சுரேஜமீ

வாய்மை

peak1

ஒரு துறவி தன்னுடைய இறை முடித்துக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அப்போது தெருவில் வந்து கொண்டிருந்த ஒருவனைக் காவலர்கள் துரத்தி வர, அவன் நேராக ஆசிரமத்தில் நுழைந்து, துறவியிடம் அடைக்கலம் கேட்டான். அவரும் ஒரு மறைவிடத்தைக் காட்டி, அங்கு சென்று ஒளிந்து கொள் என்றார். அவனைத் துரத்தி வந்த காவலர்களும், ஆசிரமத்தில் நுழைந்து, இப்பக்கம் ஒரு திருடன் வந்ததாகவும், அவனைப் பார்த்தீர்களா என்றும் வினவ,

துறவி சைகையால் அவ்விடத்தைக் காட்டினார். காவலர்களோ துறவி நிஷ்டையில் எதோ கூறுகிறார் என எண்ணி அங்கிருந்து சென்றுவிட்டனர்.

சிறிது நேரத்தில் வெளியில் வந்த திருடன், துறவியிடம் அடைக்கலம் என்று வந்தவரைக் காப்பாற்றுவதுதானே ஒரு துறவியின் தர்மம்! தாங்கள் ஏன் உண்மையை உரைத்தீர்கள்? ஒருவேளை நான் பிடிபட்டிருந்தால் என்னாவது? என்று கேட்க,

அதற்குத் துறவி மிகவும் அன்பாக அவனிடம்,

தம்பி, உண்மை நிச்சயம் நம்மைக் காப்பாற்றும் என்பதால் தான் சொன்னேன்; ஒரு வேளை பொய் சொல்லி இருந்தால், நம் இருவருக்கும் துன்பமே எஞ்சியிருக்கும்! ஆதலால், உண்மையைச் சொன்னேன் என்றார்!

உண்மையின் வலிமை எத்தகையது என்பதை இக்கதை நமக்கு உணர்த்துவதோடு மட்டுமல்ல; ஆபத்தான நிலையிலும், உண்மை உங்களைக் காப்பாற்றும் என்ற நீதியும் புலப்படுகிறது.

உங்களுடைய சிந்தனை; ஆற்றல், தகுதி, இன்ன பிற குணாதிசயங்கள் என அனைத்தையும் உயரிய நிலையிலிருந்து எடுத்துக் காட்டும் தன்மை ‘உண்மைக்கு’ மட்டுமே உண்டு!

நாம் பழக்கத்தில், உண்மை பேசுபவர்களை ‘இவர் என்ன பெரிய சத்தியவானா? எனக் கேட்பதுண்டு. உண்மை பேசவேண்டும் என்ற ஒரே கொள்கைக்காக நாடு, நகரம், ஆட்சி, மக்கள், குடும்பம் என அனைத்தையும் துறந்தவனது வாழ்க்கைதான், “சத்தியவான் சரித்திரமாக” இன்றளவும் போற்றப்படுகிறது.

சத்தியத்திற்குச் சோதனை வரலாம்; ஆனால், அது வேதனையாக இருப்பது போலத் தோன்றினாலும், நிரந்தர வெற்றியின் இருப்பிடமாக இருக்கக் கூடிய பலம் பொருந்தியது வாய்மை!

சற்று யோசித்துப் பாருங்கள்…. குழந்தையாக இருக்கும்போது மகிழ்வுடன் இருந்த நமக்கு, வளர்ந்து வரும்போது, ஒவ்வொரு நிகழ்வும் நம்முள் ஒரு தடயத்தைப் பதிய காரணமாக இருப்பது எது என்று?

ஏதோ ஒரு காரணத்திற்காக முதன் முதலில் நாம் சொன்ன ஒரு சின்னப் பொய்யாக இருக்கும்;

பின்னர் அதுவே, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நமக்குப் பழக்கமாகி, ஒரு சூழலில் இருந்து, தற்காலிக விடுபாட்டிற்காக, நாம் பொய் எனும் மாய வலையில் விழும் நிலைக்குத் தள்ளிவிடும்.

நெறிநூல்களில் தலையாயதான நம் மொழி தந்த திருக்குறள் என்ன சொல்கிறது ‘வாய்மை’ பற்றி?

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.

ஒரு மனிதனது அகத்தின் தூய்மையை உறுதிப்படுத்துவது வாய்மைதான் என்று வள்ளுவர் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். அது மட்டுமா, வாய்மை எனும் விளக்குதான் ஒரு சாதாரண மனிதனைச் சான்றோனாக்குவது என்றால்,

முயன்றுதான் பார்க்கலாமே!

அது என்ன அவ்வளவு கடினமானதா? ஏன் நம்மால் பின்பற்ற முடியாது? இன்று ஒரு நாள் மட்டும் எக்காரணத்தைக் கொண்டும் நான் வாய்மை தவறேன் என்று உறுதி பூண்டுவிட்டால்,

இந்த ஒரு நாள் தரும் மகிழ்ச்சி நம்மை அடுத்த நாளுக்கு எழுச்சியோடு அழைத்துச் செல்லும் என்பதை மறவாதீர்கள்!

ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும்; நீங்கள் உண்மை பேசத் துவங்கிய நாள் முதலாய், எவர்க்கும் அஞ்சத் தேவையில்லை; வாய்மையே ஒரு கவசமாக உங்களுக்குப் பாதுகாப்புத் தரும்.

இன்றைய உலகியல் வாழ்வில், வாய்மையைக் கடைப்பிடிப்பது என்பது முற்றிலும் இயலாத காரியம் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கும், காலத்தின் தேவையை அன்றே கருதி, அதற்கும் வழி சொல்கிறார் வள்ளுவப் பெருந்தகை!

வாய்மை எனப்படுவ(து) யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

உங்களால், எவர்க்கும் தீங்கு இழைக்காமல் பேச முடியும் என்றால், அதுவே, வாய்மைக்கு நிகரானது என்கிறார். இதையே, வேறு வார்தைகளில் குறிப்பிட வேண்டுமானால், தாங்கள் கூறும் ஒரு பொய்யால், மற்றவர்களுக்கு ஒரு நன்மை வருமாயின்,

அதுவும் வாய்மையாக கருதப்படும். இதெல்லாம் ஒரு விதி விலக்கே அன்றி விதியாகக் கொளல் கூடாது.

கவிஞர் புலமைபித்தன் வரிகளில் கூறவேண்டும் என்றால்,

பாதை தவறிய கால்கள் விரும்பிய
ஊர் சென்று சேர்வதில்லை – நல்ல
பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர்
பேர் சொல்லி வாழ்வதில்லை!

ஆக, நாம் வாய்மையைப் பேசவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், ஒருபோதும் நம்மால், அதைக் கடைப் பிடிக்க முடியாது;

இன்றே செய்வோம்; அதை நன்றே செய்வோம் எனும் கூற்றுக்கேற்ப, ஒவ்வொரு வாரமும், நம்மைச் செதுக்கும் உயரிய பண்புகளின் விதைகளை மட்டுமே பார்க்கிறோம்; அவை விருட்சங்கள் ஆவது உங்களின் கைகளில்தான் இருக்கிறது!

வளரும் நாட்கள் ஒவ்வொன்றும் வரமாக,

சிகரம் தொட்டுவிடும் தூரம்தான்!

தொடர்வோம் பயணத்தை!!

அன்புடன்
சுரேஜமீ

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.