Advertisements
இலக்கியம்கட்டுரைகள்

குறுந்தொகை நறுந்தேன் – 1

-மேகலா இராமமூர்த்தி

மனிதன் ஒரு சமூக விலங்கு. தனித்து வாழ்வதினும் பிறரோடு இணைந்தும் இயைந்தும் வாழ்வதிலேயே அவன் வெற்றி அடங்கியிருக்கின்றது. சமூக அறம் இருவகைப்பட்டது. ஒன்று இல்லறம்; மற்றது துறவறம். ஆசைகளையும் தேவைகளையும் துறந்து பற்றற்ற நிலையில் வாழும் துறவென்னும் அறம் எல்லார்க்கும் எளிதில் வாய்ப்பதன்று; ஆனால் ஆணும் பெண்ணும் கணவனும் மனைவியாய் இணைந்து வாழும் இல்லறம் சாமானியர் பின்பற்றுதற்கு எளிது; அதனால் பலராலும் விரும்பப்படுவது.

இறந்தோர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார் இவர்களோடு தம்மையும் பேணும் பணி இல்லறத்தார்க்கு உரியதாய் வகுக்கப்பட்டுள்ளதால் பற்றற்று வாழும் துறவறத்தினும் அனைவர்மீதும் பற்றுக்கொண்டு வாழும் இல்லறமே சிறந்தது என்பது வள்ளுவப் பெரியாரின் துணிபு.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
(குறள்: 43)

ஆன்றோர் போற்றும் இந்த இனிய இல்லறத்தைத் தொடங்கிவைப்பது ஒத்த தலைவனுக்கும் தலைவிக்குமிடையே நிகழும் மணவினையே ஆகும். அத் திருமணம் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துப்பழகியபின் நிகழும் காதல் மணமாகவும் இருக்கலாம்; பெற்றோர் கூட்டுவிக்கின்ற கடிமணமாகவும் இருக்கலாம்.

இவ்விரு மணங்களில் குமுகத்தில் மிகுதி எது என்று ஆராய்ந்தால் தமர் என்று சொல்லப்படும் பெற்றோரும் உற்றாரும் கூட்டுவிக்கும் மணங்களே மிகுதி என்று சொல்லலாம். எனினும், நாடக வழக்கிலும், பாடல்சான்ற புலனெறி வழக்கிலும் படிப்போர்க்குச் சுவைகூட்டுதற்பொருட்டு காதல் மணங்களே ’அன்பின் ஐந்திணை’ எனும் பெயரில் நம் புலவர் பெருமக்களால் விதந்தோதப்பட்டுள்ளன.

தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் சந்தித்து, மனங்கலந்து பின் அவர்கள் மணவுறவில் கலப்பதையே கவிஞர்தம் கவியுள்ளம் உள்ளியது என்பதற்கு நம் சங்கப் புலவர்கள் வடித்துத் தந்துள்ள அகத்திணைப் பாடல்களே அங்கை நெல்லியாய்ச் சான்றுபகர்கின்றன. சங்கப் புலவர்களின் மொத்த எண்ணிக்கை 473 என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் அகம் பாடிய புலவர்களின் எண்ணிக்கை மட்டுமே 373. அகத்திணைப் பாடல்கள்பால் தம் அகத்தினை நற்றமிழ்ப் புலவர்கள் நனிசெலுத்தினர் என்பது இதன்வாயிலாய்த் தெற்றெனப் புலப்படுகின்றது!

”உலகின் பிறநாட்டாரெல்லாம் காதலை வெறும் ஆண்பெண் உறவு என்றே (மலினமாய்) நினைத்திருந்த வேளையில், அதனையும் தாண்டிய உள்ளத்து உணர்வு அது என்பதைத் தமிழர்தாம் அடையாளம் கண்டிருக்கின்றனர். அஃது ஒருவித மனநிலை என்பதே அவர்கள் துணிபு.” என்று கூறும் தமிழறிஞர் அ.ச.ஞானசம்பந்தன்,

”புறத்தை ஒரு மரம் என்று கொண்டால் அகமாகிய இல்லற வாழ்வே அதன் வேர்கள். வேர்கள் வெளியில் தெரியாமல் இருக்கலாம்; ஆனால் அவையின்றி மரமேயில்லை. அதுபோல் குடும்பம் நன்றாக அமைந்தால்தான் சமூகம் நன்றாய் அமையும்” என்று அகத்தின் பெருமையைச் சகத்துக்கு அறைகின்றார்.

மானுடக் காதலையே பெரிதுவக்கும் நம் சங்கத்தமிழ் நூல்கள் பாடல்களின் அடியெல்லையின் அடிப்படையில் அவற்றை எட்டுத்தொகையாகவும் பத்துப் பாட்டாகவும் பகுத்தன.

”நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்குபரிபாடல் கற்றறிந்தார்
ஏத்தும் கலியொடு அகம்புறமென்று
இத்திறத்த எட்டுத் தொகை”
என்பது எட்டுத்தொகைக்கான பட்டியல்.

இதில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, என அகத்தை மட்டுமே பாடிய நூல்கள் ஐந்து. புறநானூறும் பதிற்றுப்பத்தும் புறச்செய்திகளைப் பேசுவன. பரிபாடல் அகமும் புறமும் விரவியது.

எட்டுத்தொகை நூல்களுள் உரையாசிரியர்களால் அதிகம் எடுத்தாளப்பட்டுள்ள பெருமைக்குரிய நூல் குறுந்தொகையே. நான்கடி சிற்றெல்லையும் எட்டடி பேரெல்லையும் கொண்ட குறுந்தொகை 205 புலவர் பெருமக்களால் பாடப்பெற்ற சிறப்புக்குரியது. இந்நூல், காதலையும் அதுசார்ந்த வாழ்க்கை நிகழ்வுகளையும் மையப்படுத்திய நூலாயினும், மக்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்த இயற்கை குறித்த செய்திகளுக்கும் இதில் பஞ்சமில்லை.

Beauty Waterfallநிவந்தோங்கிய மலைகள், அதிலிருந்து வீழும் வெண்துகில் நிகர்த்த அருவிகள், மரங்களில் தூங்கும் தேனிறால்கள், பாய்ந்துசெல்லும் காட்டாறுகள், பிளிறிச்செல்லும் பெருங்களிறுகள், வேட்டையாடும் வேங்கைகள், மருண்டு நோக்கும் மான்கூட்டங்கள், மனமயக்கும் மஞ்ஞைகள், கருங்கண் தாக்கலைகள், காமர் மந்திகள், அவற்றின் கல்லா வன்பறழ்கள், சித்தம் மயக்கும் புத்தம்புது மலர்கள், தினைக்கதிர் தின்னவரும் கிளிகள், கிழங்குகளை அகழ்ந்தெடுக்கும் காட்டுப் பன்றிகள் எனக் குறுந்தொகை நம் கண்முன் விரிக்கும் காட்சிகள் கவினார் உலகுக்கு நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்வன.

இயற்கை வளத்தையும் தாவர சங்கமத்தையும் இழந்து நாம் வறிஞராய் இன்று நிற்கும் பேரவலம் குறுந்தொகையைப் படிப்போர் உள்ளத்தில் பொங்கியெழுவது தவிர்க்கவியலாதது. எனினும், இப்பாடல்கள் வழியேனும் அவற்றை மீட்டும் நினைவுகூர்வது சற்றே ஆறுதலளிப்பதாகும்.

பழந்தமிழரின் காதல் வாழ்வையும், விழுமியங்களையும், இயற்கையோடு அவர்கட்கிருந்த அகலாப் பெரும்பிணைப்பையும், இன்னபிற செய்திகளையும் நறுந்தேனாய் இனிக்கும் குறுந்தொகைவழிச் சுவைப்போம் சிறிது; புறப்படுங்கள்!

[தொடரும்]

 

 

 

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comment here