படக்கவிதைப் போட்டி (42)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
வெங்கட்சிவா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (12.12.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
கற்றிடு…
படத்தில் குட்டியைப் பார்த்தாலும்
பொம்மை உருவில் கண்டாலும்,
தடங்க லின்றி ஆடதுவும்
தாய்மைப் பாசம் காட்டிடுதே,
இடைஞ்ச லென்று பெற்றோரை
எங்கோ அனுப்பிடும் மானிடனே,
கிடைக்குமுன் உனக்கும் இதுபோல
கற்றிடு ஆட்டிடம் பாசத்தையே…!
-செண்பக ஜெகதீசன்…
ஆசையாய் உனை வளர்த்த நல்லதம்பி
முட்டி அழுதுகொண்டிருக்கிறான்
மூன்றுநாளாய்த் தேம்பித்தேம்பி!
அண்ணன் எங்கே எங்கே என்று
அங்குமிங்கும் தேடிக்கொண்டிருக்கிறான்
முட்டிப்பாலருந்துமுன் உன் குட்டித்தம்பி.
மண்சட்டியில் துண்டுகளாகி..
வெந்த குழம்பின் வாசத்திலும்
உப்புத்தூவிய கண்டங்களாகி..
வெய்யிலில் காயும் மீதத்திலும்
வீசும் உன் பிணவாடையை…
தாங்குமா இத்தாயாடு?
கறியாய்ப்போன கண்மணியின்
கரியுருவை முகர்ந்து முகர்ந்து
கவலை மறக்கிறதே தாயவள் உயிர்க்கூடு..
என் அன்பு ஆட்டிற்கு -கார்த்திகா AK
கறுப்பாகப் பிறந்ததனால்
வெள்ளைச் சுவற்றில்
வரைந்த ஆட்டை
உன் கண்கள்
வருடுகிறதோ!
ஈன்ற குட்டிகளில்
தொலைந்து விட்ட
ஒன்றைக் காண்கிறாயோ
உன் குலச் சாயல்
மிளிர்கின்றதோ இதில்
வாசம் தேடுகிறதா மனம்
பின் நிற்கும்
குட்டியை முன்னிருந்து
முகர்கின்றாயோ!
இல்லை எதுவாகினும்,
உண்டு பார்த்தால் என்னவென்று
சில கொழுத்த ஓநாய்களின்
தீச் சிந்தையை மட்டும் உன்னில் ஓடவிட்டு
கறையாக்கிக் கொள்(ல்லா)ளாதே !!
சித்திரத்தில் ஏதேனும் பத்திரமாய் நிற்குமென்று
புத்திரத்தைத் தேடுகின்ற தாயாடு – கத்திகத்தி
சுத்துமது கத்திக் கிரையா னதறியா
பித்திதேடல் தாய்மைப் பிணி.
*மெய்யன் நடராஜ்
என்னவாக இருக்கும்
பாரம்மா இங்கு வந்து
பாசத்துடன் யாரோ ஒருவர்
நம் படத்தை வரைந்து
வாசகங்கள் எழுதுமுன்
வந்த மழை காரணமாய்
ஓடிவிட்டார்போலும்!
பாசமென்றா நினைத்தாய்
பைத்தியக்காரி
ஆடுகள்தான் இங்கு
சிறுநீர் கழிக்கும் எனும்
எரிச்சல் எச்சரிக்கை
செய்ய நினைத்திருப்பார்கள்
அல்லது
படம் வரைந்து
பிச்சை எடுக்கும்
அந்தக் கிழவரின்
கைவண்ணமாய்
இருக்கக்கூடும்
நாளைய தேர்தலில்
நம் சின்னத்தில்
போட்டியிடும் வேட்பாளர்
சுவரில் முன்பதிவு பெற
தீட்டிய சித்திரமாய்
இருக்கலாம்
இல்லையெனில்
விரைவில் திறக்க இருக்கும்
கறிக்கடையின்
விளம்பரமாயும் இருக்கலாம்
இங்கிருப்பது நல்லதல்ல
வா வா
விரைந்து செல்லலாம்!
நேற்றைய பிரியாணியில்
தொலைந்து போன குட்டியை
சித்திரமாய் வரைந்து
தொலைத்தவன் எவன்…..
தாய்மையின் வாசம்
நுகருமுன்னமே
தலைகொடுத்து பலியான
பலிபீடத்தைப் போட்டுடைப்போம்.
சித்திரத்தைப் பாரடி என்
செல்லக் குட்டி ஆடே….
பத்திரமாய் இருக்க உனக்கு
பாடங் கற்பித்துள்ளான்….
விதிவசமாய் இங்கே
விலையில்லாப் பொருளானோம்….
பெருமழையில் தப்பித்தோம்….
பிழைக்க வழியில்லா
சம்சாரியின் துயர்தீர்ப்போம்..
சந்தையிலே விலைபோய்
சமயத்தில் அவர்க்குதவும்
சிந்தைமிகக் கொள்வோம்….
நாளை
எந்தப் பாத்திரத்தில் வெந்து
எவர்க்கு இரையாவோம்
யாரறிவார் பராபரமே….
இளவல் ஹரிஹரன் மதுரை.
கவிதையான சோகம்…
போன ஞாயிறு
பிரித்து தூக்கிப்
போன
இன்னொரு குட்டி
இது இல்லை என்று தெரிந்த
பின்னும்
இருக்கும் குட்டிக்கு
நம்பிக்கை தர…
முயலுகிறது
அம்மா ஆடு…
தனக்கும் தெரியும் என்று
காட்டிக் கொள்ளாமல்
சரி என்பது போல…
ஒப்புக் கொள்ளும்
குட்டி
முகம் மறைத்துக் கொள்கிறது…
இவர்கள் கதை அறிந்த
நான்
சற்று முன் வரைந்த
ஆட்டுக்குட்டியின் புகைப்படத்திற்கு
உயிர் கொடுக்க
வேண்டுகிறேன்….
கவிதைக்குள்ளாகவாவது…
கவிஜி
நரக நெருப்பில் வீழ்ந்தேனே !
மறந்திருந்த துக்கத்தை
மறக்கவொட்டாமல் செய்கிறதே
வளர்த்த மேய்ச்சல் காரன்
வரைந்து வைத்தான் சோகத்தில்
அச்சுஅசலா என் மகள்படத்தை
ஊரு பக்கம் பேய் மழையாம்
ஊதகாத்து வேறு வீசுதாம்
ஆத்துப் பக்கம் வெள்ளம் வருதாம்
ஒத்தையிலே போகாதேன்னு
தலை தலையா அடிச்சுகிட்டேன்
தங்க மகள் கேட்காம போய்
தண்ணியோட போயிட்டாளே !
மேட்டுமேலே நின்னு மகள்
போறதை வேடிக்கை பார்க்க
மட்டும்தானே முடிஞ்சுது
மேய்ப்பவன் குடும்பத்தை பார்ப்பானா
தண்ணியிலே போற உன்னை மீட்பானா?
மகளே உன்னை மறக்க முடியாம
இந்த படத்தை நுகர்ந்து நுகர்ந்து
விழியிலே நீர் ஓடி நரக நெருப்பில்
நாளும் வீழ்கிறேனே !என் மகளே
சரஸ்வதிராசேந்திரன்
பிரிய மகனே !
நானோ உன்னை காணாத
துயர வெள்ளத்தில்
முதலாளியோ வெள்ள
நிவாரணமாய் ஆட்டுக்கு
மூவாயிர்ம் கிடைக்கும் என்ற
மகிழ்வில் ! ஆம் அவனுக்கென்ன?
தழை பறித்துப்போடுபவனும் அவந்தான்
தலையை வெட்டி காசு பார்ப்பவனும் அவந்தான்
செத்து கொடுத்தாய் வளர்த்தவனுக்கு சொத்து
பெத்தவளுக்கு தீரா துயர்தான் கொடுத்தாய்
நில்லாத என் கண்ணிரால்உன் முகம்
வருடி வருடி உன் நினைவை காக்கின்றேன்
என்னிடம் திரும்பி வருவாயே என் மகனே
சரஸ்வதி ராசேந்திரன்
பட வரி 42.
குட்டிப் படம் கடதாசியில்
ஒட்டியதா! அதையாவது பிரித்தால்
பட்டினி பரிதவிப்பிற்கு உண்ணலாமே!
கிட்டச் சென்று ஆராய்ச்சியா!
சிறிதே பொறு பிள்ளாய்!
கடிதே புற்தரைக்குச் செல்லலாம்!
தெரிவதிங்கு நம் சொந்தமா!
உரிமையாய் அறிந்திட முகர்தலா!
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
12-12-2015