-மேகலா இராமமூர்த்தி

 

kids with eatable

 

ஈத்துவக்கும் இன்பத்தை இவ்விள வயதிலேயே அறிந்து, அதனை நடைமுறைப்படுத்திவரும் இக்குழந்தைகள் பாராட்டுக்குரியவர்கள். இவ்வரிய புகைப்படத்தை எடுத்திருக்கும் திருமிகு. ஷாமினி, இதனைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருக்கும் திருமதி. சாந்தி மாரியப்பன் ஆகியோர் வல்லமையின் நன்றியறிதலுக்கு உரியவர்கள்.

போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளைப் படித்துக் களிப்போம் இனி!

***

பசியைத் தேடிக் கண்டடைந்து தான்மட்டும் புசிப்பதினும், பிறரின் பசிக்கு உணவளித்து, அவருடலை ஓம்பினாலன்றோ சமூகம் செழிக்கும் என்கிறார் நாமக்கல் திரு. முருகேசன்.

பசியொன்றைக் கண்டெடுத்து
புசிப்பதனால்
என்ன பயன்?
என் பசியை உணவாக்கி
உன் குருதி மெருகேற,
காத்திருக்கிறேன்!
குளிர்ந்தது என் மனம் அன்றி,
இச்சமூகம் செழித்தோங்கவே!
என் அன்புச்சகோதரனே!

***

எப்படி வாழக்கூடாது என்று உற்றாரும் உறவினரும் எனக்குக் கற்பித்தார்களேயன்றி, எப்படி வாழவேண்டும் என்று சொல்லித்தரவில்லை. ஆயினும், வையகத்தைக் கையகத்துள் கொண்டுவரும் உயர்குணமாம் ’ஈகை’ என்னுள் வந்ததெப்படி? எனத் தன்னை வியக்கும் குழந்தையைத் தன் கவிதையில் காட்சிப்படுத்தியுள்ளார் திருமிகு. ஹிஷாலி.

தகப்பனாட்டம்
உதவாக்கரையாக
வளர்ந்து விடாதே
என்றாள் அம்மா! 

தாத்தாவாட்டம்
தண்டமாக
வாழ்ந்து விடாதே
என்றாள் பாட்டி! 

தாயும் தந்தையும் தவிர்த்துத்
தாய் மாமனாட்டம்
சோம்பேறியாக
இருந்து விடாதே
என்றார்கள்
அக்கம் பக்கத்தினர்!  

கடைசி பெஞ்சாட்டம்
அறிவை இழந்து
முட்டாளாகி விடாதே
என்றார் ஆசிரியர்! 

ஆனால்
யாருமே சொல்லாமல்
எனக்குள் எப்படி
வந்தது இந்த ஈகைத் திறன்?

ஒருவேளை
இந்த உலகமே
நம்
கைக்குள்  இருப்பதற்குப்
பெயர்தான்
நட்பின் சுவாசமோ !

***

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் வகையறியாப் பெரியவர்களுக்கு இந்தப் புகைப்படம் ஒரு பாடம் என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன். 

இருப்பதைக் கொடுத்திடும் பழக்கமது
இளமை முதலே வரவேண்டும்,
உருப்படும் வழியிதை உணர்ந்தேதான்
உள்ளதைப் பகிர்ந்தே உண்ணுவதின்
பெருமை தெரிந்தோ தெரியாமலோ
பிள்ளைகள் பிறர்க்குக் கொடுக்குமிந்த
அருமை யான பாடமதை
அறிந்து கொள்வீர் பெரியோர்களே…!

***

பத்து வயதுவரை அண்ணன் தம்பியாய் அன்புகாட்டி வந்தோர், இருபது வயதில் எதிரிகளாய், வெறும் பங்காளிகளாய் மாறும் அவலம் என்று ஒழியும்? என வேதனையோடு வினவுகின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன். 

பாசமும் அன்பும்
பகிர்ந்துண்ணும்
பழக்கமும்
பத்து பதினந்துவயதுவரை
அண்ணனுக்கும் தம்பிக்கும்
இருபது வயதானால்
இருப்பதை இருகூறாக
உருக்குலைக்க போராட்டம்
பங்காளிகளுக்குள்
ஒருவனை ஒருவன்
கருவறுக்க கத்தித்தேடுவதும்
புத்தியைத்தீட்டுவதும் வாடிக்கைதான்
ஒற்றுமையே உயர்வு தரும்
பெற்றோர் சொல் கேட்பீரோ ?
உற்ற உறவையும்
கற்ற கல்வியையும் காற்றில் பறக்க விடுவீரோ? யாரறிவார்?

***

சிறப்பான கருத்துக்களைக் கவி முத்துக்களாய்க் கோத்தளித்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைக் காண்போம்!

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்ட லரிது
என்பது வள்ளுவம்.

இள வயதிலேயே பகுத்துண்ணும் வழக்கத்தைக் குழந்தைகளிடம் பெற்றோர் பழக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் நயனுடையோராய், பயன்மரமாய்ப் பின்னாளில் திகழ்வர்.

’கொடுப்போர்க்கும் இன்பம்; கொள்வோர்க்கும் இன்பம் என்பது அன்பில் மட்டுமே சாத்தியம்; கொடுக்கக் கொடுக்கக் குறையாது, மேலதிகமாய்க் கிடைப்பதும் அன்பு ஒன்றிலேயே நிகழும் அதிசயம்’ என அன்பெனும் அருங்குணத்தை நாவாரப் புகழும் பாவொன்று!

அன்பின் கோப்பையை
ஏந்தும் முகமும்
அன்பின் பகிர்வை
ஏற்கும் முகமும்
எத்தனை கூடுதல் அழகு…!

விரியும் கைகளைக்
காணும்
கண்களும் விரிய
எல்லையற்று விரிகிறது
அன்பின் பசும்புல் வெளி! 

கொட்டிவிடக் கூடாதென்ற
கவனமும் எச்சரிக்கையும்
கைகளில் ஏந்தும் தின்பண்டத்திற்கு மட்டும்தான்
நட்புறவில் தழைக்கும் இன்பத்தில்
கொட்டோ கொட்டென்று
கொட்டிக் கொண்டிருக்கிறது அன்பு! 

ஏனெனில்,
செலுத்தினால் மேலதிகம்
திரும்பப் பெறும் இடம்
அன்பின் அகம்!

ஈகையின் சிறப்பை, அன்பின் அருமையை எளிய வரிகளில் விளக்கியிருக்கும் திரு. எஸ். வி. வேணுகோபாலன் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகின்றார். அவருக்கு என் பாராட்டுக்கள்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *