-மேகலா இராமமூர்த்தி

sunlight

திரு. சிவராஜன் தண்டபாணியின் கைவண்ணத்தில் இயற்கை அழகின் சிரிப்பைப் புகைப்படத்தில் காண்கின்றோம். படக்கவிதைப் போட்டிக்கு இப்படத்தைத் தேர்வு செய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி உரித்தாகின்றது.

”விரிந்த வானே வெளியே – எங்கும்
    -விளைந்த பொருளின் முதலே
திரிந்த காற்றும் புனலும் – மண்ணும்
    -செந்தீ யாவும் தந்தோய்
தெரிந்த கதிரும் நிலவும் – பலவாச்
    -செறிந்த உலகின் வித்தே
புரிந்த உன்றன் செயல்கள் – எல்லாம்
    -புதுமை புதுமை புதுமை!” என்று இயற்கையை வியப்பார் புதுவைப் புயலான பாவேந்தர்.

கைபுனைந்தியற்றா இந்தக் கவின்பெறு வனப்பைக் காணுந்தொறும் காணுந்தொறும் பாமரனும் பண்டிதனாவான்; கல்லாதவனும் சொல்மாலை தொடுக்கும் அருங்கவியாவான். இயற்கை செய்யும் செப்படிவித்தை அப்படி!

இனி, இவ்வாரப் போட்டிக்குக் கவிஞர்கள் அனுப்பியிருக்கும் பாமாலைகளைப் படித்தின்புறுவோம் வாருங்கள்!

***

தொடுவானம் கடந்து புத்துலகம் கண்ட கொலம்பஸின் சாதனையைப் போற்றியிருப்பதோடு, அச்சத்தைத் துச்சமெனத் தூக்கியெறிந்து புதுமைகள் புரிவதே அறிவியல் நெறி என்று தன் கவிதையை முத்தாய்ப்பாய்த் முடித்திருக்கின்றார் அறிவியல் கவிஞர் திரு. சி. ஜெயபாரதன்.

தொடுவானம்

தொடுவானைத் தாண்டினால்
தொப்பென வீழ்வோம்
என்று சொப்பனம் கண்டோம்!
செல்லாதே என்று
சிவப்புக் கொடி காட்டும்
செங்கதிரோன்!
தங்கப் பேராசை கொண்டு
இந்தியாவுக்கு
புதிய கடல் மார்க்கம் தேடி
அஞ்சாமல் மீறிச் சென்றவர்
கொலம்பஸ்!
புத்துலகு, பொன்னுலகு
அமெரிக்கா கண்டு பிடிக்க
வழி வகுத்தார்!
தொடுவானம் தாண்டிப் பயணித்து
துவங்கிய இடம் வந்தார்!
உலகம் தட்டை இல்லை
உருண்டை எனக் கண்டார்!
அச்ச மின்றி, அயர்வு மின்றி
உச்சி மீது வான் இடிந்தும்
முன் வைத்த காலைப்
பின்வாங்காது,
முன்னேறு வதுதான்
முதிர்ச்சி நெறி !
புதியவை கண்டுபிடிக்க
மனித இனத்துக்கு
உறுதி விதி!

 ***

சோம்பலைச் சாம்பலாக்கு! உறக்கத்தை இறக்கச்செய்! பகலவன் காட்டும் பாதையில் பயணத்தைத் தொடர்! செல்வத்திருநகரில் சேர்வாய் இன்றே!” எனும் தன்னம்பிக்கை வரிகளால் தன் கவிதையை வளப்படுத்தியிருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

இன்றே நன்று…

கதிரவன் எழுந்து
காட்டுகிறது வழி-
உறங்கிக் கிடக்காதே
உழைத்திடு உழைத்திடு,
உனைத்தொடும் வெற்றி!

வெளிச்சத்தில் பார்த்திடு
வையத்தின் வனப்பை,
வேறு சிந்தனைகள்
வேண்டாம் மனத்தில்!

பயண வழித்தடத்தில்
பலதும் பார்க்கலாம்-
இன்பப் பூக்களாய்,
இன்னல் தடைகளாய்…

பார்த்துக்கொண்டே
பயணத்தைத் தொடர்,
சேர்த்துவிடும் உன்னை
வெற்றியாம்
செல்வத் திருநகரில்..

இன்றே நன்று,
இனிதாய்த் தொடர்ந்திடு பயணத்தை…!

***

‘நீரின்றி அமையாது உலகு’ என்றார் வள்ளுவர். செக்கர் வானத்தில் மின்னும் செங்கதிரோனை விளித்து, ‘நீயின்றி அமையாது உலகு’ என்று வியக்கும் கவிஞர் பெருவை திரு. பார்த்தசாரதி, ”காலமாற்றத்தின் காவல் தலைவா! உன் சிவப்புக்குக் காரணம் வெட்கமா இல்லை கோபமா” என்று வினாத் தொடுக்கிறார்.

செக்கர் கதிரவன்!

நீயின்றி அமையாது உலகு..!
நீவாராது இவ்வையகம் எழாது.!

விண்ணிலே விந்தையாய்த் தோன்றி
மண்ணுயிரை உன்கதிரால் வாழவைப்பாய்.!

மேலைக்கடல் நடுவில் மறையும்
காலமாற்றத்தின் காவல் தலைவா..!

உன்விழி மூடினால் உலகமிருளும்.!
உனக்கும் நித்திரை தேவைதானே.!

சிலநிமிட வாழ்க்கையில் பூக்கள்
சிரித்துக் கொண்டே வழியனுப்பத்

தலைக்கன மில்லாச் செடிகளெலாம்
தன்தலை வணங்கி வாழ்த்த..

சற்றுமுன் சாந்தமாகத் தோன்றினாய்..
வெறுப்பில் இப்போது செக்கரானாயோ..?

யாருனைத் திட்டியது!. நீ

விலகிப் போகும் பாதை
உலகில் விரிவாய்த் தெரிகிறது

காலைமுதல் மாலை வரைக்
கண்ணில் கண்டவரைச் சுட்டெரித்தாய்..

யாருனைச் சாந்தப்படுத்தியது!..

அந்தி சாயுமுன் காதலி
சந்திரனைக் கண்டவுடன்

கோபமா?..அல்லது வெட்கமா..?

உன்னுதடு மட்டுமல்ல…முகம்
முழுதும் முழுச் சிவப்பானதோ!..

 ***

இயற்கை எழிலில் ஈடுபட்டு மனங்கவர் கவிமாலை தொடுத்திருக்கும் புலவர் தோழர்களுக்கு என் பாராட்டுக்கள் உரித்தாகுக!

 ***

புகைப்படங் காட்டும் தடத்தில் பயணித்துச் சில்லெனுங் கற்பனைகளோடு, சுள்ளெனச் சுடும் நிசங்களையும் இணைத்தே பிணைத்திருக்கும் கவிதை ஒன்று!

இது போல ஒரு சாலை கிடைக்குமா நடக்க!

நீண்ட சாலை,
நெடுந்தூர நடைபயணம்,
இரு புறமும் மலர்கள்,
அதன் அழகான தென்றல் காற்று!
கால் வலித்தாலும் நடக்க தூண்டும் மனம்,
சாலையின் முடிவில் கடல்,
அந்த காலை கதிரவனின் ஒளிபட்டு எங்கும்
சிதறிக் கடல் நீரே பட்டாடை போல மிளிரும் அழகு!
அதனிடையில் நான்!

இது போல் ஒரு தருணம் இனி கிடைக்குமா!
இல்லை
இது போல் ஒரு சாலைதான் இனி கிடைக்குமா!

இரு புறமும் பச்சைப் புல்வெளிகள், நடுவினில்
வயல் பாடங்களில் நடக்கும் சுகம்தான் கிடைக்குமா
இனி!
வலம்புரி, இடம்புரிச் சங்கு போல
வலப்பக்கம் சாய்வோமா
இடப்பக்கம் சாய்வோமா, அந்த
வயல்களின் காற்றுப் பட்டு!
ஊகிக்க முடியாத அனுபவம்
நெற்கதிர்கள் ஒன்றையொன்று உரசும்
ஓசைதான் இனிக் கிடைக்குமா!
காலைக்கதிரவனின் ஒளிபட்டு
மின்னும் தங்க நிற,
சோளக் கதிர்களைத்தான் காண முடியுமா இனி!
வயல்களின் முடிவில் உள்ள,
குளக்கரையைத்தான் பார்க்க முடியுமா இனி!
அதன் நடுவில் நின்று
அத்தனையும் ரசிக்கும் காட்சி இனி கிடைக்குமா!
நமக்கு!

கிடைக்கும் நமக்கு.
கிடைக்கும் நமக்கு

நடுவில் தார்ச்சாலைகள்
இருபுறமும் கட்டிடங்கள்
காணக் கிடைக்கும்!
இங்கும் அது போல ஒரு வாய்ப்பு உண்டு
வலப்பக்கம் சாய்வோமா
இடப்பக்கம் சாய்வோமா என்று – சாக்கடைக் கழிவுகள்!
சாலையின் முடிவில் நீரோட்டங்கள்
தண்ணீர்க் குழாய் சண்டை!
தெருவெங்கும் மின்னுகிறது
தங்கமும் வெள்ளியுமாய், அதன் எதிர்ப்புறம்
பிச்சை எடுக்கிறான் என் சக மனிதன்!

நான் நடுவில் நிற்கின்றேன்
பார்த்துக் கொண்டல்ல
அது போல ஒரு சாலை கிடைக்குமா!
இனி என்று!

வயல் பாடங்கள்,
நெற்கதிர்கள்,
பச்சைப் புல்வெளிகள்,
பாடப்புத்தகத்தில்.

குளக்கரைச் சோறு,
மர நிழல்
ஹோட்டலில்.

மலர்களை வருடும் தென்றலையும், சோளக்கதிர்களைச் சொலிக்க வைக்கும் கதிரவனையும், பாதையின் முடிவில் பரந்துவிரிந்திருக்கும் நீர்நிலையையும் படத்திலும் பாடப்புத்தகத்திலுமே இனி நாம் காணமுடியும். இயற்கை வனப்பை அழித்துச் செயற்கை இன்பங்களில் மனிதன் இன்று சுகங்காணத் தொடங்கிவிட்டான். இதேநிலை நீடித்தால் அழகின் சிரிப்பை நாம் அகங்குளிரக் காணவியலாது. அழிவுலகின் வாயிலே ஆனந்தப் புன்னகையோடு நம்மை வரவேற்கும்!

இயற்கையை நாம் பேணிக்காக்கத் தவறிவருவதைத் தன் கவிதையில் சிறப்பாய்ச் சுட்டியிருக்கும் திரு. கா. முருகேசன் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகின்றார். அவருக்கு என் பாராட்டு!

2 thoughts on “படக்கவிதைப் போட்டி 118-இன் முடிவுகள்

 1. தொடுவானுக்கு அப்பால் சென்றால்
  தொப்பென வீழ்வோமெனச்
  சொப்பனம் கண்டோம்.
  அப்படி இல்லை என
  மீறிப் போய்
  புத்துலகு, பொன்னுலகு
  கண்டுபிடித்த
  கொலம்பஸ் பாடலை
  முதல் கவிதையாகத்
  தேர்ந்தெடுத்தப்
  போட்ட
  நடுவர் திருமிகு மேகலாவுக்கு
  நன்றி.

  சி. ஜெயபாரதன்

 2. என்னை சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்தமைக்கு என் நன்றிகளை உரிதாக்குகிறேன். ஆசிரியர் பவள சங்கரி மற்றும் நடுவர் மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும் என் நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published.