படக்கவிதைப் போட்டி 38-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
திரு. துளசிதாசனின் புகைப்படத்தை இவ்வாரத்தின் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றி.
சமூகத்தில் மலிந்துவிட்ட அவலங்களைக் களைய தெய்வங்களுக்கு இனி இரு கைகள் போதா; ஈராயிரம் கைகள்தாம் வேண்டும் என்பதைத்தான் இப்புகைப்படத்தில் காட்சிதரும் பெண்தெய்வம் குறியீடாய் விளக்குகின்றதோ?
இனி, இவ்வாரப் போட்டிக் கவிதைகளைக் காண்போம்!
’குணமும் மனமும் வேறுவேறான மாந்தரைப்போல், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் எத்தனை எத்தனை கடவுளர் உருவங்கள் புதிது புதிதாய் முளைத்தபடி இருக்கின்றன!’ என வியக்கிறார் திரு. கவிஜி.
வண்ணங்களான கடவுள்
விடை மறந்த கடவுள்
வாகை மாதிரியான கடவுள்
வால் கொண்ட கடவுள்
குருதி சொட்டும் கடவுள்
கும்பிட்டு திரியும் கடவுள்
கூந்தல் வளர்க்கும் கடவுள்
ஆடை துறந்த கடவுள்
அழுக்கு நிறைந்த கடவுள்
வாய் உப்பிய கடவுள்
வயிறு உப்பிய கடவுள்
மஞ்சள் புடவைக் கடவுள்
மகாநதி பேசும் கடவுள்
மத்தளம் அடிக்கும் கடவுள்
மயானம் சுமக்கும் கடவுள்..
குழுமியிருக்கும் கடவுள்கள்
மத்தியில் திருதிருவென
விழித்துக் கொண்டிருந்தார்
புதிதாக சேர்ந்த, இன்னும் பெயர்
வைக்கப் படாத
இந்த கடவுளும்….
***
வாழ்வில் வெற்றிபெற நம்பிக்கை ஏராளம் வேண்டும் என்ற மனிதனின் எண்ணந்தான் கடவுளர்தம் கைகளின் எண்ணிக்கையையும் கூட்டிவிட்டதோ? என்று வினவுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
நிறைய வேண்டும்
நம்பிக்கை என்பதால்தானோ,
நம்பிக்கையுடன்
நிறைய கைகள் வைத்துக்கொண்டார்களோ
நாம் வணங்கும் கடவுள்களுக்கு…!
***
நல்ல கவிதைகளை நயமுடன் படைத்திருக்கும் கவிஞர்களுக்குப் பாராட்டுக்கள்!
அடுத்து நாம் காணப்போவது இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை!
”மரத்தை மறைத்தது மாமத யானை; மரத்தில் மறைந்தது மாமத யானை” என்பார் திருமூலர். சிற்பியின் கலைப்படைப்பான சிலையைக் கடவுளாய்க் காண்பதும், கடவுளாய்க் காட்சியளிக்கும் சிலையானது சிற்பியின் கைவண்ணமேயன்றி வேறில்லை என்று முடிவுசெய்வதும் தனிமனிதனின் விருப்பந்தான். பார்வைக்கேற்றபடி காணும்பொருளும் தோற்றம் தருகின்றது. இந்த அரிய கருத்தை எளிய வரிகளில் விளக்கியிருக்கும் கவிதையொன்று என் கவனத்தைக் கவர்ந்தது.
பதினாறு கரங்களது விரித்து
பதித்த எந்த உருவிது!
பக்தியாய் வணங்குவதும் கலையிதுவென
பத்திரமாய் மதித்துச் செல்வதும்
பதுமையாய்ப் பார்த்து விலகுவதும்
பலரது மன எண்ணமாகுது.
வேலையற்றவர் வேலையிதுவென சிலரது
வேற்றுமை எண்ணமும் குவிகிறது.
இக்கவிதையை எழுதியிருக்கும் திருமிகு. வேதா. இலங்காதிலகத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்க் குறிப்பிட விரும்புகின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே!
***
அடுத்து, நாட்டில் மண்டிவரும் மதவாத நச்சுச் செடிகளை உதவாது என வேரோடு பிடுங்கியெறிந்து, அனைத்து மதங்களும் ஒன்றே என நிலைநாட்டுதற்குத்தான் இந்தப் பத்ரகாளித் தோற்றமா? இல்லை…இதுவும் பாமர மக்களை ஏய்க்கும் பொய்வேடமா? என்று தெய்வவுருவைப் பார்த்துக் கேள்வியால் வேள்வி செய்யும் கவிதை ஒன்று!
தீவிர வாதமும்
பயங்கர வாதமும்
உச்சமாகிப்போனது
கொலைகளைச்செய்வதையே
கொள்கையாய் கொண்டோரையும்
நின்றழிக்கும் பத்ர காளியாய் தோன்றி பயமுறுத்த புறப்பட்டாயோ?
எம்மதமும் நம் மதமாய்
சம்மதித்து வாழ வழி செய்வாயோ
இல்லை நீயும் பொய் வேடமிட்டு
குண்டு வைப்பாயோ யாரறிவார்?
கடவுள் பெயராலேயே
கன்னக்கோல் சாத்தும் உலகமாயிற்றே
எல்லாம் கலிகாலம்…
திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய் அறிவிக்கின்றேன்.
பங்குபெற்றோர் அனைவருக்கும் மீண்டும் என் பாராட்டுக்கள்!
எனது கவிதையை பாராட்டுக்குரியதாய் தேர்தெடுத்தமைக்கு மேகலாராமமூர்த்தி அவர்களுக்கும் இந்த வாய்ப்பினைதந்த வல்லமைக்கும்நன்றி ,, நன்றி=சரஸ்வதிராசேந்திரன்
மிக்க நன்றி சகோதரி சிறந்த கவிஞர் தெரிவிற்கு.
வழக்கமாக இதோ பாருங்கள் இது தான் இவ்வாரப் படம் என்று நான் என் கணவருக்கும் காட்டுவேன்.
என்ன ஒரே மாதிரியாக உள்ளதே இதுக்குப் போய் எழுதப் போகிறாயா என்றார்.
அவர் கருத்து மட்டும் கூறுவார் வற்புறுத்த மாட்டார்.
நான் சிரித்துவிட்டு எழுதினேன்.
கடைசி வரிகள் இரண்டும் அவரது கருத்தையொட்டி எழுதியதே.
முயற்சிப்போம்.
மற்றைய கவியாளர்களிற்கும் வாழ்த்துகள்.