-மேகலா இராமமூர்த்தி 

”ஆ…! தலைவியுடனேயே இணைபிரியாத் துணையாய் நிற்கும் தோழியை மறந்தேனே! அவளை  இரந்துநின்றால் மனமிரங்காமலா போய்விடுவாள்?” என்ற எண்ணம் தலைவனின்  மனத்தில்  தோன்றவும் புதிய நம்பிக்கையொன்று அவனுள் தளிர்விட்டது. 

தலைவியைச் சந்திக்க அடுத்தநாள் மீண்டும் அருவிச்சாரலுக்கு ஆசையோடு சென்றான் தலைவன். அவ்வமயம் தலைவியும் தோழியும் காட்டாற்றில் புணையோட்டி (தெப்பம்) விளையாடிக்கொண்டிருந்தனர். காட்டாற்றின் கரையோரம் வளர்ந்திருந்த வேங்கைமர ஓரமாய் மறைந்துநின்றபடி அக்காட்சியைக் கண்டுகளித்துக்கொண்டிருந்த தலைவன்,

”என்ன இது விந்தை! தளிர்புரை மேனியும் குளிர்விழிகளும் கொண்ட மெல்லியளாகிய தலைவி, தோழி புணையின் தலைப்பகுதியைப் பிடித்தால் தானும் தலைப்பகுதியைப் பிடிக்கின்றாள்; தோழி கடைப்பகுதியைப் பிடித்தால் தானும் கடைப்பகுதியைப் பிடிக்கின்றாள். தோழி புணையைவிட்டுப் புனலோடு போனால் இவளும் அவளோடு சென்றுவிடுவாள் போலிருக்கிறதே!” என வியந்தான்.

தலைப்புணைக்  கொளினே  தலைப்புணைக்  கொள்ளும்
கடைப்புணைக்  கொளினே  கடைப்புணைக்  கொள்ளும்
புணைகை  விட்டுப்  புனலோ  டொழுகின்
ஆண்டும்  வருகுவள்  போலு  மாண்ட
மாரிப்  பித்திகத்து  நீர்வார்  கொழுமுகைச்
செவ்வெரி  நுறழும்  கொழுங்கடை  மழைக்கண்
துளிதலைத்  தலைஇய  தளிரன்  னோளே(குறுந்: 222.  சிறைக்குடி ஆந்தையார்) 

”இருதலையும் ஓருயிரும் கொண்ட பறவையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால், ஈருடலும் ஓருயிருங் கொண்டோராய் இவர்கள் இருவரும் திகழக் காண்கிறேன். என் உள்ளங்கவர் தலைவியின் காதலைப் பெற இத்தோழியே உற்றதொரு பற்றுக்கோடு எனத் தெரிந்து தெளிந்தேன்” என்று தன்னுள் கூறிக்கொண்டான்.

மறுநாள் தோழியை மட்டும் தனியே சந்திக்கும் வாய்ப்புக்காகக் காத்திருந்தான் தலைவன். தலைவியின்றி தோழிமட்டும் தனித்துவந்த வேளையொன்றில் தான் கையுறையாக (அன்பளிப்பு) கொண்டுவந்த செங்காந்தள் மலர்க்கொத்தை  (clusters of Malabar glory lilies) அவளிடம் நீட்டினான். முன்னமே சிலமுறை தலைவனைக் கண்டவளும், கண்டபோதே (தலைவிமீது காதலுற்ற) அவன் மனத்தை அறிந்துகொண்டவளுமான தோழி, தலைவன் தந்த மலர்க்கொத்தைப் பார்த்துக் ’களுக்’கென்று சிரித்துவிட்டு,

”என்ன ஐயா! கொல்லன் தெருவிலேயே ஊசி விற்கிறீர்கள்!” என்று கேட்கவும், அவள் வார்த்தையின் உட்பொருள் உணராத் தலைவன், “என்ன சொல்கிறாய் பெண்ணே! சற்று விளங்கும்படியாகத்தான் சொல்லேன்?” என்றான்.

”ஐய! போர்க்களம் குருதியால் செங்களமாகும்படி glory lillyஅவுணர்களைக் களமாடி அழித்த செங்கோல் அம்பையும், செங்கோட்டு யானையையும் உடைய கழலும் தொடியணிந்த செவ்வேள் முருகனின் இக்குன்றம் செங்காந்தள் பூங்கொத்துக்களால் நிறைந்துள்ளதைத் தாங்கள் காணவில்லையோ” என்று குறும்பாய்க் கேட்டுவிட்டு அவன் கையுறையை மறுத்து அவ்விடம் விட்ட கன்றாள்.

செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பின் செங்கோட்டி யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.
  (குறுந்: 1 – தீப்புத்தேளார்/திப்புத்தோளார்)

”அடடா! இங்கே நோக்குமிடமெல்லாம் நீக்கமறப் பூத்துக்கிடக்கும் செங்காந்தள் மலர்களை ஏதோ கிடைத்தற்கரிய பொருளைப்போல் நான் கையுறையாய்க் கொணர்ந்தது மெய்யாகவே மடமைதான். அதனை இந்தப்பெண் எத்தனை நாசூக்காகச் சொல்லிவிட்டுப் போய்விட்டாள்! இவள் பலே கெட்டிக்காரிதான் என்பதில் ஐயமில்லை” என்று எண்ணிக்கொண்டான் தலைவன்.

அதன்பின்னர், தலைவியும் தோழியும் வாழும் சிறுகுடியினரின் சேரிக்கு அவன் தினந்தோறும் வருவானாயினன். இவ்வாறு அவன் நாள்தவறாது தலைவியைக் காண வருவதும், அவள் அன்பு கிடைக்காது வறிதே மீள்வதும் தோழியின் மனத்தில் இரக்கத்தைச் சுரக்கச்செய்தது. தலைவியை எப்படியாவது அவனோடு சேர்த்துவைக்கவேண்டும் எனும் எண்ணம் அவளுள் எழுந்தது.

ஒருநாள் சமயம்பார்த்துத் தலைவியிடம் தோழி மென்மையாக, ”அருமைத் தோழி! நம் சேரிக்கு நிதமும் வந்து நம்மிடம் இன்மொழி கூறுகின்றானே ஓர் இளவல்…அவன், தான் வந்தநோக்கம் நிறைவேறாததால் நொந்த மனத்தோடும் ஒளிகுன்றிய முகத்தோடும் நிற்கக் காண்கிறேன்; துன்பத்தைப் புலப்படுத்தும் அவன் பைதல்நோக்கைச் சற்றேனும் நீ மாற்ற நினையாயோ? இனிய கடுங்கள்ளையுடைய ’அகுதை’யின் (மதுரையில் வாழ்ந்த ஒரு வள்ளல்) பின்னே வெள்ளியகோலோடு நிற்கின்ற அகவன்மகளிர் (குறிசொல்லும் கட்டுவிச்சியர்), அவன் தரும் மடப்பிடிப் பரிசிலைப் பெறுதலையே தம் நோக்கமாகக் கொண்டு நிற்பதைப்போல் நீண்டநேரம் இங்கேயே நிற்கும் தலைவனும் நம்மிடம் வேறெதையோ எதிர்பார்க்கின்றான்” என்று அவன் உளக்குறிப்பைத் தலைவிக்கு உணர்த்தினாள்.

சேரி  சேர  மெல்ல  வந்துவந்து
அரிது  வாய்விட் டினிய  கூறி
வைகல்  தோறும்  நிறம்பெயர்ந்  துறையுமவன்
பைதல்  நோக்கம்  நினையாய்  தோழி
இன்கடுங்  கள்ளின்  அகுதை  பின்றை
வெண்கடைச்  சிறுகோ  லகவன்  மகளிர்
மடப்பிடிப்  பரிசில்  மானப்
பிறிதொன்று  குறித்ததவ ன்  நெடும்புற  நிலையே. (குறுந்: 298 – பரணர்)

[ஈதொப்ப, தலைவனுக்காகத் தோழி பரிந்துபேசும் பாடலொன்று கலித்தொகையிலும் காணக்கிடைக்கின்றது.

கயமல  ருண்கண்ணாய்  காணா  யொருவன்
வயமான்
 அடித்தேர்வான்  போலத்  தொடைமாண்ட
கண்ணியன்
 வில்லன்  வருமென்னை  நோக்குபு
முன்னத்திற்
 காட்டுதல்  அல்லது  தானுற்ற
நோயுரைக்
 கல்லான்  பெயருமற்  பன்னாளும்(கலி: 37: 1-5)]

தலைவனின் மனத்தை உணர்த்திய தோழியைத் தன் பார்வையால் எதிர்கொண்ட தலைவி தணிந்த குரலில், ”நான்மட்டும் அவன் உள்ளம் உணரவில்லை என்றா நினைக்கிறாய்? அவன் எண்ணத்தை நான் ஏற்றுக்கொண்டால் அதனால் எனக்கு என்ன துன்பம் வருமோ என்று அஞ்சுகின்றது என் நெஞ்சம்; அதனால்தான் அவனிடமிருந்து விலகியே நிற்கிறேன் கொஞ்சம்” என்றாள் வேதனையோடு.

”பெண்ணே! அவனைப் பார்த்தால் உள்ளன்போடு உன்னைக் காதலிப்பவனாகவே தோன்றுகிறது. அவன் காதலை நீ ஏற்றுக்கொள்வதில் தவறொன்றுமில்லை” என்று தலைவிக்குத் துணிவூட்டினாள் தோழி. சிந்தித்துப்பார்த்த தலைவியும் தலைவனின் காதலை உளப்பூர்வமாக ஏற்றுக்கொண்டாள். அவர்கள் நெஞ்சங்கலந்த நேயராயினர்.

ஈண்டு, தோழி குறித்துச் சில வார்த்தைகள் சொல்ல விழைகின்றேன்…

அகத்திணை இலக்கியத்தில் தலைவியின் இன்னோர் உயிராய்த் திகழ்கின்ற தோழி, அவளின் இன்ப துன்பங்களில் நேரிடையாகப் பங்குகொள்பவள். தலைவியின் காதலைச் சேர்த்துவைப்பதற்கு அவள்படும் பாடுகளும் செய்யும் சூழ்ச்சிகளும் நம்மைத் திகைக்கவைப்பன.

இந்தத் தோழி யார்? தலைவியின் அயல்வீட்டாளா? அல்லது புதிதாக வந்து நட்புசெய்து கொண்டவளா? என்று கேட்டால் ’இல்லை’ என்றே கூறவேண்டும். இவள் தலைவியை நற்றாயினும் (தலைவியைப் பெற்ற தாய்) கண்ணுங் கருத்துமாய்ப் பேணிவளர்க்கும் செவிலித் தாயின் மகளாவாள்.

”தோழி தானே செவிலி மகளே” (தொல்: பொருள்: கள: 123) என்பது தொல்காப்பியம். எனவே தோழி பெரும்பாலும் தலைவியின் வீட்டில் அவளுடனேயே வளரும் அல்லது அவளுடன் அதிகநேரம் உறையும் வாய்ப்பைப் பெற்றவளாயிருப்பாள்.

இதற்கு மறுதலையாகத் தலைவனின் தோழனாக வரும் பாங்கனோ தலைவனின் காதலைக் கண்டித்து இடித்துரைப்பானே யல்லால் தோழிபோல் துணைநிற்கும் பாங்கினன் அல்லன் என்பதும் இங்கே சுட்டுதற்குரியது.

மீண்டும் குறுந்தொகைக்குத் திரும்புவோம்…

நெஞ்சங்கலந்த தலைவன் தலைவியரின் நட்பு நாள்செல்லச் செல்ல நிலத்தினும் பெரிதாய், வானினும் உயர்ந்ததாய் வளர்ந்தோங்கியது.

தலைவியை நாள்தோறும் தலைவன் சந்திக்க ஏற்ற இடத்தையும் பொழுதையும் முடிவுசெய்யும் பொறுப்பைத் தோழியே மேற்கொண்டாள். இதற்குக் ’குறியிடம்’ என்று பெயர்.

ஒருநாள் காதலர்கள் சந்திக்குமிடத்தில் மறுநாள் அவர்கள் சந்திப்பு நிகழ்வதைத் தோழி விரும்புவதில்லை. காரணம்… இந்தக் களவுக்காதலை யாரேனும் உளவுபார்த்து ஊரார்க்கும், தலைவியின் பெற்றோர்க்கும் சொல்லிவிட்டால் அன்பே தகளியாய், ஆர்வமே நெய்யாய், இன்புருகு சிந்தை இடுதிரியாய் இட்டுத் தலைவனும் தலைவியும் ஏற்றிய காதற் சுடர்விளக்கு அணைந்துவிடுமே எனும் அச்சந்தான்!

[தொடரும்]

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *