-மேகலா இராமமூர்த்தி

kiddrawingkolam

புள்ளிகளால் பாலங்கட்டி எழிற்கோலந் தீட்டும் சிறுமியைப் புகைப்படம் எடுத்துவந்துள்ளார் திருமிகு. ஷாமினி. படக்கவிதைப் போட்டிக்கு உகந்த படமிது  என்று இதனைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

சிறுவயதிலேயே பயின்று தேரவேண்டிய அற்புதக் கலை கோலக் கலை! விரல்களுக்கு நல்ல பயிற்சியாகவும், கற்பனைக்கு உரமூட்டும் வாய்ப்பாகவும் அமையக்கூடியது இக்கலை எனில் மிகையில்லை. மனமொன்றிக் கோலம் தீட்டுவதுகூட ஒருவகை தியானந்தான்!

வண்ணக்கோலங்களை மிஞ்சும் வகையில் நம் கவிஞர்கள் தீட்டியுள்ள வார்த்தைக் கோலங்களை சுவைத்தின்புறும் தருணமிது! வாருங்கள்!

*****

”பாவையர் இடுவது இழைக்கோலம்; பாவியர் இடுவது பிழைக்கோலம்; வீரன்கொள்வான் போர்க்கோலம்; அவன் வெற்றியில் காண்பான் தேர்க்கோலம்” என்று வரிசையாய்க் கோலங்களின் வகைகளைப் பட்டியலிட்டு நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகின்றார் திருமிகு. சாய்ரேணு.

கோலம்

வாசலில் இடுவது மாக்கோலம்
வார்த்தையில் இடுவது பாக்கோலம்
பரம்பொருள் தந்தது ஒளிக்கோலம்
பாரிது கொண்டது களிக்கோலம்

பாவையர் இடுவது இழைக்கோலம்
பாவியர் இடுவது பிழைக்கோலம்
வானகம் கொண்டது மழைக்கோலம்
கானகம் பெற்றது தழைக்கோலம்

மேகங்கள் சேர்ந்தால் கார்க்கோலம் – அவை
மேனி சிலிர்த்தால் நீர்க்கோலம்
வீரன் கொள்வான் போர்க்கோலம் – அவன்
வெற்றியில் காண்பான் தேர்க்கோலம்

தீயவர் இடுவது அவக்கோலம் – உளத்
தூயவர் கொள்வது தவக்கோலம்
மேதையர் இடுவது மதிக்கோலம் – எங்கள்
மாயவன் இடுவது விதிக்கோலம்

பாவலர் எழுதுவர் கவிக்கோலம் – நம்
பரமன் செயலோ புவிக்கோலம்
பக்தியில் வருவது இசைக்கோலம் – நல்ல
பகலவன் தந்தது திசைக்கோலம்

அருமையாய் செழிக்கும் பயிர்க்கோலம் – வா!
அன்பிலே தழைக்கட்டும் உயிர்க்கோலம்
வழுவிலாதெழுதுங்கள் அகக்கோலம் – பின்
வாழ்வினில் எல்லாம் சுகக்கோலம்!

*****

திரு. பழ. செல்வமாணிக்கத்தின் கவிதையும் கோலங்களின் வகைகளையும் அவற்றின் பயன்களையும் பரக்கப் பேசுகின்றது.

எண்ணக் கோலங்கள்:

புள்ளி வைத்து கோலம் போடும் சின்னப் பெண்ணே !
உன் போல்,கோலமும் அழகு, செல்லப் பெண்ணே !
அன்புக் கோலம் உறவை வளர்க்கும் ஆசைப் பெண்ணே!
கல்விக் கோலம் அறிவை வளர்க்கும் சமத்துப் பெண்ணே!
கருணைக் கோலம், மனிதம் வளர்க்கும் வண்ணப் பெண்ணே !
புன்னகைக் கோலம், அழகை வளர்க்கும் சிட்டுப் பெண்ணே!
அமைதிக் கோலம், அகிலம் காக்கும் அருமைப் பெண்ணே!
ஒற்றுமைக் கோலம், உலகை உயர்த்தும் சுந்தரப் பெண்ணே!
உழைப்பு கோலம், வெற்றியைக் கொடுக்கும் புதுமைப் பெண்ணே !
முயற்சிக் கோலம், நினைத்ததைக் கொடுக்கும் இனிமைப் பெண்ணே!
அகந்தைக் கோலம், நம்மை அழிக்கும், உணர்வாய் பெண்ணே!
சாதிக் கோலம், சாவைக் கொடுக்கும், அறிவாய் பெண்ணே!
போதைக் கோலம் நாட்டை அழிக்கும், தெளிவாய் பெண்ணே !
போரின் கோலம், உலகை அழிக்கும், புரிவாய் பெண்ணே!
வண்ணக் கோலம் போட விழையும் தங்கப் பெண்ணே!
எண்ணக் கோலம் போட்டால், நன்மை பயக்கும் பெண்ணே!

*****

”துள்ளிச்செல்லும் பள்ளிச்சிறுமி இட்ட இந்த சிங்காரக்கோலம் காண்போர் உள்ளம் கொண்டது; பரிசை வென்றது” என்று குதூகலிக்கின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

கோலமிடும் பாவாய்!

சின்னச் சின்ன கோலம்!
சிங்காரக் கோலம்!
வெள்ளை மாவில் அணியாய்ப்
புள்ளிகள் போட்டு
பள்ளிச் சிறுமி
துள்ளிப் பாடி
வரைந்த கோலம்!
அம்மா எழுவதற்கு முன்பு
முற்றம் பெருக்கி
பளிச்செனப் போட்ட கோலம்!
அம்மா கோலம்
சும்மா தோற்றுப் போகும்!
அக்கா போட்ட கோலம்
தப்பா போச்சுடி பார்!
தங்கிச் சிரிக்குது
தங்கை போட்ட கோலம்
மங்க வில்லை மாலை!
இறுதியில்
தெருப் போட்டிப் பரிசு
சின்னக் கோல மிட்ட
சிறுமிக்கே!

*****

”விண்ணில் புள்ளிவைத்த வானம் கோலமிடத்தெரியாமல் விழித்திருக்க, மண்ணில் தோன்றிய மங்கையர் எழிலார் கோலங்களால் வீதியை வனப்பாக்குகின்றனர்” என்று வனிதையரைப் புகழ்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.  

அங்கும் இங்கும்…

விண்ணில்-
வீதியெல்லாம் புள்ளிவைத்துவிட்டு,
விரிவானக் கோலமிடத்
தெரியாமல்,
விழிக்கிறது வானம்..

மண்ணில்-
எண்ணம்போல் புள்ளிவைத்து,
எழிலோடு
எழிலாகக் கோலமிட்டு,
வீதியை வனப்பாக்கும்
எங்கள் செல்வங்கள்…!

*****

”வீதியில் போடும் கோலங்களில் பெண்ணின் கைத்திறமை மிளிர்கின்றது; வாழ்வில் அவள் போடும் கோலங்களில் மானுட வாழ்வே ஒளிர்கின்றது! ஆதலால் பெண் குழந்தை பெறுவதே பெருமை” என்று பெண்ணின் பெருமை பேசுகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

பெண்குழந்தை பெறுவதே பெருமை..!

விழிப்புறுவாள் அதிகாலை மார்கழி நன்னாளில்..
…….விடியுமுன்னே வீடனைத்தையும் சுத்தம் செய்வாள்.!
விழிமூடா நிலையினிலே இயங்கிடுவாள் தரையினிலே
…….விரல்நுனியில் வேகமாய் புள்ளியினை இட்டிடுவாள்.!
மொழிகூடப் பேசு மவள்போட்ட மாக்கோலம்..
…….விழிதிறந்து பார்க்கையில் வியப்பில்நமை ஆழ்த்தும்.!
அழியாத கோலமாக அவளிட்ட கோலம்தான்..
…….ஆழமாக மனதினிலே பதிந்தவள் திறம்சொல்லும்.!

துள்ளித் துள்ளி ஓடிவரும் சின்னஞ்சிறுமியவள்
…….துடிப்புடனே செயல்படு மாற்றல் கொண்டவள்.!
பள்ளி செல்லுமுன் வாசலிலே கோலமிடுவாள்
…….பள்ளிமுடிந்ததும் படிப்பினிலே நாட்டம் வரும்.!
அள்ளியவளை அணைத்தே பெற்றோரும் மகிழ
…….அன்றாடம் அவள் செய்யுமருமைச் செயலினாலே.!
கிள்ளிச் செல்வாள் மனதையெலாம் தன்குறும்பாலே
…….கவர்ந்திடுவாள் படித்திடுவாள் பள்ளியிலே முதலாக.!

ஆண்மகவே வேண்டுமென்று விரும்புவது அன்று..
…….ஆணுக்கு இணையாக பெண்பேசப்படும் நிலையின்று.!
பெண் மகவொன்றை முதலாகப் பெற்று விட்டால்..
…….பெரிதென நினைத்து பெருமைப்படும் காலமுமிதுதான்.!
தூண்போல நின்று வாழ்வில்வரும் துயரெல்லாம்..
…….துடைத்து குடும்பத்தில் பெரும்பங்கு வகிப்பவளவளே.!
நாண்போன்று நற்குடும்பமதைக் கட்டிக் காப்பாளவள்..
…….பெண்ணென்று வெறும்பேச்சு சொல்ல அனுமதியாள்.!

*****

பிஞ்சுவிரல்களால் நெஞ்சைக் கவரும் கோலம் வரைந்த சிறுமியின் பெருமையை, அவள் வாழ்வில் கொள்ளும் பல்வேறு கோலங்களோடு ஒப்பிட்டுப் பேசியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

*****

காலம் போடும் கோலம் விசித்திரமானது. கணித்துரைக்க இயலாதது. ஆதலால் எத்தகைய கோலத்தைக் காலம் பெண்ணுக்குப் பரிசாய்த் தந்தாலும் அச்சங் கொள்ளாமல் அகந்தையில்லாமல் மரபுதனைப் பேணி தரணி வெல்வதே பெண்ணின் கடன் எனும் அரிய கருத்தை எளிமையாய்ச் சொல்லும் பாடலிது!

அறிவுரை

சின்ன சின்ன விரல்கள் கொண்டு
சிறு கோல மிடும் பைங்கிளியே
சிறிய தொரு அறிவுரையைச்
செவி மடுத்துக் கேட்டிடுவாய்…

இன்று,
உன் எண்ணமதை ஒருங்கிணைத்து
வண்ண வண்ண நிறங்கள் தீட்டி
வாசல் கோலம் நிறைவு செய்து
வீட்டி னுள்ளே நுழைந் திடலாம்

ஆனால்
வாழ்க்கைக் கோலம் என்னவென்று
வஞ்சி உனக் கெடுத் துரைக்க
நாளை எனும் நாட்கள் கொண்ட
வருங் காலம் காத்திருக்கு!!

தாயாக ஒரு கோலம்,
தாரமாக மறு கோலம்,
வன்மம் கொண்ட கயவர் காணின்
வீறு கொள்ளும் சினக் கோலம்…

நெடுந் தூரப் பயணங்கள்
உனக்காகக் காத்திருக்கத்
தடம் புரண்டு செல்லாமல்
தரணியதை நீயும் வெல்லு!

வாழ்க்கை செல்லும் பாதையிலே
பின் தொடர்ந்து போவதிலே
வழித்தடத்தைத் தொலைக்கின்றோம்
நம் மரபுகளை மறக்கின்றோம் !!

சின்னச் சின்ன மகிழ்ச்சிகளைச்
சிறைப் படுத்தி வைக்கின்றோம்
நம்மை நாமே மறக்கின்றோம்
மாற்ற மதில் கலக்கின்றோம்

ஆதலால்

ஓலம் பல வரினும்,
ஞாலம் எது தரினும்;
உன்னை நீயே தொலைக்காமல்
உன் தனித்துவத்தை இழக்காமல்

உன் காலம் உள்ள அதுமட்டும்
உயிர்க் காற்று உள்ள அதுமட்டும்
இன்று போல என் றென்றும்
கோல மிட்டு மகிழ்ந்து இரு !!

பயங்கொண்டு சுயமிழக்காது வாழ்வில் சயங் காணப் பெண்களை வலியுறுத்தும் இக்கவிதையின் ஆசிரியர் திருமிகு. இராஜலட்சுமி சுப்ரமணியத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிப்பதில் மகிழ்கின்றேன்.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “படக்கவிதைப் போட்டி 120-இன் முடிவுகள்

  1. என்னை இந்த வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தேடுத்த போட்டியின் நடுவர் அவர்களுக்கும் வல்லமை குழுவினருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  2. //// விண்ணில்-
    வீதியெல்லாம் புள்ளிவைத்துவிட்டு,
    விரிவானக் கோலமிடத்
    தெரியாமல்,
    விழிக்கிறது வானம்.. ///

    இல்லை !

    தொலைநோக்கி மூலம் பார்த்தால் விண்ணில் ஒளிமந்தை என்னும் காலக்ஸிகள் சுருள் சுருளாய், வண்ண நீள்வட்டமாய்க் கோலங்கள் விண்மீன்களைச் சுற்றி வரையப் பட்டுள்ளன.

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *