-மேகலா இராமமூர்த்தி 

’வல்லமை’ வாசகர்கள், படைப்பாளர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

பசியும் பிணியும் பகையும் நீங்கி
அன்பும் அருளும் அறனும் ஓங்குக!

***

இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான புகைப்படத்தை எடுத்திருப்பவர் திரு. பிரேம்நாத் திருமலைசாமி. இப்படத்தைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் வல்லமையின் நன்றியும் புத்தாண்டு வாழ்த்துக்களும் உரியதாகுக!

smiling baby

முறுவலிக்கும் முகத்தோடு சிறுவிரலால் தாளமிடும் சின்னஞ்சிறு கிளியே! உனைக் காணும்போது என் உள்ளத்தில் எழுகின்றது ஆனந்தக் களியே!

இனி, நம் கவிஞர்கள் கோத்திருக்கும் கவிதை மலர்ச்சரத்தின் சுகந்தத்தைச் சுவாசித்து வருவோம்… புறப்படுங்கள்!

***

’ஆவாரம் பூவாய்ச் சிரித்துக்கொண்டு, இந்தப் பாப்பா நாவாரப் பாடும் பாடல் காதில் தேன்பாய்ச்சுதே!’ என்று உளம்பூரிக்கிறார் திருமிகு. சியாமளா ராஜசேகர்.

பாவாடைச் சட்டை போட்ட
****
பாப்பாவும் பார்க்குது !
ஆவாரம் பூவைப் போல
****
அழகாகச் சிரிக்குது !
நாவாரத் தானும் பாடும்
****
நாடகமும் நடத்துது !
நோவாமல் தாளம் போட்டு
****
நுள்ளியுள்ளம் இழுக்குது !!

கால்கொலுசின் சலங்கைச் சத்தம்
****
காதில்தேன் பாய்ச்சுது !
பால்வடியும் பிள்ளை முகமும்
****
பாங்குடனே இருக்குது !
மேல்மாடி வீட்டிற் குள்ளே
****
மெய்சொக்க வைக்குது !
வேல்முருகன் அருளி னாலே
****
விளையாடி மகிழுது !

*** 

’குட்டிக் கவிதையே! உன் நகங்களில் பிறைநிலாக்கள் முகங்காட்டும்; உறக்கத்திலும் குறுஞ்சிரிப்பு சிந்தும் மென்மலரே! இப்போதைய பெருஞ்சிரிப்புக்கு யாது காரணம்?’ என்று வினயமாய் வினவுகின்றார் திருமிகு. கார்த்திகா.

…மழலையின் மொழி
குறுஞ் சிரிப்பென்று
உறக்கத்திலும் புன்னகை வீசும் நீ
உரக்கச் சிரிப்பது எதைக் கண்டோ

செல்லச் சிட்டுக்கு
பட்டு வண்ணப் பூச்சி
கண்ணில் பட்டதோ
[…]

தலை கொள்ளா
உன் கேசம்
தென்றலின் நேசமடி

நீ சிணுங்கிச் சிரிக்கையில்
கொலுசொலிகள் தோற்குமடி
வெட்கத்தில் பூக்கும்
விரலோடு பிறை நிலாக்கள்

வளை குலுங்கும்
உன் பிஞ்சுக் கரங்கள்
பூக்கள் தொடச் சிவக்குதே
பூவிதழ்கள் மோட்சமடையுதடி

சங்குக் கழுத்தில் தொங்க
என்ன தவம் செய்துவிட்டது
இந்த மின்னும் பொன் சங்கிலி

குட்டிக் கவி நீ
சிரிக்க ஹைக்கூக்கள்
சிதறுமடி என் செல்லமே!

 *** 

இரண்டே சொற்களில் இந்த மழலையின் மணிச்சிரிப்பை வருணித்திருக்கின்றார் திரு. கவிஜி. 

சித்திரம்
சிரிக்குதடி…!

***

’மழலையே…இந்தப் புன்னகை இருக்கப் பொன்னகை எதற்கு? தேங்குரல் இருக்கப் பூங்குழல் இசைதான் எதற்கு?’ என்று அருமையாய் வினவுகின்றார் திரு. ஜெயபாரதன்.

புன்னகை உள்ள போது
பொன்னகை வேறெதற்கு ?
தேங்குரல் கேட்கும் போது
பூங்குழல் இசை எதற்கு ?
கொஞ்சும் சிசு ஆடும் போது
தஞ்சாவூர் பொம்மை எதற்கு ?
பிள்ளைச் செல்வம் உள்ள போது
பேரின்பம் வேறெதற்கு ?

***

மழலைச் செல்வத்தின் மனங்கவரும் அழகுகள் அனைத்தையும் ஒவ்வொன்றாய்ச் சொல்லி வியக்கின்றார் திரு. இளவல் ஹரிஹரன். 

சின்னக் குழந்தை சிரிக்கும் அழகு
தெய்வம் காட்டும் பேரழகு…..அதன்
கன்னக் குழியில் கனியும் அழகு
கவிதை காட்டும் ஓரழகு.
முன்னஞ் செய்யும் குறும்பு களாலே
முற்றம் பெறுமே சீரழகு…..மெல்ல
வண்ண மாகத் தத்தித் தவழ்ந்து
வரும்போது தோற்கும் தேரழகு.

முத்தா யுதிர்க்கும் ம்மா வென்னும்
மொழியில் தோன்றும் தமிழழகு

[…]

எண்ணத் தொலையா ஏட்டில் விளையா
மழலைச் சொல்லின் மொழியழகு ….நலம்
பண்ணும் குறும்பில் தெரியும் அரும்பின்
பட்டுத் தெறிக்கும் விழியழகு.
மண்ணும் விண்ணும் மறுக்க வியலா
மாபெரும் படைப்பின் ஒளியழகு….தெய்வப்
பண்ணும் கொடுக்கா பலவிசைப் பாட்டில்
கேட்கும் இன்பக் களிப்பழகே.

*** 

’உன் சிரிப்பே பூபாளம்; தட்டு நீ மிருதுவாய்த் தாளம்!’ என்று சின்னக் கண்மணியைப் பார்த்துப் பண்ணிசைக்கின்றார் திரு. மெய்யன் நடராஜ்.

தட்டு மிருதுவாய்த் தாளம்
தரலாம் இசைக்கருவி ஓசை வேதாளம்
தத்தை உன் மிருது வாய் சிரிப்போ
தந்திடுமே எப்போதும் ஆசை பூபாளம் 

*** 

தன் பாடலுக்குத் தானே தாளம்போட்டு நாட்டியமும் ஆடும் இந்தக் கவின்மழலையைக் கண்டு மலைக்கின்றார் திருமிகு. பி. தமிழ்முகில்.

கொஞ்சும் கொலுசொலியும்
மழலை மொழியும் இசையாக
கேட்போர் மனதை மயக்கி
சுற்றம் அனைத்தையும்
தன்வயப் படுத்திக் கொண்ட
அழகுக் கிள்ளையே !
உந்தன் இனிய பாடலுக்கு
நீயே தாளமும் போட்டு
காலை உதைத்து
நாட்டியமும் ஆடுகிறாயே !
உந்தன் புன்னகையில்
சொக்கிப் போய்
கண்கொட்ட மறந்து
கட்டியணைத்து உச்சி முகர
ஓடிவரும் அன்னையைக் கண்டு
உந்தன் விழியிரண்டும் விரிகிறதோ ?
கள்ளமறியா சிறு கிள்ளையே !

***

’இசைபாடிப் புன்னகைக்கும் இந்தப் பூவின் இன்சொற்கள், மலரும் புத்தாண்டில் நல்ல மாறுதல்களைக் கொணரும்!’ என்று நம்பிக்கை விதைக்கின்றார் திரு. கொ. வை. அரங்கநாதன்.

பூவொன்று
இசைப்பாடி
புன்னகைக்கிறது
புத்தாண்டை வரவேற்று
கண்ணசைக்கிறது

[…]

கற்பத்தில் விளைந்த
கவிதையொன்று
முரசு கொட்டி
கலாமின் கனவுகள்
நனவாகப் போகுதென்று
கட்டியம் கூறுகிறது

மழலையிவள் சொற்கள்
மலருகின்றப் புத்தாண்டில்
மாற்றத்தை உண்டாக்கும்
மகேசனின் மந்திரமட்டுமல்ல
கனவுகளை நிஜமாக்கும்
காலதேவனின்
கட்டளைகளுமாகும்!

 ***

’பொக்கைவாய்ச் சிரிப்புடன் ஞானச்சுடரேற்றும் இக்குழந்தை இறைவனின் அருட்கொடையே!’ என்று இன்மொழி பகர்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

பொக்கை வாய் சிரிப்புடன்
புதுக்கவிதையாய் புறப்பட்டு
கள்ளங் கபடமின்றி என் செல்லம்
தப்புத்தாளங்களில் வாசித்தாலும்
ஏதோ ஞானச்சுடரென்றோ
என்முன் விரிந்து தெரிகிறது
நல்ல பண்புகள் ஓடி விட்ட காலத்தில்
தீமைகள் ஆட்டம் போடும் உலகத்தில்
மெல்ல தமிழ் ஊட்டி உன்
அருளால் அறிவை ஊட்டி
நாவும் கையும் நல்லனவற்றில்
துலங்கச் செய்த இறைவா நீ
ஈந்த இந்த அருட்கொடைக்கோ
இனிதாய் சொன்னேன் நன்றியடா

*** 

மழலையின் மந்தகாச அழகில் மனங்கனிந்து, கவிமலர்களை அள்ளியிறைத்திருக்கும் கவிஞர் பெருமக்களுக்கு நன்றியும், பாராட்டும்!

இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை இனிச் சந்தித்து வருவோம்!

குழந்தையின் குதலை மொழிகளும், துறுதுறு விழிகளும் மாந்தர்தம் உள்ளங்களை அள்ளுபவை; கொள்ளை கொள்ளுபவை. அதன் மெய்தீண்டலால் உண்டாகும் பேரின்பமோ வார்த்தைகளில் வடிக்கற்பாலதன்று! கள்ளமில்லா குழந்தையின் உள்ளமே இறைவன் குடிகொள்ளும் ஆலயமாகும். சின்னஞ்சிறு கிளிகளாய், பேசும் பொற்சித்திரங்களாய் இல்லங்களில் உலாவரும் குழந்தைகள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்!

அவ்வகையில், பேசுந்தெய்வமான இந்தச் சிறுகுழந்தை தன் செங்கனிவாய் திறந்து பாடுகையில், அதன் தளிர்க்கரங்கள் போடும் தாளங்கள் சுருதி பிசகினாலும் அவை சுந்தரத் தாளங்களே! வஞ்சமற்ற அதன் பிஞ்சுக் குரலோசையில் விளையும் தேவகானத்திற்குமுன் பக்திப் பாசுரங்களும் பலனின்றிப் போகின்றன!’ என்று குழந்தையைக் கொண்டாடும் ஓர் கவிதை மனவயலில் மகிழ்ச்சியை நட்டது!

அக்கவிதை…

பேசும் தெய்வமொன்று
பாட ஆரம்பித்தது,
தாளம் போட்டிடும்
தளிர்க் கரங்கள்..

இதில்
பொய் வேடமில்லை
போலிப் புனைவுகளில்லை..

தப்புத் தாளங்கள்
இலக்கணப் பிழைகள்,
தலைமறைவாயின
மழலையின் ஆட்சியில்

நெஞ்சில் வஞ்சமின்றி
கொஞ்சும் மொழியில்வரும்
பிஞ்சுக் குரலிசையின்முன்,
பக்திப் பாசுரங்கள்
பலனின்றிப் போகின்றன..

இதோ,
இதைரசிக்க வந்துவிட்டான்
இறைவனும் நம்முடன்…!

இக்கவிதையில், இறைவனையும் குழந்தையின் ரசிகனாக்கியிருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கின்றேன்.

***

குழந்தாய்! நீ ’ஆ’ காட்டும் அழகில் நான் அப்படியே விழுந்தேன்; உன் ’பா’ கேட்டுக் கைதட்ட ஓடிவந்தேன்! பொக்கைவாய்ச் சிரிப்பில் சொக்கவைக்கும் சொக்கத் தங்கம் நீயடி! என்று இந்தப் பெண்மகவைத் தொழுதுபோற்றும் இனிய கவிதை ஒன்று…

பட்டுப் பாவாடைச் சட்டை மீனாட்சியே!
குட்டிக்   கொலுசும் கட்டுதடி என்னையே!
கெட்ட  திருஷ்டியை  வெட்டக் கறுப்பாய்
பொட்டிட்ட  குட்டிச் சுட்டி ராணியே!
எடுப்பாய் அமர்ந்த எழிலான தேவதையாய்
அடுக்கடுக்காய் தாளமிட துடுக்காய்த் தயாரானாய்.
காட்டுமழகில் அப்படியே விழுந்தேன்.
பாகேட்டுக் கைதட்டி ஊக்கிட வந்தேன்.

பொக்கைவாய்ச் சிரிப்பு சொக்கு வித்தையடி!
சொக்கத் தங்கமே! பெண் பிள்ளையென்றடி
பொசுக்கவில்லை உலகமுன்னை பெரிய நன்றியடி!
பெண் பெருமையையேற்று பண்ணிசை ராணியே!
குழலினும் இனியது குழந்தை மொழி
மழலையின் மயக்கமது இன்ப வழி
தொழ வேண்டும்! மழலையின் அரங்கேற்றம்!
தழலாய் உயரட்டும் தரணியில் புகழுடன்!
 

பெண் குழந்தையைக் குடும்பச் சுமையாய் நினைக்கும் மனப்போக்கு, நம் சமூகத்தில் இன்னமும் முற்றாய் மாறிவிடவில்லை. இச்சூழ்நிலையில், பெண்குழந்தையைப் போற்றுவதோடு, அதனைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் தன் கவிதையில் நினைவுறுத்திச் சென்றிருக்கும் திருமிகு. வேதா. இலங்காதிலகத்தின் கவிதையைப் பாராட்டுக்குரியதாய்க் குறிப்பிட விழைகின்றேன்.

மீண்டும் சந்திப்போம்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “படக்கவிதைப் போட்டி 44-இன் முடிவுகள்

  1. மிக​ அருமையான​ கவிதை பாராட்டுக்கள் சகோதரி

  2. மிக​ அருமையான​ கவிதை பாராட்டுக்கள் சகோதரி Vetha Ilankathilakam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *