Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

திருமந்திரத்தில்  சில சிந்தனைத் துளிகள் 25

க. பாலசுப்பிரமணியன்

திருமூலர்-1

அந்தரத்திலும் அப்பாலும் அவனே

ஒருமுறை ஒரு துறவி ஒரு கிராமத்தின் வழியாக இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு சிறுவன் கையில் ஒரு மெழுகுவத்தியை ஏற்றிக்கொண்டு ஒரு கோவிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான். அந்தத் துறவி அந்தச் சிறுவனை நிறுத்தி வினவினார்: “சிறுவனே, இந்த மெழுகுவத்தியில் இருக்கும் ஒளி எங்கிருந்து வருகின்றது?

உடனே அந்தச் சிறுவன் அவரைப் பார்த்து ஒரு புன்முறுவல் செய்துவிட்டு வாயினால் ஊதி அந்த மெழுகுவத்தியை அணைத்தான். பின்பு அந்தத் துறவியைப் பார்த்து “இந்த ஒளி எங்கே சென்றது?” என திருப்பிக்கேட்டான். அந்தத் துறவி பதிலளிக்க முடியாது திகைத்து நின்றார். உடனே அந்தச் சிறுவன் “இந்த ஒளி எங்கிருந்து வந்ததோ அந்த இடத்துக்கே அது சென்றுவிட்டது.” என பதிலளித்தான். அந்தத் துறவி உடனே அவன் கால்களில் விழுந்து “நீ எனக்கு குருவானாய். ஒரு மிகப் பெரிய தத்துவத்தை எவ்வளவு எளிதாக எனக்கு விளக்கிவிட்டாய்” என்றுரைத்தார்.

இந்த அழகிய தத்துவத்தை விளக்கும் வண்ணம் திருமூலர் இறைவனின் ஒன்றுபட்ட  தன்மையை கீழ்கண்ட பாடலில் வெளிப்படுத்துகின்றார்

தானே படைத்திடுந் தானே அளித்திடுந்

தானே துடைத்திடுந் தானே மறைத்துடுந்

தானே இவை செய்து தான்முத்தி தந்திடுந்

தானே வியாபித் தலைவனு மாமே.

அருள் வடிவாக நின்று எல்லாச் செயல்களுக்கும் பொறுப்பேற்று நம்மை ஆட்கொள்ளும் இறைவனின் அன்பினை வார்த்தைகளில் வடிக்கவும் முடியுமோ ?

இந்தக் கருத்தின் உண்மையை விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது கம்பனின் பாடல்:

உலகம் யாவையும் தாமுளவாக்கலும்,

நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா,

அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்!

அன்னவர்க்கே சரண் நாங்களே”

அந்த ஒருவனே பல வண்ணங்களில் பல வடிவங்களில் பலவிதமாகத் தோன்றும் பொழுது அவனை நாம் எப்படி வர்ணிக்க முடியும் ? அந்த பலவித வடிவங்களும் நமக்கு எப்படிப்பட்ட ஆனந்தத்தைக் கொடுக்கும்? இந்த அனுபவத்தை எடுத்துரைக்கும் வண்ணம் மாணிக்க வாசகர் பாடுகின்றார்:

துண்டப் பிறையான் மறையான பெருந்துறையான்

கொண்ட புரிநூலான் கோலா மா ஊர்தியான்

கண்டம் கரியான் செம் மேனியான் வெள் நீற்றான்

அண்டம் முதல் ஆயினான் அந்தம் இலா ஆனந்தம்

பண்டைப் பரிசே பழ அடியார்க்கு ஈந்தருளும்

அண்டம் வியப்பு உறுமா படும் காண் அம்மானாய்

வள்ளலாரோ இந்த ஆனந்தத்தை வலியுறுத்தும் வண்ணம் பாடுகின்றார்

அந்தரமாய் அப்பாலாய் அதற்கப் பாலாய்

அப்பாலுக் கப்பாலாய் அமர்ந்த தேவே.”

இத்தனை வடிவங்களிலும் இடங்களிலும் இருப்பவன் நம் கண்ணுக்குப் புலப்படாமல் “மரத்துள் மறைந்த மாமத யானையாக” இருக்கையில் அவனை வெறும் கற்சிலைகளிழும்  ஐம்பொன் சிலைகளில் மட்டும் காணமுடியுமா? இந்த ஐயத்தை விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது பட்டினத்தாரின் கீழ்கண்ட பாடல்:

சொல்லிலுஞ் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும்

அல்லினு மாசற்ற வாகாயந் தன்னிலு மாய்ந்துவிட்டோர்

இல்லுலு மென்ப ரிடத்துலு மீசை னிருக்குமிடங்

கல்லினுஞ் செம்பிலு மோவிருப் பானெங்கள் கண்ணுதலே.

கல்லிலும் செம்பிலும் காணக்கிடைக்காத இறைவன் நம் உள்ளில் இருப்பதை எப்படி உணர முடியும்? இதற்க்கு ஒரே வழி நம்மிடம் உறைந்து கிடைக்கும் ஆணவ மலத்தை அடியோடு நீக்குவதே. அந்த ஆணவமலம் அகலும் பொழுது எல்லாம் அவன் செயல் என்ற உணர்வு மட்டுமின்றி “நான்”, “தான்” என்ற நினைப்பு நீங்கி உள்ளில் உலா வரும் உத்தமனை உண்மையின் உருவை தரிசிக்கவும் அனுபவிக்கவும் முடியும் இதை விளக்கும் வண்ணம் திருமூலர் கூறுகின்றார்

நானன்றுந் தானென்றும் நாடினேன் நாடலும்

நானென்றுந் தானென் றிரண்டிலை யென்பது

நானென்ற ஞான முதல்வனே நல்கினான்

நானென்று நானும் நினைப்பொழிந் தேனே.

இத்தனை சக்திவாய்ந்த அருளின் வடிவான ஒளிப்பிழம்பை உள்ளும் புறமும் பறந்து விரிந்து நின்று ஆளுகின்ற அமரனை நாம் எப்படிப் போற்றுவது? வார்தைகளாலா, பூசைகளாலா அல்லது நமது செயல்களாலா? அது எப்படி இருந்தால் என்ன? எல்லாமே அவன் கொடுத்தது. எனவே அவனால் ஏற்றுக்கொள்ளக்கூடியது .

அப்பர் பெருமான் கூறியபடி “வாழ்த்த வாயும், நினைக்க மடநெஞ்சும்  தாழ்த்த சென்னியும் தந்த தலைவன்” அதில் எதன் மூலமாக அவனைப் போற்றினாலும் வாங்கிக்கொள்ளாமல் மறுக்கவாபோகிறான்?

தொடருவோம்

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க