ஏழாவது ஊதியக் குழுவின் அறிவிப்பும், இந்தியப் பொருளாதாரத் தாக்கமும்

0

பவள சங்கரி

தலையங்கம்

தற்பொழுது அரசு நிறுவியுள்ள ஏழாவது ஊதியக்குழு தன்னுடைய பரிந்துரைகளை அறிவித்துள்ளது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு 16 % சம்பள விகிதமும், வீட்டுப்படி மற்றும் மற்ற படிகள் மூலமாகவும் ஒவ்வொருவருக்கும் 23.55 % அதிகப்படியாக தொகை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஆண்டொன்றிற்கு அரசாங்கத்திற்கு சுமாராக 1.02 இலட்சம் கோடி ரூபாய் அதிகமாக சுமை சுமத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அரசும் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அரசு ஊழியர்களுக்கு உண்மையில் இது நல்ல செய்திதான். விலைவாசிகள் எகிறியிருக்கும் இந்த காலகட்டத்தில் மத்தியதர மக்களுக்கு இப்படி சம்பள உயர்வு கிடைப்பது பெருமகிழ்ச்சியளிக்கக்கூடிய விசயம்தான். ஆனால் இதனால் பயனடையப்போவது, இந்திய மக்கள் தொகையில் மிகச்சில சதவிகிதங்களே உள்ளவர்கள் மட்டுமே. அரசு ஊழியர்களுக்காக அளிக்கப்படக்கூடிய இந்தப் பணச் சுமையால் இந்தியாவினுடைய பண வீக்கம் மேலும் அதிகரிக்க உறுதி செய்யப்படுகிறது. ஒரு புறம் நிதியமைச்சகம் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தப்போவதாகக் கூறிக்கொண்டே மறுபுறம் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் எப்படி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். ஒரு சில சதவிகித மக்களுக்காக 90 சதவிகிதத்திற்கு மேல் உள்ள பொது மக்களுக்கு மேலும் பண வீக்கத்தைத் தலையில் சுமத்துவது எந்த விதத்தில் நியாயமாகும்? ரூபாயின் மதிப்பை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு கமிஷன் நியமித்து அது மத்திய ரிசர்வ் வங்கிக்கும் மத்திய நிதி அமைச்சகத்துக்கும் குறிப்பிட்ட கால வரையறைக்குள் தங்களுடைய அறிக்கைகளை சமர்ப்பித்து அதன் மூலமாக ரூபாயின் மதிப்பை கட்டுப்படுத்தினாலே இந்தியாவின் பொருளாதாரம் மேம்படும். சீனர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்து தங்களுடைய நாணயத்தின் மதிப்பைக் குறைத்ததன் மூலம் ஏற்பட்ட தாக்கத்தை சரிசெய்ய இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசின் மத்திய முக்கிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் மேலாண்மை அதிகாரி இந்திய ரூபாயின் மதிப்பைக் குறைக்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இன்று நாணய மதிப்பீட்டுச் சந்தையில் டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு சரிந்து 66 ரூபாயைக் கடந்துவிட்டது. ரூபாயின் மதிப்பைக் கூட்ட வேண்டிய ரிசர்வ் வங்கியும் நிதி அமைச்சகமும், இது தொடர்பான எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் பணவீக்கத்தை அதிகப்படுத்தக்கூடிய இந்த ஏழாவது பே கமிஷனின் அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. விமானப் போக்குவரத்துத் துறை அதிகம் பயன்படுத்தக்கூடிய எரிபொருள் செலவைக் குறைத்து அந்தத் துறையை வளர்ச்சிப்பாதையில் கொண்டு சென்ற அரசு இயற்கை எரிவாய்வு பெட்ரோலிய திரவ எரிவாய்வு மற்றும் பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலையைக் குறைக்க வேண்டிய நேரத்தில் அதிகரித்திருப்பது வருந்தத்தக்க விசயம். பேரல் ஒன்றுக்கு 45 டாலருக்கும் கீழ் இருக்கக்கூடிய இன்றைய நிலையில் பெட்ரோலியப் பொருட்கள் பன்மடங்கு விலை குறைக்க வேண்டிய நேரத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள் விலையை அதிகப்படுத்தியுள்ளன. தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தங்கத்தின் இறக்குமதியும் குறைந்துள்ளது. ஆனால் ரூபாயின் மதிப்போ குறைந்து கொண்டே வருகிறது. அரசு ரூபாயின் மதிப்பை அதிகரிக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று அறிய மக்கள் கவலையுடன் காத்திருக்கிறார்கள். இந்த 1 இலட்சம் 2 இலட்சம் கோடி ரூபாய்களை ஏற்றுமதித் துறைக்கோ அல்லது உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கோ பயன்படுத்தினால் இந்தியாவின் பொருளாதாரம் சீர்படும். அத்தோடு இதனுடைய பயன் அனைத்து மக்களுக்கும் சென்றடையும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *