அன்பு வந்தது என்னை ஆள வந்தது

— கவிஞர் காவிரிமைந்தன்.

சுடரும் சூறாவளியும் (1971) திரைப்படத்திற்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடலிது. கவியரசு கண்ணதாசன் வரிகளுக்குச் செந்தூர இசையமைத்திருப்பவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்! தாயினை இழந்த சேய்களைத் தழுவி நாயகன் பாடும் பாடலிது. நம்பிக்கை ஒளிதனை நாளைய தலைமுறைக்கு நயமாய் எடுத்துரைக்கும் வார்த்தைகள்!

இனியதோர் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலில் எத்தனை முறை கேட்டிருந்தபோதும் இந்தப் பாடல் இன்றும் என்றும் மயக்கம் தரும்! மெல்லிசை என்பது இதயத்தைத் தாலாட்ட வைக்க வல்லது என்பதற்கு இந்தப் பாடலும் சாட்சியாகும்!

அன்பு வந்தது என்னை ஆள வந்தது2அன்பு என்பதுதான் எல்லாவற்றிற்கும் இங்கே ஆதாரமானது என்பதைப் பல்லவியிலேயே செப்பியிருக்கும் கவிஞர், காலம் வெல்லும் வெல்லும் என்று உறுதி கொள்ளலாம் என்று பிஞ்சு நெஞ்சங்களில் நம்பிக்கையை நட்டுவைக்கிறார் பாருங்கள்!

தென்றலில் கலந்து தேன்தமிழ் இனிக்கும் வண்ணத்தைப் பாருங்கள் இப்பாடலில்! இரவின் மடியில் விழுந்துகிடக்கும்போது செவியில் நுழையும் கானங்களின் வரிசையில் பண்பலைகளில் நடக்கும் பாட்டு பவனியில் இந்தப்பாடலும் அவ்வப்போது வந்துபோகும்! சொந்தங்களை இணைக்கும் பாலமாய் தமிழ்த்திரை தந்த பாடல்களில் இதுவும் ஒன்று!!

அன்பு வந்தது என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது
அன்பு வந்தது என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது

நாலு பேர்கள் வாழும் வாழ்வு நாமும் வாழலாம்
தினம் நல்ல ஆடை நகைகளோடு மலர்கள் சூடலாம்
கண்ணிரெண்டில் கலக்கமின்றி அமைதி காணலாம்
காலம் வெல்லும் வெல்லும் என்று
உறுதி கொள்ளலாம் உறவு கொள்ளலாம்
தாயில்லாத பிள்ளைகளை நான் விட மாட்டேன்
நானில்லாத போது தேவன் கைவிட மாட்டான் (அன்பு)

வாழ்ந்தால் எந்நாளும் உமக்கென வாழ்வேன்
வாடா மலர் போலே உங்களைக் காப்பேன்
மன்னர் குலப் பிள்ளைகள் போல் மகுடம் சூட்டுவேன்
நீ மங்கை ஆகும்போது கையில் வளையல் போடுவேன்
வாழ்த்துப் பாடுவேன்
மஞ்சளோடும் மலர்களோடும் வாழ்ந்திட செய்வேன்
அண்ணனோடும் தங்கையோடும் தந்தை வாழுவேன் (அன்பு)

காணொளி: https://www.youtube.com/watch?v=9LjEGEkxhtY

______________________________________________________________

அன்பு வந்தது என்னை ஆள வந்தது1

மேலும் இதே பாடல் இத்திரைப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் – எஸ்.ஜானகி – எல்.ஆர். அஞ்சலி குரல்களிலும் தவழ்ந்துவரும் இனிமையான இப்பாடலை இன்னுமொரு முறை கேளுங்கள்….

அன்பு வந்தது என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது
அன்பு வந்தது என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது

கண்ணிரண்டு கடவுள் தந்தான் தங்கையைக் காண – நல்ல
கையிரண்டில் வலிவு தந்தான் தங்கையைக் காக்க
ஆற்று வெள்ளம் போன பின்பு ஆற்று மணலிலே
வரும் ஊற்று வெள்ளம் போல் இருந்து
உறவுக் கொள்ளுவேன் பரிவு கொள்ளுவேன்
தெய்வம் பார்த்த பிள்ளைபோல
தங்கையைப் பார்ப்பேன்
செல்வம் பார்த்த ஏழைப் போல நிம்மதி காண்பேன் (அன்பு)

மங்கை மீனாட்சி மதுரையில் நின்றாள்
அண்ணன் திருமாலும் அருகினில் நின்றான்
அண்ணன் என்றும் தங்கை என்றும் தெய்வம் வாழ்ந்தது
தெய்வ வாழ்வு இன்று எங்கள் இல்லம் வாழ்வது உள்ளம் வாழ்வது
மாலைத் தோன்றி காவல் காக்கும் சந்திரன் ஒன்று
காலைத் தோன்றி காவல் கொள்ளும் சூரியன் ஒன்று (அன்பு)

காணொளி: https://www.youtube.com/watch?v=0CNNjLI0mQ4

https://www.youtube.com/watch?v=0CNNjLI0mQ4

Leave a Reply

Your email address will not be published.