Author: மேகலா இராமமூர்த்தி

  • நல்வாழ்வை அள்ளித்தரும் வள்ளி!

    -மேகலா இராமமூர்த்தி

    மாந்தஇனம் முதன்முதலில் தோன்றி வாழ்ந்தஇடம் மலையும் மலைசார்ந்த பகுதியுமே என்பது மானுடவியலாளர்களின் கருத்து. இப்பகுதியைத்தான் ’குறிஞ்சி’ என்று குறிப்பிட்டனர் தமிழ்ச்சான்றோர். வானுயர்ந்த மலையும், அம்மலைமீது காய்கதிர்ச்செல்வன் பாய்ச்சிடும் பொன்னொளிக் கிரணங்களும், வெள்ளைப் பட்டாடையைக் கீழே விரித்ததுபோல் மலைமீதிருந்து பாய்ந்துவீழும் அருவிகளுமாய் இயற்கையன்னையின் படைப்புக்கலையின் உச்சம் இந்தக் குறிஞ்சி எனலாம்!

    மலைச்சாரலில் வானுயர ஓங்கிவளர்ந்திருக்கும் மரங்களில் தூங்கிக்கொண்டிருக்கும் நறுந்தேனின் இறால்கள், ”என்னைக்கொஞ்சம் அருந்தேன்! அருந்தேன்! என்று நம்மை வருந்தியழைப்பது போலிருக்கும். கொடிகளில் கணக்கின்றிக் காய்த்துக்கிடக்கும் வள்ளிக்கிழங்குகள், காண்போர் நாவின் சுவையரும்புகளைச் சுண்டியிழுக்கும்! (வள்ளி என்ற பெயரால் நாம் கிழங்கை அழைத்தாலும் அஃது உண்மையில் அதனை விளைவிக்கும் கொடியின் பெயரேயாகும். சினையாகுபெயராய் அதுவே கிழங்குக்கும் வழங்கலாயிற்று.)

    வள்ளிக்கிழங்கு என்றதுமே குறிஞ்சிக் கபிலரின் நறுந்தமிழ்ப்பாட்டு ஒன்று நினைவுக்கு வருகின்றது. அதனைப் பார்ப்போம்!

    குறுநிலமன்னர்களில் பெரும்புகழ்பெற்றவனாய்த் திகழ்ந்தவன் பறம்புமலைத் தலைவன் பாரி. அவனுடைய வள்ளன்மையும், அதனால் அவனடைந்துவரும் வான்புகழும் கண்டு அழுக்காறுகொண்ட தமிழகத்தின் மூவேந்தரும், அவன் பறம்புமலையை முற்றுகையிட்டனர். மலைமீது குடியிருக்கும் பாரியும் அவன் கூட்டத்தாரும் எப்படியும் உணவுதேடி அடிவாரத்திற்கு வந்துதானே ஆகவேண்டும். அப்போது அவர்களை வளைத்துப் பிடித்துவிடலாம் என்பது அவர்களது மனக்கோட்டை. ஆனால் வாரங்கள் கடந்தன; அவை மாதங்களாக மாறின. பாரியோ அவன் குடிகளோ அடிவாரம்நோக்கி அடியெடுத்தும் வைக்கவில்லை. கீழே, மரத்துக்கு மரம் யானையைக் கட்டிவிட்டு மேலேயே அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த மாமன்னர்களின் வியப்புக்கோர் அளவில்லை! ”ஈதென்ன அதிசயம்! பாரியும் பிறரும் உணவுக்கு என்ன செய்கின்றனர்? எவ்வளவுதான் உணவுப்பொருள்களைச் சேமித்து வைத்திருந்தாலும் இதற்குள் அவை தீர்ந்துபோயிருக்கவேண்டுமே!” என்று யோசித்துயோசித்து மனங்குழம்பிக்கொண்டிருந்தனர் மாமன்னர் மூவரும்.

    இவர்களின் குழப்பத்தைத் தெளிவாய் உணர்ந்த பாரியின் ஆருயிர் நண்பரான கபிலர், “தாய்த்தமிழ் வேந்தர்களே! ஈண்டு, நீங்கள் மூவரும் ஒருங்கேகூடி முற்றுகையிடினும், மாவீரன் பாரியை வெல்லவும் முடியாது; அவன் பறம்பைக் கொள்ளவும் முடியாது. உண்டிக்கு நாங்கள் திண்டாடுவோம்; உங்களிடம் உதவிகேட்டு மன்றாடுவோம் என்பதுதானே உங்கள் எண்ணம். அது ஒருநாளும் ஈடேறப்போவதில்லை. என்ன திகைக்கிறீர்! பறம்புமலையின் வளப்பத்தை நீங்கள் அறியமாட்டீர். உழவன் விளைவிக்காமலேயே நான்குவகையான உணவுப்பொருள்களை விளைவிக்கக் கூடியது எங்கள் பறம்பு. ஆம்! வித்திடாமலே இங்குள்ள மூங்கிலின் இலைகளில் நெல்விளையும்; பலா மரங்கள் தீஞ்சுவைக்கனிகளை ஊழ்க்கும்; கொழுவிய வள்ளிக்கொடிகள் கிழங்குகளை வீழ்க்கும்; திணிநெடுங்குன்றமோ தேனை வார்க்கும். ஆதலால் அரசர்களே…!எங்களுக்கு என்றும் வாராது உணவுப்பஞ்சம்! அடையமாட்டான் பாரி உம்மிடம் தஞ்சம்!” என்று கம்பீரமாய் முழங்கினார்.

    …உழவர் உழாதன நான்குபய னுடைத்தே
    ஒன்றே, சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே

    இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே
    மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க்கும்மே
    நான்கே, அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து
    திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே…. (புறம்: 109)

    வள்ளிக்கிழங்குகள் மூன்று வகையின. 

    அவை:
    1. மாவள்ளிக்கிழங்கு

    2. மரவள்ளிக்கிழங்கு
    3. சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆகியன.

     

    sarsaparillarootஇதில் முதலாவது வகையைச் சார்ந்த மாவள்ளிக் கிழங்கே (Smilax ornata or sarsaparilla) நாளடைவில் மாவலிக்கிழங்காகத் திரிந்து, பின்பு மா’காளி’க்கிழங்காகவும் மாற்றம் பெற்றுவிட்டது (எதையுமே கடவுள் பெயரோடு பொருத்திப்பார்ப்பதில் நம் தமிழ்மக்களுக்கு ஓர் அலாதி விருப்பம் போலிருக்கின்றது!).

    இந்நாளைய மக்கள் மாவள்ளி எனுமிந்த மாகாளிக்கிழங்கை ஊறுகாய்ப் போடுவதற்கும், குளிர்பானங்களுக்குமே பெரிதும் பயன்படுத்துகின்றனர். நன்னாரி சர்பத் என்று நாவினிக்கப் பருகுகின்றோமே அதில் ’நன்னாரி’யாய்க் காட்சியளிப்பவர் சாட்சாத் மாகாளியார்தான்!

    தோல்நோய்களைத் தீர்ப்பதிலும், வயிற்றுக்கோளாறுகளைப் போக்குவதிலும்  இக்கிழங்கு திறன்வாய்ந்தது. ஆயுர்வேத மருத்துவத்தில் நீண்டகாலமாகவே பயன்பாட்டிலிருக்கும் கிழங்கு இது. உடலுக்குக் குளிர்ச்சி தருவதோடு இரத்தத்தையும் சுத்திகரிக்கின்றது இக்கிழங்கு. பால்வினை நோய்களைக் குணப்படுத்துவதிலும், டெஸ்டோஸ்ட்ரோன் (Testosterone) எனும் ஹார்மோன் சுரப்பை அதிகப்படுத்துவதிலும் இதன் பங்கு மகத்தானது.

    வள்ளிக்கிழங்கின் மற்றொருவகையே மரவள்ளிக்கிழங்கு (Cassava or tapioca). மாவள்ளியைப் போன்றே இதற்கும் பலபெயர்கள் வழக்கத்தில் உள்ளன. மரச்சீனிக்கிழங்கு என்று நாட்டார்மக்களும், மரவள்ளிக்கிழங்கு என்று நகரத்து மக்களும், கப்பக்கிழங்கு என்று கேரள மக்களும், தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியர்களும் வாஞ்சையோடு அழைப்பது இக்கிழங்கையே. இவையேயன்றி, ‘ஏழிலைக்கிழங்கு’ எனும் எழிலான பெயரும் இதற்குண்டு!

    கிழங்குகளிலேயே மாவுச்சத்து (carbohydrate) அதிகம்கொண்டது cassavaஇந்தக் கிழங்குதான். மிகக்குறைந்த கொழுப்புச்சத்தும், மிகஅதிக அளவிலான புரதச்சத்தும் கொண்ட இக்கிழங்கிலிருந்து கிடைக்கும் புரதத்தில் ‘சிலியாக்’  எனும் நோயை ஏற்படுத்தும் ஒருவிதத் தானியப் புரதமான ‘குளூட்டின்’ இல்லை என்பது குறிப்பிடவேண்டிய ஒன்றாகும். (Gluten is a form of protein found in some grains, which creates an auto-immune disorder Celiac.)

    வர்த்தகத்திற்காகப் பெருமளவில் மாவுப்பொருள் (starch) மரவள்ளிக் கிழங்கிலிருந்தே தயாரிக்கப்படுகின்றது. ஜவ்வரிசி (பாயசம், வடகம் போன்றவற்றிற்குப் பயன்படுவது) தயாரிக்கப்படுவதும் இந்தக் கிழங்கிலிருந்துதான். இக்கிழங்கு புற்றுநோயை ஒழிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகின்றது என்று சொல்லப்படுகின்றது. (More evidences are needed to confirm the anti-cancer activity of Cassava). இக்கிழங்கின் தோல், வேர் மற்றும் இலைகளில் நச்சுத்தன்மைமிக்க சயனைடு இருப்பதால் அவற்றை உண்ணக்கூடாது. (Cassava roots, peels and leaves should not be consumed raw because they contain two cyanogenic glucosideslinamarin and lotaustralin. They liberate hydrogen cyanide (HCN)).

    Ipomoea_batatasவள்ளிக்கிழங்கின் மூன்றாவது வகைதான் இனிப்புச்சுவை நிறைந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு (Ipomoea batatas). இக்கிழங்கில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. நோய்எதிர்ப்புச்சக்தியை மிகுவிக்கக்கூடிய ஆண்டி-ஆக்ஸிடென்டுகள் (anti-oxidants), உடலுக்குத் தேவையான தாதுஉப்புக்களான இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம், சோடியம் போன்றவையும் இதில் நிறைந்துள்ளன. இக்கிழங்கில் காணப்படும் பீட்டா காரட்டீன் (β-Carotene) எனும் கரிமக் கூட்டுப்பொருள் (oraganic compound), முதுமையில் மனிதர்களுக்கு வரக்கூடிய கண்நோய்களைத் தடுக்கின்றது (age-related macular degeneration). இதிலுள்ள கார்போஹைட்ரேட் எளிதில் சீரணிக்காத சிக்கலான வகையைச் சார்ந்திருப்பதால் (complex carbohydrates) இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாகவே உயர்த்தும். ஆகவே, நீரிழிவு நோயாளிகளும் குறைந்த அளவில் இக்கிழங்கை உண்டுவரலாம். உலகில் நீண்ட ஆயுள்படைத்த மனிதஇனங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஜப்பானிலுள்ள ஒகினாவா தீவு (Okinawa Island – Land of longevity) மக்களின் உணவுப்பட்டியலில் சர்க்கரைவள்ளிக்கிழங்குக்கோர் நிரந்தர இடமுண்டு!

    இத்துணை நன்மைகளை அள்ளித்தரும் வள்ளிக்கிழங்குகளைத் தள்ளிவைத்துவிட்டு, நம்மக்கள் உடலுக்குத் தீங்குபயக்கும் விரைவு உணவுகளையும், பிஸ்ஸா, பர்கர் போன்ற மேற்கத்திய உணவுவகைகளையும் அரவணைத்துக்கொண்டிருப்பது வருந்தத்தக்கதே.

    உடல் நலத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் உத்தரவாதம் தருகின்ற வள்ளிக்கிழங்குகளை நம்மனோர் விரும்பியுண்டால் மறலியை வென்று வாழலாம் நன்றாய்!

    Share
  • படக்கவிதைப் போட்டி 44-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி 

    ’வல்லமை’ வாசகர்கள், படைப்பாளர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பசியும் பிணியும் பகையும் நீங்கி
    அன்பும் அருளும் அறனும் ஓங்குக!

    ***

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான புகைப்படத்தை எடுத்திருப்பவர் திரு. பிரேம்நாத் திருமலைசாமி. இப்படத்தைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் வல்லமையின் நன்றியும் புத்தாண்டு வாழ்த்துக்களும் உரியதாகுக!

    smiling baby

    முறுவலிக்கும் முகத்தோடு சிறுவிரலால் தாளமிடும் சின்னஞ்சிறு கிளியே! உனைக் காணும்போது என் உள்ளத்தில் எழுகின்றது ஆனந்தக் களியே!

    இனி, நம் கவிஞர்கள் கோத்திருக்கும் கவிதை மலர்ச்சரத்தின் சுகந்தத்தைச் சுவாசித்து வருவோம்… புறப்படுங்கள்!

    ***

    ’ஆவாரம் பூவாய்ச் சிரித்துக்கொண்டு, இந்தப் பாப்பா நாவாரப் பாடும் பாடல் காதில் தேன்பாய்ச்சுதே!’ என்று உளம்பூரிக்கிறார் திருமிகு. சியாமளா ராஜசேகர்.

    பாவாடைச் சட்டை போட்ட
    ****
    பாப்பாவும் பார்க்குது !
    ஆவாரம் பூவைப் போல
    ****
    அழகாகச் சிரிக்குது !
    நாவாரத் தானும் பாடும்
    ****
    நாடகமும் நடத்துது !
    நோவாமல் தாளம் போட்டு
    ****
    நுள்ளியுள்ளம் இழுக்குது !!

    கால்கொலுசின் சலங்கைச் சத்தம்
    ****
    காதில்தேன் பாய்ச்சுது !
    பால்வடியும் பிள்ளை முகமும்
    ****
    பாங்குடனே இருக்குது !
    மேல்மாடி வீட்டிற் குள்ளே
    ****
    மெய்சொக்க வைக்குது !
    வேல்முருகன் அருளி னாலே
    ****
    விளையாடி மகிழுது !

    *** 

    ’குட்டிக் கவிதையே! உன் நகங்களில் பிறைநிலாக்கள் முகங்காட்டும்; உறக்கத்திலும் குறுஞ்சிரிப்பு சிந்தும் மென்மலரே! இப்போதைய பெருஞ்சிரிப்புக்கு யாது காரணம்?’ என்று வினயமாய் வினவுகின்றார் திருமிகு. கார்த்திகா.

    …மழலையின் மொழி
    குறுஞ் சிரிப்பென்று
    உறக்கத்திலும் புன்னகை வீசும் நீ
    உரக்கச் சிரிப்பது எதைக் கண்டோ

    செல்லச் சிட்டுக்கு
    பட்டு வண்ணப் பூச்சி
    கண்ணில் பட்டதோ
    […]

    தலை கொள்ளா
    உன் கேசம்
    தென்றலின் நேசமடி

    நீ சிணுங்கிச் சிரிக்கையில்
    கொலுசொலிகள் தோற்குமடி
    வெட்கத்தில் பூக்கும்
    விரலோடு பிறை நிலாக்கள்

    வளை குலுங்கும்
    உன் பிஞ்சுக் கரங்கள்
    பூக்கள் தொடச் சிவக்குதே
    பூவிதழ்கள் மோட்சமடையுதடி

    சங்குக் கழுத்தில் தொங்க
    என்ன தவம் செய்துவிட்டது
    இந்த மின்னும் பொன் சங்கிலி

    குட்டிக் கவி நீ
    சிரிக்க ஹைக்கூக்கள்
    சிதறுமடி என் செல்லமே!

     *** 

    இரண்டே சொற்களில் இந்த மழலையின் மணிச்சிரிப்பை வருணித்திருக்கின்றார் திரு. கவிஜி. 

    சித்திரம்
    சிரிக்குதடி…!

    ***

    ’மழலையே…இந்தப் புன்னகை இருக்கப் பொன்னகை எதற்கு? தேங்குரல் இருக்கப் பூங்குழல் இசைதான் எதற்கு?’ என்று அருமையாய் வினவுகின்றார் திரு. ஜெயபாரதன்.

    புன்னகை உள்ள போது
    பொன்னகை வேறெதற்கு ?
    தேங்குரல் கேட்கும் போது
    பூங்குழல் இசை எதற்கு ?
    கொஞ்சும் சிசு ஆடும் போது
    தஞ்சாவூர் பொம்மை எதற்கு ?
    பிள்ளைச் செல்வம் உள்ள போது
    பேரின்பம் வேறெதற்கு ?

    ***

    மழலைச் செல்வத்தின் மனங்கவரும் அழகுகள் அனைத்தையும் ஒவ்வொன்றாய்ச் சொல்லி வியக்கின்றார் திரு. இளவல் ஹரிஹரன். 

    சின்னக் குழந்தை சிரிக்கும் அழகு
    தெய்வம் காட்டும் பேரழகு…..அதன்
    கன்னக் குழியில் கனியும் அழகு
    கவிதை காட்டும் ஓரழகு.
    முன்னஞ் செய்யும் குறும்பு களாலே
    முற்றம் பெறுமே சீரழகு…..மெல்ல
    வண்ண மாகத் தத்தித் தவழ்ந்து
    வரும்போது தோற்கும் தேரழகு.

    முத்தா யுதிர்க்கும் ம்மா வென்னும்
    மொழியில் தோன்றும் தமிழழகு

    […]

    எண்ணத் தொலையா ஏட்டில் விளையா
    மழலைச் சொல்லின் மொழியழகு ….நலம்
    பண்ணும் குறும்பில் தெரியும் அரும்பின்
    பட்டுத் தெறிக்கும் விழியழகு.
    மண்ணும் விண்ணும் மறுக்க வியலா
    மாபெரும் படைப்பின் ஒளியழகு….தெய்வப்
    பண்ணும் கொடுக்கா பலவிசைப் பாட்டில்
    கேட்கும் இன்பக் களிப்பழகே.

    *** 

    ’உன் சிரிப்பே பூபாளம்; தட்டு நீ மிருதுவாய்த் தாளம்!’ என்று சின்னக் கண்மணியைப் பார்த்துப் பண்ணிசைக்கின்றார் திரு. மெய்யன் நடராஜ்.

    தட்டு மிருதுவாய்த் தாளம்
    தரலாம் இசைக்கருவி ஓசை வேதாளம்
    தத்தை உன் மிருது வாய் சிரிப்போ
    தந்திடுமே எப்போதும் ஆசை பூபாளம் 

    *** 

    தன் பாடலுக்குத் தானே தாளம்போட்டு நாட்டியமும் ஆடும் இந்தக் கவின்மழலையைக் கண்டு மலைக்கின்றார் திருமிகு. பி. தமிழ்முகில்.

    கொஞ்சும் கொலுசொலியும்
    மழலை மொழியும் இசையாக
    கேட்போர் மனதை மயக்கி
    சுற்றம் அனைத்தையும்
    தன்வயப் படுத்திக் கொண்ட
    அழகுக் கிள்ளையே !
    உந்தன் இனிய பாடலுக்கு
    நீயே தாளமும் போட்டு
    காலை உதைத்து
    நாட்டியமும் ஆடுகிறாயே !
    உந்தன் புன்னகையில்
    சொக்கிப் போய்
    கண்கொட்ட மறந்து
    கட்டியணைத்து உச்சி முகர
    ஓடிவரும் அன்னையைக் கண்டு
    உந்தன் விழியிரண்டும் விரிகிறதோ ?
    கள்ளமறியா சிறு கிள்ளையே !

    ***

    ’இசைபாடிப் புன்னகைக்கும் இந்தப் பூவின் இன்சொற்கள், மலரும் புத்தாண்டில் நல்ல மாறுதல்களைக் கொணரும்!’ என்று நம்பிக்கை விதைக்கின்றார் திரு. கொ. வை. அரங்கநாதன்.

    பூவொன்று
    இசைப்பாடி
    புன்னகைக்கிறது
    புத்தாண்டை வரவேற்று
    கண்ணசைக்கிறது

    […]

    கற்பத்தில் விளைந்த
    கவிதையொன்று
    முரசு கொட்டி
    கலாமின் கனவுகள்
    நனவாகப் போகுதென்று
    கட்டியம் கூறுகிறது

    மழலையிவள் சொற்கள்
    மலருகின்றப் புத்தாண்டில்
    மாற்றத்தை உண்டாக்கும்
    மகேசனின் மந்திரமட்டுமல்ல
    கனவுகளை நிஜமாக்கும்
    காலதேவனின்
    கட்டளைகளுமாகும்!

     ***

    ’பொக்கைவாய்ச் சிரிப்புடன் ஞானச்சுடரேற்றும் இக்குழந்தை இறைவனின் அருட்கொடையே!’ என்று இன்மொழி பகர்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

    பொக்கை வாய் சிரிப்புடன்
    புதுக்கவிதையாய் புறப்பட்டு
    கள்ளங் கபடமின்றி என் செல்லம்
    தப்புத்தாளங்களில் வாசித்தாலும்
    ஏதோ ஞானச்சுடரென்றோ
    என்முன் விரிந்து தெரிகிறது
    நல்ல பண்புகள் ஓடி விட்ட காலத்தில்
    தீமைகள் ஆட்டம் போடும் உலகத்தில்
    மெல்ல தமிழ் ஊட்டி உன்
    அருளால் அறிவை ஊட்டி
    நாவும் கையும் நல்லனவற்றில்
    துலங்கச் செய்த இறைவா நீ
    ஈந்த இந்த அருட்கொடைக்கோ
    இனிதாய் சொன்னேன் நன்றியடா

    *** 

    மழலையின் மந்தகாச அழகில் மனங்கனிந்து, கவிமலர்களை அள்ளியிறைத்திருக்கும் கவிஞர் பெருமக்களுக்கு நன்றியும், பாராட்டும்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை இனிச் சந்தித்து வருவோம்!

    குழந்தையின் குதலை மொழிகளும், துறுதுறு விழிகளும் மாந்தர்தம் உள்ளங்களை அள்ளுபவை; கொள்ளை கொள்ளுபவை. அதன் மெய்தீண்டலால் உண்டாகும் பேரின்பமோ வார்த்தைகளில் வடிக்கற்பாலதன்று! கள்ளமில்லா குழந்தையின் உள்ளமே இறைவன் குடிகொள்ளும் ஆலயமாகும். சின்னஞ்சிறு கிளிகளாய், பேசும் பொற்சித்திரங்களாய் இல்லங்களில் உலாவரும் குழந்தைகள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்!

    அவ்வகையில், பேசுந்தெய்வமான இந்தச் சிறுகுழந்தை தன் செங்கனிவாய் திறந்து பாடுகையில், அதன் தளிர்க்கரங்கள் போடும் தாளங்கள் சுருதி பிசகினாலும் அவை சுந்தரத் தாளங்களே! வஞ்சமற்ற அதன் பிஞ்சுக் குரலோசையில் விளையும் தேவகானத்திற்குமுன் பக்திப் பாசுரங்களும் பலனின்றிப் போகின்றன!’ என்று குழந்தையைக் கொண்டாடும் ஓர் கவிதை மனவயலில் மகிழ்ச்சியை நட்டது!

    அக்கவிதை…

    பேசும் தெய்வமொன்று
    பாட ஆரம்பித்தது,
    தாளம் போட்டிடும்
    தளிர்க் கரங்கள்..

    இதில்
    பொய் வேடமில்லை
    போலிப் புனைவுகளில்லை..

    தப்புத் தாளங்கள்
    இலக்கணப் பிழைகள்,
    தலைமறைவாயின
    மழலையின் ஆட்சியில்

    நெஞ்சில் வஞ்சமின்றி
    கொஞ்சும் மொழியில்வரும்
    பிஞ்சுக் குரலிசையின்முன்,
    பக்திப் பாசுரங்கள்
    பலனின்றிப் போகின்றன..

    இதோ,
    இதைரசிக்க வந்துவிட்டான்
    இறைவனும் நம்முடன்…!

    இக்கவிதையில், இறைவனையும் குழந்தையின் ரசிகனாக்கியிருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கின்றேன்.

    ***

    குழந்தாய்! நீ ’ஆ’ காட்டும் அழகில் நான் அப்படியே விழுந்தேன்; உன் ’பா’ கேட்டுக் கைதட்ட ஓடிவந்தேன்! பொக்கைவாய்ச் சிரிப்பில் சொக்கவைக்கும் சொக்கத் தங்கம் நீயடி! என்று இந்தப் பெண்மகவைத் தொழுதுபோற்றும் இனிய கவிதை ஒன்று…

    பட்டுப் பாவாடைச் சட்டை மீனாட்சியே!
    குட்டிக்   கொலுசும் கட்டுதடி என்னையே!
    கெட்ட  திருஷ்டியை  வெட்டக் கறுப்பாய்
    பொட்டிட்ட  குட்டிச் சுட்டி ராணியே!
    எடுப்பாய் அமர்ந்த எழிலான தேவதையாய்
    அடுக்கடுக்காய் தாளமிட துடுக்காய்த் தயாரானாய்.
    காட்டுமழகில் அப்படியே விழுந்தேன்.
    பாகேட்டுக் கைதட்டி ஊக்கிட வந்தேன்.

    பொக்கைவாய்ச் சிரிப்பு சொக்கு வித்தையடி!
    சொக்கத் தங்கமே! பெண் பிள்ளையென்றடி
    பொசுக்கவில்லை உலகமுன்னை பெரிய நன்றியடி!
    பெண் பெருமையையேற்று பண்ணிசை ராணியே!
    குழலினும் இனியது குழந்தை மொழி
    மழலையின் மயக்கமது இன்ப வழி
    தொழ வேண்டும்! மழலையின் அரங்கேற்றம்!
    தழலாய் உயரட்டும் தரணியில் புகழுடன்!
     

    பெண் குழந்தையைக் குடும்பச் சுமையாய் நினைக்கும் மனப்போக்கு, நம் சமூகத்தில் இன்னமும் முற்றாய் மாறிவிடவில்லை. இச்சூழ்நிலையில், பெண்குழந்தையைப் போற்றுவதோடு, அதனைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் தன் கவிதையில் நினைவுறுத்திச் சென்றிருக்கும் திருமிகு. வேதா. இலங்காதிலகத்தின் கவிதையைப் பாராட்டுக்குரியதாய்க் குறிப்பிட விழைகின்றேன்.

    மீண்டும் சந்திப்போம்!

     

     

    Share
  • அகந்தையின்றி அரந்தை தீர்ப்போம்!

    -மேகலா இராமமூர்த்தி

    மானுட உயிர்கள் அனைத்திற்கும் பிறப்பு ஒத்தவகையில் அமைந்திருந்தபோதினும், பணம், பதவி, வசதிவாய்ப்புக்கள் இன்னபிறவற்றில் உள்ள வேறுபாடுகள் காரணமாக அனைத்து உயிர்களும் ஒரே வகையான சிறப்பையும், மதிப்பையும் சமுதாயத்தில் பெறுவதில்லை. இன்று நேற்றல்ல…வள்ளுவர் காலத்திலேயே நம் சமூகம் இப்படித்தான் இருந்திருக்கின்றது. அதனால்தான் அவர்,

    ”பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்”
    என்று குறள் எழுதவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

    வளமையும் வறுமையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்போல் சமூகத்தில் என்றுமிருப்பவை. வளமான வாழ்வுபெற்றோர் அனைவரும் எளியோர்க்குதவும் வளமான மனத்தையும் பெற்றிருப்பர் என்று கூறுவதற்கில்லை. அப்படியே உதவிசெய்யப் புகுவோரும் பெரும்பாலும் தம் பெயருக்குக் கிடைக்கப்போகும் விளம்பரத்தையும், தங்கள் கணக்கில் சேரப்போகும் புண்ணியத்தையும் எண்ணியுமே அறச்செயல்களும் தொண்டும் புரிவதாய்த் தோன்றுகின்றது.

    ”அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
    ஆலயம் பதி னாயிரம் நாட்டல்
    பின்ன ருள்ள தருமங்கள் எல்லாம்
    பெயர்வி ளங்கி ஒளிர நிறுத்தல்”
    என்று தருமவான்களின் உட்கிடையை வெளிப்படையாய்த் தன் பாட்டில் கூறுகின்ற பாரதி, இதுபோன்ற தருமங்கள் யாவும் அதைச் செய்வோரின் பெயரை ஒளியோடு நிறுத்த உதவுகின்றனவேயன்றி வேறுபயனில்லை என்று கூறுவதை நாம் எண்ணிப் பார்க்கலாம்.

    ஆலயம் கட்டுபவரை விடுங்கள்! ஆலயத்திற்குக் குழல்விளக்கு போட்டுத்தரும் இறைத்தொண்டர்கூட, அந்தக் குழல்விளக்கின் வெளிச்சம் தவறியும் வெளியில் கசிந்துவிடாதபடி அதில் தன்னுடைய ’பீடும் பெயரும்’ (நடுகல் போன்று) எழுதிவிடுகின்றார். இதனால், அத்தொண்டரின் புகழொளியின்முன் விளக்கின் ஒளியும் குன்றிப்போய்விடுகின்றது.

    அப்படியானால் உண்மையான இறைத்தொண்டு என்பது என்ன?

    இதற்கு விடைபகர்கின்றது தெய்வச்சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம் எனும் பெரிய புராணம். இறைபக்திச் செல்வர்களான தொண்டர்கள் எவ்வாறிருக்கவேண்டும் என்பதை இதன் வாயிலாய் நாமும் தெரிந்து தெளியலாம்.

    thiru”இறைவனின் உண்மைத் தொண்டர்கள் தமக்கு வரும் ஆக்கத்தையும், கேட்டையும் ஒன்றாகவே எண்ணும் இயல்பினர்; அவர்கள் (உலகியல் சார்ந்த) எந்தப்பொருள்மீதும் பற்றுவைப்பதில்லை; அவர்களுக்கு மண்ணாலான ஓடும், விலைமதிப்பில்லா செம்பொன்னும் ஒத்த தன்மையனவே. இத்தொண்டர்களின் பற்றும், பாசமும் பற்றுக்களை அறுக்கும் சிவபரம்பொருள்மீது மட்டுமே! அதைத்தாண்டி, வீடுபேற்றுக்கும் ஆசைப்படாத விறல்வீரர்கள் இவர்கள்” என்று தொண்டர்களின் நல்லியல்பை நமக்கு விண்டுரைக்கின்றார் தொண்டர்சீர் பரவுவார்.

    கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
    ஓடும்
    செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
    கூடும்
    அன்பினில் கும்பிடலே அன்றி
    வீடும்
    வேண்டா விறலின் விளங்கினார் (திரு.தொ.புராணம்– திருக்கூட்டச்சிறப்பு)

    ’ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும்’ தொண்டர் கூட்டமெல்லாம் கதைகளிலும் காவியங்களிலும் மட்டுமே காணக்கூடியவை; நிஜத்தில் அப்படி யாரேனும் இருப்பரோ? என்றொரு ஐயமும் நமக்கு எழுகின்றது அல்லவா?

    நம் ஐயம் நியாயமானதே! தொண்டர்களில் அநேகர் செம்பொன்னையும் ஓட்டையும் ஒன்றாய் நினைக்கும் அளவிற்கு வாழ்வியல் இன்பங்களை வெறுத்தவர்களில்லை; பொன்னாசையை ஒழித்தவர்களில்லை.

    பின், சேக்கிழார் தொண்டர்தம் இயல்பை இவ்வாறு வரையறுத்தது ஏன்?

    சற்றே சிந்தித்தால் இதற்கான விடை புலப்படுகின்றது. ஆம், சேக்கிழாரின் வரையறைக்கு முற்றாய்ப் பொருந்தக்கூடிய இறைத்தொண்டர் ஒருவர் அன்று இருக்கவே செய்தார். மங்கையர்குலதிலகமும், சிவநேசச் செல்வியுமான திலகவதியாரின் அருமைத் தம்பியான ’மருள்நீக்கியாராய்’ப் பிறந்து, சமண மதத்தைச் சிலகாலம் சார்ந்திருந்து, பின்பு தமக்கையின் வழிகாட்டுதலில்படிச் சைவநெறிக்குத் திரும்பிய அருள்நெறிச் செல்வரான திருநாவுக்கரசப் பெருமானே அந்த உண்மைத் தொண்டர்! 

    அந்த அருளாளர், தம் வாழ்வின் இறுதிப்பகுதியில் திருப்புகலூர் எனும் சிவத்தலத்தில் திருமடம் ஒன்றை நிறுவிச் சிவத்தொண்டும், உழவாரப்பணியும் (கோயிலையும் அதன் சுற்றுப்புறங்களையும் குப்பைகளின்றிச் சுத்தம் செய்தல்) புரிந்துவந்தார். தூவெண்மதிசூடிய பிரானின் பெருமையினை அருந்தமிழ்ப் பாக்களாய் இயற்றி, தேவாதி தேவனான அவனுக்கு ஆரமாய்ச் சூட்டி அழகுபார்த்திருந்த வாகீசரின் உலகாயதப் பற்றற்ற நிலையைக் குவலயத்துக்கு உணர்த்தவிரும்பிய இறையனார், நாவுக்கரசர் உழவாரப்பணி செய்துவந்த இடத்தில் மண்ணோடு பொன்னையும் நவமணிகளையும் கலந்திருக்கச்செய்தார்.

    உழவாரம் செய்துவந்த அப்பர்பெருமான், பொன்னும் விலையுயர்ந்த மணிகளும் மண்ணில் மின்னுவதைக் கண்டார். ஆன்மபலங் கொண்ட அந்த வீரர் அவற்றைக்கண்டு சற்றேனும் சித்தத்தில் சபலம் கொண்டாரில்லை. அவையும் அவர் கண்களுக்குக் கோயிலின் தூய்மையைக் கெடுக்கும் குப்பைகளாகவே தோன்றின. ஆதலால் மற்ற குப்பைகளோடு அவற்றையும் தன் உழவாரத்தில் வாரியெடுத்துத் தூரவீசினார்.

    செம்பொன்னும்  நவமணியுஞ் சேண்விளங்க ஆங்கெவையும்
    உம்பர்பிரான் திருமுன்றி ல் உருள்பருக்கை  உடனொக்க
    எம்பெருமான் வாகீச ர் உழவாரத் தினிலேந்தி
    வம்பலர்மென் பூங்கமல வாவியினில் புகவெறிந்தார். (திரு. தொ. புராணம் – திருநாவுக்கரசு நாயனார் புராணம்) என்று நாவுக்கரப்பெருமானின் தூய்மையான தொண்டுளத்தை நாவினிக்கப் பாடிய சேக்கிழார், உண்மைத் தொண்டரென்பவர் இவ்வாறு உயர்வு தாழ்வு பாராச் சமநோக்குச் சிந்தனையாளராகவே இருக்கவேண்டும் எனும் முடிவுக்கு வந்திருக்கவேண்டும்.

    இன்றைய இறைத்தொண்டர்களிடம் இத்துணைத் தியாகவுள்ளத்தையும், பற்றற்ற நிலையையும் நாம் எதிர்பார்க்கவியலாது. எனினும், சுயவிளம்பரமும், தம் தொண்டு குறித்த அகந்தையும் அவர்கள் மனத்தைவிட்டு அகலாதிருப்பதுதான் வியப்பையும் வேதனையையும் ஒருங்கே விளைக்கின்றது.

    அதற்கான சான்று ஒன்றும் சமீபத்தில் நமக்குக் கிடைத்தது. தமிழகத்தில் மழைவெள்ளத்தால் ஏற்பட்ட பேரிடரில் பாதிப்படைந்த மக்களுக்கு உதவிசெய்த சிலர், தங்களுடைய தொண்டு மனப்பான்மையை, தயாள குணத்தைத் தங்கள் மதத்தின் அடிப்படையில் விளம்பரப்படுத்திக்கொண்டது, அவர்கள் மனத்தில் மண்டியிருக்கும் ஆணவத்தை, அடங்காத மதவெறியை அவனிக்கு வெளிச்சமிட்டுக் காட்டுவதாய் அமைந்திருந்தது!

    தொண்டு செய்யுமிடத்தில் மதத்திற்கு என்ன வேலை? அங்கே மனிதம் மட்டுமே அல்லவா மலர்ந்திருக்க வேண்டும்! அப்போதுதான் செய்திடும் அறச்செயல் புனிதமடையும். அதற்கு மனிதனை ஆட்டிப்படைக்கும் ’தான்’ எனும் அகந்தையும், அவனைப் பீடித்திருக்கும் அறியாமை இருளும் முழுமையாய் ஒழியவேண்டும். அவ்வாறு, அகந்தையின்றித் தொண்டுசெய்து ஏழை எளியோரின் அரந்தையைப் (துன்பத்தை) போக்குவோரின் உள்ளத்தில் இறைவன் வாழ்கின்றான்! அங்கே கோயில் கொள்கின்றான்!

    Share
  • படக்கவிதைப் போட்டி 43-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. யெஸ்மெக் எடுத்துள்ள இந்தப் புகைப்படத்தை இவ்வாரப் போட்டிக்கான படமாகத் தேர்வுசெய்து தந்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவரும் வல்லமையின் நன்றிக்கு உரியவர்கள்.

     a man with two kids

    மழலைச் செல்வங்களை இடையில் இடுக்கிக்கொண்டு விரைந்தேகும் இந்த மனிதனின் மறுபக்கம் நம் பார்வைக்குப்படுகின்றது. பிஞ்சுக் குழந்தைகளின் கள்ளமற்ற கனிந்த முகம் கவனம் ஈர்க்கின்றது.

    எங்கே செல்லும் இந்தப் பாதை? என்ற வினாவோடு இதற்கான விடையை நம் கவிஞர்களிடம் தேடிக் கண்டடைவோம்!

    ***
    காட்டுவழி நோக்கிப் பயணிக்கும் இவர்களின் ’காடடைதல்’தான் (வாழ்வைக்) ’கண்டடைதல்’ என்று சுவையான புதிய விளக்கம் தருகின்றார் திரு. கவிஜி

    நகத்தின் கண்களில்
    இரவின் பிளிறல்
    இருந்தும் நுழைந்த
    நொடிவிரிந்தது
    கீற்று
    விலகியது திறப்பு,
    ஒளிர்ந்து மிளிர்ந்த
    காட்டுக்குள்
    பேய் பிடித்து மயங்கியது
    பயணம்….
    மீண்டும் தொடரும்
    காடடைதல்
    என்பது கண்டடைதல்….
    அது அப்படித்தான்,
    வென திறந்திருக்கும்
    அத்துமீறலின் சுரப்பு
    புரியாவண்ணம் நிறைந்த
    கிண்ணம்..
    அது ஏந்தும்
    பாத்திரத்தின் ஆத்திரம்,
    இருந்தும் இனிக்கும்
    இன்னிசை வலை..
    பின் அது கீறும்
    நகம் முழுக்க,
    கண்கள்
    மீண்டும் இரவின்
    பிளிறலில்
    நனையும் எதிர் வினையும்..!

    ***
    ’மழைவெள்ளத்தில் சிக்கித் துன்புற்று செய்வதறியாது நின்ற சின்னஞ்சிறு மழலையரை ’மனிதாபிமானம்’ எனும் பண்பு இந்தப் பெரியவர் உருக்கொண்டு காப்பாற்றியது’ என்று உருகுகின்றார் திரு. மெய்யன் நடராஜ். 

    சென்னை மழைக்குள்ளே சிக்குண்டு சீர்குழைந்த
    அன்னைதந்தைக் குற்ற  தறியாதச்சின்னக்
    குழந்தைகள் செய்வதற்று நின்றிருக்கக் கண்டு
    கிழவர் மனம்பதைத்து காப்பாற்றும் காட்சி
    மனிதாபி மானத்தின் சான்று.

    ***
    தன் வாழ்வுப்பாதையில் துணையாக வரும் உறவுகளைத் துவளாது காக்கும் மனிதரைத் தன் கவிதையில் நமக்கு அறிமுகப்படுத்துகின்றார் திருமிகு. பி. தமிழ்முகில்.

    மகிழ்வான தருணங்களில்
    தலையில்  தூக்கி வைத்து
    கொண்டாடி மகிழ்ந்து
    துவண்ட பொழுதுகளில்
    கைகொடுத்து தூக்கியே
    உற்சாகமூட்டி உறுதுணையாகி
    வாழ்வின் ஒவ்வொரு தருணமதிலும்
    சுமையாக ஓர்பொழுதும் எண்ணாது
    சுகமாக ஏற்றுக் கொண்டு
    எந்தன் வாழ்வின் பாதைதனில்
    துணையாக வரும் உறவுகள்
    அனைவரையும் சுமக்கிறேன்
    எந்தன் நெஞ்சமதில் சுகமாக !
    ஏற்றத் தாழ்வுகள்மேடு பள்ளங்கள்
    அனைத்தையும் கடக்கின்றேன்  – அந்த
    அன்பு உள்ளங்களின் துணையுடனே !

    ***
    இயற்கைப் பேரிடரின் கோரக்கரங்களில் தஞ்சமடைந்த இந்தப் பிஞ்சுகளை, இரக்கமெனும் இனியகுணத்தால் அணைத்துநிற்கும் ஏழைமனிதனிவன்!’ என்று மனம்பூரிக்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

    இயற்கை விதைத்த
    வஞ்சத்தில் பெற்றமகனின்
    உயிர் இழந்தான்
    உடமை இழந்தான்
    எஞ்சியதுஅவன்உயிர் மட்டுமே
    கஞ்சிக்கே வழியில்லாதபோது
    பிஞ்சுகள் இரண்டு வெள்ளத்தில்
    தஞ்சம் ஆகின அவனிடத்தில்
    பஞ்சப் பராரியான அவனோ
    அஞ்ச வில்லை அள்ளியெடுத்து
    கொஞ்சி மகிழ்ந்து நெஞ்சோடுஅணைத்து
    பிஞ்சுகள் இரண்டும்
    பஞ்சாகவும்
    நஞ்சாகவும் கீழ்மைபடாமல் வளர்க்க
    நெஞ்சு நிமிர்த்தி நடந்தான்
    ஈரமான ஏழை மனிதன்
    வெள்ளச்சேதத்தில் செழித்து வளர்ந்தது
    மனிதாபிமானம்.

    ***

    ’இயற்கைக்கு எதிரான எம் வாழ்க்கைக்கு மழையே நீ தந்த பரிசுதான் இந்த அழிவு என்பதை உணர்கின்றோம். ஆயினும், பெரியவர்கள் செய்த பிழைக்கு ஏதுமறியாத பிஞ்சுகளும் அல்லவோ பலியானார்கள்? தீமையிலும் ஓர் நன்மையாய், எம் வாழ்க்கை இருண்டபோது மனிதாபிமானம் மத்தாப்புக் கொளுத்தியதைக் கண்டோம்’ என்று நெகிழ்கின்றார் திரு. கொ.வை. அரங்கநாதன்.

    இருண்டு நீ
    திரண்டபோது
    இருளப்போகிறது
    எம் வாழ்க்கை யென
    எள்ளளவும் எண்ணவில்லை

    இருபதாண்டு உழைப்பினை
    இரண்டே நாட்களில்
    இல்லையெனச் செய்தாய்
    இதென்ன நியாயம்

    நீ ஓடுகின்ற வழியெல்லாம்
    வீடுகளை கட்டியது
    எங்கள் தவறுதான்
    அதற்காக
    எய்தவர்களை விடுத்து
    அம்புகளை ஏன் அழித்தாய்

    பாலுக்கு குழந்தைகள் அழுததையும்
    பச்சை நீர் வேண்டி
    முதியோரகள் கெஞ்சியதையும்
    பார்த்தப் பின்னரும்
    உன் பயங்கரவாத பயணத்தை
    ஏன் தொடர்ந்தாய்

    பித்தம் தலைக்கேறி
    நீ ஆடிய ஆட்டத்திலும்
    புத்தம்புது நம்பிக்கைகள்
    எங்களுக்குள் பூத்திருக்கிறது

    நீறு பூசிய நெருப்பாய்
    மறைந்திருந்த மனிதம்
    விஸ்வரூபம் காட்டி
    வியக்க வைக்கிறது

    இடருற்ற நேரத்தில்
    இளைஞர்களின் எழுச்சி
    நாளைய தேசத்தின் மீது
    நம்பிக்கைக் கொள்ள வைக்கிறது

    […]
    மறுபடியும்
    முகிழ்த்தெழுவோம்
    இம்முறை
    இயற்கை கூறுகளுக்கு
    இடையூறின்றி!

    ***
    புனர்வாழ்வை நோக்கிப் புதுப்பயணம் மேற்கொள்ளும் மனிதனை நம்முன் காட்சிப்படுத்தியுள்ளார் திருமிகு. வேதா இலங்காதிலகம். 

    மேட்டுக் காணி நோக்கியே
    காட்டு வழியென்று ஆண்டவனையே
    கேட்டுச் செல்கிறேன், எஞ்சிய
    பட்டுச் செல்வங்களுடன் புனர்வாழ்விற்கு!
    எட்டுவேன் என்னால் இயன்றவரை!

    எசமானின் பிள்ளையோடென் பேரனையும்
    நிசமாக உயிராய் வளர்ப்பேன்!
    உப்பிட்டவரை உள்ளளளவும் நினையென்று
    செப்பியது அன்று உண்மையோ!
    தப்பாத ஒரு தருணமிதோ!

    பிரளய வெள்ளம் ஊரோடென்னையும்
    புரட்டிப் போட்டது எதுவுமின்றி.
    இரண்டு செல்வங்களோடு என்னையும்
    அரங்கநாதன் வாழச் செய்கிறான்!
    இரட்சகனின் தீர்ப்போடு செல்கிறேன்!

    ***

    தைரியத்தை ஒருபுறமும் நம்பிக்கையை மறுபுறமும் சுமந்துகொண்டு வசந்தத்தைத் தேடி நடைபயிலும் மனிதனைப் பாடுபொருளாக்கியிருக்கின்றார் திரு. சத்தியமணி.

    வறண்ட காடு
    இருண்ட வானம்
    தளர்ந்த கால்கள்
    உலர்ந்த உதடு
    தவிக்கும் பார்வை
    நடுங்கும் தோள்கள்
    சுருங்கும் நெஞ்சம்
    சுவாசம் கெஞ்சும்
    சலித்த சொற்கள்
    தொலைத்த உறவு
    முதிர்ந்த வயது
    முடிந்த பாதை
    இருந்த போதும்
    என் அரவணைப்பில்
    நம்பிக்கை ஒருபக்கம்
    தைரியம் மறுபக்கம்
    ஏளனமாக்க பார்க்காதே என்னை
    இன்னும் என்வசம் வசந்தம்தான்

    ***

    சமீபத்திய மழைவெள்ளப் பாதிப்பைக் கவிஞர்களின் கவிதைகள் நெடுகிலும் காணமுடிகின்றது. மனிதவாழ்வோடு இரண்டறக் கலந்துசெல்லும்போது கவிதைகள் மேலும் கவித்துவம் பெறுகின்றன. பாராட்டுக்கள் கவிஞர்களே!

    அடுத்து, இவ்வாரத்தின் சிறந்து கவிஞரைக் கண்டுவருவோம்! 

    தேடிச் சோறுநிதந் தின்று – பல
    சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
    வாடித் துன்பமிக உழன்று – பிறர்
    வாடப் பலசெயல்கள் செய்து – நரை
    கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
    கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
    வேடிக்கை மனிதரைப் போலே – நான்
    வீழ்வே னென்று நினைத் தாயோ? என்றார் மகாகவி. ஆம்! தேடிச் சோறு தின்பதும், வீண்கதைகள் பேசித் திரிவதுமன்று மானுட வாழ்வின் நோக்கம். வாடிய உயிர்களைக் கண்டு வாடுவதும், அவர்தம் இன்னல் நீக்கி இன்பம் சேர்ப்பதுமே அதன் உண்மை நோக்கம்!

    அவ்வகையில், தாயிழந்து தவித்து நிற்கும் மழலைகள் இருவருக்குத் தானே தாயுமான ஆண்மகன் ஒருவனின் தன்னலமற்ற சேவைகளை, “சுருண்ட வாழ்வின் சுருக்கம் நீக்கும் இழையுமானவன்;  மருண்ட கண்களின் மயக்கம் போக்கும் மருந்துமானவன்” போன்ற சிறந்த சொற்களால் செம்மையாய் விளக்கிச்செல்லும் கவிதையினைக் கண்டு உளம் நெகிழ்ந்தேன்.

    அக்கவிதை…

    தாயைத்தேடிப் பயணம் செல்லும்
    தாயுமானவன்……இரு
    சேய்களை இடுப்பில் ஏந்திச் செல்லும்
    நாயகனானவன்…..பசித்த
    வாயினுக்கமுதம் வழங்கச் செல்லும்
    தாய்மடியானவன்கிடைக்கும்
    காயினும் மேலாய்க் கனியச் செய்யும்
    காலம் ஆனவன்.

    இருண்ட மேகம் திரண்ட வான்பொழி
    மழையுமானவன்…..எழில்
    சுருண்ட வாழ்வின் சுருக்கம் நீக்கும்
    இழையுமானவன்.
    மருண்ட கண்களின் மயக்கம் போக்கும்
    மருந்துமானவன்….சுவை
    அருந்தும் அமுதம் வயிற்றுக்கீயும்
    விருந்துமானவன்.

    யாரும் இங்கே அனாதை யில்லை
    என்றே சொல்லுபவன்……பெற்றோர்
    பேரும் அறியாப் பிள்ளைகள் சொல்லும்
    பெயரும் ஆனவன்.
    வேரைத் தேடி விருட்சம் என்றும்
    வியர்த்துப் போகுமோ….மனம்
    சேரும் இடத்தைச் சிந்தனையின்றிச்
    சேர்தல் கூடுமோ

    வாழும் வரைக்கும் பூமி நமக்கு
    வாழ இடங்கொடுக்கும்….உணர்வு
    சூழும் வரைக்கும் சாமி இங்கு
    சுகத்தை நமக்களிக்கும்
    பாழும் எண்ணப் பாழ்கிணற்றினில்
    பார்வை விழவேண்டாம்….நாம்
    வாழ்வோம் என்னும் மந்திரச் சொல்லே
    வாழ்க்கைப் பாடம் ஆகட்டும்.

    பாதை நீளும் பயணம் தொடரும்
    என்றே காட்டுபவன்….அவன்
    பார்க்கும் பார்வையில் சோர்வை நீக்கிச்
    சுடரைக் கூட்டுபவன்.
    வாதை அழிக்கும் வாழ்வைக் காட்டும்
    வழியுமானவன்……எல்லோர்
    வேதனை ஒழிக்கும் வேதஞ் சொலுந்தாய்
    மொழியுமானவன்.

    இந்த இனிய கவிதையை வடித்துத் தந்திருக்கும் திரு. இளவல் ஹரிஹரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவிக்கின்றேன்.

    ***

    கிராம வாழ்வை வெறுத்து நகரமெனும் நரகம் சென்று வாழ்வைத் தொலைக்கும் இளைய சமுதாயத்தின் அவலம் பேசுகின்றது மற்றொரு கவிதை.

    ”ஒரு நாட்டின் இதயம் அதன் கிராமங்களில்தான் வாழ்கின்றது” என்றார் மகாத்மா காந்தியடிகள். நம் இளைஞர்கள் அதனை மறந்ததேனோ?

    பாடுபட்டுப்
    படிக்கவைத்தேன் மகனை..

    படித்த படிப்புக்கு வேலைதேடிய
    பட்டணத்தில் கிடைத்தது,
    வேலையுடன்
    வாழ்க்கைத்துணையும்..

    தாயில்லாப் பிள்ளையெனத்
    தன்போக்கில் விட்டதாலே,
    இன்று
    தாய்மண்ணையே மறந்துவிட்டான்..

    பட்டிக்காடு வேண்டாமாம்,
    பட்டணத்தில் வீடுகட்டி
    பகட்டாய் வாழ்ந்திடவே
    காடுமேடு நிலத்தைவிற்று
    காசுகொடு என்றுவந்தான்..

    கேட்டபடி
    கொடுத்துவிட்டேன்,
    குடிசையொன்று எனக்காக
    வைத்துக்கொண்டு
    கிராமத்திலே தங்கிவிட்டேன்..

    பட்டணத்தில் மழைவெள்ளம்
    பேரழிவு என்றார்கள்,
    பதறி ஓடினேன்..

    பார்த்ததங்கே
    எங்கும் ஓலம்,
    எல்லாம் அழிந்த கோலம்..

    எனக்கு,
    எல்லாம் போச்சு
    கிடைத்தது
    என்னிரு பேரப்பிள்ளைகள்தான்..

    இவர்களாவது
    என்பேச்சு கேட்பார்களா
    இனிய வாழ்வு வாழ்வார்களா..

    கண்ணீர்க் கடலில்
    நம்பிக்கைப் படகில்
    நான் போகிறேன்
    கிராமம் நோக்கி…!

    கிராம வாழ்வின் அருமை பேசும் திரு. செண்பக ஜெகதீசனின் இந்தக் கவிதையைப் பாராட்டுக்குரியது என்று தெரிவிக்கின்றேன்.

    பங்குபெற்ற அனைவருக்கும் என் நன்றி!

    Share
  • கானப்பேர் தந்த மானவீரர்கள்!

    -மேகலா இராமமூர்த்தி

    சங்கம் வைத்துத் தமிழ்வளர்த்த பாண்டிய நாடு வீரத்துக்கும் விளைநிலமாய்த் திகழ்ந்தது. அந்நாட்டில் ஆட்சிபுரிந்த குறுநில மன்னர்கள் பலர் பெருவீரமும், அதற்கிணையான ஈரமும் மிக்கவர்களாய் வாழ்ந்திருந்தனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் வாயிலாய் அறிகின்றோம்.

    அவ்வீர மண்ணில் நிலவளமும் நீர்வளமும் நிறைந்த ஊர்கள் பலவுண்டு. அத்தகைய வளமிகு ஊர்களில் ஒன்றுதான் ‘கானப்பேர்.’ எழிலால் மட்டுமின்றி எயிலாலும் (மதில்) சிறப்புப்பெற்றது அவ்வூர். அப்பகுதியை ஆண்டுவந்தான் குறுநில மன்னன் ஒருவன். அவன் பெயர் ’வேங்கைமார்பன்’ என்பதாகும். தோள்வலியும் வாள்வலியும் கொண்ட பெருவீரனான அவன், வான்தொடும் உயரத்தோடு கூடிய எயிலையும், காவற்காடுகளையும் அரணாய்க் கொண்ட வளமனையில் வாழ்ந்துவந்தான். வன்மையும் வனப்பும் மிக்க அந்த எயிலானது ‘கானப்பேரெயில்’ என்று இலக்கியங்களில் குறிக்கப்படுகின்றது.

    அந்நாளைய அரசர்கள், தம்மோடு முரணியோரிடமிருந்து (பகைவர்) தம்மையும், தம் நாட்டையும் காப்பதற்காகப் பல்வேறு அரண்களைக் கொண்டிருந்தனர். அவற்றில் சில இயற்கையாய் அமைந்தவை; சில செயற்கையாய் அரசர்களால் அமைக்கப்பட்டவை.

    ”மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
    காடும் உடைய தரண்”
    என்று அரண்களை அழகாய் வகைப்படுத்துவார் வள்ளுவப் பெருந்தகை. அவ்வகையில், நாட்டைச் சுற்றியிருக்கும் கடல், மலை, காடு போன்றவை இயற்கையாய் ஒரு நாட்டிற்கு அமைந்திருக்கும் அரண்கள். அவையேயன்றி, பெரிய மதில்கள், அகழிகள் (எனும் செயற்கை நீர்நிலைகள்) முதலியவற்றை ஏற்படுத்தியும் தங்கள் நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்துவர் அரசர்கள்.

    பேரெயிலைப் பாதுகாப்பாய்க் கொண்டு ஆட்சி புரிந்ததாலேயே தருக்கும் செருக்கும் மிக்கவனான் வேங்கைமார்பன். அப்போது மதுரையில் ஆட்சிபுரிந்துவந்தான் பாண்டிய மன்னன் ’உக்கிரப்பெருவழுதி’ என்பான். உக்கிரமான கோபத்தோடு பகைவர்களைப் பந்தாடும் மாவீரம் பொருந்தியவன் அவன். இப்பாண்டிய மன்னன் காலத்தில்தான் அதிசயிக்கத்தக்க வகையில் தமிழகத்தின் மூவேந்தரும் ஒற்றுமையாய் இருந்திருக்கின்றனர்(!). இதனைக் கண்ணுற்று மகிழ்ந்த அவ்வையார் எனும் பெண்பாற்புலவர் இதுபோன்ற ஒற்றுமையோடு இவர்கள் என்றும் வாழவேண்டும் என்று வாழ்த்திப்பாடிய பாடலொன்று புறநானூற்றில் (புறம்: 367) இடம்பெற்றுள்ளது.

    வீரமும், பெருவேந்தர்களின் நட்பும் கொண்ட வழுதியோடு யாது காரணத்தாலோ வேங்கைமார்பனுக்குக் கடும்பகை ஏற்பட்டுவிட்டது. அதன் விளைவு பெரும்போராய் வெடித்தது!

    கானப்பேரில் நிகழ்ந்த அப்போரில் உக்கிரப்பெருவழுதி வலிமைமிகு கானப்பேரெயிலை முற்றுகையிட்டு அதனைக் கைப்பற்றிவிட, வேங்கைபோல் வீரப்போர் புரிந்தும் தன் வீரம் வென்றியை விளைவிக்காததை உணர்ந்த வேங்கைமார்பன், மாறுகோலம் பூண்டு கானப்பேரைக் கடந்து ஓடிமறைந்தான்!
    வெற்றிவாகை சூடிய பாண்டியனின் மீனக்கொடி கானப்பேரில் உயரப் marudu brosபறந்தது!

    ”உக்கிரப் பெருவழுதியால் கைப்பற்றப்பட்ட கானப்பேர், கொல்லனுடைய காய்ச்சிய இரும்பில்பட்ட நீர்த்துளி போன்றது; வெம்மையான இரும்பால் உண்ணப்பட்ட நீர் எவ்வாறு மீளாதோ அதுபோல் கானப்பேரும் இனி வேங்கைமார்பனிடம் மீளாது!” என்று வழுதியின் வெற்றிச் சிறப்பை வியந்து பாடியுள்ளார் ஐயூர் மூலங்கிழார் எனும் நல்லிசைப் புலவர்.

    புலவரை யிறந்த புகழ்சால் தோன்றல்
    நிலவரை இறந்த குண்டுகண் கழி
    வான்தோய் வன்ன புரிசை விசும்பின்
    மீன்பூத் தன்ன உருவ ஞாயில்
    கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை
    அருங்குறும்பு உடுத்த
    கானப் பேரெயில்
    கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
    இரும்புண் நீரினும் மீட்டற்கு அரிதென
    வேங்கை மார்பன் இரங்க வைகலும்
    ஆடுகொளக் குறைந்த தும்பைப் புலவர்
    பாடுதுறை
    முற்றிய கொற்ற வேந்தே
    இகழுநர் இசையொடு மாயப்
    புகழொடு விளங்கிப் பூக்கநின் வேலே. (புறம்:21)

    அதுமுதல், உக்கிரப்பெருவழுதி ’கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி’ என்று போற்றப்பட்டான். போரில் வெற்றித் திருமகளைத் பற்றிடத் தவறினாலும், கானப்பேர் தந்த வேங்கையாம் வேங்கைமார்பனின் வீரம் வழுதியின் வீரத்துக்குக் குறைந்ததன்று!

    எயிலால் பெயர்பெற்ற கானப்பேர், ’திருக்கானப்பேர்’ எனும் பெயரோடு பாண்டிநாட்டுச் சிவத்தலங்களுள் ஒன்றாகவும் விளங்கும் பெருமைக்குரியது.

    காலம் மாறியது; கூடவே கானப்பேரின் பெயரும் மாற்றம் கண்டது. ஆம், சங்க காலத்தில் கானப்பேராக இருந்த அவ்வூர், பின்னாளில் ’காளையார்கோயில்’ என்று வழங்கப்படுவதாயிற்று. பெயர் மாறியபோதினும் அப்பகுதி மக்களின் வீரம் மாறவில்லை!

    காளையார்கோயிலின் வீர வரலாற்றிற்குச் சிறப்புச் சேர்த்தனர் சகோதரர்கள் இருவர்! 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கு எதிராகப் புரட்சிசெய்துப் பரங்கியரை எதிர்த்த முன்னோடிகளாய்த் தமிழத்தில் திகழ்ந்தவர்கள் இவர்களே. அஞ்சாமையைத் தம் உடைமையாய்க் கொண்டிருந்த இவ்வீரர்கள், தம் நெஞ்சுரத்தாலும் நாட்டுப்பற்றாலும் வெள்ளையருக்குச் சிம்ம சொப்பனமாய்த் திகழ்ந்தனர்.

    அவர்கள் வேறுயாருமல்லர்! சிவகங்கைச் சீமையின் சிங்கங்களாய் இன்றளவும் போற்றப்படும் ’மருது சகோதரர்களே’ அவர்கள்! இவ்விருவரில் மூத்தவர் ’பெரிய மருது’ (இவருக்கு வெள்ளை மருது என்ற பெயருமுண்டு) என்றும், இளையவர் ’சின்ன மருது’ என்றும் மக்களால் அழைக்கப்பட்டிருக்கின்றனர். (In his book ‘A History of Tinnevelly’, Bishop R. Caldwell says, Marudu was their family title, not a personal name). காட்டுவேட்டையில் ஆர்வம் மிக்கவராயிருந்த பெரிய மருது, நாட்டு நிர்வாகத்தில் சிறிதும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஆகவே, ஆட்சிப்பொறுப்பை மாட்சியோடு செய்துவந்தவர் சின்ன மருதுவே!

    காளையார்கோயில் வட்டத்திலுள்ள ’சிறுவயல்’ எனும் ஊரில் அரண்மனை அமைத்து ஆட்சிசெய்துவந்த சின்ன மருது, குடிகள் போற்றும் கோனாய்த் திகழ்ந்திருக்கின்றார். மருதுவை நாடித் தமிழ்ப்பாவலர்கள் பலரும் வந்து பாடிப் பரிசில் பெற்றுச் சென்றிருக்கின்றனர். மருது சகோதரர்கள் ஆட்சியில் காவல் சிறப்பாய் இருந்தமையால் மக்கள் கவலையேதுமின்றிக் களிப்போடு வாழ்ந்திருந்தனர். ”வெள்ளிநிலா வானில் விளையாடும் நள்ளிரவு வேளையில் காட்டுவழியில் சென்றால்கூடக் கள்ளர்பயம் ஏதுமில்லை எம் தலைவனின் ஆட்சியில்” என்று குடிகள் சின்ன மருதுவைக் கொண்டாடினர். சகோதரர்களை ’மருதுபாண்டியர்’ என்றே மக்கள் அன்போடு அழைத்துவரலாயினர்.

    மருதுபாண்டியர், காளையார்கோயிலில் ஆட்சிபுரிந்துவந்த அதேசமயத்தில், நம் இந்தியாவோ அந்நியரான ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. மருதுவின் ஆட்சியின்போது, அவர் மாளிகையில் விருந்தினனாய்த் தங்கியிருந்த ஜெனரல் வெல்ஷ் (General Welsh) எனும் ஆங்கிலப் படைத்தலைவன் ஒருவன் தன்னுடைய நூலில் சின்ன மருதுவைப் பற்றிப் பின்வருமாறு செப்புகின்றான்:

    ”சின்ன மருது காட்சிக்கு எளியவர்; கடுஞ்சொல் அற்றவர்; கருணை மிக்கவர். இவரது தலையசைப்பையே சட்டமாக மதித்தனர் மக்கள். இவருடைய அரண்மனையில் ஒரு காவலாளிகூடக் கிடையாது. யார் வேண்டுமானாலும் உள்ளே செல்லலாம்; வெளியே வரலாம். அத்துணைச் சுதந்திரம் அங்கே நிலவியது!”

    அடையா நெடுங்கதவமாய் அனைவருக்கும் திறந்தே இருந்திருக்கின்றது மருதுவின் அரண்மனைவாயில் என்பதை மேற்காணும் விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன அல்லவா?

    நாற்பது மைல் சுற்றளவுள்ள மருது சகோதரர்களின் நாட்டின் நடுவே அமைந்திருந்தது காளையார் கோட்டை. அதனைச்சுற்றி ஆடு, மாடுகளைத் தம் செல்வமாய்க் கொண்ட முல்லைநிலத்து மக்கள் பல்லாயிரவர் வாழ்ந்திருந்தனர். வீரத்தில் தம் தலைவனுக்குச் சற்றும் சளைக்காத அம் மறக்குடியினர், மாற்றார் படையெடுத்துவந்தால் வேலையும், வாளையும், குத்துக்கோலையும், துப்பாக்கியையும் தூக்கிக்கொண்டு புறப்படுவர் போர்முனை நோக்கி; அழிப்பர் பகைவர் படையைக் கடுமையாய்த் தாக்கி!

    மருது சகோதரர்கள், பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரரான ஊமைத்துரையோடு (இவர் கட்டபொம்மனின் சகோதரர்) நட்பு பூண்டிருந்தனர். இவர்கள் அனைவருமே அன்னை பூமியை அந்நியனுக்கு அடகுவைக்க விரும்பாத மானவீரர்கள் ஆவர். ஆதலால் அந்நியரின் சீற்றத்துக்கு ஆளாயினர்; தமக்கு அடிபணிய மறுத்த காளையார்கோயிலைக் கைப்பற்ற விழைந்தனர் வெள்ளையர். ஆனால் அரணமைந்த அவ்வூரைப் பிடிப்பது அத்துணைச் சுலபமான காரியமாய் இருக்கவில்லை அவர்களுக்கு!

    வழிமறித்துநின்ற காடுகளைக் கொன்றாலொழியக் கோட்டையை நெருங்கமுடியாது என்ற நிலை. பல மைல் தூரத்துக்குப் பரவியிருந்த அந்தக் காட்டையழிப்பது வெள்ளையருக்குச் சாத்தியப்படாத நிலையில், அக்காட்டில் மறைந்திருந்த மருது சகோதரர்களும், அவர்தம் மக்களும் ஆங்கிலப்படையைக் கடுமையாய்த் தாக்கினர். இதனால் மனச்சோர்வுற்ற ஆங்கிலேயர், நேரிய வழியில் மருது சகோதரர்களை வீழ்த்தமுடியாது என்றுணர்ந்து, தமக்கே உரித்தான நரித்தனத்தால் அவர்களை வெல்லக் கருதினர். அப்பகுதியைச் சேர்ந்த மறக்குலத் தலைவன் ஒருவனை அவ் வட்டத்திற்குரியவன் என்று பட்டங்கட்டி அவன் மூலமாக மருது சகோதரர்களை மடக்கிப் பிடித்தனர் என்று சொல்லப்படுகின்றது. (மருதுசகோதரர்கள் பிடிபட்டது குறித்து வேறுவிதமான செய்திகளும் சொல்லப்படுகின்றன.)

    பிடிபட்டதற்கு யார் அல்லது எது காரணமாயிருந்தபோதிலும், தம் இன்னுயிரைத் தந்து, தமிழனின் மானத்தைத் தலைநிமிரச் செய்தவர்கள் இச் சோதரர்கள் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

    ஆங்கிலேயரிடம் பிடிபட்டபோது, அன்னை பூமியின் விடுதலைக்காகத் தாம் உயிரழிக்கவிருப்பது குறித்துப் பெருமிதமும் மகிழ்ச்சியுமே அடைந்தனர் மருது சகோதரர்கள். அதேநேரத்தில், எக்காரணமுமின்றித் தம் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பிள்ளைகளைக் கும்பினியார் கொல்லமுயன்றதை ஏற்கமுடியாதவர்களாய், “ஐயா! வயதில் இளையவர்களான இப்பிள்ளைகள் உமக்குச் செய்த தீங்குதான் என்ன? இவர்களை எதற்காகக் கொல்ல முற்படுகின்றீர்?” என்று வெள்ளையரை வினவியிருக்கின்றனர்.

    மலையமானின் சின்னஞ்சிறு பிள்ளைகளை (மலையமான்மீது கொண்ட பகையால்) யானையின் காலால் இடறமுற்பட்ட கிள்ளிவளவனிடம் இதே போன்றதொரு கேள்வியை எழுப்பினார் கோவூர்கிழார் எனும் புலவர் பெருந்தகை. வளவன் சிந்தித்தான்; தகப்பனோடு ஏற்பட்ட பகைக்குப் பாவமேதும் அறியாத பச்சிளம் பிள்ளைகளைப் பலியிடுவது முறையன்று என்று தன்னுடைய கொலை முயற்சியைக் கைவிட்டான் என்கின்றது சங்க இலக்கியம். ஆனால் அத்தகைய கருணையுள்ளத்தை இரக்கமேயற்ற அரக்கர்களான வெள்ளையரிடம் நாம் எதிர்பார்க்க முடியுமா? மருது சகோதரர்களின் கோரிக்கை, செவிடன் காதில் ஊதிய சங்காய்ப் பயனற்றுப்போனது.

    1801-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் நாள் மருது சகோதரர்களைத் தூக்கிலிட்டுக் கொன்றது வெள்ளை அரசு. இவர்களோடு, ஊமைத்துரை, மருது சகோதரர்களின் உறவினர்கள், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என 500-க்கும் மேற்பட்டோரை ஆங்கில அரசாங்கம் ஈவு இரக்கமின்றிக் காவு கொடுத்திருக்கின்றது. நாட்டு விடுதலைக்காக எத்துணை வீரர்களைக் களபலியாக்கியிருக்கின்றோம் என்பதை அறிய நெஞ்சு பதைக்கின்றது.

    நண்பர்களே! கானப்பேரின் ’பெயரை’ இலக்கியத்தில் நிலைநிறுத்திய பெருமைக்குரியவன் வேங்கைமார்பன் என்றால், காளையார்கோயிலாக மாறிய அவ்வூரை இந்திய வரலாற்றின் பொன்னேடுகளில் இடம்பெறச்செய்த பெருமைக்குரியவர்கள் மருது சகோதரர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

    *** 

    கட்டுரைக்கு உதவியவை:

    1. https://ta.wikipedia.org/wiki/மருதுபாண்டியர்
    2. http://www.kalachuvadu.com/issue-128/page52.asp
    3. A History of Tinnevelly – Bishop R. Caldwell
    Share
  • படக்கவிதைப் போட்டி 42-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. வெங்கட்சிவாவின் புகைப்படத்தை இவ்வாரப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றி.

    goats

    புகைப்படத்துள் ஓர் ஓவியமாய்ச் சுவரை அலங்கரித்திருக்கும் இந்த ஆட்டுக்குட்டியின் உருவம் அனைவர் கவனத்தையும் கவர்வதாய் உள்ளது. அந்தக் கோட்டோவியத்தால் ஈர்க்கப்பட்டுதான் இந்த ஆடுகளும் தம் பார்வையை அங்கே பதித்திருக்கின்றன போலும்!

    இனி, இவ்வாரப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளில் நம் பார்வையைச் செலுத்துவோம்!

    ***

    ’உன்னைப் பேணிய பெற்றோரைப் புறக்கணிக்கும் மானுடனே! உயிரற்ற ஓவிய ஆட்டிக்குட்டியின் மீதும் தாய்ப்பாசத்தைக் தயங்காமல் காட்டிடும் இந்த ஆட்டிடமிருந்து கற்றிடு பாசத்தின் பெருமையை! என்று அறிவுறுத்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

     

    படத்தில் குட்டியைப் பார்த்தாலும்
    பொம்மை உருவில் கண்டாலும்,
    தடங்க லின்றி ஆடதுவும்
    தாய்மைப் பாசம் காட்டிடுதே,
    இடைஞ்ச லென்று பெற்றோரை
    எங்கோ அனுப்பிடும் மானிடனே,
    கிடைக்குமுன் உனக்கும் இதுபோல
    கற்றிடு ஆட்டிடம் பாசத்தையே…!

    *** 

    ’அன்பு ஆடே! சுவரை முகர்ந்து பார்க்கும் உன் உள்ளக்கிடக்கைதான் என்ன? உன் இனம் ஒன்று சுவரில் தென்படுகின்றதே என்ற வாஞ்சையா? இல்லை…கண்ணில் தென்படுவதை உண்டுதான் பார்ப்போமே… என்ற கொலைச் சிந்தனையா?’ என்று ஐயத்தோடு வினவுகின்றார் திருமிகு. கார்த்திகா.

     

    …ஈன்ற குட்டிகளில்
    தொலைந்து விட்ட
    ஒன்றைக் காண்கிறாயோ

    உன் குலச் சாயல்
    மிளிர்கின்றதோ இதில்
    வாசம் தேடுகிறதா மனம்

    பின் நிற்கும்
    குட்டியை முன்னிருந்து
    முகர்கின்றாயோ!

    இல்லை எதுவாகினும்,

    உண்டு பார்த்தால் என்னவென்று
    சில கொழுத்த ஓநாய்களின்
    தீச் சிந்தையை மட்டும் உன்னில் ஓடவிட்டு
    கறையாக்கிக் கொள்(ல்லா)ளாதே !

    *** 

    சித்திரத்தில் தன் புத்திரனைத் தேடும் தாயாட்டின் துயரைக் கவிதையாய் வடித்திருக்கின்றார் திரு. மெய்யன் நடராஜ்.

    சித்திரத்தில் ஏதேனும் பத்திரமாய் நிற்குமென்று
    புத்திரத்தைத் தேடுகின்ற தாயாடுகத்திகத்தி
    சுத்துமது கத்திக் கிரையா னதறியா
    பித்திதேடல் தாய்மைப் பிணி.

    *** 

    விலங்குகளை இரக்கமின்றிக் கொன்று புசிக்கும் மனிதனின் அரக்க குணத்தை, பிரியாணிக்காகத் தன் பிரியமான குட்டியைப் பறிகொடுத்த ஆடொன்று, உயிரோடிருக்கும் தன்னுடைய மற்றொரு குட்டிக்கு விளக்கிச்சொல்வதைப் பாடுபொருளாக்கியிருக்கின்றார் திரு. இளவல் ஹரிஹரன்.

    நேற்றைய பிரியாணியில்
    தொலைந்து போன குட்டியை
    சித்திரமாய் வரைந்து
    தொலைத்தவன் எவன்…..

    தாய்மையின் வாசம்
    நுகருமுன்னமே
    தலைகொடுத்து பலியான
    பலிபீடத்தைப் போட்டுடைப்போம்.

    சித்திரத்தைப் பாரடி என்
    செல்லக் குட்டி ஆடே….
    பத்திரமாய் இருக்க உனக்கு
    பாடங் கற்பித்துள்ளான்….

    விதிவசமாய் இங்கே
    விலையில்லாப் பொருளானோம்….
    பெருமழையில் தப்பித்தோம்….
    பிழைக்க வழியில்லா
    சம்சாரியின் துயர்தீர்ப்போம்..
    சந்தையிலே விலைபோய்
    சமயத்தில் அவர்க்குதவும்
    சிந்தைமிகக் கொள்வோம்….

    நாளை
    எந்தப் பாத்திரத்தில் வெந்து
    எவர்க்கு இரையாவோம்
    யாரறிவார் பராபரமே

    *** 

    ஓவியமாய்ச் சுவரில் நிற்கும் ஆட்டுக்குட்டிக்குக் கவிதையிலேனும் உயிர்கொடுக்க விழைகின்றார் திரு. கவிஜி. 

    போன ஞாயிறு
    பிரித்து தூக்கிப்
    போன
    இன்னொரு குட்டி
    இது இல்லை என்று தெரிந்த
    பின்னும்
    இருக்கும் குட்டிக்கு
    நம்பிக்கை தர
    முயலுகிறது
    அம்மா ஆடு

    தனக்கும் தெரியும் என்று
    காட்டிக் கொள்ளாமல்
    சரி என்பது போல
    ஒப்புக் கொள்ளும்
    குட்டி
    முகம் மறைத்துக் கொள்கிறது

    இவர்கள் கதை அறிந்த
    நான்
    சற்று முன் வரைந்த
    ஆட்டுக்குட்டியின் புகைப்படத்திற்கு
    உயிர் கொடுக்க
    வேண்டுகிறேன்….
    கவிதைக்குள்ளாகவாவது

    *** 

    ’தன் இறப்பின்மூலம் முதலாளிக்கு ’நிவாரணம்’ தரும் ஆட்டுக்குட்டி, தன் தாய்க்குத் தருவதென்னவோ ஆறாத ’ரணம்’ ஒன்றைத்தானே?’ என்ற உண்மையை உரைக்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.  

    பிரிய மகனே !
    நானோ உன்னை காணாத
    துயர வெள்ளத்தில்
    முதலாளியோ வெள்ள
    நிவாரணமாய் ஆட்டுக்கு
    மூவாயிரம் கிடைக்கும் என்ற
    மகிழ்வில் ! ஆம் அவனுக்கென்ன?
    தழை பறித்துப்போடுபவனும் அவந்தான்
    தலையை வெட்டி காசு பார்ப்பவனும் அவந்தான்
    செத்து கொடுத்தாய் வளர்த்தவனுக்கு சொத்து
    பெத்தவளுக்கு தீரா துயர்தான் கொடுத்தாய்
    நில்லாத என் கண்ணிரால்உன் முகம்
    வருடி வருடி உன் நினைவை காக்கின்றேன்
    என்னிடம் திரும்பி வருவாயே என் மகனே

    *** 

    சுவரில் தெரிவது தன் சொந்தமா என்று அறிந்துகொள்ளத்தான் இந்த முகர்தலா? அல்லது சுவரொட்டியாய் இருந்தால் புசித்துப் பசியாறலாமே எனும் ஆவலால் பிறந்த ஆராய்ச்சியா? என்று ஆட்டை நோக்கிக் கேள்வியெழுப்புகின்றார் திருமிகு. வேதா இலங்காதிலகம். 

    குட்டிப் படம் கடதாசியில்
    ஒட்டியதா! அதையாவது பிரித்தால்
    பட்டினி பரிதவிப்பிற்கு உண்ணலாமே!
    கிட்டச் சென்று ஆராய்ச்சியா!

    சிறிதே பொறு பிள்ளாய்!
    கடிதே புற்தரைக்குச் செல்லலாம்!
    தெரிவதிங்கு நம் சொந்தமா!
    உரிமையாய் அறிந்திட முகர்தலா!

    *** 

    ஆடுகளின் எண்ணவோட்டத்தைச் சிறந்த பாட்டுக்களாய் மாற்றியிருக்கும் கவிஞர்குழாத்துக்கு என் பாராட்டுக்கள்! 

    அடுத்து நாம் சந்திக்கவிருப்பது இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை! 

    தன் ஊனைப் பெருக்குதற்குப் பிறிதோர் உயிரின் ஊனை உண்ணும் புலைத்தொழிலை, அக் கொலைத்தொழிலை மாந்தகுலம் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார் வள்ளுவர். தன்னலமும் புலால்மீது தணியாத வேட்கையுங்கொண்ட மாந்தகுலம் புலைத்தொழிலைக் கைவிடவில்லை; மாறாக, வள்ளுவர் வலியுறுத்திய உயிரிரக்கக் கொள்கையைத்தான் கைவிட்டது!

    இவ்வாறு, புலாலுணவிற்காகத் தன் இன்னுயிரை நீத்த குட்டியை எண்ணிக் கவலைகொள்ளும் – கண்ணீர்சிந்தும் ஒரு தாயாட்டின் நேயத்தை, “கறியாய்ப் போன கண்மணியின் கரியுருவை முகர்ந்து கவலை மறக்கிறதே தாயவள் உயிர்க்கூடு” எனும் வரிகளில் நேர்த்தியாய்ச் சொல்லியிருக்கும் ஒரு கவிதை உள்ளத்தின் ஆழம் தொட்டது!

     

    ஆசையாய் உனை வளர்த்த நல்லதம்பி
    முட்டி அழுதுகொண்டிருக்கிறான்
    மூன்றுநாளாய்த் தேம்பித்தேம்பி!
    அண்ணன் எங்கே எங்கே என்று
    அங்குமிங்கும் தேடிக்கொண்டிருக்கிறான்
    முட்டிப்பாலருந்துமுன் உன் குட்டித்தம்பி.

    மண்சட்டியில் துண்டுகளாகி..
    வெந்த குழம்பின் வாசத்திலும்
    உப்புத்தூவிய கண்டங்களாகி..
    வெய்யிலில் காயும் மீதத்திலும்
    வீசும் உன் பிணவாடையை
    தாங்குமா இத்தாயாடு?

    கறியாய்ப்போன கண்மணியின்
    கரியுருவை முகர்ந்து முகர்ந்து
    கவலை மறக்கிறதே தாயவள் உயிர்க்கூடு

    இந்த உயிரோட்டமுள்ள கவிதையைப் படைத்துத் தந்திருக்கும் திருமிகு. கீதா மதிவாணனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

    ***

    ஆடும், அதன் குட்டியும் சுவரிலிருக்கும் ஆட்டுக்குட்டியொன்றின் ஓவியத்தைப் பார்த்து ”இங்கே இது வரையப்பட்டிருப்பதன் காரணமென்ன?” என்பது குறித்து நிகழ்த்தும் உரையாடலைக் காட்சிப்படுத்தியிருக்கும் ஓர் கவிதை இரசிக்கும்படியாய் உள்ளது.

    பாரம்மா இங்கு வந்து
    பாசத்துடன் யாரோ ஒருவர்
    நம் படத்தை வரைந்து
    வாசகங்கள் எழுதுமுன்
    வந்த மழை காரணமாய்
    ஓடிவிட்டார்போலும்!

    பாசமென்றா நினைத்தாய்
    பைத்தியக்காரி
    ஆடுகள்தான் இங்கு
    சிறுநீர் கழிக்கும் எனும்
    எரிச்சல் எச்சரிக்கை

    செய்ய நினைத்திருப்பார்கள்

    அல்லது
    படம் வரைந்து
    பிச்சை எடுக்கும்
    அந்தக் கிழவரின்
    கைவண்ணமாய்
    இருக்கக்கூடும்

    நாளைய தேர்தலில்
    நம் சின்னத்தில்
    போட்டியிடும் வேட்பாளர்
    சுவரில் முன்பதிவு பெற
    தீட்டிய சித்திரமாய்
    இருக்கலாம்

    இல்லையெனில்
    விரைவில் திறக்க இருக்கும்
    கறிக்கடையின்
    விளம்பரமாயும் இருக்கலாம்
    இங்கிருப்பது நல்லதல்ல
    வா வா
    விரைந்து செல்லலாம்! 

    ஒரு படம் சுவரில் வரையப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அனைத்தையும் அலசும் திரு. கொ.வை. அரங்கநாதனின் இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்த் தெரிவிக்கின்றேன்.

    கவிஞர்களில் சிலர் தொடர்ந்து படக்கவிதைப் போட்டிகளில் பங்கெடுத்துவருவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாய் உள்ளது. இதே உற்சாகம் தொடரட்டும்! ஏனையோரும் இதுபோன்ற போட்டிகளில் தயங்காது முயலலாம். இம்முயற்சிகள் உங்கள் சிந்தனையையும், படைப்பாற்றலையும் வளப்படுத்த உதவும்!

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 41-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான புகைப்படத்தை எடுத்துத் தந்திருக்கும் திரு. கண்ணன் முத்துராமனுக்கும், அதனைத் தெரிவுசெய்து தந்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் வல்லமை இதழின் நன்றி!

    running children

    மானெனத் துள்ளியோடும் இந்த இளஞ்சிறார்கள் நீரிலே ஓடி விளையாடுகின்றார்களா? இல்லை விதியின் விளையாட்டில் தொலைந்துபோனவர்கள் யாரையேனும் தேடி ஓடுகின்றார்களா? எனும் ஐயத்தை நம்முள் விதைக்கின்றது இப்புகைப்படம்!

    கவிதைப்படையல் நடத்தி இதற்கு விடைபகரக் காத்திருக்கும் கவிஞர்களை வரவேற்று அவர்தம் கவிதைகளுக்குள் நுழைவோம்!

    ***

    சிறுவர்களைப் பறவைகளாக்கி, வேடனை வேடிக்கைபார்க்கும் ரசிகனாக்கியிருக்கின்றார் திரு. கவிஜி தன் கவிதையில்!

    வருகிறீர்கள்
    அமர்கிறீர்கள்
    பறக்கறீர்கள்
    வேடனை ரசிகனாக்கிய
    நீங்கள் எந்த
    நாட்டு பறவைகள்,
    சிறுவர்களே……!

    ***

    ’கடலினும் ஆழமான மனத்தின் துணைகொண்டு எதனையும் வெல்லலாம்; உலகின் எவ்விடத்திற்கும் செல்லலாம்’ என ஊக்கமூட்டுகின்றார் திரு. நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன். 

    கடலின் முனைகளை கப்பலின் மூலம் கடக்கலாம்
    மனிதனின் மூளைகளின் மூலம் மனதை அறியலாம்
    ஆற்று நீர் குடிநீராக மாறுகிறது
    கடல் நீர் உப்பாக மாறுகிறது
    உப்பில்லாத பண்டம் குப்பையிலே
    உணர்வில்லாத மனம் சுடுகாட்டிலே
    கடலிலே மிதக்கலாம்
    எல்லாவற்றையும் மறக்கலாம்
    சின்னஞ்சிறு சிறுவர்கள் வண்ணத்துப்பூச்சிகள்
    பறப்பது போல மகிழ்ச்சியாக விளையாடுகிறார்கள்
    கடலில் தோன்றுவது முத்து
    மனதில் தோன்றவது வைராக்கியம் என்ற வைரமுத்து
    கடலின் ஆழம் பெரியது தான்
    மனித மனத்தின் ஆழ்மனது அதைவிடப் பெரியது
    கடலின் சீற்றம் சுனாமி
    மனித மனத்தின் ஊக்கம் மியாமி பல்கலைகழகத்தலும்
    கற்க வைக்கும்!

    ***

    ’பிள்ளைகளுக்குப் போட்டியாய்த் துள்ளிவிளையாடத்தான் மேலிருந்து வந்ததோ இந்த வான்மழை?’ என வினா எழுப்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    தணியாத உற்சாகத்தில்
    பிள்ளைகள்
    தண்ணீரில் விளையாடுவதைப்
    பார்த்துத்தான்,
    போட்டியாய்
    வந்து விளையாடிவிட்டதோ
    வான்மழை…!

    ***

    ’வாழ்க்கையும் வான்மழையும் ஒன்றுதான்! இரண்டுமே, சிரிக்கவைக்கும் சிலநேரங்களில்! துடிக்கவைக்கும் சிலநேரங்களில்! துன்பம்கண்டு துவண்டு புறமுதுகிடாது இலக்குநோக்கிப் பயணித்தால் வெற்றி நிச்சயம்!’ என்பது திரு. இளவல் ஹரிஹரனின் கவிதை நமக்குச் சொல்லும் நீதி!

    உள்வாங்குதலும்
    ஒரேயடியாய்ச் சீறுவதும்
    கடலின் இயல்பே…….

    வேடிக்கை பார்ப்பதும்
    விளையாட்டாய் ஓடுவதும்
    சிறுவர்கள் இயல்பே…….

    வாழ்க்கை இப்படித்தான்….
    சிலநேரம் சீறும்,
    பலநேரம் உள்வாங்கும்

    புறமுதுகிட்டு ஓடவேண்டாம்;
    வெருண்டு பயந்தோடவேண்டாம்.
    கரைதொடும் முன்னம்
    கடக்க வேண்டியவை ஏராளம்!
    கவனங் கொள்ளுங்கள்,
    கற்க வேண்டியவையும் ஏராளம்!

    எங்கேயும் எப்போதும்
    எவரிடமோ..எதுவிடமோ
    இங்கிதமாய்ப் பாடங்கள்
    இனிதாகக் கற்றுக் கொள்ளுங்கள்.

    இது தான், இவை தான்
    என்றின்றி,
    ஆகாய வெளியெங்கும்
    ஆண்டவன் விதைத்துள்ளான்
    ஆகவே சிறுவர்களே…..
    இலக்கு உருவாக்கி
    இலக்கு நோக்கி ஓடுங்கள்!

    பன்முகப் பார்வையை
    ஒருமுகமாய்க் குவியுங்கள்.
    கடலும் உங்கள்
    கைகளில் அள்ளலாம்,
    வாழ்க்கையை மகிழ்வுடன்
    வாழ்ந்திடுங் கலை வெல்லலாம்.

    *** 

    ’அடிக்கும் மழைக்கும் ’அரசே’ பொறுப்பென்று கைகாட்டாமல், களத்தில் இறங்கு தோழா! வெள்ளத்தால் உள்ளம்வாடும் உறவுகளைக் கைகொடுத்துக் காப்பாற்று!’ என்று அவசர நேரத்திற்கேற்ற அவசியமானதோர் அறிவுரையை அளித்துள்ளார் திரு. மெய்யன் நடராஜ். 

    அடிக்கும் மழைக்கும் அரசே பொறுப்பென்று 
    அசட்டை கொள்ளாமல் அசமந்தம் காட்டாமல் 
    துடிப்போடு செயல்படுவோம் தோழனே.. 
    ஓடு ஓடு விரைவாய் ஓடு 
    அதோ தூரத்தில் நமதுறவுகளை 
    மழைவெள்ளம் அடித்துச் செல்கிறது 
    அறிக்கைகள் விடுவது அரசின் வேலையாகட்டும் 
    ஆபத்தில் உதவுவது நமது கடமையாகட்டும் 
    ஓடு தோழனே ஓடு ..!

    *** 

    மழைவெள்ளம் கண்டு பதறி, துள்ளியோடும் சிறார்களோ இவர்கள்? என்று கேட்கின்றார் திருமிகு. வேதா. இலங்காதிலகம்.

    இன்பத் துள்ளலோ இது!
    துன்பம் அள்ளல் தமிழ்நாட்டிற்கு!
    கடலா பார்ப்பது! அன்றி
    திடலையும் எட்டும் வெள்ளமா!
    வெள்ள மட்டம் ஏறுதென்று
    பள்ளம் நோக்கிப் பாயுதென்று
    கொள்ளியிடும் இதயத்தோடு பதறி
    துள்ளியோடும் பிள்ளைகளா இவர்கள்

    ***

    வல்லமை ஆசிரியருக்கு வந்த கவிதை ஒன்று!

    ”கிராமங்களையெல்லாம் காலிசெய்துவிட்டுச் சென்னைநோக்கிப் படையெடுத்த மக்கள்கூட்டம் கட்டிய அடுக்குமாடிக் குடியிருப்புக்கள் அல்லவோ பெய்த மழைநீரை  வெளியே(ற்)றவிடாமல் சென்னை நகரத்தையே நரகமாக்கியிருக்கின்றன; மக்களின் பிழைக்கு மழை தந்த பாடம் இது! இனியேனும் மக்கள் நகரத்தைவிட்டுச் சென்று பிழைத்தல் நன்று!” என்று சற்றே கோபத்தோடு ஆலோசனை வழங்குகின்றார் மரபூர் திரு. ஜெய. சந்திரசேகரன். 

    நீர் அறிவீரோ? நீர் இன்றி நீர் இல்லை!
    பின்னர் ஏன் வெறுக்கிறீர்?
    சீர் கெட்ட கோட்டம், கெட்டது வெள்ளோட்டம்!
    அடையாற்றை
    அடைத்துக்கட்டிய அடுக்கு மாடிகள்,
    அடித்துப்போயின மேட்டுக்குடி கீழ்குடிகள் ஏற்றதாழ்வு,
    படித்தவன் படிக்காதவன் பட்டறிவு
    இருப்பவன் இல்லாதவன் இடற்பாடுகள்!
    வந்தன இடற்பாடுகள்!
    மழை, எங்கோ
    அழைத்தும் வராதது,
    அழைக்காதபோது வந்தது,
    கூவத்தை சுத்தம் செய்ய பன்னாட்டுப் பண உதவியைக்
    கவ்வத் துடித்தன சில வெள்ளைவேட்டிப் பன்னாடைகள்!
    ஆனால்,
    குழந்தையின் வாய்ப்பால் துடைக்கும் தாய்போல்
    நதிகள் அழுக்கை இயற்கை மழையே துடைத்தது!
    மக்கள் செய்த பிழை, பிழைப்பதற்கு நகரம் தேடி
    அங்கிங்கு குடியமர்ந்து குடிகெடுத்தனர்!
    இனி ஓடு, ஊர் தேடி, நகரங்கள் நரகங்கள் ஆகுமுன்!
    மழை கொடுத்தது வாழ்க்கைப் பாடம், இனி
    பிழை செய்யாதே, எங்கேனும் ஓடிப் பிழை!

    ***

    சமீபத்திய தமிழக மழையின் பாதிப்பைப் பெரும்பாலான கவிதைகளில் பாடுபொருளாய்க் காண்கின்றேன். புகைப்படத்தைச் சூழ்நிலைக்கேற்ற வகையில் பொருத்திப்பார்க்கும் கவிஞர்களின் திறனைப் போற்றுகின்றேன்!

    அடுத்து நாம் சந்திக்கவிருப்பது இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை! 

    ”கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
    எடுப்பதூஉம் எல்லாம் மழை” எனும் வள்ளுவரின் வாய்மொழி என்றுமே பொய்த்துப்போவதில்லை என்பதற்குச் சின்னாட்கள் முன்பு பெய்திருக்கும் பெருமழையும் சாட்சிசொல்லியிருக்கின்றது.

    ”மழையே! உன்னை நாங்கள் விரும்பும்போது நீ விலகியோடுவதும், எம்மை நீ விரும்பி வரும்போது நாங்கள் விலகியோடுவதுமான இந்த மாயப் போராட்டம் என்று ஓயும்? ’அமிழ்தம்’ என்று உனைப் புகழ்ந்தார் வான்புகழ் வள்ளுவர்; நீ அமிழ்தம்தான்! ஆனால் அளவை மிஞ்சியதால் எமக்கு நஞ்சானாய்!” மக்களின் வாழ்வைக் கெடுத்த மழையே! எப்போது எம்மை வாழ்விக்கப் போகிறாய்? என்று வேதனைக்குரல் எழுப்பும் ஒரு கவிதை!

    உன்னை நோக்கி
    நாங்கள் வரும்போது
    நீ ஓடுவதும்
    எம்மை நோக்கி
    நீ வரும்போது
    நாங்கள் ஓடுவதும்
    இது என்ன
    மாயப் போராட்டம்?

    வானுக்கு சென்ற நீ
    வருவாயா என
    எத்தனை ஆண்டுகள்
    ஏங்கியிருக்கிறோம்
    இன்று இப்படி
    ஏரளாமாய் வந்து
    போகமாட்டாயா என
    புலம்ப வைத்தது ஏன்?

    கெடுப்பதும்
    கெட்டாரை வாழவைப்பதும்
    நீயே என்றான்
    வான்புகழ் வள்ளுவன்
    கெடுத்துவிட்டாய்
    எப்பொழுது
    வாழ வைப்பாய்?
     

    மழையின் குணத்தைப் பிழையின்றித் தன் கவிதையில் படைத்துக் காட்டியிருக்கும் திரு. கொ.வை. அரங்கநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கின்றேன்.

    ***

    ”துள்ளியோடும் இந்த பரதவச் சிறுவர்கள், மல்லிகையினும் மணமுடைய மனோரஞ்சிதங்கள்! மழைவெள்ளத்தில் சிக்கிய மக்களைக் காத்துநிற்கும் தேவதூதர்கள்! வாடிநிற்போரைத் தேடிஉதவும் விடிவெள்ளிகள்!” என்று புகைப்படச் சிறார்களுக்குப் புகழ்மாலை சூட்டியுள்ளார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.  

    இந்த சிறுவர்களுக்கு
    விளையாட்டு மைதானமும்
    வாழ்க்கையுமே கடல்தான்!
    இவர்களின் பெற்றோர்கள்
    கடலுக்குள் சென்றால்தான்
    இவர்களின் பசியும் பட்டினியும்
    போகும் நிலை
    இவர்கள் தந்தச் சிற்பங்கள் அல்ல
    இவர்கள் அழகான கிளிஞ்சல்கள்!
    சக மனிதர்களின் துன்பம் கண்டு
    வேகமாய் ஓடித் தங்களால்
    முடிந்தவரை வெள்ளத்தில் நீந்தி
    கரை சேர்க்கும் மனித நேயம்
    கொண்டவர்கள்!
    மல்லிகையை விட மணமுள்ள
    மானோ ரஞ்சிதங்கள்!
    செந்தாமரையைக் காட்டிலும்
    அழகான, உணர்ச்சிகளும்
    கொண்ட சிறுவர்கள்!
    இவர்கள் மீனவர்கள் அல்ல…
    மீட்பவர்கள் தேவதூதர்கள்!
    சென்னை வெள்ளத்தில்
    தன்னை இணைத்துக்கொண்ட
    தன்னலமற்ற நாளைய விடிவெள்ளிகள்!
     

    உள்ளந்தொடும் இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய் அறிவிக்கின்றேன்.

    பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் நன்றியும் பாராட்டும்! 

     

     

    Share
  • மாமழையும் மாந்தர் பிழையும்!

    -மேகலா இராமமூர்த்தி

    தமிழகத்தின் நீராதாரத்திற்கு அடிப்படையான வடகிழக்குப் பருவமழை (Northeast monsoon) இவ்வாண்டு பொய்யாமல் பெய்துள்ளது. வந்த ஓரிரு நாட்களிலேயே விரைவாய் விடைபெற்றுச் சென்றுவிடும் கடந்த ஆண்டுகளின் மழைபோலல்லாது, இவ்வருடத்திய மழை மிக்க வாஞ்சையோடு தமிழகத்தில் ஓரிரு வாரங்கள் தங்கிப் பெய்திருக்கின்றது.

    விளைவு…? சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், புதுவை, சிதம்பரம் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான வட மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கின்றன; மக்களோ கண்ணீரில் மிதக்கின்றனர். ’அமிழ்தம்’ என்று வள்ளுவரால் வர்ணிக்கப்பட்ட பெருமைமிகு மழைக்குச் சிலநாட்கள்கூடத் தாக்குப்பிடிக்க இயலாமல் தடுமாறும் தமிழகத்தின் அவலநிலையை என்னென்பது?

    மக்களின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையான நீரைச் சரியான முறையில் தேக்கிவைப்பதும், அதனைப் பாதுகாப்பதும் அரசின் தலையாயக் கடனாகும். இதற்காக இன்றைய ஆட்சியாளர்கள் ஒன்றும் கரிகாற்சோழனைப்போல் புதிதாய்க் ’குளம்தொட்டு வளம்பெருக்க’ வேண்டியதில்லை. ஏற்கனவே வெட்டப்பட்டிருக்கும் ஏரிகளையும், ஆறுகளையும், குளங்களையும் ஒழுங்காய்த் தூர்வாரிப் பராமரித்திருந்தாலே போதும். அவற்றின் நீர்க்கொள்ளளவு அதிகரித்திருக்கும்; கனமழையின் தாக்கத்தால் அவை உடைத்துக்கொள்ளாமல் இருந்திருக்கும். அரசாங்கம் இத்தகைய செயல்களில் போதிய கவனம் செலுத்தியதாய்த் தெரியவில்லை.

    சங்கடமான இச்சூழலில், நம் பண்டை மன்னர்களைக் குறித்துப் ’பழம்பெருமை’ பேசாதிருக்க முடியவில்லை. அவர்கள் எதில் திறன்வாய்ந்தவர்களோ இல்லையோ நீர்நிலைகளைத் தேக்கிவைப்பதிலும், நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்குவதிலும் திறன்வாய்ந்தவர்களாகவே திகழ்ந்திருக்கின்றனர்.

    பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு, அணைகளைக் கட்டிவைத்து நீரைத் தேக்கிவைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவந்த குடபுலவியனார் எனும் புலவர்பெருந்தகை,

    ”போரிலே பெருவிருப்பமுடைய செழியனே! நீ மறுமை இன்பத்தை நுகர விரும்பினாலும்சரி…அல்லது…இந்நிலவுலகிலேயே நிலைத்த புகழைப் பெற விரும்பினாலும் சரி…நீ செய்யவேண்டியது என்ன தெரியுமா?

    நீர்நிலைகளிலெல்லாம் நீண்ட கரையெடுத்து, அந்நீரைத் தேக்கி வைப்பாயாக! அப்போதுதான் உன்னுடைய புகழ், காலத்தை வென்று நின்றுவாழும்!” என்கின்றார். ‘Conservation of water resources’ என்று இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கிறோமே, இதைத்தான் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே இப்புலவர் பெருமான், பாண்டிய நெடுஞ்செழியனிடம் எடுத்துரைக்கின்றார்.

    ”… வயவேந்தே
    செல்லு  முலகத்துச்  செல்வம்  வேண்டினும்
    ஞாலங்  காவலர்  தோள்வலி  முருக்கி
    ஒருநீ  யாகல்  வேண்டினுஞ்  சிறந்த
    நல்லிசை  நிறுத்தல்  வேண்டினு  மற்றதன்
    தகுதி  கேளினி  மிகுதி  யாள
    நீரின்  றமையா  யாக்கைக்  கெல்லாம்
    உண்டி  கொடுத்தோ  ருயிர்கொடுத்  தோரே
    […]
    அடுபோர்ச்  செழிய  இகழாது  வல்லே
    நிலனெளி  மருங்கின்  நீர்நிலை  பெருகத்
    தட்டோ  ரம்ம  இவண்தட்  டோரே
    தள்ளா  தோரிவண்   தள்ளா  தோரே.” (புறம் – 18) 

    ”தொழில்நுட்பத்தில் வல்லவர்கள் யாம்” என்று மார்தட்டிக்கொள்ளும் மேலைநாட்டாரும்கூட நம்முடைய நீர்ப்பாசன வசதிகளைகளைக் கண்டு பிரமித்துநின்ற காலமுண்டு! அவையெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போய்விட்டன இன்று!

    சென்னை மாநகராட்சியில் மட்டும் 124 ஏரிகள், 50 (கோயில்களைச் சார்ந்த) திருக்குளங்கள் இருந்தன என்கின்றது சென்னையில் இயங்கிவரும் சி.பி.ராமசாமி ஐயர் சூழலியல் கல்விமையம் (C.P.Ramaswami Aiyar Environmental Educational Center – C.P.R.EEC). ’இறைபக்தி’யில் இணையற்ற நம்மக்கள் பிளாஸ்டிக் பைகளையும், இன்னபிற குப்பைகளையும் வீசி அந்தத் ’திருக்குளங்களை’யெல்லாம் தெருக்குளங்களைவிட மோசமான நிலைக்குக் கொண்டுவந்துவிட்டனர். அவற்றில் பல, அழுக்கான நீரோடு துர்நாற்றம் வீசுகின்றன! மேலும் சில குப்பைமேடுகளாய்க் காட்சிதருகின்றன!

    ஏரிகள் என்னவாயின? அவற்றில் பல பராமரிப்பின்றித் தூர்ந்துபோயின. தூர்ந்துபோன அந்த ஏரிகளிலும், நீரற்றுக் காய்ந்துபோன குளங்களிலும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கள் புதிது புதிதாய் முளைத்தவண்ணமிருக்கின்றன! இக்கட்டுமானங்களுக்காக, வறண்டுபோன ஆறுகளிலிருந்து லாரி லாரியாய் மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றது. என்ன கொடுமை இது!

    ’வட மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்யும்’ என்று வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை செய்திருந்தும், மக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ளாத அரசாங்கத்தின் அலட்சியப்போக்கு வருந்தத்தக்கது.

    பொதுமக்களிடமும் பிழையில்லாமல் இல்லை. மனிதவளம் மிகுந்த நம் தமிழகத்தில்,  மக்கள் நினைத்திருந்தால், எதற்கெடுத்தாலும் அரசைச் சார்ந்திராது, மழைநீர்ச் சேகரிப்பு, குளங்கள், ஏரிகள், ஆறுகள் முதலிய நீர்நிலைகளைத் தூர்வாருதல், நகரைத் தூய்மைசெய்தல் போன்ற எத்தனையோ பயன்மிகு பணிகளில் தாமே ஈடுபட்டுத் தாம்வாழும் பகுதியைச் சிறப்பாய்ப் பேணியிருக்கலாம். ஏனோ நம் மக்கள் இவற்றிலெல்லாம் ஆர்வம் காட்டுவதில்லை.

    நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்! ’கண்கெட்ட பின்பு சூரியவணக்கம் செய்வதே  தமிழர் வழக்கம்’ எனும் நிலை மாறட்டும்! இனியேனும் மக்கள் விழிப்போடிருந்து மழைவளத்தையும், சுற்றுப்புறத் தூய்மையையும் முறையாய்ப் பாதுகாக்க வேண்டும். அரசாங்கமும், (வாக்கு வங்கியைக் கைப்பற்றுவதற்காக) ’இலவசங்களை’ அள்ளித்தந்து மக்களைச் சோம்பேறிகளாக்காமல், சமூக நற்பணிகளில் அவர்கள் முனைப்புடன் ஈடுபட ஊக்கமும், உற்சாகமும் அளிக்கவேண்டும்; ஏன்…சிறப்பாய்ப் பணியாற்றுவோருக்குப் பாராட்டும் பதக்கமும்கூட வழங்கி அரசு கவுரவிக்கலாம்!

    இனிய தமிழ்மக்களே!
    வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
    வைத்தூறு போலக் கெடும் எனும் வள்ளுவரின் வாய்மொழியை உள்ளுவோம்! வாழ்வைச் செம்மையாக்க முற்படுவோம்!

     

     

    Share
  • இருபெரும் கவிவாணர்கள்!

    -மேகலா இராமமூர்த்தி

    திங்களன்று (நவம்பர் 30) வெளியான கட்டுரையின் தொடர்ச்சி…

    ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் குமுறிய ஷெல்லியைப் போன்றே, ’சிறுமைகண்டு சினந்துபொங்கிய பாரதி, அந்நியர்க்கு அடிமைகளாய், பொறியற்ற விலங்குகளாய் வாழும் இந்தியமக்களின் நிலைகண்டு, மனம் நொந்தார்; நெஞ்சு வெந்தார். வாளினும் கூரிய தன் எழுதுகோலினால் அவர்தீட்டிய சீரிய கவிதையிது! 

    கஞ்சி குடிப்பதற் கில்லார் – அதன்
    காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
    பஞ்சமோ பஞ்சமென்றே – நிதம்
    பரிதவித் தேஉயிர் துடிதுடித்து
    துஞ்சி மடிகின்றாரே…
    […]
    எண்ணிலா நோயுடையார் –இவர்
    எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
    […]
    புண்ணிய நாட்டினிலே – இவர்
    பொறியற்ற விலங்குகள் போலவாழ்வார் (பாரத ஜனங்களின் தற்கால நிலைமை) 

    ’விதையுங்கள் ஆனால் கொடுங்கோலரை அறுவடை செய்ய விடாதீர்கள்!’ என்று இங்கிலாந்து மக்களை ஷெல்லி எச்சரித்தது போன்றே பாரதியும், 

    ”ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே – நம்மை
    ஏய்ப்போருக்கு ஏவல்செய்யும் காலமும் போச்சே
    […]
    உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனைசெய்வோம் – வீணில்
    உண்டுகளித் திருப்போரை நிந்தனைசெய்வோம்

    விழலுக்கு நீர்பாய்ச்சி மாயமாட்டோம் – வெறும்
    வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம்!” எனத் தனது ’சுதந்திரப் பள்ளில்’ முழங்கக் காண்கின்றோம். 

    ஏகாதிபத்தியச் சுரண்டலை எதிர்த்த பாரதி, 

    ”மனிதர் உணவை மனிதர் பறிக்கும்
    வழக்கம் இனியுண்டோ?
    மனிதர் நோக மனிதர் பார்க்கும்
    வாழ்க்கை இனியுண்டோ?”  என்று சீற்றதோடு வினவுவதைப் பார்க்கின்றோம். இவையனைத்தும் இங்கிலாந்துக் கவிஞர் ஷெல்லி விடுத்த அறைகூவல்களின் எதிரொலிகளாகவே நம் செவிகளில் விழுகின்றன. 

    பிரெஞ்சுப் புரட்சியின் தாரக மந்திரங்களான ’சுதந்திரம், சமத்துவம்,
    சகோதரத்துவம்’ எனும் மூன்றும் ஷெல்லியின் பாடல்கள் நெடுகிலும்
    காணக் கிடைப்பவை. தன்னுடைய இஸ்லாமின் புரட்சி (The Revolt of
    Islam) எனும் காவியத்தில், ‘Let all be equal and free’ (எல்லாரும் சுதந்திரமாகவும் சமமாகவும் இருக்கட்டும்) என்று எழுதுகின்றார் ஷெல்லி. 

    மானுடர் அனைவரும் சமமாகவும் சுதந்திரமாகவும் நடத்தப்படவேண்டும் என்பதே பாரதியின் விருப்பமும்! இவ்வெண்ணம் அவருடைய பாடல்கள் பலவற்றில் ஓங்கி ஒலிக்கின்றன. 

    ”எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
    நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு” 
    என்று பாடிய பாரதி, தன்னுடைய ’பாரத சமுதாயம்’ எனும் பாட்டில் தான் விரும்பும் சமதர்மச் சமுதாயத்தைக் காட்சிப்படுத்தத் தவறவில்லை. 

    ”எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
    எல்லாரும் இந்திய மக்கள்
    எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர்விலை
    எல்லாரும் இந்நாட்டு மன்னர்” என்பதே பாரதியின் இலட்சியக் கனவாக இருந்தது. 

    எளியோரைக் கண்டிரங்கும் இளகிய மனமும், அருளுள்ளமும் கொண்டவர் ஷெல்லி. ’On leaving London for Wales’ எனும் தன்னுடைய கவிதையில் “I am the friend of the unfriended poor” (தோழர்களற்ற ஏழைகளின் தோழன் நான்!) என்று தன்னைக் கூறிக்கொள்கின்றார் அவர். 

    பாரதியின் உள்ளமும்  இத்தன்மையானதே! புஷ் வண்டிக்காரருக்குச் (இவ்வண்டி அந்நாளில் புதுச்சேரியில் பிரபலம்) சரிகை அங்கவஸ்திரத்தைக் கொடுத்தது; பாம்பாட்டி ஒருவரின் வறுமையைக் காணச்சகியாது தன் அரைவேட்டியையே அவிழ்த்துக் கொடுத்தது என்று நீள்கின்றன பாரதியின் அருளுள்ளத்தின் வெளிப்பாடுகள்! மனிதர்களிடம் மட்டுமின்றி பிற உயிர்களிடத்தும் தன் கருணைவெள்ளத்தைப் பாய்ச்சிய பாரதி, 

    ”காக்கை குருவி எங்கள் ஜாதி
    நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்”
    என்று குதூகலித்தவர். தன் வீட்டிலிருந்த சொற்ப அரிசியையும் காக்கைகளுக்கும் குருவிகளுக்கும் வாரியிறைத்து அவற்றின் வயிற்றை நிறைத்தவர். 

    ஷெல்லியின் வாழ்வைக் கண்ணுற்றால், இன்று உலகமேபோற்றும் அந்தப் பெருங்கவிஞரை அவர் வாழ்ந்தகாலத்தில் ஆங்கில இலக்கியஉலகம்கூட ஆதரிக்கவில்லை; மாறாகப் பலரும் அவரை நிந்திக்கவே செய்தனர்;

    விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில நண்பர்களே அவருக்குத் துணைநின்றனர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்தைவிட்டே வெளியேறி இத்தாலிக்குச்சென்று குடியேறும் சூழலுக்குத்தள்ளப்பட்டார் ஷெல்லி. 

    பாரதியின் நிலையும் அதுவே! வாழுங்காலத்தில் பாரதியை நம் மக்கள் கொண்டாடவில்லை. அந்த எழுத்துச் சித்தரைப் பித்தர் என்று ஏசினார்கள். ஆங்கில அரசாங்கமும் அவரைச் சிறைசெய்யக் காத்திருந்த சூழலில்தான் அவர் புதுச்சேரிக்குச் சென்று தலைமறைவாய் வாழவேண்டி வந்தது. 

    ஆங்கில இலக்கிய விமர்சகரான எட்மண்ட்ஸ் (E.W. Edmunds) தன்னுடைய, ’ஷெல்லியும் அவருடைய கவிதைகளும்’ (Shelly and his poetry – E.W. Edmunds) எனும் நூலில் ஷெல்லியைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: 

    ”வேறு எந்தப் பெருங்கவிஞரைக் காட்டிலும் ஷெல்லி தன் கவிதைகளிலேயே வாழ்ந்தார்; தன் கவிதை மூர்க்கமாக, எதிர்ப்புணர்வு மிக்கதாக, உணர்ச்சிவேகம் நிறைந்ததாக இருந்தால் அவரும் அவ்வாறே இருந்தார். தன் கவிதைகள் ஆர்வ உணர்ச்சியும், அற்புதக் கனவுகளும் சுமந்ததாக இருந்தால் அவரும் அவ்வாறே இருந்தார். அவர் எவ்வாறு வாழ்வில் தனித்து நின்றாரோ அவ்வாறே ஆங்கிலக் கவிஞர்கள் மத்தியிலும் தனித்தே நிற்கின்றார்.” 

    இதே வார்த்தைகள் நம் பாரதிக்கும் அட்சரம் பிசகாமல் பொருந்தக்கூடியவை அல்லவா! ஆம்! இவ்விரு கவிஞர்களையும் பொறுத்தவரை வார்த்தையும் வாழ்க்கையும் ஒன்றேயானவை.

    சமூகப் பார்வையிலும், புதுமைச் சிந்தனைகளிலும், உயிரிரக்கத்திலும், ஒரே மாதிரியான உளப்பாங்கைப் பெற்றிருந்த இக்கவியரசர்களின் மரணமும்கூட ஓரளவிற்கு ஒத்தவகையிலேயே அமைந்திருந்தது.

    இத்தாலியின் லெரிஸி (Lerici) என்ற இடத்தில் வசித்தபோதுதான் ஷெல்லியின் அகால மரணம் நிகழ்ந்தது. படகில் பயணம் செய்வதில் பெருவிருப்பு கொண்டிருந்த ஷெல்லி, ஒருமுறைத் தன் நண்பர்களுடன் ஸ்பேசியக் குடாக்கடலில் (Bay of Spezia) கடற்செலவு மேற்கொண்டிருந்தபோது அடித்த பெரும்புயலில் அவர்சென்ற படகு கடலில் மூழ்கிற்று; மூழ்கிய படகோடு முப்பது வயது முடியுமுன்னே அந்த அற்புதக்கவிஞரின் வாழ்வும் மூழ்கிப் போயிற்று. இவ்விபத்து 1822-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் நாள் நிகழ்ந்திருக்கின்றது. சில தினங்களுக்குப்பின் கரையொதுங்கிய அவருடைய சடலம், அங்கேயே தகனம் செய்யப்பட்டுச் சாம்பல் உரோமாபுரியில் அடக்கம் செய்யப்பட்டதாய்க் கூறப்படுகின்றது. 

    39 வயதுகூட நிரம்பாத நிலையில் மண்ணுலக வாழ்வை நீத்த நம் மகாகவியின் மரணமும் அகாலமானதே. அல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானைக்குப் பழங்கொடுக்கச் சென்றவரை யானை தூக்கியெறிந்ததால் ஏற்பட்ட விபத்திற்குப் பிறகு பாரதியின் உடல்நிலை தேறவில்லை. சில மாதங்களிலேயே அவர் உயிர்நீத்தார்.

    சின்னாளும் பல்பிணியும் உடையது இம்மானுட வாழ்வு என்பது ஆன்றோர் வாக்கு. இச்சிறிய வாழ்விலேயே செயற்கரிய சாதனைகளைச் செய்துவிட்ட ஷெல்லியும், பாரதியும் மக்கள் மனத்தில் என்றும் நீங்கா இடம்பெற்று நிலைத்து வாழ்வர். 

    ***

    கட்டுரைக்கு உதவியவை: 

    1. https://ta.wikipedia.org/wiki/ சுப்பிரமணிய_பாரதி

    2. https://en.wikipedia.org/wiki/Percy_Bysshe_Shelley

    3. பாரதியும் ஷெல்லியும் – திரு. ரகுநாதன்

     

     

    Share
  • இருபெரும் கவிவாணர்கள்!

    -மேகலா இராமமூர்த்தி

    தமிழகம் தன்னுடைய வரலாற்றில் எத்தனையோ பெரும்புலவர்களையும்  ஆற்றல்மிகு அறிஞர்களையும் சந்தித்திருக்கின்றது. அத்தகைய பெரும்புலவர் வரிசையில் எண்ணத்தக்க இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் சுப்ரமணிய பாரதி. கனல் கக்கும் கவிதைகளால் சுதந்திரத் தீயை மூட்டிய புரட்சிக் கவியாகவும், அன்னை பராசக்தியின் பக்தராகவும், கண்ணபெருமானின் காதலராகவும் பன்முகங்கள் காட்டும் வித்தகக் கவி அவர். அன்னை கலைவாணியின் அருள்பெற்றிருந்தமையால் குழவிப் பருவத்திலேயே எழிலார் கவிபுனையும் திறன் கைவரப் பெற்றிருந்தார். அதனால், தன்னுடைய பதினோராம் வயதிலேயே எட்டயபுரம் மன்னரால் ’பாரதி’ எனும் பட்டம் தந்து சிறப்புச்செய்யப் பெற்றார் என்பது நாமறிந்ததே.

    Subramanya_Bharathiகவிஞராய் மட்டுமின்றிப் பன்மொழிப் புலமை வாய்ந்தவராகவும் விளங்கினார் பாரதி. ஆங்கிலத்திலும், சமஸ்கிருதத்திலும் அவருக்கு நல்ல புலமை இருந்தது. ஆங்கிலக் கவிஞர்கள் பலரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் அவர். குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்து, காலத்தால் அழியாக் கவிதைகள் யாத்து, அற்ப ஆயுளிலேயே மறைந்துபோன ஷெல்லி, (Percy Bysshe Shelley), பைரன் (Lord Byron), கீட்ஸ்(John Keats) போன்றோரிடம் பாரதிக்குப் பற்று அதிகமிருந்தது. குறிப்பாக, ஷெல்லியிடம் பாரதிக்கு இருந்த பிடிப்பும், இருவருக்குமிருந்த ஒருமித்த சிந்தனையும் நம்மை பிரமிப்பிலாழ்த்துவது!

    ’சக்திதாசன்’ என்றும் ’காளிதாசன்’ என்றும் பல புனைபெயர்களில் பாரதி பாடல்கள் எழுதியிருக்கின்றார். ஆனால், அவர் சக்திக்கும், காளிக்கும் தாசனாவதற்கு முன்பே ’ஷெல்லி’க்கு தாசனாக இருப்பதில் பெருமை கொண்டிருந்தவர் என்பதைப் பலரறியார். ஆம்! ஷெல்லிதாசனாகவும் பாரதி பெயர்புனைந்து பாடல்கள் படைத்துள்ளார் என்பது அவருடைய மனைவியான செல்லம்மா பாரதி வாயிலாய்த் தெரியவருகின்றது (பாரதியார் சரித்திரம்). பாரதி பணிபுரிந்த ’சக்ரவர்த்தினி’ மாதஇதழில் அவர் எழுதிவந்த ’துளஸீபாய் சரித்திரத்தின்’ இறுதிப்பகுதியில் ‘ஷெல்லிதாஸ்” எனக் கையொப்பமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே பாரதி ஷெல்லிதாசனாக இருந்ததற்கு நமக்குக் கிடைத்துள்ள ஒரே நேரடி ஆதாரம். அம்மட்டோ? இளமைப்பருவத்தில் தான் எட்டயபுரத்தில் வாழ்ந்த காலத்திலேயே ஷெல்லியன் சங்கம் (Shellian Guild) எனும் பெயரில் பாரதி சங்கமொன்று நடத்தியதாகவும் அறிகின்றோம்.

    இவ்வாறு, தன் இலக்கிய வாழ்வின் தொடக்கத்தில் ஷெல்லியின்பால் பாரதிகொண்ட ஈர்ப்பும் ஈடுபாடும் அவருடைய இறுதிக்காலம்வரை மாறவில்லை; மறையவில்லை. ஷெல்லியின் பாதிப்பு பாரதியிடம் எவ்வளவு தூரம் இருந்தது என்று அறிந்துகொள்ள ஷெல்லியைக் குறித்தும் அவரது கவிதைகள் குறித்தும் நாம் அறிந்துகொள்வது அவசியமாகின்றது.

    இனி, ஷெல்லியைப் பற்றிச் சுருக்கமாகக் காண்போம்!

    1792-ஆம் ஆண்டு ஆகஸ்டு 4-ஆம் தேதி சசெக்ஸ்shelley மாகாணத்திலுள்ள (Sussex) ஃபீல்டு பிளேஸ் (Field Place) எனுமிடத்தில் வசதிமிக்க பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தவர் பெர்சி பிஷ் ஷெல்லி (Percy Bysshe Shelley). 1811-ஆம் ஆண்டு, அவர் ஆக்ஸ்ஃபோர்டில் படிக்கும் காலத்தில், ’ஜெரமையா ஸ்டக்லி’ (Jeremiah Stukley) எனும் புனைபெயரில், ’நாத்திகத்தின் அவசியம்’ (The Necessity of Atheism) எனும் நூலையெழுதிப் பாதிரிமார்கள், கல்லூரி ஆசிரியர்கள் முதலியோருக்கு அனுப்பிவைத்தார். நாத்திகம் பேசுவதற்கு அசாதாரணத் துணிச்சல் தேவைப்பட்ட காலமது! நாத்திகனைப் ’பாவி’ என்றும் ’பிரஷ்டன்’ என்றும் மக்கள் வெறுத்தொதுக்கிய சூழலது! அப்படிப்பட்டதோர் காலகட்டத்தில் நாத்திகத்தின் அவசியத்தை வலியுறுத்தி எழுதுதற்கு எத்துணைத் துணிச்சல் இருந்திருக்கவேண்டும் அந்த இளங்கவிக்கு!

    ’இந்த நூலை எழுதியது தானில்லை’ என்று ஷெல்லி கூறிவிட்டால் போதும்; அவர்மீது  கடுமையான நடவடிக்கை எதனையும் எடுக்காது விட்டுவிடுவதாய்க் கல்லூரி நிர்வாகம் கூறியும், அதனை ஏற்கமறுத்த வாய்மையாளர்….தூய்மையாளர் ஷெல்லி. விளைவு…கல்லூரியில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருக்கும்போதே அவரை வெளியேற்றி, அவருடைய கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது கல்லூரி நிர்வாகம். இதனால் பெருத்த அவமானமும் கோபமும் அடைந்தார் ஷெல்லியின் தந்தை. ஷெல்லியின் மனத்தை மாற்ற எவ்வளவோ முயன்றார்; கிட்டியது ஏமாற்றமே! ஆகவே, குடும்பத்தைவிட்டே வெளியேற்றினார் ஷெல்லியை. ஆனால், அதற்கெல்லாம் அயரவுமில்லை; தன் கொள்கையை மாற்றிக்கொள்ளவுமில்லை ஷெல்லி. தம்வாழ்வின் இறுதிவரை நாத்திகராகவே இருப்பது என்பதில் உறுதியோடிருந்தார் அவர்!

    இவ்விடத்தில் ஷெல்லிக்கும் பாரதிக்கும் நாம் வேறுபாடு காண்கின்றோம். தன்னுடைய வாணாள் முழுவதும் நாத்திகராகவே வாழ்ந்திருக்கின்றார் ஷெல்லி; ஆனால் பாரதி தம்வாழ்வில் இறைநம்பிக்கை கொண்டவராகவே வாழ்ந்தார் என்பதற்குக் கண்ணன் மீதும், காளி மீதும், பிற தெய்வங்கள்மீதும் அவர் பாடிக் குவித்திருக்கும் தோத்திரப் பாடல்கள் சான்று பகர்கின்றன. கடவுள் நம்பிக்கை எனும் ஒரேயொரு கொள்கையில் மட்டும் இவ்விரு கவிவாணர்களும் இருவேறு சித்தாந்தங்களைக் கொண்டிருந்தபோதினும், சமூகம் மற்றும் அரசியல்சார்ந்த சிந்தனைகளில் இவ்விருவருக்கும் இருந்த ஒற்றுமை வியப்பிற்கும் நயப்பிற்கும் உரியது!

    சான்றாகச் சில பாடல்களைக் காணலாம்.

    இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் (Manchester city) 1819-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 16-ஆம் நாள் கூடிய சீர்திருத்தவாதிகளின் கூட்டத்தைச் சட்டவிரோதமானது என்று கருதிய இங்கிலாந்து, அதனைக் குதிரைப்படைகொண்டு தாக்கிக் கலைந்துபோகச் செய்தது. இந்த அடக்குமுறையில் எண்ணற்றோர் மாண்டனர்; கணக்கற்றோர் படுகாயமுற்றனர். இது ‘பீட்டர்லூ படுகொலை’ (Peterloo Massacre) என்று குறிப்பிடப்படுகின்றது (Similar to The Battle of Waterloo). இதனால் இங்கிலாந்து மக்கள் பெரிதும் கொதிப்படைந்திருந்தனர். அப்போது இத்தாலியில் வசித்துவந்த ஷெல்லி இக்கொடூர சம்பவம் அறிந்து துடித்தார். ‘இங்கிலாந்து மக்களுக்கான பாடல்’ (Song to the men of England) எனும் அற்புதக் கவிதையொன்றை வடித்தார்.

    அப்பாடல்…

    Men of England, wherefore plough
    For the lords who lay ye low?
    Wherefore weave with toil and care
    The rich robes your tyrants wear?

    Wherefore feed and clothe and save
    From the cradle to the grave
    Those ungrateful drones who would
    Drain your sweat—nay, drink your blood?

    The seed ye sow, another reaps;
    The wealth ye find, another keeps;
    The robes ye weave, another wears;
    The arms ye forge, another bears. 

    Sow seed—but let no tyrant reap:
    Find wealth—let no imposter heap:
    Weave robes—let not the idle wear:
    Forge arms—in your defense to bear.  (verses: 1,2,4,5)

    மேற்கண்ட ஷெல்லியின் கவிதையைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளேன்… 

    இங்கிலாந்தின் மக்களே!
    உம்மைத் தாழ்த்தி ஒடுக்கும் பிரபுக்களுக்காய்
    ஏன் உடலைவருத்தி உழுகின்றீர்?
    கொடுங்கோலர்கள் அணிவதற்காய் ஏன்
    உழைத்து உயர்ஆடைகள் நெய்கின்றீர்?

    உம் வியர்வையை வற்றச்செய்யும் – அல்ல…
    குருதியைக் குடிக்கும் அந்த நன்றியிலாச்
    சோம்பேறித் தேனீகட்குத்
    தொட்டில் முதல் இடுகாடுவரை ஏன்
    உண்டியும் உடையும் தந்து புரக்கின்றீர்?

    விதைப்பது நீங்கள் அதனை அறுப்பது வேறொருவன்!
    செல்வத்தைக் கண்டடைவது நீங்கள் அதனைக்
    கொண்டு சுகிப்பது வேறொருவன்!
    ஆடைகளை நெய்து களைப்பது நீங்கள் அதனை
    அணிந்து இன்பத்தில் திளைப்பது வேறொருவன்!
    ஆயுதங்களை வடித்துத் தருவது நீங்கள் அதனை
    எடுத்துத் திரிவது வேறொருவன்! 

    விதையுங்கள்! ஆனால் அதனை
    எந்தக் கொடுங்கோலனும் அறுக்க அனுமதியாதீர்!
    செல்வத்தைத் தேடுங்கள்! அதனை
    எந்த வஞ்சகனும் தனக்காய்க் குவிக்க அனுமதியாதீர்!
    ஆடைகளை நெய்யுங்கள் அதனை
    எந்த வீணனும் அணிய அனுமதியாதீர்!
    ஆயுதங்களைச் செய்யுங்கள்…உமது தற்காப்புக்காக மட்டும்! 

    இப்பாடல்களில் தெறிக்கும் தீப்பொறி, இங்கிலாந்தின் சாமானிய மக்களுக்கெதிரான பிரபுக்களின் அடக்குமுறையையும் அநியாயத்தையும், சுரண்டலையும் எதிர்த்துக் குமுறும் எரிமலை ஷெல்லி என்பதை நமக்குத் தெளிவாய்க் காட்டுகின்றன. 

    (தொடரும்)

    Share
  • படக்கவிதைப் போட்டி 40-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. பிரேம்நாத் திருமலைசாமி எடுத்துள்ள இந்தப் புகைப்படத்தை இவ்வாரப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமை இதழின் நன்றி.

    headshaving

    பிள்ளைக்கனியமுதின் கருவிழிகள் அருவியாய் நீரைப் பொழிவது முடியிழந்த துக்கத்திலா? இல்லை… ’மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகம் பழித்ததை ஒழித்துவிடுங்கள்’ எனும் வள்ளுவத்தை அறியாதோராய் மக்கள் இருக்கிறார்களே எனும் துயரத்திலா?

    காரணம் எதுவானாலென்ன கண்மணியே…விரைவில் திருமுடி பெறுவாய்! சிந்தும் கண்ணீரை நிறுத்து! முகத்திலே புன்னகையைப் பொருத்து! 

    இந்த அழகுக் குழந்தையின் அழுகையைப் பற்றி நம் கவிஞர்களின் கருத்தென்ன என்று அறிந்துவருவோம் இனி!

    ***

    ’முடியிழந்தாலும் நீ முழுநிலவுதானம்மா! இன்றுன்னை அரவணைக்கும் அருமைத் தந்தையை நாளை நீ மறக்காதே!’ என்று மழலைக்கு இன்மொழிகள் பகர்கின்றார் திரு. ஜெயராமசர்மா.

    மொட்டை அடித்தாலும்
    முழுநிலவு நீயம்மா
    முடிமுழைத்த பின்னாலே
    முழுநிறைவு பெற்றிடுவாய் !

    அப்பாவின் அரவணைப்பில்
    அழுகின்ற நீபின்னர்
    அப்பாவை அணைத்துநிற்க
    அருவருப்புக் காட்டாதே

    *** 

    கண்ணே! உன் பெற்றோர் உனக்குச் செய்வன எல்லாம் உன் நன்மை கருதியே என்பதை உணர்வாய்! மேன்மேலும் வாழ்வில் உயர்வாய்!’ என்று நல்லுரை நவில்கின்றார் திரு. தாரமங்கலம் வளவன். 

    முதல் மொட்டை
    குலதெய்வத்திற்கோ, பழனி முருகனுக்கோ
    போட்டே ஆக வேண்டும்..

    மொட்டை போட்டால்தான்
    உன் முடி கருகருவென்று  அடர்த்தியாய் வளரும்..

    இன்று ஆரம்பித்து பெற்றோர் உனக்கு
    செய்யும் ஒவ்வொரு காரியமும் உன்
    எதிர்கால நன்மைக்கே என்று புரிந்து கொள்.

    நீ சற்று வளர்ந்து பெரியவளானதும்
    உன்னை பள்ளிக்கு அனுப்பும் போது
    அழாதே..

    அது உன் வளமான எதிர்காலத்திற்கு என்று மனதில் கொள்..

    இன்னும் சற்று வளர்ந்த பின்
    உன்னை படி, நல்ல மதிப்பெண் எடு
    என்று பெற்றோர் சொன்னால்
    அவர்கள் மேல் கோபம் கொள்ளாதே
    அதுவும் உன் எதிர்கால நன்மைக்கே என்று புரிந்து கொள்..

    உன் கல்லூரிக்காலத்தில்
    நல்ல பழக்கங்களையும், நல்ல நண்பர்களையும்
    மட்டுமே வைத்துக் கொள் என்று
    பெற்றோர் உனக்கு அறிவுரை சொன்னால்
    உதாசீனப் படுத்தாதே..
    ஏற்றுக் கொள்..

    *** 

    குலசாமிக்காகத் தரும் முடிகாணிக்கை உன் குலம் காத்திடும்! சத்தமிடாமல் சற்றே உன் தலையைக் காட்டு! என்று கொஞ்சுமொழி கூறிக் குழந்தையை அழைக்கின்றார் திருமிகு. சியாமளா ராஜசேகர். 

    பிள்ளை யழுகையிலே பெற்றவுள்ளம் நோகிறதே
    துள்ளு மழகே  துவளாதே !- முள்ளாகக்
    குத்தியதோ கண்ணே ! குலச்சாமி காத்திடும் 
    கத்தாமல் நீசற்று காட்டு .

    *** 

    ’தனக்கு மொட்டை போட்டதற்காக அழவில்லை இப் பெண்மகவு; நாளை வரதட்சணை என்ற பெயரில் இச்சமுதாயம் தன் தகப்பனுக்குப் போடப்போகும் மொட்டையை நினைத்தே அழுகின்றது’ என்று சமூக அவலத்தைக் குழந்தையின் வாயிலாய்ச் சாடுகின்றார் திரு. மெய்யன் நடராஜ். 

    தாய்மாமன் மடியில் வைத்துத்தம்
    பெண் குழந்தைக்கு  மொட்டை அடிக்கும்
    தாய்மார்கள் அறிவதேயில்லை.
    மொட்டையடித்தல் பற்றியறியா
    மாமன்மார்கள் பிற்காலத்தில்
    தம் மகன்மூலம் தம்கணவர் சொத்தையெல்லாம்
    மொட்டையடிப்பர்கள் என்னும் உண்மை .

    மொட்டையாகும் தலைக்காக
    குழந்தை அழவில்லை  நாளை
    தகப்பனை மொட்டையடிக்கப்
    போகிறார்களே என்றழுகிறதெனும்
    உண்மை தகப்பன் மாருக்கே புரியும் உண்மை .

    இனி இங்கே காதுகுத்தி
    இத்துனூண்டு தங்கத்தைப் போட்டுவிட்டு
    பவுன்கணக்கில் கேட்கப் போகிறார்களே
    என்று புலம்பி அழும் குழந்தையை
    புரிந்துகொள்ள  இன்னும் நாம்
    பதினெட்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும்

    *** 

    ’தலைக்கனம் குறையத் தலைமுடி யிழப்பாய்; இழந்ததை விரைவில் பெறுவாய் பலமடங்காய்!’ என்று மனமினிக்கும் மணிமொழிகளை இம்மழலைக்குச் செப்புகின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

    தலை தலையாய்
    வேண்டுதல் இந்த
    வேண்டு தலை
    கடந்த ஜென்மத்து
    பந்தங்களை துண்டிக்க
    இந்த வேண்டு தலை
    இந்துக்களின் முக்கிய சடங்கு
    குல தெய்வத்துக்கு
    முடி கொடுத்தால்
    முடி மட்டுமல்ல
    குழந்தையும் ஆரோக்கியமாய்
    வளரும் என்பது ஐதீகம்
    தலைக்கனம் போக
    தலைமுடி தருவாய்
    பார் பார் உனக்கு முடி
    எப்படி வளரப்போகுதுன்னு
    அழாமல் முடிகொடு சாமிக்கு
    அடுத்துக்கொடுப்பார் சாமிசீக்கிரமே
    ஆறடி க்கூந்தலை உனக்கு

    *** 

    செல்லமே! தாய்மாமன் மடியினிலே தலைமுடிக்கு விடு’தலை’ தந்து சாமி வேண்டு’தலை’ நல்லபடி செய்திடுவோம் என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன். 

    தாய்மாமன் மடியினிலே முடியிழப்பது ஓர் இன்பம்.
    தாய்மாமன் தன்மடியில் தாங்கிப் பிடித்திட்டார்,
    ஓய்வின்றி வேண்டாம் அழுகையும்தான் சாய்ந்திடாதே
    செல்லமே சொல்கேளு, சொந்தசாமி வேண்டுதலை
    நல்லபடிச் செய்திடுவோம் நாம்!

    *** 

    முடி இறக்குவதற்காக நிகழ்த்தப்படும் இத்திருவிழா, உறவுகள் கூடி உணர்வையும் உணவையும் பரிமாறிக் கொள்ளும் ஓர் உன்னதத் திருவிழா என்று உளம்பூரிக்கின்றார் திரு. க. கமலகண்ணன்.  

    முடியை கொடுப்பது
    சம்பிரதாயம் மட்டுமல்ல
    மகிழ்ச்சியின் திருவிழா
    உறவுகளின் அன்பின் ஒற்றுமைக்கு
    உணர்வு கொடுக்கும் 
    ஆத்மார்த்த நிகழ்வு
    மாமன் மடியில் வைத்து
    மொட்டை போட
    அத்தை ஆறுதல் சொல்ல
    மற்ற உறவுகள் உணவுக்கும் 
    உணர்வுக்கும் உதவி செய்ய
    குழந்தைக்கு தலைமுடி 
    எடுத்தால் இன்னும் 
    ஆரோக்கியம் என்ற 
    உண்மையான காரணத்திற்காக
    முன்னோர்கள் செதுக்கி 
    வைத்த சிற்பம் போன்ற 
    நல்வாழ்வின் வழிமுறைகள்
    அழாதே தங்கம் 
    நீ ஆரோக்கியமாய்
    நீடூடிவாழ்வாய்

    *** 

    மாற்றவியலாத மூடவழக்கங்களில் முடி வழித்தலும் ஒன்று என்றாலும், இதனால் குழந்தையின் முடி அடர்ந்து வளரும் என்பது இதிலோர் சாதகமான அம்சம் என்கிறார் திருமிகு. வேதா. இலங்காதிலகம். 

    பிறந்த முடி வழித்தலென்று
    பிறந்த முப்பதாம் நாள்
    சிறப்பாகத் துடக்குமுடி வழிப்பர்
    மறக்காது சந்தனமிட்டுக் குளிர்விப்பார்.
    குழந்தை கதறக் கதற
    வழங்கும் வழக்கங்கள் கொடுமை!
    புனித அறிவைப் பாவிக்கலாம்!
    மனித வேண்டுதல்களிற்கு அளவில்லை!

    மூட வழக்கமென்று இதற்கு 
    மூடுவிழா வைத்தாலும்  பல 
    தடவை வழித்தால் முடி
    அடர்த்தியாக வளருமென்பதும் வழக்கு.
    பொது உறவு கூடல்
    இது சடங்கு என்று!
    மாற்ற நினைத்தாலும் மாறாது
    போற்றும் நிகழ்வு இது!

    *** 

    தந்தை சிரித்திருக்க, குழந்தையோ அழுதிருக்க நிகழும் இந்த முடிகாணிக்கைச் சடங்கானது, இறைவனிடம் சரணடையும் தத்துவத்தின் குறியீடு என்கிறார் திரு. நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன் . 

    திருக்கோவிலில் முடி காணிக்கை செலுத்துவது
    இறைவனிடம் சரணாகதியாகும் சம்பிரதாயம்
    திருக்கோவிலில் முடி காணிக்கை கொடுக்கும் போது
    தந்தை சிரிக்கிறார்
    மகன் அழுகிறார்
    முடி வளர்ந்து மகன் வளர்கிறார்
    மகன் தந்தையைகிறார்
    தந்தை தாத்தவாகிறார்
    பேரனும் திருக்கோவலில் முடிகாணிச்கை செலுத்துகிறைரர்
    முடிசூடி மன்னாராகத் திகழ்கின்றார்

    ***

    சிறந்த கவிதைகள்; பரந்த சிந்தனைகள். கவிஞர் பெருமக்களுக்கு என் பாராட்டுக்கள்! 

    இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை அடுத்துக் காண்போம்! 

    பிள்ளைப்பருவத்தில் முடிமீது வைக்கும் ’பற்று’ வளர்ந்தபின்னும் மனிதர்கட்கு விடுவதில்லை! ’பற்றற்றவன் பற்றைப் பற்றுவது ஒன்றுதான் பற்றை விடுதற்கு உற்றவழி’ என்பார் வள்ளுவப் பெருந்தகை. அஃது அத்துணைச் சுலபமன்று அல்லவா? 

    ’குழந்தாய்! அம்மான் மடியே ஆசனமாய், தருவாய் முடியைக் காணிக்கையாய்! அடைவாய்…நீ இழந்த முடியை விரைவாய்!’ என்று பிஞ்சுக் குழந்தைக்கு வாழ்வியல் உண்மைகளைப் பக்குவமாய் ஊட்டுகின்றது ஒரு கவிதை! 

    முடி இழக்கும் போதும்
    முடி துறக்கும் போதும்
    அழுவதும் சிரிப்பதும்
    அவரவர் இயல்பே…..

    ஆனால் குழந்தாய்
    அம்மான் மடியில்
    அமர ஓர் சிம்மாசனம்
    அழகாய்த் தரும்முடி காணிக்கை

    மகிழ்வாய்க் கொடுக்க
    மனமகிழும் ஆண்டவனும்
    உறவும் சுற்றமும்
    ஒன்றுகூடும் வழிபாடு……

    இதுதான் வாழ்வின்
    இனியதொரு தொடக்கம்
    இனிமேல் நிகழ்வன
    எல்லாமிதில் அடக்கம்

    இழந்த முடியழகு
    இன்னும் அழகூட்டும் மொட்டை….
    இது ஓர் ஒத்திகை
    இங்கினி யாரும் நமை
    அடித்திடக்கூடாது மொட்டை…..
    இழந்தன எல்லாம்
    மீளத் திரும்பிடும்…..
    சிரசில் முடியும்
    செவ்வனே வளரும்,
    அழகும் மிளிரும்

    அது ஓர் தத்துவம்
    அறிந்தவர் அறிவாராக! 

    தத்துவக் கருத்துக்களை எளிமையாய்த் தந்திருக்கும் இக்கவிதையை இயற்றிய திரு. இளவல் ஹரிஹரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

    *** 

    இந்தக் கருப்புவெள்ளைப் புகைப்படத்தின் நீட்சியை… காலவோட்டத்தில் இம்மழலைக்குக் கேசம் வளர்ந்திடும் காட்சியை…மனக்கண்ணில் வண்ணப்படமாய் விரிக்கும் கவிதை ஒன்று! 

    கருப்பு வெள்ளை
    புகைப் படத்தை
    உற்றுப் பார்த்துக்
    கொண்டேயிருந்தேன்…..
    மெல்லத் துளிர் விடத்
    தொடங்கியது….
    கால
    ஓட்டத்தின்
    வண்ண கேசங்கள் 

    புகைப்படக் காட்சியோடு சிந்தனையின் பரப்பை வெட்டிவிடாமல், அதையும் தாண்டிக் கற்பனைச் சிறகை அகல விரித்திருக்கும் திரு. கவிஜியின் இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்க் குறிப்பிடுகின்றேன்.

    தம் புதுமைக் கருத்துக்கள் வாயிலாய்ப் புகைப்படங்களுக்குப் புதிய வண்ணங்களைத் தீட்டிவரும் கவிஞர் பெருமக்களுக்கு என் நன்றி!

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 39-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இந்த வாரத்தின் படக்கவிதைப் போட்டிக்கான ஒளிஓவியம் திரு. ராகுலுடையது. அதனைத் தேர்வு செய்தவர் வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் வல்லமை இதழின் நன்றிக்கு உரியவர்கள்.

    a guy with a fire cracker

    கையிலே பூத்திரியிருந்தும் முகம் பூத்திருக்கவில்லையே இந்தச் சிறுவனுக்கு.  ஏன்?

    இதுகுறித்துச் சிந்திப்பதற்குத்தான் நம் கவிஞர் பெருமக்கள் இருக்கின்றார்களே…எனவே இவ்வேலையை அவர்களிடம் விட்டுவிடுகின்றேன்!

    எமக்குத் தொழில் அவர்களின் கவிதையை வாசித்து மகிழ்தலும், மதிப்பீடு செய்தலுமே அல்லவா? இதோ அப்பணியில் இறங்குகின்றேன்!

    புகையிலே மனத்திற்கு மகிழ்வளிக்கும் நல்ல புகை எது வாழ்விற்கே பகையாகும் தீய புகை எது என்று அழகாய்ப் பட்டியலிட்டுள்ளார் திருமிகு. வனிதா.

    தாயோ மனைவியோ
    சமைக்கும்போது
    புகை வந்தால்
    புகை நல்லது 

    தேவை இல்லாத
    குப்பைகளை ஏறிக்கும்
    வரும் புகை
    வீடையும் நாட்டை
    சுத்தமாக்கும் புகை 

    தீபாவளிக்கு  வெடிக்கும்
    பட்டாசின் புகை
    அனைவருக்கும் தருவது
    மகிழ்ச்சியின் புன்னகை   

    ஆனால்
    நீ  உன் வாயில்
    புகைக்கும் புகை
    உனக்கும்
    உன் வீட்டுக்கும் நாட்டுக்கும்
    கேடு  புகை
    அப்புகை
    உன்  உயிரையும்
    உன் உடலையும்
    சுடுகாட்டில் எரிக்கும் புகையாக
    மாறிடக்கூடாது.

    ***

    வெளிச்சத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அடையாளப்படுத்துகின்றனர். அவ்வகையில், இரவுக்குள் ஓர் இரவு திரைவிலக்கிக் காட்டுவதில்தான் தெரிகின்றது என் வெளிச்சம் என்கிறார் திரு. கவிஜி. 

    நினைக்காத போதும்
    மறக்கத்தான்
    முடியவில்லை
    மனநிலை பிறழ்ந்தவன்
    சூட்சுமம்

    தொடர்ந்து
    பேசிக் கொண்டேயிருக்கும்
    மொழிக்குள்
    மௌனமாய் நிர்வாணம்
    சுமக்கிறது நிழல்

    சுற்றும் முற்றும்
    பார்க்க முடியாத தருணத்தை
    வேலிக்குள் தவழவிடும்
    குதர்க்கம் தாக்கும்
    தர்க்கம்

    காற்றேயில்லாத போதும்
    தூற்றிக் கொள்ளும்
    ஜடங்களின் இருண்மைக்குள்
    இயலாத சக்கரமாய்
    புது ஏக்கம்

    இதோடு முடிகிறதாய்
    நினைக்கும் இரவுக்குள்
    ஓர் இரவு
    திரை விலக்கி
    காட்டுவதில் தெரிகிறது
    என் வெளிச்சம்…!

    *** 

    ’இருளில் இருளைத் தேடும் காற்றாயிராதே! உன் மனவானில் நம்பிக்கைக் கதிர்கள் எழும்வரை வாழ்க்கை விடியாதே!’ என்கிறார் திரு. சிவசங்கர்.

    உறங்கிடும்
    இரவுக்கும்
    பகலுக்கும்
    இடையினில்
    நடந்திடும்
    திகம்பரக்
    காட்சிகள்
    எதையுமே
    நம்மால்
    வெளிச்சங்கள்
    இன்றிக் 
    கண்டிடத்
    தெரியாதே! 

    தெரியாக்
    குழப்பங்கள்
    மனதினில்
    சூழ்ந்திட
    விளக்கங்கள்
    தேடித்
    திரிபவன்
    போலே
    இருளினில் 
    இருளைத் 
    தேடி நீ
    காற்றாய்
    அலையாதே!

    […]

    முடிவிலாத்
    துன்பங்கள்
    தாங்கிடும்
    உனக்குள்
    இருக்கும்
    பிரபஞ்ச
    வானில்
    துளிர்விடத்
    தொடங்கிடும்
    நம்பிக்கைக்
    கதிர்கள்
    எழும்வரை
    விடியாதே!

    […]

    தவறிடும்
    காரியம்
    நிகழ்ந்திடும்
    போதிலும்
    சுடரொளி
    போலே
    இயங்கிடு
    வாழ்வின்
    இருளதை
    வென்றிடு
    அதுவரை
    இரவினில்
    உறங்காதே!…

    *** 

    பசி போக்கும் புகை; பகையாகும் புகை; அலறவைக்கும் புகை; வாழ்க்கையை அறியவைக்கும் புகை எனப் புகையின் பல்வேறு அவதாரங்களை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார் திரு. கொ. வை. அரங்கநாதன். 

    புகை பகையாகி
    புற்று நோயாகும்
    பூரித்து நீ இழுத்தால்!

    புகைப் பசிபோக்கும்
    பூனைத் தூங்கிய
    அடுப்பிலிருந்து
    வெளிவரும்போது

    புகை அலறவைக்கும்
    கூறையிலிருந்து
    கூப்பிடும்போது!

    புகை ஆசானாகி
    நிலையாமை போதிக்கும்
    மயானத்திலிருந்து
    மூண்டெழும்போது!

    புகை மகிழ்வாக்கும்
    தன்னுள் புதைந்த
    ஏழைச் சிறாரின்
    உழைப்பைப் பூத்தெறியாய்
    உமிழும்போது!

    நெருப்பின்றி புகையாது
    நேற்றையப் பழமொழி
    பகையாலேயேப் புகையும்
    நெஞ்சங்களின் காலமிது

    புகை
    நல்லதா கெட்டதா
    புலப்படும்
    இடத்தை வைத்தேத்
    தீர்மானிக்கப்படுகிறது!

    *** 

    மத்தாப்பை விலைகொடுத்து வாங்கும் பணம்படைத்தவனைவிட, வழியில் கண்டெடுத்து எரியவிடும் எளியவன் அதிக மகிழ்ச்சியடைகின்றான் என்பது திரு. செண்பக ஜெகதீசனின் எண்ணம். 

    விலைகொடுத்து வாங்கி
    வெடிப்பவனுக்கு
    வராத மகிழ்ச்சி
    வந்துவிடுகிறது,
    வழியில் கிடைத்த
    பாதி எரிந்த மத்தாப்பை
    எரியவிடும் ஏழைக்கு…!

    *** 

    ’வறுமையில் நீ வாடினாலும், மத்தாப்புக் கொளுத்தும் உன் கண்களில் தெரியும் ஒளி, உன் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது!’ என்று இச்சிறுவன் குறித்து மதிப்பீடு செய்கின்றார் திரு. க. கமலகண்ணன். 

    புகையின் மேகங்களுக்கு நடுவே நீ
    வறுமையின் வாழ்க்கைக்கு நடுவே நீ
    எண்ணங்களிலும் செயல்களிலும் தீர்க்கம்
    மாறப்போகும் உன் வாழ்க்கையே சொர்க்கம்
    உடம்புக்
    களைத்த போதும்
    உழைப்புச் சளைத்த போதும்
    விழாக் கோலத்தில் உருக்கமாய்
    ஒளிர்வது மத்தாப்பு மட்டுல்ல
    அசராமல் பார்க்கும் உன் கண்களும்தான்!

    *** 

    ’ஊரெல்லாம் கேட்கும் வெடிச்சத்தத்தில் எங்கள் வயிறுபோடும் பசிச் சத்தம் யாருக்கும் கேட்பதில்லை; இருள் மண்டிக்கிடக்கும் எங்கள் இல்லம் தற்காலிகமாய் ஒளிபெறுவது யாரோ கிழித்துப்போட்ட மத்தாப்பின் கணநேர வெளிச்சத்தில் மட்டுமே!’ என, கல்விக்கனவுகளைச் சுமந்து திரியும் ஏழைச்சிறுவன் ஒருவனின் ஏக்கத்தை ஆழமாய்ப் பதிவுசெய்திருக்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

    எங்கள் அவதரிப்பு
    புவியில் போராடத்தான்
    உயிரைப்பணயம் வைத்து
    உழைக்கிறோம்
    கந்தகத்தையும் பாஸ்பரஸையும்
    கையில்பூசிக்கொண்டு
    சிறார்களைவேலைக்குப்
    பயன் படுத்தக்கூடாதென்று
    சட்டம் இருந்தாலும்
    சட்டத்தை சட்டை செய்யாதவர்கள்
    இருக்கும் வரை எங்கள்
    குடும்ப வண்டிக்கு பழுதில்லை
    […]
    ஊரெங்கும் கேட்கும் வெடிச் சத்தத்தில்
    எங்கள் வெறும் வயிறு
    போடும் சத்தம் காணாமல் போகும்
    இருள் மண்டி கிடக்கும் எங்கள்
    இல்லத்தில் யாரோ எறித்துப்போட்ட
    மீதமான கம்பி மத்தாப்பின்
    ஒளியில் ஏற்படும்
    தற்காலிக வெளிச்சம் மட்டுமே
    மீதி நேரம் வீடும் வயிறும்
    புகைச்சலில் போராடும்
    என் போன்ற சிறார்கள்
    நன் முறையில் பள்ளிபோக
    நான் மட்டும் வெடிக்கிடங்கில்
    என் பள்ளிக்கனவுகள்
    எப்போது விடியும்?

    *** 

    ’கருகும் கந்தகப் பூக்களால் எங்கள் வாழ்வும் அவ்வப்போது கருகினாலும், தன்னம்பிக்கை எனும் ஒளியை நாங்கள் என்றும் இழக்கவில்லை’ எனும் நம்பிக்கை நாயகனை நம்கண்முன் நிறுத்துகின்றார் திரு. இளவல் ஹரிஹரன். 

    ஒற்றைக் கம்பியில்
    ஒளிரும் சுடரில்
    ஒருநாள் பசியோ
    தீர்ந்திருக்கும்……..

    கலையும் புகையில்
    தெரியும் கனவுகள்
    மெல்ல….மெல்லக்
    கலைந்திருக்கும்……

    கந்தகப் பூக்கள்
    கருகும் வாடையில்
    அகால மரணம் திடீரென
    வாழ்வை ஒழித்திருக்கும்……..

    இருந்தும் என்ன……
    இழக்கா தன்னம்பிக்கை
    இருக்கும் வாழ்வை
    சுடராய் வெளிச்ச ஒளிகொடுக்கும்

    ***

    கவிதை மத்தாப்புக் கொளுத்திக் கருத்துக்களை அழகான ஒளிச்சிதறல்களாய்த் தந்திருக்கும் கவிஞர் பெருமக்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்கின்றேன்.

    அடுத்து நாம் காணவிருப்பது இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை! 

    ”உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
    பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” என்கிறது புறநானூறு. ஆனால் கல்விச்செல்வத்தை உறுபொருள் கொடுத்துப் பெறுவதென்பது ஏழை எளியோர்க்குச் சாத்தியப்படுவதாய் இல்லையே…என் செய்வது? அதனால்தான் அவர் வீட்டுப் பிள்ளைகள் மத்தாப்பாய்ச் சிரித்துக்கொண்டு மகிழ்வோடு கல்விகற்கும் வயதில் கந்தகத் தொழிற்சாலைகளில் வேலைசெய்து கருகிப் போகின்றனர். ’அச்சிறார்களின் இருண்ட வாழ்க்கையில் விளைவதே வெளிச்சம் தரும் வண்ண மத்தாப்புக்கள்’ எனும் கவிதையொன்றில் என் நெஞ்சம் நெகிழ்ந்தது! 

    உன் மத்தாப்பு சிரிக்கும் ஒவ்வொரு பொழுதும்
    பட்டாசுத் தொழிற்சாலைகளில் புகைந்து
    கொண்டுதானிருக்கிறது
    குழந்தைத் தொழிலாளர்களின்
    எதிர்காலம் .

    ஒருசிலரின்
    வண்ணமயமான வேடிக்கைகளுக்கு
    பல சிறுவர்களின் இருண்ட வாழ்க்கை
    துணை போகின்றன என்பது கண்கூடு.

    நமது புன்னகைக்கு
    அவர்களின் கண்ணீரே
    அடித்தளமிடுகிறது 

    மத்தாப்புக்களின்
    தலையில் தீ வைக்கும்போது
    அது பல ஏழை சிறார்களின்
    எதிர்காலத்தின் மேல் வைக்கப்படும்
    கொள்ளி என்பதை உணர்ந்தால் போதும்
    வெளியே புகையும் அதுஇனி
    உன் உள்ளே புகையும் 

    வாண வேடிக்கைக்குள் காணாமல்போகும் இளஞ்சிறாரின் வாழ்க்கையை இதயபூர்வமாய்ப் பதிவுசெய்திருக்கும் திரு. மெய்யன் நடராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே!

    *** 

    மத்தாப்பைக் கையிலேந்தி அதனுள் ஒளிந்திருக்கும் வேதனையான வாழ்வியல் உண்மைகளைச் சிந்தித்துச் சிந்தை நைந்துகொண்டிருக்கும் சிறுவன் ஒருவனைத் தன் கவிதையில் சிறப்பாய்ப் பதிவுசெய்திருக்கின்றார் திரு. தாரமங்கலம் வளவன்.

    எரியும் இந்த மத்தாப்பை யார் செய்திருப்பார்..
    என்னைப் போல் குடும்பத்தை தாங்கிப் பிடிக்கும்
    மற்றுமொரு சிறுவனா

    எரிவது என்ன.. மத்தாப்பா..
    இல்லை.. என் அம்மாவைப் போன்ற தாய்களின் வயிறா..

    ஓடித் திரிந்து பாடம் கற்கும் வயதில்
    நான் உழைத்து தினம் கொண்டு வரும் சொற்ப கூலி,
    டாஸ்மாக்கில் கரைந்து போகும்
    என் அப்பாவின் கூலிக்கு பதிலாகுமா..

    நாளெல்லாம் உழைத்து
    பணத்துடன் வீட்டுக்கு வரவேண்டிய அப்பா
    போதையுடன் வரும் போது
    நான் என்ன செய்ய வேண்டும்..
    யோசிக்கிறேன்..

    தொலைத்தது என்ன
    எங்களைப் போன்றோரின் எதிர்காலமா..
    அது இந்த மத்தாப்பு வெளிச்சத்தில் கிடைக்குமா..

    இன்று மட்டும் தான் எனக்கு
    விடுமுறை..
    நாளைக்கு நான் வேலைக்கு
    போயாக வேண்டும் என்பதால்
    எல்லாவற்றையும் மறந்து விட்டு
    இன்று தீபாவளியை மகிழ்ச்சியாய்
    கொண்டாடுவதா..
    யோசிக்கிறேன் நான்.. 

    இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்த் தெரிவிக்கின்றேன். 

    கவிஞர்கள் அனைவருக்கும் மீண்டும் என் வாழ்த்தும் பாராட்டும்!  

     

    Share
  • அறிந்துகொள்வோம் – 25 (’மனோன்மணீயம்’ பெ. சுந்தரம் பிள்ளை)

    -மேகலா இராமமூர்த்தி

    சுந்தரத் தமிழால் சிந்தை கவர்ந்தவர்!

    ’தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்றார் பாவேந்தர். அந்த அமுதத்தமிழின் சுவையினை முக்கனிகள்போல் மூன்றாய் வகைப்படுத்தினர் நம் முன்னோர். அவை முறையே இயல், இசை, கூத்து எனும் நாடகம் ஆகியவை. ஓசை நயத்தோடு கூடிய பாக்களாகவும், செய்யுளாகவும் பரிமளித்த தமிழ், பின்பு மெல்ல மெல்ல உரைநடையையும் (இயற்றமிழ்) தனக்குள் உள்வாங்கிக்கொண்டது. செய்யுளின் இடையிடையே உரைநடையும் விரவிவரும் பாங்கை ’உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ எனும் பெயரான் அழைத்தனர் தண்டமிழ்ப் புலவோர். தமிழின் மற்றொரு பிரிவான நாடகம், உரையும் பாட்டும் விரவிய கூத்தாகும்.

    கண்ணுக்கும் கருத்துக்கும் ஒருங்கே விருந்தளிக்கும் அருங்கலையாம் நாடகக்கலையின் இலக்கணங்களை ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியம் எண்வகைச் சுவைகளாய் மெய்ப்பாட்டியலில் விளக்கிச் செல்கின்றது. நாடகத்திற்கான இலக்கணங்களைச் செப்புகின்ற இலக்கண நூல்கள் பலவும் அன்றிருந்தன என்பதைச் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் நமக்கு அறியத்தருகின்றார். அகத்தியம், சயந்தம், குணநூல், கூத்தநூல், மதிவாணர் நாடகத் தமிழ்நூல், செயிற்றியம் முதலியவை அவற்றில் சில. இவற்றில் ஒன்றுகூட இன்று கிடைக்காமல் போய்விட்டது வருந்தத்தக்கது. நாடக நூல்களைப் பேணாது தொலைத்தது போன்றே நாடகக்கலையையும் புரக்காது விடுத்தனர் நம் தமிழ்மக்கள்.

    இவ்வாறு பல்லாண்டு காலமாய்த் தாழ்வுற்று வரவேற்பின்றிப் பாழ்பட்டு நின்ற நாடகக்கலைக்குப் புத்துயிரூட்டி அதனை மிடுக்காய் நடைபயிலவைத்த பெருமைக்குரியவர் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை ஆவார். கேரளாவிலுள்ள ஆலப்புழையில் 1855-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் நாள், பெருமாள் பிள்ளை, மாடத்தி அம்மாள் இணையருக்கு இணையற்ற மகனாய்த் தோன்றினார் சுந்தரனார். சைவ சமய வழிபாட்டு நூல்களான தேவாரம், திருவாசகம் முதலியவற்றைத் தம் தந்தையிடம் இளமையிலேயே கற்றுத் தேர்ந்தார்.

    கல்வியிலும் சிறந்துவிளங்கிய அவர், தத்துவத் துறையில் முதுகலைப் பட்டம்பெற்றுத் திருவனந்தபுரத்திலுள்ள மகாராஜா கல்லூரியில் (The Maharaja’s College) தத்துவத்துறைப் பேராசிரியராய்ப் பணியாற்றினார்.

    sundarampillaiதம் மாணாக்கர் பலரும் ஆங்கில நாடக ஆசிரியரான ஷேக்ஸ்பியரின் நாடகங்கள்மீது பெருங்காதல் கொண்டு அவற்றைப் படித்தும் நடித்தும் இன்புறக்கண்ட சுந்தரனார், செந்தமிழிற் சிறந்ததோர் நாடகமியற்றித் நந்தமிழில் நாடக நூல்கள் இல்லையெனும் குறைகளையத் தீர்மானித்தார். அதற்கு ஏற்றதோர்க் கதையினை அவர் சிந்தித்திருந்த வேளையில், புகழ்பெற்ற ஆங்கில நூலாசிரியரும், அரசியல்வாதியுமான லிட்டன் பிரபு (Edward George Earle Bulwer Lytton) 1866-இல் இயற்றிய ’The Lost Tales of Miletus’ எனும் நூல் அவர் நினைவுக்கு வந்தது. அந்நூலுக்கு ’The Secret Way’ எனும் மற்றொரு பெயருமுண்டு. அதனையே தெள்ளுதமிழ்க் காப்பியமாய்த் தீட்டத் துணிந்தார் சுந்தரனார். அவ்வாறு மலர்ந்ததே ‘மனோன்மணீயம்’ எனும் புகழ்வாய்ந்த நாடகத் தமிழ்நூல். 1891-ஆம் ஆண்டில், எளிய செய்யுள் நடையில், ஆசிரியப்பாவால் இயற்றப்பட்ட இந்நூல், தமிழின் ஐம்பெருங்காப்பியங்களுக்கு ஈடான இலக்கியச் சுவையும், செறிவான நடையும் கொண்டு கற்பாரைக் காந்தமெனக் கவர்கின்றது.

    கதைகளை நாடகங்களாக அமைப்பதற்கென்று சில இலக்கண மரபுகள் உண்டு. ஆம், நாடகம் எழுதவேண்டுமானால், கதையை ஐந்து பிரிவுகளாய்ப் பிரிக்கவேண்டும். அப்பிரிவுகளுக்கு ’அங்கம்’ என்று பெயர். இதனைச் ’சந்தி’ என்றும் கூறுவர். முதல் சந்தியை ’முகம்’ (The Exposition) என்றும், இரண்டாம் சந்தியைப் ’பிரதிமுகம்’ (Rising Action) என்றும், மூன்றாம் சந்தியைக் ’கருப்பம்’ (The Climax)  என்றும், நான்காம் மற்றும் ஐந்தாம் சந்திகளை முறையே விளைவு, துய்த்தல் (Falling Action  & Resolution) என்றும் வகைப்படுத்துவர். வடமொழி நாடகங்களும், உலகப்புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரின் நாடகங்களும் இவ்வாறு ஐந்து அங்கங்களாகவே பகுக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    இனி, மனோன்மணீயம் குறித்த சிறு அறிமுகத்தையும்  அதில் இடம்பெற்றுள்ள  சுவையான பகுதிகள் சிலவற்றையும் பார்ப்போம்.

    ஜீவகவழுதி என்னும் சூதுவாதறியாத பாண்டிய மன்னன்; தவசீலரும் ஜீவகனின் நலம் நாடுபவருமான குலகுரு சுந்தர முனிவர் (இவரைத் தன்னுடைய குருவான கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளைப் பிரதிபலிக்கும் பாத்திரமாய்ச் சுந்தரம் பிள்ளை அமைத்துள்ளார்); நற்சிந்தனைகளும், நல்லழகும் வாய்ந்த மன்னனின் ஒரே மகளும், காவியத் தலைவியுமான மனோன்மணி; சேர மன்னனும், மனோன்மணியின் கனவில் தோன்றிய காதலனுமான புருடோத்தமன்; மனோன்மணியின் அறிவார்ந்த தோழி வாணி; வாணியின் தந்தையும் பொருளாசை மிக்கவருமான சகடர்; நயவஞ்சகமும், நாவன்மையும் படைத்த ஜீவகனின் அமைச்சன் குடிலன்; கொடிய குணங்களில் தந்தைக்குச் சற்றும் குறையாத குடிலனின் மகன் பலதேவன்; சுத்தவீரமும், அரசன்பால் பேரன்பும், நகைச்சுவையுணர்வும் நிரம்பிய நாராயணன்; வாணியை மட்டுமல்லாது இயற்கையையும், உயிரினங்களையும் சேர்த்தே நேசிக்கும் நடராசன் எனப் பல்வேறு கதைமாந்தர்களைக் கொண்டு புனையப்பட்ட அழகிய காவியமிது!

    நடராசன் வாயிலாய் இயற்கையின் சிறப்பை, அதிலுள்ள சிற்றுயிர்களும் மற்றையோர்க்குப் பயனாகுந் தன்மையை தெற்றென விளக்கியுள்ளார் நூலாசிரியர். சான்றாக, ’நாகப்பூச்சி’ எனப்படும் நாங்கூழ்ப்புழுவொன்றைக் கண்ணுறும் நடராசன், அதன் மாண்புகளை, உழவர்க்கு அது செய்யும் ஒப்பற்ற தொண்டை விளக்கும் வரிகள் நம் மனங்கவர்வன. 

    அவ்வரிகள்… 

    ஓகோ! நாங்கூழ்ப் புழுவே! உன்பாடு
    ஓவாப் பாடே உணர்வேன்! உணர்வேன்!
    உழைப்போர் உழைப்பில் உழுவோர் தொழில்மிகும்
    உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்துநீ!
    எம்மண் ணாயினும் நன்மண் ணாக்குவை!
    விடுத்தனை யிதற்கா எடுத்தஉன் யாக்கை
    உழுதுழுது உண்டுமண் மெழுகினும் நேரிய
    விழுமிய சேறாய் வேதித் துருட்டி
    வெளிக்கொணர்ந் தும்புகழ் வேண்டார் போல
    ஒளிக்குவை உன்குழி வாயுமோர் உருண்டையால்!
    இப்புற் பயிர்நீ இங்ஙனம் உழாயேல்
    எப்படி யுண்டாம்? எண்ணா துனக்கும்
    குறும்புசெய் எறும்புங் கோடி கோடியாப்
    புழுக்களும் பூச்சியும் பிழைக்குமா றென்னை?
    ஒழுக்கமும் பொறையும் உனைப்போல் யார்க்குள? 

    மனோன்மணீயத்தின் உரையாடற் பகுதிகள் கற்பார் உள்ளத்தைக் களிகொள்ளச் செய்பவை. ’புத்தியே சகல சக்தியும்’ என்று இறுமாப்போடு இயம்பும் குடிலன், ‘பிடித்தால் கற்றை; விட்டால் கூளம்’ (இதனையே நாட்டார் வழக்கில் பிடித்தால் பிள்ளையார்; விட்டால் சாணம் என்பர்) என்றொரு பழமொழியைக் கூறி நாட்டுமக்களின் இயல்பை மொழிவதும், நன்மை தீமை என்று நவிலப்படுவதெல்லாம் அறியார் கூறும் வெறுமொழிகளே; அவை
    ’பாச்சி பாச்சி என்றழும் பாலர்க்குப் பூச்சி பூச்சி  என்பது போலாம்’ (பால் என்று அழும் பிள்ளையை அச்சுறுத்தப் பூச்சி பூச்சி என்று கூறுவது) என்று மற்றொரு பழமொழியைக் கூறி நம்மை வியப்பிலாழ்த்துவதும் சுந்தரனாரின் சுந்தரத் தமிழ்செய்யும் சாலவித்தையே!

    அதுபோல், நாஞ்சில் நாட்டின் நன்செய் வளத்தை மனோன்மணீயம் விவரிக்கும் பாங்கு, சங்கநூலான பத்துப்பாட்டின் பல நூற்பகுதிகளின் பிழிவாய்த் தோற்றமளிக்கின்றது.

    இந்நூலில், இடைப்பிறவரலாக இடம்பெறும் சிவகாமி சரிதை எனுங் கதை படித்துச் சுவைக்கவேண்டிய மற்றோர் இனிய பகுதி. இஃது, ஆங்கிலக் கவிஞர் ஆலிவர் கோல்ட்ஸ்மித் (Oliver Goldsmith) எழுதிய ’The Vicar of Wakefield’ (வேக்ஃபீல்டு பாதிரியார்) எனும் நூலிலுள்ள கிளைக்கதையான ’Edwin and Angelina, A Ballard’ என்பதன் தழுவலாகும். Edwin-ஐச் சிதம்பரனாகவும், Angelina-வைச் சிவகாமியாகவும் மாற்றியுள்ளார் சுந்தரம் பிள்ளை. ஆங்கில நூலின் தழுவலாயினும், தமிழ் மரபையொட்டியே கதை அமைக்கப்பட்டிருக்கின்றது. கதைக்குள் மற்றொரு கதையாய்த் திகழும் இச்சிவகாமி சரிதை, தீம்பலாவில் பெய்த நறுந்தேனாய்த் தித்திக்கின்றது.

    மனோன்மணீயம் காப்பியத்தை சுவைத்தறியாதவர்கூட அதில் இடம்பெற்றுள்ள ’நீராருங் கடலுடுத்த’ எனத்தொடங்கும்  தமிழ்த் தெய்வ வணக்கத்தை நன்கறிவர். அப்பாடலையே தமிழகஅரசு தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாய்ப் பாடநூல்களில் அச்சிட்டுள்ளது. ஆயினும், முழுப்பாடலும் தரப்படாமல் பாடலின் அடிகள் அங்குமிங்குமாய்க் கத்தரிக்கப்பட்டு இணைக்கப்பட்ட பாடலையே நாம் பாடநூல்களில் பயில்கின்றோம்.

    ஆதலால் பாடநூலில் இடம்பெறாத, அப்பாடலின் சிறந்த அடிகள் சிலவற்றை ஈண்டுக் காண்போம்.

    ”ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
    சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துவமே”
    என ஆரியமொழிபோல் (சமஸ்கிருதம்) வழக்கொழிந்து போகாமல், சீரிளமையோடு என்றும் திகழும் தமிழின் தகைமையைப் போற்றுகின்றார் ஆசிரியர்.

    தமிழ்நூல்களின் தொகுப்பான பத்துப்பாட்டைக் கற்று அதனிடத்துப் பற்றுக் கொண்டோர், எள்ளளவும் பொருட்செறிவோ, இலக்கணமோ இலாத பிற (கவிஞர்களின்) கற்பனைகளில் தம் உளத்தைச் செலுத்துவரோ?

    வள்ளுவப் பேராசானின் திருக்குறளைக் கசடறக் கற்றோர், சமநீதியற்றதாய், குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் மனுவாதி சாத்திரங்களை மறந்தும் நினைப்பரோ? என்றெல்லாம் அறிவுசால் வினாக்களை அடுக்கடுக்காய் எழுப்பி தமிழ்நூல்களின் தன்னேரிலாச் சிறப்பையும், அவை வலியுறுத்தும் செவ்விதான அறக்கோட்பாட்டையும் அங்கை நெல்லியென நமக்குணர்த்துகின்றார்.

    பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
    எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே?

    வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
    உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி?

    மனோன்மணீயமல்லாது, சுந்தரனார் வேறுபல சிறந்த நூல்களும் படைத்துள்ளார். சாத்திர சங்கிரகம் என்னும் நூற்றொகை விளக்கம், (பத்துப்பாட்டு குறித்து எழுதப்பட்ட) தமிழரின் வாழ்க்கைச் சித்திரங்கள் பத்து (The Ten Tamil Idylls), திருவிதாங்கூர்ப் பண்டை மன்னர் காலஆராய்ச்சி (The Early Sovereigns of Travancore), தமிழிலக்கிய வரலாற்றில் சில மைல்கற்கள் (Some Milestones in the History of Tamil Literature) போன்றவை அவற்றில் அடங்கும்.

    கற்றுத் துறைப்போகிய தமிழ்ச்சான்றோர் அனைவராலும் பாராட்டப்பெறும் ஒப்புற்ற நாடக நூலான மனோன்மணீயத்தை யாத்த சுந்தரனார், தம்மைக் குறித்தும், தம்நூல் குறித்தும் செப்பும் மொழிகள் பின்வருமாறு:

    ”தமிழன்னையே! என்றும் நின்னைப் புகழ்ந்தேத்தும் பெருமைமிகு மக்கள் பற்பலர் உளர். அவர்களுள் நின் பழம்பணியைப் புதுக்கியும், சிறப்புமிக்க நால்வகைக் கவிகளால் புதுப்பணிகள் செய்தும் நிற்பவர் புகழோடு நிற்கட்டும்!

    நின் புதல்வர்களாகிய புலவர்பெருமக்களுள் அடியேன் கடையேன்; அறியாச் சிறியேன். மலையாள நாட்டைக் குடியிருப்பாய் உடையேன். ஆயினும், எனக்கும் நீ தாயென்னும் தன்மையால், என் உள்ளத்தே ஊறிய பேராசையால், என் உழைப்பு ஒன்றையே தகுதியாய்க் கொண்டு இந்நாடக நூலை (மனோன்மணீயம்) இயற்றியுள்ளேன். அன்னாய்! இந்நூல் மிகவும் வெள்ளிது (சிறுமையானது); எனினும் உன்னுடைய கணைக்கால் சிறுவிரலுக்கேற்ற அணியாக (மெட்டி) இதனை ஏற்றுக்கொள்வாயாக!”

    நிற்புகழ்ந்  தேத்துநின்  நெடுந்தகை  மைந்தர்
    பற்பலர்  நின்பெரும்  பழம்பணி  புதுக்கியும்
    பொற்புடை  நாற்கவிப்  புதுப்பணி  குயிற்றியும்
    நிற்பவர்  நிற்க  நீபெறும்  புதல்வரில்
    அடியேன்  கடையேன்  அறியாச்  சிறியேன்
    கொடுமலை  யாளக்  குடியிருப்  புடையேன்
    ஆயினும்  நீயே  தாயெனுந்  தன்மையின்
    மேயபே  ராசையென்  மீக்கொள  ஓர்வழி
    உழைத்தலே  தகுதியென்  றிழைத்தவிந்  நாடகம்
    வெள்ளிய  தெனினும்  விளங்குநின்  கணைக்காற்கு
    ஒள்ளிய  சிறுவிர  லணியாக்
    கொள்மதி  யன்பே  குறியெனக்  குறித்தே. 

    கரும்பனைய நூல்யாத்த பெரும்புலவர் சுந்தரனாரின் பணிவும் சால்பும் ’பெருக்கத்து வேண்டும் பணிதல்’ எனும் குறளமுதை நமக்கு நினைவூட்டுகின்றன.

    தத்துவ அறிஞராகவும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளராகவும், வாடிக்கிடந்த நாடகக் கலையைத் தேடி நீர்வார்த்த நற்புலவராகவும் விளங்கிய சுந்தரனார், கல்வெட்டாராய்ச்சியாளராகவும் முத்திரைபதித்த வித்தகர். இத்துணைத் திறன்களை மொத்தமாய்க் கொண்டிருந்த சுந்தரம் பிள்ளையவர்கள், இத்தரை தனிலே நெடுநாள் வாழ்ந்திருந்தால் பத்தரைப் பசும்பொன்நிகர் காப்பியங்கள் எத்தனையோ படைத்துத் தன்னருந் தமிழன்னையைத் தாங்கொணாப் பூரிப்பில் திளைக்கச் செய்திருப்பார். அந்தோ! நம் நற்றவக்குறைவே அவர் தமது 42-ஆம் அகவையிலேயே அவனிவிட்டு அகன்றது!

    எனினும், மனிதனின் பெருமை அவன் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தான் என்பதிலா இருக்கின்றது? இல்லையே…எத்தகைய வாழ்வு வாழ்ந்தான் என்பதில்தானே சிறக்கின்றது. அவ்வகையில், ’தோன்றின் புகழொடு தோன்றுக’ எனும் வள்ளுவத்திற்கேற்பத் தாம் தோன்றிய துறைகளிலெல்லாம் புகழொடு தோன்றிய சுந்தரனார், தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் தலையாயவர் என்பதில் ஐயமில்லை.

    *** 

    துணைசெய்த தளங்கள்:

    https://ta.wikipedia.org/wiki/பெ._சுந்தரம்_பிள்ளை

    http://siragu.com/?p=17727

    http://www.vallamai.com/?p=45923

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 38-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. துளசிதாசனின் புகைப்படத்தை இவ்வாரத்தின் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றி.

    painted goddess

     சமூகத்தில் மலிந்துவிட்ட அவலங்களைக் களைய தெய்வங்களுக்கு இனி இரு கைகள் போதா; ஈராயிரம் கைகள்தாம் வேண்டும் என்பதைத்தான் இப்புகைப்படத்தில் காட்சிதரும் பெண்தெய்வம் குறியீடாய் விளக்குகின்றதோ?

    இனி, இவ்வாரப் போட்டிக் கவிதைகளைக் காண்போம்!

    ’குணமும் மனமும் வேறுவேறான மாந்தரைப்போல், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் எத்தனை எத்தனை கடவுளர் உருவங்கள் புதிது புதிதாய் முளைத்தபடி இருக்கின்றன!’ என வியக்கிறார் திரு. கவிஜி.

    வண்ணங்களான கடவுள்
    விடை மறந்த கடவுள்
    வாகை மாதிரியான கடவுள்
    வால் கொண்ட கடவுள்
    குருதி சொட்டும் கடவுள்
    கும்பிட்டு திரியும் கடவுள்
    கூந்தல் வளர்க்கும் கடவுள்
    ஆடை துறந்த கடவுள்
    அழுக்கு நிறைந்த கடவுள்
    வாய் உப்பிய கடவுள்
    வயிறு உப்பிய கடவுள்
    மஞ்சள் புடவைக் கடவுள்
    மகாநதி பேசும் கடவுள்
    மத்தளம் அடிக்கும் கடவுள்
    மயானம் சுமக்கும் கடவுள்..
    குழுமியிருக்கும் கடவுள்கள்
    மத்தியில் திருதிருவென
    விழித்துக் கொண்டிருந்தார்
    புதிதாக சேர்ந்த, இன்னும் பெயர்
    வைக்கப் படாத
    இந்த கடவுளும்….

    ***

    வாழ்வில் வெற்றிபெற நம்பிக்கை ஏராளம் வேண்டும் என்ற மனிதனின் எண்ணந்தான் கடவுளர்தம் கைகளின் எண்ணிக்கையையும் கூட்டிவிட்டதோ? என்று வினவுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    நிறைய வேண்டும்
    நம்பிக்கை என்பதால்தானோ,
    நம்பிக்கையுடன்
    நிறைய கைகள் வைத்துக்கொண்டார்களோ
    நாம் வணங்கும் கடவுள்களுக்கு…!

    ***

    நல்ல கவிதைகளை நயமுடன் படைத்திருக்கும் கவிஞர்களுக்குப் பாராட்டுக்கள்!

    அடுத்து நாம் காணப்போவது இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை!

    ”மரத்தை மறைத்தது மாமத யானை; மரத்தில் மறைந்தது மாமத யானை” என்பார் திருமூலர். சிற்பியின் கலைப்படைப்பான சிலையைக் கடவுளாய்க் காண்பதும், கடவுளாய்க் காட்சியளிக்கும் சிலையானது சிற்பியின் கைவண்ணமேயன்றி வேறில்லை என்று முடிவுசெய்வதும் தனிமனிதனின் விருப்பந்தான். பார்வைக்கேற்றபடி காணும்பொருளும் தோற்றம் தருகின்றது. இந்த அரிய கருத்தை எளிய வரிகளில் விளக்கியிருக்கும் கவிதையொன்று என் கவனத்தைக் கவர்ந்தது.

    பதினாறு கரங்களது விரித்து
    பதித்த எந்த உருவிது!
    பக்தியாய் வணங்குவதும் கலையிதுவென
    பத்திரமாய் மதித்துச் செல்வதும்
    பதுமையாய்ப் பார்த்து விலகுவதும்
    பலரது மன எண்ணமாகுது.
    வேலையற்றவர் வேலையிதுவென சிலரது
    வேற்றுமை எண்ணமும் குவிகிறது.   
     

    இக்கவிதையை எழுதியிருக்கும் திருமிகு. வேதா. இலங்காதிலகத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்க் குறிப்பிட விரும்புகின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே!

    ***

    அடுத்து, நாட்டில் மண்டிவரும் மதவாத நச்சுச் செடிகளை உதவாது என வேரோடு பிடுங்கியெறிந்து, அனைத்து மதங்களும் ஒன்றே என நிலைநாட்டுதற்குத்தான் இந்தப் பத்ரகாளித் தோற்றமா? இல்லை…இதுவும் பாமர மக்களை ஏய்க்கும் பொய்வேடமா? என்று தெய்வவுருவைப் பார்த்துக் கேள்வியால் வேள்வி செய்யும் கவிதை ஒன்று!  

    தீவிர வாதமும்
    பயங்கர வாதமும்
    உச்சமாகிப்போனது
    கொலைகளைச்செய்வதையே
    கொள்கையாய் கொண்டோரையும்
    நின்றழிக்கும் பத்ர காளியாய் தோன்றி பயமுறுத்த புறப்பட்டாயோ?
    எம்மதமும் நம் மதமாய்
    சம்மதித்து வாழ வழி செய்வாயோ
    இல்லை நீயும் பொய் வேடமிட்டு
    குண்டு வைப்பாயோ யாரறிவார்?
    கடவுள் பெயராலேயே
    கன்னக்கோல் சாத்தும் உலகமாயிற்றே
    எல்லாம் கலிகாலம்

    திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய் அறிவிக்கின்றேன்.

    பங்குபெற்றோர் அனைவருக்கும் மீண்டும் என் பாராட்டுக்கள்!

     

    Share
  • அறிந்துகொள்வோம் -24 (காப்பியக் கவிஞர் ஹோமர்)

    -மேகலா இராமமூர்த்தி

    காலத்தை வென்ற கவின்மிகு காவியங்கள்!

    மேற்குலகில் கலை, இலக்கியம், நாகரிகம், பண்பாடு, தத்துவம் போன்ற துறைகளின் தாயகமாய்த் திகழ்ந்தவை கிரேக்கமும் உரோமாபுரியும். புராணங்கள் எனப்படும் தொன்மங்களுக்கு இவ்விருநாட்டுக் கதைகளிலும் பெரும்பங்குண்டு. இப்புராணக் கதைகளையே ’இதிகாசங்கள்’ எனும் பெயரால் நாம் இந்தியாவில் அழைக்கின்றோம். நம்மண்ணின் இதிகாசங்களாய்க் கருதப்படும் இராமாயணம், மகாபாரதம் முதலியவற்றிற்கு இணையானவை கிரேக்கத்தின் ஆதிகாவியங்களான இலியடும், ஒடிசியும் (Iliad & Odyssey). இந்த அமர காவியங்களைத் தீட்டிய பெருமைக்குரியவர், ’காவியங்களின் தந்தை’ என்று புகழப்படும் ஹோமர். இவருடைய காலம், கிறித்துவிற்குக் கிட்டத்தட்ட 700 ஆண்டுகள் முற்பட்டது என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

    homerஹோமர் என்றொருவர் இருந்தாரா? (Homeric Question) அல்லது அவருடைய காவியங்கள் என்று சொல்லப்படுபவையெல்லாம் பின்னாளைய கிரேக்கப் புலவர்களின் கவிதைத் தொகுப்புக்களா? எனும் முடிவற்ற விவாதங்கள் ஒருபுறம் நிகழ்ந்துகொண்டிருந்தாலும், ஹோமர் என்றோர் பெரும்புலவர் இருந்தார்; விழியற்றவரான அவர், இணையற்ற காப்பியப் புலமையும், அசாதாரண நினைவுத்திறனும் பெற்றவராய்த் திகழ்ந்தார். அந்நினைவுத்திறனின் துணைகொண்டு, தம்காலத்திற்கு முன்பு மக்களிடையே வழங்கிவந்த புராணச் செய்திகளையும், கதைப்பாடல்களையும் இணைத்து, காலத்தைவென்ற கவிதைக் காவியங்களைப் (Epic poems) படைத்தார் என்று நம்பும் மாந்தரின் எண்ணிக்கையே மிகுதி.

    உண்மை எதுவாயினும், செம்மொழியாம் கிரேக்கமொழியில் முதன்முதலில் கிடைக்கும் பெருங்காவியங்கள் இலியடும் ஒடிசியுமே. பொதுவாக, காவியங்களுக்குப் பாடுபொருளாயிருப்பவை காதலும் வீரமும். ஹோமரின் காவியங்களும் இவற்றிற்கு விலக்கானவை அல்ல. (காதலை அகமென்றும், வீரத்தைப் புறமென்றும் பகுத்துப் பாக்கள் புனைந்தனர் நம் பைந்தமிழ்ப் புலவர்கள் என்பது நாமறிந்ததே.)

    இனி, இலியட் மற்றும் ஒடிசியைச் சற்றே சுவைத்துவிட்டு வருவோம்!

    இலியடை எடுத்துக்கொண்டால், கிரேக்கத்தின் ஒருபகுதியான ஸ்பார்டாவை ஆண்ட ’மேனலாஸ்’ (Menelaus, King of Sparta) எனும் மன்னனைச் சந்தித்துச் சமாதானம் பேசவரும் ட்ராய் நகர (Troy was a famous city in Turkey) இளவரசன் ’பாரிஸ்’ (Paris), அங்கே மன்னனின் மனைவியும், பேரழகியுமான ’ஹெலனை’க் (Helen) கண்டான்; கண்டதும் காதல் கொண்டான். தான் வந்தவேலையை மறந்தான்; ஹெலனை மேனலாஸுக்குத் தெரியாமல் தன்னோடு அழைத்துக்கொண்டு ட்ராய் நகருக்குப் பறந்தான்.

    மனைவியைத் தொலைத்த மேனலாஸ், தன் அண்ணனும், கிரேக்கத்தின் மற்றொரு பகுதியான மைசீனேயின் (Mycenae) மன்னனுமான மாவீரன் ’அகமெம்னானிடம் (Agamemnon) நடந்ததைக்கூறி வருந்தினான். ட்ராயைக் கைப்பற்றிக் கிரேக்கத்தின் எல்லையை விரிவாக்கவேண்டும் என்று ஏற்கனவே துடித்துக்கொண்டிருந்த அகமெம்னானுக்கு இச்சம்பவம் எரிகின்ற தீயில் எண்ணெய் வார்த்ததுபோல் அமைந்து ’ட்ரோஜன்கள்’ (ட்ராய் நகரக் குடிமக்கள்) மீதான பகையை அதிகரிக்கச் செய்துவிட, கிரேக்கத்திற்கும் ட்ராயிக்கும் போர் மூள்கின்றது. கிட்டத்தட்ட பத்தாண்டுகள்வரை நீடித்ததாகக் கூறப்படும் இந்த ட்ரோஜன் போரின் இறுதி ஐம்பதுநாள் போரை மட்டுமே தன் காவியத்தில் விரிவாய்ப் பதிவுசெய்துள்ளார் ஹோமர். இதனை மகாபாரதத்தின் யுத்தபர்வத்தோடு நாம் ஒப்பிடலாம்.

    கதையமைப்பு, கடவுளரின் பிள்ளைகள் காவியப் பாத்திரங்களாய் மிளிர்கின்ற தன்மை, போர்க்கள நிகழ்வுகள் போன்ற பலவற்றில் இந்திய இதிகாசங்களுக்கும் கிரேக்கக் காவியங்களுக்குமிடையே அதிசயிக்கத்தக்க ஒற்றுமைக்கூறுகள் இருப்பதை இக்காவியங்களைப் பயில்வோர் தெள்ளிதின் உணர்வர்.

    பெண்ணை (ஹெலன்) மீட்பதற்காக நடந்த பெரும்போரே இலியட் காவியமாய் விரியக் காண்கின்றோம். அவ்வகையில், தன் மனைவி சீதையைத் தூக்கிச்சென்ற இராவணனை எதிர்த்து இராமன் புரிந்தபோரை ட்ரோஜன் போரோடு ஒப்பிடலாம். ஆனால், இராமாயணச் சீதையைப்போல் கற்பின் கொழுந்தாகவும், பொற்பின் செல்வியாகவும் திகழ்ந்தவளில்லை இலியட் நாயகி ஹெலன். தனக்குத் துணைவராகும் பேற்றைப் பல ஆடவருக்கு விரும்பியளித்த தயாளகுணத்தினள் அவள்!

    ஹெலனின் இத்தகைய ஒழுக்கக்கேடான நடத்தையை அறிந்த ஷேக்ஸ்பியர், தன்னுடைய As you like it நாடகத்தில், அதன் நாயகி ’ரோசலிண்டை’ (Rosalind) வருணிக்கும்போது, ”பேரழகி ஹெலனின் கன்னங்களையொத்த அழகான கன்னங்களைக் கொண்டவள் ரோசலிண்ட்; ஆனால் அவளைப்போல் சலன சித்தம் கொண்டவள் அல்லள்” (Helen’s cheek, but not her heart…) என்பார் எச்சரிக்கையாக.

    இலியட் காவியத்தின் தன்னேரிலாத் தலைவனாய்த் திகழ்பவன் ’அக்கில்லஸ்’ (Achilles) எனும் மாவீரன். இவன் கடல்தெய்வமான ’தீட்டிஸ்’ (The goddess Thetis) என்பவளுக்கும், மானுட மன்னனான ’பீலியஸூக்கும்’ (Peleus – king of Aegina, located in Greece) பிறந்தவன். தாய், தெய்வப்பிறவியாய் இருந்தபோதினும், தந்தை மானுடன் ஆனபடியால் அக்கில்லஸும் மரணத்திற்கு உட்பட்டவனே! இதனை உணர்ந்த தீட்டீஸ் தன் மகனை மரணமற்றவனாக மாற்ற என்னவழி என யோசித்தாள். உடனே, பாதாளலோகத்தில் உள்ளதும், தன்னில் மூழ்கி எழுந்தவருக்குச் சாகாவரம் நல்குவதுமான ’ஸ்டிக்ஸ்’ (Styx) எனும் புனித நதியின் நினைவு அவளுக்கு வந்தது; ஓடினாள் குழந்தை அக்கில்லஸைத் தூக்கிக்கொண்டு அந்நதி நோக்கி! ஸ்டிக்ஸ் நதியில் அவனைத் தலைகீழாய்ப் பிடித்து முக்கியெடுத்தாள்.

    இந்தப் புனிதநதியானது, சிலப்பதிகாரத்தில் வருகின்ற தெய்வத்தன்மை வாய்ந்ததும், நினைத்ததை அளிக்கவல்லதும், பழம்பிறப்புணர்த்துவதுமான புண்ணியசரவணம், இட்டசித்தி, பவகாரணி எனும் மூன்று பொய்கைகளை நம் நினைவுக்குக் கொண்டுவருகின்றது.  

    புனிதநதியில் நீராட்டப்பட்ட அக்கில்லஸ் உடலின் அனைத்துப் பாகங்களும் மரணத்தை வென்றனவாயின. ஆயினும், மகனைத் தலைகீழாய் நீரிலழுத்தும்போது அவனுடைய குதிகால்கள் நனையாமல் போனதைத் தீட்டீஸ் கருத்தில்கொள்ளத் தவறிவிட்டாள். ஆதலால், அவனுடைய குதிகால்கள் மட்டும் (மரணத்திற்குரிய) பலவீனமானவையாய் அமைந்துவிட்டன. இன்றும்கூட, தனிமனிதர் ஒருவரின் பலவீனத்தைக் குறிக்க ’அக்கில்லஸின் குதிகால்’ (Achille’s heel) சுட்டப்படுவதை நாமறிவோம். (Ex: He is very brave, but fear of snakes is his Achilles’ heel.)

    இவ்வாறு, தன் தெய்வத் தாயால் அதிபலம் பொருந்தியவனாய் மாற்றப்பட்ட அக்கில்லஸ், கிரேக்க நாட்டின் மிகச்சிறந்த போர்வீரனாய்த் திகழ்ந்தான். இம்மாவீரனின் சீற்றப் பெருக்கையும், ஆண்மைச் செருக்கையும் மையக் கருவாய்க்கொண்டு, ட்ராய் நகரின் ’இலியம்’ எனும் கோட்டையில் நடந்த போர்நிகழ்வுகளையே பார்போற்றும் இலியட் காவியமாய்க் கவினுற வடித்துள்ளார் ஹோமர்.

    கிரேக்கர்களின் படைத்தலைவனாய் ட்ரோஜன் போரில் பங்கேற்ற அக்கில்லஸ், கிரேக்க அரசனான அகமெம்னானோடு ஏற்பட்ட மனவேறுபாட்டால் போரிலிருந்து பாதியிலேயே விலகுகின்றான். தனக்கு மாற்றாய்த் தன்னுயிர் நண்பன் ’பாட்ரோக்லோஸை’ப் (Patroklos) போருக்கு அனுப்புகின்றான். நண்பனின் பாதுகாப்புக்காகத் தான் தரித்திருந்த தெய்வத்தன்மை பொருந்திய கவசத்தை அவனுக்கு அளிக்கின்றான். அக்கில்லஸின் கவசத்தை நாம் கர்ணனின் உடலைத் தாங்கிப்பிடித்து அவனை ஆபத்துக்களிலிருந்து காத்த சூரியக் கவசத்தோடு ஒப்பிடலாம். கர்ணன் காய்கதிர்ச்செல்வனின் புதல்வன்; அக்கில்லஸோ கடலன்னையின் மைந்தன்!

    அக்கில்லஸின் கவசத்தை அணிந்து திறம்படப் போரிட்டுக்கொண்டிருந்த பாட்ரோக்லோஸ், துரதிர்ஷ்டவசமாய் ட்ராய் நகரின் படைத்தலைவனும் ஹெலனைக் கடத்திக்சென்ற பாரிஸின் சகோதரனுமான ’ஹெக்டரிடம்’ (Hektor) போர்க்களத்தில் வசமாய்ச் சிக்கிவிட, பாட்ரோக்லோஸின் கவசங்களைப் பிடுங்கி, அவனைக் கடுமையாய்த் தாக்கிக் கொன்றுவிடுகின்றான் ஹெக்டர். அதுகேட்டுச் சினந்தெழுந்தது அக்கில்லஸ் எனும் செங்கட்சீயம். போரில் கலந்துகொள்வதில்லை எனும் தன்னுடைய எண்ணத்தைத் தூக்கியெறிந்துவிட்டுப் போரில் குதித்தது மீண்டும். அக்கில்லஸைக் களத்தில்கண்ட கிரேக்கப்படை ஆனந்தக் கூத்தாடியது. வெற்றி உறுதி என்று வீரமுழக்கமிட்டது.

    அவர்கள் நம்பிக்கை வீண்போகவில்லை. ஹெக்டரைப் போர்க்களத்தில் பந்தாடிய அக்கில்லஸ், அவனை வென்றுவீழ்த்திக் கொன்றான் கோரமாய். அத்தோடு அவன் வெஞ்சினம் அடங்கவில்லை. தன்னுடைய தேர்க்காலில் ஹெக்டரின் பிணத்தைக் கட்டி இழுத்துச்சென்று அவமதித்தான். இவ்வாறு பத்துநாட்கள் ஹெக்டரின் சடலத்தைப் புழுதியில் புரளவிட்டான் அக்கில்லஸ் என்கிறார் ஹோமர். அக்கில்லஸின் இந்த அராஜகச் செயல்கண்ட ஹெக்டரின் தந்தையும் ட்ராயின் அரசருமான ’ப்ரியம்’ (Priyam) கண்ணீர்பெருக்கினார்; ட்ராய் நகரமே சோகத்தில் ஆழ்ந்தது.

    அதைத்தொடர்ந்து, ட்ராய் அரசரான ப்ரியம் செய்த செயல்கள் இலியடின் கவித்துவத்தைத் தனித்துவம் மிக்கதாய் மாற்றுகின்றன. ஆம்! தன் மகனின் சடலத்தை அக்கில்லஸிடமிருந்து பெறவேண்டும் என்று விரும்பிய அந்த முதிய தந்தை என்ன செய்தார் தெரியுமா?

    போர்முடிந்து ஓய்வாக அக்கில்லஸ் இருந்த ஓர் இரவுவேளையில், நிறையப் பரிசுப்பொருள்களுடன் அவன் தங்கியிருந்த குடிலுக்குச் சென்றார். உணவு மேசைக்கருகே அமர்ந்து எதையோ பருகிக்கொண்டிருந்த அக்கில்லஸின் கைகளை எடுத்து மென்மையாய் முத்தமிட்டார். அவரை அருகில் கண்ட அக்கில்லஸ் குற்றவுணர்வோடு மருண்டு நோக்கினான். தன் தந்தையின் வயதொத்த அவரைச் சந்தித்தவேளையில், தன் தந்தையின் நினைவு வரப் பெற்றவனான். ப்ரியம் பேசலானார், “அக்கில்லஸ்! என் மகன் ஹெக்டரை எந்தக் கையால் கொன்றாயோ, அந்தக் கையை நான் அன்போடு முத்தமிட்டிருக்கின்றேன்; தயவுசெய்து என்மகனின் சடலத்தை என்னிடம் கொடுத்துவிடு!” என்றுகூறித் தான் கொணர்ந்த பரிசுப்பொருள்களை அவன்முன் வைத்து மண்டியிட்டார்.

    ஏற்கனவே அவரின் பரிதாப நிலைகண்டு மனமிளகியிருந்த அக்கில்லஸ், மேலும் அவரைச் சோதிக்க விரும்பாமல், ”ஐய! பரிசுப்பொருள்கள் வேண்டாம்! உங்கள் மகனின் சடலத்தை நீங்கள் தாராளமாக எடுத்துச் செல்லலாம்; அதற்குமுன் இங்கே உணவுண்டு சற்றே இளைப்பாறுங்கள்!” என்றுகூறி அவருக்கு நல்ல உணவும், மதுவும் அளிக்கின்றான். அதனைப் பருகி அங்கேயே ஓய்வெடுத்துவிட்டுத் தன்மகனின் சடலத்தையும் பெற்றுச் செல்கின்றார் அந்த முதியவர்.

    மகனைக் கொன்றவனோடு மகனை இழந்தவன் ஒன்றாக அமர்ந்து உண்பதும் உறங்குவதும் கற்பனைக்கெட்டாத அதிசய நிகழ்வுகள் அல்லவா? இதனைத் தன் காப்பியத்தில் சாத்தியமாக்கியிருக்கும் ஹோமரின் கற்பனைத்திறன் நம்மை பிரமிக்கவைக்கின்றது. ஹெக்டர் அடக்கம் செய்யப்படுவதுடன் இலியட் காப்பியம் நிறைவடைகின்றது.

    காப்பிய நாயகன் அக்கில்லஸ் என்னவானான் என்பதைப்பற்றி அது பேசவில்லை. ஆனாலும், அந்த மாவீரனைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆவல் நமக்குள் குறுகுறுக்கத்தானே செய்கின்றது. இதற்கான விடையைக் கண்டறிய வேண்டுமானால் நாம் ஹோமரின் மற்றொரு காப்பியமான ஒடிசியைப் படிக்கவேண்டும்.

    ட்ரோஜன் போரில் பங்கேற்பதற்காக வந்த ஒடிசியஸ் (Odysseus) எனும் அரசன் (Odysseus – king of Ithaca, it’s a Greek island) போர்முடிந்து தன்னுடைய நாட்டுக்குத் திரும்பிச்செல்லும்வழியில் தான் சந்திக்கும் இடையூறுகளை எவ்வாறு எதிர்கொண்டு அவற்றை வென்று தாயகம் திரும்புகின்றான் என்பதைச் சொல்லோவியமாக்கியுள்ளது ஒடிசி. இக்கதையின் இடையில்தான் இலியட் நாயகன் அக்கில்லஸைப் பற்றிய செய்திகள் இடைப்பிறவரலாகச் சொல்லப்படுகின்றன.

    அதனை நாமும் அறிந்துகொள்வோம்!

    ஹெக்டரின் மறைவுக்குப் பின்னரும் தொடர்கின்றது ட்ரோஜன் போர். ஒருகட்டத்தில், கிரேக்கக் கடவுளான அப்போல்லோ (Apollo – God of light, prophecy, inspiration, poetry, etc.), ஹெக்டரின் சகோதரனான பாரிஸிடம், அக்கில்லஸை (அவனுடைய பலவீனமான பகுதியான) குதிகாலில் அம்பெய்து கொல்லுமாறு இரகசிய வழிகாட்ட, அவ்வாறே செய்து அக்கில்லஸின் வீரமரணத்திற்கு வழிவகுக்கின்றான் பாரிஸ்.

    அக்கில்லஸின் மரணம், நமக்குத் திருமாலின் அவதாரமாகக் கருதப்படும் கிருஷ்ணரின் மரணத்தை நினைவுறுத்துகின்றது. தன் அவதார முடிவில் கிருஷ்ணர் தனியராய் யோகத்தில் அமர்ந்திருந்த வேளையில், அவர் உள்ளங்காலின் தோற்றத்தை ஏதோ விலங்கென்று தவறாக எண்ணிய வேடனொருவன் எய்த அம்பினால் அவர் உயிர்நீத்தார் என்று கிருஷ்ணாவதாரக் கதைகள் கூறுகின்றன. அக்கில்லஸும் அவ்வாறே தாக்கப்பட்டு மரணமடைந்துள்ளது ஈண்டுக் கருதத்தக்கது.

    அதெல்லாம் இருக்கட்டும்…ஹெலன் என்ன ஆனாள்? என்றுதானே கேட்கவருகின்றீர்கள்; அதையும் சொல்லிவிடுகின்றேன்!

    ட்ராய் போரில் அவளுடைய காதலன் பாரிஸ் வீழ்ந்துபட, அவள் பாரிஸின் தம்பியான டெய்ஃபோபஸுக்குத் (Deiphobus) துணைவியாகிறாள். பின்பு டெய்ஃபோபஸைக் கிரேக்கர்களிடம் சிக்கவைத்துவிட்டுத் தான் தப்பியோடிவிடுகின்றாள். அவள் மேனாள் கணவனான மேனலாஸ் அவளைத் தன் கையாலேயே கொன்றுவிடுவது என்ற வெறியோடு தேடியலைகின்றான். ஒருநாள் அவன் கையில் சிக்குகின்றாள் ஹெலன். ஆனால் அந்த அழகியைக் கண்டதும் கோபவெறி மாறி மீண்டும் காதல் பிறந்துவிடுகின்றது அவனுக்கு. ஆகவே மீண்டும் தன் பழைய கணவனோடு அவள் ஸ்பார்டாவின் ராணியாய்த் திகழ்ந்தாள் என்கிறது ஒடிசி. ட்ரோஜன் போருக்கு முக்கியக் காரணமாயிருந்த நஞ்சனைய அந்த வஞ்சமகள் யாதொரு தண்டனையும் பெறாதது வியப்பே!

    இலியடுக்கும், ஒடிசிக்கும் கதைப்போக்கிலும் தொடர்பிருப்பதால் (Odyssey is, in part, a sequel to Iliad) இவற்றையும்கூட நாம் ’இரட்டைக் காப்பியங்கள்’ என்று அழைக்கலாம். தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியின் சுவையில் ஈடுபட்ட மேனாட்டு அறிஞரான ஜி.யு. போப் அவர்கள் அதனைக் கிரேக்கக் காப்பியங்களான இலியடுக்கும் ஒடிசிக்கும் இணையானது என்று போற்றியிருப்பதை இத்தருணத்தில் நாம் நினைவுகூர்ந்து இன்புறலாம்.

    படிக்கத் தெவிட்டாத தீஞ்சுவைக் காப்பியங்களை யாத்து, ஐரோப்பாவின் இலக்கியப் படைப்புக்களுக்கு முன்னோடியாய், மூலவராய்த் திகழ்கின்றார் ஹோமர். பார்வையற்றவராய் அறியப்படும் இந்தப் பெரும்புலவர், காலத்தை வென்ற காப்பியங்களால் உலகின் பார்வையையே தன் பக்கம் திருப்பியிருப்பது பெருஞ்சாதனை அன்றோ?

    Share