பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

12380561_928432517210948_352344013_n
24942309@N07_rயெஸ்மெக் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (19.12.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

10 thoughts on “படக்கவிதைப் போட்டி … (43)

 1. தாயைத்தேடிப் பயணம் செல்லும்
  தாயுமானவன்……இரு
  சேய்களை இடுப்பில் ஏந்திச் செல்லும்
  நாயகனானவன்…..பசித்த
  வாயினுக்கமுதம் வழங்கச் செல்லும்
  தாய்மடியானவன்…கிடைக்கும்
  காயினும் மேலாய்க் கனியச் செய்யும்
  காலம் ஆனவன்.

  இருண்ட மேகம் திரண்ட வான்பொழி
  மழையுமானவன்…..எழில்
  சுருண்ட வாழ்வின் சுருக்கம் நீக்கும்
  இழையுமானவன்.
  மருண்ட கண்களின் மயக்கம் போக்கும்
  மருந்துமானவன்….சுவை
  அருந்தும் அமுதம் வயிற்றுக்கீயும்
  விருந்துமானவன்.

  யாரும் இங்கே அனாதை யில்லை
  என்றே சொல்லுபவன்……பெற்றோர்
  பேரும் அறியாப் பிள்ளைகள் சொல்லும்
  பெயரும் ஆனவன்.
  வேரைத் தேடி விருட்சம் என்றும்
  வியர்த்துப் போகுமோ….மனம்
  சேரும் இடத்தைச் சிந்தனையின்றிச்
  சேர்தல் கூடுமோ…

  வாழும் வரைக்கும் பூமி நமக்கு
  வாழ இடங்கொடுக்கும்….உணர்வு
  சூழும் வரைக்கும் சாமி இங்கு
  சுகத்தை நமக்களிக்கும்
  பாழும் எண்ணப் பாழ்கிணற்றினில்
  பார்வை விழவேண்டாம்….நாம்
  வாழ்வோம் என்னும் மந்திரச் சொல்லே
  வாழ்க்கைப் பாடம் ஆகட்டும்.

  பாதை நீளும் பயணம் தொடரும்
  என்றே காட்டுபவன்….அவன்
  பார்க்கும் பாரவையில் சோர்வை நீக்கிச்
  சுடரைக் கூட்டுபவன்.
  வாதை அழிக்கும் வாழ்வைக் காட்டும்
  வழியுமானவன்……எல்லோர்
  வேதனை ஒழிக்கும் வேதஞ் சொலுந்தாய்
  மொழியுமானவன்.
               “இளவல்” ஹரிஹரன், மதுரை.

 2. நகத்தின் கண்களில் 
  இரவின் பிளிறல்…
  இருந்தும் நுழைந்த 
  நொடி-விரிந்தது 
  கீற்று…
  விலகியது திறப்பு,
  ஒளிர்ந்து மிளிர்ந்த
  காட்டுக்குள் 
  பேய் பிடித்து மயங்கியது 
  பயணம்….
  மீண்டும் தொடரும் 
  காடடைதல் 
  என்பது கண்டடைதல்….
  அது அப்படித்தான்,
  ‘ஆ’வென திறந்திருக்கும் 
  அத்துமீறலின் சுரப்பு…
  புரியாவண்ணம் நிறைந்த 
  கிண்ணம்..
  அது ஏந்தும் 
  பாத்திரத்தின் ஆத்திரம், 
  இருந்தும் இனிக்கும் 
  இன்னிசை வலை..
  பின் அது கீறும் 
  நகம் முழுக்க,
  கண்கள்…
  மீண்டும் இரவின் 
  பிளிறலில் 
  நனையும் எதிர் வினையும்..!

  கவிஜி 

 3. கண்ணீர் வெள்ளம்…

  பாடுபட்டுப்
  படிக்கவைத்தேன் மகனை..

  படித்த படிப்புக்கு வேலைதேடிய
  பட்டணத்தில் கிடைத்தது,
  வேலையுடன் 
  வாழ்க்கைத்துணையும்..

  தாயில்லாப் பிள்ளையெனத்
  தன்போக்கில் விட்டதாலே,
  இன்று
  தாய்மண்ணையே மறந்துவிட்டான்..

  பட்டிக்காடு வேண்டாமாம்,
  பட்டணத்தில் வீடுகட்டி
  பகட்டாய் வாழ்ந்திடவே
  காடுமேடு நிலத்தைவிற்று
  காசுகொடு என்றுவந்தான்..

  கேட்டபடி 
  கொடுத்துவிட்டேன்,
  குடிசையொன்று எனக்காக
  வைத்துக்கொண்டு
  கிராமத்திலே தங்கிவிட்டேன்..

  பட்டணத்தில் மழைவெள்ளம்
  பேரழிவு என்றார்கள்,
  பதறி ஓடினேன்..

  பார்த்ததங்கே-
  எங்கும் ஓலம்,
  எல்லாம் அழிந்த கோலம்..

  எனக்கு,
  எல்லாம் போச்சு
  கிடைத்தது
  என்னிரு பேரப்பிள்ளைகள்தான்..

  இவர்களாவது
  என்பேச்சு கேட்பார்களா
  இனிய வாழ்வு வவாழ்வார்களா..

  கண்ணீர்க் கடலில்
  நம்பிக்கைப் படகில்
  நான் போகிறேன்
  கிராமம் நோக்கி…!

  -செண்பக ஜெகதீசன்…

 4. சென்னை மழைக்குள்ளே சிக்குண்டு சீர்குழைந்த 
  அன்னைதந்தைக் குற்ற  தறியாதச் – சின்னக் 
  குழந்தைகள் செய்வதற்று நின்றிருக்கக் கண்டு 
  கிழவர் மனம்பதைத்து காப்பாற்றும் காட்சி 
  மனிதாபி மானத்தின் சான்று.

 5. மகிழ்வான தருணங்களில்
  தலையில்  தூக்கி வைத்து
  கொண்டாடி மகிழ்ந்து
  துவண்ட பொழுதுகளில்
  கைகொடுத்து தூக்கியே
  உற்சாகமூட்டி உறுதுணையாகி
  வாழ்வின் ஒவ்வொரு தருணமதிலும்
  சுமையாக ஓர்பொழுதும் எண்ணாது
  சுகமாக ஏற்றுக் கொண்டு
  எந்தன் வாழ்வின் பாதை தனில்
  துணையாக வரும் உறவுகள்
  அனைவரையும் சுமக்கிறேன்
  எந்தன் நெஞ்சமதில் சுகமாக !
  ஏற்றத் தாழ்வுகள் – மேடு பள்ளங்கள்
   அனைத்தையும் கடக்கின்றேன்  – அந்த
  அன்பு உள்ளங்களின் துணையுடனே !

 6. டிசம்பர் 1
  இயற்கை விதைத்த
  வஞ்சத்தில்பெற்றமகனின்
  உயிர் இழந்தான்
  உடமை இழந்தான்
  எஞ்சியதுஅவன்உயிர் மட்டுமே
  கஞ்சிக்கே வழியில்லாதபோது
  பிஞ்சுகள் இரண்டு வெள்ளத்தில்
  தஞ்சம் ஆகின அவனிடத்தில்
  பஞ்சப் பராரியான அவனோ
  அஞ்ச வில்லை அள்ளியெடுத்து
  கொஞ்சி மகிழ்ந்து நெஞ்சோடுஅணைத்து
  பிஞ்சுகள் இரண்டும்
  பஞ்சாகவும்
  நஞ்சாகவும் கீழ்மைபடாமல் வளர்க்க
  நெஞ்சு நிமிர்த்தி நடந்தான்
  ஈரமான ஏழை மனிதன்
  வெள்ளச்சேதத்தில் செழித்து வளர்ந்தது
  மனிதாபிமானம்,
  சரஸ்வதி ராசேந்திரன்

 7. இருள் தந்த ஒளி

  இருண்டு நீ
  திரண்டபோது
  இருளப்போகிறது
  எம் வாழ்க்கை யென
  எள்ளளவும் எண்ணவில்லை

  இருபதாண்டு உழைப்பினை
  இரண்டே நாட்களில்
  இல்லையெனச் செய்தாய்
  இதென்ன நியாயம்

  நீ ஓடுகின்ற வழியெல்லாம்
  வீடுகளை கட்டியது
  எங்கள் தவறுதான்
  அதற்காக
  எய்தவர்களை விடுத்து
  அம்புகளை ஏன் அழித்தாய்

  பாலுக்கு குழந்தைகள் அழுததையும்
  பச்சை நீர் வேண்டி
  முதியோரகள் கெஞ்சியதையும்
  பார்த்தப் பின்னரும்
  உன் பயங்கரவாத பயணத்தை
  ஏன் தொடர்ந்தாய்

  பித்தம் தலைக்கேறி
  நீ ஆடிய ஆட்டத்திலும்
  புத்தம்புது நம்பிக்கைகள்
  எங்களுக்குள் பூத்திருக்கிறது

  நீறு பூசிய நெருப்பாய்
  மறைந்திருந்த மனிதம்
  விஸ்வரூபம் காட்டி
  வியக்க வைக்கிறது

  இடருற்ற நேரத்தில்
  இளைஞர்களின் எழுச்சி
  நாளைய தேசத்தின் மீது
  நம்பிக்கைக் கொள்ள வைக்கிறது

  அனைத்தையும் இழந்து
  பெற்றெடுத்த மழலைகளோடு
  பெருவெளியில் நடக்கிறோம்
  ஆனாலும்
  கைக்குழந்தைகளின்
  கண்களில் கூட கலக்கமில்லை

  மறுபடியும்
  முகிழ்த்தெழுவோம்
  இம்முறை
  இயற்கை கூறுகளுக்கு
  இடையூறின்றி!

 8. பட வரி 43.
  இரட்சகன் தீர்ப்பு.
   
  மேட்டுக் காணி நோக்கியே
  காட்டு வழியென்று ஆண்டவனையே
  கேட்டுச் செல்கிறேன், எஞ்சிய 
  பட்டுச் செல்வங்களுடன் புனர்வாழ்விற்கு!
  எட்டுவேன் என்னால் இயன்றவரை!
   
  எசமானின் பிள்ளையோடென் பேரனையும் 
  நிசமாக உயிராய் வளர்ப்பேன்!
  உப்பிட்டவரை உள்ளளளவும் நினையென்று
  செப்பியது அன்று உண்மையோ!
  தப்பாத ஒரு தருணமிதோ!
   
  பிரளய வெள்ளம் ஊரோடென்னையும்
  புரட்டிப் போட்டது எதுவுமின்றி.
  இரண்டு செல்வங்களோடு என்னையும்
  அரங்கநாதன் வாழச் செய்கிறான்!
  இரட்சகனின் தீர்ப்போடு செல்கிறேன்!
   
  வேதா. இலங்காதிலகம்.
  டென்மார்க்
  9-12-2015
   

 9. வறண்ட காடு
  இருண்ட வானம்
  தளர்ந்த கால்கள்
  உலர்ந்த உதடு
  தவிக்கும் பார்வை
  நடுங்கும் தோள்கள்
  சுருங்கும் நெஞ்சம்
  சுவாசம் கெஞ்சும்
  சலித்த சொற்கள்
  தொலைத்த உறவு
  முதிர்ந்த வயது
  முடிந்த பாதை
  இருந்த போதும்
  என் அரவணைப்பில்
  நம்பிக்கை ஒருபக்கம்
  தைரியம் மறுபக்கம்
  ஏளனமாக்க பார்க்காதே என்னை
  இன்னும் என்வசம் வசந்தம்தான்

 10. அன்புதனில் அடைக்கலம்  

  அடையும் பொழுதில்
  முதிர்ந்த கொடியில்
  சூரியன் உறங்க பின்
  சுடர்விடும் அகழ்விளக்காய்
  அணைத்து ததும்பும் இரு நிலா.

  வலிகள் கூறும்  விழிகள் கொண்ட
  விதைகள் இரட்டை விருட்சமாக்க 
  சுமந்து செல்லும் உடைந்த விறகின் இருள் உலா.

  விடைகள் தேடி நடைகள் போடும் பாதத்திற்கு பாதை தெரியுமோ?  செல்லும் தூரம் குறையுமோ?
  இந்த துயரம் மறையுமோ?

  புது விடியல் விடியுமோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *