருக்கு உடம்பு சரியில்லை போல. சமீபமாக இப்படித்தான் அடிக்கடி மூடிவிட்டுச் சென்றுவிடுகிறார் பாவம். சரி இன்று வடையும் டீயும்தான் விதி என்று வழக்கமான சேட்டன் கடைக்குச்சென்று நிறுத்த வாசலிலேயே சிகரெட் பிடித்தபடி நின்றிருந்தான் பாண்டித்துரை. அவன் முகம் கடுப்புடனிருந்தது.

    மாஸ்டரிடம் ஒரு லைட் டீ சொல்லிவிட்டு வடையொன்றை எடுத்துக்கொறித்தான்.

    “ஏண்டா நேத்து போன்பண்ணப்ப எடுக்கல”? என்றான் மறுபடி.

    நிஜமாகவே புவனுக்கு இம்முறை கோபம் வந்துவிட்டது. கூடவே சிரிப்பும். சட்டென்று தன் மொபைலை எடுத்து கால் ஹிஸ்டரியை பார்த்துவிட்டு பாண்டியிடம் கொடுத்தான்.

    ” த்தா போன் பண்ணிருந்தா மிஸ்டு கால் லிஸ்ட்ல இருக்கும்ல ? எங்கன்னு காட்டு”?

    பாண்டி மொபைலை வாங்காமலேயே,

    “ஆமா பெரிய விஞ்ஞானி. லிஸ்டை டெலிட் பண்றதெல்லாம் மேட்டராடா ? சரி அப்டி எங்கதான் போன. எதாச்சும்…..”?

    புவனும் ஒரு சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டான்.

    ” ரெண்டு பீர்தாண்டா அடிச்ச. இன்னுமா தெளியல? சரி விடு. நா ஒரு கிளையண்ட்டை பார்க்கனும். முடிச்சிட்டு சாயந்திரமா கால் பண்றேன்” என்று ஹெல்மட்டை எடுத்துக்கொண்டு கிளம்பிய புவனை ஆச்சரியமாகப்பார்த்தான் பாண்டி.

    “ஏண்டா ஞாயித்துக்கெழமைல கூட எவனையும் வீட்ல நிம்மதியா இருக்கவுடமாட்டியாடா ? எப்பப்பாரு பாலிஸி பாலிஸின்னு”

    “டே லூஸு. இன்னிக்கி சனிக்கிழமைடா. இந்த சண்டேதான் திருணாமலை போலாம்னு பிளான் பண்ணிருந்தமே”

    “யப்பா சாமி. இப்பவாச்சும் நெனப்பு வந்துச்சே. த்தா பிளானைப்பூராம் சொதப்பிட்டு மொக்கத்தனமா சமாளிக்காத”

    அப்போதுதான் புவன் கடையிலிருந்த தேதியைப்பார்த்தான். ஞாயிறு என்றிருந்தது. அவனுக்கு என்னவோ தோன்ற செய்தித்தாள்களை எடுத்துப்பார்க்க அதுவும் ஞாயிற்றுக்கிழமை பதிப்புத்தான் வந்திருந்தது. அவசர அவசரமாக தனது மொபைலை எடுத்து பரிசோதிக்க, கடைசியாக வெள்ளிக்கிழமை பேசிய தவறிய அழைப்புகள் மட்டுமே இருந்தன. இன்று காலை தவறிய பேசிய பாண்டியின் அழைபுகள் இருந்தன. சனிக்கிழமை தேதியில் ஒன்றுகூட பதிவாகவில்லை. புவனுக்கு சற்று பீதியுண்டானது.

    பாண்டியை கடைக்குள் இழுத்துச்சென்று பெஞ்சில் அமர்ந்து பதட்டத்துடன் விஷயத்தைக்கூறினான்.

    “மச்சி என் நேத்தை காணம்டா”

    பாண்டி பகபகபகவென சிரித்தான்.

    “என்னடா ஜட்டியக்கானோங்குற மாதிரி சொல்ற”?

    புவன் வெளிறிப்போய் கிடந்தான்.

    ” மச்சி சீரியஸாடா. நேத்து முழுக்க என்ன நடந்துச்சி என்ன எதுமே மைண்ட்ல இல்லடா. கடைசியா வெள்ளிக்கிழமை நாம ஒன்னா சரக்கடிச்சது ஞாபகத்துல இருக்கு. அப்பறம் இன்னிக்கி நீ போன் பண்ணப்ப எழுந்ததுதான். நடுவுல நேத்து முழுக்க”…..

    புவன் குரலிலிருந்த சீரியஸ்தனம் பாண்டிக்கு உறைத்திருக்க வேண்டும். ஆறுதலாய்க் கூறினான்.

    “விட்ரா மச்சி. நேத்து நைட்டு என்னை விட்டு தனியா போய் புல்லா சரக்கடிச்சிருப்ப. நாள் முழுக்க மட்டையாயிருப்ப. விடு இதெல்லாம் மேட்டரா”

    “போடா கூ…. . எவ்ளோ மட்டயானாலும் ரெண்டு ராத்திரி ஒரு பகலாடா தூங்குவாங்க? இல்ல உன்னவிட்டி என்னிக்காச்சும் தனியா சரக்கடிச்சிருக்கனா”?

    புவன் கேட்டதில் லாஜிக் இருந்தது. அவன் தனியாக என்றுமே குடித்ததில்லை.

    “இப்ப என்னடா செய்யறது? மங்களம் ஜுவல்லர்ஸ் அப்பாய்ன்மெண்டும் கோவிந்தா. அதான் ரோட்ல டிராபிக் ப்ரீயா, கடைகன்னியெல்லாம் மூடிக்கெடந்துருக்குபோல”

    இப்போது குழப்பம் இருவருக்குமாய் ஆகிப்போனது.

    “ஆபீசுக்கு போன் அடிச்சிப்பாரேன் மச்சி” என்றான் பாண்டி.

    “அட போடா. ரெண்டுமாசமா டார்கட் அச்சீவ் ஆகலைன்னு மேனேஜர் கடுப்புல கெடக்கான். எதுனா பாலிஸியோட வந்தா ஆபீஸ் பக்கம் தலையக்காட்டுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டான்”

    சட்டென்று யோசனை வந்து, பேகில் இருந்த டைரியை புரட்டினான். அதிலும் வெள்ளிக்கிழமைதான் கடைசியாக பதிவாகியிருந்தது.

    “சரி அதை விடு. எப்டியும் இன்னிக்கி லீவுன்னு கன்பர்ம் ஆயிருச்சில்ல. வா ஆளுக்கொரு பீர வாங்கிட்டு உன் ரூமுக்கு போயிருவோம்”

    பாண்டி கூறியதுதான் சரியென்று தோன்றியது. இருவரும் சற்றுநேரத்திற்கெல்லாம் புவன் அறையை அடைந்தார்கள். படியேறுகையில் மூடிக்கிடந்த பில்டிங்கின் கடைகளை பாவமாக பார்த்தான். அறைக்குள் நுழைந்ததும் முதல் காரியமாக தினசரி காலண்டரை கவனித்தான். அது ஞாயிற்றுக்கிழமையை காட்டியது. எப்போதும் முதல்நாள் இரவே தேதித்தாளை கிழிக்கும் வழக்கம் வைத்திருந்தான் புவன். கடைசியாக வெள்ளிக்கிழமை இரவு கிழித்திருந்தால் சனிக்கிழமைதானே இருக்கவேண்டும்?

    “டே என்னடா. எதுக்கு குப்பையக் கெளறிட்ருக்க”?

    பதில்கூறாமல் குப்பை டப்பாவைக் கவிழ்த்து தேதித்தாள்களை மட்டும் சேகரித்து சோதித்துப்பார்க்க, அதில் மற்ற அனைத்து நாட்களும் இருந்தன. நேற்றைய சனிக்கிழமையை மட்டும் காணவில்லை. தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்தான். ஊரிலிருக்கும் பெற்றோருக்கு போன் செய்ய, அவர்களும் நேற்றுமுழுக்க இவன் அழைப்பை ஏற்கவில்லையென்று புகார் வைத்தார்கள்.

    ” மச்சி எனக்குப் பயமாயிருக்குடா. இந்த செலக்டீவ் அம்னீஷியா அல்ஜைமர்லாம் சொல்றாய்ங்களே.. அப்டி ஏதும்”

    “ச்சேச்சே.. அப்டிலாம் ஒன்னுமிருக்காது மச்சி. நீ கவலைப்படாத. நாளைக்கி நம்ம டாக்டர் பய ஹரீஷ பார்த்துருவோம். அப்டிலாம் இருக்காதுரா”?

    பாண்டி ஆறுதல் கூறினாலும் கூட, அவனுக்குமே உள்ளுக்குள் சற்று அச்சமாகத்தான் இருந்தது. ஒரு புத்தகத்தின் பக்கமொன்று தொலைந்ததைப்போல தொலைந்துவிட்டிருக்கிறது ஒரு நாள் ! அது வந்து சென்றதற்கான எவ்வித அறிகுறிகளும் இல்லாமல். யார் கண்டது, அது வாராமலேகூட இருந்திருக்கலாம்.

    இரண்டாவது பியரில் சற்றே மிதக்கத்துவங்கிய புவன் மறுபடிப் புலம்ப ஆரம்பிக்க, பாண்டி அவனிடம் சொன்னான்.

    “இப்ப நம்மகையில இருக்கு பாரு இன்னிக்கி. இதான் நம்முது. இத்தை தொலையாம பாத்துக்கிட்டா போதும் மச்சி”

    “அடப்போடா” என்று அவன் சலித்துக்கொண்டான். “சரி நா கேக்குறதுக்கு பதிக் சொல்லு மச்சி”

    மிக்சரை ஒரு கைப்பிடி அள்ளி வாயில் போட்டபடி புவன், “கேளு”

    “சாதாரணமா ஒரு நாள்ல நீ என்னல்லாம் செய்வ”?

    ” ஏன் கேக்குற”?

    “சும்மா சொல்லு மச்சி”

    ” என்னா, எந்திரிப்பேன். குளிப்பேன், சாப்புடுவேன், வேலைக்கிப்போவேன். வீட்டுக்கு வருவேன். தூங்குவேன்”

    “சூப்பரு. நேத்து தொலையாம இருந்திருந்தாலும் நீ அதைத்தான செஞ்சிருப்ப”?

    சற்று ஆழமாக யோசித்துவிட்டுச் சொன்னான்.

    ” ஆங்… ஆமாம். அதத்தான் செஞ்சிருப்பேன். ஏன் கேக்குற”?

    “இல்ல, ஒருவேளை உன் நேத்து தொலையாம இருந்திருந்தா, சி எம்மாவோ பி எம்மாவோ ஆயிருப்பியா? இல்ல ஐநாவுக்கு அதிபராயிருப்பியா”?

    ” டாய்”….

    ” அப்பறம் என்ன ? சும்மா பொலம்பாத மச்சி. நீ பெரிசா எதையும் இழந்திடல “

    “த்தா ஒனக்கென்ன வந்திச்சு ? போனது என்னோட நேத்துடா”

    “அதுஞ்சரிதான். ஒன்னு பண்ணேன். வேன்னா என் நேத்து சும்மாத்தான் கெடக்கும் மச்சி. அதை எடுத்துக்கயேன்” என்று கண்ணடித்துச் சிரித்தான் பாண்டி.

    புவனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

    “ஆமா அப்புடித்தான் செய்யணும். ஆனா அப்டி நாளைக்கி உன் நேத்தை நா எடுத்துக்கிட்டா, என்னோட நாளையை என்னடா செய்யிறது”?

    ” ம்… நியாயமான கேள்விதான். . ஆங்… உன் நாளைய நா வச்சிக்கிறேன். ஆனா, அப்ப என் நாளை என்னாவும் மச்சி ? பேசாம அதை யாருக்குனா பிச்சை போட்ரலாமா”? என்று பாண்டி கேட்க,

    இருவரும் பயங்கரமாக வெடித்துச் சிரித்தார்கள். இறுதியாக பாண்டி, புவனிடம் சொன்னான்.

    “மச்சீ… இந்த உத்திரவாதமில்லாத வாழ்க்கையில நேத்துக்கும் இன்னிக்கும் நாளைக்கும் பெரிய அர்த்தமோ வித்தியாசமோ இருக்குதா என்ன” ?

    *

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் – மொழிபெயர்ப்பிற்கு உதவும் தளங்கள் மற்றும் இணைய அகராதிகள்

    –சிவானந்தம் கனகராஜ்.

    இணையத்தில் எத்தனையோ மொழிகளில், எத்தனையோ விதமான தகவல்கள் விரவிக் கிடக்கின்றன. நாம் தேடும் தகவல்கள், நாம் அறியாத வேறு மொழியில் இருந்தாலும், அதை இணையத்திலேயே மொழிபெயர்த்து அறிந்து கொள்ள இயலும். ஒரு வலைப்பக்கத்தை முழுமையாக, ஓர் மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யலாம். நமக்குத் தேவையான குறிப்பிட்ட சொற்களை மட்டும் மொழிபெயர்த்து, அவற்றின் பொருளை அறிந்துகொள்ள விரும்பினால், அவ்வாறு ஒரு சொல்லை மட்டும் மொழிபெயர்க்கவும் செய்யலாம். இதற்கு இணையத்தில் மொழிபெயர்ப்பு தளங்கள், ஒரு மொழியில் இருந்து மற்றோர் மொழிக்கு மொழிமாற்றம் செய்து, அதற்குண்டான பொருளையும் வழங்கும் மின்னகராதிகள் பலவும் இணையத்தில் கிடைக்கின்றன. அத்தகைய மொழிபெயர்ப்பு தளங்கள், மின்னகராதிகள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

    1) கூகுள் வழங்கும் மொழிபெயர்ப்புச் சேவை (Google Translation):

    கூகுள் வழங்கும் மொழிபெயர்ப்புச் சேவையை பயன்படுத்தி ஆவணங்கள், வலைப்பக்கங்கள், சொற்கள், சொற்றொடர்கள், படக் கோப்புகளில் இருக்கும் சொற்கள், பத்திகள், நமது கையெழுத்து கொண்டே சொற்களை மொழிபெயர்ப்புக்கு உள்ளிடும் முறை, நமது குரல்வழி சொற்களை மொழிபெயர்ப்புக்கு உள்ளிடும் முறை என்று பல வழிகளில் நாம் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவை வசதியைப் பயன்படுத்தலாம்.

    கணினிகளில் இணைய வசதியினை பயன்படுத்தி, நாம் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவையை பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் கருவிகளில் பயன்படுத்த என்று கூகுள் மொழிபெயர்ப்பிற்கென்று தனி செயலி (apps) உண்டு. கூகுள் மொழிபெயர்ப்பின் உதவியுடன் தனிச் சொற்கள், சிறிய சொற்றொடர்கள் போன்றவற்றிற்கு மிகத் துல்லியமான மொழிபெயர்ப்பு கிடைக்கும். அதே சமயம், பெரிய பத்திகள், அல்லது ஓர் முழு வலைப்பக்கமோ, ஓர் ஆவணத்தையோ முழுமையாக மொழிபெயர்க்க வேண்டுமெனில், மிகத் துல்லியமான முடிவுகள் கிடைப்பதில்லை.

    இன்னபிற மொழிபெயர்ப்பு சேவை வழங்கும் இணையதளங்கள் பலவும் சொற்களை மட்டுமே மொழிபெயர்க்கும் வசதியைத் தரும் வேளையில் கூகுள் வழங்கும் வலைப்பக்க மொழிபெயர்ப்பு முயற்சி வரவேற்கத் தக்கது. தற்சமயம் கூகுள் வழங்கும் இந்த மொழிபெயர்ப்பு சேவை வசதி தொண்ணூறுக்கும் மேற்பட்ட மொழிகளுக்குக் கிடைக்கிறது. இதில், நமது இந்திய மொழிகளான தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, குஜராத்தி,உருது, பெங்காலி, கன்னடம், மராத்தி, நேபாளி, பஞ்சாபி ஆகியவையும் அடங்கும். இது, இம்மொழிகளில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தல், அல்லது, ஆங்கிலத்திலிருந்து இம்மொழிகளுக்கு மொழிபெயர்த்தல், மற்றும் இம்மொழிகளிடையே மொழிபெயர்த்தலும் அடங்கும்.

    கூகுளின் மொழிபெயர்ப்புச் சேவையை கீழ்க்காணும் இணையதளத்தில் பெறலாம்:
    https://translate.google.com/

    கூகுள் வழங்கும் ஒலிபெயர்ப்பு சேவை (Google Transliteration):
    இவ்வசதி மொழிபெயர்ப்பு செய்ய பயன்படாது. ஆனால், நாம் உள்ளிடும் சொற்களின் ஒலிக்கு ஏற்ப, நமக்கு வேண்டிய மொழியில் ஒலிபெயர்த்து கொடுக்கும். எடுத்துக்காட்டாக, நாம் தமிழில் “அம்மா” என்ற சொல்லை தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால், அது தமிழில் அம்மா என்று நமக்கு ஒலிபெயர்த்து கொடுக்கும். இவ்வசதி, கூகுள் வழங்கும் Google Transliteration சேவையின் மூலம் கிடைக்கிறது. இவ்வசதி தனி வலைப்பக்கத்திலும் கிடைக்கும். அது தவிர கூகுளின் இன்னபிற சேவைகளான கூகுள் மின்னஞ்சல் (Gmail), கூகுள் வழங்கும் வலைப்பூ சேவை (Blogger) ஆகியவற்றிலும் இந்த ஒலிபெயர்ப்பு சேவை கிடைக்கிறது.

    கூகுளின் ஒலிபெயர்ப்புச் சேவையை கீழ்க்காணும் இணைய பக்கத்தில் பயன்படுத்தலாம்:
    http://www.google.com/inputtools/try/

    2) ஷப்த்கோஷ் :

    ஷப்த்கோஷ் இணையதளத்தில் தமிழ், இந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், ஆங்கிலம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும் வசதி கிடைக்கிறது.

    கீழ்க்காணும் இணைய பக்கத்தில் இதனைப் பயன்படுத்தலாம்:
    http://shabdkosh.com

    இத்தளத்தில் ஒவ்வொரு குறிப்பிட்ட வார்த்தைகளை மட்டுமே மொழிபெயர்த்துத் தரும் வசதி இருக்கிறது. நாம் மொழிபெயர்க்க வேண்டிய சொல்லினை உள்ளிட்டால், அச்சொல்லினை உச்சரிக்கும் விதம், சொல்லின் மொழிபெயர்ப்பு, அச்சொல்லின் இன்னபிற வடிவங்கள் ஒருமை/பன்மை (Singular/Plural), வினை வடிவங்கள் (Tense Forms), சொற்பொருள் விளக்கம் (Definitions & Meanings) ) போன்ற தகவல்களையும் நமக்கு வழங்குகின்றது.

    ஆண்ட்ராய்ட் (Android), ஆப்பிள் (Apple), மைக்ரோசாப்ட் விண்டோஸ் (Microsoft Windows), விண்டோஸ் தொலைபேசி (Windows Phone) ஆகிய கருவிகளுக்கு (devices) ஷப்த்கோஷ் தனி செயலி (apps) கிடைக்கிறது.

    3) Tamil cube வழங்கும் மொழிபெயர்ப்பு அகராதி:

    தமிழ் க்யூப் வழங்கும் மொழிபெயர்ப்பு அகராதி ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கவும், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கவும் உதவுகிறது. இந்தத் தளத்தில் பலதுறை சார்ந்த கலைச்சொற்களுக்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு கிடைக்கிறது.

    இந்த அகராதியைக் கீழ்க்காணும் இணையதளத்தில் பயன்படுத்தலாம்:
    dictionary.tamilcube.com/

    மொழிபெயர்க்க வேண்டிய சொல்லினை உள்ளிட்டால், அந்தச் சொல்லிற்கான பொருள் அகராதியில் இருப்பின் பொருள் தருவதுடன், அச்சொல்லுக்குத் தொடர்புடைய சொற்கள் மற்றும் இணையான சொற்களை வழங்கி, பொருளும் வழங்குகிறது. இந்தத் தளத்தில், மொழிபெயர்ப்பு சேவை கிடைப்பதுடன், இணையத்தில் இருக்கும் இன்ன பிற மொழிபெயர்ப்பு தளங்கள், இணைய அகராதிகளுக்கு இணைப்புகள் கிடைக்கின்றன.

    4) kapruka.com வழங்கும் சிங்கள மற்றும் தமிழ் அகராதி:

    கப்ருகா (kapruka) இணையதளம் வழங்கும் இணையவழி அகராதி. ஆங்கிலத்தில் சொற்களை உள்ளிட்டால், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பொருள் வழங்குகிறது. இது தவிர, அச்சொல்லின் ஒலிப்பு முறை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் வழங்கப்படுகிறது. நமக்குத் தேவையான சொற்கள் இந்த அகராதியில் காணக் கிடைக்கவில்லையெனில், நாம் நமக்குத் தேவையான சொற்கள் குறித்து வேண்டுகோள் வைத்தால், அந்தச் சொல்லிற்கான மொழிபெயர்ப்பு அகராதியில் சேர்க்கப்படும்.

    கீழ்க்காணும் இணையப் பக்கத்தில், இந்த அகராதியைப் பயன்படுத்தலாம்:
    http://www.kapruka.com/dictionary/EnglishToSinhala.jsp

    5) tamildict.com வழங்கும் தமிழ் – ஆங்கிலம் – ஜெர்மானிய அகராதி:

    tamildict.com இணையதளம் வழங்கும் இணையவழி அகராதியில், கிட்டத்தட்ட 45 வகை பிரிவுகளில் சொற்கள் வகை பிரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
    இந்த அகராதியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பயனாளரும், புதிதாக அகராதியில் சொற்களை சேர்க்கலாம். ஏற்கனவே இருக்கும் மொழிபெயர்ப்பினை மேம்படுத்த விரும்பினால், அங்ஙனமும் செய்யலாம். பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டி, திருத்தம் செய்யலாம்.

    இது தவிர, எண்களை உள்ளிட்டால், அந்த எண்களைத் தமிழில் உச்சரிப்பது எப்படி என்ற விபரமும் கிடைக்கிறது. 999999999 (தொன்னூற்றியொன்பது கோடியே தொன்னூற்றியொன்பது இலட்சத்து தொன்னூற்றியொன்பது ஆயிரத்து தொளாயிரத்தி தொன்னூற்றியொன்பது) வரையிலான எண்களுக்கு இணையான தமிழ் வார்த்தைகளைத் தருகிறது.

    இந்த அகராதியைக் கீழ்க்காணும் இணையதளத்தில் பயன்படுத்தலாம்:
    http://www.tamildict.com/english.php

    6) தமிழ் இணைய கல்விக் கழகத்தின் இணையதளத்தில் கிடைக்கும் ஆங்கில – தமிழ் அகராதிகள் :

    தமிழ் இணைய கல்விக் கழகத்தின் இணையதளத்தில், பல்வேறு அகராதிகளுக்கான இணைப்புகள் கிடைக்கின்றன. அவற்றுள், தமிழ் – ஆங்கில அகராதிகளும் அடங்கும்.
    அவை ,
    பால்ஸ் அகராதி
    சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் – தமிழ் அகராதி
    இன்னபிற அகராதிகளின் விபரம் குறித்து அறிய, கீழ்க்காணும் இணையதளத்தில் காணலாம்.

    தமிழ் இணைய கல்விக் கழகத்தின் இணையதளத்தில் கிடைக்கும் அகராதிகள் :
    http://www.tamilvu.org/library/dicIndex.htm

    குறிப்பு:
    இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் அனைத்தும், அவற்றின் இணையபக்கங்களில் இருந்து எடுக்கப்பட்டவை.

    Share
  • மென்பொருள் பொறியியலில் அறிவுமாற்றத்தை ஏற்படுத்துதல்

    நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்.

    மென்பொருள் பொறியியலில் அறிவுமாற்றத்தை ஏற்படுத்துதல்

    (Knowledge Transfer in Software Engineering)

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் திருவள்ளுவர், அறத்துப்பால் (இல்லறவியல்), ஒழுக்கம் உடைமை, அதிகாரம் 14, “அறம் தவறாமலும் கடமை தவறாமலும் நடத்தல்” குறள் எண் 140ல் ”அறிவு என்றால் என்ன? “ என்பதை பின் வருமாறு குறிப்பிடுகின்றார்.

    உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
    கல்லார் அறிவிலா தார்

    (உயர்ந்தவரோடு ஒட்டி வாழ்தலைக் கல்லாதவர் பல நூல்களைக் கற்றவாராயினும் அறிவில்லாதவரே)1
    (Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant) 2
    மேலும், அறத்துப்பால் (இல்லறவியல்), ஒப்புரவு அதிகாரத்தில், அதிகாரம் 22 , “உலகத்தோடு ஒட்டி நடந்து உதவி செய்து வாழ்தல், குறள் எண் 214ல் அறிவை பற்றி விளக்கம் தருகின்றார்.

    ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
    செத்தாருள் வைக்கப் படும்

    (ஒப்பரவறிந்து பிறருக்கு உதவி செய்து வாழ்பவன் உயிரோடு கூடி வாழ்பவன் ஆவான். அவ்வாறு வாழாதவன் செத்தாருள் ஒருவருனாக் கருதப்படுவான்)1
    (He / she truly lives who knows (and discharges) the proper duties (of benevolence) , he / she who knows them not will be reckoned among the dead) 2

    “அறிவை அறிவதற்கே அறிவு தேவைப்படுகிறது என்று சட்டக்கதிர் இதழில் (மார்ச் 2009) படித்த ஞாபகம். அறிஞர்களின் ஆய்வறிக்கைக்குள் அகப்படவே அறிவு மறுக்கிறது. அறிவுக்கு விளக்கம் தேடிய உளவியல் அறிஞர் எம். தெர்மன் என்பவர் 1921 ஆம் ஆண்டில் ஒரு நாள் அமெரிக்காவில் நடந்த கருகத்தரங்கில் அறிவு என்பது சிந்திப்பதற்கான திறன் என்றார். மற்றொரு உளவியல் அறிஞர் எட்வர்ட் எல். தாண்டிக் என்பவரோ கேள்விக்கு உறிய வகையில் பதலளிக்கும் திறனே அறிவு என்றார். 1996 ஆம் ஆண்டில் அறிவு பற்றி விவாதித்தவர்கள் “சுற்றியிருப்பதோடு முரண்படாமல் ஒட்டி உறவாட உதவுவதே அறிவு “ (Effective adaption of the environment) என்று முடிவெடுத்தனர். என்ன செய்ய வேண்டும்? ஏன் செய்ய வேண்டும்? எதற்காக செய்ய வேண்டும? எப்படி செய்ய வேண்டும் என்பதை உணர்த்துவதே அறிவு தான். 3

    அறிவு என்பது தகவல்கள். skills (திறமை) , செய்முறை பயிற்சியானாலும் மற்றும் அனுபவத்தினாலும் , சுற்றுப்புற சூழ்நிலைகளினாலும் பெறுவது. புத்திசாலி ஆவதற்கு அறிவு தேவைப்படுகிறது. நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு காரியத்தை தீhமானிக்கலாம். தீர்மானம் மெய்யாகவும் (True) நிகழலாம் அல்லது தவறாகவும் (False) அமையலாம். அறிவும், தரவும் (Data) வெவ்வேறானவை. உதாரணமாக, ஆஸ்பத்திரியின் நோயாளி பற்றிய விவரங்களை (பெயர், பிறந்த தேதி, பாலினம், வியாதியின் தன்மை, மதிப்பீடுகள், நிலவரம்) கணனியில் பதிவு செய்ததை, மருத்துவர் அறிந்து கொண்டு சிகிச்சை செய்வதாகும்.

    மென்பொருள் மூலம் நிறுவப்பட்ட கருவிகள் சில சமயங்கள்ல் நூறு சதவிகதம் துல்லியமாக வேலை செய்துவிடும் என்று கூறிவிடமுடியாது. அறுவை சிகிச்சையின் போது ஒரு சிறிய உபகரணத்தினாலோ, கருவியானலோ அல்லது மென் பொருளினால் பழுது ஏற்பட்டால் நோயாளி கடுமையாக பாதிக்கபடுவார். உதராணமாக ஐரோப்பாவின் விண்வெளி நிறுவனத்தால் ஏவப்பட்ட மாதிரி ராக்கெட் (Ariean 5) மென்பொருளின் கோளாறினால் 5 பில்லியன் அமெரிக்கன் டாலாகள் நஷ்டமானது. (Therac-25 radiation therapy device) ஒரு தரம் கொடுக்க வேண்டிய தெராக் கதிர்வீச்சு, (one dose, ஒரு விழுங்கு) கதிர்வீச்சு உபகரணத்தின் மூலம் கொடுத்த பொழுது, “தெரக் 25 ரேடியேஷன் தெரபி” கருவி சரியாக செலுத்தப்படாத காரணத்தால் நோயாளி இறந்தார். எனவே. மென்பொருளில் பிழைகளை கண்டுபிடிப்பது என்பது ஒரு மிகப்பெரிய சவலாகும்.

    picture

    மனிதர்களிடம் மட்டும் தான் சிந்திக்கும் திறனான “அறிவு” என்ற கண்ணுக்கு புலப்படாத பொருள் இருப்பதால் தான், பற்பல புதிய கருவிகள், உபகரணங்கள், பொருள்கள் ( ராக்கெட், விமானம், கார், கப்பபல், மென்பொருள்) உருவாக்கி, அதை உபயோகித்தும் வருகின்றார்கள். உதராணமாக விஞ்ஞானி சர். ஐசக் நீயூட்டன், ஆப்பிள் மேலிருந்து கீழே விழுகிறது என்பதை ஆராய்ந்தார். பஞ்ச பூதங்களில் (நிலம் , நீர் , தீ, காற்று, ஆகாயம்) ஒன்றான பூமிற்கு புவியீர்ப்பு சக்தி இருக்கிறது என நியூட்டன் விஞ்ஞான விதிகளை உருவாக்கினார்.

    அறிவு மேலாண்மை பற்றி தகவல் தருவோரும், சேகரிப்பவரும், தொடர்பு படுத்துவோரும், உருவாக்கவோரும், அமுல்படுத்துவோரும் மற்றும் நன்கொடையாக வெளியிடுபவரும் உறுப்பினர்கள் ஆவார்கள்.

    அறிவு கட்டமைப்பிலிந்து (Knowledge Structure) அறிவு பொருட்களை உருவாக்கலாம். அதை பகிர்ந்தளிக்கவும் செய்யலாம்.

    Reference :

    1. திருக்குறள் மிக மிக எளிய உரை , பேராசிரியர் முனைவர் மு.பெரி.மு இராமசாமி, ஸ்ரீ இந்து பப்ளிகேஷன் , சென்னை, நவம்பர் 1991
    2. (http://www.gokulnath.com/thirukurals/22)
    3. பேராசரியர் ஆ. சந்திரசேகரன் அவர்களின்: அறிவுசார் சொத்துரிமை சட்டம்”என்ற நூலின் அணிந்துரையில் நீதியரசர் கே. ரவிராஜ பாண்டியன்)
    4. Marian Pompillu, CRISTESCU, Corina loana,, Knowledge Management Archittecture – Princples and Tendencies, Revista Informarmatic Economica, nr. 4(48)/2008,pp 65-68. Marian Popmpillu, CRISTESCU, “Lucian Blaga” University of Sibiu, Romania, Corina Loana CRISTESCU, Faculty of C.S.I.E., Academy of Economic Studies, Bucharest, Romania

    Share
  • பந்தயம்

    — மாலா மகாதேவன்.

    horse race

    ஜெயிப்பாண்டா, இந்த ரவுண்டு இவன் தாண்டா ஜெயிப்பான். என் செல்லம்டா இவன். நான் வளர்த்த பையன்.

    ஆர்ப்பரித்த குரலில் இருந்த உற்சாகத்தை உணர்ந்த இவனாகப் பட்ட குதிரை சம்சுத் தலையைத் தலையை ஆட்டிக் கொண்டிருந்தது. அதன் மேல் நம்பிக்கை வைத்து லட்சத்துக்கு மேல் பந்தயத் தொகை கட்டியிருந்தான் செல்வா.

    வாயில்லா ஜீவன் அது. முயன்றால் ஓடும். ஓடினால் ஜெயிக்கும். ஜெயிக்கா விட்டாலும் அதற்கு ஒன்றுமில்லை. அதன் மேல் கட்டினவன் பாடு. அது பாட்டுக்குத் தன் வயிற்றுக்குப் பார்த்து கொண்டு இருக்கும்.

    செல்வாவின் பிரஷர் ஏறிக் கொண்டு இருந்தது. கடைசி சுற்று வெற்றி பெற்றால் இழந்த பந்தய தொகையை மொத்தமும் மீட்டு விடலாம். பரிகசித்த பண்டாரங்களை ஊதித் தள்ளி விடலாம்.

    சம்சுத் இதுவரைக்கும் வெற்றிக் கோட்டின் பக்கத்தில் போயிருக்கிறது. முதலாவதாக என்றுமே வந்ததில்லை. ஆதலால் அதன் மேல் பணம் கட்டாதே என பாதிப் பேர் சொல்லியும் செல்வா மிகுந்த நம்பிக்கையுடன் அதன் மேல் கட்டியிருந்தான். அதைச் சொந்தமாகவும் வாங்கி இருந்தான்.

    தொண்டைத் தண்ணி தீரும் வரை விடாமல் கத்திக் கொண்டு இருந்தான் செல்வா.

    “கமான் சம்சுத் கமான் கமான்..”

    வின் வின் என்று கத்தியதில் அவனுக்கே தலை விண் விண் என வலித்துக் கொண்டு இருந்தது.

    கண்ணுக்கு நேரே பாதை. வளைந்தும் குறுகியும் நெடிதுமாய் இருக்கும் நீள் வட்டப் பாதை. சம்சுத் ஓடும் ஒவ்வொரு நொடியும் அவனுக்குப் பொக்கிஷம். போட்டி தொடங்கியது. ஓடத் தொடங்கியது.

    மின்னலாய் விரைந்த குதிரையின் முன் கத்துகின்ற மக்கள் கூட்டத்தில் செல்வாவின் தலை தனித்துத் தெரிந்தது. அவனைப் பார்த்து மிரண்ட சம்சுத் என்ன செய்கிறோம் எனப் புரியாமலே ஒரு வினாடி தயங்கி நின்றதில் பின் சென்ற ஜாக்குவார் வெற்றிக் கோட்டை தொட்டது.

    பார்த்த செல்வாவுக்கு ஒன்றுமே புரிய வில்லை. எப்படி நடந்தது? வெற்றிக்குப் பக்கத்தில் நம் குதிரை தானே இருந்தது?

    ஏன் போச்சு? எப்படி போச்சு? வாயில்லா ஜீவனைக் கம்பால் வதைத்தான். உன்னால் எனக்கு பணம் போச்சு. மற்றவர்களிடம் மானம் போச்சு எனக் குதிரையை முற்றிலும் புறக்கணித்தான். குதிரை பராமரிப்பு இல்லாமல் சோர்ந்து போனது.

    இந்தக் குதிரை என்ன அவ்வளவு பெரிய ஆளா? ஒரு போட்டியில் வெற்றி பெற முடிய வில்லை.

    “நான் ஜெயிச்சு காட்டறேன் பாரு இந்த குதிரையை என” வெறி கொண்ட செல்வா “கமான் க்விக் , கமான் க்விக் ” என்றபடி தானே இறங்கி பந்தயத்தில் ஓட ஆரம்பித்தான்.

    அந்தோ ! பாவம் அது குதிரைகளின் பந்தயம்.

    Share
  • இருளின் வெளிச்சம்

    -பாஸ்கர்  சேஷாத்ரி 

    அது எங்கள் விடி வெள்ளி
    இருளைத் துரத்திய
    பகலில் அதன் உயிர் இப்பவோ அப்பவோ…
    இருள்சூழ அதன் ஆயுசு கூடும்
    பார்த்துக்கொண்டே இருப்பின்
    புதிராகும் வாழ்க்கை.
    கண் கூசும் – கவலையில்லை
    நீர் சுரக்கும் – நன்றுதான்!

    இருட்டிலும் எல்லார் முகத்தில் ஆனந்தம்
    கூடி இருந்தோம் விலகாமல்
    ஒளி கூட்டி ஒளி குறைத்து
    விளையாடும் ஆனந்தம்
    இன்று வெளிச்சத்தில் இல்லை!

    அதன் உடல்தொட்டுச் சூடேற்றும் லாவகம்
    யாருக்கு வரும் இன்று?
    ’புக் புக்’ என உயிர்விடும் சோகம்
    மண்ணெண்ணெய் வாசத்தில் தொலைத்துப்போம்!

    இப்போதும் உள்ளது வீட்டில் ஓர் மூலையில்
    எடுத்துத் தேய்த்தால் வாழ்வில் வரும் ஜீபூம்பா
    ’என் ராந்தல் விளக்கு.’

     

    Share
  • மாறாத வறுமை 

    -மீனாகுமாரி கண்ணதாசன் 

    விண்ணில் பறக்கும் ஏவுகணைகளும்,
    நவீனமாக மாறிவரும் அங்காடிகளும்,
    சீட்டுக் கட்டுகளைப் போல் பறக்கும் பணக்கட்டுகளும்,
    பளிங்குப் பாலங்களும்,பல்லைக் காட்டும் பளிச்சென்ற விளக்குகளும்
    பகட்டான மனிதர்களின் பறந்தோடிக் கொண்டிருக்கும் சொகுசு வாகனங்களும், நாகரிகமாக உலாவரும் நவயுக காலத்தில்
    மாறிவிட்ட மனிதர்களும் இவ்வுலகில் இருக்கும் வேளையில்…

    வறுமை நிலையோடு, வயிற்றுக்கு உணவின்றிக்
    கேட்பாரற்று, கேள்விக்குறிகளோடு
    உடலை மறைக்க உடையின்றி, உடலில் சதையின்றிப்
    பட்டினியால் வாடி, பரிதவிக்கும் மனிதர்களும்
    வளர்ச்சிபெற்ற திருநாட்டில்
    வறுமையும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது இன்னும் இந்நாட்டில்…
    மாறுமோ இந்நிலை? மாறத்தான் வேண்டும் வறுமை நிலை!

     

     

    Share
  • எங்கே போச்சு அந்தப் பலப்பம்?

    -சேசாத்ரி பாஸ்கர்

    எல்லோரும் பார்த்ததுதான்
    எல்லோரும் உடைத்ததுதான்
    எல்லோரும் முகர்ந்ததுதான்!                            chalkpieces

    அது தனி உலகம்
    தலைகுனிந்து கருப்புச் சட்டத்தைக்
    காதல் செய்த காலம்!

    வெண்மைப்புரட்சி வியாபித்த நாட்கள்
    தொலைத்துத் தேடுவது பிறப்பு சுகம்
    கிடைத்தது உடைந்தாலும்
    உடையாதது மனம்!

    அது எங்கெங்கும் வியாபித்திருக்கும்
    காலடியில் மேஜையில் ஜேபியில்
    சில நேரம் தூங்கும் சிறுமி கையில்
    கைக் கொள்ளுதல் அழகு!

    தேடிப் பாரும் ஓர் நாள் உம் வீட்டை
    எங்காகிலும் அது கிடக்கும்
    இருப்பின் அதுவே பொக்கிஷம்!

    எங்கே போச்சு அந்தப் பலப்பம்?

     

    Share
  • மகாத்மாவும், கல்வித் தந்தையும்!

      -சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்

    அஹிம்சையை ஆயுதமாய்க் கொண்ட அண்ணலே
    ஆர்வமுடன் உமைஇன்று  நினைவு கூா்வோமே
    இந்திய தேசத்தின் பிதா நீர் இல்லையெனில்
    சுதந்திரக் காற்றை நாங்கள் சுவாசிக்க  இயலுமா?  gandiandkamaraj

    உயரிய வழியில் தான் போராட்டம் பல நடத்தி
    நாட்டின் மகாத்மாவாய் நாளும் பலர் மனதில் நீரே
    கதராடை மகத்துவத்தை அனைவர்க்கும் உணர்த்தி
    கண்கண்ட கடவுளாய்த் தூய மனதோடு நின்றீரே

    பலர் மனதைப் பற்றிய தீண்டாமைப் பேய்தான்
    பகலவனைக் கண்ட பனிபோல் விலகியது உம்மால்
    நற்குணங்களின் நாயகன் நீர் பிறந்த நாளில் தான்
    கல்விக் கண் தந்த காமராஜருமே விட்டுப்  பிரிந்தார்

    தாய்மண்ணின் பெருமை தரணியெல்லாம் சிறக்கத்
    தன்னலமற்ற நன்மகனார் அளித்த கல்வியே சாட்சி
    கஷ்டங்கள் பல தாங்கித் திட்டங்கள் பல அர்ப்பணித்த
    கர்ம வீரர், படிக்காத மேதை அவரையும்  பணிவோமே

    நன்மக்கள் இருவரை இன்று  நினைக்கின்ற கடமையே
    நாட்டு மக்கள் நம் அனைவரின்  தலையாயக் கடமையே
    ஆட்சிகள் பல மாறிடலாம்,  காட்சிகள் பல மாறிடலாம்
    ஆதவன் தம் புகழ் போல  உங்கள் புகழ்  நீடு வாழும்!

     

    Share
  • திருட்டுப் பட்டம்!

    ரமணி 

    சைதாப்பேட்டை டாட்‍ஹண்டர் நகர் ’மாதிரி உயர்நிலைப் பள்ளி’யில் எட்டாவது வகுப்பில் படிக்கும்போது நானும் கைலாசமும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். கடைசியில் ஒருவருக்கொருவர் ’காய் விட்டுக்கொண்டு’ பிரிந்தோம். காலப்போக்கில் ஒருவரை ஒருவர் மறந்தே போனோம். என் வாழ்வில் இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு சோகமான, சுமையான நிகழ்ச்சி நடந்தது. பழைய தோழமையைப் புதுப்பித்துக்கொள்ள அது ஒரு தூண்டுதலாக அமைந்தது.

    நிகழ்ச்சி நடந்த மறுவாரம் ஒரு நாள் மாலை கைலாசத்துடன் தொலைபேசினேன். அவனைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னேன். மிகுந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒலித்த குரலில் என்னை ஒருமையில் ’டா போட்டு’ அழைத்து அந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை சாப்பிட வரச்சொன்னான்.

    ஞாயிற்றுக் கிழமை சென்னை கிழக்கு தாம்பரம் சாலையில் சேலையூர் அருகில் கைலாசம் வீட்டைக் கண்டுபிடித்து அழைப்பு மணியை ஒலித்தேன். ஓடி வந்தான். “ரங்கா, உன்னைப் பார்த்து முப்பது வருஷமாச்சுடா!” என்றான். “இப்ப நீ என் பேச்சு ’பழம்’ தானே?”

    “கொஞ்ச நாளாவே நான் உன்கூட ’பழம்’தான்”, என்றேன். “அதனாலதான் உன் டெலிஃபோன் நம்பர் கண்டுபிடிச்சு அன்னிக்கு உன்னோட பேசினேன். நீ தமிழ்க் கதையுலக வாசகர்களுக்கு நல்லாப் பரிச்சயமான ஒரு எழுத்தாளன் ஆச்சே! நானும் உன் வாசகன். ’இன்றைய தமிழ் எழுத்தாளர்கள்’ புத்தகத்தில உன் சுயவிவரம், தொலைபேசி எண், விலாசம் பார்த்தேன். உன் படைப்புகளைச் சிலாகித்து அந்த புத்தகத்தில ரெண்டு ரெவ்யூ வந்திருந்ததே!”

    “ஆமாம், நீ என்னைத் தொலைபேசில தொடர்புகொண்டப்ப நம்பவே முடியலைடா! இப்ப நேர்ல பாக்கறப்ப, உன் குரல் அப்படியே இருக்கு. உன் உருவம்தான் முழுக்க மாறிடுத்து!”

    “ஆனால் உன் குரல், உருவம் ரெண்டும் ஸ்கூல்ல பார்த்த மாதிரியே இன்னமும் இருப்பது ஆச்சரியம்!” என்றேன்.

    “அப்படியா! அப்பா போனதும் கண்ணாடி போட்டுக்கிட்டேன். கல்லூரி நாள்லேர்ந்து வெச்சிருந்த மீசையை அம்மா போனதும் எடுத்துட்டேன்.”

    “உங்கப்பா அம்மா ரெண்டு பேருமே கதை எழுதுவான்னு நீ என்கிட்ட ஸ்கூல் படிக்கும்போதே சொன்னே இல்ல?”

    “ஞாபகம் வெச்சிருக்கயே! வா, கூடத்து ஷோகேஸ்ல அவங்க படம் இருக்கு, பாரு”, என்று கூட்டிச்சென்று அவன் பெற்றோர் கல்யாண போட்டோவைக் காட்டினான். “அப்பா சின்ன வயசிலயே போய்ட்டதால ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கற மாதிரி இந்த ஒரு படம்தான் கிடைச்சுது.”

    “ஷோகேஸ்ல மற்ற பொருட்கள்லாம் பாரு. இதோ வரேன். விமலா!” என்று விளித்தபடியே விலகி சமையல்கட்டை நோக்கிச் சென்றான்.

    கைலாசத்தின் பெற்றோர் போட்டோவில் அம்மா பக்கம் ஓர் ஊதாநிற ரைட்டர் ஊற்றுப் பேனாவும், அப்பா பக்கம் ஒரு கருப்புநிற பைலட் பேனாவும் லாமினேட் செய்யப்பட்ட போட்டோ சட்டத்துடன் இணைந்திருந்தன. அந்த பேனாக்களைப் பார்த்ததும் என் கண்கள் கலங்கிக் கண்ணீர் துளிர்த்தது.

    “இவள் விமலா, என் இல்லத்தரசி. சீனு எங்களுக்கு ஒரே பிள்ளை. எட்டாவது படிக்கறான். இப்ப கோடை விடுமுறைல திருச்சிக்குப் போயிருக்கான், அவன் சித்தி வீட்டுக்கு.”

    “வாங்கோ!” என்றாள் விமலா. “நீங்க ரெண்டு பேரும் ஸ்கூல காய் விட்டுண்டதுக்கப்பறம் முப்பது வருஷம் கழிச்சு இப்போதான் சந்திக்கறது மஹா ஆச்சரியம்!”

    சிரித்தேன். “என் பிள்ளை மாதுவும் எட்டாவதுதான் படிக்கறான். அவன் தங்கை கமலா நாலாம் கிளாஸ். என் மனைவி பெயர் மாலினி, ஹோம்மேக்கர். கைலாசம், உன்னை மாதிரியே நானும் அரசு வங்கில கிளார்க் வேலை பார்க்கிறேன். வீடு நங்கநல்லூர்ல இருக்கு.”

    நான் வாங்கியிருந்த பழங்கள் பையை விமலாவிடம் தந்தேன். “கைலாசம், உனக்கு ஒரு சின்ன கிஃப்ட்” என்று சொல்லி அவனிடம் ஒரு சின்ன பார்சலைத் தந்தேன்.

    உடனே பிரித்துப் பார்த்து வியந்தான். “எதுக்குடா எனக்கு விலை உயர்ந்த பார்க்கர் பேனா?”

    “நன்கு அறியப்பட்ட எழுத்தாளனுக்கு ஓர் வாசக நண்பனின் எளிய பரிசு.”

    “தாங்க்யு ரங்கா” என்றான். “வா, மணி பன்னிரண்டாகப் போறது. சாப்பிட்டபடி பேசுவோம்.”

    *** *** ***

    சாப்பாட்டு மேசையில் கைலாசம் நாங்கள் பள்ளியில் காய் விட்டுக்கொண்டது பற்றிக் கலகலப்பாக மனைவியிடம் சொன்னான். “எட்டாம் வகுப்பு முழுக்க நாங்க ரொம்ப நெருங்கிய நண்பர்கள் விமலா! அந்த வகுப்பு முழுவருடத் தேர்வில் இவன் என்னைவிடக் கணக்கிலும் ஆங்கிலத்திலும் அதிக மார்க். ஆனால் ரெண்டு பேரும் ஒரே டோட்டல் மார்க்….”

    “அறுநூறுக்கு நானூத்தி எண்பது” என்றேன். “உனக்கு ஞாபகம் இருக்கா? ஆனால் மற்ற தேர்வுகள்ல நீ என்னைவிட ஒவ்வொரு பாடத்லயும் அதிக மார்க். அதனால கடைசிப் பரீட்சைக்கு நான் விழுந்து விழுந்து படிச்சேன்.”

    “ஒன்பதாம் வகுப்பு ஆரம்பிச்சு மூணு மாசத்தில இவன் திடீர்னு ஒரு நாள் ’கைலாசம், இந்த க்ஷணத்லேர்ந்து நான் உன் பேச்சு காய். என்னோட பேச முயற்சி பண்ணாதே, சொல்லிட்டேன்’, அப்படீன்னான். ஏண்டான்னு கேட்டதுக்கு பதில் சொல்லாமப் போயிட்டான். அதுக்கப்புறம் நாங்க கடைசிவரை பேசிக்கவே இல்லை!”

    “ஆனால் மத்த பசங்க ஒரு பத்துநாள் நம்ம ரெண்டு பேரையும் சேர்த்துவைக்கப் படாத பாடு பட்டாங்க, இல்லயா?” என்றேன்.

    “ஆமாமாம். நாங்க பேசிக்காட்ட கூட முன்ன இருந்த மாதிரி ரெண்டு பேரும் பக்கத்தில பக்கத்திலதான் உக்காரணும்னு கிளாஸ் வாத்தியார் சொல்லிட்டார். அது மஹா அவஸ்தையா இருந்தது. பசங்க எங்க ரெண்டு பேர் செருப்பையும் ஒளிச்சு வெச்சுத் தேட வெச்சாங்க…”

    “ஒரு நாள் ஒரு செருப்பை மட்டும் ரெண்டுபேர்க்கும் மாத்தி வெச்சு அப்படியே போட்டுண்டு கொஞ்ச தூரம் போய்ட்டோம்”, என்றேன். “அப்புறம் கண்டுபிடிச்சு, தூரத்லேர்ந்து கடுப்பாப் பார்த்து ஒருத்தர் மேல ஒருத்தர் மாறின செருப்பை எறிஞ்சு மண்ணை வீசி எறிஞ்சி மௌனமாத் திட்டிக்கிட்டோம்!”

    “டெய்லி சாயங்காலம் கடைசி பீரியட் விளையாட்டு. அப்போ கால்பந்து விளையாடும் போது பசங்க எங்களை ஒருத்தர் மேல ஒருத்தர் விழனும்னு பிடிச்சுத் தள்ளுவாங்க!”

    “ராஜேந்திரன்னு எங்க ரெண்டு பேர்க்கும் ஒரு காமன் ஃப்ரெண்டு இருந்தான்”, என்றேன். “எட்டாம் வகுப்பு பரீட்சை, டெஸ்ட்கள்ல நாங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி முதல் ரெண்டு ரேங்க் வாங்கின போது ராஜேந்திரன் மூணாவது ரேங்க் வாங்கினான். அவன் எங்களைச் சேர்த்துவைக்க ரொம்பவும் முயற்சி பண்ணி முடியாம ஒரு நாள் எங்களுக்கு எதிர்லயே அழுதுட்டான். அப்பவும் நாங்க சேரக்கூடாதுங்கற திமிர்ல இருந்தோம்!”

    “ஏண்டா ரங்கா திடீர்னு என் பேச்சு காய் விட்டே?”

    “என்னத்தச் சொல்லறது? இப்ப நினைச்சுப் பார்த்தா வேடிக்கையாவும் வேதனையாவும் இருக்கு”, என்றேன். “ஒன்பதாம் வகுப்பு முதல் மூணு மாசத்ல நாம மொத்தம் பத்து தேர்வுகள் எழுதியிருப்போமா? அதுல எல்லாத்லயும் நீ முதல் ரேங்க் வாங்கினதை என்னால சகிச்சுக்க முடியலைங்கறது முதல் காரணம். அப்புறம் எல்லா வாத்தியாரும் உன்கிட்ட அன்பா பழகின மாதிரி என்கிட்ட பழகலைங்கறது ரெண்டாவது காரணம். அப்புறம் எட்டாம் வகுப்பு படிச்சப்ப பள்ளி ஆண்டுவிழாவுல கட்டுரை, கவிதை, பேச்சு மூணு போட்டிலயும் நீ முதல் பரிசு வாங்கின இல்லையா? பேச்சுப்போட்டியின் தரத்தை வெச்சுப் பார்த்தா நான்தான் முதல்பரிசு வாங்கியிருக்கணும். ஆனால் நீ எடுத்த எடுப்பிலேயே கலிங்கத்துப் பரணியோட ’எடுமெடு மெடுவென வெடுத்தவோர்’ பாட்ல ஆரம்பிச்சு ஆடியன்ஸ், ஜட்ஜை மயக்கி முதல் பரிசு வாங்கினது எனக்கு மஹா எரிச்சல்!”

    “அப்படியா சேதி! நீ முதல்ல காய் விட்டதும் எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது. அப்புறம் எனக்கும் உன்னமாதிரியே விரோதமும் வெறுப்பும் உண்டாச்சு.”

    கைகள் வாய்பேச்சை நடுநடுவே மீற விமலா சமைத்திருந்த அறுசுவை உணவை ஒருகை பார்த்துப் பாராட்டினேன். சாப்பிட்டு எழுந்ததும் மூவரும் ஹாலில் சோஃபாவில் வசதியாக அமர்ந்துகொண்டு பேச்சைத் தொடர்ந்தோம்.

    “திடீர்னு இவரோட காய்விட்ட மாதிரியே முப்பது வருஷம் கழிச்சு, திடீர்னு பழம்விடத் தோணித்தாக்கும்! அது எப்படி?” என்றாள் விமலா.

    “ஆமாண்டா, நேத்து வரைக்கும் ரெண்டு பேரும் ஆள் அட்ரஸ் தெரியாம இருந்திட்டு எப்படிடா திடீர்னு என்கூட நம்ம பழைய நட்பைப் புதுசு பண்ணிக்கணும்னு உனக்குத் தோணித்து? யு ஆர் கிரேட் ரங்கா!”

    “அதை நான் உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியலைடா”, என்றேன். “ஆனால் சொல்லித்தான் ஆகணும்; அப்பதான் என் மனசு ஆறும்.”

    “என்னடா புதிர் போடறே? விஷயத்தைச் சொல்லேன், எருமை மாடு!”

    “சொல்றேண்டா கழுதை!”

    அந்த எருமை மாடும் கழுதையும் எங்கள் நட்பு பழையபடி ராசியாகி விட்டது என்று காட்டியது. ஆனாலும் எனக்குள் இருந்த குற்ற உணர்ச்சி குறையவில்லை.

    “பதினஞ்சு நாள் முன்ன எம்பிள்ளை மாது அவன் பர்த்டேக்கு நான் வாங்கித்தந்த காஸ்ட்லி வில்சன் பேனாவத் தொலச்சிட்டான். எனக்கு வந்த கோவத்துல அவனை அடி பின்னிட்டேன்! அப்புறம் மறுநாள் அவன் பேனா கெடச்சதும் ரொம்ப ஃபீல் பண்ணினேன். மாதுவைப் பிடிக்காத இவன் கிளாஸ் பையன் ஒருத்தன் இவன் புதுப் பேனாவை எடுத்து இவன் குளோஸ் ஃப்ரெண்ட், பக்கத்து சீட் ராகவன் ஸ்கூல் பையில போட்டானாம். அதை இன்னொரு பையன் மறைஞ்சு இருந்து பார்த்து மாதுட்ட சொன்னானாம். இவன் பொய்க்கோவத்தோட ’ஏண்டா என் புதுப் பேனாவைத் திருடினே?’ன்னு ராகவன்ட்ட கேட்டப்ப அவன், ’சத்தியமா நான் திருடலைடா! நமக்குள்ள சண்டை மூட்டிவிட யாரோ என் பைல போட்டிருக்கணும்டா, ஐ ஸ்வேர்’ அப்படின்னு சொல்ல, இவன் உண்மையைச் சொல்லி ராகவனைக் கட்டிண்டு ’நமக்குள்ள இருக்கற நட்பை யாரும் குலைக்க முடியாதுடா!’ அப்படீன்னு கிளாஸ்ல எல்லோருக்கும் கேக்கற மாதிரி உரக்கச் சொன்னானாம்…”

    கைலாசம் என்னை மேலே பேச விடவில்லை.

    “ரங்கா, இதே மாதிரி நான் ஒன்பதாவது படிச்சபோது ஒரு நிகழ்ச்சி நடந்ததுடா! நாம ரெண்டு பேரும் அப்ப ஒருத்தரோட ஒருத்தர் பேசாம இருந்தோம். உன் பையன் பேனாவைத் தொலைச்சான். ஆனால் என் பையில யாரோ ரெண்டு பேனாவைப் போட்ட கதையை உனக்கு இப்ப விளக்கிச் சொல்லறேன் கேளு”, என்று தொடர்ந்தான்…

    *** *** ***

    கைலாசம் சொன்னது:

    அன்று மாலை ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்தேன். காலையில் அம்மா கொடுத்து அனுப்பிய சாக்லெட் இரண்டையும் சாப்பிட மறந்தது ஞாபகம் வந்தது. உடனே அவசரமாக என் ஸ்கூல் பையைத் தலைகீழாகக் கவிழ்த்துத் தரையில் கொட்டித் தேடினேன். அன்று விடுமுறையில் இருந்த என் தந்தை அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா சமையல் கட்டில் எனக்காகப் பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்தாள்.

    “ஏண்டா உன் பையிலேர்ந்து ரெண்டு பேனா விழறதே!” என்று என் தந்தை சொன்னபோதுதான் கவனித்து எடுத்துப் பார்த்தேன். ஊதா நிறத்தில் ஒரு ரைட்டர் பேனாவும், கறுப்பு நிறத்தில் ஒரு பைலட் பேனாவுமாக இரண்டு புதிய ஊற்றுப் பேனாக்கள்.

    “உன்னோடது மெரூண்கலர் ரைட்டர் பேனா தானே? அதுவும் போன வருஷம் வாங்கினது. ஏது இந்த ரெண்டு பேனா?” என்றார் என் தந்தை.

    “தெரியலைப்பா!” என்று நான் சொன்னதை அவர் நம்பவில்லை.

    “யாரோட பேனாவோ? ரெண்டும் எப்படீடா உனக்குத் தெரியாம உன் பைக்குள்ள வந்தது?” தந்தையின் குரலில் சூடு ஏறியது.

    “நெஜமா எனக்குத் தெரியலைப்பா!”

    “பொய் சொல்லாதே! திருடினயா? சாயங்காலம் கடைசி பீரியட்ல பசங்க வெளையாடப் போனப்ப கிளாஸ்ல டெஸ்க் மேல இருந்த இந்தப் பேனா உன் கண்ணுல பட்டது. ஏதோ ஓர் ஆசைல நீ சத்தம் போடாம எடுத்துப் பையில போட்டுண்டு வந்துட்டே, அப்படித்தானே?”

    “ஐயோ அதெல்லாம் இல்லைப்பா! நான் திருடலை!”

    “அப்புறம் எப்படிடா பேனா ரெண்டும் உன் பைக்கு வந்தது?”

    “அதுதான் எனக்குத் தெரியலைப்பா!”

    என் அம்மா கையில் பால் டம்ளர்-டபராவுடன் வந்தவள், “கைலாசம், உண்மையைச் சொன்னா அப்பா புரிஞ்சுப்பார். அப்பாக்குக் கோவம் வந்தா உன்னால தாங்க முடியாது!”

    “என்னம்மா நீயும் இப்படிக் கேக்கறே? நான் திருடலைம்மா”, என்றேன். “பேனா எப்படி என் பைக்குள்ள வந்ததுன்னு எனக்குத் தெரியலையே அம்மா!”

    பொங்கிவரும் பாலாக என் தந்தைக்குக் கோபம் தலைக்கேறி அவர் கண்களில் வழிந்தது. பளார் என்று என் கன்னத்தில் அவர் அறைந்தபோது எனக்குத் தலை சுற்றியது.

    “திருடவும் செஞ்சிட்டுப் பொய் வேற சொல்லறயாடா, ராஸ்கல்!” என் முதுகில் அடிகள் சரமாரியாக விழ நான் தடுமாறிச் சாய்ந்தேன். ஆனாலும் நான் அழவில்லை.

    “கைலாசம், பொய் பேசினா ஸ்வாமி கண்ணக் குத்திடும்னு உனக்குச் சொல்லியிருக்கேன், இல்லையா?” என்றாள் அம்மா. “எப்படி பேனாவைத் திருடினதா அப்பா உன்னை அடிக்கறாரோ அப்படித்தானே பேனாவைத் தொலச்சதுக்கு அந்த ரெண்டு பையன்களும் அவா அப்பாட்ட அடி வாங்குவா!”

    அடிகள் போதும் என்று நினைத்தாரோ என்னவோ, அப்பா என்னைத் தரதரவென்று இழுத்துக் கொண்டுபோய் சமையல் கட்டில் இருந்த ஸ்வாமி அலமாரியின் முன் தள்ளினார். “போடா, போய் ஸ்வாமி முன்னால நின்னுண்டு நீ தப்புப் பண்ணலைன்னு சொல்லு.”

    “கைலாசம், என்னால இந்த அவமானத்தைத் தாங்க முடியலைடா. நீயா இப்படி!”, என்று அழுத அம்மா, என்று தன் புடவைத் தலைப்பை எரிந்துகொண்டிருந்த ஸ்டவ் அடுப்பின் ஜுவாலை அருகில் வைத்துக்கொண்டு, “இதுக்கு உயிரை விட்டுடலாம்”, என்றாள்.

    “பார்றா, அம்மா பத்திக்கப் போறா. உண்மையைச் சொல்லுடா!” என்று தந்தை இரைந்தார்.

    “ஐயோ கடவுளே! நான் உண்மையைத் தானே சொல்றேன்”, என்று நான் கண்ணீருடன் சத்தம் போட்டுக் கதறினேன். “ரெண்டு பேனாவும் எப்படி என் பைக்குள்ள வந்ததுன்னு எனக்குத் தெரியாது. அப்படி நான் திருடிட்டுப் பொய் சொல்றதா நெனைச்சா ஸ்வாமி என் கண்ணைக் குத்தட்டும், ஏத்துக்கறேன்.”

    முதன்முதலாக அவர்களுக்கு என் மேல், நான் சொல்வதில், நம்பிக்கை வந்தது. கோபத்துடன் முட்டவந்த மாடு மனிதன் கீழே விழுந்ததும் விலகிச் சொல்வதுபோல் அப்பாவின் கோபம் தணிந்து அவர் அப்பால் சென்றார். அம்மா என்னை அணைத்துக் கொண்டாள், அப்பாவின் விரல்கள் பதிந்த என் கன்னத்தை வருடியபடி.

    “ரெண்டு பேனாவும் எப்படி என் பைல வந்ததுன்னு புதிரா இருக்கும்மா!” என்று கேவினேன். “எனக்கு ஒண்ணுமே புரியலை. நாளைக்கு பேனாவைக் கிளாஸ்ல காட்டி யாரோடதுன்னு கேட்டு திருப்பிக் கொடுத்துடறேன்.”

    “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்”, என்றார் அப்பா. “அப்படிப் பண்ணினா நீதான் திருடினேன்னு நிரூபணம் ஆய்டும். கொண்டா அந்த ரெண்டு பேனாவையும்” என்று கீழே இருந்தவற்றைப் பறித்து வைத்துக்கொண்டார்.

    *** *** ***

    “அதுக்கப்புறம் அம்மா அந்த ஊதா நிற ரைட்டர் பேனாவையும் அப்பா கறுப்பு நிற பைலட் பேனாவையும் கதை எழுதப் பயன்படுத்தினாங்க”, என்றான் கைலாசம், மோட்டுவளை இல்லாத வீட்டுக் கூரையைப் பார்த்தவாறே. “அந்த ரெண்டு பேனாவும்தான் அவா புகைப்படத்தோட இணைச்சு ஷோகேஸ்ல வெச்சிருக்கேன், பார்த்தே இல்லயா?”

    “இன்னிவரைக்கும் ரங்கா, சத்தியமா அந்தப் பேனா ரெண்டும் எப்படி என் ஸ்கூல் பைக்குள்ள வந்ததுதுன்னு எனக்குத் தெரியாது”, என்ற கைலாசம், “யாராவது அதைப் பைக்குள்ள போட்டங்களான்னும் தெரியாது”, என்றபடி என்பக்கம் திரும்பினான்.

    என் கண்களில் இருந்து மாலையாகக் கண்ணீர் பெருகுவது கண்டு திடுக்கிட்டான். “நீ ஏண்டா அழறே?” என்றான்.

    பத்திரிகை படித்தவாறே கேட்டுக்கொண்டிருந்த விமலாவும் என்னைப் பார்த்தாள்.

    “ஒரு எழுத்தாளன் என்கிற முறையில இந்த சோக நிகழ்ச்சியை கிராஃபிக்கா விவரிச்சேன். நீ ஏன் அழறே?”

    “உன்னை உங்கப்பா அடிச்சதெல்லாம் எனக்குத் தெரியும் கைலாசம்! நீ விவரமா அவன்ட்ட சொன்னதை ராஜேந்திரன் என்கிட்ட சொன்னான்.”

    “அதுக்கு இப்ப என்ன கண்ணீர்! எனக்கே அழுகை வரல!” என்றான் கைலாசம்.

    “கைலாசம், உன்கிட்ட ஒரு உண்மையைச் சொல்லத்தான் நான் இன்னைக்கு இங்க வந்தேன்”, என்றேன். “இத்தனை வருஷமா என் மனசில புகையேறிக் கிடந்த உண்மை. பேனாவைப் பறிகொடுத்த என் பிள்ளையை அன்னிக்கு அடிச்சு மறுநாள் வருத்தப்பட்டேன் இல்லையா? அன்னிக்குதான் எனக்கு உன்னைக் கண்டுபிடிச்சுப் பேசி என் மனசில இருக்கற உண்மையைச் சொல்லணும்னு தோணிச்சு.”

    “என்னடா புதிர் போடறே? விஷயத்தைச் சொல்லேன், எருமை மாடு!”

    “சொல்றேன் கைலாசம். அதுக்கப்பறமும் நான் உன் நண்பனா இருக்க எனக்கு அருகதை உண்டான்னு நீ தீர்மானிச்சுக்க” என்றேன்.

    “சொல்லித் தொலையேன்!” என்றான் கைலாசம் பொறுமை இழந்து.

    “அன்னைக்கு அந்த ரெண்டு பேனாவையும் உன் ஸ்கூல் பையில் போட்டது நான்தாண்டா கைலாசம்!”

    *** *** ***

    Share