உலையுள்ளே உனைக்கண்டேன் – நவராத்திரி கவிதை (2)
இசைக்கவி ரமணன்
உலையுள்ளே உனைக்கண்டேன்
உற்ற பிறப்பும் உறுதுயரும் இன்பமும்
பெற்றவளே உன்றன் பிரசாதம்! மற்று
வினையே தெனக்கு? விதியே தெனக்கு?
உனையேநான் என்றேன் உணர்.
உணர்வின் முனையின் துளியாய்க் கனலும்
குணமற்ற விந்தைக் குழந்தாய்! ரணமான
நெஞ்சைத் தடவி நினைவைக் குலவியதைப்
பஞ்சாக்கித் தீயாய்ப் பருகு.
பருகப் பெருகும் பரதாகம்! நெஞ்சம்
உருக வளரும் விரகம் – ஒருகரம்
மெள்ளத் தலைகோதும் வேளையில் அவ்வின்பம்
கொள்ளத்தான் ஒண்ணுமோ கூறு
கூறும் மொழியும் குறிக்கும் பொருளுமதில்
ஊறும் சுவையும் ஒருத்தியே! மாறும்
உலகினில் மாறாத உண்மையே! ஏனோ
கலகத்தி லேஇமைப்பாய் கண்
கண்ணான கண்ணன்றோ! கட்டழகுப் பெண்ணன்றோ!
மண்ணான வாழ்வில் மலரன்றோ! எண்ணாத
எண்ணத்தின் பின்னிருக்கும் ஏகாந்தம் தானன்றோ!
வண்ணத்தின் பின்னிருக்கும் வான்.
வானயர்ந்து போனாலும் நானயர்ந்து போகாமல்
தேனயரும் தித்திப்புத் தீந்தமிழில் – மானேயுன்
போக்கேது மற்ற புதிர்நடையை, என்னிசை
வாக்கில் வடித்திடுவேன் வா!
வாவென்றால் வந்திடுவாய்; வந்தென்முன் நின்றிடுவாய்
போவென்று சொல்லாதே! போகாதே! காவென்று
காலில் விழுந்தவனைக் கையால் எடுத்துடனே
காலில் அழுத்தியெனைக் கா.
காலத்தே நேரமெனக் கண்பொத்தி நீயாடும்
ஜாலத்தை என்னென்பேன் சாம்பவியே! ஞாலத்தே
தூலத்தை வைத்துத் துளியொளியாய் உள்நின்ற
கோலத்தைப் பாடுவதே சொல்.
சொல்வேண்டும்! தக்கபடிச் சோழி விழவேண்டும்!
நில்லென்றால் எல்லாமும் நிற்கவேண்டும் – செல்லென்றால்
மானுடர் துன்பமெல்லாம் மாயமாய் நீங்கவேண்டும்
ஊனுள்ளே மந்திரச்சொல் ஊற்று.
ஊற்று பெருகட்டும்! உள்ளம் உருகட்டும்!
மாற்றத்தின் மத்தியிலே மாறாமல் – ஏற்றம்
நிலைக்கட்டும்! ஏலா தலைபாயும் நெஞ்ச
உலையுள் உனைக்கண்டேன் உற்று!