இருளின் வெளிச்சம்
-பாஸ்கர் சேஷாத்ரி
அது எங்கள் விடி வெள்ளி
இருளைத் துரத்திய
பகலில் அதன் உயிர் இப்பவோ அப்பவோ…
இருள்சூழ அதன் ஆயுசு கூடும்
பார்த்துக்கொண்டே இருப்பின்
புதிராகும் வாழ்க்கை.
கண் கூசும் – கவலையில்லை
நீர் சுரக்கும் – நன்றுதான்!
இருட்டிலும் எல்லார் முகத்தில் ஆனந்தம்
கூடி இருந்தோம் விலகாமல்
ஒளி கூட்டி ஒளி குறைத்து
விளையாடும் ஆனந்தம்
இன்று வெளிச்சத்தில் இல்லை!
அதன் உடல்தொட்டுச் சூடேற்றும் லாவகம்
யாருக்கு வரும் இன்று?
’புக் புக்’ என உயிர்விடும் சோகம்
மண்ணெண்ணெய் வாசத்தில் தொலைத்துப்போம்!
இப்போதும் உள்ளது வீட்டில் ஓர் மூலையில்
எடுத்துத் தேய்த்தால் வாழ்வில் வரும் ஜீபூம்பா
’என் ராந்தல் விளக்கு.’