-மேகலா இராமமூர்த்தி

மானுட உயிர்கள் அனைத்திற்கும் பிறப்பு ஒத்தவகையில் அமைந்திருந்தபோதினும், பணம், பதவி, வசதிவாய்ப்புக்கள் இன்னபிறவற்றில் உள்ள வேறுபாடுகள் காரணமாக அனைத்து உயிர்களும் ஒரே வகையான சிறப்பையும், மதிப்பையும் சமுதாயத்தில் பெறுவதில்லை. இன்று நேற்றல்ல…வள்ளுவர் காலத்திலேயே நம் சமூகம் இப்படித்தான் இருந்திருக்கின்றது. அதனால்தான் அவர்,

”பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”
என்று குறள் எழுதவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

வளமையும் வறுமையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்போல் சமூகத்தில் என்றுமிருப்பவை. வளமான வாழ்வுபெற்றோர் அனைவரும் எளியோர்க்குதவும் வளமான மனத்தையும் பெற்றிருப்பர் என்று கூறுவதற்கில்லை. அப்படியே உதவிசெய்யப் புகுவோரும் பெரும்பாலும் தம் பெயருக்குக் கிடைக்கப்போகும் விளம்பரத்தையும், தங்கள் கணக்கில் சேரப்போகும் புண்ணியத்தையும் எண்ணியுமே அறச்செயல்களும் தொண்டும் புரிவதாய்த் தோன்றுகின்றது.

”அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் எல்லாம்
பெயர்வி ளங்கி ஒளிர நிறுத்தல்”
என்று தருமவான்களின் உட்கிடையை வெளிப்படையாய்த் தன் பாட்டில் கூறுகின்ற பாரதி, இதுபோன்ற தருமங்கள் யாவும் அதைச் செய்வோரின் பெயரை ஒளியோடு நிறுத்த உதவுகின்றனவேயன்றி வேறுபயனில்லை என்று கூறுவதை நாம் எண்ணிப் பார்க்கலாம்.

ஆலயம் கட்டுபவரை விடுங்கள்! ஆலயத்திற்குக் குழல்விளக்கு போட்டுத்தரும் இறைத்தொண்டர்கூட, அந்தக் குழல்விளக்கின் வெளிச்சம் தவறியும் வெளியில் கசிந்துவிடாதபடி அதில் தன்னுடைய ’பீடும் பெயரும்’ (நடுகல் போன்று) எழுதிவிடுகின்றார். இதனால், அத்தொண்டரின் புகழொளியின்முன் விளக்கின் ஒளியும் குன்றிப்போய்விடுகின்றது.

அப்படியானால் உண்மையான இறைத்தொண்டு என்பது என்ன?

இதற்கு விடைபகர்கின்றது தெய்வச்சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம் எனும் பெரிய புராணம். இறைபக்திச் செல்வர்களான தொண்டர்கள் எவ்வாறிருக்கவேண்டும் என்பதை இதன் வாயிலாய் நாமும் தெரிந்து தெளியலாம்.

thiru”இறைவனின் உண்மைத் தொண்டர்கள் தமக்கு வரும் ஆக்கத்தையும், கேட்டையும் ஒன்றாகவே எண்ணும் இயல்பினர்; அவர்கள் (உலகியல் சார்ந்த) எந்தப்பொருள்மீதும் பற்றுவைப்பதில்லை; அவர்களுக்கு மண்ணாலான ஓடும், விலைமதிப்பில்லா செம்பொன்னும் ஒத்த தன்மையனவே. இத்தொண்டர்களின் பற்றும், பாசமும் பற்றுக்களை அறுக்கும் சிவபரம்பொருள்மீது மட்டுமே! அதைத்தாண்டி, வீடுபேற்றுக்கும் ஆசைப்படாத விறல்வீரர்கள் இவர்கள்” என்று தொண்டர்களின் நல்லியல்பை நமக்கு விண்டுரைக்கின்றார் தொண்டர்சீர் பரவுவார்.

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும்
செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும்
அன்பினில் கும்பிடலே அன்றி
வீடும்
வேண்டா விறலின் விளங்கினார் (திரு.தொ.புராணம்– திருக்கூட்டச்சிறப்பு)

’ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும்’ தொண்டர் கூட்டமெல்லாம் கதைகளிலும் காவியங்களிலும் மட்டுமே காணக்கூடியவை; நிஜத்தில் அப்படி யாரேனும் இருப்பரோ? என்றொரு ஐயமும் நமக்கு எழுகின்றது அல்லவா?

நம் ஐயம் நியாயமானதே! தொண்டர்களில் அநேகர் செம்பொன்னையும் ஓட்டையும் ஒன்றாய் நினைக்கும் அளவிற்கு வாழ்வியல் இன்பங்களை வெறுத்தவர்களில்லை; பொன்னாசையை ஒழித்தவர்களில்லை.

பின், சேக்கிழார் தொண்டர்தம் இயல்பை இவ்வாறு வரையறுத்தது ஏன்?

சற்றே சிந்தித்தால் இதற்கான விடை புலப்படுகின்றது. ஆம், சேக்கிழாரின் வரையறைக்கு முற்றாய்ப் பொருந்தக்கூடிய இறைத்தொண்டர் ஒருவர் அன்று இருக்கவே செய்தார். மங்கையர்குலதிலகமும், சிவநேசச் செல்வியுமான திலகவதியாரின் அருமைத் தம்பியான ’மருள்நீக்கியாராய்’ப் பிறந்து, சமண மதத்தைச் சிலகாலம் சார்ந்திருந்து, பின்பு தமக்கையின் வழிகாட்டுதலில்படிச் சைவநெறிக்குத் திரும்பிய அருள்நெறிச் செல்வரான திருநாவுக்கரசப் பெருமானே அந்த உண்மைத் தொண்டர்! 

அந்த அருளாளர், தம் வாழ்வின் இறுதிப்பகுதியில் திருப்புகலூர் எனும் சிவத்தலத்தில் திருமடம் ஒன்றை நிறுவிச் சிவத்தொண்டும், உழவாரப்பணியும் (கோயிலையும் அதன் சுற்றுப்புறங்களையும் குப்பைகளின்றிச் சுத்தம் செய்தல்) புரிந்துவந்தார். தூவெண்மதிசூடிய பிரானின் பெருமையினை அருந்தமிழ்ப் பாக்களாய் இயற்றி, தேவாதி தேவனான அவனுக்கு ஆரமாய்ச் சூட்டி அழகுபார்த்திருந்த வாகீசரின் உலகாயதப் பற்றற்ற நிலையைக் குவலயத்துக்கு உணர்த்தவிரும்பிய இறையனார், நாவுக்கரசர் உழவாரப்பணி செய்துவந்த இடத்தில் மண்ணோடு பொன்னையும் நவமணிகளையும் கலந்திருக்கச்செய்தார்.

உழவாரம் செய்துவந்த அப்பர்பெருமான், பொன்னும் விலையுயர்ந்த மணிகளும் மண்ணில் மின்னுவதைக் கண்டார். ஆன்மபலங் கொண்ட அந்த வீரர் அவற்றைக்கண்டு சற்றேனும் சித்தத்தில் சபலம் கொண்டாரில்லை. அவையும் அவர் கண்களுக்குக் கோயிலின் தூய்மையைக் கெடுக்கும் குப்பைகளாகவே தோன்றின. ஆதலால் மற்ற குப்பைகளோடு அவற்றையும் தன் உழவாரத்தில் வாரியெடுத்துத் தூரவீசினார்.

செம்பொன்னும்  நவமணியுஞ் சேண்விளங்க ஆங்கெவையும்
உம்பர்பிரான் திருமுன்றி ல் உருள்பருக்கை  உடனொக்க
எம்பெருமான் வாகீச ர் உழவாரத் தினிலேந்தி
வம்பலர்மென் பூங்கமல வாவியினில் புகவெறிந்தார். (திரு. தொ. புராணம் – திருநாவுக்கரசு நாயனார் புராணம்) என்று நாவுக்கரப்பெருமானின் தூய்மையான தொண்டுளத்தை நாவினிக்கப் பாடிய சேக்கிழார், உண்மைத் தொண்டரென்பவர் இவ்வாறு உயர்வு தாழ்வு பாராச் சமநோக்குச் சிந்தனையாளராகவே இருக்கவேண்டும் எனும் முடிவுக்கு வந்திருக்கவேண்டும்.

இன்றைய இறைத்தொண்டர்களிடம் இத்துணைத் தியாகவுள்ளத்தையும், பற்றற்ற நிலையையும் நாம் எதிர்பார்க்கவியலாது. எனினும், சுயவிளம்பரமும், தம் தொண்டு குறித்த அகந்தையும் அவர்கள் மனத்தைவிட்டு அகலாதிருப்பதுதான் வியப்பையும் வேதனையையும் ஒருங்கே விளைக்கின்றது.

அதற்கான சான்று ஒன்றும் சமீபத்தில் நமக்குக் கிடைத்தது. தமிழகத்தில் மழைவெள்ளத்தால் ஏற்பட்ட பேரிடரில் பாதிப்படைந்த மக்களுக்கு உதவிசெய்த சிலர், தங்களுடைய தொண்டு மனப்பான்மையை, தயாள குணத்தைத் தங்கள் மதத்தின் அடிப்படையில் விளம்பரப்படுத்திக்கொண்டது, அவர்கள் மனத்தில் மண்டியிருக்கும் ஆணவத்தை, அடங்காத மதவெறியை அவனிக்கு வெளிச்சமிட்டுக் காட்டுவதாய் அமைந்திருந்தது!

தொண்டு செய்யுமிடத்தில் மதத்திற்கு என்ன வேலை? அங்கே மனிதம் மட்டுமே அல்லவா மலர்ந்திருக்க வேண்டும்! அப்போதுதான் செய்திடும் அறச்செயல் புனிதமடையும். அதற்கு மனிதனை ஆட்டிப்படைக்கும் ’தான்’ எனும் அகந்தையும், அவனைப் பீடித்திருக்கும் அறியாமை இருளும் முழுமையாய் ஒழியவேண்டும். அவ்வாறு, அகந்தையின்றித் தொண்டுசெய்து ஏழை எளியோரின் அரந்தையைப் (துன்பத்தை) போக்குவோரின் உள்ளத்தில் இறைவன் வாழ்கின்றான்! அங்கே கோயில் கொள்கின்றான்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.