-மேகலா இராமமூர்த்தி

திரு. வெங்கட்சிவாவின் புகைப்படத்தை இவ்வாரப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றி.

goats

புகைப்படத்துள் ஓர் ஓவியமாய்ச் சுவரை அலங்கரித்திருக்கும் இந்த ஆட்டுக்குட்டியின் உருவம் அனைவர் கவனத்தையும் கவர்வதாய் உள்ளது. அந்தக் கோட்டோவியத்தால் ஈர்க்கப்பட்டுதான் இந்த ஆடுகளும் தம் பார்வையை அங்கே பதித்திருக்கின்றன போலும்!

இனி, இவ்வாரப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளில் நம் பார்வையைச் செலுத்துவோம்!

***

’உன்னைப் பேணிய பெற்றோரைப் புறக்கணிக்கும் மானுடனே! உயிரற்ற ஓவிய ஆட்டிக்குட்டியின் மீதும் தாய்ப்பாசத்தைக் தயங்காமல் காட்டிடும் இந்த ஆட்டிடமிருந்து கற்றிடு பாசத்தின் பெருமையை! என்று அறிவுறுத்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

 

படத்தில் குட்டியைப் பார்த்தாலும்
பொம்மை உருவில் கண்டாலும்,
தடங்க லின்றி ஆடதுவும்
தாய்மைப் பாசம் காட்டிடுதே,
இடைஞ்ச லென்று பெற்றோரை
எங்கோ அனுப்பிடும் மானிடனே,
கிடைக்குமுன் உனக்கும் இதுபோல
கற்றிடு ஆட்டிடம் பாசத்தையே…!

*** 

’அன்பு ஆடே! சுவரை முகர்ந்து பார்க்கும் உன் உள்ளக்கிடக்கைதான் என்ன? உன் இனம் ஒன்று சுவரில் தென்படுகின்றதே என்ற வாஞ்சையா? இல்லை…கண்ணில் தென்படுவதை உண்டுதான் பார்ப்போமே… என்ற கொலைச் சிந்தனையா?’ என்று ஐயத்தோடு வினவுகின்றார் திருமிகு. கார்த்திகா.

 

…ஈன்ற குட்டிகளில்
தொலைந்து விட்ட
ஒன்றைக் காண்கிறாயோ

உன் குலச் சாயல்
மிளிர்கின்றதோ இதில்
வாசம் தேடுகிறதா மனம்

பின் நிற்கும்
குட்டியை முன்னிருந்து
முகர்கின்றாயோ!

இல்லை எதுவாகினும்,

உண்டு பார்த்தால் என்னவென்று
சில கொழுத்த ஓநாய்களின்
தீச் சிந்தையை மட்டும் உன்னில் ஓடவிட்டு
கறையாக்கிக் கொள்(ல்லா)ளாதே !

*** 

சித்திரத்தில் தன் புத்திரனைத் தேடும் தாயாட்டின் துயரைக் கவிதையாய் வடித்திருக்கின்றார் திரு. மெய்யன் நடராஜ்.

சித்திரத்தில் ஏதேனும் பத்திரமாய் நிற்குமென்று
புத்திரத்தைத் தேடுகின்ற தாயாடுகத்திகத்தி
சுத்துமது கத்திக் கிரையா னதறியா
பித்திதேடல் தாய்மைப் பிணி.

*** 

விலங்குகளை இரக்கமின்றிக் கொன்று புசிக்கும் மனிதனின் அரக்க குணத்தை, பிரியாணிக்காகத் தன் பிரியமான குட்டியைப் பறிகொடுத்த ஆடொன்று, உயிரோடிருக்கும் தன்னுடைய மற்றொரு குட்டிக்கு விளக்கிச்சொல்வதைப் பாடுபொருளாக்கியிருக்கின்றார் திரு. இளவல் ஹரிஹரன்.

நேற்றைய பிரியாணியில்
தொலைந்து போன குட்டியை
சித்திரமாய் வரைந்து
தொலைத்தவன் எவன்…..

தாய்மையின் வாசம்
நுகருமுன்னமே
தலைகொடுத்து பலியான
பலிபீடத்தைப் போட்டுடைப்போம்.

சித்திரத்தைப் பாரடி என்
செல்லக் குட்டி ஆடே….
பத்திரமாய் இருக்க உனக்கு
பாடங் கற்பித்துள்ளான்….

விதிவசமாய் இங்கே
விலையில்லாப் பொருளானோம்….
பெருமழையில் தப்பித்தோம்….
பிழைக்க வழியில்லா
சம்சாரியின் துயர்தீர்ப்போம்..
சந்தையிலே விலைபோய்
சமயத்தில் அவர்க்குதவும்
சிந்தைமிகக் கொள்வோம்….

நாளை
எந்தப் பாத்திரத்தில் வெந்து
எவர்க்கு இரையாவோம்
யாரறிவார் பராபரமே

*** 

ஓவியமாய்ச் சுவரில் நிற்கும் ஆட்டுக்குட்டிக்குக் கவிதையிலேனும் உயிர்கொடுக்க விழைகின்றார் திரு. கவிஜி. 

போன ஞாயிறு
பிரித்து தூக்கிப்
போன
இன்னொரு குட்டி
இது இல்லை என்று தெரிந்த
பின்னும்
இருக்கும் குட்டிக்கு
நம்பிக்கை தர
முயலுகிறது
அம்மா ஆடு

தனக்கும் தெரியும் என்று
காட்டிக் கொள்ளாமல்
சரி என்பது போல
ஒப்புக் கொள்ளும்
குட்டி
முகம் மறைத்துக் கொள்கிறது

இவர்கள் கதை அறிந்த
நான்
சற்று முன் வரைந்த
ஆட்டுக்குட்டியின் புகைப்படத்திற்கு
உயிர் கொடுக்க
வேண்டுகிறேன்….
கவிதைக்குள்ளாகவாவது

*** 

’தன் இறப்பின்மூலம் முதலாளிக்கு ’நிவாரணம்’ தரும் ஆட்டுக்குட்டி, தன் தாய்க்குத் தருவதென்னவோ ஆறாத ’ரணம்’ ஒன்றைத்தானே?’ என்ற உண்மையை உரைக்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.  

பிரிய மகனே !
நானோ உன்னை காணாத
துயர வெள்ளத்தில்
முதலாளியோ வெள்ள
நிவாரணமாய் ஆட்டுக்கு
மூவாயிரம் கிடைக்கும் என்ற
மகிழ்வில் ! ஆம் அவனுக்கென்ன?
தழை பறித்துப்போடுபவனும் அவந்தான்
தலையை வெட்டி காசு பார்ப்பவனும் அவந்தான்
செத்து கொடுத்தாய் வளர்த்தவனுக்கு சொத்து
பெத்தவளுக்கு தீரா துயர்தான் கொடுத்தாய்
நில்லாத என் கண்ணிரால்உன் முகம்
வருடி வருடி உன் நினைவை காக்கின்றேன்
என்னிடம் திரும்பி வருவாயே என் மகனே

*** 

சுவரில் தெரிவது தன் சொந்தமா என்று அறிந்துகொள்ளத்தான் இந்த முகர்தலா? அல்லது சுவரொட்டியாய் இருந்தால் புசித்துப் பசியாறலாமே எனும் ஆவலால் பிறந்த ஆராய்ச்சியா? என்று ஆட்டை நோக்கிக் கேள்வியெழுப்புகின்றார் திருமிகு. வேதா இலங்காதிலகம். 

குட்டிப் படம் கடதாசியில்
ஒட்டியதா! அதையாவது பிரித்தால்
பட்டினி பரிதவிப்பிற்கு உண்ணலாமே!
கிட்டச் சென்று ஆராய்ச்சியா!

சிறிதே பொறு பிள்ளாய்!
கடிதே புற்தரைக்குச் செல்லலாம்!
தெரிவதிங்கு நம் சொந்தமா!
உரிமையாய் அறிந்திட முகர்தலா!

*** 

ஆடுகளின் எண்ணவோட்டத்தைச் சிறந்த பாட்டுக்களாய் மாற்றியிருக்கும் கவிஞர்குழாத்துக்கு என் பாராட்டுக்கள்! 

அடுத்து நாம் சந்திக்கவிருப்பது இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை! 

தன் ஊனைப் பெருக்குதற்குப் பிறிதோர் உயிரின் ஊனை உண்ணும் புலைத்தொழிலை, அக் கொலைத்தொழிலை மாந்தகுலம் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார் வள்ளுவர். தன்னலமும் புலால்மீது தணியாத வேட்கையுங்கொண்ட மாந்தகுலம் புலைத்தொழிலைக் கைவிடவில்லை; மாறாக, வள்ளுவர் வலியுறுத்திய உயிரிரக்கக் கொள்கையைத்தான் கைவிட்டது!

இவ்வாறு, புலாலுணவிற்காகத் தன் இன்னுயிரை நீத்த குட்டியை எண்ணிக் கவலைகொள்ளும் – கண்ணீர்சிந்தும் ஒரு தாயாட்டின் நேயத்தை, “கறியாய்ப் போன கண்மணியின் கரியுருவை முகர்ந்து கவலை மறக்கிறதே தாயவள் உயிர்க்கூடு” எனும் வரிகளில் நேர்த்தியாய்ச் சொல்லியிருக்கும் ஒரு கவிதை உள்ளத்தின் ஆழம் தொட்டது!

 

ஆசையாய் உனை வளர்த்த நல்லதம்பி
முட்டி அழுதுகொண்டிருக்கிறான்
மூன்றுநாளாய்த் தேம்பித்தேம்பி!
அண்ணன் எங்கே எங்கே என்று
அங்குமிங்கும் தேடிக்கொண்டிருக்கிறான்
முட்டிப்பாலருந்துமுன் உன் குட்டித்தம்பி.

மண்சட்டியில் துண்டுகளாகி..
வெந்த குழம்பின் வாசத்திலும்
உப்புத்தூவிய கண்டங்களாகி..
வெய்யிலில் காயும் மீதத்திலும்
வீசும் உன் பிணவாடையை
தாங்குமா இத்தாயாடு?

கறியாய்ப்போன கண்மணியின்
கரியுருவை முகர்ந்து முகர்ந்து
கவலை மறக்கிறதே தாயவள் உயிர்க்கூடு

இந்த உயிரோட்டமுள்ள கவிதையைப் படைத்துத் தந்திருக்கும் திருமிகு. கீதா மதிவாணனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

***

ஆடும், அதன் குட்டியும் சுவரிலிருக்கும் ஆட்டுக்குட்டியொன்றின் ஓவியத்தைப் பார்த்து ”இங்கே இது வரையப்பட்டிருப்பதன் காரணமென்ன?” என்பது குறித்து நிகழ்த்தும் உரையாடலைக் காட்சிப்படுத்தியிருக்கும் ஓர் கவிதை இரசிக்கும்படியாய் உள்ளது.

பாரம்மா இங்கு வந்து
பாசத்துடன் யாரோ ஒருவர்
நம் படத்தை வரைந்து
வாசகங்கள் எழுதுமுன்
வந்த மழை காரணமாய்
ஓடிவிட்டார்போலும்!

பாசமென்றா நினைத்தாய்
பைத்தியக்காரி
ஆடுகள்தான் இங்கு
சிறுநீர் கழிக்கும் எனும்
எரிச்சல் எச்சரிக்கை

செய்ய நினைத்திருப்பார்கள்

அல்லது
படம் வரைந்து
பிச்சை எடுக்கும்
அந்தக் கிழவரின்
கைவண்ணமாய்
இருக்கக்கூடும்

நாளைய தேர்தலில்
நம் சின்னத்தில்
போட்டியிடும் வேட்பாளர்
சுவரில் முன்பதிவு பெற
தீட்டிய சித்திரமாய்
இருக்கலாம்

இல்லையெனில்
விரைவில் திறக்க இருக்கும்
கறிக்கடையின்
விளம்பரமாயும் இருக்கலாம்
இங்கிருப்பது நல்லதல்ல
வா வா
விரைந்து செல்லலாம்! 

ஒரு படம் சுவரில் வரையப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அனைத்தையும் அலசும் திரு. கொ.வை. அரங்கநாதனின் இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்த் தெரிவிக்கின்றேன்.

கவிஞர்களில் சிலர் தொடர்ந்து படக்கவிதைப் போட்டிகளில் பங்கெடுத்துவருவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாய் உள்ளது. இதே உற்சாகம் தொடரட்டும்! ஏனையோரும் இதுபோன்ற போட்டிகளில் தயங்காது முயலலாம். இம்முயற்சிகள் உங்கள் சிந்தனையையும், படைப்பாற்றலையும் வளப்படுத்த உதவும்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “படக்கவிதைப் போட்டி 42-இன் முடிவுகள்

  1. வல்லமை மின்னிதழின் இவ்வாரப் படக்கவிதைப் போட்டியில் என்னுடைய கவிதை பாராட்டுக்குரியதாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதறிந்து  மகிழ்ச்சி.

     அனைத்துக் கவிதைகளையும் அலசி ஆய்ந்து விமர்சனங்களோடு சிறந்த கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வழங்கிய மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும் வாய்ப்பளித்த வல்லமை குழுவுக்கும் மிகவும் நன்றி.

    சிந்திக்கத்தூண்டும் படத்தை வழங்கிய புகைப்படக்கலைஞர் வெங்கட் சிவா அவர்களுக்கும் படத்தைத் தேர்ந்தெடுத்த தோழி சாந்தி மாரிப்பன் அவர்களுக்கும் மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *