Author: மேகலா இராமமூர்த்தி

  • ஓர் அபூர்வக் கவிஞனின் அகால மரணம்!

     

    -மேகலா இராமமூர்த்தி

    மனிதன் சக மனிதர்களோடு பல்வேறு சமூக மற்றும் அரசியல் காரணங்களுக்காகப் போராடுவதோடல்லாமல் நோய்களோடும் போராடவேண்டிய அவலநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சில நோய்கள், உடலை வாடகை வீடாய் நினைத்துச் சிலகாலம் மட்டும் அங்கே குடியிருந்துவிட்டுத் தக்க மருந்துகள் எனும் தாக்குதல் ஏற்பட்டால் சொல்லாமல் கொள்ளாமல் ஓட்டம் பிடிக்கும்.

    வேறுசில நோய்களோ உள்ளிருப்பதே தெரியாமல் திருடன்போல் ஒளிந்திருந்து, முற்றியபின்பு திடீரென்று வெளிப்பட்டு மனிதனைத் தாக்கும். இதுபோன்ற சங்கடமான சூழ்நிலையில், நோயாளி நோயை வென்று மீள்வதும், நோய்க்கு வெற்றிதந்து மாள்வதும் அவனுக்குத் தக்கதருணத்தில் கிடைக்கும் சரியான மருத்துவ வசதியைப் பொறுத்தது. அத்தகைய மருத்துவ வசதி ஒருவனுக்கு உடனடியாகக் கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் ’விதி’ என்னும் இரண்டெழுத்தால் தீர்மானிக்கப்படுவது போலும்!

    na-muthu‘ஊழ்’ என்று வள்ளுவரால் விளிக்கப்படும் இந்த விதி, ஒருவனுடைய ஜாதகத்தில் அவனுக்குச் சாதகமாக இருந்தால் பாயும் படுக்கையுமாக இருந்தவன், பாயும் குதிரையில் தாவியேறும் வல்லமை பெறுகின்றான். இல்லையேல்… அவன் வாழ்வே பாழ் என்றாகின்றது. இதற்குச் சமீபத்திய சான்று நம் உள்ளங்கவர் இளங்கவிஞர் நா. முத்துக்குமார். அவரின் அகால மரணம் நம்மை நெஞ்சைவிட்டு அகலா ரணம்!

    ”தொண்டை நன்னாடு சான்றோருடைத்து” என்ற நன்மொழிக்கு இலக்கணமாய்க் காஞ்சி மாநகர் இரண்டு பெரிய ஆளுமைகளை வரலாற்றில் விட்டுச் சென்றிருக்கிறது. ஒருவர், ஒப்பற்ற மேடைப் பேச்சு, கதை, கட்டுரை, திரைப்பட வசனம், அரசியல் வாழ்வு, தமிழோடு ஆங்கிலத்திலும் இணையற்ற மொழிப்புலமை ஆகியவற்றால் தமிழர்களைக் கவர்ந்த தன்னேரிலாத் தலைவர் பேரறிஞர் அண்ணா. மற்றொருவர், தமிழில் சிறந்த மொழிப்புலமையும், இலக்கிய ஆளுமையும், திரைப்படப் பாடல் புனைவதில் ஈடு இணையற்ற திறமையும் கொண்டிருந்த திரு. நாகராஜன் முத்துக்குமரனாகிய நா. முத்துக்குமார்.

    விவரமறியாப் பிஞ்சுப் பருவத்திலேயே கொஞ்சிடும் அன்புத் தாயை இழந்த இக்கவிஞர், தமிழாசிரியராகவும் புத்தக வாசிப்பையே தன் சுவாசிப்பாகவும் கொண்டிருந்த தன் தந்தை திரு. நாகராஜன் அவர்களின் சீரிய வழிகாட்டுதலால் புத்தகங்கள் மீது தீராக் காதல் கொண்டார்; வாசிப்பில் தன் தாயை இழந்த வலிக்கான ஆறுதலைக் கண்டார். பள்ளிப்பருவத்திலேயே கவியெழுதும் ஆற்றல் கைவரப்பெற்றிருந்த முத்துக்குமார், காஞ்சியிலிருந்த பல்வேறு இலக்கிய அமைப்புக்களோடும், வாசிப்பு வட்டங்களோடும் தன்னைப் பிணைத்துக்கொண்டு எழுதும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.

    கல்லூரிக் கல்வியில் இளங்கலை இயற்பியல் (B.Sc. Physics) படித்து, அதில் தொண்ணூறு விழுக்காடு மதிப்பெண்களோடு தேர்ச்சிபெற்றிருந்தும், பி.டெக் பொறியியல் படிக்க வாய்ப்பிருந்தும், தன்னுடைய தணியாத தமிழ்க்காதலால் முதுகலைத் தமிழில் சேர்ந்தார். அவ்விளவயதிலேயே பிழைப்புக்குரிய கல்வியைத் தேடாது, தனக்குப் பிடித்ததை நாடக்கூடிய சுயசிந்தனையும், சுதந்திரமும் அவருக்கிருந்ததை அறிய வியப்பும் மகிழ்ச்சியும் நமக்கு ஏற்படுகின்றது.

    பேரறிஞர் அண்ணாவின் ஆளுமையை வளர்த்தெடுத்த பச்சையப்பன் கல்லூரியில்தான் நா. முத்துக்குமாரும் இச்சையோடு தமிழ் பயின்றார். எல்லாக் கல்லூரிகளின் கவிதைப் போட்டிகளிலும் முத்துக்குமாரின் குரலில் ஒலித்த ’பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்’ எனும் வாசகம் அந்நாளில் மிகப் பிரபலம்!

    ”புறா வளர்க்கும் எதிர்வீட்டுக்காரன்
    என்னிடமிருந்து பறிக்கிறான்
    பூனை வளர்க்கும் சுதந்திரம்!”

    ’சுதந்திரம்’ என்ற பெயரில் நா. முத்துக்குமார் எழுதிய மேற்கண்ட கவிதை மாணவர்களிடம் மிகுந்த பாராட்டையும், கவிதைப் போட்டியில் அவருக்கு முதல் பரிசையும் பெற்றுத் தந்தது!

    சோற்றுக்கு வரும் நாயிடம்
    யார் போய்ச் சொல்வது?
    வீடு மாற்றுவதை!”  என்று அவரெழுதிய கவிதையில், நாயிடமும் தாயன்பு காட்டும் அவர் கருணையுள்ளம் துலக்கமாய்க் காட்சிதருகின்றது.

    அனைத்திந்திய வங்கித் தொழிலாளர்கள் சங்கம், கல்லூரி மாணவர்களுக்காகச் சென்னையில் நடாத்திய கவிதைப் போட்டியில்,

    மாபெரும் அறைகூவலுக்குப் பின்
    உலகத் தொழிலாளர்கள்
    ஒன்று சேர்ந்தார்கள்!
    லெனின் சொன்னான்…
    என்னை மன்னித்துவிடுங்கள்!
    உங்களுக்கு முன்பாகவே
    முதலாளிகள் ஒன்று சேர்ந்துவிட்டார்கள்
    என்று!

    யார் சொன்னது?
    பின்னி ஆலையை மூடிவிட்டார்கள் என்று?
    இப்போதும் பின்னி ஆலையில்
    நூல் நூற்கும் பணி
    நடந்துகொண்டுதான் இருக்கிறது!
    சின்ன வித்தியாசம்…
    நூல் நூற்பது தொழிலாளிகள் அல்ல…
    சிலந்திகள்!”

    என்று கவிதை பாடினார் இந்த இளங்கவிஞர். வேலையிழந்த தொழிலாளர்களின் வேதனைக் குரலைத் துல்லியமாய்ப் பிரதிபலித்த இந்தக் கவிதையைக் கேட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எழுந்துநின்று ஆரவாரத்தோடு கை தட்டினர்! 

    கவிதை, கட்டுரை, சிறுகதை எனத் தமிழின் அனைத்துத் தளங்களிலும் ஆர்வத்தோடு இயங்கிய முத்துக்குமார், திரைப்பட இயக்குநராகவேண்டும் என்று ஆசைகொண்டார். அதன்பொருட்டு இயக்குநர் பாலுமகேந்திராவிடம் சிலகாலம் உதவியாளராய்ப் பணியாற்றினார். திரைப்பட மெட்டுக்குப் பாட்டெழுதும் வித்தையையும் கவிஞர் அறிவுமதியிடம் கற்றுத்தேர்ந்தார்.

    ’பட்டாம்பூச்சி விற்பவன்’ என்னும் தலைப்பில் இவர் எழுதிய கவிதைத் தொகுப்பை வாசித்த இயக்குநர் இமயம் பாரதிராஜா மனம்நெகிழ்ந்தார். கவிஞரை ஆரத்தழுவிப் பாராட்டியதோடு, அந்நூலின் வெளியீட்டு விழாவையும் (தன் செலவில்) விமரிசையாய்க் கொண்டாடி மகிழ்ந்தார். அவருடைய அன்புவெள்ளத்தில் முத்துக்குமார் திண்டாடித்தான் போனார்!

    திரைப்பட இயக்குநராகும் அவருடைய கனவு கானலாகிப் போனாலும், திரைப்படப் பாடல்கள் எழுதவேண்டும் எனும் அவருடைய ஆசையைக் காலம் (இயக்குநர் சீமானின் ’வீரநடை’ திரைப்படத்தின் மூலம்) கனிய வைத்தது. அதில் இவர் எழுதிய “முத்து முத்தாய்ப் பூத்திருக்கும் முல்லைப்பூவைப் புடிச்சிருக்கு” பாடல் அதிக உவமைகளையும் உருவகங்களையும் கொண்ட பாடலாய் இன்றுவரை நின்றுநிலவுகின்றது.

    திரைப்படங்களுக்குப் பாட்டெழுதவந்த சில ஆண்டுகளிலேயே சிறந்த பாடலாசிரியராக மட்டுமின்றி, ஒவ்வோர் ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான பாடல்களை எழுதக்கூடியவராகவும் முத்துக்குமார் பெயர்பெற்றது பெருஞ்சாதனையே! ஆனால் அச்சாதனையைச் சாத்தியமாக்கவும், நிகழ்த்திய சாதனையைத் தக்கவைத்துக்கொள்ளவும் மெய்வருத்தம் பாராது, கண்துஞ்சாது, அசுரத்தனமாய் உழைக்கவேண்டிய அவலநிலையும் அவருக்கு ஏற்பட்டதை மறுப்பதற்கில்லை!

    விளைவு? தீந்தமிழ்ச் சொல்லெடுத்து, தித்திக்கும் கவிதைகளைச் சரந்தொடுத்து எத்திக்கும் ஒலிக்கவிட்டிருந்த இளங்கவிஞனை மஞ்சள் காமாலை தாக்கியது. இன்னும் பல புதிய உயரங்களை அவர் தொடுவார் என்று நாம் ஆவலோடு காத்திருக்க…நமக்குக் கிடைத்ததோ பெருந்துயரம்!

    ”இருப்பதற்காக வருகிறோம்
    இல்லாமல் போகிறோம்”
    என்ற கவிஞர் நகுலனின் வரிகளை மெய்ப்பித்திருக்கிறது அவருடைய அகால மரணம்!

    வயோதிகத்தின் எல்லையில் நின்றுகொண்டு, நித்தமும் நோய்களோடு யுத்தம் செய்துகொண்டு, ”காலன் எப்போது வருவான்…தங்கள் காலம் எப்போது முடியும்?” எனக் காத்திருப்போர் பலரிருக்க, அவர்களையெல்லாம் விடுத்து, அற்புதத் திறமை படைத்த இளைஞனை, பொற்புடைப் பாடல்களால் கவிமழையில் நமை நனைத்த காஞ்சிக் கவிஞனைப் பற்றிச் சென்றிருக்கிறானே கூற்றுவன்! அவனை ’அந்தகன்’ என்று அழைப்பதில் பிழையென்ன?

    ”…முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால்
    நற்காய் உதிர்தலும் உண்டு.“
    என்று நாலடியார் நவில்வது வேதனைதரும் இச்சூழலுக்கு முற்றும் பொருந்துகின்றது.

    சற்றே சிந்தித்துப் பார்த்தால், அசாத்தியத் திறமைக்கும் அகால மரணத்திற்கும் ஏதோ அத்யந்தத் தொடர்பு இருப்பதாகவே தோன்றுகின்றது. கீட்ஸ், ஷெல்லி, பாரதி, பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் என்று அகால மரணத்தைச் சந்தித்த இளங்கவிஞர்களின் வரிசை இதனை உறுதிசெய்கின்றது. அந்த வரிசையில் நா. முத்துக்குமாரும் இணைந்தது நம் தவக்குறைவே!

    வார்த்தைகளில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் எளிமையைப் போற்றியவர் நா.முத்துக்குமார். ஈத்துவக்கும் இன்பத்தைத் தன் கைகோத்து நடந்த பிஞ்சுமகனுக்கும் போதித்த அபூர்வக் கவிஞர் இவர்.

    திரைப்பட வரலாற்றில், காலத்தைக் கடந்துநிற்கும் பாடலாசிரியர்கள் வரிசையில் நா. முத்துக்குமாரின் பெயரும் நிச்சயம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும்!

    ****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    நா. முத்துக்குமாரின் ’அணிலாடும் முன்றில்’ மற்றும் ’வேடிக்கை பார்ப்பவன்’ நூல்கள்.

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 76-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இந்தவாரப் படக்கவிதைப் போட்டிக்கான புகைப்படத்தை எடுத்துத் தந்திருப்பவர் திரு. பிரேம்நாத் திருமலைசாமி. இதனைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்திருப்பவர் வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் வல்லமை இதழின் நன்றி!

    goat and rooster

    மாலை மரியாதையோடு(!), கயிற்றிலே கட்டுண்டிருக்கும் (பலி)ஆடும், தன் உயிருக்கு நேரவிருக்கும் துன்பத்தை அறியாது தரையிலே கிடக்கும் சேவலும் கொல்லாமையை விரும்பும் நல்லோர் மனத்தை நடுங்க வைக்கின்றன.

    புத்தரும், எண்ணிறந்த சித்தரும் நம் மண்ணில்தோன்றி ”உயிர்க்கொலையைக் கைவிடுக!” என்று கடிந்துரைத்துப் பயனென்ன? அக்கொடுமைகள் இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன!

    சரி…இந்தப் புகைப்படம் நம் கவிஞர்களிடையே எத்தகைய எண்ணஅலையை எழுப்பியிருக்கின்றது எனக் கண்டுவருவோம்!

    ***

    ”வளர்த்தவர்களே தம்மைக் கொல்லும் கொடுமையைச் சொல்ல வாயில்லையே” என்று ஏங்கும் வாயில்லா சீவன்களின் புலம்பலை உணர்வுபூர்வமாய்ப் பதிவுசெய்திருக்கின்றார் திருமிகு. ராதா விஸ்வநாதன்.

    அட……
    நீயும் இங்கு இருக்கிறாயா
    மரணத்தின் பயணத்தில்
    துணையாக வந்த உனக்கு
    என் கடைசி வாழ்த்துக்கள்

    நாமிருவரின் ஐம் புலனில்
    ஒரு புலனான வாய் உண்பதற்கே உள்ளது
    மனிதனைப்போல் பேச இயலாது
    பேசும் சக்தியினை கொடுக்காத‌
    இறைவனை என்ன சொல்ல…

    மனிதர்களே வளர்த்து நம்மை
    கொல்வதை யாரிடம் சொல்ல‌
    பேசும் சக்தியிருந்தால்
    கூட்டம் கூடி குரல் எழுப்பலாம்…
    அறுவாளால் அறுபடும் பொழுது…

    இவர்கள் வாழ
    நம்மவர் பலி
    […]
    மாலை போட்டு பொட்டு வைத்து
    பாவத்தை மறைக்க‌
    இவர்கள் ஓதும் மந்திரச்சொல்
    குலதெய்வத்திற்கு பலி

    எந்த சாமி பலி கேட்டு
    உண்டு களிக்கிறது…
    உண்டு களித்து
    ஊனைப் பெருக்கி வாழுமிவர்களும்
    மாள்வது நிச்சியமே

    புத்தனும் வள்ளுவனும் போதித்தது
    புவியில் காணாமல் போய்விட்டது…

    ***

    ’கருணையே வடிவான இறைவனா உயிர்ப்பலி கேட்பான்? இல்லவே இல்லை! ஆதலால் இம்மடமையை ஒழித்துப் பிற உயிர்களிடத்தும் இரக்கம் காட்டுதல் உம் கடமை’ என்று மாந்தர்க்கு நன்மொழி நவிலும் திரு. செண்பக ஜெகதீசனின் கவிதையிது!

    ஆடும் கோழியும் பலிகேட்டே
    ஆண்டவன் என்றும் வருவதில்லை,
    தேடும் இறைவன் வெளியிலில்லை
    தேடிப் பாராய் உன்னிடமே,
    கூடும் கூட்டமும் துணையில்லை
    கூறும் வார்த்தையும் உண்மையில்லை,
    வாடும் மாந்தர்க் குதவிடுவாய்
    வந்து சேரும் பரம்பொருளே…!

    ***

    ”வலியாரை வதைக்கத் திறனற்ற மானுடன் மெலியாரை வதைத்து மகிழ்வு காண்கின்றான். கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பதுதான் இவன் கோட்பாடோ?” என்று மிருகங்கள் வாயிலாய் மனிதனின் அருளற்ற இருள் மனத்தை வெளிச்சமிட்டுள்ளார் முனைவர் மா. பத்மபிரியா.

    பலசாலிகளை பலியிடுவதில்லை
    • நம்பிக்கை வைத்தே
    நம்பி தான் வந்தோம்
    நம்பிக்கை நமக்கு
    மூடநம்பிக்கையோ அவா்களுக்கு
    • தழையிட்டவரென நம்பிடாதே
    தலைமுடி காணிக்கை அவா்களுக்கு
    தலையெடுத்தலோ நமக்கு
    • விரதம் இருப்பதும்
    விரதம் முடிப்பதும்
    வலியவன் சாத்திரம்
    […]
    • காத்திருக்கும் பலிபீடம்
    காலங்காலமாய்
    கதைமுடிப்பது
    கட்டுண்டவா்களை மட்டுமே
    • கொன்றால் பாபம்
    தின்றால் தீரும்
    நன்றாய் வகுத்தான்
    நரனுக்கான நீதியென்று
    • வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
    புல்லை காட்டி
    எல்லை தீட்டினான்…

    ***

    மிருகவதைக்கு எதிரான அறச்சீற்றம் கவிஞர்களின் கவிதைகளில் பொங்கிப் பாய்வதைக் காண்கின்றேன். இனி இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் யார் எனப் பார்ப்போம்!

    ***

    கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
    எல்லா உயிரும் தொழும் என்றார் தெய்வப் புலவர். ஆனால் மனிதர்கள் பிற உயிர்கள் தொழத்தக்க வகையில் வாழவில்லை; மாறாக அவை அழத்தக்க வகையிலேயே வாழ்கின்றனர். என் செய்வது? தாம் வேண்டும் வரம்பெற வாயில்லாச் சீவன்களைக் கடவுளர்க்குப் பலியிடும் அவர்தம் மடமையை என்னென்பது?

    ஆனால் அந்தச் சீவன்களோ தம்மைக் கொல்வார்மீதும் கோபம் கொள்வதில்லையாம். தம்மை வெட்டுவதால் மனிதர்களின் கவலைகள் பறக்கின்றன எனில் அவர்கள் கையால் வெட்டுப்படவே தாம் மீண்டும் பிறக்கலாம் என அவை சிந்திப்பதாய் எழுதப்பட்டுள்ள ஒரு கவிதை உள்ளம் உருக்குகின்றது.

    முதல் பலி
    நீயா? நானா?
    தெரியாது.
    ஆனால்
    அவர்கள் வரம் பெற
    நமக்குச் சாபம்!
    வெட்டத்தான் வளர்க்கின்றார்கள்
    என நினைத்து
    இவர்களிடம் பாசம்
    காட்ட நாம் மறந்ததில்லை!
    நம்மை வெட்டுவதால்
    இவர்கள் கவலைகள்
    மறைகிறதென்றால்
    நாம்
    மீண்டும் பிறப்போம்!

    மிருகங்களிடத்தும் தெய்வகுணத்தைப் புகுத்தியிருக்கும் இக் கவிதையின் ஆசிரியர் திரு. ஆனந்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவிக்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே!

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 65-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் திருமிகு. சாந்தி வீஜே. இதனைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விரு ’சாந்தி’யருக்கும் வல்லமை இதழின் நனிநன்றி!

    crow with a paper

    காகமும் அதன் அலகில் வீற்றிருக்கும் வண்ணக் காகிதமும் நம் கண்ணைக் கவர்கின்றன.

    இப்படம் நம் கவிஞர்களுக்கு எத்தகைய உணர்வலைகளை எழுப்பியிருக்கின்றன எனக் காண்போம்!

    ***

    உரக்கக் கரைந்து, உறவினர் வருகையை அறிவிக்கும் காக்கையே! சிறுவர் கைப்பண்டத்தை நீ பறித்துவந்தது முறையோ? என வருந்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    உறவாய் எண்ணிய காக்கையாரே
    உமது குணமது மாறியதே,
    சிறுவர் கையில் பண்டமதைச்
    சேர்த்தே பிடுங்கி வந்தீரே,
    உறவினர் வரவை உரைப்பதினால்
    உயர்வாய் எண்ணி யிருந்தோமே,
    பிறப்பில் எமது முன்னோராய்ப்
    போற்றிய பெருமையும் பொய்யாச்சே…!

    ***

    இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை அறிந்துகொள்ளும் நேரமிது!

    ”காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
    அன்னநீ ரார்க்கே உள” என்பது வள்ளுவம்.

    கூடிவாழ்வதிலே, தேடியதைக் கரவாது தம் உறவுகளோடு பங்கிட்டு உண்பதிலே மாந்தர்களுக்கே வழிகாட்டியாய்த் திகழ்பவை காக்கைகள்.

    பகுத்துண்பது உயர்குணந்தான் என்றாலும் மற்றவரின் பொருளைத் திருடிவந்தா அதனைச் செய்வது? என்று காக்கையைக் கண்டிக்கிறது ஒரு கவிதை! 

    காகமே உன்
    தாகம் தீர்க்க
    தண்ணீரும்
    பசிக்கு அன்னமும் இட்டேன்
    நீ சனீஸ்வரரின் வாகனமாம்
    முன்னோர்களின் சின்னமாம்
    நீ கரைந்தால்
    விருந்தினர் வருவதாகவும்
    நீ வலமாகப் போனால்
    காரிய சித்தியாகவும்
    உன்னைப்புகழ்ந்து
    பாடியிருக்காராம்
    காக்கைப்பாடினியார்
    இதெல்லாம் எனக்கு
    செவிவழி வந்த செய்திதான்
    ஒற்றுமைக்கும்
    பகிர்ந்துணவுக்கும்
    கூடி வாழ்தலுக்கும்
    உவமையாகச் சொன்ன
    உண்மைத்தகவலுக்காகவும்
    உயிர்களுக்கு உதவணும்னுதான்
    தண்ணீரும்
    அன்னமும் இட்டேன்
    அதனால்தான் உன் பகிர்ந்துணர்வைக் காட்ட
    கடையிலிருந்தோ சிறுவர்
    கையிலிருந்தோ
    இதை பறித்து வந்திருக்கிறாயோ?
    வேண்டாம் காகமே!
    பறித்து வருவதும்
    கவர்ந்து வருவதும் கூட
    ஒரு வகையில் திருட்டுத்தானே?
    எனக்கு இது வேண்டாம்!
    அம்மா திட்டுவாள்
    உன் அன்புக்கு நன்றி!

    காக்கை குறித்த பல செவிவழிச் செய்திகளைத் தன் கவிதை வாயிலாய் நமக்கு அறியத்தந்திருக்கும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே!

     

     

    Share
  • நாளென வரும் வாள்!

    -மேகலா இராமமூர்த்தி

    மண்ணில் தோன்றிய உயிர்கள் அனைத்தும் ஒருநாள் மடியவேண்டியவையே; அதுவே இயற்கையின் நியதி. வாழ்வின் தன்மையை நன்குணர்ந்த சான்றோர் இதனையே ‘நிலையாமை’ (Impermanence; This concept is known as Anicca in Buddhism, and Anitya in Hinduism) என்ற பெயரால் சாற்றினர். இளமையும் செல்வமும் யாக்கையும் (உடல்) அழிவற்றது என்றெண்ணி இறுமாப்புக் கொள்வது பேதைமையுள்ளெல்லாம் பேதைமை!

    நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
    பெருமை உடைத்திவ் வுலகு
    என்றார் பொய்யில் புலவர்.

    நேற்றிருந்தவனை இன்றில்லை என்று ஆக்குவது உலகுக்குப் பெருமையளிக்கும் ஒன்றாக இருக்கலாம்; ஆனால் அவனையே நம்பியிருக்கும் அவனுடைய குடும்பத்தின் அவலநிலை பெருமைக்குரியதா…? இல்லை…அது வார்த்தைகளில் வடிக்கவியலாக் கொடுமையானது!

    தூணென நின்று தன்னைச் சார்ந்தோரைக் காத்தவன், படுக்கையில் படுத்தான்; தன்கேள் அலற இவ்வுலகையே விடுத்தான் என்று கூறும்படியான நிலையற்ற தன்மையுடையதுதானா இவ் வாழ்க்கை? ஆம்…என்கிறது நாலடியார். புல்லின்மேல் நிற்கும் நீர்த்துளியை யொத்ததே மானுட வாழ்க்கை என்பது நாலடியார் நவிலும் உண்மை. 

    புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
    இன்னினியே செய்க அறவினை – இன்னினியே
    நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
    சென்றான் எனப்படுத லால்
    . (நாலடியார் – 29)

    நாளது சின்மையும் இளமையது அருமையும் கருதித்தான் வாழ்வில் செய்யவேண்டிய நல்லறங்களையெல்லாம் உடனடியாகச் செய்துவிடச் சொல்லுகின்றனர் அறவுணர்வுடைய ஆன்றோர். நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்று நற்காரியங்கள் ஆற்றுவதை நாம் தள்ளிப்போட்டால் அவற்றைச் செய்வதற்கு நாளை நாமிருப்போம் என்பது என்ன நிச்சயம்? ’இன்னினியே (இப்பொழுதே) செய்க அறவினை’ என்று நாலடியார் நம்மை துரிதப்படுத்துவதுபோலவே, சிலப்பதிகாரக் கதை மாந்தனான மாடல மறையோனும் சேரன் செங்குட்டுவனிடம்,

    நாளைச் செய்குவம் அறமெனில் இன்றே
    கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்
    இதுவென வரைந்து வாழுநா ளுணர்ந்தோர்
    முதுநீர் உலகில் முழுவது மில்லை
    (சிலப்: நடுகல்: 179-182)

    என்று கூறி நல்வினையாற்றலின் அவசரத்தை – அவசியத்தை வலியுறுத்துகின்றான்.

    மரணம் என்றவுடனேயே நாம் எண்ணுவது மீளமுடியாத அல்லது மீண்டுவாராத வாழ்வின் இறுதிப்பயணம் ஒன்றைத்தான்! ஆனால் அதுமட்டுந்தானா சாவு? இல்லை! வாழ்வில் ஒவ்வொரு பருவத்தின் இறுதியுமே சாவுதான். குழந்தைப் பருவம் செத்துத்தான் நமக்கு வாலிபப் பருவம் பிறக்கின்றது. வாலிபம் செத்துத்தான் வயோதிகம் வருகின்றது. ஆனால் நாமோ உடலை உயிர்நீங்கிச் செல்லும் நிலை ஒன்றுக்குத்தான் அழுகிறோமேயன்றி தினந்தோறும் நாம் ஒவ்வொருவரும் செத்துக்கொண்டிருப்பதை அறியவுமில்லை; அதற்காக அழவுமில்லை என்று நம் அறியாமையைச் சுட்டிச்செல்கின்றது பௌத்தக் காப்பியமான குண்டலகேசி!

    பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும் 
    காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
     
    மீளும்இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி
     
    நாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ?
    (குண்டலகேசி – 9)

    சாவு குறித்த இப்பாடலின் சிந்தனை புதிதாய் மட்டுமின்றிப்  பொருத்தமானதாகவுமே எனக்குப் படுகின்றது.

    புவியில் பிறந்து, இன்பத்திலும் துன்பத்திலும் உழன்று, சலித்துப்போகும் மன்னுயிர்களுக்கு நிரந்தர விடுதலையளிக்கும் நாயகன் ஒருவன் இருக்கின்றான். அவனே யமபுரிக்குத் தலைவனான காலன். காலம் பார்த்திருந்து உயிர்களின் கதையை முடிப்பதில் வல்லவன் அவன். ’காலனும் காலம் பார்க்கும்’ என்று அவனுடைய பண்பைக் குவலயத்துக்கு உணர்த்தினார் கோவூர்கிழார் எனும் புலவர்பெருந்தகை. வேந்தனின் உயிரும் சாதாரண மாந்தனின் உயிரும் மறலிக்கு ஒன்றுதான்! கொல்லுவதில் சமரசத்தைப் பேணுவதில் அவனை வெல்லுபவர் யார்?

    கணக்கற்ற மனித உயிர்களைப் போரிலே கொன்றுகுவித்துக் காலனுக்குப் படையலிட்டுவந்த சோழவேந்தன் கிள்ளிவளவன் ஒருநாள் மாண்டுபோனான். அதனைக் கண்டார் ஆவடுதுறை மாசாத்தனார் எனும் அருந்தமிழ்ப் புலவர். மறலியிடம் மண்டியது சீற்றம் அவருக்கு! நனிபேதையும், (அடிமுட்டாள் என்று மக்கள்வழக்கில் சொல்லலாம்!) அறனற்றவனுமான மறலியே! யாரேனும் பசிக்கிறது என்று விதைநெல்லைச் சமைத்து உண்பார்களா? உன் உறுபசிக்கு உயிர்களைத் தட்டாது தந்துவந்தானே எங்கள் வளவன்! அவனையுமா உன் கோரப்பசி கொன்று புசித்தது? என்னே உன் விரகின்மை! பகைவர்க்குக் கூற்றாய்த் திகழ்ந்த எம் கொற்றவனைக் கொண்டனையே…இனி நின்னுடைய அழிபசி தீர்ப்போர் ஆர்? என்று சீறுகின்றார்.

    நனிபே தையே நயனில் கூற்றம்
    விரகின் மையின் வித்தட்டு உண்டனை
    இன்னுங் காண்குவை நன்வாய் ஆகுதல்
    ஒளிறுவாள் மறவரும் களிறும் மாவும்,
    குருதியும் குரூஉப்புனற் பொருகளத்து ஒழிய
    நாளும் ஆனான் கடந்தட்டு என்றுநின்
    வாடுபசி அருத்திய பழிதீர் ஆற்றல்
    நின்னோர் அன்ன பொன்னியற் பெரும்பூண்
    வளவன் என்னும் வண்டுமூசு கண்ணி
    இனையோற் கொண்டனை ஆயின்,
    இனியார் மற்றுநின் பசிதீர்ப் போரே?  
    (புறம் – 227: ஆவடுதுறை மாசாத்தனார்)

    ஈதொப்ப, தம்முடைய அருமைத்தலைவன் பெருஞ்சாத்தன் மறைந்தான் என்றறிந்து அவன் ஊர்நோக்கி விரைந்தார் ஓர் வண்டமிழ்ப்புலவர். வளமிகு அவ்வூரில் வழியெங்கும் முல்லைமலர்கள் கொள்ளையாய் கொள்ளையாய்ப் பூத்துக்கிடந்ததைக் கண்டு உள்ளம் நொந்தார். அம் மணமலரை நோக்கி, ”முல்லையே! இல்லோரைப் புரந்துவந்த நல்லோனான எம் தலைவன் ஒல்லையூர் பெருஞ்சாத்தன் இறந்துவிட்டான். அதனால் ஒல்லையூரே ஆற்றொணாத் துயரில் அமிழ்ந்து கிடக்கின்றது. துயர்க்கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கும் இவ்வூரின் இளையோரும், வளையோரும் (பெண்கள்) உன்னை இப்போது பறித்துச் சூடப்போவதில்லை; மன்னனை நாடிவரும் பாணனும், பாடினியும் அவர்தமைப் புரப்போர் இன்மையால் உன்னைச்சூடி மகிழப்போவதில்லை. இந்நிலையில் நீ வீணே மலர்ந்திருப்பது யாருக்காக?” என்று மனங்கவன்று பேசுகின்றார் முல்லையிடம்!

    இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
    நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
    பாணன் சூடான் பாடினி யணியாள்
    ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
    வல்வேற்
    சாத்தன் மாய்ந்த பின்றை
    முல்லையும் பூத்தியோ வொல்லையூர் நாட்டே.
    (புறம் – 242: குடவாயிற்கீரத்தனார்)

    அமங்கலமான வேளையிலே மங்கலப் பொருள்களைக் காணும்போது மனிதமனத்தின் வேதனை மீதூருவது இயற்கையே போலும்!

    மனிதரின் வாழ்நாள் என்பது அவர் வாழுங்காலத்தை வைத்துக் கணக்கிடப்படுவது. காலம் என்பது நாள்களின் தொகுப்பால் நிர்ணயிக்கப்படுவது. வாழ்வில் புதிதாய் மலரும் ஒவ்வொரு நாளையும் மனிதர் உற்சாகத்தோடு தொடங்கவேண்டும் எனும் எண்ணங்கொண்டவன் பாரதிப் புலவன். அதனால்தான்,

    இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில் 
    எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
    தின்று விளையாடி இன்புற் றிருந்து வாழ்வீர் என்றான்.

    வாழ்வியல் அறிஞரான வள்ளுவரின் பார்வையோ வேறுவிதமானது. புதிதாய்ப் பிறக்கின்ற ஒவ்வொரு நாளும் நம் வாழ்நாளில் ஒன்றைக் கழித்துக்கொண்டே – அறுத்துக்கொண்டே வருகின்ற வாள்போன்றது என்பது அவரது எண்ணம்.

    நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈறும்
    வாளது உணர்வார்ப் பெறின்.
    (334)

    ஊக்கத்தோடு ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ள பாரதியின் வரிகளும், வாழ்வின் நிலையாமையை உணர்ந்து மனஅடக்கத்தோடு வாழ வள்ளுவமும் நமக்கு வழிகாட்டுகின்றன எனலாம்.

    அறிவியல் வளர்ச்சியும், மருத்துவச் சாதனங்களின் பயன்பாடுகளும் மிகுந்துவிட்ட இந்தத் தொழில்நுட்ப யுகத்தில்கூட மரணமிலாப் பெருவாழ்வை மானுடர்க்கு நல்கவல்ல மருந்துகள் ஏதும் இதுவரைக் கண்டுபிடிக்கப்படவில்லை.

    ஆதலால், மாந்தர் செய்யவேண்டியதெல்லாம் வரையறைக்குட்பட்ட தம் வாணாளை வீணாளாகக் கழிக்காமல், பயனுள்ளதாய்க் கழிப்பதும், வாழ்ந்து மறைந்தபின்னும் தம் பீடும் பெயரும் நிலைக்கும்வண்ணம் வையத்தில் அருஞ்செயல்கள் ஆற்றிச்செல்வதுமே ஆகும். ’மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே’ என்ற வழுதியின் வாக்கும் இதனையே உறுதிசெய்கின்றது.

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 64-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

     

    kids with eatable

     

    ஈத்துவக்கும் இன்பத்தை இவ்விள வயதிலேயே அறிந்து, அதனை நடைமுறைப்படுத்திவரும் இக்குழந்தைகள் பாராட்டுக்குரியவர்கள். இவ்வரிய புகைப்படத்தை எடுத்திருக்கும் திருமிகு. ஷாமினி, இதனைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருக்கும் திருமதி. சாந்தி மாரியப்பன் ஆகியோர் வல்லமையின் நன்றியறிதலுக்கு உரியவர்கள்.

    போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளைப் படித்துக் களிப்போம் இனி!

    ***

    பசியைத் தேடிக் கண்டடைந்து தான்மட்டும் புசிப்பதினும், பிறரின் பசிக்கு உணவளித்து, அவருடலை ஓம்பினாலன்றோ சமூகம் செழிக்கும் என்கிறார் நாமக்கல் திரு. முருகேசன்.

    பசியொன்றைக் கண்டெடுத்து
    புசிப்பதனால்
    என்ன பயன்?
    என் பசியை உணவாக்கி
    உன் குருதி மெருகேற,
    காத்திருக்கிறேன்!
    குளிர்ந்தது என் மனம் அன்றி,
    இச்சமூகம் செழித்தோங்கவே!
    என் அன்புச்சகோதரனே!

    ***

    எப்படி வாழக்கூடாது என்று உற்றாரும் உறவினரும் எனக்குக் கற்பித்தார்களேயன்றி, எப்படி வாழவேண்டும் என்று சொல்லித்தரவில்லை. ஆயினும், வையகத்தைக் கையகத்துள் கொண்டுவரும் உயர்குணமாம் ’ஈகை’ என்னுள் வந்ததெப்படி? எனத் தன்னை வியக்கும் குழந்தையைத் தன் கவிதையில் காட்சிப்படுத்தியுள்ளார் திருமிகு. ஹிஷாலி.

    தகப்பனாட்டம்
    உதவாக்கரையாக
    வளர்ந்து விடாதே
    என்றாள் அம்மா! 

    தாத்தாவாட்டம்
    தண்டமாக
    வாழ்ந்து விடாதே
    என்றாள் பாட்டி! 

    தாயும் தந்தையும் தவிர்த்துத்
    தாய் மாமனாட்டம்
    சோம்பேறியாக
    இருந்து விடாதே
    என்றார்கள்
    அக்கம் பக்கத்தினர்!  

    கடைசி பெஞ்சாட்டம்
    அறிவை இழந்து
    முட்டாளாகி விடாதே
    என்றார் ஆசிரியர்! 

    ஆனால்
    யாருமே சொல்லாமல்
    எனக்குள் எப்படி
    வந்தது இந்த ஈகைத் திறன்?

    ஒருவேளை
    இந்த உலகமே
    நம்
    கைக்குள்  இருப்பதற்குப்
    பெயர்தான்
    நட்பின் சுவாசமோ !

    ***

    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் வகையறியாப் பெரியவர்களுக்கு இந்தப் புகைப்படம் ஒரு பாடம் என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன். 

    இருப்பதைக் கொடுத்திடும் பழக்கமது
    இளமை முதலே வரவேண்டும்,
    உருப்படும் வழியிதை உணர்ந்தேதான்
    உள்ளதைப் பகிர்ந்தே உண்ணுவதின்
    பெருமை தெரிந்தோ தெரியாமலோ
    பிள்ளைகள் பிறர்க்குக் கொடுக்குமிந்த
    அருமை யான பாடமதை
    அறிந்து கொள்வீர் பெரியோர்களே…!

    ***

    பத்து வயதுவரை அண்ணன் தம்பியாய் அன்புகாட்டி வந்தோர், இருபது வயதில் எதிரிகளாய், வெறும் பங்காளிகளாய் மாறும் அவலம் என்று ஒழியும்? என வேதனையோடு வினவுகின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன். 

    பாசமும் அன்பும்
    பகிர்ந்துண்ணும்
    பழக்கமும்
    பத்து பதினந்துவயதுவரை
    அண்ணனுக்கும் தம்பிக்கும்
    இருபது வயதானால்
    இருப்பதை இருகூறாக
    உருக்குலைக்க போராட்டம்
    பங்காளிகளுக்குள்
    ஒருவனை ஒருவன்
    கருவறுக்க கத்தித்தேடுவதும்
    புத்தியைத்தீட்டுவதும் வாடிக்கைதான்
    ஒற்றுமையே உயர்வு தரும்
    பெற்றோர் சொல் கேட்பீரோ ?
    உற்ற உறவையும்
    கற்ற கல்வியையும் காற்றில் பறக்க விடுவீரோ? யாரறிவார்?

    ***

    சிறப்பான கருத்துக்களைக் கவி முத்துக்களாய்க் கோத்தளித்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைக் காண்போம்!

    பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
    தீப்பிணி தீண்ட லரிது
    என்பது வள்ளுவம்.

    இள வயதிலேயே பகுத்துண்ணும் வழக்கத்தைக் குழந்தைகளிடம் பெற்றோர் பழக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் நயனுடையோராய், பயன்மரமாய்ப் பின்னாளில் திகழ்வர்.

    ’கொடுப்போர்க்கும் இன்பம்; கொள்வோர்க்கும் இன்பம் என்பது அன்பில் மட்டுமே சாத்தியம்; கொடுக்கக் கொடுக்கக் குறையாது, மேலதிகமாய்க் கிடைப்பதும் அன்பு ஒன்றிலேயே நிகழும் அதிசயம்’ என அன்பெனும் அருங்குணத்தை நாவாரப் புகழும் பாவொன்று!

    அன்பின் கோப்பையை
    ஏந்தும் முகமும்
    அன்பின் பகிர்வை
    ஏற்கும் முகமும்
    எத்தனை கூடுதல் அழகு…!

    விரியும் கைகளைக்
    காணும்
    கண்களும் விரிய
    எல்லையற்று விரிகிறது
    அன்பின் பசும்புல் வெளி! 

    கொட்டிவிடக் கூடாதென்ற
    கவனமும் எச்சரிக்கையும்
    கைகளில் ஏந்தும் தின்பண்டத்திற்கு மட்டும்தான்
    நட்புறவில் தழைக்கும் இன்பத்தில்
    கொட்டோ கொட்டென்று
    கொட்டிக் கொண்டிருக்கிறது அன்பு! 

    ஏனெனில்,
    செலுத்தினால் மேலதிகம்
    திரும்பப் பெறும் இடம்
    அன்பின் அகம்!

    ஈகையின் சிறப்பை, அன்பின் அருமையை எளிய வரிகளில் விளக்கியிருக்கும் திரு. எஸ். வி. வேணுகோபாலன் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகின்றார். அவருக்கு என் பாராட்டுக்கள்!

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 63-இன் முடிவுகள்!

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான புகைப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு. பிரேம்நாத் திருமலைசாமி. போட்டிக்கான படமாக இதனைத் தெரிவுசெய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமை இதழின் நன்றி!

    monkeys

    குரங்குகளின் இயல்பை கவனித்தால், தாய்க்குரங்கு குட்டியைச் சுமந்து செல்லும் வழக்கமில்லை. மாறாகக் குட்டிதான் தானாக முயன்று தாய்க்குரங்கைக் கட்டிக்கொள்ளும். குரங்குகளின் இவ்வியல்பை ஒட்டி எழுந்ததே வைணவத்தின் (வடகலையார் பின்பற்றும்) ’மர்க்கட நியாயம்.’ இதன் பொருளாவது: இறைவனை அடைய (மானுட) ஆன்மாக்கள்தாம் முயலவேண்டும்; இறைவனே நம்மை வலிய ஆட்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.

    இதோ இந்தப் புகைப்படத்தில் தாய்க்குரங்கும் அதனை அணைத்துக்கொண்டிருக்கும் குட்டிக்குரங்கும் ஆவலோடு எதையோ உற்றுநோக்கிக்கொண்டிருப்பதுபோல் காண்கிறதே! (ஒருவேளை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல்வாதிகள் யாரையேனும் விந்தையோடு நோக்கிக்கொண்டிருக்கின்றனவோ?!)

    சரி…போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளைச் சற்று கவனித்துவருவோம்!

    ***

    மரங்களை அழித்து இயற்கையை முடமாக்கும் மானுடனைக் குறிப்பாய்ச் சாடுகின்றது திருமிகு. ஹிஷாலியின் கவிதையில் குரல்கொடுக்கும் குரங்குக்குட்டி! 

    அனுதினமும் நேசிக்கும்
    என் தாயிக்கு
    எப்படித் தெரியும்
    அடுத்த தலைமுறைக்கு
    இந்த மரக்கிளை
    சொந்தமில்லை என்று!

    ***

    இனி நாம் காணவிருப்பது இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை!

    மரத்தின் உச்சிக்கிளையில் அச்சத்தோடு அமர்ந்தபடி மருண்டுநோக்கும் மந்தியும், அதனை அணைத்தபடி அமர்ந்திருக்கும் கல்லா வன்பறழும் (குரங்குக்குட்டி), மனிதர்களின் தொடர்பே வேண்டாமென்றுதான் அவ்வாறு அமர்ந்திருக்கின்றன என்று இந்த மர்க்கடங்களின் செய்கைக்கு நியாயம் கற்பிக்கின்றது ஒரு கவிதை!

    தாய்மை யென்பது தலைமைவரம்,
    தலையது அதனைக் குனியவைக்கும்
    வாய்மையைக் காட்டிட வந்ததுவோ
    வழியி லுள்ள குப்பையுடன்
    வாய்மெய் விறைத்த பிள்ளையுடல்,
    வேண்டாம் மனிதன் தொடர்பென்றே
    தாய்சேய் குரங்குகள் தனியேதான்
    தாவி அமர்ந்ததோ மரத்தினிலே…! 

    மரத்தினில் அமர்ந்திருக்கும் கவிகளுக்கென (குரங்குகளுக்கு) இந்தக் கவியை வடித்திருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கின்றேன். படக்கவிதைப் போட்டியில் வாராவாரம்  பேரார்வத்தோடு பங்களிப்பு செய்துவரும் அவருக்கு என்னுடைய ஸ்பெஷல் பாராட்டுக்கள்!

     

     

    Share
  • தேர்தலும் வாக்குறுதிகளும்!

    -மேகலா இராமமூர்த்தி

    வந்துவிட்டது மற்றுமொரு சட்டப்பேரவைத் தேர்தல் தமிழகத்துக்கு! ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் இந்தத் தேர்தல், மக்கள்வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்துமா? அல்லது தளர்ச்சியை ஏற்படுத்துமா? என்பது தேர்தலில் வெல்லும் கட்சியின் கையில்தான் இருக்கின்றது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

    உலகில் முடியாட்சியின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுக் குடியாட்சி குதூகலத்தோடு எழுந்தபோது மக்கள் மனம் மகிழ்ந்தனர். எதேச்சாதிகாரமும், வாரிசுரிமையும் ஒழியும்; ஆண்டான் அடிமை எனுங்கொடுமை அழியும், மானுடம் வெல்லும் என்றெல்லாம் அவர்கள் எதிர்பார்த்தனர். என்ன ஏமாற்றம்? குடியாட்சி அத்தகைய மாற்றங்கள் எதனையும் எதிர்பார்த்த அளவிற்கு ஏற்படுத்தவில்லை.

    ஆட்சியுரிமை யார் கைக்குப் போகின்றதோ அவருடைய வாரிசுகளே அடுத்தடுத்து ஆட்சியதிகாரத்திற்கு உரியவராயினர் குடியாட்சியிலும்! குடும்ப ஆட்சிமுறையே குடியாட்சி என்ற பெயரிலும் கோலோச்சியதுகண்டு மனம் வெதும்பினர் மாந்தர். அம்மட்டோ? குடியாட்சி என்பது குடிகளின் ஆட்சி என்ற பொருள்மாறி அது குடி(அரக்கனின்)ஆட்சியாகவும் மாறிப்போன பேரவலத்தையும் சமீபகாலங்களில் காணக்கூடிய இழிநிலை நமக்கு வாய்த்திருக்கின்றது. பள்ளிக்குச் சென்று ’பாஸ்மார்க்’ வாங்கி வாழ்வில் முன்னேறவேண்டிய இளைய சமுதாயம், ‘டாஸ்மாக்’ முன்னால் கால்கடுக்கத் தவங்கிடப்பதும், தவத்தின் பலனாய்க் கையிலும் பையிலும் மதுப்புட்டிகளோடு மதிமயங்கி அலைவதும் நல்லோரை நடுங்கவைக்கின்றது; நாணவைக்கின்றது!


    party chartஇந்நிலையில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிவாகைசூடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? என்பதில் கட்சிகளிடையே கடும்போட்டி நிலவிவருகின்றது. அதற்கு அவை துருப்புச்சீட்டாகப் பயன்படுத்துவது ’தேர்தல் வாக்குறுதிகளையே.’ ’மலை அகழ்க்குவம்; கடல் தூர்க்குவம்; வான் வீழ்க்குவம்; வளி மாற்றுவம்’ என்று கட்சித்தலைமைகள் தம் தகுதிக்குச் சற்றும் பொருத்தமிலா வகையில், தம்மைத் தாமே புகழ்ந்துகொண்டும், வாக்காளப் ’பெருங்குடி’ மக்களுக்குத் தாம் அன்னையைப் போல, தந்தையைப் போல என்றெல்லாம், நகைக்கத்தக்க வகையில், உறவுமுறை கொண்டாடிக்கொண்டும் வாக்குறுதிகளை அள்ளிவீசி வருகின்றன. வாக்களித்தோரின் ஆட்காட்டிவிரல் ’மை’ காய்வதற்குள் வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்படும் என்பதே உண்’மை’!

    இந்த வேடிக்கையை எண்ணும்போது, அரசியலார் வாக்குறுதியளிக்கும் விஷயத்தில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பது குறித்த ஆவூர் மூலங்கிழாரின் புறப்பாட்டொன்று நம் நினைவுக்கு வருகின்றது.

    ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
    ஒல்லாது இல்என மறுத்தலும் இரண்டும்
    ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே
    ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது
    இல்என மறுத்தலும் இரண்டும் வல்லே
    இரப்போர் வாட்டல் இன்றியும் புரப்போர்
    புகழ்குறை படூம் வாயில்… (புறம் – 196)

    ”தம்மால் இயலக்கூடியதை இயலுமென்றும், இயலாததை இயலாதென்றும் சொல்வதே தாளாண்மையுடையோர்க்கு நன்மை பயப்பதாகும்; அதைவிடுத்து இயலாததை இயலுமென்றும், இயலுவதை இயலாதென்றும் மாற்றிப்பேசுவது இரப்போரை  ஏமாற்றுவதோடு, புரப்போரின் புகழையும் கெடுக்கும் செயல்கள் என்கிறார் புலவர். ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன் பாண்டிய மன்னனுக்குச் சொல்லப்பட்ட இவ்வறிவுரை, இன்றைய அரசியல்வாதிகளுக்கும் அட்சரம் பிசகாமல் பொருந்தும் அதிசயத்தை என்னென்பது!

    மக்கள்தொண்டினை அடிப்படையாகக் கொண்டதே அரசியல். ஆனால் பொதுமக்களுக்குத் தொண்டுசெய்து சிறப்பதினும், தம் மக்களுக்குத் (பிள்ளைகளுக்கு) ’துட்டு’ சேர்த்துச் செழிப்பதிலேயே அரசியல் தலைவர்களின் உள்ளம் ஈடுபாடு காட்டுவது கொடுமையன்றோ?

    அதனினும் கொடுமை, கட்சித்தலைவர்கள் தொகுதிகளுக்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை. ஆம், ஒரு குறிப்பிட்ட தொகுதியில் எந்தச் சாதியின் கை ஓங்கியிருக்கின்றதோ அல்லது எந்தச் சாதியின் எண்ணிக்கை அதிகமோ அந்தச் சாதியைச் சேர்ந்த, பணம்படைத்த பெரும்புள்ளிதான் அங்கே வேட்பாளராய் நிறுத்தப்படுவார். இது நடைமுறையில் (பல காலமாயுள்ள) எழுதப்படாத சட்டம்! இங்கே கல்வித் தகுதிக்கோ, தனிமனித ஒழுக்கத்துக்கோ, மக்கள் முன்னேற்றச் சிந்தனைகளுக்கோ இடமேயில்லை.

    அரசியல்களத்தில் ஒருகாலத்தில் இருந்து, இன்று பூதக்கண்ணாடி வைத்துத் தேடினாலும் கிடைக்காததாய்க் காணமற்போய்விட்ட நற்பண்புகளில் ஒன்று ’அவை நாகரிகம்’. அன்றைய அரசியல்தலைவர்கள் பொதுமேடைகளில் ஒருவரையொருவர் தரக்குறைவாக ஏசுவதற்குக் கூசினர். வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர், வெவ்வேறு சித்தாந்தங்களைக் கைக்கொண்டிருந்தோர் நட்புபாராட்டிய காலமும் இருந்ததுண்டு!! இவையெல்லாம் கனவாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டன இன்று!

    ஒவ்வொரு கட்சியும் தம் ’எதிர்’க்கட்சியைக் ’எதிரி’க்கட்சியாகவே பாவித்து, ஒருவரை ஒருவர் அருவருக்கத்தக்க மொழிகளிலும், வழிகளிலும் விமரிசித்துக் கொள்(ல்)வதும், வசைமாரிப் பொழிவதும், ஒருவர்செய்த ஊழலை மற்றவர் புள்ளிவிவரங்களோடு அம்பலப்படுத்துவதும், பெரியதிரையில் ’மார்க்கெட்’ போன நடிக, நடிகையரை அழைத்துவந்து தத்தம் கட்சிக்காகக் குரல்கொடுக்க வைப்பதும்,  தேர்தல் காலங்களில் வீதிதோறும் அரங்கேறும் விநோதங்கள்!!

    நன்னடத்தையாலும் நல்லாட்சியாலும் மக்கள் மனங்களை வெல்ல முயலாது, விலையில்லா வீட்டு உபயோகப்பொருட்களைத் தந்து மக்களை விலைக்குவாங்க முயலும் மலிவான வியாபாரமும் இன்றைய அரசியலில் சகஜம்!

    இந்தக் கேலிக்கூத்துக்களையெல்லாம் கண்டு நொந்துநூலாகிப்போன பொதுஜனமோ, ’கறை’படியாத இந்த உத்தமர்களில்(!) யாருக்கு வாக்களிப்பது? யாரை ஆட்சிபீடத்தில் அமர்த்துவது? என்று ’திருதிரு’வென விழிக்கின்றது!

    மாண்புமிகு அரசியல்வாதிகளே! சொல்வதைச் செய்வதோடு சொல்லாததையும் சேர்த்தே செய்யக் காத்திருக்கும் கனவான்களே! இத்தருணத்தில் (பாவப்பட்ட) பொதுஜனத்தின் சார்பாக உங்களோடு சில வார்த்தைகள்…

    நீங்கள் தேர்தலில் நில்லுங்கள்; வெல்லுங்கள்…வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால் மக்களை அவர்களின் பொருள்சார்ந்த பலவீனங்களைப் பயன்படுத்தி முட்டாளாக்க முயலாதீர்கள். விலையில்லா வீட்டுசாதனப் பொருட்களைத் தருவதை/தந்ததையெல்லாம் உங்கள் சாதனைகளாகப் பட்டியல் போடாதீர்கள். அவையெல்லாம் மக்களின் உழைக்கும்திறனை உறிஞ்சி, அவர்களைச் சோம்பேறிகளாக்குவதைத் தவிர வேறெதெற்கும் பயன்படப்போவதில்லை. அதைவிடுத்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை அதிக அளவில் உருவாக்கி, அவர்களைச் சொந்த உழைப்பில் முன்னேறவிடுங்கள்!

    சாதிசார் வோட்டுக்களை இழந்துவிடக்கூடாது என்ற ‘நல்லெண்ணத்தில்’(!) நாட்டில் பற்றியெரியும் சா’தீ’ வன்முறைகளைக் கண்டும் காணாமலிருக்கும் கயமையை ஒழியுங்கள்! ’இளைதாக முள்மரம் கொல்க’ என்ற பொதுமறை ஆசிரியரின் வாக்கிற்கிணங்க, வன்முறைகளை முளையிலேயே கிள்ளி எறியுங்கள்! சாதிப்பகையற்ற சமூகத்தை உருவாக்குவதே உங்கள் சாதனையாகட்டும்!

    சாராயக்கடைகளை திறந்து தமிழ்க்குடிமக்களை முதலில் ’தண்ணீரில்’ மிதக்கவிட்டது யார்? என்று பட்டிமன்றம் நடாத்துவதில் காலங்கடத்தாமல், அவற்றைமூடி, காலனிடமிருந்து தமிழ்க்குடிகளை முதலில் மீட்கப்போவது யார்? என்பதை மக்களுக்கு அறியத்தாருங்கள்! பேச்சோடு நில்லாமல் செயலிலும் அதனை முழுவீச்சில் காட்டுங்கள்!

    மாதர் தம்மை இழிவுசெய்யும் மடமையை ஒழித்தால் மட்டும் போதாது! அவர்களுக்கு எதிராக நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய்ப் பெருகிவரும் வன்கொடுமைகளுக்கும் வாய்க்கரிசி போடவேண்டிய கடமை அரசியலார்க்கு உண்டு என்பதை மறவாதீர்கள்!

    ’தமிழ்நாட்டில் தமிழ்தானில்லை’ என்று குமுறினார் பாவேந்தர். அந்த அவலம் இன்றும் வலம்வரும் நிலையை முற்றாய் நீக்கித் தமிழ்க்குழந்தைகள் தாய்த்தமிழ் கற்கவும், மெல்லத்தமிழ் நம் கண்ணெதிரிலேயே சாகாதிருக்கவும் வகைசெய்யுங்கள்!

    ஈதொப்ப, நீங்கள் ஆற்றவேண்டிய அருஞ்செயல்கள் ஏராளம்! ஏராளம்!

    ஆட்சிக்கட்டிலில் ஏறும் ஆசைக்கனவில் மிதப்போரே…!

    மேற்கண்டவற்றில் சிலவற்றையேனும் (உங்களில் ஆட்சியமைப்போர்) நிறைவேற்றுவீர்களேயானால் தமிழகம் வளம் பெறும்; தமிழர் நலம் பெறுவர்!

    Share
  • படக்கவிதைப் போட்டி 62-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. வெண்மணி சிந்துஜாவின் புகைப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவரும் வல்லமையின் நன்றிக்கு உரியவர்கள்.

    working women

    நெஞ்சில் உரத்தோடும், நேர்மைத் திறத்தோடும் கரிப்புமணிகளான உப்பை உற்பத்திசெய்ய இந்தப் பெண்மணிகள் கொடும்வெயிலில், தம் கடும் உழைப்பையே மூலதனமாய் விதைக்கின்றனர். என்று மடியும் இவர்களின் மிடிமை? 

    இப்புகைப்படம் குறித்த நம் கவிஞர்களின் கருத்தாக்கங்களைக் கவனத்தோடு படித்துவருவோம்…வாருங்கள்!

    பகலவன் ஒளியில் தகதகவென மின்னும் உப்பளத்தில் வெயிலால் வெந்த உடலோடும் நொந்த மனத்தோடும் உழைத்துப் பிழைக்கும் இந்த அரிவையரின் துயர் தீர்வதெக்காலம்? எனும் தன் வேதனையைப் பதிவுசெய்திருக்கின்றார் திருமிகு. ஹிஷாலி.

    அலுப்பை போக்கும்
    அதிகாலை
    ஆண்டவன் அருளோடு 

    அவளின்  பயணம்…. 

    இறங்க மனமில்லை
    இறங்கியது கால்கள்
    சேலை வேட்டியானது
    செஞ்சிலுவை சட்டை போட்டு
    ஞ்சிக் கலையம் தன் கண்மறைக்க 

    கடகடவென்று
    கடல்நீரைத் தளங்களில் பாய்ச்சிக்
    கதிரவன் துணைகொண்டு
    மடமடவெனக்
    கோடுபோட்ட வரப்பில்
    மஞ்சள் வெயில் மணத்தோடு
    தகதகவென மின்னும் உப்பளத்தில் 

    தாகம் மறந்து
    தேகம் மெலிந்து
    சோகம் குவியும்
    சொப்பன வாழ்க்கையில் 

    உடலோடு உழற்றும்
    உப்புக் காற்றில்
    கருவாடெனக் காய்ந்து
    திருவோடு அறியாத
    பிள்ளைக்காக
    தினம் தினம் வெந்து தணியும்
    வேள்வியில் 

    உலகமே ருசித்திருக்க
    உள்ளம் உருகுதே எங்கள்
    உயிரும் கருகுதே 

    எள்ளும் தண்ணியும்
    இறைப்பதற்குள் 

    இறைவா
    எங்களை மீட்டெடுக்க வாராயோ
    இல்லை மாற்று வழி தாராயோ!

     *** 

    வருத்தும் வறுமையை விரட்ட, உருக்கும் கோடையில் ஓய்வின்றி உழைக்கும் இதுபோன்ற உயர்ந்த பெண்களாலன்றோ வானம் பொய்யாது பெய்கின்றது என நெஞ்சம் நெகிழ்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    உருக்கும் கோடை வெயிலதிலே
    உப்பு சுமந்து பிழைக்கின்றாள்,
    வருத்தும் வறுமை போக்கிடவே
    வழிகள் தவறாய் எடுக்கவில்லை,
    தெருவில் தனியாய் இருந்தாலும்
    தீவிர உழைப்பு பிள்ளைக்கே,
    இருக்கும் இதுபோல் பெண்களால்தான்
    இன்னும் பெய்யுது மழையிங்கே…!

    ***

    இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைச் சந்திக்கும் நேரமிது!

    அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
    அடிக்கு நெருஞ்சிப் பழம் என்று குறள் வடித்தார் வள்ளுவப் பேராசான். ஆனால் காலணியின்றித் தம் மெல்லடிகளில் கொப்புளங்கள் வருமளவிற்கு உப்பளங்களில் உழைக்கும் இப்பாவையரின் துயர்  நம் கண்களில் நீரை வடியவைக்கின்றது அல்லவா?

    நல்குரவென்னும் இடும்பையால் பல்வகைத் துன்பங்களையும் அயராது அனுபவிக்கும் இப்பெண்மணிகளின் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும்; துன்பங்கள் அவர்தம் வாழ்வினின்றும் கடந்து போகவேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கும் கவிதையொன்று…

    ராமன் ஆண்டாலென்ன
    ராவணன் ஆண்டாலென்ன
    ராப்பகல் பாராமல் காலில்
    கொப்பளம் வந்தாலும் பொருட்படுத்தாது
    உப்பளத்திலிருந்து உப்பைச் சுமந்து சுமந்து
    சுமைதாங்கியாய்ப் போனாலும்
    அசரவில்லை என்றும் அதனால்
    உசரவும் இல்லை வாழ்க்கைமுறை
    இலவசமாய்க் கிடைக்கும் மிக்ஸியும்
    இலவசமாய்க் கிடைக்கும் செல்போனும்
    இன்னபிற சாமான்களும் வந்து
    என்ன உபயோகம்?
    அதை
    இயக்க காசு வேண்டாமா ?
    வயிற்றில் ஈரத்துணியை க்கட்டிக்கொண்டு
    ஓரமாய் அமர்ந்தால் பசி போகுமா?
    பெற்ற பிள்ளைகளுக்குச் சோறு போடுமா இலவசங்கள்?
    கற்ற (அரசியல்) வித்தை காட்டி
    உற்றவர்களும்உறவுகளும்
    உல்லாசத்தை அனுபவிக்க
    உழைப்பாளிகள் வெயிலோடும் மழையோடும்
    வறுமையோடும் என்று மாறுமோ இந்த நிலை என்று
    பொறுமை காக்கின்றனர் இதுவும் கடந்து போகுமென்று!

    அரசாங்கம் அளிக்கும் இலவசங்களான மிக்ஸியும், செல்போனும் ஏழைமக்களின் வயிற்றுப்பசிக்கு உணவாகா; உழைப்பு ஒன்றே அவர்களின் பசிப்பணி தீர்க்கும் அருமருந்து என்பதைத் தன் கவிதையில் இயல்பாய் வெளிப்படுத்தியிருக்கும் திருமிகு. சரஸ்வதி ராஜேந்திரன், இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுபெறுகின்றார். அவருக்கு என் பாராட்டுக்கள்!

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 61-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பிஞ்சுக் குழந்தையின் மெய்தீண்டலும், அதன் அமுதனைய சொற்கேட்டலும் அன்னைக்கு அளிக்கும் இன்பம் அளவற்றது.

    ”மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
    சொற்கேட்டல் இன்பம் செவிக்கு”
    என்ற பொய்யில் புலவரின் பொருளுரை இங்கு நம் நினைவுக்கு வருகின்றது.

    mom and baby

    திருமிகு. அனிதா சத்யத்தின் கைவண்ணத்தில் மிளிரும் இந்த வண்ணப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குப் பாங்காய்த் தேர்ந்தெடுத்துத் தந்துள்ளார் திருமதி. சாந்தி மாரியப்பன். இருவருக்கும் வல்லமையின் நன்றி!

    செங்கனி வாய்திறந்து இந்த மழலை உதிர்க்கும் சொல்முத்துக்கள், நம் கவிஞர்களிடம் பல கவிதை வித்துக்களை முளைவிடச் செய்திருக்கும். அவற்றை நாமும் இரசித்துவருவோம்!

    ”அப்பன் நம்மைக் காக்காவிட்டால் என்ன? அகிலம் பெரிது! வாழ நினைத்தால் வாழலாம்” எனத் தன் குழந்தைக்கு மனவுறுதியூட்டும் மறத்தாயைக் கவிதையில் வடித்துள்ளார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அப்பன் விட்டுச் சென்றாலும்
    அகிலம் பெரிது வாழ்ந்திடலாம்,
    தப்பென யாரையும் சொல்லவேண்டாம்
    தங்கமே உனைநான் வாழவைப்பேன்,
    எப்பவும் நல்வழி நடந்திடுவாய்
    ஏழைகள் நமைப்போல் பலருண்டு,
    குப்பையில் கிடைத்த வைரம்நீ
    கோபுரம் ஏற்றுவேன் தாய்நானே…!

    ***

    பொக்கைவாய்ச் சிரிப்பிலும், மழலைப் பேச்சிலும் மனம் மயக்கும் இந்தக் குழந்தையின் பலத்தால், குடிகாரப் புருஷனால் முழுகிய தன்குடி தலைநிமிர்ந்துவிடும் என்று நம்புகின்ற தாயைக் காண்கின்றோம் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் கவிதையில்.

    குடிகாரப் புருஷனால்
    குடிமுழுகிபோனாலும்
    மடிநிறைய மலர்த்தோட்டமாய் நீ
    அடிவைத்ததும் துன்பங்களெல்லாம்
    ஓரடித் தூரத்தான்போயின
    உன் பொக்கை வாய் சிரிப்பிலும்
    உன் மழலைப் பேச்சிலும்
    என் கவலைகள்தூசாகிப் போயின
    மகனே உன் பலத்தால் உலகை ஆளும்
    மனத்திண்மைபெறுவேன்
    வெற்றிகள் பெற்று
    விரைந்து செயலாற்ற
    உற்றதுணை நீயே !
    பய பஞ்சம் பத்து நாளில் போகுமென்பார்
    நியதி நெறிகள் நிம்மதிப் பெய்தே
    உயர நம்மை உயர்த்திவிடும் கண்ணே
    அம்மா சொல்படி கேட்டுப் படித்து
    சும்மா சோம்பேறியாய் இல்லாமல் மற்றவர்
    மூக்கில் விரல் வைக்கப் படித்து
    முன்னுக்கு வா என் முத்தாரமே
    அச்சாரமாய்த் தருகிறேன் அன்பு முத்தம்

     ***

    இந்த வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுபெற்றிருப்பவரை அடுத்துச் சந்திப்போம்!

    இன்மையாலும் (வறுமை), கணவன் மற்றும் குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் இன்மையாலும், இப்புவியில் எத்தனையோ மங்கையர் உண்ண உணவின்றி, வாழ வழியின்றித் தம் வாழ்க்கையெனும் ஓடத்தை எதிர்நீச்சல் போட்டே செலுத்துகின்றனர். இதற்கிடையில், தம் குழந்தைகளைப் படிக்கவைத்து ஆளாக்க அவர்கள் படும்பாடோ வார்த்தைகளால் விவரிக்க இயலாத துயர காவியங்கள்!

    மிடிமை தன்னை அடிமைசெய்து வாட்டிவதைக்கின்ற போதினும், கோழையைப்போல் தன் மகளுக்குக் கள்ளிப்பால் ஊட்டாத ஏழைத்தாயை நம் கண்முன் நிறுத்தும் கவிதை நம்நெஞ்சைக் கனக்கச்செய்கிறது.

    வறுமை வாக்கரசி போட 
    சொந்த ஊரை விட்டு
    சொப்பனம் தேடி வந்தேன் 

    அப்பன் ஆத்தாளை மறந்து
    அடுக்குமாடி கட்டிடத்தில்
    அயராது உழைத்தேன் 

    இருக்க மனையில்லை
    இல்லறம் சுகமில்லை 

    பறக்கும் காகம் போல்
    கண்ட இடத்தில்
    உண்டு உறங்கி
    உயிர் வாழும் எனக்கு

    சிம்ம சொப்பனமாய்ச்
    சீமாட்டி நீ தரிக்க
    பெண்மையை உணர்ந்து 

    பேறுகாலம் பெற்றேன் 

    கள்ளி அறியாத்
    தாய்ப் பாலை
    சொல்லிச்  சொல்லி
    கொடுத்தேன் என்
    கட்டிச் செல்வமே 

    நான் கட்டையில்
    போகும் வரை 

    உன் கடன் தீராதடி
    முத்துச் செல்வமே
    முழுமதியே 

    இந்தச் சொத்தைத் தவிர
    வேறில்லையே
    இந்த உலகில்
    எழுந்து விளையாடு
    எதிர் நீச்சல் நீ போட…!

    பொன்னும் பொருளும் இல்லையென்று கலங்காது, பெற்ற குழந்தையையே பெறற்கரும் சொத்தாக நினைந்துபோற்றும் அன்னையின் உள்ளத்தைத் திறந்துகாட்டியிருக்கும் திருமிகு. ஹிஷாலியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிக்கின்றேன்.

     

     

     

     

    Share
  • அகத்தைக் கவரும் அகத்தியம்!

    -மேகலா இராமமூர்த்தி

    தமிழின் தலையாய இலக்கணநூலாக இன்றளவும் போற்றப்படுவது அகத்தியரின் தலைமாணாக்கரெனக் கருதப்படும் ஒல்காப் பெரும்புலமைத் தொல்காப்பியர் யாத்த தொல்காப்பியம் ஆகும். பிறமொழிகளின் இலக்கண நூல்களெல்லாம் எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டும் இலக்கணம் வகுத்துவிட்டுத் தம்வேலை முடிந்தது என்று வாளாவிருந்துவிடத் தொல்காப்பியம் மட்டுமே வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தாலன்றி இலக்கணநூல் முழுமைபெறாது என்றுணர்ந்து, பொருள்பொதிந்த பொருளதிகாரத்தைப் பெருங்கொடையாய்த் தமிழர்க்கு நல்கியிருக்கின்றது.

    தொல்காப்பியத்திற்குக் காலத்தால் மூத்ததும், முதற்சங்க காலத்தைச் சேர்ந்தது என்று மொழியப்படுவதுமான ’அகத்தியம்’ எனும் இலக்கணநூல் தென்னகத்துக்கு வந்த குறுமுனியான அகத்தியர் இயற்றியது என்று நம்பப்படுகின்றது. இந்தியாவின் வடபகுதியிலிருந்து தென்னகத்தின் பொதியில்மலை (பொதியமலை) வந்த அகத்தியர், தமிழின் இலக்கண இலக்கியங்களில் புலமை மிகப்பெற்று, அகத்தியம் எனும் அருந்தமிழ் இலக்கண நூலை இயற்றினார். அவரிடம் தமிழ்கற்பான் வேண்டிப் பலரும் அங்கே வருவாராயினர். பாண்டிய மன்னனும் அவர்களுள் அடக்கம். இவ்வாறு கூடிய கூட்டமே பின்னர் தமிழ்ச்சங்கமாய்த் தோற்றம்பெற்றிருக்கவேண்டும் என்று கூறப்படுகின்றது.

    முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று மூன்று சங்கங்கள் நம்மிடையே இருந்தன என்ற கருதுகோளும் உண்டு. முதன்முதலில் முச்சங்கங்கள் குறித்தும், அதில் இடம்பெற்றிருந்த நூல்கள், அச்சங்கங்களுக்கு அணிசேர்த்த தமிழ்ப்புலவோர், அவற்றைத் தலைமையேற்று நடாத்திய பாண்டியர் தொல்குடியைச் சேர்ந்த மன்னர்பெருமக்கள் உள்ளிட்ட செய்திகளைப் பரக்கப்பேசுவது இறையனார் அகப்பொருள் அல்லது களவியல் என்றழைக்கப்படும் இலக்கணநூலுக்கு வரையப்பட்ட உரையே (களவியலுரை) என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. இதற்கு மாறாக, சங்கம் எனும் கருதுகோளே கற்பனையானது, உண்மைக்குப் புறம்பானது என்று வா(சா)திக்கும் அறிஞர் பெருமக்களும் நம்மிடையே உளர்.

    அது கிடக்க. முதல் இலக்கணநூலாய்க் கருதப்படும் அகத்தியம் இன்று நமக்கு முழுமையாய்க் கிடைக்கவில்லை. காலமெனும் பெருவெள்ளத்தில் அந்நூல் அடித்துச் செல்லப்பட்டுவிட்டபோதினும், அதில் இடம்பெற்றிருந்த ஒருசில சூத்திரங்கள் பிற தமிழ்நூல்களின் உரையாசிரியர்களால் மேற்கோளாய் எடுத்தாளப்பட்டதன் வாயிலாக இன்று நமக்குக் கிட்டியுள்ளன. அவ்வகையில் நாம் பேறுபெற்றோரே! அப்பாடல்களில் ஓரிரண்டைச் சுவைத்தின்புறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

    அகத்தியத்தில் இடம்பெற்றுள்ள அழகான சூத்திரமொன்று, சொல்லின் திறத்தினை, அன்றைய மக்களின் அன்றாடப் பயன்பாட்டிலுள்ள பொருள்கள், அவைசார் தொழில்கள் மூலம் அழகாய்ச் செப்பியுள்ளது. அதனைக் காண்போம்.

    வயிர ஊசியும்
    -மயன்வினை இரும்பும்
    செயிரறு பொன்னைச்
    -செம்மைசெய் ஆணியும்
    தமக்கமை கருவியும்
    -தாமாம் அவைபோல்
    உரைத்திறம் உணர்த்தலும்
    -உரையது தொழிலே.

    வயிரத்தால் செய்யப்பட்ட ஊசி வயிரத்தையும் அறுக்கக்கூடியது; இரும்பால் செய்யப்பட்ட அரம் பிற உலோகங்களை அறுக்கப் பயன்படுவதோடு இரும்பை அறுக்கவும் பயன்படும். அதுபோல், பொன்னை உரைத்துப்பார்க்க உதவும் உரையாணியும் பொன்னாலியன்றதே. (’முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்’ எனும் பழமொழியும் ஈதொத்த பயன்பாடு குறித்து எழுந்ததே!)

    மேற்கண்ட உலோகங்கள் எவ்வாறு மற்றவற்றைச் சோதிக்கும் கருவியாக இருப்பதுடன் தம்மைச் சோதிக்கவும் பயன்படுகின்றனவோ, அதுபோன்றே ஒரு சொல்லானது பிறிதோர் பொருளைச் சுட்டுவதோடு, தன்னையே, தன் (ஒலி) உருவத்தையே சுட்டுவதற்கும் உதவுகின்றது என்பது அகத்தியரின் இந்தச் சூத்திரத்திற்கான பொருளாகும். தன் கருத்துக்கு வலுவூட்ட அவர் எடுத்தாண்டுள்ள உவமைகள் சிறப்பானவையாகவும், பொருத்தப்பாடு உடையனவையாகவும் இருப்பதைக் காண்க.

    மொழியிலக்கணத்தை அறிந்துகொள்வதற்கு மட்டுமல்லாது, வயிரம், இரும்பு, பொன் போன்ற பல்வேறு உலோகங்களைக் கையாளுவதில் அன்றைய மக்கள் பெற்றிருந்த திறனை அறிந்துகொள்வதற்கும் இந்நூற்பா துணைசெய்கின்றது என்று கூறுவதில் தவறில்லை.

    பிறவற்றைச் சோதிக்க உதவும் ஒருபொருள் தன்னைச் சோதிக்கவும் உதவுவது போலவே, உயிர்களின் உடல்நோய்க்குக் காரணமாயிருக்கின்ற ஒன்றே அதற்கு மருந்தாகவும் சில தருணங்களில் அமைந்துவிடக் காண்கின்றோம். எப்படி என்கிறீர்களா? அம்மைநோயை உண்டாக்கும் கிருமியையே அம்மைத் தடுப்பூசியிலும் (smallpox vaccine – The vaccine is made from a virus called vaccinia which is a pox-type virus related to smallpox.) உட்செலுத்தி அந்நோயைப் புறங்கண்டார் எட்வர்ட் ஜென்னர் (Edward Jenner – An English Physician and a scientist) எனும் ஆங்கில மருத்துவர். இங்கு நோயை உண்டாக்கும் நுண்ணுயிரியே அந்நோய்க்கான மருந்தாகவும் திகழ்கின்றது அல்லவா?

    மாந்தகுலத்தை வாழவைக்கும்(!) காதலைக் கருத்தில்கொண்டாலும் இதே நிலைதான்! ஆம், காதல்நோயை உண்டாக்கும் பெண்ணின் பார்வையே அதற்கு மருந்தாகவும் (அவள் காதலனுக்கு) அமைந்துவிடுகின்றது என்கிறார் அறிவுலக மேதையான வள்ளுவப் பேராசான்.

    இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
    நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
    (1091)

    மீண்டும் அகத்தியத்தை நோக்கி நம் அகத்தைத் திருப்புவோம்!

    பலபொருள்களின் தொகுதியால் இயை(ணை)ந்தவை ஒன்றெனக் கருதப்படுவது குறித்துப் பேசும் சூத்திரம் இது!

    பலவின் இயைந்தவும் ஒன்றெனப் படுமே
    அடிசில் புத்தகம் சேனை அமைந்த
    கதவம் மாலை கம்பலம் அனைய.

    ஒரு பூம்பொழிலில் கண்ணைக் கவரும் வண்ணமலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. அவற்றைத் தனித்தனியாய்க் காணும்போது வெவ்வேறான வண்ணமும் வடிவமும் கொண்ட மலர்களாய் அவை நமக்குக் காட்சியளிக்கும். அதே வண்ணமலர்களைக் கொய்து வன்ன(அழகிய) மாலையாய்த் தொடுத்தபின்போ, அவற்றை நாம் ’மலர்கள்’ என்று பன்மையில் அழைப்பதில்லை; ’மாலை’ என்று ஒருமையில்தான் அழைக்கின்றோம்.  

    இப்படியே சோறு, பொரியல், கூட்டு, பச்சடி எனும் பல்வேறு பண்டங்களை உள்ளடக்கியதை நாம் ’உணவு’ என்று ஒருமையிலேயே அழைக்கின்றோம்.

    ஏடுகளின் தொகுப்பு ’புத்தகம்’ என்றும், வீரர்களின் கூட்டம் ’சேனை’ என்றும், மரத்துண்டுகளின் இணைப்பு ’கதவு’ என்றும், நூலிழைகளின் பின்னல் ’கம்பலம்’ (வேலைப்பாடமைந்த திரைச்சீலை அல்லது மேற்கட்டி) என்றும் ஒருமையில் அழைக்கப்படுவதற்கும் மேற்கண்டவிதி பொருந்துகின்றது.

    இவ்வாறு தனித்தனியாகப் பார்க்கும்பொழுது பன்மையில் தோன்றுபவை ஒன்றாய் இணைந்தபின் ஒருமைத்தன்மை பெறும் பான்மையைத் தக்க சான்றுகளோடு நிறுவியுள்ளார் அகத்தியர் பெருமான். (இச்சூத்திரத்தில் கம்பலம், சேனை, புத்தகம் போன்ற வடசொற்கள் பயின்றுவருவதைக் கண்ட அறிஞர் பெருமக்களில் சிலர், இதனை இயற்றியவர் தொல்காப்பியரின் ஆசிரியரான பழைய அகத்தியராய் இருக்கவியலாது; இவர் காலத்தாற் பிற்பட்டவராயிருத்தல் வேண்டும் என்று கருதுகின்றனர்; இஃது ஆராய்ச்சிக்குரியது.)

    இயலுக்கு மட்டுமல்லாது இசை, நாடகம் எனும் தமிழின் பிற பிரிவுகளுக்கும் இலக்கணம் கண்டது அகத்தியம் என்பது தமிழாய்ந்தோர் கருத்து. அவற்றையெல்லாம் கற்றுப் பயன்கொள்ளும் அரியவாய்ப்பை நாம் பெற்றிடாதபோதினும், நமக்குக் கிட்டியுள்ள ஒருசில சூத்திரங்களே பல்கேள்வித் துறைபோகிய நல்லாசிரியரான குறுமுனிவரின் பேராற்றலை உள்ளங்கை நெல்லியென நமக்குத் தெற்றெனப் புலப்படுத்திவிடுகின்றன.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 60-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கருவண்டு விழிகளோடும், களைசொட்டும் முகத்தோடும், விளக்கொளியில் கல்விகற்கும் கவின்மழலையே! இன்று நீ கற்கும் கல்வி நாளை உன்வாழ்வில் நிச்சயம் விளக்கேற்றி வைக்கும்! வெள்ளத்தால் போகாத, வெந்தணலால் வேகாத விழுச்செல்வமாம் கல்வி, இறுதிவரை உன்னைக் காக்கும்! உன் இடுக்கண் போக்கும்!

    child and a light

    திரு. வாசகன் பாலசூரியனின் கண்கவர் புகைப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். ஒளிஓவியருக்கும், தேர்வாளருக்கும் எம் நன்றிகள்!

    இனி, கவிதைகளில் நம் கவனத்தைச் செலுத்துவோம்!

    ***

    கடந்தகாலம் நோக்கிய சிந்தனைப் பயணத்தில் வானவில் தெரியவில்லை; வறுமைதான் தெரிந்தது இந்தக் குழந்தைக்கு. ”வறுமைகண்டு கலங்காதே கண்மணி! இளமையில் கல்! வளமையைக் காண்பாய்!” என்று மழலைக்கு நன்மொழி நவில்கின்றார் திருமிகு. ஹிஷாலி.

    கருப்பு வெள்ளை
    புத்தகத்தில்
    மெழுகுவர்த்தி வெளிச்சம்
    எண்ணம் மாறி
    வண்ணம் களையாத
    அதே நிறக் கண்கள் 

    மௌனங்கள் மட்டும்
    கடந்த காலத்தை நோக்கி
    பயணிக்கிறது 

    அங்கும்
    வானவில்லுக்கு பதிலாக
    வறுமைதான் தெரிந்தது 

    திரும்பி வந்தேன்
    திருப்பு முனையில் முடிந்தது
    இளமையில் கல் !

    ***

    ”குறைந்த தீபஒளியில் பாடம்பயிலும் குழந்தையின் எதிர்காலம், நிறைந்த அறிவொளியால் வளம்பெறட்டும்!” என வாழ்த்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    இருட்டு வயலில்
    வெளிச்ச விதை விழுந்து
    முளைத்து
    வெளிவருகிறது ஒளியாக..

    அந்தக்
    குறைந்த வெளிச்சத்தில்
    குழந்தை படிக்கிறது,
    வறுமை இருளகல
    கல்வி ஒளிபெருக..
    ஒளி பெறட்டும்,
    வாழ்க்கை
    வளம் பெறட்டும்!

    *** 

    மழலையின் மலர்ச்சியான எதிர்காலத்திற்கு நல்வழியையும் நல்வாழ்த்துக்களையும் நல்கியிருக்கின்றார்கள் நம் கவிஞர் பெருமக்கள். 

    அடுத்து, இந்த வாரத்தின் சிறந்த கவிஞர் யார் என அறிந்துகொள்வோமா?

    ’கொடிது கொடிது இளமையில் வறுமை’ என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வறுமைப்பிணிக்கு அருமருந்து கல்வியெனும் விழுப்பொருளே ஆகும். 

    ”ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
    எழுமையும் ஏமாப் புடைத்து” எனத் தலைமுறைகள் தாண்டிநிற்கும் கல்வியின் தகைமையைப் போற்றுவார் வள்ளுவப் பெருந்தகை.

    தீச்சுடரை புறத்தேவைத்து, அறிவுக்கனலை அகத்துள்ளே மூட்டிக்கொண்டிருக்கும் இச்சிறுமியின் அடர்ந்த சிந்தனைகள் அங்கே படர்ந்திருக்கும் இரவைக் கலைக்கின்றன என்கின்றது ஒரு நயமான கவிதை…

    இயற்கையின்முன் 
    கைகட்ட வேண்டி இருந்தாலும்

    இருளை விசாரிக்கின்றன 
    ஒளியுமிழும் விழிகள்
    ஏற்றுக் கொண்ட சவாலுக்குச் 
    சாட்சியமான மெழுகுவர்த்திச் சுடரைச் 
    சற்றே 
    ஆவேசப்படுத்திக் காட்டுகிறது 
    மாற்றத்திற்குத் தயாராகும் 
    சிறுமியின் 
    வெப்பப் பெருமூச்சு
    இப்போது அடர்த்தியான 
    இரவைக் கலைக்கின்றன 
    அதனினும் அடர்த்தியான 
    அவளது சிந்தனைகள்

    ***

    சிறுமியின் சிந்தனைச்செறிவைச் சிறப்பாய்ச் சித்தரித்திருக்கும் இந்தக் கவிதையின் ஆசிரியர் திரு. எஸ். வி. வேணுகோபாலனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

    ***

    மின்சாரம் இல்லாவிட்டால் என்ன? கிடைத்திடும் சிறியஒளியில் தன் அறிவுச்சாரம் பெருக்கிடுவாள் இந்தத் திருநிறைசெல்வி என்கிறது மற்றொரு கவிதை…

    திருநிறைப்பாள் அறிவொளியால்….
    மின்சாரம் இல்லாவிடில் என்ன…?
    தன் சாரம் பெருக்குவாள்
    மின்னும் அறிவுச் சரமாவாள்..
    சின்ன ஒளியில் பெருநிலவாக.
    திருநீறு திருக்காப்பாக அறிவின்
    திருக்கண் விழ அவதானமாக
    திருட்டியம் பெருக்கும் செல்வி
    திரு நிறைப்பாள் அறிவொளியால்.

    (திருக்கண் – அறிவுப் பார்வை;  திருட்டியம் – ஞானம், அறிவு)

    திருமிகு. வேதா. இலங்காதிலகத்தின் இக்கவிதைக்கு என் பாராட்டுக்கள்!

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 59-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. சாமினி எடுத்திருக்கும் இந்தப் புகைப்படத்தை இவ்வாரப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்களுக்கு வல்லமையின் நன்றி!

    a lady near the tides

     

    அலையெறியும் கடற்கரையோரம் நின்றிருக்கும் இந்த ஆரணங்கின் மனத்தில் பொங்கிவரும் எண்ண அலைகள் சுமந்துவருபவை துன்ப நினைவுகளா? இல்லை இன்பக் கனவுகளா?

    ஏந்திழையின் எண்ணங்களை எழுத்தில் படம்பிடிக்கும் வேலையை நம் கவிஞர்களிடம் விட்டுவிடுவோம்! நமக்குத் தொழில் அவர்தம் கவிதைகளை இரசிப்பது மட்டுமே!

    ***

    வெளிநாட்டில் வேலைசெய்யும் கொழுநனின் நினைவோடு குலக்கொடியாள் தவித்திருக்க, அவள் தனிமைத்துயரை அவன் காதில்போடவே இந்த அலைகள் இவ்வாறு ஆர்ப்பரித்து ஓடுகின்றன என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    நீலக் கடலின் அலையெல்லாம்
    நேரில் வந்து சேதிசொல்லும்,
    வேலை செய்யும் வெளிநாட்டில்
    விரும்பிச் சென்ற கணவன்நிலை,
    கோல மயிலிவள் தனிமைத்துயர்க்
    கண்ணீர் துடைக்க வந்ததுபோல்
    ஓல மிட்டே அழுதுமீண்டும்
    ஓடிச் செல்லும் அவனிடமே…!

    ***

    ”கைம்மாறு கருதாமல் கருங்கல்லைக் கட்டியணைக்கும் இந்தக் கடலலையானது நம்பிக்கை நீர்தெளிக்க, சுற்றத்தின் அருமையை முற்றாய் உணர்கின்றாள் இந்த மாது” என்று மொழிகின்றார் திருமிகு. ஹிஷாலி.

    விண்ணில் தெறிக்கும்
    சூரியன் வரவில்
    செலவானது எனது
    காலைக் கடன்
    கருணையுடன் முடித்து வைத்த
    உணவுத்துறை
    எழுச்சி முகமாய் தொடரும்
    கல்விப் பணி
    மாமியார் மருமகள்
    கூட்டு முயற்சி
    மாமனாரின் சமூகப் புரட்சி
    அலுவலகப் பட்டி மன்றம்
    ஆண் ஆதிக்கத்திலும் சிறு
    அகிம்சை அன்பு
    இதெல்லாம் முடித்தப் பின்
    ஈவு மீதிக்கு எடுத்துச்
    சென்றது
    மாலை நேர சுற்றுப் பயணம்
    மதிமயக்கும் மல்லிகை வாசம்
    சுட்டெரிக்கும் மணல் மேடு
    கைம்மாறு கருதாமல்
    கருங்கல்லைக் கட்டி அணைக்கும்
    கடல் அலை
    தும்பிக்கையாய் மாறி
    நம்பிக்கை நீர்தெளிக்க
    சுற்றத்தைவிட இன்பம்
    வேறில்லை என்று
    ஐயம் தெளிந்து
    புன்னகைத்தாள்!

    ***

    புத்திரனைப் பறிகொடுத்துச் சித்தம் குலைந்திட்ட சித்திரப்பாவையின் சோகத்தைத் தன் பாடலில் பதிவுசெய்திருக்கின்றார் திருமிகு. வேதா. இலங்காதிலகம்.

    என் பாலனை ஈவிரக்கமின்றி
    ”””’
    விழுங்கிய கடலே
    என்னையும் விழுங்க மாட்டாயா
    ””””
    என்னையும் பயமுறுத்துகிறாயா
    எத்தியெறியும்அலையே அறிவாயா
    ””””
    புத்திரசோகம் எப்டியென்பதை
    சமீபத்தில் விவேக் அன்று
    ”””””
    சக்கரவர்த்தி தசரதன்!

    *** 

    இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைக் கண்டுவருவோம் இனி! 

    வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற வலிநிறைந்த பாடங்கள்தாம் எத்தனை எத்தனை! அதிலொன்று… காதலில் ஏற்படும் தோல்வி. காதலொருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவினும் கைகொடுக்கக் காரிகையொருத்தி காலம் பார்த்திருக்க, அந்தக் காதலனோ அவளைக் கைகழுவிவிட்டுச் சென்றால் அவள் மனம் சிதறிப் போகாதோ?

    சேலையணிந்த சோலையாய்க் காட்சிதரும் பாவையின் காதல் கானல்நீராய்ப் போனதை, ஆசைகள் நீராசையாய் ஆனதைப் பேசும் கவிதை…

    அமுதென்று நினைத்து
    நஞ்சை அருந்தினேன்
    மலரென்று எண்ணி
    முட்களைச் சூடினேன்
    ஆசை அழைத்த வழி சென்றேன்
    நேசமுடன் பேசிய காதலன்
    பாதி வழியில் விட்டுப்போனான்
    பாழும் மனது குழம்பி, புலம்பிப்
    பல நேரங்களில் சஞ்சலித்தது
    என் காதல் ஜெயிக்காமல்
    போனதற்குக் காரணம் இறைவா நீ
    இதோஇந்த அலைகள் ஓடிவந்து
    பாறையில் மோதிச் சிதறியதுபோல்
    என் ஆசைகளும் சிதறிப்போயின…
    கடற்கரையில் ஆரம்பித்த காதல்
    கடற்கரையிலேயே கரைந்துபோனது
    ஆசையை மட்டும் நம்பிப்போனால் நிலைக்காது வாழ்க்கைப்படகு என்பது புரிந்தது
    நான் கவலை மறந்து சிரிக்கிறேன்
    கடற்கரையில் நின்று கவிதை பாடுகிறேன்இன்று!

    கடற்கரையில் நின்று சோககீதமிசைக்கும் சுந்தரியின் மனத்தைக் கவினுறக் காட்டியிருக்கும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன், இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுபெறுகின்றார்.

     ***

    தரைமேல் பிறக்கவைத்த இறைவன் மீனவரைத் தண்ணீரில் பிழைக்க வைக்கின்றான். அவ்வாறு தண்ணீரில் பிழைக்கச்செல்லும் நம் இந்திய மீனவர், இலங்கைப் படையால் அடையும் கொடுமைகள் சொல்லி மாளா! சொல்லில் அடங்கா!

    மீன்பிடிக்கச் சென்ற தன் காதற்கணவன் உயிரோடு மீள்வானா? இல்லை இலங்கைப் படையால் மாள்வானா? எனப் பரிதவிக்கும் பாவையின் ஏக்கத்தைச் சுமந்துவரும் கவிதையொன்று நம் கவனம் கவர்கின்றது. 

    நீலக்கடல்தான்……எம்
    கண்ணீர்த் துளிகளை விழுங்கிய
    நீலக்கடல் தான்…..

    கரையோரம் தவிக்கவிட்டுக்
    கட்டுமரமேறி மீன்பிடிக்கச் சென்றவன்
    கரைக்கு மீண்டுவருவானோஇல்லை
    கட்டுமரமிழந்து கயவர் வலையறுககக்
    கைதாகிக் கண்ணீர்விட்டுக்கதறச்
    சிறைக்குள் அடைபட்டிருப்பானோ….

    சென்றவன் நடுக்கடலில்
    சிறீலங்காக் குண்டடிபட்டு
    செத்தவனாய் வருவானோ
    சிறுபேதை என்செய்வேன்

    வேதனைகள் தீர்க்கவும்
    விரைந்து தீர்வைச் சேர்க்கவும்
    யாரிங்கு வருவாரோ….
    ஆறுதல் தான் தருவாரோ…..

    கரைமேல் தவிக்கவும்
    கண்ணீரில் குளிக்கவும்
    நிலையாய் விதியெனவே
    நீலக்கடல் படைத்ததுவோ….

    கரையோரம் நிற்கும்
    கதியற்ற பெண்ணுக்கு
    கடல்தந்த பாடம் சீற்றந்தான்..
    கடலலையின் சீற்றமல்ல….
    கண்ணீர் அலைகளின் சீற்றந்தான்! 

    திரு. இளவல் ஹரிஹரனின் இக்கவிதைக்கு என் பாராட்டுக்கள்!      

     

     

     

    Share
  • நன்னர் நெஞ்சம்!

    -மேகலா இராமமூர்த்தி

    பெண்களின் உள்ளம் அன்பு வடிவானது; அருள் நிறைந்தது; எனினும், எல்லாத் தருணங்களிலும் எல்லாரிடத்திலும் அவர்களுக்கு அன்பு பிறந்துவிடும்; அருள் சுரந்துவிடும் என்று உறுதி கூறுவதற்கில்லை. காதலுக்கும் இது பொருந்தும். அதனைப் பின்வரும் நிகழ்வு விளக்குகின்றது.

    குறிஞ்சிநிலத் தலைவன் ஒருவன் தலைவி ஒருத்தியின்பால் காதல் கொண்டான். அவளுடைய காதலை விரும்பியவனாய்த் தினந்தோறும் அவள் தன்தோழியுடன் இருக்கும் இடங்களுக்கெல்லாம் அலுப்பின்றிச் சலிப்பின்றி வந்து, அன்பான மொழிகளை அவளிடம் கூறிநின்றான். அதன்பின்னரும் தலைவின் நெஞ்சம் அவன்பால் திரும்பவில்லை; அவனை விரும்பவில்லை. ஆனால் இவற்றையெல்லாம் கவனித்துவந்த தோழியின் நெஞ்சமோ அவன்நிலைகண்டு உருகியது.

    இவ்வாறு நாள்தவறாது தலைவியைக்காண வந்துகொண்டிருந்த தலைவனைச் சின்னாட்களாகக் காணவில்லை. அதுகண்டு வருந்திய தோழி, தலைவியை நோக்கி, ”பெண்ணே! ஒருநாளா? இருநாளா? உன்னைக்காண பன்னாள் (பல நாள்கள்) வந்து பணிமொழிகளை மீண்டும் மீண்டும் கூறி, உன் காதலையும், கனிவையும் எதிர்பார்த்துநின்றான் தலைவன். அவனுடைய இரங்கத்தக்க செய்கைகண்டு (உனக்கு நன்மையையே எப்போதும் எண்ணுகின்ற) என் நன்னெஞ்சு நெகிழ்ந்தது. இப்போதோ மலைமீது தூங்கும் முற்றிய தேனிறால் கீழேவீழ்ந்து மறைவதைப்போல் அவன் காணாமற்போயினான். நமக்குப் பற்றுக்கோடாய்த் திகழ்ந்த, எந்தையான அவன் எங்குச் சென்றானோ யானறியேன்; அதனால் வேற்றுப்புலத்திலுள்ள நல்லநாட்டில் பெய்தமழை பாய்ந்துவருதலால், நம்புலத்து நீர் கலங்கிப்போதல்போல என்னுள்ளம் கலிழ்கின்றது (கலங்குகின்றது)” என்றாள்.

    ஒருநாள் வாரலன் இருநாள் வாரலன்
    பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென்
    நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை
    வரைமுதிர் தேனிற் போகி யோனே
    ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
    வேறுபுல னன்னாட்டுப் பெய்த
    ஏறுடை மழையிற்  கலிழும்என்
    னெஞ்சே.  (குறு- 176)

    ”ஒருநாளா? இருநாளா? பலநாள் வந்தானே உன்னைத்தேடி; உன் அன்பை நாடி” எனும் தோழியின் மொழிகளில், கஜினி முகம்மதுபோல் அயராதுதொடர்ந்த தலைவனின் விடாமுயற்சிக்காகவாவது நீ அவனை ஏற்றுக்கொண்டிருக்கலாகாதா?” எனும் ஆற்றாமை தொனிக்கின்றது.

    இப்பாடலில் கவனிக்கத்தக்க இன்னொரு சொல்லாட்சி ’ஆசாகு எந்தை’ என்பது. ”நமக்குப் பற்றுக்கோடாகிய எந்தை போன்றவன்” என்று தலைவனைத் தோழி அழைக்கிறாளென்றால் அவன்பால் எத்துணைப் பரிவும் பாசமும் அவள் கொண்டிருக்கின்றாள் என்பதனை நாம் உய்த்துணரலாம். தலைவிக்கு எப்போதும் நன்மையையே எண்ணுகின்ற தன் நெஞ்சை ‘நன்னர் நெஞ்சம்” என்று தோழி பெருமிதத்தோடு கூறிக்கொள்வதும் இங்கே கவனிக்கத்தக்கது.

    மலையில் தொங்கிக்கொண்டிருந்த சுவையான தேனடை யாருக்கும் பயனின்றி வீழ்ந்துபோதல்போல், தலைவனின் இனிய காதலும் தலைவியின் காதல் கிடைக்கப்பெறாமையால் பயனற்று அழிந்தது என்பதை இப்பாடலின் உள்ளுறையாகக் கொள்வர்.

    சிறிய பாடலாயினும் ஒவ்வொரு சொல்லிலும் ஆழ்ந்தபொருளை இப்பாடலின் ஆசிரியரும் பெண்பாற்புலவருமான வருமுலையாரித்தியார் பொதிந்துவைத்திருப்பது அவருடைய நுண்மாண் நுழைபுலத்திற்குச் சான்றாகின்றது. இவர் பாடியதாய்ச் சங்க இலக்கியத்தில் இந்த ஒருபாடல் மட்டுமே கிடைத்திருப்பது நம் தவக்குறைவே!

    இந்தத் தலைவனைப் போன்றே நிதமும் தலைவியைச் சந்திக்கவரும் தலைவனொருவன், தன் வாயால் தன்காதலை வெளியிடத் தயங்கியவனாய் வந்துதிரும்பும் காட்சியைக் கலித்தொகை 37-ஆம் பாடலும் அழகாய்ப் பதிவுசெய்திருக்கின்றது.

    கய மலருண் கண்ணாய் காணாயொருவன்
    வயமான் அடித்தேர்வான் போலத் தொடைமாண்ட
    கண்ணியன்
    வில்லன் வருமென்னை நோக்குபு
    முன்னத்திற் காட்டுதல்லது தானுற்ற
    நோய்உரைக் கல்லான் பெயரும்மன் பன்னாளும்… 
    (கலி- 37)

    பேசும் பொருளடிப்படையில் வேறுபட்டாலும், ஒருமை, இருமை, பன்மை எனும் சொற்களின் கட்டமைப்பில் ஒத்திருக்கும்,

    ஒருநாட் செல்லலம் இருநாட் செல்லலம்
    பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
    தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ…
    (புறம்-101)

    என்று ஔவையார் அதியனைப் போற்றிப்பாடிய புறநானூற்றுப் பாடலும் இந்தக் குறுந்தொகைப் பாடலோடு ஒப்பிட்டு உவக்கத்தக்கது.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 58-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    மனங்கவரும் இந்தப் பனங்காய் வண்டியை ஓட்டிச்செல்லும் சிறார்களைக் காண்கையில் நம் உள்ளமும் குழந்தையாய் மாறிக் குதூகலிக்கின்றது.

    nungu vandi

    காலச்சக்கரமும் இந்த வண்டிச்சக்கரங்களைப் போலவே சுழன்றுசெல்லும் இயல்புடையது என்பதை இத்தருணத்தில் நம் மனம் எண்ணிப்பார்க்கின்றது.

    நுங்குவண்டி கண்ட நம் கவிஞர்கள் மனத்தில் நுங்கும் நுரையுமாகக் கற்பனைவெள்ளம் கரைபுரண்டோடத் தொடங்கியிருக்கும். அந்தக் கவிவெள்ளத்தில் நாமும் நனைந்துவரலாம்!

    ***

    ’நொங்குவண்டி பூட்டிக்கிட்டுச் சந்துபொந்தெல்லாம் சுற்றிவரும் சிறுவர்களின் மகிழ்வைத் தன்கவிதையில் கவினுறப் பதிவுசெய்திருக்கின்றார் திருமிகு. ஹிஷாலி. 

    நொங்கு வண்டி பூட்டிக்கிட்டு
    சந்து பொந்து தாண்டி வந்தோம்
    பத்து மரக் காற்றிலும்
    பட்ட துன்பம் தான் மறந்தோம்
    எட்டு திசை போனபின்பும்
    விட்டு மனம் போகலையே
    ஒட்டு மொத்த சிறுவர்களுக்கும்
    உஷ்ணம் தனிக்கும் நொங்கு வண்டி 

    ***

    இற்றைய வாழ்வில், உடலுக்கும் உள்ளத்துக்கும் உறுதிபயக்கும் பழைய விளையாட்டுக்கள் எல்லாம் காணாமற்போய்க் கணினி விளையாட்டுக்களே கதியென்று சிறார்கள் மாறிவிட்டிருப்பது கண்கூடு. அதனை விளக்கும் கவிதை…

    வெப்பம் நிறைந்த கோடையிலே
    விளையா நுங்கு குடித்தபின்னே
    அப்பா லெறிந்த கூந்தலிலே
    அழகு வண்டி தனைச்செய்து
    கொப்பை ஒடித்தே ஓட்டியநாள்,
    கணினி உலகில் மெய்மறக்கும்
    இப்போ துள்ள பிள்ளைகட்கே
    இலாமல் போன பழங்கதையே…!

     *** 

    வெம்மை தணிக்கும் நுங்கையுண்டு அதிலே வண்டிசெய்து ஓட்டிமகிழும் பாக்கியத்தை இழந்துவிட்ட தலைமுறை இது!” என்று இன்றைய குழந்தைகளின் நிலைக்காக இரங்கியுரைக்கும் இக்கவிதையை இயற்றியிருக்கும் திரு. செண்பக ஜெகதீசன் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுபெறுகின்றார்.

    ***

    இயற்கையை மறந்தோம்…கூடவே இயற்கையோடு நம்மை இணைத்துவைக்கும் விளையாட்டுக்களையும்! ”நுங்கே அறியாத் தலைமுறைக்கு நுங்குவண்டி குறித்துமட்டும் என்ன தெரிந்துவிடப்போகிறது? இயற்கையன்னையே என்செயப் போகிறாய் எம் இளைய தலைமுறையை?” எனச் சீற்றத்தோடு வினா எழுப்பும் கவிதை…

    வனங்கள் தொலைந்தது போல நம்
    வாழ்வின் வசந்தங்கள் தொலைந்தனவோ……
    மரங்கள் தொலைந்தது போல நம்
    மனம்லயிக்கும் விளையாட்டுகள் தொலைந்தனவோ…..
    கூடிவிளையாடும் கூத்துகள் தொலைந்து
    கணிணி விளையாட்டில் தனிமைப்பட்டனவோ…..
    காலக்கொடுமையால் இயற்கையைத் தொலைத்து
    மூச்சுத்திணறும் செயற்கையில் வாழ்கிறோம்.
    முன்னோர் காட்டிய பாதை தொலைந்து
    முட்டுச்சந்தில் முட்டிமோதி வாழ்கிறோம்.
    இளந்தலைமுறை மீதொரு இறுக்கத்தை
    எதற்குச் சுமத்துகின்றீர் கல்வியின் பெயரால்
    பள்ளிக்கூடங்கள் சிறைச்சாலைகளா
    மனனஞ்செய வைக்கும் தொழிற்சாலைகளா….
    நுங்கையே மறந்த சிறுவர்க்கு
    நுங்குமட்டை வண்டியோட்டத் தெரியுமா….
    சுற்ற மறந்த பம்பரங்களாய்
    துள்ள மறந்த கோலிக்குண்டுகளாய்….
    தாவ மறந்த கிட்டிப் புள்ளாய்….
    தாண்ட மறந்த குதிரைகளாய்
    பூப்பறிக்க வரமறந்த சிறுமிகளாய்…..
    பாண்டியாட மறந்த நொண்டிகளாய்…….
    சிறுமணல்வீடு கட்டமறந்த சிறுசுகளாய்
    காக்காக்கடி மறந்த வெள்ளந்திகளாய்….
    பல்லாங்குழி விழ மறந்த பட்டுகளாய்….
    தட்டாங்கல் மறந்த தளிர்களாய்……

    இயற்கையை மறந்து இயற்கையை இழந்து
    இயற்கையைத் தொலைத்து இயற்கையைக் கலைத்து
    எங்கெங்கோ திரிகின்றோம்
    இழந்தனவற்றை அறியாமலேயே….
    என்செயப்போகின்றாய் இயற்கையன்னையே….
    எம் இளந்தலைமுறையையே!

    பழைய விளையாட்டுக்கள் அனைத்தும் பொய்யாய்ப் பழங்கதையாய் வழக்கொழிந்துவரும் வேதனையை உணர்வுபூர்வமாய்த் தன் ஆக்கத்தில் சுட்டியிருக்கும் திரு. இளவல் ஹரிஹரனுக்கு என் பாராட்டுக்கள் உரித்தாகுக!

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 57-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    மங்கைய ராகப் பிறப்பதற்கே – நல்ல
    மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா
    பங்கயக் கைநலம் பார்த்தலவோ – இந்தப்
    பாரில் அறங்கள் வளரும் அம்மா!
     என்று மங்கையரைப் போற்றினார் கவிமணி. அத்தகைய மாதவத்தோரான மங்கையர் புன்னகைபூத்த முகத்தோடும், புதுவண்ணங்கள் வழியும் உடலோடும் புகைப்படத்தில் நின்றிருப்பது வாராதுபோல் வந்த வசந்தகாலத்தை வரவேற்கவோ?

    girls with holy colors

    திரு. ராஜ எடுத்திருக்கும் இந்த வண்ணப்படத்தைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். நன்றி இவ்விருவருக்கும்!

    கவிஞர்களின் புத்தாக்கங்களைப் படித்துமகிழும் தருணமிது! புறப்படுங்கள்!

    ***

    ”சாயம்பூசி வசந்தம் கொண்டாடும் இந்த அழகுச் சிறுமலர்களைக் காமுகர்களிடமிருந்து காத்திடுங்கள் கடவுளரே” என்று மங்கையரின் நல்வாழ்வுக்காக மன்றாடுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    சாயம் உடலில் பூசிடினும்
    சாயா அழகுச் சிறுமலர்கள்,
    மாயம் மந்திரம் ஏதுமில்லை
    மாறா வெகுளிப் புன்னகைகள்,
    காயம் மனதில் உள்ளவர்தம்
    காமப் பார்வை தனில்சிக்கிக்
    காயம் படாமல் காத்திடவே
    கணத்தில் வருவீர் கடவுள்களே!

    *** 

    அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் யார் என அறிந்துவருவோம்!

    ’பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்’ என்று பகர்ந்த தெய்வப்புலவன் அவதரித்த தமிழ்நாட்டில் இன்றோ வருணாசிரமத்தின் பெயரால் கருணையின்றி மனித உயிர்கள் காவுவாங்கப்படுகின்றன!  சக மனிதர்களின் உணர்வுகளைப் புண்படுத்தி நம் பண்பாட்டை அழிப்போர் சகத்தில் வாழ்வது மாந்த இனத்திற்கே பெருத்த அவமானம் ஆகும்!

    ”வண்ணங்களால் வசந்தம் பூசிக்கொள்ளும் மனித மனத்தை, எண்ணங்களால் மனிதன் வேறுபடுத்துதல் வேதனைக்குரியது; வண்ணங்களே இயற்கைக்கு அழகூட்டுவன; புதிய சாலங்கள் காட்டுவன. அவற்றை மனிதனின் சுயநலம் சிதைக்கலாகாது” என்று நயமாய் உரைக்கும் கவிதை நெஞ்சைத் தொடுகின்றது!

    வண்ணங்களே இங்கு
    வாழ்க்கையாகின்றன….
    எண்ணங்களால் அதை
    பேதப்படுத்துகிறான் மனிதன்!

    வண்ணங்களால் மனம்
    வசந்தத்தைப் பூசிக்கொள்கிறது….
    வார்த்தைகளால் அதன்
    தட்பவெப்பநிலை மாறுபடுகிறது.

    வண்ணங்களால் இயற்கை
    எல்லையிலா எழில் பெறுகிறது…..
    சுயநலத்தால் மனிதரதைச்
    சிதைத்து விடுகின்றனர்.

    வண்ணங்களால் இறைவனும்
    வடிவழகைப் பெறுகின்றான்……
    மதப்பூச்சால் வேறுபட்டு
    மாகடவுள் நிறமிழக்கின்றான்.

    வண்ணங்களால் சூழுலகுஅதன்
    வடிவம் கெடாது கொண்டாடு பெண்ணே
    வண்ணத்துப்பூச்சிகளை இழந்துவிட்டு
    அவையுதிர்த்த வண்ணங்களால் ஏதுபயன்?

    வண்ணங்களை மனதிலிருந்தகற்றி
    வாழ்க்கையினை வாழ்ந்து பார்!
    புறவுலகின் பூக்களெலாம்
    வண்ணங்களின் பாடம் புகட்டும்!

    இன்னும் பலமுறை
    பேதமிலாது
    வண்ணங்கள் பூசிக்கொள்ளுங்கள்….
    இருக்கின்ற உலகம்
    அடடாவோ…..
    எத்தனை எழில் கொள்ளும்!

    புறவுலகின் பூக்கள் நம் அகவாழ்வுக்கு அழகுசேர்க்கட்டும் என்று இதமாய்ச் சொல்லுகின்ற இனிய இக்கவிதையை இயற்றியிருக்கும் திரு. இளவல் ஹரிஹரன் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுபெறுகின்றார்.

    ***

    வறுமை மறந்து வானவில்லாய் ஆடுங்கள்; சாதி மறந்து சமத்துவ ஹோலி கொண்டாடுங்கள் என்று உற்சாகமூட்டும் கவிதை ஒன்று!

    வறுமை மறந்து சிரித்திடவே 
    வானவில் லாட்டம் ஆடிடுங்கள் !
    பெருமை சிறந்து திகழ்ந்திடவே
       பொறுமை யாட்டம் இருந்திடுங்கள் !
    கருணை கொண்ட விளங்கிடவே 
    கடவு ளாட்டம் மின்னிடுங்கள் !
    சாதி மறந்து வாழ்ந்திடவே 
    சமத்துவ ஹோலியை விதைத்திடுங்கள் !

    எளிய வரிகளில் அரிய வாழ்க்கைத் தத்துவத்தைச் சொல்லியிருக்கும் திருமிகு. ஹிஷாலியைப் பாராட்டுகின்றேன்.

    கவிஞர் பெருமக்களே! கவிதைகளின் வரவு இவ்வாரம் மிகவும் குறைந்திருக்கக் காண்கின்றேன். சிந்தனைச்செல்வம் நிரம்பப்பெற்ற உங்களிடமிருந்து அதிக ஆக்கங்களை வரும் வாரங்களில் எதிர்பார்க்கின்றேன். நன்றி!

     

     

    Share