Author: மேகலா இராமமூர்த்தி

  • குறுந்தொகை நறுந்தேன் – 3

    -மேகலா இராமமூர்த்தி 

    ”ஆ…! தலைவியுடனேயே இணைபிரியாத் துணையாய் நிற்கும் தோழியை மறந்தேனே! அவளை  இரந்துநின்றால் மனமிரங்காமலா போய்விடுவாள்?” என்ற எண்ணம் தலைவனின்  மனத்தில்  தோன்றவும் புதிய நம்பிக்கையொன்று அவனுள் தளிர்விட்டது. 

    தலைவியைச் சந்திக்க அடுத்தநாள் மீண்டும் அருவிச்சாரலுக்கு ஆசையோடு சென்றான் தலைவன். அவ்வமயம் தலைவியும் தோழியும் காட்டாற்றில் புணையோட்டி (தெப்பம்) விளையாடிக்கொண்டிருந்தனர். காட்டாற்றின் கரையோரம் வளர்ந்திருந்த வேங்கைமர ஓரமாய் மறைந்துநின்றபடி அக்காட்சியைக் கண்டுகளித்துக்கொண்டிருந்த தலைவன்,

    ”என்ன இது விந்தை! தளிர்புரை மேனியும் குளிர்விழிகளும் கொண்ட மெல்லியளாகிய தலைவி, தோழி புணையின் தலைப்பகுதியைப் பிடித்தால் தானும் தலைப்பகுதியைப் பிடிக்கின்றாள்; தோழி கடைப்பகுதியைப் பிடித்தால் தானும் கடைப்பகுதியைப் பிடிக்கின்றாள். தோழி புணையைவிட்டுப் புனலோடு போனால் இவளும் அவளோடு சென்றுவிடுவாள் போலிருக்கிறதே!” என வியந்தான்.

    தலைப்புணைக்  கொளினே  தலைப்புணைக்  கொள்ளும்
    கடைப்புணைக்  கொளினே  கடைப்புணைக்  கொள்ளும்
    புணைகை  விட்டுப்  புனலோ  டொழுகின்
    ஆண்டும்  வருகுவள்  போலு  மாண்ட
    மாரிப்  பித்திகத்து  நீர்வார்  கொழுமுகைச்
    செவ்வெரி  நுறழும்  கொழுங்கடை  மழைக்கண்
    துளிதலைத்  தலைஇய  தளிரன்  னோளே(குறுந்: 222.  சிறைக்குடி ஆந்தையார்) 

    ”இருதலையும் ஓருயிரும் கொண்ட பறவையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால், ஈருடலும் ஓருயிருங் கொண்டோராய் இவர்கள் இருவரும் திகழக் காண்கிறேன். என் உள்ளங்கவர் தலைவியின் காதலைப் பெற இத்தோழியே உற்றதொரு பற்றுக்கோடு எனத் தெரிந்து தெளிந்தேன்” என்று தன்னுள் கூறிக்கொண்டான்.

    மறுநாள் தோழியை மட்டும் தனியே சந்திக்கும் வாய்ப்புக்காகக் காத்திருந்தான் தலைவன். தலைவியின்றி தோழிமட்டும் தனித்துவந்த வேளையொன்றில் தான் கையுறையாக (அன்பளிப்பு) கொண்டுவந்த செங்காந்தள் மலர்க்கொத்தை  (clusters of Malabar glory lilies) அவளிடம் நீட்டினான். முன்னமே சிலமுறை தலைவனைக் கண்டவளும், கண்டபோதே (தலைவிமீது காதலுற்ற) அவன் மனத்தை அறிந்துகொண்டவளுமான தோழி, தலைவன் தந்த மலர்க்கொத்தைப் பார்த்துக் ’களுக்’கென்று சிரித்துவிட்டு,

    ”என்ன ஐயா! கொல்லன் தெருவிலேயே ஊசி விற்கிறீர்கள்!” என்று கேட்கவும், அவள் வார்த்தையின் உட்பொருள் உணராத் தலைவன், “என்ன சொல்கிறாய் பெண்ணே! சற்று விளங்கும்படியாகத்தான் சொல்லேன்?” என்றான்.

    ”ஐய! போர்க்களம் குருதியால் செங்களமாகும்படி glory lillyஅவுணர்களைக் களமாடி அழித்த செங்கோல் அம்பையும், செங்கோட்டு யானையையும் உடைய கழலும் தொடியணிந்த செவ்வேள் முருகனின் இக்குன்றம் செங்காந்தள் பூங்கொத்துக்களால் நிறைந்துள்ளதைத் தாங்கள் காணவில்லையோ” என்று குறும்பாய்க் கேட்டுவிட்டு அவன் கையுறையை மறுத்து அவ்விடம் விட்ட கன்றாள்.

    செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த
    செங்கோ லம்பின் செங்கோட்டி யானைக்
    கழல்தொடிச் சேஎய் குன்றம்
    குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.
      (குறுந்: 1 – தீப்புத்தேளார்/திப்புத்தோளார்)

    ”அடடா! இங்கே நோக்குமிடமெல்லாம் நீக்கமறப் பூத்துக்கிடக்கும் செங்காந்தள் மலர்களை ஏதோ கிடைத்தற்கரிய பொருளைப்போல் நான் கையுறையாய்க் கொணர்ந்தது மெய்யாகவே மடமைதான். அதனை இந்தப்பெண் எத்தனை நாசூக்காகச் சொல்லிவிட்டுப் போய்விட்டாள்! இவள் பலே கெட்டிக்காரிதான் என்பதில் ஐயமில்லை” என்று எண்ணிக்கொண்டான் தலைவன்.

    அதன்பின்னர், தலைவியும் தோழியும் வாழும் சிறுகுடியினரின் சேரிக்கு அவன் தினந்தோறும் வருவானாயினன். இவ்வாறு அவன் நாள்தவறாது தலைவியைக் காண வருவதும், அவள் அன்பு கிடைக்காது வறிதே மீள்வதும் தோழியின் மனத்தில் இரக்கத்தைச் சுரக்கச்செய்தது. தலைவியை எப்படியாவது அவனோடு சேர்த்துவைக்கவேண்டும் எனும் எண்ணம் அவளுள் எழுந்தது.

    ஒருநாள் சமயம்பார்த்துத் தலைவியிடம் தோழி மென்மையாக, ”அருமைத் தோழி! நம் சேரிக்கு நிதமும் வந்து நம்மிடம் இன்மொழி கூறுகின்றானே ஓர் இளவல்…அவன், தான் வந்தநோக்கம் நிறைவேறாததால் நொந்த மனத்தோடும் ஒளிகுன்றிய முகத்தோடும் நிற்கக் காண்கிறேன்; துன்பத்தைப் புலப்படுத்தும் அவன் பைதல்நோக்கைச் சற்றேனும் நீ மாற்ற நினையாயோ? இனிய கடுங்கள்ளையுடைய ’அகுதை’யின் (மதுரையில் வாழ்ந்த ஒரு வள்ளல்) பின்னே வெள்ளியகோலோடு நிற்கின்ற அகவன்மகளிர் (குறிசொல்லும் கட்டுவிச்சியர்), அவன் தரும் மடப்பிடிப் பரிசிலைப் பெறுதலையே தம் நோக்கமாகக் கொண்டு நிற்பதைப்போல் நீண்டநேரம் இங்கேயே நிற்கும் தலைவனும் நம்மிடம் வேறெதையோ எதிர்பார்க்கின்றான்” என்று அவன் உளக்குறிப்பைத் தலைவிக்கு உணர்த்தினாள்.

    சேரி  சேர  மெல்ல  வந்துவந்து
    அரிது  வாய்விட் டினிய  கூறி
    வைகல்  தோறும்  நிறம்பெயர்ந்  துறையுமவன்
    பைதல்  நோக்கம்  நினையாய்  தோழி
    இன்கடுங்  கள்ளின்  அகுதை  பின்றை
    வெண்கடைச்  சிறுகோ  லகவன்  மகளிர்
    மடப்பிடிப்  பரிசில்  மானப்
    பிறிதொன்று  குறித்ததவ ன்  நெடும்புற  நிலையே. (குறுந்: 298 – பரணர்)

    [ஈதொப்ப, தலைவனுக்காகத் தோழி பரிந்துபேசும் பாடலொன்று கலித்தொகையிலும் காணக்கிடைக்கின்றது.

    கயமல  ருண்கண்ணாய்  காணா  யொருவன்
    வயமான்
     அடித்தேர்வான்  போலத்  தொடைமாண்ட
    கண்ணியன்
     வில்லன்  வருமென்னை  நோக்குபு
    முன்னத்திற்
     காட்டுதல்  அல்லது  தானுற்ற
    நோயுரைக்
     கல்லான்  பெயருமற்  பன்னாளும்(கலி: 37: 1-5)]

    தலைவனின் மனத்தை உணர்த்திய தோழியைத் தன் பார்வையால் எதிர்கொண்ட தலைவி தணிந்த குரலில், ”நான்மட்டும் அவன் உள்ளம் உணரவில்லை என்றா நினைக்கிறாய்? அவன் எண்ணத்தை நான் ஏற்றுக்கொண்டால் அதனால் எனக்கு என்ன துன்பம் வருமோ என்று அஞ்சுகின்றது என் நெஞ்சம்; அதனால்தான் அவனிடமிருந்து விலகியே நிற்கிறேன் கொஞ்சம்” என்றாள் வேதனையோடு.

    ”பெண்ணே! அவனைப் பார்த்தால் உள்ளன்போடு உன்னைக் காதலிப்பவனாகவே தோன்றுகிறது. அவன் காதலை நீ ஏற்றுக்கொள்வதில் தவறொன்றுமில்லை” என்று தலைவிக்குத் துணிவூட்டினாள் தோழி. சிந்தித்துப்பார்த்த தலைவியும் தலைவனின் காதலை உளப்பூர்வமாக ஏற்றுக்கொண்டாள். அவர்கள் நெஞ்சங்கலந்த நேயராயினர்.

    ஈண்டு, தோழி குறித்துச் சில வார்த்தைகள் சொல்ல விழைகின்றேன்…

    அகத்திணை இலக்கியத்தில் தலைவியின் இன்னோர் உயிராய்த் திகழ்கின்ற தோழி, அவளின் இன்ப துன்பங்களில் நேரிடையாகப் பங்குகொள்பவள். தலைவியின் காதலைச் சேர்த்துவைப்பதற்கு அவள்படும் பாடுகளும் செய்யும் சூழ்ச்சிகளும் நம்மைத் திகைக்கவைப்பன.

    இந்தத் தோழி யார்? தலைவியின் அயல்வீட்டாளா? அல்லது புதிதாக வந்து நட்புசெய்து கொண்டவளா? என்று கேட்டால் ’இல்லை’ என்றே கூறவேண்டும். இவள் தலைவியை நற்றாயினும் (தலைவியைப் பெற்ற தாய்) கண்ணுங் கருத்துமாய்ப் பேணிவளர்க்கும் செவிலித் தாயின் மகளாவாள்.

    ”தோழி தானே செவிலி மகளே” (தொல்: பொருள்: கள: 123) என்பது தொல்காப்பியம். எனவே தோழி பெரும்பாலும் தலைவியின் வீட்டில் அவளுடனேயே வளரும் அல்லது அவளுடன் அதிகநேரம் உறையும் வாய்ப்பைப் பெற்றவளாயிருப்பாள்.

    இதற்கு மறுதலையாகத் தலைவனின் தோழனாக வரும் பாங்கனோ தலைவனின் காதலைக் கண்டித்து இடித்துரைப்பானே யல்லால் தோழிபோல் துணைநிற்கும் பாங்கினன் அல்லன் என்பதும் இங்கே சுட்டுதற்குரியது.

    மீண்டும் குறுந்தொகைக்குத் திரும்புவோம்…

    நெஞ்சங்கலந்த தலைவன் தலைவியரின் நட்பு நாள்செல்லச் செல்ல நிலத்தினும் பெரிதாய், வானினும் உயர்ந்ததாய் வளர்ந்தோங்கியது.

    தலைவியை நாள்தோறும் தலைவன் சந்திக்க ஏற்ற இடத்தையும் பொழுதையும் முடிவுசெய்யும் பொறுப்பைத் தோழியே மேற்கொண்டாள். இதற்குக் ’குறியிடம்’ என்று பெயர்.

    ஒருநாள் காதலர்கள் சந்திக்குமிடத்தில் மறுநாள் அவர்கள் சந்திப்பு நிகழ்வதைத் தோழி விரும்புவதில்லை. காரணம்… இந்தக் களவுக்காதலை யாரேனும் உளவுபார்த்து ஊரார்க்கும், தலைவியின் பெற்றோர்க்கும் சொல்லிவிட்டால் அன்பே தகளியாய், ஆர்வமே நெய்யாய், இன்புருகு சிந்தை இடுதிரியாய் இட்டுத் தலைவனும் தலைவியும் ஏற்றிய காதற் சுடர்விளக்கு அணைந்துவிடுமே எனும் அச்சந்தான்!

    [தொடரும்]

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 127-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    kids and animals

    படம்பார்த்துக் கதைசொல்லும் வகையில் அமைந்த அரியதொரு காட்சியைக் கறுப்புவெள்ளையில் ஒளிஓவியமாய்த் தீட்டியிருக்கும் தொழில்நுட்ப வல்லுநர் திரு. கோகுல்நாத், இதனைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் இருவருக்கும் என் இனிய நன்றி!

    சிறுமியை இடையில் இடுக்கி இதழ்க்கடையில் புன்னகையை இருத்தி நிற்கும் ஒரு சிறுவன், உடைந்த கிளையின்மீது(ம்) உடையாத நம்பிக்கையோடு ஒயிலாக நிற்கின்ற மற்றொரு சிறுவன், இவர்களுக்குச் சற்றுதொலைவிலே நின்ற திருக்கோலத்திலும் கிடந்த திருக்கோலத்திலும் அருங்காட்சி நல்கும் கால்நடைச் செல்வங்கள் என்று இப்புகைப்படமே நல்லதோர் வாழ்க்கைச் சித்திரமாய் நம் கண்முன் விரிகின்றது!

    கவி வடிப்பதில் வித்தகர்களான நம் கவிஞர்கள் ஒரு காவியமே வரையலாம் இப்படத்திற்கு!

    இனி கவிஞர்களின் முறை…

    *****

    உற்றதுணையாய் உடன்பிறந்தோர், சுற்றமாய்க் கால்நடைகள்…இவை சுற்றியிருக்க, வேறு தெய்வங்கள் எதற்கு? ஈடாமோ இதற்கு? என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    உயர்வாய்

    பெற்றோ ரில்லா நிலையினிலும்
    பேணி வளர்க்கும் அண்ணன்மார்,
    உற்ற துணையாய் உடன்பிறந்தோர்
    உலகி லுயர்ந்த பாதுகாப்பு,
    சுற்ற மாகக் கால்நடைகள்
    சுழலும் வாழ்வும் சிறப்பாக,
    மற்ற தெய்வ மெல்லாமே
    மண்ணில் செய்த பதுமைகளே…!

    *****

    மரமேறிக் குதித்தது, மாங்காய்ப் பறித்து, பச்சைக் குதிரையை இச்சையொடு தாண்டியது, பாம்பைக் கண்டு பயந்து பதுங்கியது என்று இனிமையான தன் இளமைக்காலக் கிராம வாழ்க்கையை நகரத்து நரக வாழ்க்கையின் மத்தியிலும் அசைபோட்டு ஆனந்தம் கொள்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    உடலும் உயிரும்

    துள்ளித் திரிந்த பிள்ளைப் பருவம்
    நினைக்க, நினைக்க உள்ளம் இனிக்கும்!
    கள்ளம் இல்லா வெள்ளை உள்ளம்!
    கவலை இல்லா அருமைக் காலம்!
    தட்டான் பிடிக்க ஓடியதும்
    நுங்கு வண்டி ஓட்டியதும்
    குட்டையில் மீன் பிடித்ததும்
    பச்சைக் குதிரை தாண்டியதும்
    மரம் ஏறிக் குதித்ததும்
    மாங்காய் பறித்துத் தின்றதும்
    தென்னந் தோப்பு நிழலினிலே
    தோழருடன் கூடிக் களித்ததும்
    ஏற்றம் இறைப்பதை ரசித்ததும்
    நெற்பயிர் வாசம் ருசித்ததும்
    ஆட்டுக்குட்டியை தழுவி மகிழ்ந்ததும்
    கன்றுக்குட்டியுடன் துள்ளிக் குதித்ததும்
    பாம்பைக் கண்டு பயந்ததும்
    வாய்பாடு பாட்டாய்ச் சொன்னதும்
    கணக்குப் பாடம் கண்டு மிரண்டதும்
    தமிழில் பாடம் படித்ததும்
    இன்பச் சுற்றுலா சென்றதும்
    மஞ்சு விரட்டு பார்த்து மனம் மயங்கி நின்றதும்
    ஒழுக்கம், இரக்கம், உண்மை சொல்லித் தந்த
    ஆசிரியரைத் தெய்வமாய் நினைத்ததும்
    கிராமத்து வாழ்க்கை இன்பமடா!
    நகரத்து வாழ்க்கை நரகமடா!
    நான் அனுபவித்தததைச் சொல்லுகிறேன்!
    உங்களை அனுபவிக்கச் சொல்லுகிறேன்!
    உயிரெனும் கிராமத்தைக் கொன்று விட்டு
    உடலெனும் நகரத்தில் வாழுகின்றோம்!
    உயிரற்ற உடலால் என்ன பயன்?
    உயிரும் உடலும் சேரட்டும்!
    இன்பம் என்றும் நிலைக்கட்டும்!

    *****

    உயிர்ப்பான இப்படத்திற்குக் கவிதைகள் அதிக அளவில் வாராதது வருத்தமே! எனினும், பங்குபெற்ற கவிஞர்கள் நல்ல சிந்தனைகளைத் தம் கவிதைகளில் நட்டுவைத்திருப்பதில் மகிழ்ச்சியே!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    ஏழைச் சிறுவனின் ஏக்கம்!

    உருளுகின்ற இவ்வுலகில் உழைக்கும் வர்க்கமாய்..
       உழல்பவர்கள் ஏராளம்! அதிலும் உழைக்காமலே..
    பொருளீட்டும் மாந்தரும் உண்டாம் இவர்களின்..
       இருட்டு மனத்திலேயாம் வெளிச்சம் தேடுகிறோம்!
    மருண்டே வாழ்ந்து மண்ணில் மடிவதுதானெம்..
       மக்களின் தலையில் எழுதியதலை விதிபோலாம்!
    அருளுகின்ற இறைவனும் ஏழை எமக்கென்றே..
      ஆரோக்கியமும் பிள்ளைச் செல்வமும் அருளினான்!

    ஆனால்…

    பள்ளிசெல்லும் எண்ணமே சத்துணவுக் காகத்தான்..
       படிப்பிலே கவனமிலாப் பலசோலி எங்களுக்குண்டு!
    வெள்ளி முளைக்குமுன் வேகமாய்ச் செயல்புரிந்தே..
       வதைக்கும் உழைப்பால் படிப்பினில் நாட்டமில்லை!
    பிள்ளையாய் இருக்கும்போதே இடுப்பில் இன்னொரு..
       பிள்ளையைச் சுமக்க வேண்டுமா ஏழ்மையென்பதால்!?
    கள்ளமிலா மனதோடு கல்விகற்க ஆசைதான் ஆனால்…
       சல்லாபமாய் வாழநினையின் சங்கடமே வருகிறது!
    அப்பனும் ஆத்தாளுமில்லை அரவணைத்து வளர்க்க..
       ஆதரவாய் உற்றோர் உறவினருமென எவருமிலை!
    தப்பேதும் செய்யாமலே தண்டனை மிகப்பெரிதோ…
       தகும்நூலைப் படித்துயர ஒருபோதும் வழியில்லை!
    எப்படி வாழ்வதென எண்ணியே கலங்குகின்றோம்..
       எங்கள் கடமைகளை அனுதினமும் செய்கின்றோம்!
    இப்பாரினில் ஏழ்மைக் குழந்தைபடும் துயரம்போல்..
       எவருக்குமே வராதென…..அருள்வாயா இறைவா?

    ஏழைகளின் வாழ்க்கை இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ? வறுமை அவர்கள் வாழ்வைச் சூறையாட, பொறுப்புகள் அவர்கள் இளமைக்கால இனிமையைச் சூறையாட, மிஞ்சியிருப்பது அவநம்பிக்கையும் விரக்தியுமே!

    உருண்டோடிடும் பணங்காசெனும் செல்வம் அவர்களிடம் குறைந்திருந்தாலும், தளர்நடையால் மனம்மயக்கும் வளர்பிறைபோலும் மழலைச்செல்வம் அவர்கள் மனையிலே நிறைந்திருக்கும். எனினும், கல்வி எனும் கண்பெற்றுக் கற்றோர் அவைக்கண் ஏறுபோல் பீடுநடைபோட அவர்களின் இன்மை பெருந்தடையாய் இருப்பது புன்மையே!

    அவ்வகையில் ஏழைபடும் பாட்டை ஓர் ஏழைச்சிறுவனின் வாய்மொழியாய் உளங்கசியும் வண்ணம் உருக்கமாய்த் தன் பாட்டில் பதிவுசெய்திருக்கும் பெருவை திரு. பார்த்தசாரதி இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் எனும் சிறப்பைப் பெறுகின்றார். அவருக்கு என் பாராட்டு!

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 2

    -மேகலா இராமமூர்த்தி

    மானுட சமூகத்தையும் மாந்தக் கூட்டத்தையும் பல்லாயிரம் ஆண்டுகளாக உயிர்ப்போடு வைத்திருப்பது முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்த் திகழும் காதல்!

    கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
    மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாகும் விந்தை நம் சிந்தை தொடுவது.

    இதோ…எடுத்ததை முடிக்கும் திறனும் உரனுங்கொண்ட கட்டழகுக் காளையொருவன், கானவேட்டையில் கலைமானொன்றைத் துரத்தி வரக் காண்கிறோம்.  அம்மானோ ஆண்தகைக்கு அகப்படாது நாலுகால் பாய்ச்சலில் சென்றுவிட, அதனைத் தேடிக்கொண்டு மலையருவிப் பக்கம் வந்தவன், வரும் வழியில் அழகிய தமிழ்மகளொருத்தி தன் தோழியோடு செயலை (அசோகு) மரத்தடியில் நின்றிருக்கக் கண்டான்; தான் கலைமானைத் துரத்திவந்த செயலை மறந்து, மரத்தடியில் நின்றிருந்த பெண்மானை இமையா நாட்டத்தொடு நோக்கினான். தனைநோக்கிய பெம்மானை அப்பெண்மானும் நோக்கினாள்.

    தன் வீரத்தையும் உரத்தையும் அப் பாவையின் பார்வை உருவிப்போனதை உணர்ந்தான் அந்தக் காளை. வேட்டத்தில் இப்போது அவனுக்கு நாட்டமில்லை. தன் கண்ணெதிரே தோன்றுவது அணங்கா? ஆய்மயிலா? எனச் சிந்திக்கத் தொடங்கினான். தன் ஐயத்தைப் போக்கிக்கொள்ள அருகே சென்று அப்பெண்களிடம் பேச்சுக்கொடுத்துப் பார்த்தான். அவர்களோ பெண்களுக்கே உரிய நாணையே பூணாகக் கொண்டவர்களாதலால், அந்நிய ஆடவனோடு உரையாடத் தயங்கித் தரைபார்த்து நின்றிருந்தனர். மிகுந்த ஏமாற்றத்தோடு தன்னூர் திரும்பினான் அவன்!

    வேட்டையாடச் சென்ற தலைவன் விலங்கு எதனையும் வீழ்த்திக் கொணராது வறிதே திரும்பியது கண்ட அவன் தோழன், “வேட்டைக்குச் சென்றாய்…வெறுங்கையோடு மீண்டுவருகின்றாயே! விலங்கு ஏதும் வசப்படவில்லையா?” என்று வினவினான்.

    ”விலங்கைத் தேடிச்சென்ற என்னை விலங்கிட்டுவிட்டாள் வஞ்சியொருத்தி. அதனால் கான்விலங்கை வேட்டையாட நான் மறந்தேன்” என்ற தலைவன் தொடர்ந்து,

    ”மலையிலிருந்து வீழும் தூவெள்ளருவி பாறை வெடிப்புகளில் ஒலிக்கும் பன்மலர்ச் சாரலிலுள்ள சிறுகுடிவாழ் குறவன் ஒருவனுடைய குறுமகளின் நீரையொத்த மென்சாயல், தீபோன்ற என் உரத்தையும் அவித்துவிட்டது நண்பா!” என்றான் ஏக்கத்தோடு.

    மால்வரை  இழிதருந்  தூவெள்  அருவி
    கல்முகைத் 
    ததும்பும்  பன்மலர்ச்  சாரல்
    சிறுகுடிக் 
    குறவன்  பெருந்தோட்  குறுமகள்
    நீரோ 
    ரன்ன  சாயல்
    தீயோ 
    ரன்னவென்  உரனவித்  தன்றே.  (குறுந்: 95 – கபிலர்)

    [ ”போர்க்களத்துக்கு வாராதவர்கூடப் பிறருக்கு நேர்ந்ததைக் கேட்டு அஞ்சும் என் வலிமை, வனிதை ஒருத்தியின் ஒளிமிகு நுதலுக்குத் தோற்றுப்போனதே” என்று வள்ளுவர் படைத்த காதலனும் தன்னையே எள்ளி நகையாடுவதை இதனோடு நாம் பொருத்திக் காணலாம்.

    ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
    நண்ணாரும்
    உட்குமென் பீடு.   (குறள்: 1088) ]

    தலைவனின் விசித்திர மொழிகளைக் கேட்ட தோழன்,

    நண்ப! ”வலியும் உரனும் மிக்க உன் பேராண்மை மெல்லிய பெண்ணொருத்தியிடம் தோற்றுப்போனது என்று நீ சொல்வதை என்னால் நம்பமுடியவில்லையே” என்று வியந்தான்.

    ”ஏன் நம்ப மறுக்கிறாய்? சிறிய வெள்ளிய பாம்புக்குட்டியொன்று வலிமிகு காட்டுயானையையே வருத்தும் இயல்புடையது என்று நீ அறியாயோ? அதுபோல், அழகிய வளையணிந்த அவ்விளைய மகளும் என்னை வருத்துகின்றாள்” என்றுகூறிப் பெருமூச்செறிந்தான்.

    சிறுவெள்  ளரவின்  அவ்வரிக்  குருளை
    கான 
    யானை  அணங்கி  யாஅங்கு
    இளையள் 
    முளைவாள்  எயிற்றள்
    வளையுடைக் 
    கையள்எம்  அணங்கி  யோளே. (குறுந்: 119 – சத்திநாத(க)னார்

    [பொதுவாக யானைக்கும் புலிக்குமிடையேயான பகையையும் போரையுமே இலக்கியங்கள் நமக்குப் பெரிதும் சுட்டியிருக்கின்றன.

    பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
    வெரூஉம் புலிதாக் குறின் (குறள்: 599)
     என்று வள்ளுவமும் புலியைக்கண்டு அஞ்சும் யானையை நமக்கு அடையாளப்படுத்துகின்றது. ஆனால், புலியொத்த வலியற்ற ஒரு சிறு பாம்புக்குட்டிகூடக் காட்டுயானையை வருத்தும் எனும் புதிய செய்தியைச் சத்திநாதனாரின் குறுந்தொகைப் பாடல் நமக்கு அறியத்தருகின்றது.]

    தலைவனின் சொற்கேட்டுக் கடகடவென  நகைத்த தோழன்,

    ”பெருந்தோளுடைய அருமைத் தலைவ! காதலென்பது வருத்தமும் நோயும் அன்று!  பழங்கொல்லையில் தழைத்த முற்றாத இளம்புல்லைக் கடித்துண்ண முடியாத கிழட்டுப் பசு ஒன்று அதனைத் தன்  நாவால் தடவி இன்புறுவதுபோல், காமமும் அதனை நினைப்பதால் இன்பந்தரும் ஒரு மனநிலையேயன்றி வேறில்லை. விரும்பினோரை அது விடாது; வெறுத்தோரை அது தொடாது. ஆதலால் காமவுணர்வைக் கொன்றுவிடு; உன் ஆற்றலால் அதனை வென்றுவிடு!” என்று இடித்துரைத்தான்.

    காமம் காமம் என்ப காமம்
    அணங்கும்
    பிணியும் அன்றே நினைப்பின்
    முதைச்சுவற்
    கலித்த முற்றா இளம்புல்
    மூதா
    தைவந் தாங்கு
    விருந்தே
    காமம் பெருந்தோ ளோயே.  (குறுந்: 204 – மிளைப்பெருங்கந்தனார்)

    தோழனின் மொழிகள் தலைவனின் செவிகளுக்கு எட்டியாய்க் கசந்தன; தன் காதல் கைகூட அவன் ஏதேனும் யோசனை சொல்வான் என்று ஆவலோடு எதிர்பார்த்தவனுக்குக் காதலையே விட்டுவிடு என்று அவன் சொன்ன யோசனை எரிச்சலூட்டியது.

    இனி இவனிடம் இதுகுறித்துப் பேசிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்த தலைவன், வேறு யாரை அணுகினால்  தன் காதல் வெல்ல வழிபிறக்கும் எனச் சிந்தித்த வேளையில்,  பளிச்சென்று அவன் மூளையில் மின்னல் ஒன்று வெட்டியது! யோசனை ஒன்று கிட்டியது!

    [தொடரும்]

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 126-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    manintheforest

    நெடிதோங்கிய மரங்களிடை நின்று நிமிர்ந்துபார்க்கும் உயர்ந்த மனிதன்!!

    ஆகா…! மிக அருமையான கோணத்தில் இரசனையோடு இந்தப் புகைப்படத்தை எடுத்திருக்கும் திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணனுக்கும், சிந்தைகவர் இப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குக் கச்சிதமாய்த் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் உளங்கனிந்த நன்றியும் பாராட்டும் உரித்தாகுக!

    வானளவு உயர்ந்துநிற்கும் இம்மரங்கள் இயற்கையன்னை தானளித்த வரங்களல்லவா? வீடு கட்டுவதற்காக அவற்றை அருளின்றி அழித்து அவற்றுக்கு வீடுபேறளிப்பது நமக்கு நாமே அளித்துக்கொள்ளும் சாபம் அல்லவா?

    நிவந்தோங்கிய மரங்களையும் அவற்றை உவந்துநோக்கும் மனிதனையும் குறித்துச் சந்தக்கவி சிந்தவருகின்றார்கள் நம் கவிஞர்கள். அவர்களை அன்போடு வாழ்த்தி வரவேற்கின்றேன்!

    *****

    ”உயர்ந்து வளர்ந்த மனிதா! மனத்தை வளர்ப்பாய் இனிதாய்! மற்றவர் உயர நீ உழைப்பாய் நன்றாய்” என்று வெயிற்கேற்ற நிழலும் வீசுந் தென்றல் காற்றும் நல்கும் நன்மரத்தை ஞானோபதேசம் செய்ய வைத்திருக்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.  

    ஞான மரம்:

    உயர்ந்து நிற்கும் மரங்கள் பாரீர்!
    வானளாவ வளர்ந்த அற்புதம் பாரீர்!
    மரங்கள் வளர்ந்து, மண்ணுயிர்க்கு பயன் தரும்!
    மனிதன் வாழ அழகான வீடு தரும்!
    சுடு வெயில், தான் ஏற்று  மற்றவர்க்கு நிழல் தரும்!
    உண்ணக் கனி தரும்!
    எழுதத் தாள் தரும்!
    தீயில் தான் எரிந்து
    வெளிச்சம் தான் தரும்!
    நச்சுக் காற்றைத் தான் உண்டு
    நல்ல காற்றை நமக்குத் தரும்!
    மரங்கள் பூமியில் இருந்ததற்கு
    நல்ல ஆதாரங்கள் எத்தனை! எத்தனை!
    காற்றாய், கனியாய், ஒளியாய்,
    நிழலாய், வீடாய், மழையாய்!!!
    மரம் சொன்னது, வியந்து நின்ற என்னைப் பார்த்து!
    “உயர்ந்து, வளர்ந்த மனிதா!
    மனதை வளர்ப்பாய் இனிதாய்!
    மற்றவர் உயர, என்றும் உழைப்பாய்”
    புத்தனுக்கு ஞானம் வந்தது
    போதி மரத்தடியில்!
    எனக்கும் தெளிவு வந்தது!
    இந்த மரம் சொன்ன வகையில்!!!!
    மனித மனங்களும், உயர வேண்டும்!
    இந்த மரங்களைப் போல!

    *****

    இலைவளம் மிகுதல் இயற்கைவளத்தின் அடையாளம்; கலைவளம் மிகுதல் மனிதனின் சிந்தனைச் செம்மையின் அடையாளம். மண்ணில்காணும் கண்ணைக்கவரும் காட்சிகளனைத்தும் அந்த மாதவனின் அற்புதத்தின் அடையாளம் என்று அதிசயிக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    சிந்தனை வளம்..!

    மலைவளமுடன் வயல்வெளி காடும்வளம் பெருக..
    ……….மாதமும்மாரி மழைதவறாது பொழிந்திருத்தல் வேணும்.!
    நிலவளம் கொண்டிருப்பின் செடிமரங்கள் செழிப்புடன்..
    ……….நெடிதாக விண்ணைமுட்ட வானுயர்ந்து வளந்திருக்கும்.!
    இலைவளம் மிகுந்தாலது….மண்ணினுள் ஒளிந்திருக்கும்..
    ……….இயற்கைவளம் என்பதின் அடையாளம் போலாகும்..!
    கலைவளம் பெருகவே மாந்தரின் எண்ணமுயெழுத்தும்..
    ……….கடுமழைபோல் சிந்தனையூற்றாக மனதில் பெருகவேணும்.!
    மண்ணெனும் தாயும் வானமெனும் தந்தையுமிணைந்து..
    ……….மனமுடனீயும் ஈகைப் பெருந்தன்மைதான் இயற்கை.!
    மண்ணில்காணும் கண்ணைக் கவரும் காட்சிகளாவும்..
    ……….மாதவன்படைத்த கணக்கற்ற அற்புதங்களில் ஒன்றாகும்.!
    பெண்ணின் இடைபோன்று சிறுத்துயர் வளர்ந்தோங்கிய..
    ……….பெருமரங்களடந்த பெருவெளி இயற்கை நடுநின்று..
    எண்ணில்..? இவையனைத்தும் எழும் சிந்தனையில்..
    ……….ஏற்றிப் பற்றுமிகின்.?…பாவலர்க்கெளிதிலது பாவாகும்.!

    *****

    ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்; அவன் ஏனோ மரம்போல் வளர்ந்துவிட்டான் என்ற ’பனித்திரை’ திரைப்பாடலை அடியொற்றித் தன் பாடலை எழுதியுள்ள திரு. ரா. பார்த்தசாரதி, இப்பாடலில் மரம் தன் பயன்களைத் தானே பட்டியலிட்டு மனிதனுக்கு நல்லறிவு கொளுத்துவதை நயம்பட உரைத்துள்ளார்.

    ஏதோ மனிதன் பிறந்துவிட்டான் , மரம்போல் வளர்ந்துவிட்டான்
    எதிலும் ஐயம்,எதிலும் அச்சம் எதற்கெடுத்தாலும் வாதாடுகின்றான்
    மரத்தின் அருமையினை அவன் எண்ணிப் பார்ப்பதில்லை
    இயற்கையில் மரம் அதிகமானால் மழைக்குப் பஞ்சமில்லை
    மரங்கள் வளர்ந்து, மணல் அரிப்பைத் தடுக்கின்றதே
    மரங்கள் வளர்ந்து மனிதனுக்கு நிழலை தருகின்றதே
    மரங்கள் வளர்ந்து மனிதனுக்கு வீடுகட்ட உதவுகின்றதே
    மரங்களின் இலைகள் விலங்கிற்கும்,நிலத்திற்கும் பயன்படுகிறதே!
    இயற்கை அன்னை தந்தது எல்லாம் மனிதனுக்குச் சொந்தமடா
    எனது, உனது என்பது இடையில் மாறும் பந்தமடா
    மரங்களை வெட்டி, சுற்றுச் சூழலை பாழ்படுத்துகிறாய்
    என்னை வெட்டி, நாட்டையும், வீட்டையும் கெடுக்கின்றாய்!
    மனிதனே, நானே உனக்கு எழுதத் தாள் தருகின்றேன்
    உண்ணக் கனிகளையும், என்னை எரித்து வெளிச்சம் தருகின்றேன்
    நான் அசைந்து தென்றல் போல் இதமான காற்றைத் தருகின்றேன்
    என் இலைகள் மருந்தாகவும், எருவாகவும் பயன்படுகின்றதே!
    மனிதனே, நின்ற இடத்தில் என்னை அண்ணார்ந்து பார்க்கின்றாய்
    என்னை நினைத்தாலே உன் மனதில் தெளிவு காண்பாய்
    மனிதனே, வீட்டுக்கு வீடு மரம் வளர்க்க ஆர்வம் கொள்வாயா?
    சுற்றுச் சூழலைக் காக்க நானே சிறந்தவன் என எண்ணமாட்டாயா?

    *****

    மரங்களை அழிப்பதால் மனிதர்கள் தமக்குத்தாமே பேரழிவைத் தேடிக்கொள்வதைக் கவிஞர்கள் பலரும் படிப்போர் மனங்கொளத்தக்க வகையில் இடித்துரைத்துள்ளனர் தம் கவிதைகளில். பாராட்டுக்கள்!

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவுபெற்றிருப்பது நம் பார்வைக்கு…

    வாழுகின்ற தேசம் எண்ணி வருந்துகின்றேன்
    வாராதா வசந்தம் என்றெண்ணி ஏங்குகிறேன்
    ஆளுகின்ற வர்க்கம் கண்டு அஞ்சுகின்றேன்
    கால்பரப்பி நின்றிங்கு கதறுகின்றேன்

    கனவுகொண்ட கண்களிங்கே இருளக் கண்டேன்
    கல்விகூட எமனாக மாறக் கண்டேன்
    முகிழ்க்காத அரும்புகளும் உதிரக் கண்டேன்
    முகம்திருப்பி மனம் வெதும்பி அரற்றுகிறேன்

    ஊழலிங்கு நதியாக ஓடக் கண்டேன்
    ஊருணியும் ஆறுகளும் வாடக் கண்டேன்
    பயிர்வளர்க்கும் விவசாயி மடியக் கண்டேன்
    உயிர் சுமந்த வலியாலே துடிக்கின்றேன்!

    காடான நாடிதனை மாற்றி அமைப்போம்
    கலாமின் வல்லரசைக் கட்டி முடிப்போம்
    உற்ற துயர் அத்தனையும் முடித்து வைப்போம்
    உயரட்டும் நாடென்றே ஓங்கி ஒலிப்போம்!

    ”செந்தமிழ் நாடுதனில் கற்றகல்விகூட எளியோர்க்கு அவர் விரும்பும் படிப்பைப் பெற்றுத்தர உதவவில்லை; சாகுபடி செய்தவனைத் தயவின்றிச் சாகும்படிச் செய்கின்றோம். ஊழலே ஊரெங்கும் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடுவதால் சூழலிலே இனிமையில்லை” என்று தனிமையில் கானிடைநின்று கதறும் ஆடவனைத் தன் கவிதையில் காட்சிப்படுத்தியுள்ள திரு. கொ.வை. அரங்கநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 1

    -மேகலா இராமமூர்த்தி

    மனிதன் ஒரு சமூக விலங்கு. தனித்து வாழ்வதினும் பிறரோடு இணைந்தும் இயைந்தும் வாழ்வதிலேயே அவன் வெற்றி அடங்கியிருக்கின்றது. சமூக அறம் இருவகைப்பட்டது. ஒன்று இல்லறம்; மற்றது துறவறம். ஆசைகளையும் தேவைகளையும் துறந்து பற்றற்ற நிலையில் வாழும் துறவென்னும் அறம் எல்லார்க்கும் எளிதில் வாய்ப்பதன்று; ஆனால் ஆணும் பெண்ணும் கணவனும் மனைவியாய் இணைந்து வாழும் இல்லறம் சாமானியர் பின்பற்றுதற்கு எளிது; அதனால் பலராலும் விரும்பப்படுவது.

    இறந்தோர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார் இவர்களோடு தம்மையும் பேணும் பணி இல்லறத்தார்க்கு உரியதாய் வகுக்கப்பட்டுள்ளதால் பற்றற்று வாழும் துறவறத்தினும் அனைவர்மீதும் பற்றுக்கொண்டு வாழும் இல்லறமே சிறந்தது என்பது வள்ளுவப் பெரியாரின் துணிபு.

    தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
    ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
    (குறள்: 43)

    ஆன்றோர் போற்றும் இந்த இனிய இல்லறத்தைத் தொடங்கிவைப்பது ஒத்த தலைவனுக்கும் தலைவிக்குமிடையே நிகழும் மணவினையே ஆகும். அத் திருமணம் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துப்பழகியபின் நிகழும் காதல் மணமாகவும் இருக்கலாம்; பெற்றோர் கூட்டுவிக்கின்ற கடிமணமாகவும் இருக்கலாம்.

    இவ்விரு மணங்களில் குமுகத்தில் மிகுதி எது என்று ஆராய்ந்தால் தமர் என்று சொல்லப்படும் பெற்றோரும் உற்றாரும் கூட்டுவிக்கும் மணங்களே மிகுதி என்று சொல்லலாம். எனினும், நாடக வழக்கிலும், பாடல்சான்ற புலனெறி வழக்கிலும் படிப்போர்க்குச் சுவைகூட்டுதற்பொருட்டு காதல் மணங்களே ’அன்பின் ஐந்திணை’ எனும் பெயரில் நம் புலவர் பெருமக்களால் விதந்தோதப்பட்டுள்ளன.

    தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் சந்தித்து, மனங்கலந்து பின் அவர்கள் மணவுறவில் கலப்பதையே கவிஞர்தம் கவியுள்ளம் உள்ளியது என்பதற்கு நம் சங்கப் புலவர்கள் வடித்துத் தந்துள்ள அகத்திணைப் பாடல்களே அங்கை நெல்லியாய்ச் சான்றுபகர்கின்றன. சங்கப் புலவர்களின் மொத்த எண்ணிக்கை 473 என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் அகம் பாடிய புலவர்களின் எண்ணிக்கை மட்டுமே 373. அகத்திணைப் பாடல்கள்பால் தம் அகத்தினை நற்றமிழ்ப் புலவர்கள் நனிசெலுத்தினர் என்பது இதன்வாயிலாய்த் தெற்றெனப் புலப்படுகின்றது!

    ”உலகின் பிறநாட்டாரெல்லாம் காதலை வெறும் ஆண்பெண் உறவு என்றே (மலினமாய்) நினைத்திருந்த வேளையில், அதனையும் தாண்டிய உள்ளத்து உணர்வு அது என்பதைத் தமிழர்தாம் அடையாளம் கண்டிருக்கின்றனர். அஃது ஒருவித மனநிலை என்பதே அவர்கள் துணிபு.” என்று கூறும் தமிழறிஞர் அ.ச.ஞானசம்பந்தன்,

    ”புறத்தை ஒரு மரம் என்று கொண்டால் அகமாகிய இல்லற வாழ்வே அதன் வேர்கள். வேர்கள் வெளியில் தெரியாமல் இருக்கலாம்; ஆனால் அவையின்றி மரமேயில்லை. அதுபோல் குடும்பம் நன்றாக அமைந்தால்தான் சமூகம் நன்றாய் அமையும்” என்று அகத்தின் பெருமையைச் சகத்துக்கு அறைகின்றார்.

    மானுடக் காதலையே பெரிதுவக்கும் நம் சங்கத்தமிழ் நூல்கள் பாடல்களின் அடியெல்லையின் அடிப்படையில் அவற்றை எட்டுத்தொகையாகவும் பத்துப் பாட்டாகவும் பகுத்தன.

    ”நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
    ஒத்த பதிற்றுப்பத்து ஓங்குபரிபாடல் கற்றறிந்தார்
    ஏத்தும் கலியொடு அகம்புறமென்று
    இத்திறத்த எட்டுத் தொகை”
    என்பது எட்டுத்தொகைக்கான பட்டியல்.

    இதில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, என அகத்தை மட்டுமே பாடிய நூல்கள் ஐந்து. புறநானூறும் பதிற்றுப்பத்தும் புறச்செய்திகளைப் பேசுவன. பரிபாடல் அகமும் புறமும் விரவியது.

    எட்டுத்தொகை நூல்களுள் உரையாசிரியர்களால் அதிகம் எடுத்தாளப்பட்டுள்ள பெருமைக்குரிய நூல் குறுந்தொகையே. நான்கடி சிற்றெல்லையும் எட்டடி பேரெல்லையும் கொண்ட குறுந்தொகை 205 புலவர் பெருமக்களால் பாடப்பெற்ற சிறப்புக்குரியது. இந்நூல், காதலையும் அதுசார்ந்த வாழ்க்கை நிகழ்வுகளையும் மையப்படுத்திய நூலாயினும், மக்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்த இயற்கை குறித்த செய்திகளுக்கும் இதில் பஞ்சமில்லை.

    Beauty Waterfallநிவந்தோங்கிய மலைகள், அதிலிருந்து வீழும் வெண்துகில் நிகர்த்த அருவிகள், மரங்களில் தூங்கும் தேனிறால்கள், பாய்ந்துசெல்லும் காட்டாறுகள், பிளிறிச்செல்லும் பெருங்களிறுகள், வேட்டையாடும் வேங்கைகள், மருண்டு நோக்கும் மான்கூட்டங்கள், மனமயக்கும் மஞ்ஞைகள், கருங்கண் தாக்கலைகள், காமர் மந்திகள், அவற்றின் கல்லா வன்பறழ்கள், சித்தம் மயக்கும் புத்தம்புது மலர்கள், தினைக்கதிர் தின்னவரும் கிளிகள், கிழங்குகளை அகழ்ந்தெடுக்கும் காட்டுப் பன்றிகள் எனக் குறுந்தொகை நம் கண்முன் விரிக்கும் காட்சிகள் கவினார் உலகுக்கு நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்வன.

    இயற்கை வளத்தையும் தாவர சங்கமத்தையும் இழந்து நாம் வறிஞராய் இன்று நிற்கும் பேரவலம் குறுந்தொகையைப் படிப்போர் உள்ளத்தில் பொங்கியெழுவது தவிர்க்கவியலாதது. எனினும், இப்பாடல்கள் வழியேனும் அவற்றை மீட்டும் நினைவுகூர்வது சற்றே ஆறுதலளிப்பதாகும்.

    பழந்தமிழரின் காதல் வாழ்வையும், விழுமியங்களையும், இயற்கையோடு அவர்கட்கிருந்த அகலாப் பெரும்பிணைப்பையும், இன்னபிற செய்திகளையும் நறுந்தேனாய் இனிக்கும் குறுந்தொகைவழிச் சுவைப்போம் சிறிது; புறப்படுங்கள்!

    [தொடரும்]

     

     

     

    Share
  • மாணவர்களே… சிந்தியுங்கள்!

    -மேகலா இராமமூர்த்தி

    சுடர்மிகு அறிவோடு திகழ்ந்த ஓர் ஏழைக்குழந்தை தன் மருத்துவக் கனவு மெய்ப்படவில்லை என்று மாண்டுபோனது மிகுந்த மனவேதனை அளிக்கின்றது. ’நீட்’ தேர்வு எமனாக மாறி அந்த உன்னத உயிரைக் காவு வாங்கிவிட்டது. உச்சநீதிமன்றம்வரை சென்றாலுங்கூட நிதிபடைத்தவர்களுக்குத்தான் நீதி கிடைக்கும் போலிருக்கிறது!

    ’நீட்’ தேர்வை எதிர்கொண்டு வெற்றிபெறும் நிலையில் நம் தமிழக மாணவர்கள் யாரும் இப்போது இல்லை என்பதே உண்மை. நம் கல்வித்தரத்தை உயர்த்தி மாணவர்களை ’நீட்’ போன்ற தகுதித் தேர்வுகளுக்கு ஏற்றவர்களாக மாற்றும்வரைத் தமிழகத்துக்கு ’நீட்’ தேர்விலிருந்து விலக்களிப்பதே இதற்கான தற்காலிகத் தீர்வு!

    இது ஒருபுறமிருக்கட்டும்!

    தனக்கு நீதி கிடைக்கவில்லை என்பதையும் தாண்டி, ”மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காவிட்டால் பரவாயில்லை; அதனையொத்த செவிலியர் படிப்பு, பிசியோதெரபி, பார்மசி என்று எத்தனையோ மருத்துவம்சார் படிப்புகள் (allied health science courses) இருக்கின்றன…கலங்காதே!” என்று எடுத்துச்சொல்லி அனிதாவின் தோள்தொட்டுத் தைரியம் கூறவும், ஆற்றுப்படுத்தவும் யாரும் அருகில் இல்லாததுதான் அந்தக் குழந்தையைத் தற்கொலைவரை செல்லத் தூண்டியிருக்குமோ என்று ஐயுறுகின்றேன்.  

    தோற்பதைவிட நாம் தோற்றுத் துவண்டுநிற்கும் நேரத்தில் நம்மைத் தேற்ற யாருமில்லாததுதான் பெருங்கொடுமை! 

    துயர்மிகுந்த இவ்வேளையில் மாணவர்களுக்குச் சில சொல்ல விழைகிறேன்…

    பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் எப்போதுமே மேற்படிப்பு குறித்து ஒரே இலக்கை (one goal) வைத்துக்கொள்வது பல நேரங்களில் பலன்தருவதில்லை. Plan A, Plan B, and Plan C என்று மேற்படிப்பு குறித்த மூன்று திட்டங்களை அவர்கள் கைவசம் வைத்திருப்பது நல்லது. அப்போதுதான் ஒன்று கிடைக்காவிட்டால் மற்றொன்றைத் தேர்ந்தெடுக்கலாம். இந்தத் திட்டமிடல் தேவையற்ற மன உளைச்சலையும், விரக்தியையும், அதனால் விளையும் தவறான முடிவுகளையும் தவிர்க்க உதவும்.

    ’மாணவர்களின் எதிர்காலம் அவர்களின் பொறுப்பே’ என்று கருதி ஒதுங்கியிராமல் கல்வி நிலையங்களும், சமூக ஆர்வலர்களுங்கூடக் கற்றறிந்த ஆலோசகர்களைக்கொண்டு பள்ளி மாணவர்களின் (குறிப்பாகக் கிராமப்புற மாணவர்களின்),  எதிர்காலத் திட்டமிடலுக்குத் தங்களாலான வகையில் ’கவுன்சிலிங்’ செய்து உதவலாம்.

    எப்படிப் பார்த்தாலும் இவ்வகை மரணங்கள் தவிர்க்கப்பட வேண்டியவையே!

    மாணவச் செல்வங்களே! பள்ளியில்பெறும் புள்ளிகளோடு (marks) முடிந்துவிடுவதில்லை உங்கள் வாழ்க்கை. பள்ளிக்கல்வியில் தோற்ற எத்தனையோ மனிதர்கள் வாழ்க்கையில் பெருவெற்றி பெற்றிருக்கின்றார்கள்; தலைவர்களாகி நாட்டுக்கே வழிகாட்டியிருக்கிறார்கள்.

    எனவே, தயவுசெய்து தற்காலிகத் தோல்விகளுக்காகத் தற்கொலையை நாடாதீர்கள்! That’s not at all a solution for your problem! 

    “இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
    இடும்பை படாஅ தவர்”
    என்றாரே நம் பேராசான்! அதனை மறக்கலாமா?

    கல்வித்தேடல் குறித்த உங்கள் பார்வையைக் கூர்மையாக்குங்கள்…வெற்றிக்கான வழி புலப்படும்!

    Share
  • படக்கவிதைப் போட்டி 125-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    ஊ(ஞ்)சலில் ஆடும் குழந்தையின் குதூகலத்தைத் தன் புகைப்படக் கருவியில் சிறப்பாய்ப் பதிவுசெய்திருக்கின்றார் திரு. பிரேம்நாத் திருமலைசாமி.

    child playing swing

    கவியெழுதப் பொருத்தமான காட்சியிது என்றிதனைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் நம் நன்றிக்குரியோர்!

    இந்தப் படத்தைப் பார்க்கும்போது,

    ”ஆடிவா ஆடிவா ஆடிவா!
    (ஊசல்)ஆடப் பிறந்தவளே ஆடிவா!
    புகழ்தேடப் பிறந்தவளே பாடிவா” என்று உல்லாசமாய்ப் பாடத் தோன்றுகிறது.

    கவிகள் காத்திருக்கிறார்கள்! அவர்களின் கவிமழையில் நனையப் புறப்படுவோம் விரைவாய்!

    ”காலமிது காலமிது ஊஞ்சலாடு கண்ணே! காலமிதைத் தவறவிட்டால் பின் (விளையாட) வாய்ப்பில்லை பெண்ணே!” என்கிறது திரு. செண்பக ஜெகதீசனின் கவிதை.

    ஆடிவிடு இப்போதே

    சின்னப் பெண்ணே ஊஞ்சலாடு
    சிரித்து மகிழ்ந்தே ஊஞ்சலாடு,
    அன்னை ஆடிய ஆட்டமிது
    அப்பா கட்டிய ஊஞ்சலிது,
    பின்னை நாளில் கிடைக்காது
    பொழுதும் அதற்கே இருக்காது,
    உன்னலம் பேண முடியாது
    உழைத்திடும் அன்னையாய் ஆனபின்னே…!

    *****

    ”ஆனந்தக் கூத்தாடும் அரும்பு அறிவதில்லை அளவோடு நலங்காணும் சுகம்” என்று விளம்பும் திரு. சுரேஜமீ, புதுவுலகம் படைத்திடப் புறப்படுவாய்; தோல்விகண்டு துவளாமல் வெல்வாய்! என ஊஞ்சலாடும் குழந்தைக்கு ஊக்கமளிக்கின்றார்.

    ஆனந்தக் கூத்தாடும் அரும்பிற்குத் தெரியாது
    அளவோடு
    நலம்காணும் நிலையென்றும் மகிழ்வென்று
    ஆசைகள் வார்த்தெடுக்கும் புதுமைகள் புரியாது
    அனுபவத்தால்
    வரும்வரையில் அதற்கென்ன எனுமனத்தால்
    கருப்புவெள்ளைக் காலமென்றால் களித்திடலாம்
    தினந்தோறும்
    உருமாறும் போதுதான் உள்ளவையே வெளிப்படும்பார்
    துருப்பென்று ஏதுமிலா வேட்டைக்குச் செல்வதுபோல்
    வருங்காலம்
    வந்துநிற்கும் வாசலது தெரியாமல்!

    தெரியாமல் வந்ததுகாண் இதுவென்று வெதும்பாமல்
    தெள்ளிய
    மனத்தோடு வளர்ந்து வரவேண்டும்
    புரியாத புதிரெல்லாம் அறிவோடு வென்றிட்டுப்
    புதுவுலகம்
    படைத்திடவே பூண்டிடுவாய் உறுதியையும்
    நிலவொன்று வானில்காண் தேய்ந்தென்றும் வளர்வதுபோல்
    தோல்விகண்டு
    துவளாமல் நீயென்றும் நடைபோட
    நீரென்றும் விலகாது நிலத்தோடு காய்வதுபோல்
    உலகிலுந்தன்
    புகழிணைய யானுன்னை வாழ்த்துகிறேன்!

    *****

    ”பெண்ணே! அன்னையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆடிய ஊஞ்சல்; பூங்காவில் பாங்காய் விளையாடிய ஊஞ்சல் என நீ ஊஞ்சலாடிய இடங்கள்தாம் எத்தனை! ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததே இம்மானுட வாழ்க்கை என்பதை இந்த ஊஞ்சல் விளையாட்டு உன்னதமாய் விளக்குகின்றதோ!” என வியக்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

    இளம் பெண்ணே! உன் இளமையை ஊஞ்சலாக்கி விளையாடு,
    உன் எண்ணச் சிறகினை விரித்து மகிழ்வுடன் விளையாடு
    ஊஞ்சல் ஆடும்போது உனது உடலும், கூந்தலும் ஆடுதே
    உனது எண்ணமும், உள்ளமும், சிரிப்பினை வெளிப்படுத்துதே!
    சிறு வயதில் அன்னையின் கழுத்தை கட்டிக்கொண்டு ஆடிய ஊஞ்சல்
    வளர்ந்தவுடன், பூங்காவில் நண்பர்களுடன் விளையாடிய ஊஞ்சல்
    வீட்டின் முற்றத்தில் விளையாடிய சங்கிலியால்ஆன ஊஞ்சல்
    உனது தலைமுறை காலம்காலமாக வீட்டினுள்ளே ஆடிய ஊஞ்சல்!
    திருமணத்தின்போது, கைபிடித்தவுடன் சேர்ந்து ஆடும் ஊஞ்சல்
    வாழ்வின் ஏற்ற இறக்கங்களை காட்டுவதே ஊஞ்சலின் நோக்கம்
    பின் நாளில் உனக்கு இந்தச் சந்தர்ப்பம் கிடைக்குமா என்ற ஏக்கம்
    உன் ஏக்கம் தீரத் திறந்த வெளியில் மரக்கிளையில் ஊஞ்சலாடுகிறாயா!

    *****

    ”அருமைப் பெண்ணே! ஊஞ்சலாடிப் பார்; உனக்குள் துணிவு வரும்; உள்ளம் உறுதிபெறும்; உடலும் வலிவுபெறும்!” என்று தன் கவிதையில் தன்னம்பிக்கை விதைக்கிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    ஆடுது பெண்ணூஞ்சல்: ஊஞ்சலாடும் சின்னப் பெண்ணே!
    உன்னதக் காலமிது என் கண்ணே!
    ஆடும் வரை ஆடி விடு அழகுப் பொன்னே!
    நீ வளர்ந்த பின்,உன்னை ஆட விடாது,
    இவ்வுலகம் என் அருமைப் பெண்ணே!
    ஆடும் உரிமை ஆணுக்கு மட்டும் என்று
    அம்பலத்தான் சொல்லியதாய்!
    கதை ஒன்று சொல்லிடுவார்!
    பெண்ணை அடக்கி வைத்திடுவார்!
    அடக்கம் என்னும் பெயர் சூட்டி
    பெண்கள் வளராமல் செய்திடுவார்!
    பெண்ணே ஊஞ்சலில் ஆடிப் பார்!
    உனக்குள் துணிவு வரும்!
    உள்ளம் உறுதி பெறும்!
    உடலும் வலிமை பெறும்!
    உயர்வுற வழி தோன்றும்!
    வானம் தொட்டுவிடும் தூரம்
    எனும் உண்மை புரிந்து விடும்!
    ஊஞ்சலாட உடனே வருவாய்
    என் அருமைப் பெண்ணே!

    *****

    ”வஞ்சகரின் சூழ்ச்சியை வெல்! நெஞ்சுரம் கொள்! அஞ்சுதல் ஒழி! சஞ்சலம் அழி!”  என ஊஞ்சலாடும் பெண் குழந்தைக்கோர் ’புதிய ஆத்திசூடி’ படைத்திருக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி. 

    ஊஞ்சலாடும் பெண்ணே உஷார்..!

    இங்கும் அங்குமாக ஆடியசைந்தாடும் ஊஞ்சல்தானது..
    ……….
    ஓய்ந்திடும்போது உதைத்தாடுவதினால் இன்பம் தரும்.!
    மங்காதபுகழுடன் வாழத்தான் நானிலத்தில் மாந்தர்கள்..
    ……….
    மன்றாடி வாழ்க்கையிலுயர ஊஞ்சல்போல ஆடுவர்.!
    தொங்கும் சங்கிலியே ஆடுமூஞ்சலுக்கு ஆதாரமதுபோல..
    ……….
    தொடருமுமின்ப துன்பபிணைப்பே நமக்குப் பிடிமானம்.!
    தங்குமுலகில் முன்னேற தடைகற்கள் பலவுண்டாமதை..
    ……….
    தக்கசமயம் வரும்போது தாண்டிவரப் பழகவேண்டும் .!
    பிஞ்சும்பூவும் காயும்கனியும் நிழல்தரும் மரத்தினிலே..
    ……….
    பிஞ்சு மனதுடன் ஆடிக்களிக்கும் வயதுதானெனினும்..
    ஊஞ்சலாடும் உல்லாசச்சிறுமியே உலகை மறந்தாடும்..
    ……….
    உனக்கொரு உபதேசம் சொல்லவந்தேன் கேட்பாயா..?
    நஞ்சில்லாப் பாம்புபோல் நட்புலகில் நடிப்போருண்டு..
    ……….
    நட்பாகப் பழகினாலும் யாரையுமெளிதில் நம்பிவிடாதே.!
    வஞ்சகமாந்தர்கள் செய்யும் சூழ்ச்சிவலையு மிருக்குமதில்..
    ……….
    வீழ்ந்திடாமல் போராடவும் தெரியவேண்டும் பாப்பா..!
    அஞ்சுதல் ஆருக்கும் கூடாதாம்..அறிமுகமில்லாநபரை..
    ……….
    அருகில்சேர்க்கா விலகியிருக்க வாழ்வில்நீ கற்றுக்கொள்.!
    சஞ்சலமென்பதும் வாழ்க்கையில் எப்போதும் வேண்டாம்..
    ……….
    சபலபுத்தி கொண்டோரை சற்றும்கிட்ட நெருங்கவிடாதே.!
    நெஞ்சை நிமிர்த்திநேரான பார்வையொடு கூர்ந்துநோக்கி..
    ……….
    நட்பெனும் போர்வையோடுவரும் நஞ்சைநீயறியவேணும்.!
    அஞ்சாமல் அவர்களைநீ எதிர்த்தாடப் பழகவெண்டும்..
    ……….
    அந்தகனை அடையாளம் கண்டொதுக்க வேண்டும்.!

    *****

    ”உலகெனும் ஊஞ்சலில் அம்மானை ஆடுகிறாள் அன்னை பராசக்தி. குழந்தாய்…! நீயும் அதுபோல் ஓடி விளையாடு; ஓய்ந்திருக்கலாகாது; வீட்டுக்குப் பெருமை சேர்; நாட்டுக்கு நலம்புரி!” என்று நவீன பாரதியாய் மாறி அருமையானதொரு ’பாப்பாப் பாட்டு’ பாடியிருக்கின்றார் திரு. ஜெயபாரதன்.

    உலகென்னும் ஊஞ்சல்.

    உலகென்னும் ஊஞ்சலில்
    பலயுக மாய் ஆடி,
    பந்துகளை
    அம்மானை ஆடுகிறாள் அன்னை !
    நில்லாமல் ஆடுகிறாள்,
    நம்மோடு,
    பல்லாங் குழிகளில்
    பளிங்கு களை இட்டு !
    ஊஞ்சல் ஆட்டம் நின்றால்
    உலகே ஓடிவிடும்
    அண்டவெளி நோக்கி !
    பல்லாங் குழி ஆட்டம்
    நின்றால்
    படைப்பு வேலை
    நிறுத்தம் அடையும் !
    உன்னை ஊஞ்சலில் ஆட்ட
    அன்னையைக்
    கூப்பிடு !
    பல்லாங் குழி விளையாட
    பக்கத்து வீட்டுப்
    பாவையை அழைத்திடு !
    ஓடி விளையாடு
    பாப்பா ! நீ
    ஓய்திருக்க லாகாது
    பாப்பா !
    கூடி விளையாடு
    பாப்பா !
    காலை எழுந்ததுடன்
    படிப்பு ! பிறகு
    கனிவு கொடுக்கும் நல்ல
    தோழியர் நட்பு !
    செய்யும் தொழிலால்
    நாட்டுக்கு
    நலம் புரியச் செல் !
    பெற்றோர் ஈன்ற பொழுதினும்
    பெரிது மகிழச் செய் !

    *****

    மாசில் பெண்மகவை ஊசலில் கண்டதும் தேசுமிகு கவிதைகளை பாசத்தோடு பொழிந்திருக்கின்றனர் கவிவலவர்கள். அவர்கட்கு என் மனங்கனிந்த பாராட்டு!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வுபெற்றிருப்பது அடுத்து…

    ஊஞ்சல்

    பண்பட்ட கலையா பண்பாட்டுக் கலையா
    வீரம் சொல்லும் மண்ணில்
    விவேகம் தரும் விளையாட்டு
    விஞ்ஞானம் கூறுகிறது முதுகுக் தண்டு பலம்பெறுமாம்
    வித்தைகள் புரியாமலே
    பிள்ளைத் தமிழின் பத்தாம் பருவமதில்
    விளையாடினோம் ஊசலாய்,
    கண்ணாமூச்சி விளையாடி
    கைகோத்தாடி கதைத்த காலமெல்லாம் நிழலாடும் மனத்தில்
    தீராத தாகமாய் நினைவரிசை
    பட்டாம் பூச்சியாக வலம்வரும் பருவம்
    நினைவில் கடிவாளம் போட மறுக்கும் கனவு
    மின்னல் பொழுதாய்ப் பருவம் கடந்தேன்
    இம்மண்ணில் இருக்கும் ஈர்ப்பால்
    இப்பெண்ணில் புதையும் நினைவை
    வானவில் கொடியில் உலர்த்தி வண்ணமேற்றும் மனது
    ஊஞ்சலில் குதித்தாடி
    உலகம் மறந்த பொழுதுகளை ஊரறியப் பேசுகிறேன்
    ஆலவிழுதுகளில் விளையாடினோம்
    குழந்தைப் பருவமதில்
    தாயின் சேலையே ஊஞ்சலாய்
    தாய் மணம் நுகர்ந்து தொட்டிலாடினோம்
    கயிற்றூஞ்சல் காற்றில் நலம் கேட்க
    கன்னிப் பருவமதில் கனவில் களித்திட்டோம்
    இறையவன்இறைவி களித்திட்ட பொன்னூஞ்சல்
    இல்லறச் சடங்கிலும் இணைபிரியாமலே
    கன்னியவள் கரம் பிடித்த காளையுடன்
    கவினுறவே ஊஞ்சலாடினோம்
    பாரம்பரிய ஊஞ்சல் பாங்குடனே பல பொருளில்
    இந்நூற்றாண்டில்….
    வாகனச் சக்கரமதில் வாகாய் வளைந்தாட

    பொன்னூஞ்சல் ஆடுமகளே!
    காலமிது காலம் கண்மணியே!
    சிறுவர் பெரியவர் பேதமின்றி
    நல்லவர் கெட்டவர் பேதமின்றி
    ஆட்டுவிக்கும் ஊஞ்சலில் நாளும் விளையாடு
    பேதைமை மறந்து சமத்துவ வானில் ஊஞ்சலாடு
    பிறர் ஊக்க முன்னேறு கண்ணே!
    உன்முயற்சியும் வேண்டுமடி பெண்ணே!
    ஊஞ்சல் சொல்லும் பாடம் அதுவே
    நிமர்ந்தாடு கண்ணே நெகிழ்ந்தாடு கண்ணே!
    விளையாட்டுக் காலமிது விரைந்தாடு கண்ணே!
    வரவேற்பறையைப் பிடித்திட்ட ஊஞ்சல்
    வரவேற்பாரற்றுப் பரணில் …..
    காரணத்தைக் கவனமதில் கொள்ள வேண்டும் காரிகையே!
    கணிப்பொறி விளையாட்டில் மூழ்கிய பிஞ்சுகளை
    கரம்பிடித்து நடத்துவோம் உடலியக்க விளையாட்டிற்கு

    பண்டைத் தமிழ்மண்ணில் முகிழ்த்த பெண்டிர் விளையாட்டுக்களில் ஒன்று ஊசல். பெண்பாற்பிள்ளைத் தமிழின் பத்தாவது பருவமாய்த் திகழ்வது ஊசல்.

    அன்று வீட்டின் வரவேற்பறையில் கம்பீரமாய்த் திகழ்ந்த ஊசல், இன்று கவனிப்பாரற்றுப் பரணேறிவிட்டதே எனும் தன் வருத்தத்தை, இளமையில் ஊசலாடிய இனிய நினைவுகளோடு பொருத்தமாய் இணைத்துத் தந்திருக்கின்றார் திருமிகு. மா. பத்ம பிரியா. அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிப்பதில் மகிழ்கின்றேன்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 124-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    ladyand sea

    வாரிதியை நோக்கிநிற்கும் காரிகையைக் காண்கின்றோம் திரு. ராகுல் ரவீந்திரன் எடுத்த இந்தப் படத்தில். புகைப்படக்கருவி தந்த காவியமா, கை புனைந்த ஓவியமா என்று ஐயுறும் வண்ணம் திகழ்கின்றது  இப்படம்!

    மனங்கவரும் கடலரசி, தன் எண்ணங்களை அலைகளாக்கி மாந்தர்க்கு வரைகிறாளோ மடல்?

    நீலமும் மஞ்சளும் இணைந்து கோலங் காட்டும் வானின் தோற்றமும் காணக் கவினே!

    கண்கொள்ளாக் காட்சியிதனைத் தம் கவிதைகளில் பதமாய் வார்த்தெடுக்க வருகிறார்கள் கவிஞர் பெருமக்கள்!

    ***

    ”கடலழகு, கடல் தரும் அலையழகு; வானழகு, வான் வரும் நிலவழகு. மண்ணழகு, மண் வந்த அத்தனையும் பேரழகு; இவற்றையெல்லாம் தனித்துநின்று இரசிப்பதுமே ஓரழகு” என்கிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    தனிமையின் மகிமை: கடல் அழகு !
    கடல் வரும் அலை அழகு!
    கடல் வாழ் மீன் அழகு!
    கடல் தரும் முத்தழகு!
    வான் அழகு!
    வான் சேர் வண்ணங்கள் அழகு!
    வான் தோன்றும் நிலவு அழகு!
    கண் சிமிட்டும் நட்சத்திரங்கள் தனி அழகு!
    முகில் அழகு!
    முகில் தரும் மழை அழகு!
    மண் அழகு!
    மண் தந்த அத்தனையும் பேரழகு!
    இத்தனையும் ரசிக்கும் பெண் அழகு!
    ரசிக்க வழி தந்த தனிமை தனி அழகு!
    பிறந்தது தனியாக!
    போவதும் தனியாக!
    தனிமை ஞானம் தரும்!
    தனிமை உனை உணர்த்தும்!
    தனிமை, இனிமை எனும்
    உண்மை, நீ உணர்ந்தால்!
    மன அமைதி, உடனே கை கூடும்!

    ***

    ”விண்ணைப் படைத்தான்; விரிகதிர் மதியொடு விண்மீனும் படைத்தான்; மண்ணைப் படைத்தான்; மண்ணொடு தொடரும் மாமலைகள் படைத்தான்; இவற்றையெல்லாம் கண்டு இரசிக்கும் கண்ணைப் படைத்தான்” என்று இறைவனின் படைப்பாற்றலை வியக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    இறைவனின் படைப்பாற்றல்..!

    அற்புதக் காட்சியொன்றை கண்டுவிட்டால் அதன்
    ……….அழகைப் படம்பிடித்து மூளைக்கனுப்பும் நம்மனது.!
    கற்பனைத் தேரிலேறி காட்சியோடது ஓடும்போது
    ……….கட்டுக்கடங்கா மகிழ்வும் புத்துணர்ச்சியு மதிலெழும்.!
    சுற்றிலும் அலைபாயும் அம்மனத்தைக் கட்டுப்படுத்த
    ……….சுகமாயங்கே காட்சிதரும்கடலும் மேகமும் நிலவும்.!
    பற்றுமிக்கப் புலவர்களதை பார்த்துவிட்டால் போதும்
    ……….பாட்டோடதைப் பண்ணுடன் பாமாலையாக்கி விடுவர்.!

    விண்ணைப் படைத்தானிறைவன் தொடரும் அதனுடன்
    ……….விரிகதிர் மதியொடு விண்மீனும் மேகமும் படைத்தான்.!
    மண்ணினைப் படைத்தான் மண்ணொடு தொடரும்
    ……….மலைகளும் மூவகை உயிர்களும் படைத்தான்..!
    தண்ணீரைப் படைத்தான் தொடரும் அதனுடன்
    ……….பன்னெடும்நதி கொடுக்கும்மழை கொடுத்ததுடன் புவி..
    மண்டலத்தில் காற்றைப் படைத்தான் அதனால்
    ……….பூங்காற்று தென்றலொடு உயிர்மூச்சைக் கொடுத்தான்.!
    தணலென நெருப்பைப் படைத்தான் அதனால்
    ……….எதையும் இயங்கவைக்கும் எரிசக்தி படைத்தான்.!

    எத்துணையோ நுண்ணுயிரும் மண்ணுயிரும் புவியுலகில்
    ……….இயற்கையாகத் தோன்றவொரு நெறிவகுத்தான் இறைவன்.!
    வித்தாக அவையெல்லாம்….விதையொன்றைப் படைத்தான்
    ……….வியந்துநோக்க எவ்வுயிர்க்கும் கண்களைப் படைத்தான்.!
    அத்தனையும் கண்டுகளித்து அனைத்தையும் பாதுகாக்க
    ……….பஞ்சபூத இயற்கையினைப் படைத்தனைத்தையும் காத்தான்.!
    இத்தனையும் விண்மண் நீர்நெருப்பு காற்றென விரியும்
    ……….இறைவனின் படைப்பாற்றலை யதிசயித்துப் பாடுகிறேன்.!

    ***

    ”கருநிலவுக்கு ஒளியூட்டூம் கதிரோனின்றி இருண்டுவிட்டது மருள்மாலை. ஈதொப்ப, மனைக்கு விளக்காம் மனைவியில்லையேல் மனை பாழ்; ஒளிரும் கதிரோனொத்த கணவனில்லையேல் வாழ்வு பாழ்” என்பது திரு. சி. ஜெயபாரதனின் கருத்து.

    அத்தமனம்!

    கரு நிலவுதான் நாம்
    காண்பது!
    ஒருமுகம் காட்டி நிலவு
    மறுமுகத்தை மறைக்குது!
    கரு நிலவுக்கு ஒளியூட்டும்
    கதிரோ னின்றி
    இருளடைந் துள்ளது
    இனிய மாலை பொழுது!
    கணவன் அத்தமித்த கருவானம்
    ஒளி மங்கி, இருள் மண்டி
    மனம் பொங்கி
    அழுகிறது!
    விடிவு காலம் வருமா?
    மனைக்கு விளக்கு வனிதை!
    மனைவி இல்லாத
    இல்லம் பாலை வனம்!
    ஆயினும்
    கதிரோன் இல்லாத
    தரணி இடுகாடு!

    ***

    படத்துக்குப் பொருத்தமாய்க் கருத்துள்ள கவிதைகளை அளித்துள்ள கவிஞர்களுக்கு என் பாராட்டு!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது இனி வருகின்றது…

    விடியுமா…?

    அலையே அலையே வருவாயே
    அங்கே அவனைக் காண்பாயா?
    சிலையாய் நானும் காத்திருக்கும்
    சேதி நீயும் சொல்வாயே!
    நிலையிலாச் செல்வம் போதுமென்பாய்
    நிம்மதி தரவே வரச்சொல்வாய்!
    கலைநிறை வானம் வெளுத்ததுவே
    காரிகை யெனக்கு விடியாதோ…?!

    தலைவனைப் பிரிந்து தவிக்கும் தலைவியொருத்தி தன் தாபத்தைக் கடலலைகளிடம் வெளிப்படுத்துகிறாள் இக்கவிதையில். நிலையில்லாச் செல்வத்தைத் தேடுவதில் முனைந்தால் இல்லறமாம் நல்லறமும் ஆடவர்க்கு மறந்துபோவதை நம் சங்கப்பாடல்கள் நிரம்பவே பேசுகின்றன. பொருளினும் தலைவனின் அருளே தலைவி என்றும் வேண்டுவது. அக்கருத்து இக்கவிதையில் வெளிப்படக் காண்கின்றேன்.

    நில்லாதவற்றை நிலையின என்றுணரும் புல்லறிவாண்மையை மென்மையாய்ப் பகடிசெய்யும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என்று அறிவிப்பதில் மகிழ்கின்றேன்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 123-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    சாலையின் ஓரத்தில் குவிக்கப்பட்டிருக்கும் கழிவுகளைத் தின்று நம்மைக் கழிவிரக்கம் கொள்ளவைக்கும் பசுவொன்றைப் படம்பிடித்து வந்திருக்கின்றார் திரு. முருகானந்தன். இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!

    cowonstreet

    பசுவைக் கோமாதாவாய்க் கும்பிடும் நம் சமூகம், அதன் கறவை நின்றதும் அதனுடனான தம் உறவை முறித்துக்கொண்டு அதனை அடிமாடாய் ஆக்குகின்ற அவலம், பயனில்லா உயிரெதையும் தள்ளிவைப்பதும் அதன் வாழ்வுக்குக் கொள்ளிவைப்பதும் மாந்த இயல்பு என்பதை மன்பதைக்குச் சொல்லாமல் சொல்கின்றது.

    சாலையில் உணவைத்தேடும் இந்த மாடு, நம் கவிஞர்களின் கற்பனைக்கும் நல்ல தீனி போட்டிருக்கும் என்று நம்புகின்றேன்.

    ’செவிநுகர் கனிகளை’ நமக்குத் தரவிருக்கும் கவிகளை இனி வாழ்த்தி வரவேற்கின்றேன்!

    ***

    தன் பாலை மட்டும் விரும்பும் மனிதன் தன்பால் அன்பின்றி நடந்துகொள்வதை உணர்வுபூர்வமாய்ப் பசு விவரிப்பதைத் தன் பாட்டில் காட்டியுள்ளார் திரு. ரா. பார்த்தசாரதி.

    கோமாதா என் குலமாதா என்று சொல்வதில்தான் பெருமை
    தனியே பசுவினை வீதியில் உணவுக்காக அலையவிடுவது சிறுமை
    நான் பால் கொடுத்தால்தான் எனக்கு நல்ல உணவு
    பாலை நிறுத்தினால் அலையவிடுவதோ நடைபாதைத் தெருவு !

    வயிறுக்காக கண்டதை தின்று நான் உயிர் வாழ்கின்றேன்
    என் உடம்பு பாழானாலும் ஊசி போட்டு பால் கறக்கின்றான்
    தவிர, வைக்கோல் கன்றை வைத்தும் ஏமாற்றி பால் கறக்கின்றான்
    ஏனோ, இன்று வரை காப்பாற்றியதற்கு நான் பாலை கொடுத்தேன்!

    என் பாலிலும் தண்ணீர் கலந்து, கலப்படம் செய்து விற்கின்றான்
    என் முதுமையை உணர்ந்து என்னை தெருவில் அலைய விடுகிறான்
    என் கன்றுகளை சொத்தாக கொடுத்து அவனை மேம்படுத்தினேன்
    என்னைச் சொத்தையாக நினைத்து அடிமாடாய் நினைக்கின்றான் !
     

    நம் உயிரையும், உடலையும் வளர்ப்பது தாயும், பசுவுமே
    பால் தரும்வரை அதனை தெய்வமாய் நினைக்கின்றோம்
    முதிர்ந்த பசுவினை கோசாலையில் விடத் தோன்றவில்லை
    தாயை முதியோர் இல்லத்திலிருந்து அழைத்துவர மனமில்லை!

    பறவைகளும், மிருகங்களும் ஜாதி மதம் பார்ப்பதில்லை
    பணத்தால் ஏழை பணக்கார ஜாதி தோன்றாமல் இல்லை
    தாயாரையும் பசுவினையும் தெய்வமாகக் கருதவில்லை
    ஆறறிவிற்கும் ஐந்தறிவிற்கும் இவ்வுலகில் மதிப்பில்லை!

    ***

    ”பசு பால்கொடுக்கும் என்று போதித்த நம் கல்வி, பசுவுக்கும் பசியெடுக்கும்; அது புசிக்க நல்லுணவை நாம் தரவேண்டும் என்று போதிக்கத் தவறிவிட்டதே!! கோமாதா என்று பசுவைக் கொண்டாடவும் வேண்டாம்; அடிமாடாய் (இறைச்சிக்கு) அதனைத் துண்டாடவும் வேண்டாம்” என்று வேதனையோடு விளம்புகின்றார் திரு. அ. இராஜகோபாலன்.

    விதியோ?

    பசு பால் கொடுக்கும்என்றுதான்
    பள்ளியில் கற்றோம்.
    பசுவின் பசி பற்றியும்
    அதன் உணவின் ருசி பற்றியும்
    பாடத்தில் இல்லை.

    புல்லும், நெல்லும் விளைந்த மண்ணில்
    கட்டிடங்கள் முளைத்துவிட்டன.
    இந்த,
    நகரப் பசுக்களுக்கு
    ருசிக்க அல்ல, பசிக்குக்கூட,
    எத்தனை தேடியும், பாவம்,
    கழிவுகள் மட்டுமே காணக் கிடைக்கின்றன.

    நெகிழியைத் தின்று கழிந்து சாக விதியோ?
    கோ மாதாஎன்று போற்றுதலும் வேண்டாம்.
    அடிமாடு என்று அழித்தலும் வேண்டாம்.
    அது பற்றியதான
    அரசியல் உரசல்களும் வேண்டாம்.

    நம் போல்
    ரத்தமும் சதையும் கொண்ட
    இன்னொரு உயிர்.
    வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே.

    (நெகிழி = பாலித்தீன் காகிதங்கள்)

    ***

    ”பயிர்த்தொழில் செய்து உயிர்வளர்க்க வழியின்றிப் பிழைப்புக்காகப் பட்டணம்வந்த உழவனுடன் அவன் வளர்த்த மாடும் வந்தது; புல் உணவு கிடைக்காது குப்பைகளைத் தின்று நொந்தது” என்று உளம் வருந்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பட்டணந்தான்

    கழனியில் இன்று பயிரில்லை
    கட்டிடம் பயிராய் வளர்ந்ததுவே,
    உழவனும் இங்கே தங்கவில்லை
    ஊரை விட்டே போய்விட்டான்,
    பழகிய மாடும் அவனுடனே
    பட்டணம் வந்து சேர்ந்ததம்மா,
    வழக்கமாய்த் தின்னும் புல்லில்லை
    வாய்க்குக் கிடைத்தது குப்பைகளே…!

    ***

    ”பட்டிக்காட்டிலேயே புல் இல்லாதபோது பட்டணத்தில் பசும்புல்லின் தலை காண்பதேது?  புல்முளைத்துப் பசு மேயும் பொற்காலம் பட்டணத்தில் வாய்த்திடுவ தெக்காலம்?” என்று ஏக்கத்தோடு வினவுகின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

    பட்டணத்தில் புல் முளைக்காது!

    கெட்டுப்
    பட்டணம் போ !
    பட்டி யெல்லாம் வெறும்
    பாலை யானது !
    ஆறெல்லாம் நீரின்றி
    அழுது கொண்டி ருக்குது !
    மழை யின்றிப்
    பட்டியிலே புல் இல்லை !
    பட்டணத்தில்
    பச்சைப் புல் முளைக்குமா ?
    கண்ணீர் வரவும்
    தண்ணீர் இன்றி முகமும்
    காய்ந்து விட்டது!
    பட்டணத்தில் பட்டினிக்குப்
    பஞ்சம் இல்லை!
    லஞ்சம் வாங்கிய அரசினர்
    லட்சாதி பதியாகிக்
    கோடீஸ்வர ராகிச் சிறையில்
    வாடி வதங்கித்
    தேடுகிறார் தெய்வத்தை !
    பால் கறந்த பசு மாடு
    பட்டினியில்
    தோலும் எலும்பு மானதில்
    வியப்புண்டா ?
    புல் முளைத்துப் பசு மேயும்
    பொற்காலம்
    புலர்வது எக்காலம் ?

    ***

    ”தன் உதிரத்தைப் பாலாக்கி மனிதருக்குத் தருகின்ற பசு, பெற்ற தாயினும் நனிசிறந்தது; பால் மட்டுமா தருகின்றது பசு? தன் தோலைக்கூட அல்லவா செருப்பாய்த் தருகின்றது! ஆதலால், பசு ’வதை’ தடுப்போம்; பசுவதைக் காப்போம்!” என்று கருணையோடு கழறுகின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    பட்டணத்து மாடுகள் : மாடென்றால் செல்வம் என்று வான் மறை பேசும்!
    மாடென்றால் தியாகம் என்று என் மன மொழி பேசும்!
    அயராமல் உழைப்பவரை மாடென்று சொல்வதுண்டு!
    அன்னைக்கு ஈடாய் , அவனியிலே பசுவன்றி யாருண்டு?
    உதிரத்தை, அமுதாக்கித் குழந்தைக்குத் தருபவள் தாயன்றோ!
    உதிரத்தை, பாலாக்கி, மனிதருக்குத் தருகின்ற. பசு மாடு தாய்க்கும் மேலன்றோ!
    ஈசனைச் சுமப்பதும் மாடன்றோ!
    நிலத்தை உழுவதும் மாடன்றோ!
    தன் தோலைக் கூட செருப்பாய்த் தருவதும் மாடன்றோ!
    தன்னைக் கொடுப்பதில், வாழைக்கீடு மாடன்றோ!
    இத்தனைச் சிறப்புகள் இருந்தாலும் மாட்டின்
    இன்றைய நிலையைப் பாருங்கள்!
    வயிற்றுப் பசிக்குக் கண்டதை தின்னும்
    கொடுமையை இங்கே பாருங்கள்!
    காகிதம் தின்று, நமக்குப் பாலைத் தரும்
    அவலத்தை இங்கே பாருங்கள்!
    பசு வதை சட்டம். உண்மையாய் வரட்டும்!
    பசியால் மாடுகள் பரிதவித்துப் போகாமல்!
    உணவு தரும் உணர்வு, பட்டணத்து மனிதருக்கு ,உடனடியாய் வரட்டும்!
    அன்ன தானம் மனிதருக்கு மட்டுமன்றி,
    உணவு தானம் மாட்டிற்கும் நடக்கட்டும்!

    ***

    ”பண்ணை நிலமெல்லாம் பங்களாக்கள் ஆனது; பசுஞ்சோலைகளெல்லாம் தார்ச்சாலைகளாய்ப் போனது. எனவே, புல்உணவு கிடைக்காமல் செல்வழியினிலே கிடைப்பதையே உணவாகப் புசிக்கின்றோம். சொல்லெடுத்துப் பாப்புனையும் பாவலரே! என் பசி போக்கும் வழியொன்று புகலுங்களேன்!” எனும் ஆவின் குரலைத் தன் பாவில் பதிவுசெய்திருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    ஆவின் குரல்..!

    நஞ்சையும் புஞ்சையும் நான்கு போகமும்..
    ……..
    நலமாய் விளைந்திட்ட நன்னிலம் தான்!
    தஞ்சைத் தரணியென்று போற்றிப் புகழ்ந்த
    ……..
    தாரணி அறிந்த நெற்களஞ்சிய நகரம்தான்!
    வஞ்சகர் கைக் குளிப்போது அடைபட்டே..
    ……..
    வயல் நிலமெல்லாம் பாழ்பட்டுப் போனது!
    தஞ்சமடைந்து தாழ்கிறோம் தரணியிலே இன்று..
    ……..
    பஞ்ச முண்டானதால்பச்சைப் புல்லுக்கே.!

    விண்ணை முட்டும் வானுயர் கோபுரம்தனை..
    ……..
    வியந்து மனிதர்கள் மட்டுமே நோக்கமுடியும்.!
    பண்ணை நிலமுழுதும் பங்களாக்கள் ஆனது..
    ……..
    பச்சை வயல்களெலாம் சாலைகள் ஆனதே.!
    கண்ணை முட்டும் கண்ணீர்க் காட்சியாக..
    ……..
    கழினியும் காடுமெங்கே காணாமல் போனது?!
    மண்மறைக்கும் தார்ச்சாலை யெங்கும் குப்பை..
    ……..
    மலையால் பச்சைப் புல்லுக்குக் கூடப்பஞ்சம்.!

    ஆறில்லை என்றாகிப் போனது எங்கும்..
    ……..
    அனைத்தும் அறிவியல் ஆன பின்புதான்.!
    சோறில்லை என்றாகிப் போனது எங்கும்..
    ……..
    நீரில்லை நிலத்தடியில் என்றாகிப் போனதாலே.!
    பாரிலிலை இதுபோல் கொடுமையெனப்பச்சை
    ……..
    பசேலென இருந்த வயல்வெளி யழித்தசெயல்.!
    ஊரிலில்லை பசுமைப் புல்வெளி இனிவாயில்லா..
    ……..
    உயிர்களுக்குப் பசித்தால் குப்பைதான் உணவு.!

    கோவின் ஆட்சியில் ஆவுக்கும் நிலத்துக்கும்..
    ……..
    கோவிலுக்கும்குந்தக மென்றுமில்லை மகனே.!
    நாவினை யடக்கி நாங்கள் இளைத்து விட்டோம்..
    ……..
    நற்செயலாகப் பாலைக் கொடுத்தே பழகிவந்தோம்.!
    ஆவின் பசிக்கு அறுகம்புல்லாவது கிடைக்குமா.?
    ……..
    அம்மாவெனும் குரலில்..ஆவின்குரல் கேட்கிறதா.?
    பாவின் துணையொடு புலவர்களே நீர்..ஆவின்..
    ……..
    பசிக்கொரு உபாயமுந்தன் பாட்டிலே கூறுவீரே..!

    ***

    மாடு படும்பாட்டை உள்ளம்தொடும் வரிகளால் பாட்டுக்களாக்கியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டு!

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதை நம் கவனத்திற்கு…

    ஒரு பசுவின் சுய சரிதை

    ‘கோ’ என்றால் குலமகளாகக்
    கொண்டாடிய தேசம் ஒன்றில்
    கன்றுக்குக் குட்டியாக நானும்
    அன்றொரு நாள் அவதரித்தேன்!

    பச்சைப்பசேல் கழனித் தோட்டம்
    படுத்துறங்க மாட்டுத் தொழுவம்
    பழகித் திரிய அத்துணைச் சொந்தம்
    பண்ணை வீட்டில் நாளும் இன்பம்!

    வளமை எல்லாம் வானில் மறைய
    வந்ததன்றோ வறட்சியும் பஞ்சம்
    நதி நீரைத் தடுத்க ஓர் கூட்டம்
    எரிவாயு எடுக்க ஓர் கூட்டம்

    அவரவர் செயும் அரசியல் சூதில்
    பகடைக் காயானதினாலே
    பல தூரம் நடந்து நடந்து
    அபலை நான் நகரம் சேர்ந்தேன்

    சிறு புல்லும் தென்பட வில்லை
    சீண்டுபவர் எவரும் இல்லை
    பெரு நகரின் பேருந்துக் கிடையில்
    நடப்பதுவே தினம் ஒரு தொல்லை

    அடைக்கலம் புகத் தொழுவமும் இல்லை
    அணைத்துக் கொள்ள உழவனும் இல்லை
    எஞ்சிய தென்றன் உணவாய் இன்று
    எச்சில் குப்பை கழிவுகள் மட்டும்!!

    தன் பழைய வளமான வாழ்வையும், இன்றைய அவல வாழ்வையும் அசைபோட்டுப் பார்க்கும் பசுவினை நம் கண்முன் நிறுத்தி நம்மைக் கலங்கச் செய்திருக்கும் கவிஞர் திருமிகு. இராஜலட்சுமி சுப்பிரமணியத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • பசிப்பிணி மருத்துவம்!

    -மேகலா இராமமூர்த்தி

    ”பத்தும் பறந்திடும் பசிவந்தால் மறந்திடும்
    இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா” என்று பாட்டெழுதி வறுமையின் கொடுமையை உருக்கமாய் உலகுக்கு உணர்த்தினார் கவியரசு கண்ணதாசன். வறுமை இளமையில் மட்டுமா கொடுமை? இல்லை… முதுமையிலும் அது கொடுமைதான். ஏன் எந்தப் பருவத்தில் வறுமை வந்தாலும் அது கொடுமைதான்…அவ்வாழ்வே வெறுமைதான்!

    பசிவரப் பத்தும் பறந்திடும் என்கிறாரே கவிஞர்…அவை எவை?

    “மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
    தானந்
    தவம்உயர்ச்சி தாளாண்மை தேனின்
    கசிவந்த
    சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
    பசிவந்
    திடப்பறந்து போம்”

    மானம், குடிப்பிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடைமை, தானம், தவம், உயர்வு, தொழில்முயற்சி, தேன்மொழி பேசும் பெண்கள்மீது வருங் காதல் ஆகியவையே அப்பத்து. இவ்விவரத்தை நமக்குத் தருவது ஔவையின் ’நல்வழி.’  வறுமை வந்தால் இப்பத்துக்குமே வந்திடும் ஆபத்து!

    காரிகையர் மீது வரும் காதலைக் கூடப் பொசுக்கிவிடக் கூடியது பற்றியெரியும் பசித்தீ என்பது பசியின் வீரியத்தைப் பாருக்கு உணர்த்துகின்றது.

    பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
    நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்
    பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
    பசிப்பிணி எனும் பாவி”
    என்று பசியின் கொடுமையை உணர்த்தி, அதனைப் பாவி என்று ஏசுகின்றது மணிமேகலைக் காப்பியம். ’இன்மை என ஒரு பாவி’ என்று ஏற்கனவே வள்ளுவர் வறுமையைச் சாடியிருப்பது நாமறிந்ததே. அதைத்தான் தண்டமிழ் ஆசான் சாத்தனார் சற்றே மாற்றிப் பசிப்பிணி எனும் பாவி என்கிறார்.

    பிணியென்று வந்துவிட்டால் அதற்கு மருத்துவம் தேவையல்லவா?

    பசிப்பிணிக்கு மருத்துவம் அப்பிணியால் பீடிக்கப்பட்டு வாடுவோர்க்கு, வருந்துவோர்க்கு வயிறார உணவளிப்பதே.

    வந்தோர்க்கெல்லாம் வரையாது உணவளித்த வள்ளல் ஒருவனைப் ’பசிப்பிணி மருத்துவன்’ என்று புறநானூற்றுப் புலவரொருவர் புகழ்ந்துரைக்கின்றார். அவர் சாமானியர் அல்லர்; சோணாட்டு வேந்தராகிய குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் எனும் அரசப் புலவர் அவர்!

    யான்வாழு நாளும் பண்ணன் வாழிய
    பாணர் காண்கிவன் கடும்பினது இடும்பை
    யாணர்ப் பழுமரம் புள்ளிமிழ்ந் தன்ன
    ஊணொலி அரவந் தானுங் கேட்கும்
    பொய்யா எழிலி பெய்விட நோக்கி
    முட்டை கொண்டு வற்புலஞ் சேரும்
    சிறுநுண் ணெறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்
    சோறுடைக் கையர் வீறுவீ று இயங்கும்
    இருங்கிளைச் சிறாஅர்க் காண்டுங் கண்டும்
    மற்றும்
    மற்றும் வினவுதுந் தெற்றெனப்
    பசிப்பிணி
    மருத்துவன் இல்லம்
    அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே. (புறம் – 173: குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்) 

    ”என் வாழ்நாளையும் பெற்று நீ வாழ்க” என்று சிறுகுடிகிழான் பண்ணனை வாழ்த்தியபடிச் செல்கின்ற பாணர்களே! இதோ என்னருகில் நிற்கும் இந்தப் பாணர்களின் வறுமையை நோக்குங்கள். பழுமரத்தில் பறவைகள் ஆரவாரிப்பதுபோல் ஊணொலி அரவம் எங்கும் கேட்கின்றது. தப்பாது மழை பெய்யுங் காலம்நோக்கித் தம் முட்டைகளைச் சுமந்தவாறு மேட்டுநிலத்தை நோக்கி நகரும் சிற்றெறும்புகளின் வரிசையொழுங்குபோலச் சோறுடைய கையராய்த் தம் சுற்றத்தோடும் சிறுபிள்ளைகளோடும் செல்வோரைக் காண்கின்றபோதும் எம் பசிவருத்தத்தால் மீண்டும் மீண்டும் உம்மைக் கேட்கிறோம்… “பசிப்பிணி மருத்துவன் (சிறுகுடிகிழான் பண்ணன்) இல்லம் பக்கமா… தூரமா… எமக்குக் கூறுங்கள்?” என்று தன்னை ஓர் இரவலனாய் உருவகித்துக் கிள்ளிவளவனே பாடிய அற்புதப் பாடலிது.

    அவனால் பசிப்பிணி மருத்துவனாய்ப் பாராட்டப்பெற்றுத் தனக்குரிய வாழ்நாளும் பெற்று வாழ்க என்று வாழ்த்தப்பெறுபவன் சிறுகுடி எனும் சோழநாட்டுச் சிற்றூரில் வசித்துவந்த பண்ணன் எனும் நிலக்கிழான். அரசனையே (அவனினும் எளிய) ஓர்  நிலக்கிழானின் கொடைத்தன்மை பெரிதும் கவர்ந்து, அவன்பால் அன்புகொள்ள வைக்கின்றதென்றால் அக்கிழானின் வண்மை உண்மையிலேயே போற்றத்தக்கதுதான்!   

    மன்பதையில் வாழும் மக்கள் யாக்கை உணவின் பிண்டமே ஆகும். ஆதலால் உண்டிகொடுத்தோர் மானுடர்க்கு உயிர்கொடுத்தோரே ஆவர். மாதவிமகள் மணிமேகலை வற்றாது சுரக்கும் அமுதசுரபி எனும் அட்சய பாத்திரங்கொண்டு பசியால் வாடுவோர்க்கெல்லாம் வரையாது உணவூட்டி அறச்செல்வியாய்த் திகழ்ந்தாள்; புகார்நகரச் சிறைக்கோட்டத்தையே அறக்கோட்டமாய் மாற்றினாள் என்று அவள்புகழ் பாடுகின்றது மணிமேகலைக் காப்பியம்.

    வளமையுடையோர் இருப்பதுபோலவே வறுமையுடையோரும் வையத்தில் என்றும் இருக்கவே செய்கின்றனர். எல்லாரும் சமநிலை எய்துந்தன்மை ஏட்டளவிலும் பாட்டளவிலுமே இன்றுவரைச் சாத்தியமாகியிருக்கின்றது; நாட்டளவில் இன்னும் அது சாத்தியமாகவில்லை. ஆதலால், தம் செய்வினைப் பயனால் வளமையும் வசதியும் வாய்க்கப்பெற்றோர், வறுமையாளரின் இன்மையைப் போக்குதற்கும் அவர்வாழ்வின் புன்மையை நீக்குதற்கும் தம் செல்வத்தின் சிறுபகுதியையேனும் பயன்படுத்துதல் வேண்டும். ’செல்வத்துப் பயனே ஈதல்’ என்பது சான்றோர் நன்மொழியன்றோ!

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 122-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    dryleaf

    பசும்புல்லின் உச்சிமீது ஒய்யாரமாய் வீற்றிருக்கும் சருகை அருகுசென்று அழகாய்ப் படம்பிடித்து வந்துள்ளார் ஒளிஓவியர் திருமிகு. ராமலக்ஷ்மி. இப்படத்தைக் கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விரு பெண்மணிகளுக்கும் என் கனிவான நன்றி!

    பச்சிலை பழுத்து மண்ணேகுவதுபோல், உடலென்னும் துச்சிலைச் சார்ந்திருக்கும் உயிரும் காலனின் அழைப்புவரும் வேளையில் உடல்நீத்து விண்ணேகுகின்றது! இலை சொல்லும் நிலையாமைப் பாடம் மானுடர் அனைவரும் கற்கவேண்டிய ஒன்றல்லவா?

    புல்லையும் சருகையும் வைத்துப் புதுக்கவிதை புனையக் காத்திருக்கிறார்கள் புலவர் பெருமக்கள்; அவர்களை அவைக்கழைப்போம்!

    ***

    ”தாத்தனுக்கும் பேரனுக்கும் நடுவிருக்கும் நல்லுறவு, தொடக்கத்திற்கும் முடிவிற்குமான தொடர்கதையின் ஒரு தொகுப்பு” என்று வாழ்க்கையை அனுபவித்தறிந்த முதுமையொன்று இளமையிடம் இன்பமாய்ப் பகிர்ந்துகொள்வதைத் தன் கவிதையில் பதிவுசெய்திருக்கின்றார் திருமிகு. இராஜலட்சுமி சுப்ரமணியம்.

    தலைமுறை

    வையகம் என்ன வென்று
    வாழ்ந்து பார்த்து அனுபவித்த
    என் நாட்களவை நிறைவடையும்
    வயோதிக வேளை தன்னில்

    என்ன தான் உலகென்று
    வாழ்ந்து பார்க்க வந்தவன் நீ
    என் னுலகாக மாறியெனைப்
    புதுப்பித்து உயிர் ப் பித்தாய் ….

    என்னுள் மறைந் திருக்கும்
    குழந்தை யதை எழுப்பிவிட்டு
    உன்னுள் தொலைக்கச் செய்யும்
    மாயம் உந்தன் விளையாட்டு!!!!

    எத்தனை கவலைகள்
    எண் ணத்தில் இருந்தாலும்
    அத்தனையும் மறைந்து விடும்
    முத்தே உன் மொழிகேட்டு….

    தத்தித் தத்தி நடந்து வந்து
    தாத்தாயென்றழைக் கையிலே
    என்தலைமுறை”- யே உனைவாரி
    முத்தம் வைக்கத் தோன்றுதடா

    தாத்த னுக்கும் பேரனுக்கும்
    நடுவி லிருக்கும் நல்லுறவு
    தொடக்கத் திற்கும் முடிவிற்குமான
    தொடர்கதையின் ஒரு தொகுப்பு

    ஓய்வெடுக்கும் வயதி லென்னை
    ஓயாமல் உன்தன் பின்னே
    ஓட வைக்கும் ஓவியமே கேள்

    ஓர் அவாவும் எனக்குள் ளுண்டு

    அன்று துளிர்த் தெழுந்து
    அகிலம் காண ஆசைப்படும்
    பச்சைப் புல்வெளி மேல்
    படர்ந்திடும் ஓர் சருகாய்

    அனைத்தும் அடங்கி ஆடி ஓய்ந்து
    உடல்விட்டு எந்தன் உயிர்நீங்கும் பொழுது
    வலி யேதும் அறியாமல்; உனை நீங்கிப் பிரியாமல்
    இன்பமே எல்லை யென்று இளைப்பாற வேண்டும்.
    உன் மடிமீது நானும்
    என் தலை கோதி நீயும்!!!!

    ***

    பழுத்துவீழ்ந்த இலைகண்ட பசும்புல் இளமைச் செருக்கோடு ஏளனமாய்ச் சிரிக்க, வாழ்வின் நிலையற்ற தன்மையை புல்லுக்குப் புரியும்வண்ணம் நல்லசொல்லெடுத்துச் சருகு உரைப்பதைக் கேட்கமுடிகின்றது திருமிகு. ராதா மரியரத்தினத்தின் பாவில்.

    காலைக் கதிரவனின்
    ஒளி முத்துக்களைக் 
    வயிற்றில் தாங்கியபடி 
    வளைந்து மிளிர்ந்தன புற்கள்
    அவற்றின் கண்களிலோ பெருமிதம்
    பசுமைகளுக்கெல்லாம் தாமே
    குத்தகை எடுத்தது போலப் பெருமிதம்
    கண்ணுக்கெட்டிய இடமெல்லாம் பசுமை
    தூர நின்ற மரத்தில் 
    பழுத்துச் சுருங்கிய இலையொன்று
    இனித் தாக்குப்பிடிக்கவியலாத நிலையில்
    விடுதலையடைய வீசிய காற்று
    அதனை எடுத்துச் சென்று
    தூரத்திலிருந்த பசும் தரையில் போட்டது
    தீண்டத் தகாதவனைப் போல
    பசுமைகள் கொக்கரித்தன
    ஏளனமாகப் பார்த்தன
    இலை மெதுவாகப் பேசியது
    என் தாய் மிக வலிமை மிக்கவள்
    இன்று முளைத்து நாளை கருகும் புல்லல்லள் அவள்
    அவள் பல நூறு ஆண்டுகள் வாழ்வாள்
    பிறப்பு போல இறப்பு நிச்சயம் அது ஒரு நாள் உனக்கும் புரியும் என்றது

    ***

    ”பச்சைப் பசேல் பசுமையா? கருகிவீழும் சருகு நிலையா? இதில் எது நிலையானது…நிஜமானது? மண்ணில்தோன்றிய அனைத்தும் சருகாகி மறைவதே வல்லவன் வகுத்த விதி…இதற்கில்லை விலக்கு!” எனத் துலக்கமாய்ச் சொல்லுகின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

    எது நிஜம் ?

    கண்ணைக் கவரும்
    பச்சைப் புல்தளம் நிஜமா ?
    அல்லது
    கருகிப் போன சருகுதான்
    நிஜமா ?
    சிரசிலிருந்து கீழே விழுந்தால்
    உரோமத் துக்கு
    ஒரு மதிப்பில்லை !
    பச்சைக் கம்பளப் பின்புலம்
    நிஜமா ?

    போலிப் பின்புலம் !
    நீர் வறண்ட பாலையில்
    வேர் விடுமா
    ஆல மரம் ?
    பச்சைப் புல் எல்லாம் கரிந்து
    நரையாகி
    ஒருநாள் சருகாகும் !
    சருகெல்லம் மீண்டும் கண்கவர்
    பச்சை இலை ஆகுமா ?
    பிறந்த ஒவ்வொன்றும் பசுமையாய்
    இளமையில் கவர்ந்து
    முதுமையில் கூனிக் குறுகிச்
    சருகாய்ப் போகும்
    இதுவே விதி !

    ***

    ”பச்சை நிரந்தரமன்று..உன் பகட்டும் நிரந்தரமன்று” என்று பசும்புல்லுக்குச் சுடச்சுட வாழ்க்கைப் பாடம் புகட்டும் அனுபவசாலியான சருகைக் காண்கிறோம் திரு. செண்பக ஜெகதீசனின் கவிதையில்!

    நிலையல்ல

    பச்சையாய்த்தான் இருந்தேன்,
    பழுத்துதிர்ந்து சருகனேன் இன்று..

    உயரத்திலிருந்தேன் ஒயிலாக,
    உதிர்ந்த சருகாய் இன்று..

    பரிகாசம் செய்யாதே
    பச்சைப் புல்லே,
    பச்சை நிரந்தரமல்ல
    உன்
    பகட்டும் நிரந்தரமல்ல..

    வான்மழை பொய்த்தால்
    வாடிவிடுவாய் நீ,
    மனிதன் நினைத்தால் நீ
    மாண்டுவிடுவாய்..

    காற்று வந்தது,
    கொண்டுசென்றது சருகை
    கதைசொல்ல வேறிடத்தில்…!

    சருகையும் புல்லையும் வைத்து அருமையாய் வாழ்வியல் உண்மைகளை விளம்பியிருக்கின்றனர் நம் வித்தகப் புலவர்கள்; பாராட்டுக்கள் அவர்களுக்கு!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது அடுத்து…

    நிலையில்லா நிலை

    இலையாய் நான் இருந்த கதை
    கேளாயோ பச்சைப் புல்வெளியே!
    பூமித்தாய் மடியினிலே விதை ஒன்று
    அழகுச் செடியாய் பிறந்ததம்மா!
    அச் செடியில் தளிர் இலையாய் இருந்து
    வந்த தங்க மகன் நானம்மா!
    மொட்டோடும், மலரோடும்

    ஆடி மகிழ்ந்ததும் நிசமம்மா!
    காயோடும், கனியோடும்
    களித்துக் கிடந்ததும் உண்டம்மா!
    மரப் பெண்ணின் மானம் காக்க
    நானே ஆடையாய் இருந்ததும் உண்டம்மா!
    காற்றுத் தேவன் ஆணைப்படி
    பூமியில் விழுந்தேன் நானம்மா!
    புதிய இலைகள் வாழ்வதற்கு
    பழைய இலை நான் உதிர்ந்து விட்டேன்!
    சருகாய் நானும் உலர்ந்து விட்டேன்!
    மண்ணில் கலந்து மறையுமுன்னே!
    மனதில் பட்டதைச் சொல்லிவிட்டேன்!
    ’நிலையாமை ஒன்றே நிலை’ என்னும்
    உண்மை நானும் உணர்ந்து விட்டேன்!
    மனிதர்கள் உணர்ந்திட நான் உரைத்தேன்!
    வாழ்ந்து முடித்த மனிதர்களே!
    வாழ்க்கைத் தத்துவம் தெளிந்திடுங்கள்
    இளைய தலைமுறைக்கு இடம் கொடுங்கள்!
    இளைய தலைமுறையே, மூத்த தலைமுறை
    இளைப்பாற, இதமாய் அவர்களைத் தாங்கிடுங்கள்! !

     ’பழையன கழிதலும் புதியன புகுதலுந்தானே’ வாழ்க்கை நியதி? அதற்கு இலைகளும் விதிவிலக்கிலையே! ’நிலையாமை ஒன்றே நிலையானது’ எனும் வாழ்க்கைத் தத்துவத்தைத் தன்கவி வழியே நம்செவிபுகச் செய்திருக்கும் திரு. பழ. செல்வமாணிக்கத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 121-இன் முடிவுகள்

     

    -மேகலா இராமமூர்த்தி

    coinsinhand

    உழைப்பின் கறைபடிந்த மனிதரை அக்கறையோடு படம்பிடித்து வந்திருக்கின்றார் திரு. ஜேக்ஸன் ஹெர்பி. படக்கவிதைப் போட்டிக்கு இந்தப் படத்தைத் தேர்வுசெய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். படப்பிடிப்பாளர், தேர்வாளர் இருவரும் என் நன்றிக்குரியோர்.

    உழைப்பில் வரும் கறையில் குறையில்லை. எனினும் இவ்வுழைப்பு போதிய வருவாய் திரட்டி குடும்பத்தின் வறுமையை விரட்ட உதவாதது வருந்தத்தக்கதே!

    ஓடப்பராயிருக்கும் ஏழையப்பரின் இன்மை அகலவேண்டும்; துயரம் நீங்கி உயரப்பராய் அவர் ஓங்கும் காலம் கனியவேண்டும்!

    இனி, இவ்வாரக் கவிதைப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளைக் கண்ணுறுவோம்!

     ***

    படித்து முன்னேறவேண்டிய பருவத்தில் தோன்றும் தேவையற்ற சிந்தனைச் சிதறல்களால் சிலர்தம் வாழ்வே சில்லறையாய்ச் சிதறிப்போவதை வேதனையோடு  விளம்புகின்றது திருமிகு. அமுலாதாவின் கவிதை.

    அன்று எனது சிந்தனைகளைச்
    சிதற விடாமல்இருந்திருந்தால்
    இன்று சில்லறைகளை எண்ணும்
    நிலை வந்திருக்காது…!

    *** 

    ”கையில் கறையிருந்தால் என்ன? என் காசுக்காக அல்லாமல் காதலுக்காகக் காத்திருக்கும் மனையாள் துணையிருக்க எனக்கென்ன மனக்குறை?” என்று மகிழும் மனிதனை மனக்கண்முன் நிறுத்துகின்றார் திருமிகு. மங்கை.

    சம்பள நாள்!

    பையில் ரூபாய் கையில் சில்லறை
    இது என் உழைப்புக்குக் கிடைத்த ஊதியம்
    கிடைக்கும் நல்ல உணவு நாளை மதியம்
    கையில் கறை இருந்தாலும் மனதில் குறை இல்லை
    சட்டைப் பை நிறைந்திருக்கும் மாதம் ஒரு நாள் மட்டும்
    கைக்குள்ளே காசை ஒளித்து வைக்க ஆசைதான்
    கடன்காரன் வந்து கையைப் பிரித்து எடுத்து செல்வானே
    எது எப்படி இருந்தாலும்,
    வாசலில் காத்திருப்பாள் மனைவி காசுக்காக அல்ல இந்தக் காதலனுக்காக!!!!!

    ***

    ”முறையற்ற சில்லறை வேலை செய்தால்தான் கைநிறைய வெள்ளிப்பணம்; அதைவிடுத்து மாடாய் உழைத்தால் வெறும் சில்லறைதான் மிஞ்சும்” என்று இன்றைய சமூகநிலையைத் தோலுரித்துக் காட்டுகின்றார் திரு. ஆனந்த். 

    உழைப்பின் கறைபடிந்த
    உன் கரங்களில்
    சில்லறைதான் மிஞ்சும்
    சில்லறை வேலைசெய்யும்
    ஊழல் உத்தமர்க்கே
    ஊதிப்பெருகும் பணம்…!

    ***
    வாழ்வுக்கு அவசியம் ஆனபோதிலும் நல்லவரையும் கெடுமதியாளராய் மாற்றவல்லது பணம். அத்தகு பணத்தைப் பார்த்து, ”உன்னோடு வாழ்தல் அரிது” என்று பொருத்தமாய்ப் பகர்கிறார் திரு. சி. ஜெயபாரதன். இவ்வரிகள், ”என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது” என்று வயிற்றின் இயல்பைப் பாடும் அவ்வையின் நல்வழியை நினைவூட்டுகின்றன.

    கைப்பணம் போதாது
    கள் குடிக்க!
    பைப்பணம் போதாது
    பட்டப் படிப்புக்கு!
    வங்கிச் சேமிப்புப் போதாது
    வாஷிங்டன் சுற்றுலா
    போய்வர!
    திருடத் தூண்டும் பணம்!
    தீப்பெட்டி போட்டு
    பசியாற்றும் மனையாள் காசைப்
    பறிக்கச் சொல்லும்!
    தினமும் வீடு வீடாய் நடந்து
    பேப்பர் போடும்
    சிறுவன் கூலிப் பணத்தைப்
    பறிக்கச் சொல்லும்!
    லஞ்சம் வாங்கத் தூண்டும்!
    லட்சாதி பதியாய்
    வாழ்வதற்குப்
    பஞ்சமா பாதகம் செய்ய
    அஞ்சாது!
    உண்ட வீட்டைத் துண்டாக்கி
    உரிமை ஆக்கும்!
    வேலைக்காரி கொலையும்
    செய்வாள்,
    வீட்டுக்காரியை!
    நாட்டில் நடக்கும் அத்தனை
    நயவஞ்சகமும்
    நோட்டுப் பணத்தால்
    நேர்வது!
    அசுரப் பற்களில் கடிக்கும்
    திமிங்கலப் பணமே!
    தேவை நீ ஆயினும்,
    துரோகி !
    உன்னோடு வாழ்தல் அரிது!

    ***

    சலசலக்கும் சில்லறைக்காசுகள் தம் சில்லறைத்தனத்தைப் பறைசாற்ற, மதிப்புமிக்க உரூபாய் நோட்டுக்களோ நிறைகுடமாய்ச் சத்தமின்றி இருக்கும் வாழ்வியல் தத்துவத்தைத் தன் கவிதைவழிச் சத்தாகப் பேசுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    ஓசை…

    சட்டைப் பையில்
    ரூபாய் நோட்டு,
    சத்தமில்லாமல் இருக்கிறது..

    கையிலுள்ள
    சில்லறைக் காசுகள்,
    சலசலவெனச்
    சத்தமிடுகின்றன..

    ஓ,
    வாழ்க்கைத் தத்துவம்
    இதுதானோ-
    மதிப்புமிக்க இடத்தில் அமைதி,
    குறைந்த இடத்தில் கூத்தாட்டம்தான்…!

    ***

    கடும் உழைப்பைக் கைக்கொண்டாலும் பாட்டாளியின் கையில் செல்வம் தங்குவதில்லை. இளமையில் நன்றாய்க் கற்று உயர்பதவி பெற்றிருந்தால் ஏழைமையோடு தோழமை கொள்ளவேண்டிய அவலநிலை இல்லையே” என்று இரங்குகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி. கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வியே அல்லவா!

    இளமையில் கல்!

    ஏழைக் குடிலையும் ஏழ்மையின் கொடிதையும்..
    ……என்றேனும் பார்த்ததுண்டா அல்லது கேட்டதுண்டா.!
    உழைக்கும் வர்க்கத்துக்கு ஊதியமே சில்லறையில்தான்
    ……உழைப்பாலுயர்ந்து பெரும் பணத்தை ஈட்டியவரரிதே.!
    தாழ்வைப் பெரிதாய் எண்ணாமல் தன்னலமின்றி..
    ……உழைத்து வருமற்பச் சம்பளத்திலுயர வழியில்லை.!
    வாழ்வு வளமாக வளரும்போதே கற்கவேண்டும்..
    ……வளர்ந்த பின்யோசித்து வருந்துவ தாலென்னபயன்.?

    படிக்காமலிள வயதில் பொறுப்பின்றிச் சுற்றியதால்..
    ……பலரைப்போல் நானும் படாதபாடு படுகிறேன்.!
    விடிந்ததுமுதல் மீண்டுமடுத்த நாள் விடியும்வரை..
    ……வியர்வை சிந்தியுழைத்தாலும் சில்லரைதான் மிஞ்சும்.!
    ஓடிஓடி உழைத்தாலும் ஓட்டைவிழுந்த சட்டைதான்..
    ……ஒழுங்காகக் கற்காவிட்டால் ஏழ்மைதான் வாழ்க்கை.!
    இடித்துரைத்தான் வள்ளுவனும் இதையே தான்..
    ……இனியாவதெம் சந்ததியைப் படிக்க வைப்பேன்!

     ***

    உழைக்கத் தெரிந்த மனிதருக்குப் பிழைக்கத் தெரியவில்லை. அதனால் பிழைக்கத் தெரிந்த கூட்டம் இவர்தம் உழைப்பில் சவாரி செய்கிறது எனும் திரு. பழ. செல்வமாணிக்கத்தின் வரிகள் நம்மைச் சிந்தக்க வைக்கின்றன.

    உங்கள் பார்வையில் தெரிவது அழுக்குக்கறை!
    உண்மையில் இது ஏழைகளின் இன்றைய நிலை!
    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்
    என்றார் ஓர் அறிஞர்!
    உண்மை முற்றிலும் உண்மை!
    இது வரை எந்த ஏழையும் சிரித்ததுமில்லை!
    இறைவனை எவரும் பார்த்ததுமில்லை!
    சில்லறைகளே ஏழைகளுக்குச் சொத்தாகிப் போனதால்
    கல்லறைகளே இவர்களுக்கு நிச்சயம் ஆனது!
    பணம் இவர்களுக்கு எதிரியாய்ப் போனது!
    உழைக்க மட்டுமே இவர்களுக்குத் தெரியும்!
    பிழைக்கத் தெரியாது!
    இவர்களின் உழைப்புப் பல்லக்கில்
    ஊர்வலம் போகும் பணக்காரக் கூட்டம்!
    வாழ்க்கை என்பது என்றும் ஒரு வட்டம்!
    போதும்! போதும் உங்களின் ஆட்டம்!
    பகிர்ந்துண்டு வாழ்தல் நல்ல பழக்கம்!
    இதை உணர்ந்தவர் வாழ்வில் இல்லை குழப்பம்!

     ***

    அயரா உழைப்பால் உடையும் உள்ளங்கையும் கறைபட்டிருக்கும் மனிதனின் அவலநிலையை, பணத்துக்காக அந்த ஏழை படும்பாட்டைத் தம் பாட்டுக்களில் சிறப்பாய்ப் பதிவுசெய்திருக்கிறார்கள் கவிஞர்கள். அவர்களுக்கு என் மனம்நிறைந்த பாராட்டு!

    *** 

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து நம் பார்வைக்கு…  

    எத்தனை முறை எண்ணிப்பார்த்து என்ன?
    வயிற்றுப் பசிக்கும் வாங்கிய கூலிக்கும்
    இருக்கிற இடைவெளியை இட்டு நிரப்பும்
    கணக்கு இன்னும் கைவரவில்லை.
    உழைத்துக் காய்த்துப்போன
    உள்ளங்கைப் புண்ணில்
    சில்லறை உறுத்துகிறது.
    பிஞ்சுக்குழந்தைக்கு பிஸ்கெட்டுக் காகும்
    நெஞ்சுக்குள் நெகிழ்வு.

    வயிற்றில் எரியும் அங்கியை(தீ) அவிக்க அங்கையில் இருக்கும் சில்லறை போதாதெனினும் பிஞ்சுக்குழந்தையின் பிஸ்கெட் செலவுக்காவது ஆகும் என்று சிறுபிள்ளையாய் மகிழும் ஏழைமனிதனை நம் பார்வையில் நிறுத்தி நம்மை நெகிழ்த்தும் இக்கவிதையின் சொந்தக்காரர் திரு. அ. இராஜகோபாலனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தெரிவுசெய்கின்றேன். அவருக்கு என் பாராட்டு!

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 120-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    kiddrawingkolam

    புள்ளிகளால் பாலங்கட்டி எழிற்கோலந் தீட்டும் சிறுமியைப் புகைப்படம் எடுத்துவந்துள்ளார் திருமிகு. ஷாமினி. படக்கவிதைப் போட்டிக்கு உகந்த படமிது  என்று இதனைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    சிறுவயதிலேயே பயின்று தேரவேண்டிய அற்புதக் கலை கோலக் கலை! விரல்களுக்கு நல்ல பயிற்சியாகவும், கற்பனைக்கு உரமூட்டும் வாய்ப்பாகவும் அமையக்கூடியது இக்கலை எனில் மிகையில்லை. மனமொன்றிக் கோலம் தீட்டுவதுகூட ஒருவகை தியானந்தான்!

    வண்ணக்கோலங்களை மிஞ்சும் வகையில் நம் கவிஞர்கள் தீட்டியுள்ள வார்த்தைக் கோலங்களை சுவைத்தின்புறும் தருணமிது! வாருங்கள்!

    *****

    ”பாவையர் இடுவது இழைக்கோலம்; பாவியர் இடுவது பிழைக்கோலம்; வீரன்கொள்வான் போர்க்கோலம்; அவன் வெற்றியில் காண்பான் தேர்க்கோலம்” என்று வரிசையாய்க் கோலங்களின் வகைகளைப் பட்டியலிட்டு நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகின்றார் திருமிகு. சாய்ரேணு.

    கோலம்

    வாசலில் இடுவது மாக்கோலம்
    வார்த்தையில் இடுவது பாக்கோலம்
    பரம்பொருள் தந்தது ஒளிக்கோலம்
    பாரிது கொண்டது களிக்கோலம்

    பாவையர் இடுவது இழைக்கோலம்
    பாவியர் இடுவது பிழைக்கோலம்
    வானகம் கொண்டது மழைக்கோலம்
    கானகம் பெற்றது தழைக்கோலம்

    மேகங்கள் சேர்ந்தால் கார்க்கோலம் – அவை
    மேனி சிலிர்த்தால் நீர்க்கோலம்
    வீரன் கொள்வான் போர்க்கோலம் – அவன்
    வெற்றியில் காண்பான் தேர்க்கோலம்

    தீயவர் இடுவது அவக்கோலம் – உளத்
    தூயவர் கொள்வது தவக்கோலம்
    மேதையர் இடுவது மதிக்கோலம் – எங்கள்
    மாயவன் இடுவது விதிக்கோலம்

    பாவலர் எழுதுவர் கவிக்கோலம் – நம்
    பரமன் செயலோ புவிக்கோலம்
    பக்தியில் வருவது இசைக்கோலம் – நல்ல
    பகலவன் தந்தது திசைக்கோலம்

    அருமையாய் செழிக்கும் பயிர்க்கோலம் – வா!
    அன்பிலே தழைக்கட்டும் உயிர்க்கோலம்
    வழுவிலாதெழுதுங்கள் அகக்கோலம் – பின்
    வாழ்வினில் எல்லாம் சுகக்கோலம்!

    *****

    திரு. பழ. செல்வமாணிக்கத்தின் கவிதையும் கோலங்களின் வகைகளையும் அவற்றின் பயன்களையும் பரக்கப் பேசுகின்றது.

    எண்ணக் கோலங்கள்:

    புள்ளி வைத்து கோலம் போடும் சின்னப் பெண்ணே !
    உன் போல்,கோலமும் அழகு, செல்லப் பெண்ணே !
    அன்புக் கோலம் உறவை வளர்க்கும் ஆசைப் பெண்ணே!
    கல்விக் கோலம் அறிவை வளர்க்கும் சமத்துப் பெண்ணே!
    கருணைக் கோலம், மனிதம் வளர்க்கும் வண்ணப் பெண்ணே !
    புன்னகைக் கோலம், அழகை வளர்க்கும் சிட்டுப் பெண்ணே!
    அமைதிக் கோலம், அகிலம் காக்கும் அருமைப் பெண்ணே!
    ஒற்றுமைக் கோலம், உலகை உயர்த்தும் சுந்தரப் பெண்ணே!
    உழைப்பு கோலம், வெற்றியைக் கொடுக்கும் புதுமைப் பெண்ணே !
    முயற்சிக் கோலம், நினைத்ததைக் கொடுக்கும் இனிமைப் பெண்ணே!
    அகந்தைக் கோலம், நம்மை அழிக்கும், உணர்வாய் பெண்ணே!
    சாதிக் கோலம், சாவைக் கொடுக்கும், அறிவாய் பெண்ணே!
    போதைக் கோலம் நாட்டை அழிக்கும், தெளிவாய் பெண்ணே !
    போரின் கோலம், உலகை அழிக்கும், புரிவாய் பெண்ணே!
    வண்ணக் கோலம் போட விழையும் தங்கப் பெண்ணே!
    எண்ணக் கோலம் போட்டால், நன்மை பயக்கும் பெண்ணே!

    *****

    ”துள்ளிச்செல்லும் பள்ளிச்சிறுமி இட்ட இந்த சிங்காரக்கோலம் காண்போர் உள்ளம் கொண்டது; பரிசை வென்றது” என்று குதூகலிக்கின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

    கோலமிடும் பாவாய்!

    சின்னச் சின்ன கோலம்!
    சிங்காரக் கோலம்!
    வெள்ளை மாவில் அணியாய்ப்
    புள்ளிகள் போட்டு
    பள்ளிச் சிறுமி
    துள்ளிப் பாடி
    வரைந்த கோலம்!
    அம்மா எழுவதற்கு முன்பு
    முற்றம் பெருக்கி
    பளிச்செனப் போட்ட கோலம்!
    அம்மா கோலம்
    சும்மா தோற்றுப் போகும்!
    அக்கா போட்ட கோலம்
    தப்பா போச்சுடி பார்!
    தங்கிச் சிரிக்குது
    தங்கை போட்ட கோலம்
    மங்க வில்லை மாலை!
    இறுதியில்
    தெருப் போட்டிப் பரிசு
    சின்னக் கோல மிட்ட
    சிறுமிக்கே!

    *****

    ”விண்ணில் புள்ளிவைத்த வானம் கோலமிடத்தெரியாமல் விழித்திருக்க, மண்ணில் தோன்றிய மங்கையர் எழிலார் கோலங்களால் வீதியை வனப்பாக்குகின்றனர்” என்று வனிதையரைப் புகழ்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.  

    அங்கும் இங்கும்…

    விண்ணில்-
    வீதியெல்லாம் புள்ளிவைத்துவிட்டு,
    விரிவானக் கோலமிடத்
    தெரியாமல்,
    விழிக்கிறது வானம்..

    மண்ணில்-
    எண்ணம்போல் புள்ளிவைத்து,
    எழிலோடு
    எழிலாகக் கோலமிட்டு,
    வீதியை வனப்பாக்கும்
    எங்கள் செல்வங்கள்…!

    *****

    ”வீதியில் போடும் கோலங்களில் பெண்ணின் கைத்திறமை மிளிர்கின்றது; வாழ்வில் அவள் போடும் கோலங்களில் மானுட வாழ்வே ஒளிர்கின்றது! ஆதலால் பெண் குழந்தை பெறுவதே பெருமை” என்று பெண்ணின் பெருமை பேசுகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    பெண்குழந்தை பெறுவதே பெருமை..!

    விழிப்புறுவாள் அதிகாலை மார்கழி நன்னாளில்..
    …….விடியுமுன்னே வீடனைத்தையும் சுத்தம் செய்வாள்.!
    விழிமூடா நிலையினிலே இயங்கிடுவாள் தரையினிலே
    …….விரல்நுனியில் வேகமாய் புள்ளியினை இட்டிடுவாள்.!
    மொழிகூடப் பேசு மவள்போட்ட மாக்கோலம்..
    …….விழிதிறந்து பார்க்கையில் வியப்பில்நமை ஆழ்த்தும்.!
    அழியாத கோலமாக அவளிட்ட கோலம்தான்..
    …….ஆழமாக மனதினிலே பதிந்தவள் திறம்சொல்லும்.!

    துள்ளித் துள்ளி ஓடிவரும் சின்னஞ்சிறுமியவள்
    …….துடிப்புடனே செயல்படு மாற்றல் கொண்டவள்.!
    பள்ளி செல்லுமுன் வாசலிலே கோலமிடுவாள்
    …….பள்ளிமுடிந்ததும் படிப்பினிலே நாட்டம் வரும்.!
    அள்ளியவளை அணைத்தே பெற்றோரும் மகிழ
    …….அன்றாடம் அவள் செய்யுமருமைச் செயலினாலே.!
    கிள்ளிச் செல்வாள் மனதையெலாம் தன்குறும்பாலே
    …….கவர்ந்திடுவாள் படித்திடுவாள் பள்ளியிலே முதலாக.!

    ஆண்மகவே வேண்டுமென்று விரும்புவது அன்று..
    …….ஆணுக்கு இணையாக பெண்பேசப்படும் நிலையின்று.!
    பெண் மகவொன்றை முதலாகப் பெற்று விட்டால்..
    …….பெரிதென நினைத்து பெருமைப்படும் காலமுமிதுதான்.!
    தூண்போல நின்று வாழ்வில்வரும் துயரெல்லாம்..
    …….துடைத்து குடும்பத்தில் பெரும்பங்கு வகிப்பவளவளே.!
    நாண்போன்று நற்குடும்பமதைக் கட்டிக் காப்பாளவள்..
    …….பெண்ணென்று வெறும்பேச்சு சொல்ல அனுமதியாள்.!

    *****

    பிஞ்சுவிரல்களால் நெஞ்சைக் கவரும் கோலம் வரைந்த சிறுமியின் பெருமையை, அவள் வாழ்வில் கொள்ளும் பல்வேறு கோலங்களோடு ஒப்பிட்டுப் பேசியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    *****

    காலம் போடும் கோலம் விசித்திரமானது. கணித்துரைக்க இயலாதது. ஆதலால் எத்தகைய கோலத்தைக் காலம் பெண்ணுக்குப் பரிசாய்த் தந்தாலும் அச்சங் கொள்ளாமல் அகந்தையில்லாமல் மரபுதனைப் பேணி தரணி வெல்வதே பெண்ணின் கடன் எனும் அரிய கருத்தை எளிமையாய்ச் சொல்லும் பாடலிது!

    அறிவுரை

    சின்ன சின்ன விரல்கள் கொண்டு
    சிறு கோல மிடும் பைங்கிளியே
    சிறிய தொரு அறிவுரையைச்
    செவி மடுத்துக் கேட்டிடுவாய்…

    இன்று,
    உன் எண்ணமதை ஒருங்கிணைத்து
    வண்ண வண்ண நிறங்கள் தீட்டி
    வாசல் கோலம் நிறைவு செய்து
    வீட்டி னுள்ளே நுழைந் திடலாம்

    ஆனால்
    வாழ்க்கைக் கோலம் என்னவென்று
    வஞ்சி உனக் கெடுத் துரைக்க
    நாளை எனும் நாட்கள் கொண்ட
    வருங் காலம் காத்திருக்கு!!

    தாயாக ஒரு கோலம்,
    தாரமாக மறு கோலம்,
    வன்மம் கொண்ட கயவர் காணின்
    வீறு கொள்ளும் சினக் கோலம்…

    நெடுந் தூரப் பயணங்கள்
    உனக்காகக் காத்திருக்கத்
    தடம் புரண்டு செல்லாமல்
    தரணியதை நீயும் வெல்லு!

    வாழ்க்கை செல்லும் பாதையிலே
    பின் தொடர்ந்து போவதிலே
    வழித்தடத்தைத் தொலைக்கின்றோம்
    நம் மரபுகளை மறக்கின்றோம் !!

    சின்னச் சின்ன மகிழ்ச்சிகளைச்
    சிறைப் படுத்தி வைக்கின்றோம்
    நம்மை நாமே மறக்கின்றோம்
    மாற்ற மதில் கலக்கின்றோம்

    ஆதலால்

    ஓலம் பல வரினும்,
    ஞாலம் எது தரினும்;
    உன்னை நீயே தொலைக்காமல்
    உன் தனித்துவத்தை இழக்காமல்

    உன் காலம் உள்ள அதுமட்டும்
    உயிர்க் காற்று உள்ள அதுமட்டும்
    இன்று போல என் றென்றும்
    கோல மிட்டு மகிழ்ந்து இரு !!

    பயங்கொண்டு சுயமிழக்காது வாழ்வில் சயங் காணப் பெண்களை வலியுறுத்தும் இக்கவிதையின் ஆசிரியர் திருமிகு. இராஜலட்சுமி சுப்ரமணியத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிப்பதில் மகிழ்கின்றேன்.

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 119-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    ladies with burden on head

    சிரத்திலும் கரத்திலும் சுமையோடு பயணம் புறப்பட்டுவிட்ட இந்தத் தாயையும் உடன்வரும் சேயரையும் தன் படப்பெட்டிக்குள் நேயத்தோடு சுமந்துவந்திருப்பவர் திருமிகு. அனிதா சத்யம். இப்படத்தைப் போட்டிக்குத் தேர்வுசெய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். பெண்மணிகள் இருவருக்கும் என் பணிவான நன்றி!

    வாழ்வெனும் நெடும்பயணத்தில் மனிதர்களுக்குத்தான் எத்தனை எத்தனை சுமைகள்! அவற்றில் சில சுகமானவை; பல இறக்கவும் துறக்கவும் இயலாக் க(டி)னமானவை. ஆயினும் பயணங்கள் தவிர்க்க இயலாதவை. சுமைகளோடும் கனவுகளோடும் மனிதர்கள் மேற்கொள்ளும் பயணம் வெற்றிப்பயணமா, பயனற்ற வெற்றுப்பயணமா என்பதைக் காலமே தீர்மானிக்கின்றது.

    கவிஞர்களின் சிந்தனையில் பூத்த கவிதை மலர்கள் அடுத்து அணிவகுக்கக் காத்திருக்கின்றன. அவற்றை வரவேற்போம்!

    ”சுமைகளே வாழ்க்கையாகிப் போனது பெண்களுக்கு. மற்றவர்களுக்காகவே சுமந்து கூன்விழுந்துபோன பெண்ணே! இனியேனும் உனக்காக வாழு! சுமைகளை உதறிச் சிறகுவிரித்துப் பறந்திடு!” என்று பெண்விடுதலைக்குக் குரல்கொடுக்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    சுமை தலையில் ஒரு சுமை!
    இடையில் ஒரு சுமை!
    இருந்தும் உன் மனதில் இல்லை என்றும் குறை!
    பெண்ணாக பிறந்ததினால் சில வருடம்
    பெற்றார், உற்றாரின் வசவுகளை நீ சுமந்தாய்!
    அண்ணன், தம்பி மகிழ்ந்து விளையாட பெற்றோர்
    அனுமதிக்க! நீ விளையாட அவர் மறுத்துரைக்க
    ஏக்கத்தை நீ சுமந்தாய்!
    படிக்கும் வயதில் தாலியைத் தான் சுமந்தாய்!
    பிள்ளைகளை வயிற்றில் சுமந்தாய்!
    குடும்ப நலத்தை மனதில் சுமந்தாய்!
    உன் கனவுகளை நீ தொலைத்து குடும்பத்தை
    வாழ வைத்தாய்!
    சுமப்பதினால் இது வரை என்ன சுகம் கண்டாய்! ;
    உன்னை சுமக்க வைக்க மற்றவர்கள் சொல்லும்
    பொய்களை நம்பியது போதும் பெண்ணே!
    மற்றவர்களுக்காய் நீ சுமந்தது போதும் பெண்ணே!
    உன் இரக்கத்தை ஏணியாக்கி ஆண்கள்
    ஏறிச் சென்றது போதும் பெண்ணே!
    இனியாவது புதுமைப் பெண்ணே !
    உன் எண்ணச் சிறகுகளை விரித்து பறந்திடு !
    இனிய வாழ்க்கையை என்றும் வாழ்ந்திடு !

    ***

    ”தன்னம்பிக்கை எனும் பிடிமானமே எங்கள் வருமானம்; பகுத்துண்டு வாழ்தலே எங்களுக்கு வெகுமானம். உழைத்து வாழ்கின்றோம்; பிறர் உழைப்பில் வாழ்வதில்லை” என்று தன்மான வார்த்தைகளைத் தலைநிமிர்த்தி உச்சரிக்கும் பெண்மணியைத் தன் கவிதையில் உலவவிட்டிருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    உழைப்பே எங்கள் உடன்பிறப்பு

    அன்றாடம் உழைத்தால்தான் அரைவயிறு நிறையும்
    ….ஆரும்நன்றாய்ப் படித்து பெரிதாய்ப் ஈட்டுவோரில்லை.!
    சென்றுபோகும் இடமெல்லாம் நடந்துதான் செல்லவேண்டும்
    ….அன்று சம்பாதிப்பது அன்றுமட்டுமே போதாதென்றாலும்.!
    நன்றாகத்தான் வாழ்கிறோம் எம் கைக்கொண்டுழைத்தே
    ….நல்லவேலை செய்வதற்கே நாங்களும் பிறப்பெடுத்தோம்.!
    குன்றுபோல் செழித்திருக்கும் குடியிருப்பு இல்லமொன்றில்
    ….கூட்டுக் குடும்பமாய்வாழ கூலிக்கென்றுமே பஞ்சமில்லை.!

    கருப்புக் குமரிகள்தான் நாங்களாயினு மெங்களைக்
    ….காதலித்து ஏமாற்றும் கயவர்பயம் எங்களுக்கில்லை.!
    ஆருமில்லை ஆதரிப்போரெனும் ஆதங்கமும் இல்லை
    ….அன்பாலே ஏனையொரை ஈர்க்குமாற்றல் எமக்குண்டு.!
    விருப்பமுடன் வீடுதேடி வேலைகேட்பின் இல்லையென
    ….மறுக்கமாட்டார் எடுத்தெறிந்து பேசமாட்டார் எவரும்.!
    கரும்புபோல பேசிவிட்டு முகம்சுளிப்போர் நடுவே
    ….அரும்புச் சிரிப்புடன் ஆறுதலாய் பேசுவோருண்டு.!

    இடையூறு இன்னல்கள் எதுவரினும் எதிர்கொள்ள..
    ….இறையருளும் எங்களுக்கு எப்போதும் உடனிருக்கும்.!
    தடையில்லா வாழ்வு வாழ எங்களுக்கும் ஆசைதான்
    ….தருவாயா இறைவாநீ உடலுறத்தை உயிருள்ளவரை.!
    நடைபோடும் தளிர்நம்பிக்கை யெனும் கொழுகொம்பைப்
    ….பிடித்துவாழும் பிடிமானமேயெங்கள் நிரந்தர வருமானம்.!
    படையோடு பலருடன் மகிழ்ந்தெதையும் கொண்டாடுவோம்
    ….பக்குவமாய் உழைத்து வாழ்வோர் உதாரணமாவோம்.!

    ***

    பள்ளிச் சீருடைகளிலும் ரிப்பன்களிலும் மட்டுமே காணக்கிடைக்கின்ற சமத்துவம் சமூகத்தில் ஏனோ சீர்கெட்டுப்போயிருக்கின்றது. ரிப்பன் கட்டிய சிறுமியாய்த் தொடங்கும் பெண்ணின் வாழ்க்கை, நடை தளர்ந்து, நரை வளர்ந்து, முதியவளாய் அவள் மாறியபின், (பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு) முதியோர் இல்லத்தில் முற்றுப்பெறுவதை உணர்வுபூர்வமாய் விவரிக்கின்றார் திரு. கா. முருகேசன்.

    நிழல்!
    தலை நிறைய மூட்டை,

    சின்னஞ்சிறு மழலைகளின் சிரிப்பு,
    நடக்க நல்ல ஒரு மணல் பரப்பு!
    வெயிலின் பிரதிபலிப்பால்
    அவர்களை விட்டு பிரியாது தொடரும்
    நிழல்!

    முடி நரைத்தாலும் மூட்டை தூக்குவதில்
    சலிப்பில்லாத முதுமை!

    பள்ளிகூடங்களில் மட்டும் சமத்துவம் என்பது,
    இல்லாதிருந்தால் நாம் மறந்திருப்போம்,
    ரிப்பன் கட்டும் பழக்கத்தை!
    பெண்களின் அழகை
    சீர்தூக்கி நிறுத்தும் ரிப்பன் இப்போது,
    பல கொடிகளின் வண்ணங்களாய்
    மிளிர்கிறது!
    பள்ளிக்கூடங்கள் திணறுகின்றன,
    எந்த வண்ணத்தை தீர்மானிக்க என்று!

    இரட்டைச் சடையும்,
    ஒற்றைச் சடையுமாய் வளர்ந்து
    முதுமையடைகிறாள் பெண்!

    முதுமை என்றதும் நினைவுக்கு வருவது
    மீன் குழம்பும், கத்தரிக்காய் கூட்டும்!
    அப்போது!
    இப்போது!
    முதுமை என்றதும் நினைவுக்கு வருகிறது
    முதியோர் இல்லம்!

    கூன் விழாத முதுகுத்தண்டு சொல்லும்
    அவள் உழைப்பை!
    நரைத்த முடிகள் சொல்லும்
    அவள் கஷ்டத்தை!
    தன் மகனும், மகளும் படிக்க,
    வயல் தோட்டங்கள், தொழில் கூடங்கள் என
    உழைப்பிற்காக நடந்த நடையைச் சொல்லும்
    அவளின் செருப்பில்லாத பாதங்கள்!
    குழந்தைகளை நிழல் போல் காக்கிறாள்!
    நிலத்தில் விழுந்து விடக்கூடாதென்று!

    எல்லாவற்றையும் கடந்து உழைக்கிறாள்!
    என் மகன், மகள் கஷ்டப்படக்கூடாதென்பதற்காக!

    ஆனால், அவர்களோ!
    முதுமையின் முதுமையாய் முதிர்ந்தவர்களை,
    விடுகின்றனர் முதியோர் இல்லத்தில்!

    இந்த உலகத்தில் முதுமைக்கு
    விலையில்லாத விலைமதிக்கத்தக்க ஒன்று,
    ஒரு வேளை சோற்றை விடவும் உயர்ந்தது!
    மொழி கடந்து, சொல் கடந்து,
    அந்த மௌனச்சிரிப்பினால்,
    முதுமையின் கன்னத்தை வருடும்
    பேரன் பேத்திகளின் ஸ்பரிசம் ஒன்றுதான்!
    அது கிடைக்காதா! என்று
    ஏங்குகிறாள் முதியோர் இல்லத்தில்!

    முதுமை நினைத்துப்பார்க்கிறது!
    என்றும் உங்களின் நிழலாக இருக்கிறேனே
    நான்!

    உங்களைப் படிக்க வைத்தேன்
    படித்தும் புரியவில்லையே!
    நிழலைப் பிரிக்கமுடியாது என்று!
    என் குழந்தைகளுக்கு!

    கடவுளே என் மகனும் மகளும்
    நன்றாக இருக்க வேண்டும்!
    நான் மறைந்தாலும் அவர்களுக்கு
    நிழலாக!

    ***
    முதுமை மேற்கொண்ட நடைப்பயணம் கண்டு மனங்கசிந்து, மடைதிறந்த வெள்ளமெனக் கவிமழை பொழிந்திருக்கின்றனர் நம் வித்தகக் கவிஞர்கள். அவர்களுக்கு என் உளங்கனிந்த பாராட்டுக்கள்!

    ***

    மனித வாழ்வுக்குத் தேவை ’இலக்கு’ என்பது பெரியோர் வாக்கு. ’குறிக்கோளின்றிக் கெட்டேனே’ என்று ஞானச் செல்வரான அப்பர்கூட மொழிந்திருக்கக் காண்கின்றோம். ஆனால் வாழ்வுக்கு உகந்த இலக்கினை அமைப்பதும், அதனை வெற்றிகரமாய்ச் சென்றடைவதும் அத்தனை இலகுவன்று என்பதே  உண்மை!

    மதுஅரக்கனின் பிடியில் சிக்கி மனைவியை நட்டாற்றில் தவிக்கவிடும் மணாளர்களுக்குப் பஞ்சமில்லை நம் தாய்த்தமிழ் நாட்டிலே!

    கட்டியவனைப் பறிகொடுத்த காரிகையொருத்தி, சுட்டெரிக்கும் வெயிலில், பட்டமரமெனப் பிஞ்சுக் குழந்தைகளோடு நடந்துசெல்லும் இலக்கற்ற பயணத்தைக் காட்சிப்படுத்தியுள்ள கவிதையொன்று நெஞ்சைச் சுடுகின்றது!

    இலக்குகள்…

    போகுமிடம்
    மதுக்கடை மட்டும்
    தெரிந்தவன்
    போய்ச் சேர்ந்தான்,
    பெண்டாட்டி பிள்ளைகளைத்
    தெருவில்
    திண்டாட விட்டு…

    புறப்பட்டுவிட்டார்கள்
    இவர்கள் இப்போது,
    பிழைப்புத் தேடி-
    போகுமிடம் எதுவென்ற
    இலக்குத் தெரியாமலே…!

    சிறிய கவிதையில் நடப்பியலைச் சிறப்பாய்க் கூறியிருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 118-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    sunlight

    திரு. சிவராஜன் தண்டபாணியின் கைவண்ணத்தில் இயற்கை அழகின் சிரிப்பைப் புகைப்படத்தில் காண்கின்றோம். படக்கவிதைப் போட்டிக்கு இப்படத்தைத் தேர்வு செய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி உரித்தாகின்றது.

    ”விரிந்த வானே வெளியே – எங்கும்
        -விளைந்த பொருளின் முதலே
    திரிந்த காற்றும் புனலும் – மண்ணும்
        -செந்தீ யாவும் தந்தோய்
    தெரிந்த கதிரும் நிலவும் – பலவாச்
        -செறிந்த உலகின் வித்தே
    புரிந்த உன்றன் செயல்கள் – எல்லாம்
        -புதுமை புதுமை புதுமை!” என்று இயற்கையை வியப்பார் புதுவைப் புயலான பாவேந்தர்.

    கைபுனைந்தியற்றா இந்தக் கவின்பெறு வனப்பைக் காணுந்தொறும் காணுந்தொறும் பாமரனும் பண்டிதனாவான்; கல்லாதவனும் சொல்மாலை தொடுக்கும் அருங்கவியாவான். இயற்கை செய்யும் செப்படிவித்தை அப்படி!

    இனி, இவ்வாரப் போட்டிக்குக் கவிஞர்கள் அனுப்பியிருக்கும் பாமாலைகளைப் படித்தின்புறுவோம் வாருங்கள்!

    ***

    தொடுவானம் கடந்து புத்துலகம் கண்ட கொலம்பஸின் சாதனையைப் போற்றியிருப்பதோடு, அச்சத்தைத் துச்சமெனத் தூக்கியெறிந்து புதுமைகள் புரிவதே அறிவியல் நெறி என்று தன் கவிதையை முத்தாய்ப்பாய்த் முடித்திருக்கின்றார் அறிவியல் கவிஞர் திரு. சி. ஜெயபாரதன்.

    தொடுவானம்

    தொடுவானைத் தாண்டினால்
    தொப்பென வீழ்வோம்
    என்று சொப்பனம் கண்டோம்!
    செல்லாதே என்று
    சிவப்புக் கொடி காட்டும்
    செங்கதிரோன்!
    தங்கப் பேராசை கொண்டு
    இந்தியாவுக்கு
    புதிய கடல் மார்க்கம் தேடி
    அஞ்சாமல் மீறிச் சென்றவர்
    கொலம்பஸ்!
    புத்துலகு, பொன்னுலகு
    அமெரிக்கா கண்டு பிடிக்க
    வழி வகுத்தார்!
    தொடுவானம் தாண்டிப் பயணித்து
    துவங்கிய இடம் வந்தார்!
    உலகம் தட்டை இல்லை
    உருண்டை எனக் கண்டார்!
    அச்ச மின்றி, அயர்வு மின்றி
    உச்சி மீது வான் இடிந்தும்
    முன் வைத்த காலைப்
    பின்வாங்காது,
    முன்னேறு வதுதான்
    முதிர்ச்சி நெறி !
    புதியவை கண்டுபிடிக்க
    மனித இனத்துக்கு
    உறுதி விதி!

     ***

    சோம்பலைச் சாம்பலாக்கு! உறக்கத்தை இறக்கச்செய்! பகலவன் காட்டும் பாதையில் பயணத்தைத் தொடர்! செல்வத்திருநகரில் சேர்வாய் இன்றே!” எனும் தன்னம்பிக்கை வரிகளால் தன் கவிதையை வளப்படுத்தியிருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    இன்றே நன்று…

    கதிரவன் எழுந்து
    காட்டுகிறது வழி-
    உறங்கிக் கிடக்காதே
    உழைத்திடு உழைத்திடு,
    உனைத்தொடும் வெற்றி!

    வெளிச்சத்தில் பார்த்திடு
    வையத்தின் வனப்பை,
    வேறு சிந்தனைகள்
    வேண்டாம் மனத்தில்!

    பயண வழித்தடத்தில்
    பலதும் பார்க்கலாம்-
    இன்பப் பூக்களாய்,
    இன்னல் தடைகளாய்…

    பார்த்துக்கொண்டே
    பயணத்தைத் தொடர்,
    சேர்த்துவிடும் உன்னை
    வெற்றியாம்
    செல்வத் திருநகரில்..

    இன்றே நன்று,
    இனிதாய்த் தொடர்ந்திடு பயணத்தை…!

    ***

    ‘நீரின்றி அமையாது உலகு’ என்றார் வள்ளுவர். செக்கர் வானத்தில் மின்னும் செங்கதிரோனை விளித்து, ‘நீயின்றி அமையாது உலகு’ என்று வியக்கும் கவிஞர் பெருவை திரு. பார்த்தசாரதி, ”காலமாற்றத்தின் காவல் தலைவா! உன் சிவப்புக்குக் காரணம் வெட்கமா இல்லை கோபமா” என்று வினாத் தொடுக்கிறார்.

    செக்கர் கதிரவன்!

    நீயின்றி அமையாது உலகு..!
    நீவாராது இவ்வையகம் எழாது.!

    விண்ணிலே விந்தையாய்த் தோன்றி
    மண்ணுயிரை உன்கதிரால் வாழவைப்பாய்.!

    மேலைக்கடல் நடுவில் மறையும்
    காலமாற்றத்தின் காவல் தலைவா..!

    உன்விழி மூடினால் உலகமிருளும்.!
    உனக்கும் நித்திரை தேவைதானே.!

    சிலநிமிட வாழ்க்கையில் பூக்கள்
    சிரித்துக் கொண்டே வழியனுப்பத்

    தலைக்கன மில்லாச் செடிகளெலாம்
    தன்தலை வணங்கி வாழ்த்த..

    சற்றுமுன் சாந்தமாகத் தோன்றினாய்..
    வெறுப்பில் இப்போது செக்கரானாயோ..?

    யாருனைத் திட்டியது!. நீ

    விலகிப் போகும் பாதை
    உலகில் விரிவாய்த் தெரிகிறது

    காலைமுதல் மாலை வரைக்
    கண்ணில் கண்டவரைச் சுட்டெரித்தாய்..

    யாருனைச் சாந்தப்படுத்தியது!..

    அந்தி சாயுமுன் காதலி
    சந்திரனைக் கண்டவுடன்

    கோபமா?..அல்லது வெட்கமா..?

    உன்னுதடு மட்டுமல்ல…முகம்
    முழுதும் முழுச் சிவப்பானதோ!..

     ***

    இயற்கை எழிலில் ஈடுபட்டு மனங்கவர் கவிமாலை தொடுத்திருக்கும் புலவர் தோழர்களுக்கு என் பாராட்டுக்கள் உரித்தாகுக!

     ***

    புகைப்படங் காட்டும் தடத்தில் பயணித்துச் சில்லெனுங் கற்பனைகளோடு, சுள்ளெனச் சுடும் நிசங்களையும் இணைத்தே பிணைத்திருக்கும் கவிதை ஒன்று!

    இது போல ஒரு சாலை கிடைக்குமா நடக்க!

    நீண்ட சாலை,
    நெடுந்தூர நடைபயணம்,
    இரு புறமும் மலர்கள்,
    அதன் அழகான தென்றல் காற்று!
    கால் வலித்தாலும் நடக்க தூண்டும் மனம்,
    சாலையின் முடிவில் கடல்,
    அந்த காலை கதிரவனின் ஒளிபட்டு எங்கும்
    சிதறிக் கடல் நீரே பட்டாடை போல மிளிரும் அழகு!
    அதனிடையில் நான்!

    இது போல் ஒரு தருணம் இனி கிடைக்குமா!
    இல்லை
    இது போல் ஒரு சாலைதான் இனி கிடைக்குமா!

    இரு புறமும் பச்சைப் புல்வெளிகள், நடுவினில்
    வயல் பாடங்களில் நடக்கும் சுகம்தான் கிடைக்குமா
    இனி!
    வலம்புரி, இடம்புரிச் சங்கு போல
    வலப்பக்கம் சாய்வோமா
    இடப்பக்கம் சாய்வோமா, அந்த
    வயல்களின் காற்றுப் பட்டு!
    ஊகிக்க முடியாத அனுபவம்
    நெற்கதிர்கள் ஒன்றையொன்று உரசும்
    ஓசைதான் இனிக் கிடைக்குமா!
    காலைக்கதிரவனின் ஒளிபட்டு
    மின்னும் தங்க நிற,
    சோளக் கதிர்களைத்தான் காண முடியுமா இனி!
    வயல்களின் முடிவில் உள்ள,
    குளக்கரையைத்தான் பார்க்க முடியுமா இனி!
    அதன் நடுவில் நின்று
    அத்தனையும் ரசிக்கும் காட்சி இனி கிடைக்குமா!
    நமக்கு!

    கிடைக்கும் நமக்கு.
    கிடைக்கும் நமக்கு

    நடுவில் தார்ச்சாலைகள்
    இருபுறமும் கட்டிடங்கள்
    காணக் கிடைக்கும்!
    இங்கும் அது போல ஒரு வாய்ப்பு உண்டு
    வலப்பக்கம் சாய்வோமா
    இடப்பக்கம் சாய்வோமா என்று – சாக்கடைக் கழிவுகள்!
    சாலையின் முடிவில் நீரோட்டங்கள்
    தண்ணீர்க் குழாய் சண்டை!
    தெருவெங்கும் மின்னுகிறது
    தங்கமும் வெள்ளியுமாய், அதன் எதிர்ப்புறம்
    பிச்சை எடுக்கிறான் என் சக மனிதன்!

    நான் நடுவில் நிற்கின்றேன்
    பார்த்துக் கொண்டல்ல
    அது போல ஒரு சாலை கிடைக்குமா!
    இனி என்று!

    வயல் பாடங்கள்,
    நெற்கதிர்கள்,
    பச்சைப் புல்வெளிகள்,
    பாடப்புத்தகத்தில்.

    குளக்கரைச் சோறு,
    மர நிழல்
    ஹோட்டலில்.

    மலர்களை வருடும் தென்றலையும், சோளக்கதிர்களைச் சொலிக்க வைக்கும் கதிரவனையும், பாதையின் முடிவில் பரந்துவிரிந்திருக்கும் நீர்நிலையையும் படத்திலும் பாடப்புத்தகத்திலுமே இனி நாம் காணமுடியும். இயற்கை வனப்பை அழித்துச் செயற்கை இன்பங்களில் மனிதன் இன்று சுகங்காணத் தொடங்கிவிட்டான். இதேநிலை நீடித்தால் அழகின் சிரிப்பை நாம் அகங்குளிரக் காணவியலாது. அழிவுலகின் வாயிலே ஆனந்தப் புன்னகையோடு நம்மை வரவேற்கும்!

    இயற்கையை நாம் பேணிக்காக்கத் தவறிவருவதைத் தன் கவிதையில் சிறப்பாய்ச் சுட்டியிருக்கும் திரு. கா. முருகேசன் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகின்றார். அவருக்கு என் பாராட்டு!

    Share