-மேகலா இராமமூர்த்தி

ladyand sea

வாரிதியை நோக்கிநிற்கும் காரிகையைக் காண்கின்றோம் திரு. ராகுல் ரவீந்திரன் எடுத்த இந்தப் படத்தில். புகைப்படக்கருவி தந்த காவியமா, கை புனைந்த ஓவியமா என்று ஐயுறும் வண்ணம் திகழ்கின்றது  இப்படம்!

மனங்கவரும் கடலரசி, தன் எண்ணங்களை அலைகளாக்கி மாந்தர்க்கு வரைகிறாளோ மடல்?

நீலமும் மஞ்சளும் இணைந்து கோலங் காட்டும் வானின் தோற்றமும் காணக் கவினே!

கண்கொள்ளாக் காட்சியிதனைத் தம் கவிதைகளில் பதமாய் வார்த்தெடுக்க வருகிறார்கள் கவிஞர் பெருமக்கள்!

***

”கடலழகு, கடல் தரும் அலையழகு; வானழகு, வான் வரும் நிலவழகு. மண்ணழகு, மண் வந்த அத்தனையும் பேரழகு; இவற்றையெல்லாம் தனித்துநின்று இரசிப்பதுமே ஓரழகு” என்கிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

தனிமையின் மகிமை: கடல் அழகு !
கடல் வரும் அலை அழகு!
கடல் வாழ் மீன் அழகு!
கடல் தரும் முத்தழகு!
வான் அழகு!
வான் சேர் வண்ணங்கள் அழகு!
வான் தோன்றும் நிலவு அழகு!
கண் சிமிட்டும் நட்சத்திரங்கள் தனி அழகு!
முகில் அழகு!
முகில் தரும் மழை அழகு!
மண் அழகு!
மண் தந்த அத்தனையும் பேரழகு!
இத்தனையும் ரசிக்கும் பெண் அழகு!
ரசிக்க வழி தந்த தனிமை தனி அழகு!
பிறந்தது தனியாக!
போவதும் தனியாக!
தனிமை ஞானம் தரும்!
தனிமை உனை உணர்த்தும்!
தனிமை, இனிமை எனும்
உண்மை, நீ உணர்ந்தால்!
மன அமைதி, உடனே கை கூடும்!

***

”விண்ணைப் படைத்தான்; விரிகதிர் மதியொடு விண்மீனும் படைத்தான்; மண்ணைப் படைத்தான்; மண்ணொடு தொடரும் மாமலைகள் படைத்தான்; இவற்றையெல்லாம் கண்டு இரசிக்கும் கண்ணைப் படைத்தான்” என்று இறைவனின் படைப்பாற்றலை வியக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

இறைவனின் படைப்பாற்றல்..!

அற்புதக் காட்சியொன்றை கண்டுவிட்டால் அதன்
……….அழகைப் படம்பிடித்து மூளைக்கனுப்பும் நம்மனது.!
கற்பனைத் தேரிலேறி காட்சியோடது ஓடும்போது
……….கட்டுக்கடங்கா மகிழ்வும் புத்துணர்ச்சியு மதிலெழும்.!
சுற்றிலும் அலைபாயும் அம்மனத்தைக் கட்டுப்படுத்த
……….சுகமாயங்கே காட்சிதரும்கடலும் மேகமும் நிலவும்.!
பற்றுமிக்கப் புலவர்களதை பார்த்துவிட்டால் போதும்
……….பாட்டோடதைப் பண்ணுடன் பாமாலையாக்கி விடுவர்.!

விண்ணைப் படைத்தானிறைவன் தொடரும் அதனுடன்
……….விரிகதிர் மதியொடு விண்மீனும் மேகமும் படைத்தான்.!
மண்ணினைப் படைத்தான் மண்ணொடு தொடரும்
……….மலைகளும் மூவகை உயிர்களும் படைத்தான்..!
தண்ணீரைப் படைத்தான் தொடரும் அதனுடன்
……….பன்னெடும்நதி கொடுக்கும்மழை கொடுத்ததுடன் புவி..
மண்டலத்தில் காற்றைப் படைத்தான் அதனால்
……….பூங்காற்று தென்றலொடு உயிர்மூச்சைக் கொடுத்தான்.!
தணலென நெருப்பைப் படைத்தான் அதனால்
……….எதையும் இயங்கவைக்கும் எரிசக்தி படைத்தான்.!

எத்துணையோ நுண்ணுயிரும் மண்ணுயிரும் புவியுலகில்
……….இயற்கையாகத் தோன்றவொரு நெறிவகுத்தான் இறைவன்.!
வித்தாக அவையெல்லாம்….விதையொன்றைப் படைத்தான்
……….வியந்துநோக்க எவ்வுயிர்க்கும் கண்களைப் படைத்தான்.!
அத்தனையும் கண்டுகளித்து அனைத்தையும் பாதுகாக்க
……….பஞ்சபூத இயற்கையினைப் படைத்தனைத்தையும் காத்தான்.!
இத்தனையும் விண்மண் நீர்நெருப்பு காற்றென விரியும்
……….இறைவனின் படைப்பாற்றலை யதிசயித்துப் பாடுகிறேன்.!

***

”கருநிலவுக்கு ஒளியூட்டூம் கதிரோனின்றி இருண்டுவிட்டது மருள்மாலை. ஈதொப்ப, மனைக்கு விளக்காம் மனைவியில்லையேல் மனை பாழ்; ஒளிரும் கதிரோனொத்த கணவனில்லையேல் வாழ்வு பாழ்” என்பது திரு. சி. ஜெயபாரதனின் கருத்து.

அத்தமனம்!

கரு நிலவுதான் நாம்
காண்பது!
ஒருமுகம் காட்டி நிலவு
மறுமுகத்தை மறைக்குது!
கரு நிலவுக்கு ஒளியூட்டும்
கதிரோ னின்றி
இருளடைந் துள்ளது
இனிய மாலை பொழுது!
கணவன் அத்தமித்த கருவானம்
ஒளி மங்கி, இருள் மண்டி
மனம் பொங்கி
அழுகிறது!
விடிவு காலம் வருமா?
மனைக்கு விளக்கு வனிதை!
மனைவி இல்லாத
இல்லம் பாலை வனம்!
ஆயினும்
கதிரோன் இல்லாத
தரணி இடுகாடு!

***

படத்துக்குப் பொருத்தமாய்க் கருத்துள்ள கவிதைகளை அளித்துள்ள கவிஞர்களுக்கு என் பாராட்டு!

இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது இனி வருகின்றது…

விடியுமா…?

அலையே அலையே வருவாயே
அங்கே அவனைக் காண்பாயா?
சிலையாய் நானும் காத்திருக்கும்
சேதி நீயும் சொல்வாயே!
நிலையிலாச் செல்வம் போதுமென்பாய்
நிம்மதி தரவே வரச்சொல்வாய்!
கலைநிறை வானம் வெளுத்ததுவே
காரிகை யெனக்கு விடியாதோ…?!

தலைவனைப் பிரிந்து தவிக்கும் தலைவியொருத்தி தன் தாபத்தைக் கடலலைகளிடம் வெளிப்படுத்துகிறாள் இக்கவிதையில். நிலையில்லாச் செல்வத்தைத் தேடுவதில் முனைந்தால் இல்லறமாம் நல்லறமும் ஆடவர்க்கு மறந்துபோவதை நம் சங்கப்பாடல்கள் நிரம்பவே பேசுகின்றன. பொருளினும் தலைவனின் அருளே தலைவி என்றும் வேண்டுவது. அக்கருத்து இக்கவிதையில் வெளிப்படக் காண்கின்றேன்.

நில்லாதவற்றை நிலையின என்றுணரும் புல்லறிவாண்மையை மென்மையாய்ப் பகடிசெய்யும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என்று அறிவிப்பதில் மகிழ்கின்றேன்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 124-இன் முடிவுகள்

  1. இவ்வார சிறந்த கவிஞராக என்னைத் தேர்ந்தெடுத்த திருமதி. மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும், ‘வல்லமை’ நிர்வாகத்தினர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.