Advertisements
Featuredஇலக்கியம்கட்டுரைகள்

எங்களை மன்னித்துவிடு அன்புச் செல்வமே !

எஸ் வி வேணுகோபாலன்

Child-Abuse

எங்களை மன்னித்துவிடு அன்புச் செல்வமே, சையத் சைனாப் ஃபாத்திமா ஜாஃப்ரி, எங்களை மன்னித்துவிடு! இந்த முறை ஹைதராபாத்தில் ஒரு பள்ளிக்கூடத்தின் லிஃப்ட் இடைவெளியில் வைத்து உன்னைப் பறிகொடுத்தோம். ஒரு தாயின் கண்ணெதிரே – துடித்துக் கதறும் தாத்தாவின் அதிர்ச்சி மிகுந்த தருணங்களுக்கு இடையே உயிரற்ற உன் உடலை, ஏதோ உன்னையே மீட்டெடுப்பது போன்ற எதிர்பார்ப்போடு வலியோடும், வேதனையோடும் எடுத்துக் கிடத்தும் காட்சியைக் கண்ணுறவும் நெஞ்சுரம் கொண்டிருந்த என்னைப் போன்ற பாவிகளை மன்னித்து விடு, எங்கள் கள்ளம் கபடமற்ற இளம் தேவதையே.. புத்தக அலமாரியை சுவரில் பொருத்தி ஆணி அடிக்கையில் அல்லது மூட வராத சன்னல் கதவை இழுத்துச் சார்த்துகையில் நாமறியாமலே நசுங்கிச் செத்துப் போகும் பல்லியைப் பின்னர் கண்டெடுக்கையில் பதறிப் போகும் உள்ளங்கள், மூன்றரை வயதுப் பிஞ்சுக் குழந்தையின் துடிப்பு மிக்க இயக்கத்தை ஓர் எந்திரம் சட்டென்று முடிவுக்குக் கொண்டு வருவதை எப்படி எதிர்கொள்ளும், எங்கள் கண்ணே…

முதன்முதலாக பிறப்புச் சான்றிதழ் வாங்கும்போதே, குழந்தையை எந்தப் பள்ளியில் சேர்ப்பது என்று யோசிக்கும் இந்த சபிக்கப்பட்ட வாழ்க்கையை மன்னித்துவிடு, ஜாஃப்ரி ! நவீன போட்டிக் களத்தில், ஒரேயொரு முதலிடத்திற்கான விபரீத ஓட்டப் பந்தயத்தில் குழந்தைகளை சாவி கொடுத்து இறக்கிவிடும் எங்களை மன்னித்துவிடு, கண்மணி. இல்லாவிட்டால், 2009ல் புது தில்லியில் 11 வயது ஷானூவை ஒரே ஓர் எழுத்துப் பிழைக்கு வேகாத வெயிலில் தலைமீது செங்கற்களைச் சுமந்து நிற்குமாறு தண்டனை கொடுத்து மயங்கி விழுந்து சாகக் கொடுத்திருப்போமா, பாவிகள்! 2007ல் ஆமதாபாத் மாநகரில் பத்து நிமிடம் தாமதமாகப் பள்ளிக்கு வந்ததற்கு பெரிய விளையாட்டு மைதானத்தை பத்து முறை சுற்றி வரச்சொல்லி மிரட்டி அனுப்பி ஐந்தாவது சுற்றிலேயே மிலான் தாணா மயங்கி மடிந்து விழக் கண்டிருப்போமா…. எச்சரிக்கையற்ற நிலையில் பராமரிக்கப்படும் நீச்சல் குளத்திலும், அலட்சியமாக கையாளப்படும் பள்ளி வாகனத்திலும் பிள்ளைகளைப் பறிகொடுப்போமா எங்கள் தங்கமே…

குழந்தைகள் மீது உரிமை கொண்டாடப் பழகி இருக்கும் சமூகத்திற்குக் குழந்தைகளுக்கான உரிமைகள் இருப்பது தெரியாது என்பதை மன்னித்துவிடு ஜாஃப்ரி! தூய்மையான குடி நீரோ, கழிப்பறையோ, விளையாட்டுத் திடலோ, அன்பான கல்விச் சூழலோ, அரவணைப்பான காற்றுவெளியோ உத்தரவாதம் செய்யாமலே அடுத்த நூற்றாண்டுக்கான கல்வி நிலையங்களாக அறிவிப்போரை நம்பிக் குழந்தைகளைக் காவு கொடுப்போரை மன்னித்துவிடு ஜாஃப்ரி!

ஆபத்துகளை தவிர்க்கவோ, விபத்துகளை எதிர்கொள்ளவோ வக்கில்லாமல் இருந்து கொண்டு, எந்த கோர மரணத்தையும், எதிர்பாரா விபத்து என்று சொல்லித் தப்பிக்கவும், நஷ்ட ஈடு வேண்டுமானால் கொடுத்துவிட்டுப் போகிறோம், அதற்கென்ன என்று அராஜகத் திமிரோடு வாதம் செய்யவும், இதெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது என்று கை விரித்துவிட்டு அடுத்த வேலைக்குப் போகவும் துணிச்சல் கொண்டு திரிய அனுமதிக்கும் எங்கள் அரசியல், பண்பாட்டுச் சூழலை மன்னித்துவிடு ஜாஃப்ரி! மருத்துவரை அழைக்குமுன் வழக்கறிஞர்களை நாடவும், ஆடிட்டர்களை ஆலோசிக்கவும், அதிகாரவரிசையில் நெருக்கமான புள்ளிகளை உடனே துணைக்கு அழைக்கவுமான வசதியில் மிதப்போரிடம் கல்வி ஒப்புக் கொடுக்கப்பட்டிருப்பதை மன்னித்து விடு ஜாஃப்ரி!

இலக்குகளை வைத்து நடக்கிறது எங்கள் தாராளமய பொருளாதாரம். விற்பனைப் பொருள்கள், சரக்குகள், உருப்படிகள் என்று புதிய பெயர்கள் சூட்டப்படும் ஆடுகளத்தில், ‘பார்கோட்’ ஒட்டப்பட்டிருக்கும் இன்னொரு உருப்படி தான் குழந்தையும். வேகமான உணவு, வேகமான பயணம், வேகமான வாழ்க்கை என்றான உலகில், குழந்தைகளின் வளர்ச்சி மைல்கற்களை இப்போது வேகமாக ஊன்ற வேண்டியதை மன்னித்துவிடு ஜாஃப்ரி! இரண்டரை அல்லது மூன்று வயதில் பள்ளிக்குச் செல்லத் தொடங்குவதே எங்களுக்கு கொஞ்சம் தாமதம் போலாகி விட்டதை மன்னித்துவிடு ஜாஃப்ரி! இரண்டிரண்டு படிக்கட்டுகளாகத் தாவி ஏறும் வயதில், இரண்டிரண்டு வகுப்புகளாக விரைந்து முடித்துவிடக் கூடாதா என்று நாங்கள் பேரார்வத்தோடு எதிர்பார்ப்பதை மன்னித்துவிடு ஜாஃப்ரி!

அறைந்து நசுக்கப்பட்டிருக்கும் உன் மென்மையான நாசி மீது உறைந்து மின்னும் இரத்தத்தின் துளிகளில் பிரதிபலிக்கிறது எங்களது கையாலாகத் தனம். பறிக்குமுன் வாடி விழும் வெள்ளை மலர்போல் எங்கள் நெஞ்சு துடிக்கக் கிடக்கும் எங்கள் முழுமதியே, ஜாஃப்ரி, மன்னித்து விடு எங்களை!

*************

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க