படியில் குணத்துப் பரத நம்பி!

3

ஷைலஜா

aramகம்பகாவியத்தில் இராவணவதைப்படலம் முடிந்து சீதையுடன் இராமன் அயோத்திக்குத்திரும்பும் காட்சி!

இலங்கைமாநகரினின்றும் புஷ்பகவிமானத்தில் பரிவாரங்களுடன் புறப்படும் இராமன் சீதைக்கு ஒவ்வொருஇடமாக காட்டிக்கொண்டுவருகிறான்.வருகிறான்.

கோதாவரி நதி வரும்போது அதனருகில் உயர்ந்தகுன்றினைக்காண்பித்து,’நாம் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்த இடம் ‘என்கிறான்.

பரத்வாஜமுனிவர் இராமரை எதிர்கொண்டு தன் இருப்பிடத்திற்கு அனைவரும் வந்து விருந்துண்ணும்படி அன்புடன் கேட்க இராமனால் தட்டமுடியவில்லை..ஆனால் அயோத்தியில் தம்பி பரதன் தன் வரவுக்குக்காத்திருப்பான் என நினைக்கிறான்.குறித்த நேரத்தில் தான் செல்லாவிட்டால் பரதன் தீமூட்டி அதில் விழுந்துவிடுவதாக சொல்லி இருந்தது இராமனுக்கு தவிப்பாக இருக்கிறது.பரதனுக்கு சேதி அனுப்பவேண்டும்.

ஆகவே அனுமனை அழைத்து,தனதுமோதிரத்தையும் கொடுத்து தான் அயோத்திக்கு திரும்பிவந்துகொண்டிருக்கும் தகவல் சொல்லி அனுப்புகிறானாம் இராமன்.

ஆகாயமார்க்கத்தில் அனுமன் வாயுவேகத்தையும்விடவும் தனது நாயகன் இரமானின் அம்பின் வேகத்தைவிடவும் தனது வேகத்திற்கே ஈடாகாமல் சிந்தைபின்செல தான்முந்திச்செல்கிறான்.

அங்கோ பரதன் இராமனின் வரவுகாணாது வருந்தி தம்பிசத்ருகனனை தனக்காக தீ மூட்ட சொல்கிறான்.
சத்ருக்னன் திடுக்கிடுகிறான். செய்வதறியாது மனம் சோர்வுறுகிறான்.

தனக்கு நேர்ந்துள்ள நிலைமையின் விரக்தியில் இளையவன் புலம்புகிறான்.

விவரம் அறிந்து கோசலை ஓடிவருகிறாள்.பரதன் செயல்கண்டு பதறுகிறாள்

.” ‘எண்ணில் கோடி இராமர்களென்னினும் அண்ணல் நின்னருளுக்கு அருகாவரோ?’ என்கிறாள்.

இதே வார்த்தையை முன்பு குகன் சொன்னான்.

ஆயிரம் இராமர் நின்கேழ்
ஆவரோ தெரியின் அம்மா

பரதனைப்பற்றி இராமன் கூறியதும் குகன் இப்படிவியந்தானாம்!

இங்கு கோசலைதன் மகனை காட்டுக்கு அனுப்பியகைகேயி மகனிடம் அவள்கொண்ட கனிவுதான் என்னே! அதனால் கௌசல்யா சுப்ரஜா ராமா என்று சுப்ரபாதம் சொல்கிறோம்!

பரதன் மட்டும் லேசுப்பட்டவனா? ’தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத் தீவினை என நீத்தவன்” அல்லவா?மணிமுடிதவிர்த்து சடைமுடி தரித்துக்காடு சென்ற காகுத்தனைத்தேடி தானும் அதே கோலத்தில் சென்று தன் நினைப்பு நிறைவேறாத நிலையில் வேறுவழியின்றி தமையனின் திருவடிகளைப்பெற்றுவந்து அவற்றை அரியணையில் அமர்த்தி அவன் சார்பில் ஆட்சிபுரிந்தவன். இராமனுக்கு அடிமை என்னும் இயல்பையே விரும்புபவன்.

பெரியாழ்வார் பரதனைப்பற்றி இப்படி அருள்கிறார்.

முடி ஒன்றி மூவுலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருள் என்று அவன்பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று
அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற
அயோத்தியர் கோமானைப் பாடிப் பற

படியில்குணத்துப்பரத நம்பி என்னும் வார்த்தைக்கு ஆழ்ந்த பொருள் உள்ளது. படி..ஒப்பு. ஒப்பில்லாத உயர்ந்த குணங்களை உடையவன் பரதன் என்பது பொருள்

குணங்களால் நிறைந்தவன் என்று தோன்றவும் பரதன் நம்பி என்கிறார்.

பங்கமில்குணத்துப்பரதனாகக் காட்டுவான் கவிச்சகரவர்த்தி.

பங்கம் இல் குணத்து எம்பி பரதனே
துங்க மாமுடி சூடுகின்றான்.

என்பது இராமனின் கூற்று.

ஆழ்வார்கள் அடியொற்றிச்செல்லும்கம்பனுக்கு பரதன் நம்பி என்னும் பெரியாழ்வாரின் பெருமைமிகு சொல்லாட்சி நெஞ்சிலேயேஉழன்று கொண்டிருக்கவேண்டும் அதனால் பரதன் தவவேடம் கண்டு திகைத்த குகனின் மனநிலையைக்கண்டு கல்லும்கனியப்பாடுகிறான் கம்பன்.

நம்பியும் என் நாயகனை
ஒக்கின்றான்; அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான்;
தவம் வேடம் தலைநின்றான்;
துன்பம் ஒரு முடிவு இல்லை;
திசை நோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின்பிறந்தார்
இழைப்பரோ பிழைப்பு?‘‘ என்றான்

நம்பியும் என் நாயகனை என்னும் வரியில் பெரியாழ்வாரின் பரதன் நம்பி எனும் வார்த்தையின் பாதிப்பினைக்காணலாம்.

இப்படிப்பட்ட பரதன் தீயில் விழத்துணிந்துவிட்டான்.சொன்னபடி இராமன் வரவில்லை என தான் எடுத்த முடிவுக்குத்துணிந்துவிடுகிறான்.

 தீவலம் வந்து பரதன் அதில் விழ இருக்கும் அக்கணம்
அனுமன் வந்துவிடுகிறான்

குன்றுபோல் நெடுமாருதி கூடினான்

என்கிறான் கம்பன்.,

வந்தவன் தீயை முதலில் அணைக்கிறான். அக்கினிசாட்யாகவும் இதை நாம் எடுத்துக்கொள்ளலாம்.ஆம் ’அக்னிசாட்சியாக ராமன் வந்துகொண்டிருக்கிறான் என்னும் சேதி சொல்ல நான் வந்திருக்கிறேன் என்னை நீ நம்பலாம்!’என்னும் அனுமனின் மனோவாக்காக இருக்கலாம்! பரதனை நெருப்பு பற்றுமுன்பாக மாருதி பற்றுகிறான்.

காற்றின் மகனை தீஎன்ன செய்யும்?ஏற்கனவே அனுமன் இலங்கைக்கு தன் வாலினால் தீவைக்கும்போது சீதை,’ தீயால் அனுமனுக்கு ஏதும் தீமைவரக்கூடாது ’என வேண்டிக்கொண்டிருக்கிறாள்!
மாதாவின் வாக்கு மகனுக்குக்காப்பு!

கையினாலெரியைக்கரியாக்கினான் என்று அனுமன் வலிய பரந்த தன் கையினால் அக்கினியைப்பிசைந்து அவித்துக்கரியாக்கினதாக கம்பன் வர்ணிக்கும்போது கண்முன் காட்சியாய் விரிகிறது அல்லவா! .

இராமன் அளித்தமோதிரத்தை பரதனிடம் கொடுக்கிறான் வால்மீகியில் இப்படி ஒருகாட்சி இல்லை என்கிறார்கள்,. (அன்று அண்ணல், சீதைக்கு அளித்த கணையாழியை இன்று பரதனுக்கு அளிக்கச்செய்ய கம்பனால்முடிகிறது!)

மோதிரம் வாங்கித்தன் முகத்தின் மேலணைத்துக்கொள்கிறான் பரதன்.
அவன்மன நிலையை கம்பன் தமிழில் காணலாம், சுவைத்து மகிழலாம்.

அழும், நகும்; அனுமனை – ஆழிக் கைகளால்
தொழும், எழும்; துள்ளும் – வெங் களி துளக்கலால்

விழும், அழிந்து ஏங்கும் – வீங்கும், வேர்க்கும்; அக்
குழு வொடும் குனிக்கும் – தன் தடக்கை கொட்டும் ஆல்
வேதியர் தமைத் தொழும் – வேந்தரைத் தொழும்;
தாதியர் தமைத் தொழும் – தன்னைத் தான் தொழும்;

ஏதும் ஒன்று உணர்குறாது – இருக்கும், நிற்கும் ஆல்;

காதல் என்று அதுவும் ஓர் – கள்ளில் தோற்றிற்றே!

images (1)

அழும் நகும் என்கிறவார்த்தைகள் குழந்தைத்தனத்தை சொல்வது. கள்ளம்கபடம் இல்லா குழந்தைமனம்தான் அப்படியெல்லாம் செய்யும்

இங்கேயும் கம்பன் ஆழ்வார் பெருமானின் இந்தப்பாடலைத்தான்நினைக்கவைக்கிறார்!

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
கண்ணநீர் கைகளால் இறைக்கும்*
சங்கு சக்கரங்கள் என்று கைகூப்பும்
தாமரைக்கண் என்றே தளரும்*
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு? என்னும்
இருநிலம் கைதுழாவிருக்கும்*

செங்கயல் பாய்நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறத்து என் செய்கின்றாயே?

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “படியில் குணத்துப் பரத நம்பி!

 1. அருமையான பதிவு ஷைலஜா அவர்களே! பரதனின் பாத்திரத்தை மிக அழகாக விவரித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்

 2. பரதாழ்வார் பாதம் போற்றி.
  அன்புமிக அனுமன் அடி போற்றி..

  அடியிணை ஈந்தான் அடி   போற்றி.
  இந்த அமுதம்   படைத்தளித்த ஷைலஜாவுக்கு

  என் வந்தனங்கள்.

 3. தங்கள் இருவருடைய மேலான கருத்துக்கும் பாராட்டுக்கும்மிக்க நன்றி   வல்லிமா மற்றும் மீனாட்சி பாலகணேஷ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *