அறிந்துகொள்வோம் – 25 (’மனோன்மணீயம்’ பெ. சுந்தரம் பிள்ளை)

3

-மேகலா இராமமூர்த்தி

சுந்தரத் தமிழால் சிந்தை கவர்ந்தவர்!

’தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்றார் பாவேந்தர். அந்த அமுதத்தமிழின் சுவையினை முக்கனிகள்போல் மூன்றாய் வகைப்படுத்தினர் நம் முன்னோர். அவை முறையே இயல், இசை, கூத்து எனும் நாடகம் ஆகியவை. ஓசை நயத்தோடு கூடிய பாக்களாகவும், செய்யுளாகவும் பரிமளித்த தமிழ், பின்பு மெல்ல மெல்ல உரைநடையையும் (இயற்றமிழ்) தனக்குள் உள்வாங்கிக்கொண்டது. செய்யுளின் இடையிடையே உரைநடையும் விரவிவரும் பாங்கை ’உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ எனும் பெயரான் அழைத்தனர் தண்டமிழ்ப் புலவோர். தமிழின் மற்றொரு பிரிவான நாடகம், உரையும் பாட்டும் விரவிய கூத்தாகும்.

கண்ணுக்கும் கருத்துக்கும் ஒருங்கே விருந்தளிக்கும் அருங்கலையாம் நாடகக்கலையின் இலக்கணங்களை ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியம் எண்வகைச் சுவைகளாய் மெய்ப்பாட்டியலில் விளக்கிச் செல்கின்றது. நாடகத்திற்கான இலக்கணங்களைச் செப்புகின்ற இலக்கண நூல்கள் பலவும் அன்றிருந்தன என்பதைச் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் நமக்கு அறியத்தருகின்றார். அகத்தியம், சயந்தம், குணநூல், கூத்தநூல், மதிவாணர் நாடகத் தமிழ்நூல், செயிற்றியம் முதலியவை அவற்றில் சில. இவற்றில் ஒன்றுகூட இன்று கிடைக்காமல் போய்விட்டது வருந்தத்தக்கது. நாடக நூல்களைப் பேணாது தொலைத்தது போன்றே நாடகக்கலையையும் புரக்காது விடுத்தனர் நம் தமிழ்மக்கள்.

இவ்வாறு பல்லாண்டு காலமாய்த் தாழ்வுற்று வரவேற்பின்றிப் பாழ்பட்டு நின்ற நாடகக்கலைக்குப் புத்துயிரூட்டி அதனை மிடுக்காய் நடைபயிலவைத்த பெருமைக்குரியவர் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை ஆவார். கேரளாவிலுள்ள ஆலப்புழையில் 1855-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் நாள், பெருமாள் பிள்ளை, மாடத்தி அம்மாள் இணையருக்கு இணையற்ற மகனாய்த் தோன்றினார் சுந்தரனார். சைவ சமய வழிபாட்டு நூல்களான தேவாரம், திருவாசகம் முதலியவற்றைத் தம் தந்தையிடம் இளமையிலேயே கற்றுத் தேர்ந்தார்.

கல்வியிலும் சிறந்துவிளங்கிய அவர், தத்துவத் துறையில் முதுகலைப் பட்டம்பெற்றுத் திருவனந்தபுரத்திலுள்ள மகாராஜா கல்லூரியில் (The Maharaja’s College) தத்துவத்துறைப் பேராசிரியராய்ப் பணியாற்றினார்.

sundarampillaiதம் மாணாக்கர் பலரும் ஆங்கில நாடக ஆசிரியரான ஷேக்ஸ்பியரின் நாடகங்கள்மீது பெருங்காதல் கொண்டு அவற்றைப் படித்தும் நடித்தும் இன்புறக்கண்ட சுந்தரனார், செந்தமிழிற் சிறந்ததோர் நாடகமியற்றித் நந்தமிழில் நாடக நூல்கள் இல்லையெனும் குறைகளையத் தீர்மானித்தார். அதற்கு ஏற்றதோர்க் கதையினை அவர் சிந்தித்திருந்த வேளையில், புகழ்பெற்ற ஆங்கில நூலாசிரியரும், அரசியல்வாதியுமான லிட்டன் பிரபு (Edward George Earle Bulwer Lytton) 1866-இல் இயற்றிய ’The Lost Tales of Miletus’ எனும் நூல் அவர் நினைவுக்கு வந்தது. அந்நூலுக்கு ’The Secret Way’ எனும் மற்றொரு பெயருமுண்டு. அதனையே தெள்ளுதமிழ்க் காப்பியமாய்த் தீட்டத் துணிந்தார் சுந்தரனார். அவ்வாறு மலர்ந்ததே ‘மனோன்மணீயம்’ எனும் புகழ்வாய்ந்த நாடகத் தமிழ்நூல். 1891-ஆம் ஆண்டில், எளிய செய்யுள் நடையில், ஆசிரியப்பாவால் இயற்றப்பட்ட இந்நூல், தமிழின் ஐம்பெருங்காப்பியங்களுக்கு ஈடான இலக்கியச் சுவையும், செறிவான நடையும் கொண்டு கற்பாரைக் காந்தமெனக் கவர்கின்றது.

கதைகளை நாடகங்களாக அமைப்பதற்கென்று சில இலக்கண மரபுகள் உண்டு. ஆம், நாடகம் எழுதவேண்டுமானால், கதையை ஐந்து பிரிவுகளாய்ப் பிரிக்கவேண்டும். அப்பிரிவுகளுக்கு ’அங்கம்’ என்று பெயர். இதனைச் ’சந்தி’ என்றும் கூறுவர். முதல் சந்தியை ’முகம்’ (The Exposition) என்றும், இரண்டாம் சந்தியைப் ’பிரதிமுகம்’ (Rising Action) என்றும், மூன்றாம் சந்தியைக் ’கருப்பம்’ (The Climax)  என்றும், நான்காம் மற்றும் ஐந்தாம் சந்திகளை முறையே விளைவு, துய்த்தல் (Falling Action  & Resolution) என்றும் வகைப்படுத்துவர். வடமொழி நாடகங்களும், உலகப்புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரின் நாடகங்களும் இவ்வாறு ஐந்து அங்கங்களாகவே பகுக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இனி, மனோன்மணீயம் குறித்த சிறு அறிமுகத்தையும்  அதில் இடம்பெற்றுள்ள  சுவையான பகுதிகள் சிலவற்றையும் பார்ப்போம்.

ஜீவகவழுதி என்னும் சூதுவாதறியாத பாண்டிய மன்னன்; தவசீலரும் ஜீவகனின் நலம் நாடுபவருமான குலகுரு சுந்தர முனிவர் (இவரைத் தன்னுடைய குருவான கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளைப் பிரதிபலிக்கும் பாத்திரமாய்ச் சுந்தரம் பிள்ளை அமைத்துள்ளார்); நற்சிந்தனைகளும், நல்லழகும் வாய்ந்த மன்னனின் ஒரே மகளும், காவியத் தலைவியுமான மனோன்மணி; சேர மன்னனும், மனோன்மணியின் கனவில் தோன்றிய காதலனுமான புருடோத்தமன்; மனோன்மணியின் அறிவார்ந்த தோழி வாணி; வாணியின் தந்தையும் பொருளாசை மிக்கவருமான சகடர்; நயவஞ்சகமும், நாவன்மையும் படைத்த ஜீவகனின் அமைச்சன் குடிலன்; கொடிய குணங்களில் தந்தைக்குச் சற்றும் குறையாத குடிலனின் மகன் பலதேவன்; சுத்தவீரமும், அரசன்பால் பேரன்பும், நகைச்சுவையுணர்வும் நிரம்பிய நாராயணன்; வாணியை மட்டுமல்லாது இயற்கையையும், உயிரினங்களையும் சேர்த்தே நேசிக்கும் நடராசன் எனப் பல்வேறு கதைமாந்தர்களைக் கொண்டு புனையப்பட்ட அழகிய காவியமிது!

நடராசன் வாயிலாய் இயற்கையின் சிறப்பை, அதிலுள்ள சிற்றுயிர்களும் மற்றையோர்க்குப் பயனாகுந் தன்மையை தெற்றென விளக்கியுள்ளார் நூலாசிரியர். சான்றாக, ’நாகப்பூச்சி’ எனப்படும் நாங்கூழ்ப்புழுவொன்றைக் கண்ணுறும் நடராசன், அதன் மாண்புகளை, உழவர்க்கு அது செய்யும் ஒப்பற்ற தொண்டை விளக்கும் வரிகள் நம் மனங்கவர்வன. 

அவ்வரிகள்… 

ஓகோ! நாங்கூழ்ப் புழுவே! உன்பாடு
ஓவாப் பாடே உணர்வேன்! உணர்வேன்!
உழைப்போர் உழைப்பில் உழுவோர் தொழில்மிகும்
உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்துநீ!
எம்மண் ணாயினும் நன்மண் ணாக்குவை!
விடுத்தனை யிதற்கா எடுத்தஉன் யாக்கை
உழுதுழுது உண்டுமண் மெழுகினும் நேரிய
விழுமிய சேறாய் வேதித் துருட்டி
வெளிக்கொணர்ந் தும்புகழ் வேண்டார் போல
ஒளிக்குவை உன்குழி வாயுமோர் உருண்டையால்!
இப்புற் பயிர்நீ இங்ஙனம் உழாயேல்
எப்படி யுண்டாம்? எண்ணா துனக்கும்
குறும்புசெய் எறும்புங் கோடி கோடியாப்
புழுக்களும் பூச்சியும் பிழைக்குமா றென்னை?
ஒழுக்கமும் பொறையும் உனைப்போல் யார்க்குள? 

மனோன்மணீயத்தின் உரையாடற் பகுதிகள் கற்பார் உள்ளத்தைக் களிகொள்ளச் செய்பவை. ’புத்தியே சகல சக்தியும்’ என்று இறுமாப்போடு இயம்பும் குடிலன், ‘பிடித்தால் கற்றை; விட்டால் கூளம்’ (இதனையே நாட்டார் வழக்கில் பிடித்தால் பிள்ளையார்; விட்டால் சாணம் என்பர்) என்றொரு பழமொழியைக் கூறி நாட்டுமக்களின் இயல்பை மொழிவதும், நன்மை தீமை என்று நவிலப்படுவதெல்லாம் அறியார் கூறும் வெறுமொழிகளே; அவை
’பாச்சி பாச்சி என்றழும் பாலர்க்குப் பூச்சி பூச்சி  என்பது போலாம்’ (பால் என்று அழும் பிள்ளையை அச்சுறுத்தப் பூச்சி பூச்சி என்று கூறுவது) என்று மற்றொரு பழமொழியைக் கூறி நம்மை வியப்பிலாழ்த்துவதும் சுந்தரனாரின் சுந்தரத் தமிழ்செய்யும் சாலவித்தையே!

அதுபோல், நாஞ்சில் நாட்டின் நன்செய் வளத்தை மனோன்மணீயம் விவரிக்கும் பாங்கு, சங்கநூலான பத்துப்பாட்டின் பல நூற்பகுதிகளின் பிழிவாய்த் தோற்றமளிக்கின்றது.

இந்நூலில், இடைப்பிறவரலாக இடம்பெறும் சிவகாமி சரிதை எனுங் கதை படித்துச் சுவைக்கவேண்டிய மற்றோர் இனிய பகுதி. இஃது, ஆங்கிலக் கவிஞர் ஆலிவர் கோல்ட்ஸ்மித் (Oliver Goldsmith) எழுதிய ’The Vicar of Wakefield’ (வேக்ஃபீல்டு பாதிரியார்) எனும் நூலிலுள்ள கிளைக்கதையான ’Edwin and Angelina, A Ballard’ என்பதன் தழுவலாகும். Edwin-ஐச் சிதம்பரனாகவும், Angelina-வைச் சிவகாமியாகவும் மாற்றியுள்ளார் சுந்தரம் பிள்ளை. ஆங்கில நூலின் தழுவலாயினும், தமிழ் மரபையொட்டியே கதை அமைக்கப்பட்டிருக்கின்றது. கதைக்குள் மற்றொரு கதையாய்த் திகழும் இச்சிவகாமி சரிதை, தீம்பலாவில் பெய்த நறுந்தேனாய்த் தித்திக்கின்றது.

மனோன்மணீயம் காப்பியத்தை சுவைத்தறியாதவர்கூட அதில் இடம்பெற்றுள்ள ’நீராருங் கடலுடுத்த’ எனத்தொடங்கும்  தமிழ்த் தெய்வ வணக்கத்தை நன்கறிவர். அப்பாடலையே தமிழகஅரசு தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாய்ப் பாடநூல்களில் அச்சிட்டுள்ளது. ஆயினும், முழுப்பாடலும் தரப்படாமல் பாடலின் அடிகள் அங்குமிங்குமாய்க் கத்தரிக்கப்பட்டு இணைக்கப்பட்ட பாடலையே நாம் பாடநூல்களில் பயில்கின்றோம்.

ஆதலால் பாடநூலில் இடம்பெறாத, அப்பாடலின் சிறந்த அடிகள் சிலவற்றை ஈண்டுக் காண்போம்.

”ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துவமே”
என ஆரியமொழிபோல் (சமஸ்கிருதம்) வழக்கொழிந்து போகாமல், சீரிளமையோடு என்றும் திகழும் தமிழின் தகைமையைப் போற்றுகின்றார் ஆசிரியர்.

தமிழ்நூல்களின் தொகுப்பான பத்துப்பாட்டைக் கற்று அதனிடத்துப் பற்றுக் கொண்டோர், எள்ளளவும் பொருட்செறிவோ, இலக்கணமோ இலாத பிற (கவிஞர்களின்) கற்பனைகளில் தம் உளத்தைச் செலுத்துவரோ?

வள்ளுவப் பேராசானின் திருக்குறளைக் கசடறக் கற்றோர், சமநீதியற்றதாய், குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் மனுவாதி சாத்திரங்களை மறந்தும் நினைப்பரோ? என்றெல்லாம் அறிவுசால் வினாக்களை அடுக்கடுக்காய் எழுப்பி தமிழ்நூல்களின் தன்னேரிலாச் சிறப்பையும், அவை வலியுறுத்தும் செவ்விதான அறக்கோட்பாட்டையும் அங்கை நெல்லியென நமக்குணர்த்துகின்றார்.

பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே?

வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி?

மனோன்மணீயமல்லாது, சுந்தரனார் வேறுபல சிறந்த நூல்களும் படைத்துள்ளார். சாத்திர சங்கிரகம் என்னும் நூற்றொகை விளக்கம், (பத்துப்பாட்டு குறித்து எழுதப்பட்ட) தமிழரின் வாழ்க்கைச் சித்திரங்கள் பத்து (The Ten Tamil Idylls), திருவிதாங்கூர்ப் பண்டை மன்னர் காலஆராய்ச்சி (The Early Sovereigns of Travancore), தமிழிலக்கிய வரலாற்றில் சில மைல்கற்கள் (Some Milestones in the History of Tamil Literature) போன்றவை அவற்றில் அடங்கும்.

கற்றுத் துறைப்போகிய தமிழ்ச்சான்றோர் அனைவராலும் பாராட்டப்பெறும் ஒப்புற்ற நாடக நூலான மனோன்மணீயத்தை யாத்த சுந்தரனார், தம்மைக் குறித்தும், தம்நூல் குறித்தும் செப்பும் மொழிகள் பின்வருமாறு:

”தமிழன்னையே! என்றும் நின்னைப் புகழ்ந்தேத்தும் பெருமைமிகு மக்கள் பற்பலர் உளர். அவர்களுள் நின் பழம்பணியைப் புதுக்கியும், சிறப்புமிக்க நால்வகைக் கவிகளால் புதுப்பணிகள் செய்தும் நிற்பவர் புகழோடு நிற்கட்டும்!

நின் புதல்வர்களாகிய புலவர்பெருமக்களுள் அடியேன் கடையேன்; அறியாச் சிறியேன். மலையாள நாட்டைக் குடியிருப்பாய் உடையேன். ஆயினும், எனக்கும் நீ தாயென்னும் தன்மையால், என் உள்ளத்தே ஊறிய பேராசையால், என் உழைப்பு ஒன்றையே தகுதியாய்க் கொண்டு இந்நாடக நூலை (மனோன்மணீயம்) இயற்றியுள்ளேன். அன்னாய்! இந்நூல் மிகவும் வெள்ளிது (சிறுமையானது); எனினும் உன்னுடைய கணைக்கால் சிறுவிரலுக்கேற்ற அணியாக (மெட்டி) இதனை ஏற்றுக்கொள்வாயாக!”

நிற்புகழ்ந்  தேத்துநின்  நெடுந்தகை  மைந்தர்
பற்பலர்  நின்பெரும்  பழம்பணி  புதுக்கியும்
பொற்புடை  நாற்கவிப்  புதுப்பணி  குயிற்றியும்
நிற்பவர்  நிற்க  நீபெறும்  புதல்வரில்
அடியேன்  கடையேன்  அறியாச்  சிறியேன்
கொடுமலை  யாளக்  குடியிருப்  புடையேன்
ஆயினும்  நீயே  தாயெனுந்  தன்மையின்
மேயபே  ராசையென்  மீக்கொள  ஓர்வழி
உழைத்தலே  தகுதியென்  றிழைத்தவிந்  நாடகம்
வெள்ளிய  தெனினும்  விளங்குநின்  கணைக்காற்கு
ஒள்ளிய  சிறுவிர  லணியாக்
கொள்மதி  யன்பே  குறியெனக்  குறித்தே. 

கரும்பனைய நூல்யாத்த பெரும்புலவர் சுந்தரனாரின் பணிவும் சால்பும் ’பெருக்கத்து வேண்டும் பணிதல்’ எனும் குறளமுதை நமக்கு நினைவூட்டுகின்றன.

தத்துவ அறிஞராகவும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளராகவும், வாடிக்கிடந்த நாடகக் கலையைத் தேடி நீர்வார்த்த நற்புலவராகவும் விளங்கிய சுந்தரனார், கல்வெட்டாராய்ச்சியாளராகவும் முத்திரைபதித்த வித்தகர். இத்துணைத் திறன்களை மொத்தமாய்க் கொண்டிருந்த சுந்தரம் பிள்ளையவர்கள், இத்தரை தனிலே நெடுநாள் வாழ்ந்திருந்தால் பத்தரைப் பசும்பொன்நிகர் காப்பியங்கள் எத்தனையோ படைத்துத் தன்னருந் தமிழன்னையைத் தாங்கொணாப் பூரிப்பில் திளைக்கச் செய்திருப்பார். அந்தோ! நம் நற்றவக்குறைவே அவர் தமது 42-ஆம் அகவையிலேயே அவனிவிட்டு அகன்றது!

எனினும், மனிதனின் பெருமை அவன் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தான் என்பதிலா இருக்கின்றது? இல்லையே…எத்தகைய வாழ்வு வாழ்ந்தான் என்பதில்தானே சிறக்கின்றது. அவ்வகையில், ’தோன்றின் புகழொடு தோன்றுக’ எனும் வள்ளுவத்திற்கேற்பத் தாம் தோன்றிய துறைகளிலெல்லாம் புகழொடு தோன்றிய சுந்தரனார், தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் தலையாயவர் என்பதில் ஐயமில்லை.

*** 

துணைசெய்த தளங்கள்:

https://ta.wikipedia.org/wiki/பெ._சுந்தரம்_பிள்ளை

http://siragu.com/?p=17727

https://www.vallamai.com/?p=45923

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “அறிந்துகொள்வோம் – 25 (’மனோன்மணீயம்’ பெ. சுந்தரம் பிள்ளை)

  1. இன்று எல்லாத் தமிழ்ச்சங்கங்களிலும் ‘நீராரும் கடலுடுத்த’ பாடலைப் பாடாதோர் யார். அத்தனை பெருமை வாய்ந்த சுந்தரனார் பற்றி விவரமாக எழுதியமைக்கு வாழ்த்துகள் மேகலா!!

    கண்ணதாசனின் தனிக் கவிதைகள் பற்றியும் ஒரு கட்டுரை எழுதுங்களேன். என் சிற்றறிவுக்கு எட்டியவரை பாமரர்களைக் கவர்ந்ததில் பாரதிக்குப் பிறகு பெரும்பங்குண்டு கண்ணதாசனின் தனிக் கவிதைகளில்.

    மின்னாடியே நன்னி!

  2. கட்டுரையைப் பாராட்டியதற்கு மிக்க நன்றி திவாகர் ஐயா.

    ஆம்! தாங்கள் சொல்வதுபோல் பாரதிக்குப் பிறகு மிகப்பெரிய கவி ஆளுமையாகத் தமிழகத்தில் சாதனை படைத்தவர் கண்ணதாசனே! அவருடைய தனிக் கவிதைகள் குறித்து நான் எழுதவேண்டும் என்ற தங்கள் எதிர்பார்ப்பை விரைவில் நிறைவேற்ற முயல்கிறேன் ஐயா.

    அன்புடன்,
    மேகலா 

  3. மேகலா,
    நானும் கண்ணதாசனின் தனிக் கவிதையின் ஒரு பார்வையைப் பற்றி வலைப்பூ 2 பகுதியாக எழுதியுள்ளேன். நேரம் கிடைப்பின் பார்க்கவும்
    http://vamsadhara.blogspot.in/2007/04/blog-post.html
    http://vamsadhara.blogspot.in/2007/04/blog-post_30.html

    நன்றி, உடனுக்குடன் ஒப்புக் கொண்டதற்கு!
    அன்புடன்
    திவாகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *