– புலவர் இரா. இராமமூர்த்தி.

மனிதப் பண்புகளுக்கும் மற்ற அஃறிணை உயிர்களின் பண்புகளுக்கும் இடையே மிகுந்த வேறுபாடு உண்டு! மரம் செடி கொடி முதலான பொருள்கள் மனிதர்களின் அறிவால் தமக்கேற்ற வகையில் பயன்படுத்தப் பெறுகின்றன! நாம் நமக்காகப் பயன்களை உருவாக்கிக் கொள்ளும் வகையில் அவை விளங்குவதால் அவை நமக்குப் பயன்களை அளிக்கின்றன என்று ஓர் உபசார வழக்காகப் போற்றுகிறோம்! பசு நமக்குப் பால் தருகிறது என்பது கூட அதனைப் போற்றிப் புகழ்வதாகாது! அது மிக முயன்று தன் கன்றின் வாயைப் பால்மடிக்கெதிரே, இழுத்து அதனைப் பால் பருக வைக்கிறது! அதன் உடம்பெங்கும் இருக்கும் தன் இரத்தம், சதை ஆகியவற்றை இயல்பூக்கத்தால் நாவால் நக்கித் தூய்மை செய்கிறது! இதனையே பசுவின் போற்றத்தக்க குணமாகக் கொண்டு, வைணவ உரையாசிரியர்கள் ”வாத்சல்யம்” என்ற கடவுட்பண்பை அதன்மேல் ஏற்றிப் போற்றுகின்றனர்! எவ்வாறு சிந்தித்தாலும் அஃறிணை உயிர்கள் தாமே எண்ணி ஏனைய உயிர்களை வாழ்விக்கின்றன என்பதை நம்மால் காண முடியாது!

நாம் அவ்வாறு போற்றுவதை அறிந்து கொண்டு, நன்றியுடன் அவை நமக்கு உதவி புரிவதும் இல்லை! அவற்றிடம் இயல்பாக இருக்கும் இயற்கைச் செயல்பாடுகள், அவை நமக்கு உதவி புரிவதற்காகவே அமைந்துள்ளதாக நாம் நம்மறிவால் அறிந்து கொள்கிறோம்! மரம் செடி கொடிகளை நாம் நீரூற்றி வளர்ப்பது நம் தந்நலம் கருதியே ஆகும்! மாடுகளைக் குளிப்பாட்டுவதும், புல், வைக்கோல், பொட்டு, பிண்ணாக்கு, கழுவுநீர் அளித்து வளர்ப்பது மனித குலத்தின் சுயநலச் செயல்களே ஆகும்! மலையிலிருந்து வழியும் அருவி நம்மைக் குளிப்பாட்டாது! நாமே அருகில் சென்று குளித்து மகிழ வேண்டும்! ஆற்றுநீரை நாமே வயலுக்குப் பாய்ச்ச வேண்டும்; எடுத்துக் குடிக்க வேண்டும்; குளிக்க வேண்டும்! இதற்காகவே நாம் ஆறு, ஏரி மற்றும் குளங்களின் கரைகளை உயர்த்தியும், கிணறு தோண்டியும் நமக்குத் தேவையான பயன்களைப் பெறுகிறோம்!

ஆகவே மனிதர்களுக்கு அமைந்த ஆறாம் அறிவு விலங்குகளுக்கு இல்லை என்பதே தொல்காப்பியப் பொருளதிகாரத் துணிபு!! இவ்வகையில் மரம் தானே அறிந்து தெளிந்து இன்னாருக்கு இன்ன வகையில் உதவ வேண்டும் என்ற அறவுணர்வைப் பெற்றுள்ளதாகக் கருத இடமி ல்லை!

மரம் நமக்கு உதவுகிறது என்று அதன்மேல் அறிவை ஏற்றுவதை விட, மரங்கள் நமக்கு உதவும் வகையில் இறைவன் அவற்றையும், நமக்கு அவற்றின் பயனைக் கொள்ளும் அறிவையும் படைத்தார் என்பதே உண்மை! மரம் திருக்குறளில் ஐந்து பாடல்களில் இடம் பெற்றுள்ளது. அவை :

”உரமொருவர்க் குள்ள வெறுக்கை அஃதில்லார்
மரம்மக்க ளாதலே வேறு!” (600)

”சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்!” (1078)

”அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்!” (997)

”பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்!” (216)

”மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்!” (217)”

என்பன! இவற்றுள் முதல் மூன்று பாக்கள், மரம் கரும்பு ஆகியவற்றை மனிதரிடமிருந்து வேறுபடுத்துகின்றன! அடுத்த இரண்டு பாக்கள் மனிதர்களால் மரம் எவ்வாறு பயன்படுத்தப் பெறுகின்றன என்பதை விளக்குகின்றன! இவற்றின் பொருளை இன்னும் விளக்கமாக நாலடியார் பாடுகிறது!

”நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட் புக்க
படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்
குடிகொழுத்தக் கண்ணும் கொடுத்துண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றைப் பனை!” (நாலடியார்)

என்பது அப்பாடல்! பிறருக்கு வழங்கும் வள்ளல்தன்மை வாய்ந்தவன் ஊர் நடுவில் வட்டமாக அமைக்கப் பெற்ற மேடையின் நடுவே பழங்கள் நிறைந்த பெண்பனை அமைந்ததுபோல் பயன் தருவர்; ஆனால் செல்வம் மிகுந்த காலத்திலும் பிறருக்குக் கொடுத்து உண்ணாத மக்கள், இடுகாட்டின் நடுவே பயனின்றி வீணே நிற்கும் ஆண்பனை போன்றவர்கள் ஆவர் என்பது இதன் பொருள்! அடுத்து, மூதுரை பாடிய ஒளவையார்,

”கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் – சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் ; குறிப்பறிய
மாட்டா தவன்நன் மரம்!”

என்ற பாடலில் மரத்துக்கும் மனிதனுக்கும் படிப்பறிவிலும், குறிப்பறிதலிலும் உள்ள வேறுபாட்டை நன்றாக உணர்த்துகிறார்! மேலும் பொன், துடி, குதிரை, நச்சரவு, கடினமான எள்ளுருண்டை, கரும்பு, இளநீர் ஆகியவற்றையும், தீயோர், அச்சமும் அறிவும் அற்ற பெண் ஆகியோரையும் நாம் வன்மையான அணுகு முறையால் மட்டுமே நெருக்கிப் பயனைக் கொள்ள முடியும் என்கிறது ஒரு பழம்பாடல்!

பொன்னை நெருப்பிலிட்டு உருக்கி அடித்தால்தான் நகை உருவாகும்; இளநீரை நாமே பறித்து, வெட்டி நீரைப் பருக வேண்டும்; கரும்பை ஆலையினுள் இட்டுக் கசக்கிப் பிழிந்தால்தான் அதன் இனிய சாற்றினைப் பருகலாகும்; தோலை உரித்துத் துடியாகிய கருவியில் கட்டி அடித்தால்தான் தாளம் தோன்றும்! குதிரையை அடக்கிச் சாட்டையால் அடித்தால்தான் தேரில் பூட்டி ஓட்ட முடியும்; நச்சுப் பாம்பை அடக்கிப் பெட்டிக்குள் அடக்கி வைத்தால்தான் அதனை ஆட்டுவிக்க முடியும்; கீழானவரை வன்முறையால் அடக்கியாண்டால்தான் ஆட்சி சிறக்கும்! இவற்றை அந்தப் பழம்பாடல்,

”துர்ச்சனரைப் பொன்னைத் துடியைத் துரகதத்தை
அச்சமற முன்னிற்கும் ஆயிழையை – நச்சரவைக்
கண்டித்த எள்ளைக் கரும்பை இளநீரைக்
தண்டித்தார்க் கன்றோ சயம்!”

எனக் கூறுகிறது. ஆகவே, அஃறிணைப் பொருள்கள் தாமாகவே எண்ணிச் செயல்படும் திறனற்றவை என்பதும், உயர்திணை மக்களுள் அச்சமும் அறிவும் அற்ற மக்கள் மரம்போன்றவரே என்பதும் இப்போது புலனாகும்!

மரம் இலைநிறைந்த கிளையுடன் விளங்கக் காரணம் அவை சவ்வூடு பரவும் செயலை விரிவாக்கும் காரணத்தால் சூரிய வெளிச்சத்தை விரும்பி எல்லாத்திக்கிலும் இலைகளைப் பரப்புவதற்காகவே என்பதும் …

இலையிடையே போது அரும்பி மலராகி வண்ணமும் மனமும் பெற்றுச் சிரிப்பது, வண்டுகளை ஈர்த்து அவற்றுக்குத் தேனைத் தருவதுபோல், மகரந்தச் சேர்க்கை யால் தம் இனத்தைப் பெருக்கும் முயற்சியில் காய்களை உருவாக்கிக் கொள்வதற்கே என்பதும் …

அந்தக் காய்கள் பசுமைநிறம் மாறிப் பழுப்பதும், சுவையும் மணத்தையும், செந்நிறத்தையும் பெறுவது, அவற்றை உண்ணும் உயிர்களின் மூலம் தம் விதைகளை ஊரெங்கும் பரவச்செய்து இனத்தை விரிவாக்கிக் கொள்வதற்கே என்பதும், இயற்கை அனுபவம் அவற்றுக்குக் கொடுத்த நுட்பமான திறமை என்பதை நாம் சற்றே சிந்தித்தால் புரிந்து கொள்ளலாம்!

ஆதலால் அத்தகைய இயற்கை விதிகளுக்குக் கட்டுப்பட்ட மரங்கள் நமக்கு நிழல் தருவதற்காக இலைகளைப் பரப்பவில்லை; வண்டுகளுக்கு உதவுவதை, நமக்குப் பழம் தருவதோ அவற்றின் அறிவு சார்ந்த அருட்செயல் இல்லை என்பன இப்போது நமக்குத் தெளிவாகி இருக்கும்! இவை அனைத்தையும் பார்த்துப் பார்த்து வள்ளுவர் உணர்ந்து கொண்டமையால்தான் மரத்தினை உவமையாக்கி, அது மக்களைவிடத் தாழ்ந்தது என்று எழுதினார்!

ஆகவே உரம் எனப்படும் அறிவும், உள்ளவெறுக்கையாகிய முயற்சியும் இல்லாத மக்கள் மரத்துக்கு நிகரானவர்கள் என்று வள்ளுவர் இழித்துரைக்கின்றார்! அவர்கள் மக்கள் போலக் கை கால்களுடன் தோன்றுவது மட்டுமே வேறுபாடு என்கிறார் வள்ளுவர்! வள்ளுவத்தை நன்கு படித்து உணர்ந்தவர்கள் மரத்தை, மனிதரைப் போல் அறிவு, ஆற்றல், கருணை உடையதாக எப்போதும் கருத மாட்டார்கள்! ஆகவே,

உரமொருவர்க் குள்ள வெறுக்கை அஃதில்லார்
மரம்மக்க ளாதலே வேறு! (600)

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்! (997)

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்! (1078)

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்! (216)

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்! (217)

என்ற குறட்பாக்களில் மரம் பற்றிய புதுமையான பொருள், யாரோ என்றோ சொன்னது என்றாலும் அதன் உண்மைப் பொருள், சிந்தனைக்கு வலிமை கூட்டுகிறது! இந்தக் குறட்பாக்களில் மனிதனின் தூய மனமும், சிந்தனையும், கூரிய அறிவும், கீழ்மையும், நேரிய பயனும், தேடற்குரிய சிறப்பும் மரத்துடன் ஒப்பிடப்பெற்று ஒற்றுமை வேற்றுமையைப் புலப்படுத்துகின்றன!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *