–மெய்யன் நடராஜ்

நாளை தமிழும் தமிழரும் இங்கோங்கும்
வேளை அதற்காக இன்றெங்கள் – தோளை
நிமிர்த்தித் தொலைதூர நோக்கோடு செய்வோம்
அமிர்த  மொழிக்கு அரண்.

பழமை மறவாப் புதுமை படைத்து
அழகும் பொலிவும் அமைய – வழங்கும்
புலமைத் தமிழைப்  புவனம் முழுதும்
உலவ விடுவோம் உவந்து.

தமிழராய் வாழும் தரம்மிகுந்த வாழ்வை
அமிலம் தெளித்தழிப்போர் முன்னால் – நிமிர்ந்தே
எதிர்நின்று எம்தமிழை ஏற்றி  விளைந்த
கதிராகச் செய்வோம்  தெளிந்து.

மூத்த மொழியாய் முகிழ்த்த மொழியென்றே
பார்த்து அறிந்து பழகிட – ஈர்த்தெடுக்கும்
எம்மொழி இன்னல் எதிர்கொண்டு நிற்பினும்
செம்மொழி யானதே சீர்.

ஓசோன் துளைவழியே ஓர்நாள் உலகத்தில்
வீசும் வழியற்றுப் போனாலும் – பேசும்
மொழியாய்த்  தமிழ்வாழ முன்னெடுத்துச் செல்லும்
வழியமைத்தால் வாழும் தமிழ்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *