-மேகலா இராமமூர்த்தி

இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான புகைப்படத்தை எடுத்துத் தந்திருக்கும் திரு. கண்ணன் முத்துராமனுக்கும், அதனைத் தெரிவுசெய்து தந்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் வல்லமை இதழின் நன்றி!

running children

மானெனத் துள்ளியோடும் இந்த இளஞ்சிறார்கள் நீரிலே ஓடி விளையாடுகின்றார்களா? இல்லை விதியின் விளையாட்டில் தொலைந்துபோனவர்கள் யாரையேனும் தேடி ஓடுகின்றார்களா? எனும் ஐயத்தை நம்முள் விதைக்கின்றது இப்புகைப்படம்!

கவிதைப்படையல் நடத்தி இதற்கு விடைபகரக் காத்திருக்கும் கவிஞர்களை வரவேற்று அவர்தம் கவிதைகளுக்குள் நுழைவோம்!

***

சிறுவர்களைப் பறவைகளாக்கி, வேடனை வேடிக்கைபார்க்கும் ரசிகனாக்கியிருக்கின்றார் திரு. கவிஜி தன் கவிதையில்!

வருகிறீர்கள்
அமர்கிறீர்கள்
பறக்கறீர்கள்
வேடனை ரசிகனாக்கிய
நீங்கள் எந்த
நாட்டு பறவைகள்,
சிறுவர்களே……!

***

’கடலினும் ஆழமான மனத்தின் துணைகொண்டு எதனையும் வெல்லலாம்; உலகின் எவ்விடத்திற்கும் செல்லலாம்’ என ஊக்கமூட்டுகின்றார் திரு. நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன். 

கடலின் முனைகளை கப்பலின் மூலம் கடக்கலாம்
மனிதனின் மூளைகளின் மூலம் மனதை அறியலாம்
ஆற்று நீர் குடிநீராக மாறுகிறது
கடல் நீர் உப்பாக மாறுகிறது
உப்பில்லாத பண்டம் குப்பையிலே
உணர்வில்லாத மனம் சுடுகாட்டிலே
கடலிலே மிதக்கலாம்
எல்லாவற்றையும் மறக்கலாம்
சின்னஞ்சிறு சிறுவர்கள் வண்ணத்துப்பூச்சிகள்
பறப்பது போல மகிழ்ச்சியாக விளையாடுகிறார்கள்
கடலில் தோன்றுவது முத்து
மனதில் தோன்றவது வைராக்கியம் என்ற வைரமுத்து
கடலின் ஆழம் பெரியது தான்
மனித மனத்தின் ஆழ்மனது அதைவிடப் பெரியது
கடலின் சீற்றம் சுனாமி
மனித மனத்தின் ஊக்கம் மியாமி பல்கலைகழகத்தலும்
கற்க வைக்கும்!

***

’பிள்ளைகளுக்குப் போட்டியாய்த் துள்ளிவிளையாடத்தான் மேலிருந்து வந்ததோ இந்த வான்மழை?’ என வினா எழுப்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

தணியாத உற்சாகத்தில்
பிள்ளைகள்
தண்ணீரில் விளையாடுவதைப்
பார்த்துத்தான்,
போட்டியாய்
வந்து விளையாடிவிட்டதோ
வான்மழை…!

***

’வாழ்க்கையும் வான்மழையும் ஒன்றுதான்! இரண்டுமே, சிரிக்கவைக்கும் சிலநேரங்களில்! துடிக்கவைக்கும் சிலநேரங்களில்! துன்பம்கண்டு துவண்டு புறமுதுகிடாது இலக்குநோக்கிப் பயணித்தால் வெற்றி நிச்சயம்!’ என்பது திரு. இளவல் ஹரிஹரனின் கவிதை நமக்குச் சொல்லும் நீதி!

உள்வாங்குதலும்
ஒரேயடியாய்ச் சீறுவதும்
கடலின் இயல்பே…….

வேடிக்கை பார்ப்பதும்
விளையாட்டாய் ஓடுவதும்
சிறுவர்கள் இயல்பே…….

வாழ்க்கை இப்படித்தான்….
சிலநேரம் சீறும்,
பலநேரம் உள்வாங்கும்

புறமுதுகிட்டு ஓடவேண்டாம்;
வெருண்டு பயந்தோடவேண்டாம்.
கரைதொடும் முன்னம்
கடக்க வேண்டியவை ஏராளம்!
கவனங் கொள்ளுங்கள்,
கற்க வேண்டியவையும் ஏராளம்!

எங்கேயும் எப்போதும்
எவரிடமோ..எதுவிடமோ
இங்கிதமாய்ப் பாடங்கள்
இனிதாகக் கற்றுக் கொள்ளுங்கள்.

இது தான், இவை தான்
என்றின்றி,
ஆகாய வெளியெங்கும்
ஆண்டவன் விதைத்துள்ளான்
ஆகவே சிறுவர்களே…..
இலக்கு உருவாக்கி
இலக்கு நோக்கி ஓடுங்கள்!

பன்முகப் பார்வையை
ஒருமுகமாய்க் குவியுங்கள்.
கடலும் உங்கள்
கைகளில் அள்ளலாம்,
வாழ்க்கையை மகிழ்வுடன்
வாழ்ந்திடுங் கலை வெல்லலாம்.

*** 

’அடிக்கும் மழைக்கும் ’அரசே’ பொறுப்பென்று கைகாட்டாமல், களத்தில் இறங்கு தோழா! வெள்ளத்தால் உள்ளம்வாடும் உறவுகளைக் கைகொடுத்துக் காப்பாற்று!’ என்று அவசர நேரத்திற்கேற்ற அவசியமானதோர் அறிவுரையை அளித்துள்ளார் திரு. மெய்யன் நடராஜ். 

அடிக்கும் மழைக்கும் அரசே பொறுப்பென்று 
அசட்டை கொள்ளாமல் அசமந்தம் காட்டாமல் 
துடிப்போடு செயல்படுவோம் தோழனே.. 
ஓடு ஓடு விரைவாய் ஓடு 
அதோ தூரத்தில் நமதுறவுகளை 
மழைவெள்ளம் அடித்துச் செல்கிறது 
அறிக்கைகள் விடுவது அரசின் வேலையாகட்டும் 
ஆபத்தில் உதவுவது நமது கடமையாகட்டும் 
ஓடு தோழனே ஓடு ..!

*** 

மழைவெள்ளம் கண்டு பதறி, துள்ளியோடும் சிறார்களோ இவர்கள்? என்று கேட்கின்றார் திருமிகு. வேதா. இலங்காதிலகம்.

இன்பத் துள்ளலோ இது!
துன்பம் அள்ளல் தமிழ்நாட்டிற்கு!
கடலா பார்ப்பது! அன்றி
திடலையும் எட்டும் வெள்ளமா!
வெள்ள மட்டம் ஏறுதென்று
பள்ளம் நோக்கிப் பாயுதென்று
கொள்ளியிடும் இதயத்தோடு பதறி
துள்ளியோடும் பிள்ளைகளா இவர்கள்

***

வல்லமை ஆசிரியருக்கு வந்த கவிதை ஒன்று!

”கிராமங்களையெல்லாம் காலிசெய்துவிட்டுச் சென்னைநோக்கிப் படையெடுத்த மக்கள்கூட்டம் கட்டிய அடுக்குமாடிக் குடியிருப்புக்கள் அல்லவோ பெய்த மழைநீரை  வெளியே(ற்)றவிடாமல் சென்னை நகரத்தையே நரகமாக்கியிருக்கின்றன; மக்களின் பிழைக்கு மழை தந்த பாடம் இது! இனியேனும் மக்கள் நகரத்தைவிட்டுச் சென்று பிழைத்தல் நன்று!” என்று சற்றே கோபத்தோடு ஆலோசனை வழங்குகின்றார் மரபூர் திரு. ஜெய. சந்திரசேகரன். 

நீர் அறிவீரோ? நீர் இன்றி நீர் இல்லை!
பின்னர் ஏன் வெறுக்கிறீர்?
சீர் கெட்ட கோட்டம், கெட்டது வெள்ளோட்டம்!
அடையாற்றை
அடைத்துக்கட்டிய அடுக்கு மாடிகள்,
அடித்துப்போயின மேட்டுக்குடி கீழ்குடிகள் ஏற்றதாழ்வு,
படித்தவன் படிக்காதவன் பட்டறிவு
இருப்பவன் இல்லாதவன் இடற்பாடுகள்!
வந்தன இடற்பாடுகள்!
மழை, எங்கோ
அழைத்தும் வராதது,
அழைக்காதபோது வந்தது,
கூவத்தை சுத்தம் செய்ய பன்னாட்டுப் பண உதவியைக்
கவ்வத் துடித்தன சில வெள்ளைவேட்டிப் பன்னாடைகள்!
ஆனால்,
குழந்தையின் வாய்ப்பால் துடைக்கும் தாய்போல்
நதிகள் அழுக்கை இயற்கை மழையே துடைத்தது!
மக்கள் செய்த பிழை, பிழைப்பதற்கு நகரம் தேடி
அங்கிங்கு குடியமர்ந்து குடிகெடுத்தனர்!
இனி ஓடு, ஊர் தேடி, நகரங்கள் நரகங்கள் ஆகுமுன்!
மழை கொடுத்தது வாழ்க்கைப் பாடம், இனி
பிழை செய்யாதே, எங்கேனும் ஓடிப் பிழை!

***

சமீபத்திய தமிழக மழையின் பாதிப்பைப் பெரும்பாலான கவிதைகளில் பாடுபொருளாய்க் காண்கின்றேன். புகைப்படத்தைச் சூழ்நிலைக்கேற்ற வகையில் பொருத்திப்பார்க்கும் கவிஞர்களின் திறனைப் போற்றுகின்றேன்!

அடுத்து நாம் சந்திக்கவிருப்பது இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை! 

”கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை” எனும் வள்ளுவரின் வாய்மொழி என்றுமே பொய்த்துப்போவதில்லை என்பதற்குச் சின்னாட்கள் முன்பு பெய்திருக்கும் பெருமழையும் சாட்சிசொல்லியிருக்கின்றது.

”மழையே! உன்னை நாங்கள் விரும்பும்போது நீ விலகியோடுவதும், எம்மை நீ விரும்பி வரும்போது நாங்கள் விலகியோடுவதுமான இந்த மாயப் போராட்டம் என்று ஓயும்? ’அமிழ்தம்’ என்று உனைப் புகழ்ந்தார் வான்புகழ் வள்ளுவர்; நீ அமிழ்தம்தான்! ஆனால் அளவை மிஞ்சியதால் எமக்கு நஞ்சானாய்!” மக்களின் வாழ்வைக் கெடுத்த மழையே! எப்போது எம்மை வாழ்விக்கப் போகிறாய்? என்று வேதனைக்குரல் எழுப்பும் ஒரு கவிதை!

உன்னை நோக்கி
நாங்கள் வரும்போது
நீ ஓடுவதும்
எம்மை நோக்கி
நீ வரும்போது
நாங்கள் ஓடுவதும்
இது என்ன
மாயப் போராட்டம்?

வானுக்கு சென்ற நீ
வருவாயா என
எத்தனை ஆண்டுகள்
ஏங்கியிருக்கிறோம்
இன்று இப்படி
ஏரளாமாய் வந்து
போகமாட்டாயா என
புலம்ப வைத்தது ஏன்?

கெடுப்பதும்
கெட்டாரை வாழவைப்பதும்
நீயே என்றான்
வான்புகழ் வள்ளுவன்
கெடுத்துவிட்டாய்
எப்பொழுது
வாழ வைப்பாய்?
 

மழையின் குணத்தைப் பிழையின்றித் தன் கவிதையில் படைத்துக் காட்டியிருக்கும் திரு. கொ.வை. அரங்கநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கின்றேன்.

***

”துள்ளியோடும் இந்த பரதவச் சிறுவர்கள், மல்லிகையினும் மணமுடைய மனோரஞ்சிதங்கள்! மழைவெள்ளத்தில் சிக்கிய மக்களைக் காத்துநிற்கும் தேவதூதர்கள்! வாடிநிற்போரைத் தேடிஉதவும் விடிவெள்ளிகள்!” என்று புகைப்படச் சிறார்களுக்குப் புகழ்மாலை சூட்டியுள்ளார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.  

இந்த சிறுவர்களுக்கு
விளையாட்டு மைதானமும்
வாழ்க்கையுமே கடல்தான்!
இவர்களின் பெற்றோர்கள்
கடலுக்குள் சென்றால்தான்
இவர்களின் பசியும் பட்டினியும்
போகும் நிலை
இவர்கள் தந்தச் சிற்பங்கள் அல்ல
இவர்கள் அழகான கிளிஞ்சல்கள்!
சக மனிதர்களின் துன்பம் கண்டு
வேகமாய் ஓடித் தங்களால்
முடிந்தவரை வெள்ளத்தில் நீந்தி
கரை சேர்க்கும் மனித நேயம்
கொண்டவர்கள்!
மல்லிகையை விட மணமுள்ள
மானோ ரஞ்சிதங்கள்!
செந்தாமரையைக் காட்டிலும்
அழகான, உணர்ச்சிகளும்
கொண்ட சிறுவர்கள்!
இவர்கள் மீனவர்கள் அல்ல…
மீட்பவர்கள் தேவதூதர்கள்!
சென்னை வெள்ளத்தில்
தன்னை இணைத்துக்கொண்ட
தன்னலமற்ற நாளைய விடிவெள்ளிகள்!
 

உள்ளந்தொடும் இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய் அறிவிக்கின்றேன்.

பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் நன்றியும் பாராட்டும்! 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “படக்கவிதைப் போட்டி 41-இன் முடிவுகள்

  1. என்னுடைய கவிதையை பாராட்டுக்குரியதாய் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி-சரஸ்வதிராசேந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *