Author: மேகலா இராமமூர்த்தி

  • புரட்சிக் கவி!

    – மேகலா இராமமூர்த்தி

     Bharathidasan Thamizvazhtu

     ’பில்கணீயம்’ என்ற வடமொழி நூலைத் தழுவித் தமிழில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய காவியம் ‘புரட்சிக் கவி’. புரட்சிச் சிந்தனைகளும், பொதுவுடைமைச் சித்தாந்தங்களும் நிறைந்த இந்நூல் படிப்பதற்கு மிகவும் சுவையானது; ஆண்டான் அடிமையெனும் நடைமுறை ஒழியவேண்டும் என வலியுறுத்துவது.

    அவ்வினிய காவியத்தின் சுருக்கத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்…

    தன்மகள் அமுதவல்லி தமிழில் சிறந்த புலமையடைய வேண்டும்; கவி புனையும் ஆற்றல் பெறவேண்டும் என்று விரும்புகின்ற மன்னன் ஒருவன், ”அவள் தமிழிலக்கணம் கற்கத் தக்கதோர் புலவனைத் தேடுக!” என்று தன் அமைச்சனிடம் கூறுகின்றான்.

    அதுகேட்ட அமைச்சன், ”மிகச் சிறந்த தமிழ்ப் புலவனும் கவிஞனுமாகிய உதாரனே நம் அமுதவல்லிக்குத் தமிழ் கற்பிக்க ஏற்றவன்; ஆயினும் அவன் இளவயதும் அழகும் வாய்ந்தவன். அவனைக் கல்வி கற்பிக்க நியமிப்பதால் ஏதேனும் குறை வந்து சேராமல் இருக்கவேண்டுமே என்றுதான் யோசிக்கிறேன்” எனப் பதிலளிக்கிறான்.

    ”இதற்கு என்ன செய்வது?” என்று மன்னன் கவலையோடு வினவ, ”கண்டுபிடித்துவிட்டேன் உபாயம் ஒன்று!” என்று குதூகலித்தான் அமைச்சன்.

    ”என்ன….என்ன?” என்று மன்னன் பரபரக்க, தன் திட்டத்தை விவரிக்கிறான் அமைச்சன்….”அரசே! அமுதவல்லிக்கும் உதாரனுக்கும் இடையே பெரிய திரை ஒன்றை இட்டுவிடுவோம். ஏனென்று இருவரும் காரணம் கேட்டால்…உதாரன் குருடன் என்று அமுதவல்லியிடமும், அமுதவல்லி பெருநோய் உடையவள்; அவளைப் பார்ப்பது ஆபத்து என்று உதாரனிடமும் சொல்லிவிடுவோம்…எப்படி என் யோசனை?” என்றான்.

    ”பிரமாதம்!” என்று பாராட்டினான் அரசன்.

    அவர்கள் திட்டப்படியே தமிழ் வகுப்பு ஆரம்பமாயிற்று. சில நாட்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் வகுப்புச் சுமுகமாகவே சென்றுகொண்டிருந்தது. ஆயினும், அரசனும் அமைச்சனும் சேர்ந்து நடத்திய கபட நாடகத்திற்கோர் முற்றுப்புள்ளி வைப்பதற்கென்றே ஓர் முழுமதி நாளும் வந்தது!

    வானிலே அழகை வாரி இறைத்தபடி உலா வந்துகொண்டிருந்த நிலாவைக் கண்டதும் கவிஞனான உதாரனுக்குக் கற்பனை வெள்ளம் மடைதிறந்தது. “நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து நிலா என்று உன் ஒளி முகத்தைக் காட்டுகின்றாயே! உன் கோலம் முழுவதையும் நீ காட்டிவிட்டால் உன்மீது காதல்பித்துக் கொண்டு அலையும் இவ்வுலகமே மடிந்துபோய்விடுமோ? நீ வானச் சோலையிலே பூத்த தனிப்பூவோ? பாற்குடமோ? அமுத ஊற்றோ?” என்றெல்லாம் விரிகின்ற அவன் கற்பனைச் சிறகில் பொதுவுடைமைத் தத்துவங்களும் தீப்பொறியாய்ச் சிதறுகின்றன. ”எம் நாட்டு ஏழை மக்கள் நித்தமும் உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்தும் அவர்தம் தரித்திரம் தீராமல் பசித்த வயிற்றோடு உண்ணச் சிறிது கூழ் தேடும்போது, ஒரு பானை நிறைய வெண்சோற்றைக் காணும்போது அடையும் இன்பத்தை உனைக் காணும்போது அல்லவோ பெறுகின்றனர்!!” என்கிறான் இந்தப் புதுமைச் சிந்தனையாளன்.

    மிகவும் புகழ்பெற்ற அவ்வழகிய பாடல்…

    நீலவான் ஆடைக்குள் உடல்ம றைத்து
    நிலாவென்று காட்டுகின்றாய்  ஒளிமு கத்தைக்
    கோலமுழு தும்காட்டி விட்டால் காதற்
    கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
    சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
    சொக்கவெள்ளிப் பாற்குடமோ அமுத ஊற்றோ!

    …………………………………………………………..

       நித்திய தரித்திரராய் உழைத் துழைத்துத்
    தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்
    சிறிதுகூழ் தேடுங்கால் பானை ஆரக்
    கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
    கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!  

    இப்பாடலைத் திரையின் மறுபுறம் அமர்ந்திருந்த அமுதவல்லி கேட்டு வியப்பில் ஆழ்ந்தாள். “ஓர் குருடன் முழுமதியின் அழகை எங்ஙனம் காணமுடியும்? காணாமலே….இவ்வளவு அழகாய்க் கவிபுனைவதும் சாத்தியமா?” என்று ஐயுற்றுத் திரையை விலக்கினாள்.

    அங்கே வானை நோக்கிக் கொண்டிருந்த வாலிபனைக் கண்டாள். வானை நோக்கிக் கொண்டிருந்த கவிஞனும் இப்போது தன் முகத்தைத் திருப்பி அருகிலிருந்த மானை நோக்கினான். ”அடடா! வானில் இதுவரை பவனி வந்த நிலா எப்போது இந்த அவனி வந்தது?” என்று ஐயுற்று மீண்டும் அந்தப் பெண்ணிலவைப் பார்த்தான். அவன் குருடனில்லை என்பதை அவள் கண்டாள்; அவள் பெருநோயாளி இல்லை என்பதை அவனும் உணர்ந்தான். இவையெல்லாம் தாங்கள் ஒருவரை ஒருவர் காணக்கூடாது என்பதற்காகப் பின்னப்பட்டச் சூழ்ச்சி வலையே என்பதை உணர்ந்தனர் இருவரும். பின்பு அங்கே தமிழ்ப் பாடம் முடிவுற்றுக் காதல் பாடம் தொடங்கிற்று என்பதை நான் நவிலவும் வேண்டுமோ?

    தன் மகளுக்கும் கவிஞனுக்கும் இடையே மலர்ந்திருந்த காதலைச் சிறிது நாட்களிலேயே அறிந்தான் மன்னன். “அரசனிடம் கைகட்டிச் சேவகம் செய்யும் ஒரு சாதாரணக் கவிஞன் அவன் மகளைக் காதலிப்பதா?” என வெகுண்டான். “கவிஞனைச் சிரச்சேதம் செய்யுங்கள்!” என்று தன் வீரர்களுக்கு உத்தரவிட்டான்.

    இக்கொடுஞ்செய்தியைக் கேட்டு நிலைகுலைந்த அமுதவல்லி அதைத் தடுப்பதற்காக உதாரன் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த இடத்திற்கு ஓடிவந்தாள். இதனால் மன்னனின் சீற்றம் மேலும் அதிகரித்தது. ”இவளை இழுத்துச் சென்று சிறையில் அடையுங்கள்!” எனக் கட்டளையிட்டான். அதுகேட்ட அமுதவல்லி, ”என் ஆருயிர்க் காதலன் இறந்துபட்டபின் நான் மட்டும் உயிர் வாழ்வேனோ? என்னுயிர் ஒன்றும் எனக்கு வெல்லமன்று!” என்று வீரத்தோடு செப்ப, கோபத்தில் சிவந்தன மன்னனின் விழிகள்.  ”இவளையும் அந்தக் கவிஞனுடனே சேர்த்துக் கொலை செய்யுங்கள்!” என்றான் வெறியோடு!

    உதாரனையும், அமுதவல்லியையும் அரசன் கொல்லப்போகும் செய்தி அறிந்து ஊரே அந்தக் கொலைக்களத்திற்கு அருகில் திரண்டிருந்தது. கடைசியாகச் சிலவார்த்தைகள் பேசும் வாய்ப்பினைப் பெற்றிருந்த உதாரனின் வீர உரை உழைக்கும் வர்க்கத்தின் சிறப்பினைப் பேசும் அற்புத உரை எனில் சற்றும் மிகையில்லை…

    கனல் கக்கும் அவன் பேச்சிலிருந்து ஒரு பகுதி…

    ”பேரன்புகொண்ட பெரியோரே, தாய்மாரே! இளஞ்சிங்கங்களே!

    காடுகொன்று நாடாக்கி, நிலந்திருத்திப் பாழ்நிலம் புதுக்கி அழகு நகராக்கியது யார்?

    வாய்க்காலையும், வயல்களையும் வகைப்படுத்தி உழவுத்தொழில் செய்து உலக மக்களுக்கு உண்டி கொடுக்க உழைக்கும் தோள்கள் எவரின் தோள்கள்?

    கல்லையும் மலையையும் பிளந்து சுரங்கங்களை வெட்டிப் பல்வேறு கருவிகளையும் செய்துதரும் கைகள் யாருடைய கைகள்?

    பொன்னையும் மணியையும் முத்தையும் எடுப்பதற்காக அடக்கிய மூச்சு எவருடைய மூச்சு?

    ”உழைக்கும் வர்க்கங்காள்! நீங்கள் எலிபோன்று பதுங்கிக் கிடப்பதால் அல்லவோ நாம் ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டோன் புலிவேஷம் போடுகின்றான்! உங்களைப் புல் என மதிக்கின்றான்! நீங்கள் என்னைக் காக்க வேண்டாம்! இதோ என்னைக் காதலித்த குற்றத்துக்காக என்னோடு உயிர்விடப் போகும் அரசன் மகளை…அமுதனைய அமுதவல்லியைக் காப்பீர்!” என இடிபோல் முழங்கினான்.”

    இதோ பாவேந்தரின் வைர வரிகள்…

    பேரன்பு கொண்டவரே, பெரியோ ரேஎன்
    பெற்றதாய் மாரே, நல் இளஞ்சிங் கங்காள்!
    நீரோடை நிலங்கிழிக்க, நெடுமரங்கள்
    நிறைந்துபெருங் காடாக்க, பெருவிலங்கு
    நேரோடி வாழ்ந்திருக்கப் பருக்கைக் கல்லின்
    நெடுங்குன்றில் பிலஞ்சேரப், பாம்புக் கூட்டம்
    போராடும் பாழ்நிலத்தை அந்த நாளில்
    புதுக்கியவர் யார்? அழகு நகருண் டாக்கி!


    சிற்றூரும், வரப்பெடுத்த வயலும், ஆறு
    தேக்கியநல் வாய்க்காலும், வகைப் படுத்தி
    நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும்
    நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?


    கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்
    கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?
    பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப்
    போய்எடுக்க அடக்கியமூச்சு எவரின் மூச்சு?

    அவனுடைய வீரமொழிகளால், மக்களின் ஆவேசமும், விடுதலை உணர்ச்சியும் விழிப்புற்றன. வீறு கொண்டு எழுந்த மக்கள் கொலைஞர்கள் கையில் இருந்த கொலைக்கருவிகளைப் பிடுங்கி எறிந்தனர். உதாரனையும் அமுதவல்லியையும் விடுவித்தனர். மன்னனிடமிருந்து முடியாட்சி பறிக்கப்பட்டது; நானிலத்தோர் அனைவரும் பயன்பெறும் வகையில் நாட்டின் செல்வங்கள் பொதுவுடைமை ஆக்கப்பட்டன. வீழ்ந்தது மன்னராட்சி! மலர்ந்தது சமதர்ம மக்களாட்சி!

    இதுவே புரட்சிக் கவியெனும் காவியம் நமக்குத் தரும் செய்தி! இத்தகைய அற்புதமான புரட்சிக் கவியைப் படைத்த புரட்சிக் கவிஞரைத் தொழிலாளர் தின நன்னாளில் நன்றியோடு நினைவுகூர்வோம்!

    Share
  • முதியோர் காதல்!

    -மேகலா இராமமூர்த்தி

    elder

    பாவேந்தர் பாரதிதாசன் படைத்த காவியங்களில் கலங்கரை விளக்காகத் திகழ்ந்துவருவது குடும்ப விளக்கு! இக்காவியத்தின் தலைவி தங்கம், பெயருக்கேற்றபடி குணமும் வாய்த்தவள்! அவளும் அவள் அன்புக் கணவன் மணவழகனும் இளமையில் நடத்தும் இல்லறத்தை மிகவும் ரசனையோடு விவரிக்கும் பாவேந்தர், பின்பு அவர்களுடைய பிள்ளைகளான வேடப்பனும், வெற்றிவேலும் வளர்ந்து வாலிபர்கள் ஆவது, அவர்களுடைய திருமணம் என ஒரு குடும்பம் சந்திக்கின்ற எல்லா வாழ்வியல் நிகழ்வுகளையும் இக்காவியத்தில் விரிவாகவே காட்சிப்படுத்தியுள்ளார்.

    குடும்ப விளக்கின் எல்லாப் பகுதிகளும் ஒளிமிகுந்தவையே! எனினும் மிகச் சிறந்த பகுதியாக – பொதுவாக மற்ற கவிஞர்கள் புனையாத காதல் பகுதியாகச் சுடர்விட்டுப் பிரகாசிப்பது காவியத்தின் இறுதிப் பகுதியான ’முதியோர் காதலே!’

    மணமான புதிதில் புதுமணத் தம்பதியர் எவ்வாறு ஒருவர்மீது மற்றொருவர் அன்பும், காதலும் கொண்டிருப்பரோ அதனினும் அதிகமான அளவு அன்பும் காதலும் கொள்வதென்பது நூறு வயதிலும் சாத்தியமே என்பதை விளக்கும் ஓர் அற்புதப் பகுதி இது!

    மிகவும் தள்ளாத முதியவர்களாகிவிட்ட (குடும்ப விளக்கின் தலைமைப் பாத்திரங்களான) தங்கமும், மணவழகனாரும் தங்கள் மூத்த பிள்ளையான வேடப்பனோடு இன்பமாக வாழ்ந்து வருகின்றனர். மருமகளும் பேரப்பிள்ளைகளும் அவர்களை மிகவும் அன்போடும் பரிவோடும் பேணிவருகின்றனர்.

    தங்கள் இல்லறக் கடமைகளைச் சரிவரச் செய்துவிட்ட மகிழ்ச்சியில் தங்கமும் மணவழகரும் பேசிக்கொள்வதை நாமும் சற்றுக் கவனிப்போம்…

    ”பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்தோம்; சுற்றத்தார்க்குச் செய்ய வேண்டுவனவற்றைக் குறைவறச் செய்தோம்; நம் வாழ்க்கையில் ஒருநாளும் வாய்மை தவறியதில்லை; நாட்டின் நலத்திற்காக இயன்ற அறங்களைச் செய்தோம்; யாருக்கும் சிறிய தீங்கும் செய்தறியோம்; சின்னஞ்சிறு உதவியை யாரேனும் நமக்குச் செய்திருந்தாலும்கூட செய்ந்நன்றி மறந்தறியோம்!” என்பதாக நீள்கிறது அவர்களின் உரையாடல்…

    ”மைந்தர்க்குக் கல்வி சேர்த்தோம்
    மகள்மார்க்கும் அவ்வா றேயாம்
    எம்தக்க கடன்மு டித்தோம்
    இனிதாக வாழு கின்றோம்
    முந்துறச் சுற்றத் தார்க்கும்
    செய்வன முழுதும் செய்தோம்
    இந்தநாள் வரைக்கும் வாய்மை
    இம்மியும் மறந்த தில்லை

    இந்நாட்டின் நலனுக்காக
    நல்லறம் இயற்றி வந்தோம்
    எந்நாளும் பிறர்க்குத் தீமை
    எங்களால் நடந்த தில்லை.
    சின்னதோர் நன்று செய்தார்
    திறம்மறந் தறியோம் என்றே
    இன்னிசை பாடும் அன்னார்
    இரண்டுள்ளம் இன்பம் கொள்ளும்.” 

    இவ்வாறு மகிழ்வோடு உரையாடிய சிறிது நேரத்திலேயே மூதாட்டி தங்கம் சோர்ந்துபோய் கண்ணயர்கின்றாள்; மணவழகனாருக்கோ உறக்கம் வரவில்லை. அயர்ந்து உறங்குகின்ற தன் அருமை மனைவியைப் பார்க்கிறார். அழகு கொலுவிருந்த அவளுடைய முந்தைய இளமைத் தோற்றமும், உடல் தளர்ந்த இப்போதைய முதிய தோற்றமும் அவருடைய மனக் கண்ணிலே மாறி மாறி வந்துபோகின்றன.

    காலம் செய்த கோலத்தை வியந்தவராய்த் தனக்குள்ளே பேசிக்கொள்கிறார், “புத்தம் புதுமலர் மேனியள் அல்லள் இவள் இப்போது! காய்ந்த புற்கட்டைப் போல் ஆகிவிட்டது இவள் தேகம்! நடையா…இது நாட்டியமா என நான் வியந்த ஒய்யார நடையளுமல்லள்! நடக்கவே தடுமாறித் தள்ளாடிவிழும் மூதாட்டி! வதனமே சந்திர பிம்பமோ…என்று இவள் மதிமுகத்தைப் பார்த்து மதிமயங்கி ஒரு காலத்தில் நான் பாடியதுண்டு! ஆனால் இப்போது குழிவிழுந்த கண்களோடு வறண்ட நிலம்போலல்லவா அந்த எழில்முகம் உருமாறிவிட்டது?!” எனப் பெருமூச்செறிகிறார்!

    “மேனி அழகு குலைந்துபோய்விட்ட இவளிடம் எதுதான் எனக்கு இன்பம் இப்போது?” என்ற கேள்வி பிறக்கின்றது அவருக்கு. ”இவள் இருக்கின்றாள் என்ற ஒன்றே!!” என்ற பதிலை அவர் ஆழ்மனம்….அன்பில் ஆழ்மனம் அவருக்குச் சொல்கின்றது. ”ஆமாம்…என் தங்கம் என்னோடு இருக்கின்றாள் என்றே ஒன்றே எனக்குப் போதும்!” என எண்ணியவராய், உறங்கும் அந்த மூதாட்டியைக் காதலோடு மீண்டும் பார்க்கிறார்; கண்கள் குளமாகின்றன அவருக்கு!

    நெஞ்சை நெகிழச் செய்யும் அந்தப் பாடல்….

    புதுமலர் அல்ல; காய்ந்த
    புற்கட்டே அவள் உடம்பு!
    சதிராடும் நடையாள் அல்லள்
    தள்ளாடி விழும்மூ தாட்டி!
    மதியல்ல முகம் அவட்கு
    வறள்நிலம் குழிகள் கண்கள்
    எதுஎனக் கின்பம் நல்கும்?
    ’இருக்கின்றாள்’ என்பது ஒன்றே!

     எவ்வளவு ஆழமான வாழ்க்கைத் தத்துவம் இதில் புதைந்துகிடக்கிறது!

    உண்மையான காதலைக் கணவனும் மனைவியும் உணருவதே முதுமைப் பருவத்தில்தானே! கவிஞர் வைரமுத்து சொல்வதுபோல் ’உடல் மீது கொஞ்ச காலம் இளைப்பாறுகின்ற காதல்’ மனப்பக்குவம் வரவரக் காமக் கடலை நீந்திக் கரையேறி உள்ளமெனும் கோயிலில் குடியேறிவிடுகின்றது அமர காதலாய்!

    ’முதியோர் காதல்’ எனும் இப்பகுதி முதியோரின் காதலைச் சொல்வதாயினும் இளையோரும் படித்துப் பயன்பெறவேண்டிய ஒன்று! முதிய தம்பதியினரின் அன்பான, பண்பான இல்லறத்தை இளையோர் அறிந்துகொள்ளுதல் அவர்தம் இல்லற வாழ்வைச் செம்மையாய் நடத்த உதவும்.

    அன்றைய கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையின் மிகப்பெரிய பலமே ‘வாழ்க்கைக் கல்வி’யை இளையோர், தம்முடனே ஒன்றாக இணைந்து வசித்துவந்த, பெற்றோரிடமும் ஏனைய பெரியோரிடமும் நேரடியாகக் கற்ற அனுபவமே! இன்றைய நவீன உலகில் அது சாத்தியப்படாமல் போனது இளைய தலைமுறையினருக்குப் பேரிழப்பு என்றுதான் சொல்ல வேண்டும்!

    ’Nuclear Family’ என்று சொல்லப்படுகின்ற தனிக்குடும்ப அமைப்புமுறை கோலோச்சத் தொடங்கிவிட்ட இன்றைய சூழலில் முதிய தம்பதியர் இருவர் தங்கள் வாழ்க்கை அனுபவங்களைச் சுவையாகப் பகிர்ந்துகொள்ளும் இப்பகுதி ’இல்லறத்தை நல்லறமாக்கும்’ வெற்றி ரகசியத்தை நமக்குச் சொல்லித் தருகின்றது!

    வாழ்க்கை எனும் அனுபவக் கல்வியை ஏட்டின் மூலமாக அறிந்துகொள்ள வழிவகுத்த பாவேந்தரின் எழுத்துப் பணி போற்றத்தக்கதுதானே?

    Share
  • யாரினுமினிய மணிமொழிக்கோர் ஆசை மடல்!

    மேகலா இராமமூர்த்தி

    புதுச்சேரி,

    12.03.2014

    அன்புப் பெயர்த்தி மணிமொழிக்கு,

    தாத்தா எழிற்கோ ஆவலோடு எழுதுவது. நீயும், தம்பி மலர்ச்செல்வனும் நலமா? உன் தாய் தந்தையர் நலமா?

    அமெரிக்காவில் இருக்கும் உங்கள் அனைவரோடும் நானும் பாட்டியும் அடிக்கடித் தொலைபேசியில் பேசுகிறோம்; ’யாஹூ மெசஞ்சர்’, ’ஸ்கைப்’ போன்றவற்றின் வழியாக உரையாடுகின்றோம் என்றாலும் அவை எல்லாவற்றையும்விட வலிமையானது மடல் வழியாக மனவுணர்வுகளைப் பகிர்ந்துகொள்வதே மணிமொழி; அதனால்தான் இந்த மடல்!

    தூயதமிழில் நான் இம்மடலை எழுதுவதன் நோக்கமே நம் தாய்த்தமிழை நன்றாகப் பேசவும், ஓரளவிற்கு எழுதவும் படிக்கவும் கற்றுவைத்துள்ள நீ (சற்றே கடுமையான நடையில் எழுதப்பட்டுள்ள) இம்மடலை எழுத்துக்கூட்டியேனும் வாசிக்கவேண்டும் என்ற எண்ணமும், வாசித்துவிடுவாய் என்ற நம்பிக்கையுமே!

    நீ நினைக்கலாம்….ஏன் இந்தத் தாத்தா எப்போது பார்த்தாலும் தமிழ்..தமிழ் என்றே புலம்பிக்கொண்டிருக்கிறார் என்று. நான் உன் தாத்தா மட்டுமல்ல….ஓய்வுபெற்ற ஓர் தமிழ்ப்பேராசிரியரும் ஆவேன் என்பது நீ அறிந்ததே! அமுதத்தின் சுவை அதனைச் சுவைத்தவனுக்கே தெரியும். அதுபோல் நம் அமுதத் தமிழின் அருஞ்சுவையை நான் நன்கறிவேன்.

    புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொல்லுவார்,

    தமிழுக்கும் அமுதென்று பேர் ! — அந்தத்
    தமிழின்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!’ என்று.

    மகாகவியும், பன்மொழிப் புலமையாளருமான பாரதியும்,

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம் என்று வாயூறிப் பேசுவார்.

    இப்படிப் பெரும்புலவர்கள் பலரால் போற்றப்படும், ஏற்றப்படும் ஓர் உன்னத மொழி உனக்குத் தாய்மொழியாக அமைந்தது நீ பெற்ற பேறேயல்லவா? ஆம்…மிகவும் உயரிய நாகரிகத்திற்குச் சொந்தக்காரர்கள் தமிழர்களாகிய நாம். சிறந்த இலக்கண இலக்கிய வளமும், தொன்மைச் சிறப்பும், உயர்ந்த கருத்துக்கள் செறிந்த நூல்கள் பலவும் உடையதாய் விளங்குவதாலேயே நம் தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழியாய் (Classical language) இன்றும் திகழ்கின்றது என்பதை மறவாதே!

    மணிமொழி! அயல்நாட்டில் பிறந்து அதையே வாழ்விடமாகவும் கொண்டிருக்கும் நீ அங்குள்ள மக்கள் பேசும் மொழியில் தேர்ச்சி பெறவேண்டியது மிக அவசியம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தேயில்லை. ‘When in Rome, do as the Romans do!’ என்பது பழமொழி. எனவே அமெரிக்கவாசியான நீ ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெறவேண்டும்; அத்தோடு அங்கு பேசப்படும் பிறிதோர் முக்கிய மொழியான ஸ்பானிஷையும் நன்கு கற்றுக்கொள்! பள்ளியில் கற்றுத்தரும் ‘பிரெஞ்சு’ மொழியிலும் தேர்ச்சி கொள்! இன்னும் எத்தனை எத்தனை மொழிகளை உன்னால் கற்றுக்கொள்ள முடியுமோ அத்தனையையும் கற்றுக்கொள்! அப்போதுதான் ‘Global village’ என்று சொல்லுகின்ற அளவிற்குத் தொலைத்தொடர்பு வசதிகளாலும், கணினிப் பயன்பாடுகளாலும் மிகவும் சுருங்கிவருகின்ற இன்றைய நவீன யுகத்தில் வெற்றி மங்கையாய் உன்னால் வலம்வர முடியும்!

    நாம் அறிந்துகொள்கின்ற பல்வேறு மொழிகளும், வாழ்வியல் பண்புகளும் நம் அறிவை விசாலமாக்கவும், உலகத்தோடு ஒட்ட ஒழுகவும் பெரிதும் துணைபுரியும் என்பதில் ஐயமில்லை. ஆயினும் உன்னுடைய சிந்தனையும் செயற்பாடுகளும் நம் பண்பாடு மற்றும் நாகரிகம் சார்ந்ததாகவே அமைதல் வேண்டும் என்பதே என் அவா. வளரும் சூழ்நிலையால் நீ அமெரிக்கப் பெண்ணாக இருந்தாலும் பிறப்பால் ஓர் தமிழ்ப்பெண் என்பதை எப்போதும் நினைவில்கொள்! எனவே சிறந்த தமிழ்ப்பெண்ணாக நீ வளரவும் வாழவும் வேண்டுமெனில் நம் பண்டைத் தமிழரின் செம்மாந்த வாழ்வையும், அவர்தம் சிந்தனைகளையும் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அதற்குச் சிறந்த வழி…நம் முன்னோர்கள் தந்துவிட்டுச் சென்றுள்ள சங்க இலக்கியப் புதையலையும், திருக்குறள் முதலிய அறநூல்களையும் நீ அறிந்துகொள்வதே!

    இன்றைய காலகட்டத்தில் எல்லாரும் வெளிநாடுகளுக்கு எளிதில் செல்லவும், தங்கவும் முடிகின்றது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தைத் தவிர வேறிடங்களுக்குச் சென்றறியாத தமிழ்ப் புலவரான கணியன் பூங்குன்றனார் என்பவர்,

    யாதும் ஊரே யாவரும் கேளிர்

    தீதும் நன்றும் பிறர்தர வாரா…’ எனும் ஒப்பற்ற சிந்தனைகளைத் தமிழ்மண்ணில் விதைத்துவிட்டுச் சென்றிருக்கின்றார். ’Three principles of French Revolution’ பற்றி உனக்குப் பள்ளியில் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். Liberté, Egalité, Fraternité (Liberty, Equality and Fraternity in English) என்பவையே அவை. இதனையே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று தமிழில் அழைக்கின்றோம். இதில் மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள சகோதரத்துவத்தையே கணியன் பூங்குன்றனாரின் யாவரும் கேளிர்’ என்ற சொற்றொடர் உணர்த்துகின்றது. எனவே சகோதரத்துவம் எனும் உயரிய கோட்பாட்டை முதன்முதலில் உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்களே தமிழர்கள்தான் என்பதை நான் உனக்குப் பெருமையோடு சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன் மணிமொழி.

    பக்குடுக்கை நன்கணியார் எனும் மற்றொரு சங்கப் புலவர்,

    ’…..இன்னா தம்மஇவ் வுலகம்
    இனிய காண்கித னியல்புணர்ந் தோரே என்கிறார் தன் புறப்பாடலில். ’இவ்வுலகம் மனத்துக்கு இனிமைதராத பல நிகழ்வுகளையும், சம்பவங்களையும் தன்னகத்தே கொண்டது; மனிதர்களாகிய நாம் அவற்றைக் கண்டு கலங்காது இன்னாதவற்றையும் இனியவையாகக் காண்கின்ற மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும்’ என்பதே இவ்வடிகள் மூலம் அப்புலவர் நமக்கு உணர்த்தும் உண்மை!

    இதையேதான் தெய்வப்புலவர் திருவள்ளுவரும், இன்பத்தை விரும்பாதவனாய், துன்பம் இயற்கையானது என்ற தெளிவோடு இருப்பவன் துன்பம் வந்தபோதும் துன்புறுவதில்லை என்கிறார்.

    இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

    துன்பம் உறுதல் இலன்என்பதே அக்குறள். மேலைநாட்டு அறிஞர்களிடம் தேடினாலும் காணக் கிடைக்காத அரிய சிந்தனைகள் இவை!

    மற்றொரு இனிய பாடலில் ’நரிவெரூஉத்தலையார்’ என்ற புலவர் பெருந்தகை, ’மனிதர்களே! நீங்கள் மற்றவர்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை; தீமை செய்யாமலாவது இருங்கள்; அதுதான் எல்லாரும் விரும்புவது; அத்தோடு உங்களை நற்கதிக்கு அழைத்துச் செல்லும் வழியும் அதுவே!’ என்று அன்போடு அறிவுரை அளிக்கிறார்.

    பல்சான் றீரே பல்சான் றீரே

    …………………………………………………………….

    நல்லது செய்த லாற்றீ ராயினும்
    அல்லது செய்த லோம்புமின் அதுதான்
    எல்லாரு முவப்ப தன்றியும்
    நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே.’

    (மேலே நான் குறிப்பிட்டுள்ள பாடல் உனக்கு மிகவும் பரிச்சயமான பாடல்தானே மணிமொழி! சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற புறநானூற்று மாநாட்டில் இப்பாடலை நீ மனப்பாடமாக ஒப்புவித்துப் பரிசுபெற்றது இப்போதும் என் நினைவிலிருக்கின்றது!)

    இதுபோன்று இன்னும் எத்தனையோ முத்துக்களும் மணிகளும் நம் தமிழில் கொட்டிக்கிடக்கின்றன. அதனால்தானோ என்னவோ….சங்க நூல்களில் ஒன்றான அகநானூற்றின் ஒரு பகுதிக்கு மணிகள் மற்றும் பவளங்களின் இணைவு என்ற பொருள்தரும் ‘மணிமிடைபவளம்’ என்ற அழகிய பெயரினையும், மற்றொரு பகுதிக்கு ’முத்துமாலை’ எனப் பொருள்தரும் ‘நித்திலக்கோவை’ என்ற இனிய பெயரினையும் சூட்டியிருக்கின்றனர் தமிழ்ச்சான்றோர்; இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் தமிழின் சிறப்பை! இவற்றையெல்லாம் நீ கற்று மகிழவேண்டும் அம்மா! அத்தோடு நில்லாமல், உன் தோழர் தோழியர்க்கும் நம் தமிழ்ச்சிந்தனையின் ஆழத்தை, அகலத்தை அறியத்தரவேண்டும். அதற்காகவேனும் நீ செந்தமிழ் இலக்கியங்களைக் கற்கத்தான் வேண்டும்.

    மணிமொழி! இப்போது நீ சிறுமி. நான் எழுதுகின்ற செய்திகளையும், அவற்றின் இன்றியமையாமையையும் புரிந்துகொள்ளுகின்ற வயதோ பக்குவமோ உனக்கில்லை என்பதை நானறிவேன். பின்பு ஏன் இப்போதே இவற்றையெல்லாம் உனக்குச் சொல்லுகிறேன் என்றால்…..மனித வாழ்வு நிலையற்றது; நேற்றிருந்த ஒருவன் இன்றில்லை என்னும் இயல்புடையது.

    நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

    பெருமை உடைத்திவ் வுலகு என்ற தெய்வப்புலவரின் பொய்யாமொழி புகல்வது வாழ்வின் நிலையாமையையே. எனவே வயதான நான் உனக்குச் சொல்லவேண்டிய அறிவுரைகளையும், அறவுரைகளையும் காலந்தாழ்த்தாமல் சமயம் வாய்க்கும்போதெல்லாம் சொல்லிவிடுவதே நல்லதல்லவா?

    பழைய தலைமுறையினரான நாங்கள் கிணற்றுத் தவளைகளாக – வெளி உலகத்தொடர்பு அதிகம் இல்லாதவர்களாகவே வாழ்ந்துவிட்டோம். உன் தலைமுறை அப்படியில்லை. பல்வேறு வண்ணமும், எண்ணமும் கொண்ட மக்களோடு கலந்து பழகும் அரியதோர் வாய்ப்பு உனக்கு அமைந்திருக்கின்றது. இதனைச் சரியான வகையில் நீ பயன்படுத்திக்கொள்ளவேண்டும். பிற மொழிகளோடு தமிழையும் தவறாது பயில்! நீயே வியக்கும் வகையில் விரைவில் நல்ல தமிழ்ப்புலமை வாய்க்கப்பெறுவாய்!

    தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் தொலையாமல், அழியாமல் காக்கும் பெரும்பொறுப்பு உன்னைப் போன்ற இளந்தமிழர் கைகளில் இருக்கின்றது மணிமொழி.

    எதிர்காலத்தில் நீ சிறந்த தமிழறிஞராய்த் திகழவேண்டும்! உலகெங்கும் தமிழ் முழக்கம் செய்யவேண்டும்! அப்போது உன் அன்புப் பாட்டனார் உன்னுடன் இல்லாமல் போகலாம்; ஆயினும் இம்மடல் உனக்கு என்னை என்றும் நினைவூட்டிக்கொண்டே இருக்கும்!

    மகாகவியின் பாடல் வரிகளோடு இம்மடலை நிறைவு செய்கின்றேன். (இவ்வரிகளை உனக்காகவே பாரதி எழுதினானோ என்று எனக்குத் தோன்றுகின்றதே……..இஃதென்ன விந்தை!!)

    தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
    பரவும்வகை செய்தல் வேண்டும்

    ……………………………………………………………….

    பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
    தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
    இறவாத புகழுடைய புதுநூல்கள்
    தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
    மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
    சொல்வதிலோர் மகிமை யில்லை
    திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
    அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.’

    (பி.கு: என் ஆசைகளையும், விருப்பங்களையும் உன் அன்புப் பாட்டியும் உளப்பூர்வமாக வழிமொழிவதாக உன்னிடம் தெரிவிக்கச் சொன்னார்.)

    உனக்கும், மலர்ச்செல்வனுக்கும் எங்கள் அன்பு முத்தங்கள்!

    தமிழ் வாழ்க!

    என்றும் உன் நலனையே நாடும்,

    தாத்தா எழிற்கோ

    Share
  • மகளிர் அடைந்துள்ள ஏற்றங்களும், எதிர்நோக்கும் மாற்றங்களும்!

    மேகலா இராமமூர்த்தி

    மகளிர் தமது அடிப்படை உரிமைகளை அடைவதற்கும், வாழ்வில் சந்தித்த பல்வேறு அவலங்களை அகற்றுதற்கும் பெருமளவில் போராட்டங்களை நடத்தவேண்டிய சூழல் சென்ற நூற்றாண்டில் நிலவியது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்ற அம்மையார் (a freedom fighter, significant women activist and a social reformer) பெண்களுக்கெதிரான தேவதாசி முறையை ஒழித்துப் பள்ளியறைப் பதுமைகளாக இருந்த பெண்கள் பள்ளிக்கூடங்களில் கல்வி கற்பதற்கு வழிகோலினார். பகுத்தறிவுப் பகலவனான தந்தை பெரியார் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் நடத்தப்பட வேண்டும்; அவர்தம் விருப்பங்கள் மதிக்கப்பட வேண்டும் என்று கொள்கை முழக்கமிட்டார்.

    ’பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!

    பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!’ என்று பெண்மையை வாழ்த்திப்பாடி அவர்களை நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட புதுமைப் பெண்களாய் வாழ வலியுறுத்தினான் மானுடம் போற்றும் மாகவி பாரதி!

    ’கல்வியில் லாத பெண்கள்
    களர்நிலம் அந்நி லத்தில்
    புல்விளைந் திடலாம் நல்ல
    புதல்வர்கள் விளைதல் இல்லை!’
    என்றான் புரட்சிக்கவி.

    களர் நிலங்களாக இருந்த பெண்களின் தளர்நிலை இன்று வெகுவாக மாறியுள்ளது எனலாம். கல்வியெனும் விதையால் அறிவுப்பயிர் செழித்து வளர்ந்து சிந்தனைமலர்கள் மணம்வீசி வெற்றிக்கனிகளை எட்டிப்பறித்து வருகின்றனர் இன்றைய பெண்கள்! பள்ளிகளும் கல்லூரிகளும் ஆண்களுக்கே ஏகபோக உரிமையாய் இருந்ததுபோக இன்று ’எங்கெங்கு காணினும் சக்தியடா!’ என்று ஆனந்தக் கூத்தாடும் வகையில் சக்தி வடிவங்களான பெண்கள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அதிக அளவில் பயின்று வருகின்றனர். அதுமட்டுமா? ஆண்களைக் காட்டிலும் மங்கையர் திலகங்களே தேர்வுகளிலும் அதிக விழுக்காட்டில் தேர்ச்சி பெறுகின்றனர் என்கின்றன புள்ளி விவரங்கள்.

    இல்லத்தரசி என்ற பட்டத்தோடு பெயரளவில் ’அரசியாய்’ உண்மையில் அடுக்களை துடைத்தும், படுக்கையை விரித்தும் வீட்டினர் அனைவர்க்கும் அடிமையாய் வா(தா)ழ்ந்து வந்த பெண்கள் இன்று நாட்டையே ஆள்கின்றனர்! சந்திரனைக் காட்டிக் குழந்தைக்குச் சோறூட்டிக்கொண்டிருந்த மகளிர் இன்று சந்திர மண்டலத்திற்கே சென்று வருகின்றனர். அன்ன நடையால் வீட்டை மட்டுமே அளந்து கொண்டிருந்தவர்கள் இன்று வானை அளக்கின்றனர்; கடல் மீனை அளக்கின்றனர்.

    அலுவலகங்களிலும், ஆராய்ச்சிக் கூடங்களிலும், கணினி நிறுவனங்களிலும், கார்பரேட் கம்பெனிகளிலும் அற்புதமாய்ப் பணியாற்றி வருகின்றனர் இன்றைய பெண்கள் என்பதை எண்ண எண்ண இனிக்கவே செய்கின்றது! வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர்கள் இன்று தலைகுனிவைச் சந்தித்துவருவது மகளிர்க்கு மட்டற்ற மகிழ்ச்சி தருவதாய் உள்ளது.

    இவ்வாறு பெண்களின் முன்னேற்றமும் வளர்ச்சியும் இந்த 21-ஆம் நூற்றாண்டில் கணிசமான அளவில் உள்ளது என்றபோதிலும், அவர்களின் வெற்றியைக் குலைக்கவும், நிம்மதியைக் கெடுக்கவும், நல்வாழ்வை நாசமாக்கவும் நடைபெற்றுவரும் முயற்சிகளுக்கும், சதிகளுக்கும் பஞ்சமேயில்லை.

    வன்கொடுமைகள், பாலியல் தொந்தரவுகள் போன்றவற்றைப் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பெண்களும், அலுவலங்களில் பணிபுரியும் பெண்களும் அதிக அளவில் சந்தித்துவருகின்றனர். இத்தகைய கொடுமைகளால் உடலாலும், உள்ளத்தாலும் பாதிக்கப்படும் பெண்களில் சிலர் தற்கொலை செய்துகொள்வதும் தொடர்கதையாகி வருவதைப் பத்திரிகைகள் தினமும் பத்தி பத்தியாய் வெளியிடுகின்றனவே!

    இத்துணைப் பிரச்சனைகளுக்கு இடையிலும் விடாமுயற்சியுடன் தளராது பணியிடங்களில் உழைக்கும் பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகரான அங்கிகாரமும், பதவி உயர்வும் கிடைப்பதில்லை என்பது கசப்பான உண்மையாகும். ஓரளவிற்குமேல் பெண்கள் உயர்பதவிகளுக்குச் செல்வதை ஆணாதிக்கச் சமுதாயம் பல்வேறு வகைகளில் தடைசெய்கின்றது; அனுமதிக்க மறுக்கின்றது. ’Glass Ceiling’ எனும் கண்ணுக்குத் தெரியாத இந்தத் தடுப்புச்சுவர் பெண்களின் உயர்வுக்கும் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய முட்டுக்கட்டையாய் இருப்பது வேதனையளிக்கின்றது. அதுபோல் ஒரே வேலையைச் செய்கின்ற ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே அளவிலான ஊதியமும் (சில இடங்களில்) வழங்கப்படுவதில்லை. தினக்கூலித் தொழிலாளர்களிடையே ’gender pay gap’ எனும் இவ்வூதிய வேற்றுமையை இன்றும்  நாம் கண்கூடாகக் காணமுடியும். இவையெல்லாம் பெண்களின் வளர்ச்சி கண்டு பொறுக்காத, அழுக்காறு மிகுந்த ஆண் அதிகாரவர்க்கத்தின் வேலையே என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை அல்லவா!

    வெளியில் பெண்களுக்கு இழைக்கப்படும் தீங்குகளும் தொல்லைகளும் ஒருபுறம் என்றால்….மறுபுறம் வீடுகளில் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் அவற்றிற்குச் சற்றும் குறைந்தவையல்ல. திருமணமான பெண்களில் சிலர் புக்ககத்தினரின் நாகரிகமற்ற பேச்சுக்களையும், ஏச்சுக்களையும் பொறுமையோடு தாங்கிக்கொள்ளவேண்டியுள்ள அவலநிலை இன்றும் நீடிக்கின்றது. திருமணமான உடனே பெண் பிள்ளைபெறத் தவறினால் சொல்லவே நாக்கூசும் ‘மலடி’ என்ற பட்டத்தை எந்தப் பல்கலைக்கழகத்திடமும் அனுமதி பெறாமல் இந்தச் சமூகம் அவளுக்குச் சூட்டுகின்றது! அதுபோக, குடும்பத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் அடுத்தடுத்துப் பெண் குழந்தைகள் பிறந்துவிட்டாலோ….அந்தப் பெண்ணுக்குக் கிடைக்கும் வசவுகளுக்கோர் அளவில்லை.

    மருத்துவ உண்மைகள் அனைத்தையும் தொலைக்காட்சிப் பெட்டிகள் வீட்டின் வரவேற்பறைக்கே வந்து வழங்கிவிட்டுப் போகின்ற இந்த நவீன யுகத்தில் மெத்தப் படித்ததாய் மார்தட்டிக்கொள்ளும் இன்றைய சமூகத்தினர் குழந்தைப்பேறு வாய்க்காமல் போவதற்கும், பெண் குழந்தைகள் தொடர்ந்து பிறப்பதற்கும், பெண்ணை மட்டுமே குறைசொல்லும் மடமையை, சிறுபிள்ளைத்தனத்தை எங்கு கற்றார்கள்?? ஆடவர்க்கென்று ஒரு (பொன்) தராசும் பெண்களுக்கென்று வேறொரு (மண்) தராசும் வாங்கி எடைபோடும் அற்புதப் பயிற்சியை எங்கு பெற்றார்கள்??

    இவையல்லாமல், குடியைக் கெடுக்கும் குடிக்கு அடிமையான கணவன்மார்களை மணந்துகொண்ட பெண்களின் துயர நிலையோ வார்த்தைகளின் விவரணைகளுக்கு அப்பாற்பட்டது!!

    அடுத்து, வரதட்சணை என்ற பெயரில் நடத்தப்படும் ’பணக்கொள்ளை’ இன்னமும் ஒழிந்தபாடில்லை; சொல்லப்போனால் அதிகரித்திருக்கின்றது என்பதே இன்றைய உண்மை நிலை. இதனால் வசதியில்லாத பெற்றோர்பலர் தங்கள் பெண்களின் எதிர்காலத்தை எண்ணி எண்ணிக் கலங்குகின்றனர்.

    ’பெண்ணியம்’ என்ற கொள்கை இப்பொழுது பலராலும் பரவலாகப் பேசவும் விவாதிக்கவும்படுகின்றது. ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளைப் பெறுவதும், வேலை வாய்ப்புக்களிலும், ஊதிய அளவுகளிலும் சமநிலை காண்பதும் அதன் அடிப்படைக் கோட்பாடுகள் ஆகும். அத்தோடு நில்லாமல், பெண்களின் சிந்தனைச் சுதந்திரத்தைத் தடைசெய்து அவர்களின் விருப்பத்திற்கெதிரான செயல்களை அவர்கள்மீது திணிப்பதையும், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளையும் பெண்ணியம் கடுமையாகக் கண்டிக்கிறது. இது வரவேற்கத்தக்க ஒன்றாகும்!

    இத்தகைய பெண்ணியச் சிந்தனைகள் இன்று எந்த அளவிற்குச் செயல்வடிவம் கண்டிருக்கின்றன என்பதை நடுநிலையான பார்வையோடு சிந்தித்துப் பார்த்தால் பெண்களின் நிலை இன்றைய சமூகத்தில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியுள்ளது என்றபோதிலும் இவ்வளர்ச்சி போதுமானது என்று சொல்வதற்கில்லை. அரசியலிலும், பொதுப்பணிகளிலும் இப்போதும் பெண்களின் பங்களிப்பு மிகக்குறைவே. இந்நிலை மாறவேண்டும். அரசியலிலும் பொதுப்பணிகளிலும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் ஆர்வத்துடன் ஈடுபடவேண்டும். ’பெண்கள் தங்கள் உரிமைகளைத் தவறாது பெறுவதற்கு அவர்கள் தயக்கமின்றிப் பொதுப்பணிகளில் ஈடுபடவேண்டும்!’ என்று தந்தை பெரியார் கூறியதை நாம் இவ்வேளையில் நினைவுகூர்வது நல்லது!

    மேடைகளில் மட்டும் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுப்பதையும், வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக அமர்ந்துகொண்டு பெண்களின் நலன் குறித்து விவாதிப்பதையும் விடுத்துப் பெண்கள் ஒன்றுகூடி வீதிகளில் போராட வேண்டும். ‘கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்’ என்றோர் பழமொழி உண்டு. நாட்டின் எந்த மூலையில் எந்தப் பெண்ணுக்குப் பிரச்சனை என்றாலும் எல்லாப் பெண்களும், பெண்ணுரிமை அமைப்புக்களும் ஒன்றுபட்டுத் தட்டிக்கேட்க வேண்டும், எதிர்ப்புக்குரல் எழுப்பவேண்டும். கிராமங்களுக்கும், நாட்டின் மூலை முடுக்குகளுக்கும் சென்று பெண்ணுரிமை குறித்தும், அவை மறுக்கப்படும்போது மேற்கொள்ளவேண்டிய சட்ட வழிமுறைகள் குறித்தும் மகளிர் அமைப்புக்கள் கிராமப்புறப் பெண்களுக்குக் கற்பிக்கவேண்டும்.

    அணு மிகச்சிறியதுதான்; ஆனால் அது பிளக்கப்படும்போது வெளிப்படும் ஆற்றல் அளப்பரியது! அதுபோல் பலவீனமானவர்கள் (weaker sex) என்ற எண்ணத்தில் அநீதிகளுக்கு உட்படுத்தப்படும், அவலங்களுக்கு ஆட்படுத்தப்படும் பெண்ணினமும் ஒன்றுதிரண்டால் ‘ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி!’ என்று பாரதி எக்காளமிட்டதுபோல் மீண்டும் ஓர் யுகப்புரட்சியை நாடு சந்திக்கும் நிலை வரலாம். எனவே சமுதாயம் பெண்களைச் சுயமாகச் சிந்தித்துச் செயற்படவும், சுயமரியாதையோடு வாழவும் அனுமதிக்க வேண்டும். அதுபோல், பெண்களும் தம் எதிர்காலத்தை வளமானதாக மாற்றுவதற்கான முயற்சிகளில் தாமே ஈடுபடுவதும், அதற்கு ஏற்படும் தடைகளைத் தகர்த்துத் துணிச்சலோடு முன்னேறுவதும் அவர்களுக்கு ஏற்றத்தையும் எதிர்நோக்கும் மாற்றத்தையும் உறுதியாகத் தரும் என்பதில் ஐயமில்லை.

    ’உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்
    ஓது பற்பல நூல்வகை கற்கவும்
    இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
    யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
    திலக வாணுத லார்நங்கள் பாரத
    தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்
    விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
    வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்’

    என்ற முண்டாசுக் கவிஞனின் முத்தான வரிகளை மனத்தில் கொண்டு அயராது உழைத்தால் இந்தப் பாரையே வென்று சரித்திரம் படைப்பர் பாவையர்!

    Share
  • இன்னாசெய்தார்க்கும் இனியவேசெய்த இறைநேசர்!

     

    மேகலா இராமமூர்த்தி

    திருச்சிற்றம்பலம்

    ஒ‌வ்வொரு மாதமு‌ம் தே‌ய்‌பிறை‌யி‌ல் வரு‌ம் ‌சது‌ர்‌த்த‌சி நா‌ள் ‌சிவரா‌த்‌தி‌ரி எ‌ன்று கருதப்படு‌கின்றது. மா‌சி மாத‌த்‌தி‌ல் தே‌ய்‌பிறைக் கால‌த்‌தி‌ல் வரு‌ம் சதுர்த்தசி நாளையே நா‌ம் மகா ‌சிவரா‌த்‌தி‌ரியாகக் கொண்டாடி வருகின்றோம்.  இந்த மகா சிவராத்திரியின் வரலாறு குறித்துப் பல்வேறு புராணக் கதைகள் கூறப்படுகின்றன.

    சிவனின் கண்களைப் பார்வதிதேவி விளையாட்டாக மூடியதால் ஈரேழு உலகங்களும் இருளில் மூழ்கின; அந்த நாளே சிவராத்திரி என்பர் பௌராணிகர் சிலர். ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் ’திருநீலகண்டர்’ எனப் பெயர் பெற்றார். அன்றைய தினத்தன்று இரவு தேவர்கள் பரமேஸ்வரனை வணங்கித் துதித்தனர்; அந்நாளே சிவராத்தரி எனக் கூறுகின்றனர் வேறு சில அருளாளர்கள். சிவனாரின் அடிமுடி காணமுடியாமல் நின்ற திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் நெருப்புப் பிழம்பாகச் சிவன் காட்சி தந்த தினமே சிவராத்திரி என்றொரு கருத்தும் கூறப்படுகின்றது.

    சிவராத்திரி விரதமும் சிவதரிசனமும் மறலி பயத்தையும், மரண பயத்தையும் போக்கி முக்திக்கு வழிவகுக்கும் என்பது நாயன்மார்களின் கூற்று. இப்புண்ணிய நன்னாளில் சிவபக்திச் செல்வத்தால் உயர்ந்த – சிவனின் திருவருளுக்குப் பாத்திரமான ஓர் அருட்செல்வரின் வரலாற்றைச் சிந்திப்பது பொருத்தமாக இருக்கும் அல்லவா! அவ்வடியாரின் வரலாற்றை அறிந்துகொள்வோம் வாருங்கள்!

    திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துவந்த மலையமான் வழித் தோன்றல்களில் ஒருவர் மெய்ப்பொருள் நாயனார். சிவனடியார்களின் திருநீற்றுக் கோலமும், உருத்திராக்கமுமே மெய்ப்பொருள் சின்னங்கள் என்று எண்ணிச் சிவனடியார்கள்பால் மிகுகாதல் கொண்டு அவர்களைப் போற்றியபடியால் ‘மெய்ப்பொருள்’ என்ற பெயர் அவருக்கு ஏற்பட்டிருக்கவேண்டும் என எண்ணுகின்றேன். சிவபக்தியில் திளைத்தவராயிருந்தபோதிலும் வாள்வலியிலும் தோள்வலியிலும் சிறந்த பெருவீரராயும் மெய்ப்பொருளார் திகழ்ந்தார். அதனால் திருக்கோவலூரை அவர்தம் பகைவர்களால் கனவிலும் நெருங்க முடியவில்லை.

    அத்தருணத்தில், மெய்ப்பொருளாருடன் பலமுறைப் போரிட்டும் வெற்றி மங்கையைத் தழுவமுடியாமல் தோல்வியையே முத்தமிட்டுவந்த ’முத்தநாதன்’ என்ற பகையரசன் அவரைச் சூழ்ச்சியால் வெல்லக் கருதினான். அதற்கு என்ன வழி என்று அல்லும் பகலும் சிந்தித்தவனின் மனத்தில் அருமையான திட்டம் ஒன்று உதயமானது. ’ஆமாம்! அதுதான் சரி!’ என்று தனக்குள் கூறிக்கொண்டவன் சற்றும் தாமதியாமல் செயலில் இறங்கினான்.

    தன் உடலெங்கும் திருநீற்றைக் குழைத்துப் பூசிக்கொண்டான். கையினில் ஓர் புத்தகப் பையை எடுத்துக்கொண்டு அதிலே கொலைக் கருவியாம் கத்தியை மறைத்து வைத்துக்கொண்டான். திருக்கோவலூரை நோக்கிப் புறப்பட்டான். அவன் பொய்த்தவ வேடம் எப்படி இருந்தது தெரியுமா? விளக்கானது வெளியில் சுடர்விட்டு ஒளிதந்தாலும் அதன் அடிப்பகுதியில் கருமை கொண்டதாய் இருக்குமல்லவா? அதுபோலவே முத்தநாதனின் பொய்த்தவ வேடமும் வெளியில் சிவச்சின்னங்களுடன் திகழ்ந்தாலும் மனத்திலே வஞ்சம் எனும் கருமைகொண்டு திகழ்ந்தது என்கிறார் தெய்வச் சேக்கிழார். அப்பாடல் வரிகள்…

    மெய்யெலாம் நீறுபூசி  வேணிகள் முடித்துக் கட்டிக்

    கையினிற் படைக ரந்த புத்தகக் கவளி யேந்தி

    மைபொதி விளக்கே யென்ன மனத்தினுட் கறுப்புவைத்துப்

    பொய்த்தவ வேடங்கொண்டு புகுந்தனன் முத்தநாதன்.’ (பெரியபுராணம்)

     

    இத்தகைய பொய்க்கோலத்துடன் சென்றவனைக் கண்ட திருக்கோவலூர் மக்கள் அவனை உண்மைச் சிவனடியார் என்றே எண்ணி வணங்கினர். அவன் நடந்துசென்ற வழிகளிலெல்லாம் அவனுக்கு அரசமரியாதை கிடைத்தது. எளிதில் மன்னரின் அரண்மனையை அடைந்தவனைக் காவலாளிகள் அனைவரும் தொழுது ‘தேவரீர் எழுந்தருள்க!’ என்று முகமன் கூறி வரவேற்றனர். அரண்மனையின் பல வாயில்களையும் இலகுவாகச் கடந்து உள்ளே சென்றவன், அந்தப்புர வாயிலை அடைந்து உள்ளே செல்ல எத்தனித்தான். அங்கே காவல் புரிந்துகொண்டிருந்த அரசரின் மெய்க்காப்பாளனான ‘தத்தன்’ என்பவன் முத்தநாதனைத் தடுத்து, ‘ஐயா! சமயமறிந்து உள்ளே செல்ல வேண்டும்! மன்னர் பெருமான் உறங்கிக் கொண்டிருக்கின்றார். இப்போது உள்ளே செல்வது முறையில்லையே?’ என்றான். அவனைத் தீயெழ நோக்கிய அப்பொய்த்தவ வேடத்தான், ‘நான் அரசர்க்குச் சிவனாரின் உறுதிப்பொருள் ஒன்றை உரைக்க வந்துள்ளேன், என்னைத் தடுக்காதே!’ என்று கூறியவாறே உள்ளே புகுந்தான்.

    சிவனாடியாரைக் கண்டதும், உறங்கிக்கொண்டிருந்த மெய்ப்பொருளாரின் அருகில் அமர்ந்திருந்த அரசமாதேவியார் துணுக்குற்று எழுந்தார். தம் கணவரையும் உடனே எழுப்பினார். உறக்கம் கலைந்து எழுந்த மெய்ப்பொருளார், அடியாரைக் கண்டதும் ஆண்டவனையே கண்டதாய் அகமும் முகமும் மலர்ந்தார். ‘ஐயனே! தாங்கள் இங்கு எழுந்தருளியது யாது கருதியோ?’ என்று அன்போடு வினவினார். மர்மப் புன்னகை பூத்த முத்தநாதன், ’சிவபெருமான் பண்டைக் காலத்தில் திருவாய் மலர்ந்தருளிய ஆகமநூல் ஒன்று என்வசம் உள்ளது. அதனை உனக்கு உபதேசிக்கவே இங்குவந்தேன்’ என்றான். பரவசமடைந்த திருக்கோவலூர் அரசர், ’பேறு எனக்கு இதன்மேல் உண்டோ? உடனே உபதேசித்து அருளுங்கள்!’ என்று மகிழ்வோடு கூற, முத்தநாதனோ அருகிருந்த தேவியாரை ஒரு பார்வை பார்த்துவிட்டு, ‘அரசே! நீயும் நானும் தனித்திருக்கும் வேளையிலேயே இவ்வாகமத்தை உபதேசிக்கவேண்டும்!’ என்று கூறக் குறிப்பறிந்த மன்னவன் தேவி உடனேயே அவ்விடம்விட்டு அகன்றார்.

     Untitled

    மெய்ப்பொருளார் முத்தநாதனை ஓர் உயர்ந்த ஆசனத்தில் அமர்த்திவிட்டுத் தாம் பணிவோடு வெறுந்தரையில் அமர்ந்துகொண்டார். ‘ஐயனே! அந்த உயர்ந்த ஆகமத்தை அடியேனுக்கு இப்போது உபதேசிக்கலாமே!’ என்று குனிந்தவண்ணம் அவர் தொழுதிருந்த வேளையில், முத்தநாதன் எனும் அந்த மூர்க்கநாதன் தன் புத்தகக் கவளியில் மறைத்து வைத்திருந்த கொலைக் கருவியை எடுத்துத் தான் செய்ய நினைந்த அப்பரிசே செய்தான்(கத்தியால் குத்தினான் என்பதே இதன் பொருள்) என்கிறார் சேக்கிழார் பெருமான். (அவன் கத்தியால் குத்தினான்; கொலை செய்தான் என்பன போன்ற அமங்கலச் சொற்களை மறந்தும் நாம் பெரிய புராணத்தில் காணமுடியாது; நயத்தகு நாகரிக மொழிகளாலேயே தீச்செயல்களைக் கூடச் சேக்கிழார் விளக்கியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.) முத்தநாதனால் குத்தப்பட்ட மெய்ப்பொருளார் ’மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள்’ என்று கூறியவண்ணம் இரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

    இந்நிகழ்வு நமக்குத் தெய்வப் புலவரின் ’பகைவர்கள் வணங்கித் தொழுகின்ற கையினுள்ளும் கொலைக் கருவி மறைந்திருக்கும்; அவர்கள் அழுது சொரியும் கண்ணீரும் அத்தன்மையானதே!’ எனும் பொருள்தரும் குறளை நினைவுபடுத்துகின்றது.

     

    தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

    அழுதகண் ணீரும் அனைத்து. (குறள்: 828)

     

    சிவனடியார்பால் கொண்ட காதல் காரணமாக, வந்தவர் உண்மையான சிவனடியாரா? இல்லை…பகைவனா? என்பதை மெய்ப்பொருளார் ஆராய மறந்துவிட்டார்!!

    முத்தநாதனின் கொடூரச் செயலை விவரிக்கும் சேக்கிழாரின் பாடல்…

    ’கைத்தலத் திருந்தவஞ்சக் கவளிகை மடிமேல் வைத்து

    புத்தக மவிழ்ப்பான்போன்று புரிந்தவர் வணங்கும்போதில்

    பத்திரம் வாங்கித் தான்முன் னினைந்தஅப் பரிசேசெய்ய

    மெய்த்தவ வேட மேமெய்ப்பொரு ளெனத்தொழுது வென்றார்.’ (பெரியபுராணம்)

     

    தரையில் சரிந்த மன்னரின் குரல்கேட்டு, வாயிலில் காவல் புரிந்தபோதிலும் தன் கவனம் முழுவதையும் உள்ளேயே வைத்திருந்த மெய்க்காவலன் தத்தன் உள்ளே பாய்ந்துவந்தான். அரசரின் நிலைகண்டு வெகுண்டவன் தன் உடைவாளை உருவி முத்தநாதனைக் கொல்லமுற்பட, அப்போதும் முத்தநாதன்பால் மாளாத அன்புகொண்ட மெய்ப்பொருளார் தன் காவலனைத் தடுத்து, ‘தத்தா நமரே காண்! (தத்தா! அவர் நம்மவர்(சிவனடியார்) அவரை ஒன்றும் செய்யாதே!) எனக் கூறவே, செய்வதறியாது திகைத்த தத்தன், ‘பெருமானே! இப்போது நான் என்ன செய்ய?’ என்று நாத்தழுதழுக்க, கண்ணீர்மல்க மெய்ப்பொருளாரை வினவினான். ’இந்த அடியாருக்கு யாதொரு தீங்கும் நேராவண்ணம் நம் ஊரின் எல்லையில் கொண்டுபோய் விட்டுவா, இது என் ஆணை!’ என்றார் மாசிலா மாணிக்கமாம் மெய்ப்பொருள் நாயனார்.

    மன்னரின் கட்டளையைச் சிரமேற்கொண்ட தத்தன், (மன்னரின் நிலையறிந்து)  முத்தநாதனைக் கொல்லவிழைந்த மற்ற காவலர்களிடமிருந்து அந்தப் பொய்வேடத்தானைக் காத்து, ஊரெல்லையில் அவனைப் பத்திரமாகக் கொண்டுசேர்த்துவிட்டு விரைந்துவந்தான் அரசரைக் காண! அவன் திரும்பி வரும்வரையில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்த மெய்ப்பொருளார், தம்மை நோக்கி விரைந்து வந்துகொண்டிருந்த தத்தனின் முகத்தை ஆவலோடு நோக்கினார். தத்தனும் குறிப்பறிந்து, ‘அரசர் பெருமானே! தங்கள் ஆணைப்படி அடியாரை இடையூறு ஏதுமின்றி ஊரெல்லையில் பத்திரமாகச் சேர்த்துவிட்டேன்!’ என்றுகூறிப் பொங்கிவந்த அழுகையை அடக்கிக் கொண்டான். தத்தனை அன்புமீதூறப் பார்த்த நாயனார், ‘ஐயனே! இன்று நீ எனக்குச் செய்த இவ்வரிய உதவியை இனி யாரே செய்வார்?’ என்று அவனைப் பாராட்டிவிட்டுத் தம்மைச் சூழ்ந்துநின்ற சுற்றத்தார், அமைச்சர் பெருமக்கள், அரசியார் அனைவரையும் நோக்கி, ’திருநீற்றினிடத்து (சிவனடியார்களிடத்து) வைத்த அன்பினைச் சோர்வு வாராது பாதுகாத்து உலகிலே கொண்டு செலுத்தக் கடவீர்!’ என்று அன்புக் கட்டளையிட்டுவிட்டுச் சிற்றம்பலத்திலே ஆனந்தக் கூத்தாடும் அம்பலவாணரின் அழகிய கழலணிந்த திருவடிகளைச் சிந்தித்தவண்ணமே கண்மூடியிருந்தார். அப்போது, மெய்ப்பொருளாரின் சிந்தையில் கொலுவீற்றிருந்த அம்பலவாணர் சிவகாமியம்மை சகிதம் தம்மினிய தொண்டர்க்குச் காட்சிதந்து நீங்காமல் தம் திருவடிகளில் தங்கியிருக்கும் பெரும்பேற்றையும் மெய்ப்பொருளார்க்கு அளித்தார் என்பது மெய்ப்பொருள் நாயனார் வரலாறாகும்.

    ’பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே!’ என்ற மகாகவியின் வாக்கிற்குச் சான்றாகவும், வள்ளுவப் பெருந்தகையின்

    இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

    நன்னயம் செய்து விடல்.

    மற்றும்

    இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

    என்ன பயத்ததோ சால்பு. என்ற குறட்பாக்களுக்கும் இலக்கணமாய்த் திகழ்கின்றார் மெய்ப்பொருள் நாயனார் என்பது அவர் வரலாறு வாயிலாய்ப் புலனாகும் செய்திகளாகும்.

    சிவபரம்பொருளுக்குப் பெரிதும் உகந்த இச்சிவராத்திரித் திருநாளில் சித்தத்தைச் சிவன்பால் வைத்துப் பிறவாப் பெருநிலையை அடைந்த சிவநேசச் செல்வர்களைச் சிந்தித்துப் பயன்பெறுவோம்.

    திருச்சிற்றம்பலம்

    படத்திற்கு நன்றி: தினமலர்

    Share
  • வள்ளுவர் வரைந்த காதற் கவிதைகள்!

    மேகலா ராமமூர்த்தி

    (சென்ற ஆண்டு வெளியிட்ட கட்டுரையின் மறுபகிர்வு இது)

    தமிழ்மறையென்றும், உலகப் பொதுமறை என்றும் அனைவராலும் கொண்டாடப்படுவது திருக்குறள் ஆகும். இத்தகைய உயரிய வாழ்க்கை வழிகாட்டி நூலைப் பெற்ற தமிழர்களாகிய நாம் பேறுபெற்றோர் என்பதில் ஐயமில்லை. இந்நூல் பொய்யாமொழி, முப்பானூல், தெய்வநூல் என வேறுபல் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.

    அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற முப்பகுப்புக்களை உடைய இந்நூலின் முதலிரண்டு பகுப்புக்கள் அறியப்பட்ட அளவில் மூன்றாம் பகுப்பாகிய காமத்துப்பால் பாடல்கள் அறியப்படவில்லை என்றே தோன்றுகின்றது.

    அறத்துப்பாலிலும், பொருட்பாலிலும் சொல்லப்பட்டது போலவே அருமையான, இனிய, காதல் மற்றும் இல்லற வாழ்விற்குச் சுவைதரும் பல செய்திகள் காமத்துப்பாலிலும் சொல்லப்பட்டுள்ளன. காமத்துப்பாலில்தான் வள்ளுவப் பேராசானின் கற்பனைத் திறனும், காட்சிகளை நாடகப் பாங்கில் நம் கண்முன் நிறுத்தும் ஆற்றலும், ஏன்….அவரின் மெல்லிய நகைச்சுவை உணர்வும் சிறப்பாக வெளிப்படுகின்றன எனலாம். அவரை ஓர் சிறந்த கவிஞராகவும் அடையாளம் காட்டுவது காமத்துப்பாலே எனலாம். அத்தகைய சிறப்பு வாய்ந்த காமத்துப்பால் பாக்களில் சிலவற்றைக் குறித்துச் சிந்திப்பதும், காட்சிப்படுத்துவதுமே இக்கட்டுரையின் நோக்கம்.

    இனிப் பாடல்களுக்குச் செல்வோம்…

    தலைவன் ஒருவன் தலைவி ஒருத்தியைக் கண்டு காதல் கொள்கின்றான். அவளுக்கும் அவன்மீது அன்பு தோன்றுகின்றது. ஆயினும், பெண்மைக்கே உரிய நாணம் தடை போடுவதால் தலைவன் தன்னை நோக்கும் போது நிலத்தை நோக்குகின்றாள். அவன் தன்னைப் பார்க்காத தருணத்தில் அவனை நோக்கி மெல்லப் புன்னகைத்துக் கொள்கின்றாள்.

    இதனையே,
    “யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
    தான்நோக்கி மெல்ல நகும்.” என்கின்றார் வள்ளுவப் பேராசான்.

    இக்குறளைப் படித்தவுடனேயே நமக்கு ஓர் திரைப்படப் பாடல் நினைவுக்கு வருகின்றது. ஆம்…..”உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே, விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே” என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் தானே அவை?

    இதோ காதல் வயப்பட்ட தலைவனும், தலைவியும் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டிருக்கின்றனர். அங்கே வாய்ச்சொற்களுக்கு வேலையேயில்லாமல் போய்விடுகின்றது. (காதல் கடிதங்களும் தேவையற்றன ஆகிவிடுகின்றன). கண்கள் பேசாதவற்றையா வாயும், எழுத்துக்களும் பேசிவிடப் போகின்றன?

    ”கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
    என்ன பயனும் இல.” என்கின்றது வள்ளுவரின் அமுதமொழி.

    வெண்மதியையும், பெண்ணின் முகத்தையும் ஒப்புமைப்படுத்திப் பாடாத தமிழ்ப் புலவர்களோ, கவிஞர்களோ இல்லை என்றே கூறலாம். வள்ளுவரும் அதற்கு விதிவிலக்கல்ல.

    இரவு நேரத்தில் தன் காதலியைச் சந்திக்க வருகின்ற ஓர் தலைவன் (இரவுக்குறி என்று இஃது அகத்திணையில் குறிக்கப்படும்) வானத்தை அண்ணாந்து பார்க்கின்றான். அங்கே அழகான முழுநிலாக் காட்சியளிக்கின்றது. அந்நிலவோடு தன் காதலியின் முகத்தை ஒப்பிட்டுப் பார்க்கின்றான். உடனேயே ஒரு முடிவுக்கு வந்தவனாக நிலவைப் பார்த்து ”உன்னோடு என் காதலியின் எழில் முகத்தை ஒப்பிடுவதே தவறு. நீயோ களங்கம் உடையாய்! அதுமட்டுமன்று, தேய்கின்றாய்…வளர்கின்றாய். ஆனால், என் காதலியின் முகமோ களங்கம் சிறிதுமற்றது” என்று தன் காதலிக்குப் புகழ்மாலை சூட்டுகின்றான். சுவையான அத்திருக்குறள்…..

    ”அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
    மறுவுண்டோ மாதர் முகத்து.”

    அத்தோடு விட்டானா? நிலவே! நீ என் தலைவியின் முகத்தை ஒத்திருக்க விரும்பினாயானால் இப்படி நாணம் இல்லாமல் எல்லாரும் காணும்படி வானில் தோன்றாதே என்றுவேறு கூறுகின்றான்! புதுமையான வேண்டுகோள் இல்லையா?

    ”மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
    பலர்காணத் தோன்றல் மதி.” என்பது அக்குறட்பா.

    இப்போதெல்லாம் கணவனும், மனைவியும் தாங்கள் நல்ல நண்பர்கள் போலப் பழகுவதாகக் கூறிக்கொள்கின்றார்கள் அல்லவா? இதற்கு முதன்முதலில் அடித்தளம் போட்டுக் கொடுத்தவர் நம் வான்புகழ் வள்ளுவரே.

    தலைவன் ஒருவன், தனக்கும் தன் தலைவிக்குமுள்ள உறவைப் பற்றிக் “காதற் சிறப்புரைத்தல்” என்ற அதிகாரத்தில் பேசும்போது இவ்வாறு குறிப்பிடுகின்றான்….

    ”உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
    மடந்தையொடு எம்மிடை நட்பு.”
    மாந்தர்களே! இத்தலைவியொடு எனக்குள்ள நட்பு எப்படிப்பட்டது தெரியுமா? உடம்புக்கும், உயிருக்கும் உள்ள தொடர்பு எப்படிப்பட்டதோ அப்படிப்பட்டது என்கின்றான். இங்கே உறவு என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் நட்பு என்ற சொல்லை அவன் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. காதலுக்கு இதைவிட அருமையான விளக்கம் எதனையும் கொடுத்துவிட முடியாதென்றே தோன்றுகின்றது.

    அதே அதிகாரத்திலேயே தலைவனின் இருப்பிடத்தைப் பற்றித் தலைவி கூறும் மொழிகள் நமக்கு வியப்பை ஏற்படுத்துகின்றன. தலைவி சொல்கின்றாள்…..”என் காதலர் என் நெஞ்சத்திலேயே எப்போதும் குடியிருக்கின்றார். அதனால் நான் சூடான பொருள்களையே உண்பதில்லை. அவை அவரைச் சுட்டுவிடுமோ என அஞ்சுகின்றேன்” என்கின்றாள். கேட்பதற்குச் சற்று வேடிக்கையாகக்கூட இருக்கின்றது இல்லையா? அக்குறள் நம் பார்வைக்கு…

    ”நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
    அஞ்சுதும் வேபாக்கு அறிந்து.”

    இதே குறட்பாவைப் படியெடுத்தது (photocopy) போலக் கவிஞர் வைரமுத்துவின் பாடல் ஒன்று சமீபத்திய திரைப்படம் ஒன்றில் வந்தது. “ஹாட்பாக்சில் (hotbox) வைத்த ஃபுட் (food) உண்பதில்லை இனி வாழ்வில் எந்த நாளும், என் உள்ளமெங்கும் நீ நின்றிருக்க உனை உஷ்ணம் தாக்கக் கூடும்” என்கிறார் கவிஞர்.

    தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களுக்கும், கவிஞர்களுக்கும் வள்ளுவர் ஆசானாக இருந்து காதல் பாடல்கள் பல எழுதத் துணைபுரிந்து வருகின்றார் என்பதனையே திரைப்பாடல்கள் (அன்றும், இன்றும்) மெய்ப்பிக்கின்றன.

    அடுத்து, தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள காதல் ஊரிலுள்ளோர்க்குத் தெரிந்துவிடுகின்றது. அவர்கள் அலர் (காதலர்களைப் பொது இடத்தில் அவர்கள் காதுபடப் பழித்தல்) கூறத் தொடங்குகின்றனர். அதனைக் கண்ட தலைவி மிகவும் வேதனையுற்று “நான் என் காதலரைக் கண்டதென்னவோ ஒருநாள் தான், ஆனால் இந்த அலரோ திங்களைப் பாம்பு கொண்ட செய்தி (சந்திர கிரகணம்) போல் ஊரெங்கும் பரவிவிட்டதே” என வருந்துகின்றாள்.

    ”கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
    திங்களைப் பாம்புகொண் டற்று.”

    மற்றொரு சமயம் தலைவன் பொருள்தேடும் பொருட்டுத் தலைவியைப் பிரிய நேரிடுகின்றது. அவன் பிரிவை ஆற்றமுடியாமல் தலைவி அவன் சென்ற வழியையே பார்த்துச் சோர்ந்து கிடக்கின்றாள். அப்போது அவள் வேதனையை அதிமாக்கும் மாலைப்பொழுது வந்தது. இம்மாலைப் பொழுது இவ்வளவு துன்பம் தருவது என்று நான் தலைவனோடு ஒன்றாகச் சேர்ந்திருந்த காலத்தில் அறியவில்லையே எனப் புலம்புகின்றாள்.

    “மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
    காலை அறிந்தது இலேன்.”

    அம்மாலைப் பொழுதின் மயக்கத்திலே தலைவி ஓர் கனவு காண்கின்றாள். அக்கனவில் தன் தலைவனைக் கண்டு மகிழ்கின்றாள். கண்விழித்துப் பார்க்கின்றாள்; தான் தலைவனைக் கண்டது கனவில்தான் என்பதனை அறிந்து பெருத்த ஏமாற்றம் அடைகின்றாள். அடடா! நனவு என்ற ஒன்று மட்டும் இல்லாதிருப்பின் நான் கனவில் என் தலைவனைப் பிரியாமல் இருப்பேனே என்று எண்ணித் துயருறுகின்றாள்.

    “நனவென ஒன்றில்லை யாயின் கனவினால்
    காதலர் நீங்கலர் மன்” என்கின்றது வள்ளுவம்.

    தலைவனையே எதிர்பார்த்துக் காத்திருப்பதனால் தலைவியின் அழகமை தோள்கள் மெலிந்தன. உடலில் பசலை படர்ந்தது. (பசலை என்பது உடலில் ஏற்படும் ஓர் பசுமையான நிறமாற்றத்தைக் குறிப்பது, மற்றபடி பசலைக் கீரைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை). கை வளையல்கள் கழன்றன. அழுது அழுது கண்கள் ஒளியிழந்தன. தலைவன் சென்ற நாட்களைக் கோடிட்டுக் குறித்துக் கொண்டே வருவதனால் விரல்களும் தேய்ந்தன. இதனையே வள்ளுவப் பெருந்தகை,

    ”வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
    நாளொற்றித் தேய்ந்த விரல்.” என்கின்றார்.

    பிறகு அவள் தன்னைத்தானே தேற்றிக் கொள்கின்றாள், “என் இனிய நெஞ்சே, நீ தலைவனை உன்னிடத்தில்தானே வைத்திருக்கின்றாய், பின்பு ஏன் அவர் பிரிந்து சென்றுவிட்டார் என எண்ணி உடலை வருத்திக் கவின் இழந்து மெலிந்து வருகின்றாய்” என வினவிக்கொள்கின்றாள்.

    ”துன்னத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
    இன்னும் இழத்தும் கவின்.”

    சில காலத்திற்குப்பின், தலைவனும் தலைவியும் மறுபடியும் ஒன்றாய் இணைகின்றனர். அவர்கள் மகிழ்ச்சியாய்ப் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் தலைவனுக்குத் தும்மல் வருகின்றது. அவன் தும்முவதைக் கண்ட தலைவி, வாழ்க! என வாழ்த்துகின்றாள். உடனேயே, ’யார் உம்மை நினைத்தார்கள், ஏன் உமக்குத் தும்மல் வந்தது’ எனத் தலைவனைப் பல கேள்விகள் கேட்டு, அழுது அவனோடு ஊடல் கொள்கின்றாள். இன்றும் நம் கிராமங்களில் யாருக்காவது தும்மல் வந்தாலோ அல்லது புரையேறினாலோ அவ்வாறு செய்பவர்களை யாரோ நினைக்கின்றார்கள் என்று எண்ணும் வழக்கம் உள்ளது தானே?
    இவ்வழக்கம் வள்ளுவர் காலந்தொட்டு இருந்து வருகின்றது போலும்.

    “வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்
    யாருள்ளித் தும்மினீர் என்று.” என்கிறார் தெய்வப்புலவர்.

    தலைவனுக்கு மீண்டும் தும்மல் வருகின்றது. (பாவம், சளித்தொல்லையால் அவதியுறுகின்றான் போலிருக்கின்றது!!) தலைவி தன்னைச் சந்தேகிப்பாளே, கோபித்துக்கொள்வாளே என எண்ணித் தும்மலை அடக்க முற்படுகின்றான். அப்போதும் தலைவி அவனை விடவில்லை. உமக்கு வேண்டியவர்கள் உம்மை நினைப்பதை என்னிடமிருந்து மறைக்க முயல்கின்றீரோ? எனக் கேட்டு அழுகின்றாள்.

    ”தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
    எம்மை மறைத்திரோ என்று.” என அவர்களிடையே அரங்கேறும் ஊடல் நாடகத்தை நகைச்சுவை ததும்பப் பாடல் வடிவில் நம் கண்முன் நிறுத்துகின்றார் வள்ளுவர்.

    இவ்வாறு காமத்துப்பாலில் படித்து இன்புறத்தக்க குறட்பாக்கள் பல குவிந்து கிடக்கின்றன. சங்க இலக்கிய அகத்திணைப் பாடல்களின் சுருங்கிய வடிவாகவே (abridged version) காட்சியளிக்கின்றன இக்குறட்பாக்கள். களவு என்று சொல்லப்படுகின்ற காதல் வாழ்வையும், கற்பு என்று அறியப்படுகின்ற இல்லற வாழ்வையும் இருபத்தைந்து (25) அதிகாரங்களில் வான்புகழ் வள்ளுவர் சுவைபட நகர்த்திச் செல்லும் பாங்கு படித்து இன்புறத்தக்கது. காமத்துப்பால், கற்புநெறி பிறழா நல்லதோர் இல்லறத்திற்கு வழிகாட்டியாய்த் திகழ்கின்றது எனலாம்.

    அன்புடன்,
    மேகலா

    Share
  • காதல் கும்மி!

    மேகலா இராமமூர்த்தி

    Tamil-Daily-News-Paper_36939203740

     

    ஆதியும் அந்தமும் இல்லாத – அந்த

    ஆண்டவன் போலவே எந்நாளும்

    காதலும் காலத்தை வென்றதடி – வளைக்

    கைகொட்டிக் கும்மி கொட்டுங்கடி!

     

    தேசம் இதற்குக் கிடையாதடி – ஒரு

    பாஷையும் தேவை யில்லையடி!

    தோசமு மில்லாத் தூயதடி – உண்மை

    நேசத்தில் தோன்றி மலருமடி!

     

    கண்க ளெனும்வாசல் நுழைந்திடுமே – மனக்

    கோயிலில் என்றும் நிலைத்திடுமே!

    எண்ணிட இன்பம் தந்திடுமே – காதல்

    வாழ்வினில் வண்ணம் கூட்டிடுமே!

     

    ஆண்டியும் காதலில் ஆழ்ந்திடுவான் – அடி

    அரசனும் காதலில் வீழ்ந்திடுவான்!

    ஆண்டாண்டு காலமாய் நாம்தேடும் – நல்ல

    பொதுவுடை மைப்பொருள் காதலடி!

     

    சாதி ஒழிந்திடும் காதலிலே – மதச்

    சண்டை அழிந்திடும் காதலிலே!

    வீதியில் நின்று சொல்லுங்கடி – இந்தக்

    காதலுக் கீடு இல்லையென்றே!!

     

    படத்துக்கு நன்றி

     

    http://www.dinakaran.com/News_Detail.asp?nid=1833

    Share
  • கொய்த நன்மலர்கள் – நூல் மதிப்புரை

    மதிப்புரை: மேகலா இராமமூர்த்தி

    நூலின் பெயர்: கொய்த நன்மலர்கள்

    நூலாசிரியர்: முனைவர் இராம. இராமமூர்த்தி

    நூலின் தன்மை: இலக்கியக் கட்டுரைகள்

    பதிப்பகம்: முத்துப் பதிப்பகம்

    நெ.27, வில்லியம் லே-அவுட்

    இரண்டாவது தெரு, கே.கே. ரோடு

    விழுப்புரம் – 605 602.

    முதற் பதிப்பு: திசம்பர் 2010

    பக்கங்கள்: 160

    விலை: ரூ. 110

    Picture1

    ஆசிரியர் குறிப்பு: தமிழ் இலக்கண இலக்கியங்களில் பெரும்புலமையும், பயிற்சியுமுடைய இந்நூலாசிரியர் முனைவர் இராம. இராமமூர்த்தி அவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழாசிரியராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும் பல்லாண்டு காலம் பணியாற்றிய சான்றோராவார். தமிழில் வித்துவான், முதுகலை, முனைவர் என்று பல பட்டங்கள் பெற்ற இவர் ஆற்றிவரும் சீர்மிகு பணிகள் தமிழன்னைக்குப் பொலிவும், அணியும், அழகும் சேர்த்துவருகின்றன. ’வீரசோழியம்’ எனும் சிறந்த இலக்கண நூலை இயற்றிய புலவர் ’புத்தமித்திரனார்’ பிறந்த ’பொன்பற்றி’ எனும் வளங்கொழிக்கும் சிற்றூரில் பிறந்தவர் இந்நூலாசிரியர்.

    சிறந்த சொற்பொழிவாளர், கவிஞர், எழுத்தாளர் என்று பன்முகங்கள் கொண்ட இந்நூலாசிரியர் தமிழ்ப்பணியொன்றே தம்வாழ்க்கையின் இலக்கென வாழும் தகைசால் கொள்கையர்.

    ————————————————————————————————————————————————

    கொய்த நன்மலர்களாய் மணம் பரப்புபவை: இந்நூல் இருபத்துமூன்று (23) இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பாகும். ஓரிரு கட்டுரைகள் நீங்கலாக எஞ்சிய கட்டுரைகள் அனைத்துமே தமிழர்களின் பொற்காலம் என்று போற்றப்படும் சங்ககால நூல்களின் சிறப்பினைச் சுவைபடப் பேசுபவையே. இனி அவற்றை நோக்குவோம்.

    அறத்தொடு நிலையும் தமிழ் நாகரிகமும்’ என்ற தலைப்பிலானது முதற் கட்டுரை. குறிஞ்சித் திணையின் முக்கியக் கூறுகளில் ஒன்றான ’அறத்தொடு நிலை’ என்ன என்பது பற்றியும், அறத்தொடு நிற்பதற்குரிய மாந்தர் யார் என்பதனையும், அதற்கான சூழ்நிலையையும், அதன் பயனையும் சங்க இலக்கியத்தின் சுவை மிகுந்த பல்வேறு பாடல்கள் வாயிலாக அழகாக விளக்குகின்றது இக்கட்டுரை. நம் பண்டை மகளிர் களவு நெறி நின்று, கற்பு நெறி புகுந்து சிறக்க இவ்வறத்தொடு நிலை ஒரு பெரும் வாயிலாய் விளங்கியமையை இலக்கண இலக்கிய நூல்கள் நன்குணர்த்துகின்றன என்கிறார் ஆசிரியர். ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் நாகரிகத்தையும், அறத்தொடு நிலையின் தன்மையையும் உணர்த்தவேண்டியே குறிஞ்சி பாடுவதில் வல்லவராய்த் திகழ்ந்த கபிலர்பெருமான் ‘குறிஞ்சிப் பாட்டு’ என்ற நூலையே எழுதினார் என்ற அரிய செய்தியும் இக்கட்டுரையில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

    இறைச்சியில் பிறக்கும் இலக்கிய இன்பம்’ என்பது இரண்டாவது கட்டுரையாகும். அகத்திணைப் பாடல்களில் கருப்பொருளின் துணைகொண்டு அகப்பொருட் செய்திகளைக் குறிப்பால் சுட்டுவது இறைச்சி எனப்படும். இவ்விறைச்சிப் பொருள் பெரும்பாலும் இயற்கை வருணனைகளாக அமைவது வழக்கம். கருத்துச் செறிவு மிகுந்த இறைச்சியில் தோன்றும் பொருட்சிறப்பு, இறைச்சிப் பொருள் சுட்டப்பெறும் இடங்கள், இறைச்சியின் தன்மையை விளக்கும் தொல்காப்பிய நூற்பாக்கள் முதலியவை இக்கட்டுரையில் எழிலுற எடுத்தாளப்பட்டுள்ளன. இத்துணைச் சிறப்புமிகு இறைச்சிப் பொருளின்பத்தைச் சங்கப் பாடல்களேயன்றி வேறு பாடல்களில் காணவியலாது என்று கூறும் ஆசிரியர், அதற்காகவேனும் தமிழ்மக்கள் சங்கப்பாடல்களைக் கற்றின்புற வேண்டும் என்ற தன் உள்ளக்கிடக்கையையும் இங்கு வெளிப்படுத்தியுள்ளார்.

    குறள் காட்டும் குறிப்பு என்பது மூன்றாவது கட்டுரை. முப்பாலுள், காமத்துப்பாலே வள்ளுவரின் கவியுள்ளத்தைத் தெற்றென உலகுக்குப் புலப்படுத்துவது; திட்பமும் நுட்பமும் வாய்ந்தது. அதிலுள்ள ‘குறிப்பறிவுறுத்தல்’ என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள உடன்போக்குத் துறையைப் பற்றிப் பேசுகின்றது இக்கட்டுரை. உடன்போக்கு என்பது காதல் கொண்ட தலைவனும் தலைவியும் மணந்துகொள்ளும்பொருட்டுப் பிறரறியாமல் ஊரைவிட்டுச் செல்வதாகும். தலைவி உடன்போக்குக் குறிப்புணர்த்தும் பாங்கை நனி நாகரிகத்துடன்  குறிப்பறிவுறுத்தல் அதிகாரத்திலுள்ள ஓர் குறள் நமக்குக் காட்டுவதை இந்நூலாசிரியர் மிக அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். வாமன வடிவிலுள்ள குறளின் பொருளை விரித்தால் அஃது நெடுமாலின் நீள்நிலமளந்த தோற்றத்தை ஒக்கும் என்பர் தமிழ்ச்சான்றோர். அத்தகைய திருக்குறளின் சிறப்பை, பொருளாழத்தைத் தமிழர் அறிந்துகொள்ள இக்கட்டுரை பேருதவி செய்யும் என்பது தெளிவு.

    அடுத்து இடம்பெற்றுள்ள கட்டுரை, பத்துப்பாட்டில் அடிகள் குறைந்ததும், அழகு மிகுந்ததுமாகிய ‘முல்லைப்பாட்டு. முல்லை நிலத்துக்குரிய மாண்பும், இல்லிருந்து ஆற்றியிருத்தலாகிய அகவொழுக்கமும், தலைவனைப் பிரிந்த தலைவியின் பிரிவுத் துயரும், போர் மேற்சென்ற அரசன், தான்தங்கியிருக்கும் பாசறையின்கண் செய்கின்ற செயல்களும் இக்கட்டுரையில் விரிவாகப் பேசப்படுகின்றன. முல்லை நிலத்தைக் களமாகக் கொண்டு தீட்டப்பட்டுள்ள அற்புதமான சொல்லோவியமே புலவர் நப்பூதனாரின் முல்லைப்பாட்டு என்று கட்டுரையாசிரியர் உரைப்பது மிகவும் பொருத்தமே. முல்லை மலர் அளவிற்சிறியதாயினும் மணத்தில் சிறந்தது. அஃதொப்ப முல்லைப்பாட்டும் அளவிற்சிறிய நூலாயினும் சுவையில் சிறந்தது என்பதை ஆசிரியர் தெற்றெனப் புலப்படுத்தியுள்ளார்.

    ஐந்தாவதாக இடம்பெற்றுள்ள கட்டுரை குறிஞ்சிப்பாட்டு. செறுத்த செய்யுள் செய்செந்நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்’ என்று புலவர் பெருமக்களால் போற்றிப் பாராட்டப்படும் கபிலர் எழுதிய நூல் இது. குறிஞ்சிப்பாட்டு நுவலும் பொருளும், இறைச்சி மற்றும் உள்ளுறையுவமங்களும் இக்கட்டுரையில் அழகுற எடுத்துக்காட்டப்பெறுகின்றன. இந்நூலில் ’ஒண்செங்காந்தள் முதல் பரேரம் புழகு’ ஈறாகத் தொண்ணூற்றொன்பது (99) வகையான மலர்களின் பெயர்களையும் குறிஞ்சிக் கபிலர் பட்டியலிட்டு நம்மை வியப்பிலாழ்த்தும் பாங்கைப் பாராட்ட வார்த்தைகள் ஏது? தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வினர் என்பதற்குக் குறிஞ்சிப்பாட்டினும் விஞ்சிய சான்று வேண்டுமா என்பது தமிழர்களாகிய நாம் நம்மையே கேட்டுக்கொள்ளவேண்டிய வினாவாகும். குறிஞ்சிப்பாட்டின் சிறப்பைச் சுருங்கக்கூறி விளங்கவைத்துள்ள நூலாசிரியரும் நம் பாராட்டுக்குரியவரே!

    அடுத்த கட்டுரை பத்துப்பாட்டினுள் ஒன்றான ’நெடுநல்வாடை’ பற்றியது. இந்நூல் ’கோல நெடுநல்வாடை’ என்று புகழப்படுகின்றது. நக்கீரர் புனைந்த நன்னூல் இது. போர் மேற்சென்ற தலைவனைப் பிரிந்த தலைமகட்கு நெடு(நீண்ட) வாடையாகவும், போரில் வெற்றி பெற்றுப் பாசறையில் பெருமிதத்தோடு தங்கியிருக்கும் வேந்தனுக்கு நல்வாடையாகவும் அமைதலினால் இந்நூல் நெடுநல்வாடையாயிற்று. இவ்வினிய நூலில் கோப்பெருந்தேவி தங்கியுள்ள அரண்மனையின் அமைப்பு, அவள் படுத்திருக்கும் கட்டிலின் அழகிய வேலைப்பாடுகள் ஆகியவை பண்டைத் தமிழர்தம் கட்டடக்கலைநூல் அறிவைப் பெரிதும் புலப்படுத்துவதாய் அமைந்துள்ளது. இந்நூல் அகத்திணையைச் சார்ந்ததா? புறத்திணையைச் சார்ந்ததா? என்ற இலக்கிய விவாதம் இன்றுவரைத் தமிழறிஞர் பெருமக்களிடையே முற்றுப்பெறாமல் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்க ஓர் சுவையான செய்தியாகும். பண்டைத் தமிழ்மக்களின் பல்வேறு திறன்கள் குறித்து அறிந்துகொள்ள இக்கட்டுரைப் பேருதவி புரியும்.

    கடியலூர் உருத்திரங்கண்ணனார் எனும் பெரும்புலவர் திருமாவளவன் மீது பாடிய ’பட்டினப்பாலை’ எனும் நூல்பற்றிய செய்திகள் அடுத்த கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. இந்நூலை இயற்றியமைக்காக அவர் பெற்ற பரிசில் ’பதினாறு இலட்சம் பொற்காசுகள்’ என்ற செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. புகார் நகரச் சிறப்பும், வளமையும் இந்நூலில் நன்கு எடுத்தியம்பப்பட்டுள்ளது.  பரதவர், வணிகர், வேளாளர் போன்ற பல்வேறு மக்களின் பண்புநலன்களும், சிறப்பும் அழகாய்ப் பேசப்பட்டுள்ளது. மேலும், திருமாவளவன் என்ற பெயரான் அழைக்கப்படும் கரிகாற்சோழனின் போர்ச் சிறப்பும், அவனால் பகைவர் நாடு பாழாயினமையும் கவினுறக் காட்டப்பட்டுள்ளது. பட்டினம் என்று போற்றப்பட்டக் காவிரிப்பூம்பட்டினம் குறித்த செய்திகள் பாலைத் திணையை உரிப்பொருளாகக் கொண்டு கூறப்பட்டிருப்பதனாலேயே இந்நூலுக்குப் பட்டினப்பாலை என்ற பெயர் வந்தது என்று இந்நூலின் சிறப்பினைச் சுவைபடவும், நேர்த்தியாகவும் மொழிந்துள்ளார் கட்டுரையாசிரியர்.

    நெடுந்தொகை’ என்னும் பெயரால் அமைந்துள்ளது அடுத்த கட்டுரை. அகநானூற்றின் பிறிதொரு பெயரே நெடுந்தொகை என்பது. எட்டுத்தொகையிலுள்ள மற்ற நூல்களினும் அடிகளின் அளவால் (13-31 அடிகள்) இந்நூல் நெடியதாகலின் இதற்கு நெடுந்தொகை எனும் பெயர் வந்தது. இக்கட்டுரையில் அகநானூற்றுப் பாடல்களின் தனித்தன்மை, அதில் இடம்பெற்றுள்ள வரலாற்றுச் செய்திகள் ஆகியவை அலசப்பட்டுள்ளன. அகநானூற்றுப் பாடல்களின் எண்களே அப்பாடல்களின் திணையினைச் சுட்டும் பாங்கு ஈண்டுக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூலைக் களிற்றியானைநிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை என்று மூன்றாகப் பகுத்துள்ளனர் புலவர் பெருமக்கள். உள்ளுறையுவமம், இறைச்சி எனப் பாடலுக்கு அணி சேர்க்கும் அனைத்து அம்சங்களும் மிகுந்திருப்பது அகநானூற்றின் அழகை அதிகப்படுத்துகின்றது என்கிறார் கட்டுரையாசிரியர்.

    ஒன்பதாவது கட்டுரையாகச் சிவகாமி சரிதை இடம்பெற்றுள்ளது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் மிகச்சிறந்த படைப்பான ‘மனோன்மணீயம்’ என்ற நூலின் இடையில் வருவதே இச்சரிதை.  மனோன்மணீயம், லிட்டன் பிரபு எழுதிய, ‘The Secret Way’ என்ற நூலின் மொழிபெயர்ப்பானதுபோல, இச்சிவகாமி சரிதை ஆலிவர் கோல்ட்ஸ்மித் (Oliver Goldsmith) என்ற ஆங்கிலப் புலவர் யாத்த ‘The Vicar Of Wakefield’ என்ற நூலின் இடையில் இடம்பெற்றுள்ள ’Edwin and Angelina’ என்ற கதையின் தழுவலாகும். கதையின் தலைவி மனோன்மணியின் தோழியாக வரும் வாணி இக்கதைப் பாடலை, மனோன்மணியின் துயர்நீக்கப் பாடுவதாக இப்பகுதி அமைந்துள்ளது. இப்பாடலில் சித்தாந்த நுண்பொருளும் இலைமறைகாயாய் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்கள் அதிகம் அறிந்திராத இச்செய்திகளைத் தன் கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ள ஆசிரியரின் நுண்மாண் நுழைபுலம் போற்றுதலுக்குரியது.

    இக்கட்டுரையின் தொடர்ச்சியாகவே கருதும் வகையில் இடம்பெற்றுள்ளது ’மூலமும் மொழிபெயர்ப்பும்என்ற தலைப்பிலான பதினான்காவது கட்டுரை. இக்கட்டுரையில் மொழிபெயர்ப்புக் கலையின் சிறப்புக் குறித்துப் பேசப்பட்டுள்ளது. மூலநூல் ஆசிரியனினும் விஞ்சிய புலமைமிக்கோனே மொழிபெயர்ப்பு நூலைச் செம்மையாகச் செய்ய இயலும் எனும் உண்மையை ‘சிவகாமி சரிதை’ வாயிலாகவே நிறுவியுள்ளார் கட்டுரையாசிரியர். மனோன்மணீய ஆசிரியர் சுந்தரம் பிள்ளை போலவே இக்கட்டுரையாசிரியரும் தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த புலமை பெற்றவர் என்பதற்கு இக்கட்டுரைத் தக்கதோர் சான்றாய்த் திகழ்கின்றது.

    அடுத்து வருவது புலவர் போற்றிய வாழ்வியல் நெறிகள்என்ற தலைப்பிலான கட்டுரை. இதில், சங்கப் புலவர்கள் அழகுணர்ச்சி மிக்கவர்களென்பதும், காதலன்பும், பிறவுயிர்கள்மாட்டு இரக்கவுணர்வும் நிறைந்தவர்கள் என்பதும் தக்க சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. மன்னர்களேயாயினும் தவறு செய்தவிடத்து, ஒழுக்கம் தவறுகின்றவிடத்து அத்தவறுகளைச் சுட்டிக்காட்டி இடித்துரைக்கவல்ல அஞ்சாநெஞ்சர்கள் புலவர் பெருமக்கள் என்பது கடையெழு வள்ளல்களில் ஒருவனான பேகனின் இல்லறவாழ்வை மையப்படுத்திச் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. புலவர்களில் பலர் வறுமையுடையவர்களாய் இருந்தபோதிலும், பொருள்பெற்றுத் தம் வாழ்வை வளப்படுத்திக் கொள்வதையே வாழ்வின் குறிக்கோளாய்க் கொள்ளாமல் பிறரின் நல்வாழ்விலும் மிகுந்த அக்கறை செலுத்தியுள்ளனர் என்பதனை இக்கட்டுரை அங்கை நெல்லிக்கனியெனப் புலப்படுத்துகின்றது.

    பத்துப்பாட்டில் அகக் கோட்பாடுகள்என்பது கட்டுரைகளின் அழகிய அணிவகுப்பாய் விளங்கும் இந்நூலில் அடுத்து இடம்பெற்றுள்ள கட்டுரை. தொல்காப்பிய நெறியினின்றும் பிறழாமல், பண்டை நாளைப் புலவர்கள் அகத்திணைப் பாடல்களைப் புனைந்துள்ளனர் என்ற கருத்தினை இக்கட்டுரை தக்காங்கு நிறுவியுள்ளது. முதல், கரு, உரிப்பொருள்கள் பாடல்களில் அமைந்துள்ள இயல்பும், ஓர் அகப்பாடல் எவ்வாறு திணைக்குரியதாய் வகுக்கப்படுகின்றது என்ற கருத்தும் கட்டுரையில் நன்கு விளக்கப்பட்டுள்ளது. நெடுநல்வாடையின் திணையமைதி குறித்து விரிவாகவும், விளக்கமாகவும் ஆராயப்பட்டுள்ளது. பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ள பிற அகப்பாடல்களின் அமைப்பும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எனவே இக்கட்டுரை இலக்கியங்களை இலக்கணக் கண்களால் நோக்கி எடைபோட்டுள்ளது என்று கொள்வது சாலப் பொருந்தும்.

    மாட மதுரையில் ஓர் இரவு என்னும் கட்டுரை பன்னிரண்டாம் எண்ணுமுறையில் அமைந்துள்ளது. இஃது ஓங்கிய சிறப்பும், உயர்ந்த கேள்வியும் உடைய மாங்குடி மருதனார் எனும் புலவர் இயற்றிய பெருகு வளமதுரைக் காஞ்சியில் கூறப்பட்டுள்ள செய்திகளை விவரிக்கின்றது. மாட மதுரையில் ஞாயிறு மறைவது தொடங்கி, மீண்டும் அது குணதிசையில் தோன்றுவது வரையில், ஓரிரவில் நிகழும் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்கும் அற்புதச் சொல்லோவியமாம் மதுரைக் காஞ்சி, கற்பார் மனத்தைப் பெரிதும் கவரும் தன்மையுடையது எனில் மிகையில்லை. இரவின் நான்கு யாமங்களிலும் நிகழும் நிகழ்ச்சிகளைச் சுட்டுவதன் வாயிலாக, மதுரை மாநகரின் அமைப்பும், மன்னன் நெடுஞ்செழியனின் ஆட்சிச் சிறப்பும், வணிகப் பெருக்கும் விளங்கக் கூறப்பட்டுள்ளது. புலியைப் போன்ற வீரர்கள் இரவில் கண் துஞ்சாது காவல்தொழிலில் சிறிதும் பிழையேற்படாவண்ணம் மதுரையைக் காத்து நிற்கின்றனர் என்ற செய்தி நமக்கு வியப்பையும், அவ்வீரர்கள்பால் பெருமதிப்பையும் ஒருங்கே ஏற்படுத்துவதாய் உள்ளது. ஈராயிரம் ஆண்டுகளாகவே மதுரை உறங்கா நகராகத்தான் திகழ்ந்துவருகின்றது என்பதனை இக்கட்டுரையும் உறுதிசெய்கிறது.

    அடுத்த கட்டுரை ‘சிலம்பு கழீஇ விழா என்பதாகும். பண்டைய தமிழகத்தில் இளமகளிர் சிலம்பு அணிதல் பெருவழக்காக அமைந்திருந்தது. இம்மகளிர் திருமணம் செய்துகொள்ளும் காலத்தில் முன்னரணிந்திருந்த சிலம்புகளைக் களைந்துவிட்டுப் புதிய சிலம்புகளை அணிவர். இவ்வாறு சிலம்பணியும் நிகழ்ச்சிகளை விழாவாக எடுத்துள்ளனர். இவ்விழா, பொதுவாகத் தலைவியின் பிறந்தவீட்டில் நடைபெறும். உடன்போக்கு நிகழ்ந்து வரைதல்(திருமணம்) நிகழுமாயின் கணவன் வீட்டிலும் சிலம்பணி விழா நிகழ்தலுண்டு. பழைய சிலம்பினைக் கழற்றுதலையே ’சிலம்பு கழீஇ விழா’ என்பர். இச்செய்திகள், அகநானூறு, நற்றிணை, ஐங்குறுநூறு போன்ற இலக்கியங்களில் பேசப்பட்டுள்ளன. நம் சங்கத் தமிழர் போற்றிய பல்வேறு நிகழ்ச்சிகளை, விழாக்களை நமக்கு அறிமுகப்படுத்தி நம் நனிநாகரிகத்தை நாம் உணர்ந்துகொள்ள – அறிந்துகொள்ள இக்கட்டுரை ஓர் வாய்ப்பாய் அமைந்துள்ளது.

    களவியல் உரையில் உவமை நலம் என்பது அடுத்துவரும் கட்டுரை. இலக்கணவுலகில் இன்றும் வாழ்கின்ற நூல்கள் சிலவற்றுள் ’களவியல்’ என்று அழைக்கப்படும் ’இறையனார் அகப்பொருள்’ என்ற நூலும் ஒன்று. இந்நூல் இறைவனால் அருளப்பெற்றது என்றும், இந்நூற்கு நக்கீரர் உரைகண்டார் என்றும் கூறப்படுகின்றது. இவ்வுரை செம்மாந்த நடையுடையது. சிறந்த உவமைகள், மதிநுட்பம் வாய்ந்த தொடர்கள், தருக்க நடை போல்வன இவ்வுரையில் மிகுந்திருப்பது கற்பார்க்குக் கழிபேரின்பம் நல்குவதாய் உள்ளது. ’கொழுச்சென்ற வழித் துன்னூசி செல்லுமாறு போல’, ’வடகடலிட்ட ஒருதுளை ஒருநுகம், தென்கடலிட்ட ஒருகழி சென்று கோத்தாற் போல’ வேலேறுபடத் தேளேறு மாய்ந்தாற்போல’ போன்ற அருமையான உவமைகள் பலவற்றை அதன் பொருளோடும், பயன்பாட்டோடும் விளக்குகின்றது இக்கட்டுரை. நம் முன்னோர்களின் மொழிப் புலமையையும், கூர்த்த மதியையும் அறிந்துகொள்ள இக்களவியல் உரையிலுள்ள உவமைகள் உறுதுணை செய்யும்.

    அடுத்து இடம்பெற்றிருக்கும் இலக்கியக் கட்டுரை ‘கலித்தொகைக் கடவுள் வாழ்த்தும் சிவபெருமான் திருநடனமும் ஆகும். கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகையானது நூற்றைம்பது கலிப்பாக்களால் அமைந்தது. இதன் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் நல்லந்துவனார் எனும் சீர்மிகு புலவர்பெருந்தகையாவார். இக்கடவுள் வாழ்த்து ’ஆறறி யந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து’ எனத் தொடங்கி ’அமர்ந்தானையாடி’ என நிறைவு பெறுகின்றது. இச்செய்யுள் சிவபெருமான் ஆடிய கொடுகொட்டி, பாண்டரங்கம், காபாலம் ஆகிய கூத்துக்களையும், உமாதேவியார் உடனிருந்தருளிய பாணியும், தூக்கும், சீருமாகிய தாள அறுதிகளையும் கூறுகின்றது. சிவபெருமான் கங்கை நீரைக் கரந்து அடக்கியவன், திரிபுரம் எரித்தவன், நஞ்சுண்டு கறுத்த நீலமணி போலும் மிடற்றினையும், எட்டுக் கைகளையும் உடைய ’எண்தோளீசன்’ எனப் பெருமானின் அருட்செயல்களை விதந்தோதுகின்றது இக்கடவுள் வாழ்த்து. தமிழரின் இறையுணர்வும் கலையுணர்வும் கைகோத்துக் காட்சியளிக்கின்றது இக்கட்டுரையில்.

    விலங்கும் வேண்டாக் கைம்மை வாழ்க்கைஎனும் கட்டுரைச் சங்க இலக்கியக் கட்டுரைகளின் வரிசையில் இறுதியாக இடம்பெற்றிருக்கின்றது. உலகில் தோன்றிய உயிரினங்களில் மிகப்பல இணையாகத் துணையோடு வாழவே விரும்புகின்றன. புள்ளினங்களில் சில, தம் துணையைப் பிரிய நேரிட்டால் உடனுயிர் துறக்குமென இலக்கியங்கள் கூறுகின்றன. இத்தகைய அரிய விலங்கினக் காதலை – கைம்மை வேண்டாது உடனுயிர் நீக்கும் பேரன்பினை எட்டுத்தொகையுள் ஒன்றான நல்ல குறுந்தொகை நயனுற நவில்கின்றது. தன் காதல் தலைவனான ஆண்குரங்கு இறந்துபட்டதால் பெண்குரங்கு தன் குட்டியைச் சுற்றத்தாரிடம் சேர்ப்பித்துவிட்டுக் கைம்மை வாழ்வை விரும்பாமல் உயிர்நீக்கும் எனும் செய்தியைக் குறுந்தொகைப் பாடலொன்றில் அதன் ஆசிரியரான கடுந்தோட் கரவீரனார் கூறி நம்மை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் மூழ்கவைக்கிறார். அதன்வாயிலாய் அவர் (மனிதர்களுக்கு) உணர்த்தும் உள்ளுறை என்ன என்பதைக் கட்டுரையாசிரியர் மிகச் சிறப்பாக இக்கட்டுரையில் விளக்கியுள்ளார்.

    அடுத்து, சங்க இலக்கியம்சாராக் கட்டுரைகள் சிலவும் கொய்த நன்மலர்களாய் மணம் பரப்புகின்றன. அவற்றையும் சுருங்கக் காண்போம்.

    மாணவர் போற்றிய ஆசான் என்ற கட்டுரை ’தமிழ்த்தாத்தா’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் உ.வே.சாமிநாதைய்யர் அவர்களுக்கும் அவருடைய தலைசிறந்த மாணாக்கருள் ஒருவராய்த் திகழ்ந்த கி.வா. ஜகந்நாதன் அவர்களுக்கும் இருந்த குரு-சிஷ்ய பக்தியை நன்கு புலப்படுத்துகின்றது. கி.வா.ஜ அவர்கள் உ.வே.சாவிடம் குருகுல முறையில் கல்வி பயின்றவர். 1927-ஆம் ஆண்டு முதல் தம் குருநாதரின் இறுதிநாட்கள் வரையில் உடனிருந்தவர். பல்வேறு பணிகளிலும் துணைநின்றவர். நாடு போற்றும் நல்ல சொற்பொழிவாளராய்த் திகழ்ந்த கி.வா.ஜ அவர்கள் தம் ஆசானைப் போற்றித் ’தமிழ்த்தாத்தா’ என்ற நூலைச் செய்துள்ளார். அதில் தமிழ்த்தாத்தாவின் தன்னிகரில்லாப் பண்புநலன்கள் பலவற்றைப் பட்டியலிட்டுத் தம் குருவிடத்துத் தாம்கொண்ட அளவிறந்த காதலையும், அன்பையும் புலப்படுத்தியுள்ளார் என்பது இக்கட்டுரை நமக்கு அறியத்தரும் அற்புதத் தகவலாகும்.

    அம்மையார் பாடல்களும் யாப்பமைதியும் என்ற கட்டுரையும் அதனோடு நெருங்கிய தொடர்புடைய அம்மையார் பாடல்களில் ஆடவல்லானின் திருநடனக் காட்சிகள்என்ற மற்றொரு கட்டுரையும், காரைக்காலில் பிறந்து மூத்த நாயன்மார்களுள் ஒருவராய்ப் புகழ்பெற்ற காரைக்காலம்மையார் என்று அழைக்கப்படும் புனிதவதியாரின் பனுவல்களான திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி ஆகியவற்றில் பயின்றுவந்துள்ள யாப்பின் வகைகளை விரிவாய் ஆராய்கின்றன. அம்மையார் பயன்படுத்தியுள்ள யாப்பு வகைகளாகக் கட்டுரையாசிரியர் சுட்டுவன பதிகம், கட்டளைக் கலித்துறை, வெண்பா முதலியன. அதுபோலவே அம்மையாரின் பனுவல்கள் அனைத்தும் சிவனார் ஆடிய பல்வேறு வகையான தாண்டவங்களையும், ஆடல்களையும் தவறாது சுட்டுகின்றன என்ற தகவலையும் நமக்குத் தருகின்றார் ஆசிரியர். அம்மையார் பாடல்களை ஆழமாக ஆராய்ந்துள்ளார் நூலாசிரியர் என்பதையே இக்கட்டுரை உறுதி செய்கின்றது.

    இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பிறிதோர் கட்டுரை ‘அருட்பிரகாசரின் அன்பு நெறி எனும் தலைப்பிலானது. இஃது வள்ளலார் வகுத்த நெறிகளையும், வாழ்க்கைமுறைகளையும் பாங்குற விளக்கிச் செல்கின்றது. வள்ளலாரின் முக்கியக் கோட்பாடுகளான சீவகாருண்ய ஒழுக்கம், புலால் மறுத்தல், பலியிடுதலைத் தவிர்த்தல், உண்மை அன்பால் இறைவனைக் காணுதல் முதலியன, அவர் மக்களுக்கு வலியுறுத்தும் நெறி அன்பு நெறியே என்பதனைத் தெள்ளத்தெளிவாக விளக்குவதாக இந்நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். ’ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்புசெய்தல் வேண்டும்’ என்று வள்ளலார் இறைவனிடம் வேண்டுவதும் ‘அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே’ என்று இறைவனை அவர் விளிப்பதும் அருட்பிரகாசருள் ஆழப்பதிந்திருப்பது அன்பு நெறியே என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றது என்று ஆசிரியர் நிறுவுவது மிகவும் ஏற்புடைத்தே.

    இக்கட்டுரைத் தொகுப்பில் இறுதியாக நாம் காணவிருப்பது பாரதியின் சீட்டுக்கவி எனும் கட்டுரை. மாந்தன் தோன்றிய காலந்தொட்டே தன் எண்ணங்களை மற்றவரோடு பகிர்ந்துகொள்ள விழைந்தான். அதன் வெளிப்பாடே பல்வேறு ஒலிக்குறிகள், சைகைகள் போல்வன. நீண்ட காலத்திற்குப்பின் நாகரிக வளர்ச்சியின் ஒரு கூறாகக் கடித இலக்கியங்கள் தோன்றின எனலாம். முறையான திருமுகப் பாசுரமாக – வேண்டுகோள் மடலாகக் காணப்பெறுவது பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ள திருமுகப்பாசுரப் பாடலாகும். இது மதுரை சொக்கநாதப் பெருமான் பாணபத்திரருக்கு உதவி புரியவேண்டிச் சேரமான் பெருமாள் நாயனாருக்கு எழுதியதாகச் சுட்டப்படுகின்றது. இத்திருமுகச் செய்யுள்கள் பின்னாளில் ‘சீட்டுக் கவிகள்’ என்ற புதுப்பெயரைச் சூட்டிக்கொண்டன. அவ்வகையில் மகாகவி பாரதியார் எட்டையபுர சமஸ்தான மன்னனைப் புகழ்ந்து எழுதிய ’சீட்டுக் கவியும் ஓலைத் தூக்கும்’ எனும் தலைப்பில் அமைந்த கவிதைகளை நயம்பட ஆராய்ந்துள்ளது இக்கட்டுரை. யாருக்கும் தலைவணங்காத பாரதி ஓர் குறுநில மன்னனைப் புகழ்ந்து பாடியிருப்பது அவன் வறுமை காரணமாக நிகழ்ந்த ஒன்றே என்ற தன்திடமான நம்பிக்கையை இக்கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.

    இவ்வாறு இலக்கிய மணமும், சுவையும் நிறைந்த பல்வேறு கட்டுரைகளைக் ’கொய்த நன் மலர்களாய்’ நம் கைகளில் நூல்வடிவில் தவழச் செய்துள்ளார் பெரும்புலவர், முனைவர். இராம. இராமமூர்த்தி அவர்கள். இம்மலர்களின் அற்புத மணத்தை அறிந்துகொள்ள – தெரிந்துகொள்ளத் தமிழ்கூறு நல்லுலகம் இந்நூலை அவசியம் வாங்கிப் படிக்கவேண்டும். அதுமட்டுமல்ல…வருங்காலச் சந்ததியினருக்கு நம் நனிநாகரிகத்தை, பண்பாட்டை உணர்த்துதற்கு இந்நூலைப் பொன்னேபோல் போற்றிப் பாதுக்காத்திடவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

    Share
  • சிலம்பு காட்டும் கோவலனின் மறுபக்கம் – 3

    மேகலா இராமமூர்த்தி

    இல்லோர் செம்மல்

    பொதுவாக மனமிருப்போரிடம் பணமிருப்பதில்லை; பணமிருப்போரிடம் மனமிருப்பதில்லை என்று கூறுவர்; அதனைப் பொய்யாக்கிவிடுகின்றது கோவலனிடம் காணப்படுகின்ற அருளுள்ளம்! பணமும், குணமும் நிறைந்த பண்பாளனாகவே சிலப்பதிகாரத்தில் அவன் அடையாளப்படுத்தப்படுகின்றான்.

    புகார் நகரில் நடைபெற்ற மற்றுமோர் நிகழ்வு கோவலனின் பத்தரை மாற்றுப் பொன் மனத்தைப் பளிச்செனக் காட்டுவதாய் அமைந்துள்ளது; அதனையும் காண்போமா?

    புகார் நகரத்தில் வாழ்ந்துவந்த கற்பிற் சிறந்த பெண்ணொருத்தி அவப்பெயர் எய்துவதற்கு ஏதுவாக, அறிவற்ற கீழ்மகன் ஒருவன் அப்பெண்ணின் ஒழுக்கத்தைப் பற்றி அவள் கணவனிடம் பொய்ப்பழி கூறுகின்றான். அதுகண்டு, புகார் நகரின்கண் தீயோரை அழிப்பதற்காகவே வாழ்ந்து வந்ததாகக் கூறப்படும் பெரிய பூதமானது அக்கீழ்மகனைத் தன் கையிலுள்ள பாசக்கயிற்றால் கட்டியது. அவன் அச்சம் கொண்டு அரற்றினான்; அழுதான்; ஒன்றும் பயனில்லை. அவனுடைய தாய் தன் மகன் பூதத்திடம் மாட்டிக்கொண்டு உயிர்விடப் போகிறானே என்று அஞ்சிக் கண்ணீர் பெருக்கினாள். அப்போதும் பூதம் அக்கொடியோனை விடவில்லை.

    இந்நிகழ்வினை அறிந்த கோவலன் அவ்விடத்திற்கு விரைந்து வருகின்றான். பூதத்தின் கையிலிருந்த பாசக்கயிற்றினையும், அதில் மாட்டிக் கொண்டு உயிர்விடும் தறுவாயில் இருந்த மனிதனையும் காண்கின்றான்; உள்ளம் உருகுகின்றான். சற்றும் தாமதியாது அப்பூதத்தின் கையில் இருந்த பாசக்கயிற்றில் தன்னை வலியச் சென்று மாட்டிக்கொண்டு, ’தீயோரை அழிக்கும் நல்ல பூதமே! என்னுயிரை எடுத்துக்கொள்! இம்மனிதனை உயிரோடு விட்டுவிடு!’ என்று மன்றாடுகின்றான். பிறர் துன்பம் கண்டு பொறாத எத்தகைய உயர்ந்த உள்ளம் கோவலனுடையது!!

    ஆயினும் தன் கொள்கையில் சிறிதும் தளராத அப்பூதமோ, ’கோவலா! நீ கேட்டுக்கொண்டபடி என்னால் செய்ய இயலாது; தீயவன் ஒருவன் செய்த தவற்றுக்காக நல்லவன் ஒருவனுடைய உயிரை நான் எடுத்துக்கொள்வேனானால் எனக்கு நற்கதி கிடைக்காது(!). ஆகவே அத்தகைய தவற்றினை நான் செய்வதற்கில்லை என்று கூறிவிட்டுக் கோவலன் கண்ணெதிரிலேயே அக்கீழ்மகனைப் புடைத்து உண்டது. கோவலன் பூதத்திடம் வைத்த வேண்டுகோளையும் அதனை மறுத்து அப்பூதம் கோவலனிடம் கூறிய மறுமொழியையும் நாமும் சற்றுச் செவிமடுப்போமா?

    ”………………………………………………………………………………………………………………..

    கட்டிய பாசத்துக் கடிதுசென் றெய்தி

    என்னுயிர் கொண்டீங் கிவனுயிர் தாவென
    நன்னெடும் பூதம் நல்கா தாகி
    நரக னுயிர்க்கு நல்லுயிர் கொண்டு
    பரகதி யிழக்கும் பண்பீங் கில்லை
    ஒழிகநின் கருத்தென உயிர்முன் புடைப்ப….” (அடைக்கலக் காதை: 81-86)

     Picture1

    சிறிதுநேரம் செய்வதறியாது திகைத்துநின்ற கோவலன் தன் மனத்தைத் தேற்றிக் கொண்டு, அங்கே அழுதவண்ணம் நின்றுகொண்டிருந்த, பூதத்தால் கொல்லப்பட்ட அம்மனிதனின் தாயை அழைத்துக்கொண்டு அவள் இல்லம் செல்கின்றான். மகனை இழந்த தாய்க்குத் தானே மகனாகி அத்தாயையும், அவளுடைய இதர சுற்றத்தினரையும் பசிப்பிணியிலிருந்து விடுவித்து, அவர்கள் சிறப்பாக வாழும் வகையில் செல்வத்தையும் ஏராளமாக வாரி வழங்கி வறியோரின் தலைவனாக – ’இல்லோர் செம்மலாக’த் திகழ்ந்து பலகாலம் அவர்களைக் காத்து நிற்கின்றான்.

    அழிதரு முள்ளத்து அவளொடும் போந்தவன்
    சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைகட்கும்
    பற்றிய கிளைஞரின் பசிப்பிணி யறுத்துப்
    பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்” (அடைக்கலக் காதை: 87-90) என்கிறார் அடிகள்.

    இவ்வாறு, தன் நண்பன் கோவலனின் அற்புதக் குணங்களை ஒவ்வொன்றாகப் பட்டியலிடும் மாடலன் தொடர்ந்து, ‘அறிவில் முதிர்ந்தவனே! நானறிந்த வகையில் இப்பிறவியில் நீ செய்தவையெல்லாம் நற்செயல்களேயன்றி வேறொன்றுமில்லையே!! அவ்வாறிருக்கத் திருமகளை ஒத்த மாணிக்கத் தளிரான கண்ணகியுடன் நீ தனியே மதுரை நோக்கிப் புறப்பட்டது முற்பிறவியில் செய்த தீவினைப் பயனோ? என்று வருந்திப் புலம்புகின்றான்.

    இதோ அவ்வரிகள்…

    இம்மைச் செய்தன யானறி நல்வினை
    உம்மைப் பயன்கொல் ஒருதனி யுழந்தித்
    திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது
    விருத்தகோ பால நீயென வினவ….” (அடைக்கலக் காதை: 91-94)

    அடைக்கலக் காதையில் மாடலனால் வியந்து பேசப்படும் கோவலனின் நற்பண்புகள், உயர்ந்த கொள்கைகள், எளியோர்மீது அவன் காட்டும் அளவிறந்த கருணை ஆகியவை கோவலன் மீதான நம் மதிப்பீட்டையே முழுவதும் மாற்றிவிடுவதாக அமைந்துவிடுகின்றது அல்லவா!

    கோவலனின் இனிய குணங்களை எடுத்தியம்ப இளங்கோவடிகள் பயன்படுத்தியுள்ள ‘கருணை மறவன்’, ’செல்லாச் செல்வன்’, ’இல்லோர் செம்மல்’ போன்ற அற்புதமான சொல்லாட்சிகள் அடிகளின் தமிழ்ப் புலமையை உள்ளங்கை நெல்லிக்கனியெனத் தெளிவாய்ப் புலப்படுத்தி நம்மை மகிழ்விக்கின்றன.

    முடிவாக, சிலப்பதிகாரக் காப்பியத்தின் தலைவனான கோவலனின் குணங்கள், குறைகள் இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்தால் குறைகளினும் அவனுடைய நற்குணங்களே விஞ்சி நிற்கின்றன என்பது மேற்கூறிய நிகழ்வுகள் வாயிலாகப் பெறப்படுகின்றது. அருளாட்சி செய்கின்ற அக்கோமகனின் மறுபக்கம் நம் நெஞ்சில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி அதுகாறும் அவன் செய்திருந்த தவறுகளையும் மறக்கச் செய்து தொழத்தக்க ஒருவனாகவே அவனை எண்ணச்செய்துவிடுகின்றது.

    காப்பியக் கதையோட்டத்தின் சுவைகெடா வண்ணம் விறுவிறுப்பாக ஒவ்வொரு காட்சியையும் மிகச் சாதுரியமாகச் செதுக்கியிருக்கும் ’கவிச்சிற்பி’ இளங்கோ, கோவலனின் கருணையுள்ளத்தை, வள்ளல் குணத்தைச் சரியான தருணத்தில் வெளிப்படுத்தி உண்மையான காவியத் தலைவனாக அவனை உயர்த்திக்காட்டியுள்ள பாங்கு மிகுந்த பாராட்டுக்குரியதுதான் இல்லையா?

    கருணை மறவனையும், காப்பிய ஆசிரியரையும் வாழ்த்தி விடைபெறுவோம்!!

    (முற்றும்)

    Share
  • பாரதிப் புலவனைப் போற்றுவோம்!

    மேகலா இராமமூர்த்தி

    Subramanya_Bharathi

    அடிமை யிருளது அகன்றிட

    அக்கினிக் குஞ்சென வந்தவன்!

    மடமை எனும்களை அழித்திட

    அறிவுக் கோடரி யானவன்!

     

    சுதந்திர தேவிதன் துயிலெழப்

    பள்ளி யெழுச்சியைப் பாடினான்!

    மதத்தின் பெயரினால் சண்டைகள்

    செய்பவர் தம்மையே சாடினான்!

     

    கண்ணனைக் காதலி ஆக்கியே

    கண்டு மகிழ்ந்திட்ட கோமகன்!

    எண்ணத்தில் உறைந்தவள் சக்தியே

    என்று உரைத்தநல் பாமகன்!

     

    ஆணும் பெண்ணுமே நிகரென

    வீர முழக்கத்தை எழுப்பினான்!

    நாணும் அச்சமும் நாய்கட்கே

    நங்கையர்க் கெதற்கென வினவினான்!

     

    பைந்தமிழ்த் தேர்ப்பாகன் ஆகியே

    பா ரதம் ஓட்டிய பாவலன்!

    நைந்திடும் உள்ளங்கள் ஒளிபெற

    பாரதம் கண்டமா கவியிவன்!

     

    Share
  • சிலம்பு காட்டும் கோவலனின் மறுபக்கம் – 2

    மேகலா இராமமூர்த்தி

    செல்லாச் செல்வன் 

    கருணை மறவனாக விளங்கி அந்தண முதியவர் ஒருவரை மதயானையிடமிருந்து காத்த கோவலன், இன்னொரு சந்தர்ப்பத்தில் ஓர் பார்ப்பனப் பெண்ணுக்கு நேர்ந்த மிகப் பெரிய கொலைப் பாவத்திலிருந்து அவளைக் காத்து, அவளிடம் கோபித்துச் சென்ற  கணவனை அவளோடு சேர்த்துவைத்த பெருந்தகையாளனாகத் திகழ்கின்றான். சுவையான அந்த வரலாற்றை இனிக் காண்போம்.

    புகார் நகரில் வசித்துவந்த ஓர் பார்ப்பனத் தம்பதிக்கு நீண்ட நாட்களாகக் குழந்தைப் பேறின்மையால் அவர்கள் (தம்மை அண்டி வந்த) ஓர் கீரிப்பிள்ளையைத் தம் பிள்ளையாகவே எண்ணி வளர்த்துவந்தனர். அந்தக் கீரி வந்த நல்ல நேரமோ என்னவோ..அவர்களின் பிள்ளையில்லாக் குறைக்கும் ஓர் விடிவு ஏற்பட்டது. அந்தப் பெண் அழகான ஆண் மகவு ஒன்றைப் பெற்றெடுத்தாள். அந்தக் கீரியும் அக் குழந்தையிடம் மிகுந்த அன்போடு பழகி வந்தது.

    Picture1

    ஒரு நாள் தண்ணீர் எடுப்பதற்காகக் குடத்தோடு வெளியே சென்றாள் அந்தப் பெண். தண்ணீர் எடுத்துக்கொண்டு திரும்பி வரும் வழியில் அவள் கண்ட காட்சி அவளைத் துணுக்குற வைத்தது. அவள் அன்போடு வளர்த்துவந்த அந்தக் கீரிப்பிள்ளை தன் வாயில் இரத்தம் வழிய அவளை நோக்கி வந்துகொண்டிருந்தது. அதனைக் கண்டவுடன் மிகவும் பதற்றமடைந்த பார்ப்பனி, சற்றும் சிந்தியாமல், என்ன நடந்தது என்பதனை நேரில் கண்டு தெரிந்துகொள்ளாமல் தன் குழந்தையைத்தான் அந்தக் கீரிப்பிள்ளைக் கொன்றுவிட்டு வாயில் இரத்தத்தோடு வந்துகொண்டிருக்கிறது என்று அவசரப்பட்டு முடிவுகட்டித் தன் கையில் இருந்த குடத்தால் அந்தக் கீரியைக் கொன்றுவிட்டு  அழுதவண்ணமே வீட்டை நோக்கி விரைந்து வந்தாள்.

    ஆனால் அங்கே அவள் கண்ட காட்சியோ அவளை வெட்கித் தலைகுனிய வைப்பதாகவும், மிகுந்த மனவேதனையில் ஆழ்த்துவதாகவும் இருந்தது. ஆம்..அங்கே அவளுடைய அருமைக் குழந்தை யாதொரு அபாயமும் இல்லாமல் தொட்டிலிலே தூங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அத்தொட்டிலின் கீழே ஓர் பாம்பு இறந்து கிடந்தது. அங்கே நடந்தது என்ன என்று இப்போது அவளுக்கு நன்றாகவே விளங்கிவிட்டது. ”தான் தண்ணீர் எடுக்கச் சென்றிருந்த வேளையில் ஒரு பாம்பு தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தீண்ட வந்திருக்கிறது, அதைக் கண்ட கீரிப்பிள்ளை அப்பாம்பினைக் கொன்றுக் குழந்தையைக் காத்திருக்கின்றது. அடடா! எப்பேர்ப்பட்ட மகத்தான செயலைச் செய்திருக்கின்றது அன்பே உருவான அந்தக் கீரிப்பிள்ளை! தன் குழந்தைக்கு மறுவாழ்வு அல்லவா கொடுத்திருக்கின்றது! இதனை அறியாமல் பூசிக்க வேண்டிய அந்தக் கீரியை ஈவு இரக்கமில்லாமல் கொன்றுவிட்டல்லவா வந்திருக்கிறோம்!” என்று எண்ணி அவள் வருத்தம் மேலிட இருந்த வேளையில் வெளியில் சென்றிருந்த அவளுடைய கணவன் வீட்டிற்குத் திரும்பி வந்தான்.

    மனைவியின் முகவாட்டத்தைக் கண்டவன் அதன் காரணம் என்ன என்று வினவ, பார்ப்பனி நடந்தவற்றைக் கண்ணீரோடு அவனிடம் விவரிக்கின்றாள். அது கேட்டு வெகுண்டெழுந்த பார்ப்பனன், ”மிகப்பெரும் கொலைப் பாதகத்தைச் செய்த உன்னோடு இனி என்னால் வாழ இயலாது. உன் கையால் சமைத்த உணவை நான் இனி உண்ணவும் மாட்டேன்!” என்று கடுங்கோபத்தோடு கூறிவிட்டு வடமொழி வாசகம்1 எழுதிய ஏடு ஒன்றை அவள் கையில் திணித்துவிட்டு, ”இதன் பொருள் உணர்வாரிடம் இதனைக் கொடு” என்று சொல்லிவிட்டு வடதிசை நோக்கிப் புறப்பட்டுவிட்டான். (அப்பார்ப்பனி வடமொழி அறியாதவள் என்பது இதன் மூலம் தெரியவருகின்றது.)

    என்ன செய்வது என்று புரியாது திகைத்த அப்பெண், தன்னை மன்னிக்கும்படிக் கணவனிடம் கெஞ்சியபடியே அவன்பின்னே தொடர்ந்து செல்கின்றாள். ஆனால், அவள் கணவனோ அவள் செய்த பாவத்தை மன்னிக்க விரும்பாதவனாய் அவளைத் திரும்பியும் பாராமல் தனியே விட்டுவிட்டுக் கங்கைக்கு நீராடச் சென்றுவிடுகின்றான்.

    இவ்வாறு, கீரிப்பிள்ளை இறந்ததனால் கணவனுக்கும் மனைவிக்குமிடையே பிரிவு ஏற்பட்டுவிடுகின்றது. இச்சம்பவத்தை இளங்கோவடிகள் பின்வரும் அடிகளில் காட்சிப்படுத்துகின்றார்.

    பிள்ளை நகுலம் பெரும்பிறிது ஆக
    எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல
    வடதிசைப் பெயரும் மாமறை யாளன்
    கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை
    வடமொழி வாசகம் செய்தநல் ஏடு
    கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்கென” (அடைக்கலக் காதை: 54-59)

    இப்பாடலில் பிள்ளை நகுலம்’ என்ற அழகான சொற்றொடர் கீரிப்பிள்ளையைக் குறிக்கின்றது.

    பின்பு அப்பார்ப்பனி அவ்வாசக ஏட்டைக் கையில் ஏந்தியவளாய் கடைவீதிகளிலும், வணிகர் வாழும் தெருக்களிலும் கண்ணீரோடு சுற்றித் திரிந்து ”இந்த வடமொழி வாசகத்தை யாரேனும் படித்துச் சொல்லுங்கள்; என் பாவத்தினைப் போக்கிப் புண்ணியப் பயனை அடையுங்கள்!” என்று கண்ணில்படுவோரிடமெல்லாம் இரந்து கேட்கின்றாள். ஆனால் அங்கே ஒருவருக்கும் அவள் கையில் உள்ள ஏட்டில் என்ன எழுதியிருக்கின்றது என்பதனை விளங்கிக்கொள்ள இயலவில்லை. இவ்வாறு அப்பார்ப்பனி துயருற்றுத் திரிவதை ஒருநாள் கோவலன் காண்கின்றான். அவளை அருகில் அழைத்து, “அம்மா! உனக்கு என்ன துன்பம் நேர்ந்தது? ஏன் இவ்வாறு வருத்தத்தோடு போவோர் வருவோரிடமெல்லாம் ஏதோ கேட்டுக்கொண்டிருக்கிறாய்? கையில் வைத்திருக்கும் இந்த ஏடு யாது?” என இரக்கத்தோடு வினவுகின்றான்.

    அப்பெண் தன் நிலையைக் கோவலனிடம் மிகுந்த வருத்தத்தோடு விளக்கி, ”இந்த ஏட்டில் குறிப்பிட்டுள்ளதன் பொருளறிந்து என் துயரத்தையும், பாவத்தையும் போக்குங்கள்!” என்று கோவலனிடம் மன்றாடுகின்றாள். அதுகேட்டு அவள்பால் மிகுந்த பரிவு கொண்ட கோவலன், “கவலைப்படாதே அம்மா! தாளாமாட்டாத உன் துயரத்தை நான் போக்குகிறேன்” எனக்கூறி, அந்தணர்களின் வேதநூலில் கூறியுள்ளபடி அந்தப் பார்ப்பனியின் கொலைப் பாவம் நீங்குமாறு தானங்கள் பல செய்கின்றான். அத்தோடு நில்லாமல் அவளைப் பிரிந்து வடக்கே சென்ற அவள் கணவனையும் தேடிக் கண்டுபிடித்து அழைத்துவந்து அவளோடு சேர்த்து வைக்கிறான்.

    இவ்வாறு அவர்களை நன்னெறிப்படுத்தியதோடு, அவர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய செல்வங்களையும் வரையாது வழங்கிய செல்வந்தனாகக் கோவலன் விளங்குகின்றான். ’அப்பார்ப்பனியின் துயரத்தைக் கோவலன் போக்கினான்’ என்று இளங்கோ குறிப்பிடுவதால் அவ்வேட்டில் எழுதப்பட்டிருந்த வடமொழி வாசகத்தை அவன் படித்து அதன் பொருளை உணர்ந்தே அதில் குறிப்பிட்டிருந்தபடி கொலைப் பாவத்தைப் போக்குதற்குரிய பரிகாரத்தைச் செய்திருத்தல் வேண்டும் என்பதனை நாம் உய்த்துணர முடிகின்றது. கோவலனின் வடமொழிப் புலமையை ஆசிரியர் இந்நிகழ்வின்மூலம் குறிப்பாய் உணர்த்தியுள்ளார் என்று கொள்வதில் தவறில்லை.

    கோவலன் பார்ப்பனியின் துயர்தீர்த்த வரலாற்றை விளக்கும் சிலம்பின் வரிகள் இதோ…

    ”அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன்
    நெஞ்சுறு துயரம் நீங்குக என்றாங்கு
    ஓத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில்
    தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்
    தானஞ் செய்தவள் தன்துயர் நீக்கிக்
    கானம் போன கணவனைக் கூட்டி
    ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து
    நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ!” (அடைக்கலக் காதை: 68-75)

    இப்பாடல் வரிகளில் கோவலனைத் ’தொலையாத செல்வமுடையவனே’ என்ற பொருள்தரும் ”செல்லாச் செல்வ!” என்ற சொல்லால் உயர்வுபடுத்துகின்றார் அடிகள். மிகுந்த செல்வம் படைத்திருந்ததோடல்லாமல் அதனை மற்றவருக்கு வாரிக் கொடுக்கும் வள்ளலாகவும் அவன் திகழ்ந்திருக்கின்றான் என்பது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய உயர்பண்பு தானே?

    கோவலனின் பொன் மனத்தை வெளிச்சமிடும் மற்றொரு சம்பவம் அடுத்த பகுதியில்…

    (தொடரும்)

    *********************************************************************************************************************************

    1. வடமொழி வாசகமாகச் சிலப்பதிகார உரையாசிரியர் ‘அடியார்க்கு நல்லார் குறிப்பிடுவது அபரீக்ஷ்ய நகர்த்தவ்யங் கர்த்தவ்யம் ஸுபரீக்ஷிதம், பச் சாத்பவதி ஸந்தாபம்  ப்ராஹ்மணீ நகுலம்யதா என்பதாகும். இதன் பொருள்: “எந்த செயலையும் ஆராயாமல் செய்யக்கூடாது; நன்கு ஆராய்ந்த பின்பே செய்யவேண்டும்; இல்லையெனில் கீரிப்பிள்ளையைக் கொன்ற பார்ப்பனியைப் போல் பின்னால் வருந்த நேரிடும் என்பதாகும்.”

    கீரிப் பிள்ளையைக் கொன்ற பெண்ணின் கதை, குப்த அரசன் 2-ஆம் சந்திரகுப்தன் (also known as விக்கிரமாதித்தன்) காலத்தில் வாழ்ந்த ’விஷ்ணு சர்மா’ என்பவர் எழுதிய பஞ்சதந்திரக் கதைகளில் (a collection of fables) ஒன்றாகவும் பின்னாளில் சொல்லப்பட்டுப் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.

    Share
  • சிலம்பு காட்டும் கோவலனின் மறுபக்கம் – 1

    மேகலா இராமமூர்த்தி

    கருணை மறவன்

    ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் இன்றளவும் மக்கள் மனத்தில் நீங்கா இடம்பிடித்து நிலைத்து நின்றுவிட்ட ஓர் ஒப்பற்ற காப்பியமாகும். பண்டைத் தமிழர்தம் பண்பட்ட வாழ்க்கை முறையினையும், நாகரிகத்தையும் அறிந்து கொள்வதற்கு ஓர் சிறந்த இலக்கியச் சான்றாகவும் இக்காப்பியம் விளங்கிவருகின்றது.

    அக்கால வழக்கத்தையொட்டி எழுதப்பட்ட மற்ற காப்பியங்கள் எல்லாம் அரசர்களையோ, குறுநில மன்னர்களையோ, அல்லது வள்ளல்களையோ பெரிதும் போற்றுவதாகவும், அவர்தம் கொடைச் சிறப்பினையும், போர் வெற்றிகளையும் வானளாவப் புகழ்வதாகவுமே இயற்றப்பட்டிருக்க, அவற்றினின்று முற்றிலும் மாறுபட்டுச் சாதாரணக் குடிமக்களைக் காப்பியத் தலைவனாகவும், தலைவியாகவும் தேர்ந்தெடுத்து அவர்தம் வாழ்வையே காப்பியக் களனாக்கிய ’புரட்சிச் சிந்தனையாளர்’ இளங்கோவடிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

     Puhar-ILangoஇளங்கோவடிகள்

    அதுமட்டுமல்லாமல் தம்முடைய காப்பியத் தலைவனைக் குணத்திலே குன்றாகவும், குறைகளற்ற கோமகனாகவும் படைத்திடாமல் அதிலும் வேறுபட்டவராய்க் குற்றம் குறைகள் நிறைந்த சாதாரண மனிதனாகவே அவனைப் படைத்திருப்பதும் புதுமையே. ஆம்.. கோவலனின் வாழ்க்கைமுறை பற்றிப் புகார்க் காண்டத்தின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் செய்திகள் அவனைப் பற்றிய உயர்ந்த மதிப்பீடு எதனையும் நமக்கு ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.

    இதனைக் காணும்போது நற்குடிப் பிறப்பாளனான கோவலன் நற்செயல்கள் எதனையுமே செய்யவில்லையா? கட்டிய மனைவியைப் பிரிந்து மற்றொரு பெண்ணோடு வாழ்பவனாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றானே…இஃது அவனுடைய ஒழுக்கக் குறைவைக் காட்டுவதாக அல்லவா அமைந்திருக்கிறது! என்றெல்லாம் நாம் சிந்திக்கத் தலைப்படுகின்றோம்.

    கண்ணகி தன் நல்வாழ்வைத் தொலைத்ததும், அவளுடைய தனிமைத் துயருமே நம் நெஞ்சமெங்கும் நிறைந்து நம்மை வருந்தச் செய்யும் வகையில் கதையின் நிகழ்வுகள் சிலம்பின் முற்பகுதியில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே கணிகையர் குலத்தில் பிறந்தும் கற்புக்கரசியாக வாழ்ந்த மாதவி நல்லாளுடன் கோவலன் நடத்திய இல்வாழ்க்கையைப் பற்றியும், அப்போது நிகழ்ந்த சம்பவங்கள் குறித்தும் அதிகம் அறிந்துகொள்ளக்கூடிய சந்தர்ப்பமே நமக்கு வாய்க்கவில்லை. அதனால்தானோ என்னவோ..அருளும், வீரமும் நிறைந்த கோவலனின் இனிய மறுபக்கத்தை நாம் உணராதவர்களாயிருக்கிறோம். கோவலன் செய்த அறச் செயல்களுக்கும் ஓர் அளவில்லை என்பதனை மதுரைக் காண்டத்திலேதான் (அவன் கொலை செய்யப்படுவதற்குச் சற்றுமுன்பு) நமக்கு அறியத் தருகின்றார் காப்பிய உத்திகளை அமைப்பதில் கைதேர்ந்தவரான இளங்கோவடிகள்!

    கோவலனின் கருணை உள்ளத்தையும், எளியோர்மாட்டு அவன் காட்டும் பேரன்பையும் நாம் அறிந்து மகிழும் வகையில் அவற்றைப் பற்றிய செய்திகளை ’அடைக்கலக் காதை’ எனும் பகுதியில் வைத்துள்ளார் ஆசிரியர். நமக்கு மர்மமாகவும், புரியாத புதிராகவும் விளங்கும் கோவலனின் பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்குமுரிய மறுபக்கம் இங்குதான் வெளிச்சத்திற்கு வருகின்றது.

    பூம்புகாருக்கு அருகிலுள்ள ’தலைச்செங்காடு’ என்னும் ஊரில் வசித்துவரும் கோவலனின் நெருங்கிய நண்பனான, நான்கு மறைகளையும் நன்குணர்ந்த, அந்தண குலத்தைச் சேர்ந்த ’மாடலன்’ என்பவன் தன் திருத்தல யாத்திரையை முடித்துவிட்டுத் திரும்பி வரும் வழியில் மதுரையை ஒட்டிய பகுதியில் சமணத் துறவியான கவுந்தியடிகளுடன் (சமணப் பள்ளியில்) தங்கியிருக்கும் கோவலனையும், கண்ணகியையும் சந்திக்கின்றான்.

    கோவலனின் உருவழிந்த, வாடிய தோற்றத்தைக் கண்டு வருந்திக் கோவலன் மதுரை வந்த காரணம் என்ன? என்று மாடலன் வினவ, பொருளினை இழந்து வறுமையுற்றிருக்கும் தன் நிலையை மாற்றி வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய பொருள் ஈட்டவே தாம் அங்கு வந்ததாகக் கோவலன் கூறுகின்றான். அதுகேட்டு அவனுடைய முந்தைய வளமான வாழ்வையும், இன்றைய அவல நிலையையும் நினைந்து மட்டிலா மனவேதனை அடைகின்றான் மாடலன். அவ்வேதனையினூடே வெளிப்படும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நமக்குக் கோவலனின் கடந்த காலத்தை, அவனுடைய அரிய குணங்களைப் புலனாக்கி நம்மையும் அவனிடம் பேரன்பும், பெருமதிப்பும் கொள்ளவைக்கின்றன.

    மாடலன் கோவலனைப் பற்றி அப்படி என்னதான் சொல்லியிருப்பான் என்ற ஆவல் நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் பொங்குகின்றதல்லவா? கோவலனுடைய கடந்த காலத்திற்கு நாமும் சற்றுச் சென்று அங்கு நிகழ்ந்தவற்றை அறிந்துகொள்வோமா?

    கோவலனும், மன்னனிடம் ’தலைக்கோல்’ பெற்ற (சிறந்த நாட்டிய நங்கைக்கு மன்னனால் செய்யப்படும் சிறப்பு) புகழ்மிக்க மாதவியும் மகிழ்வோடு நடத்திய இல்லறத்தின் பயனாய் அருஞ்சாதனைகளைப் புரிவதற்கென்றே தோன்றியது ஓர் ஒப்பற்ற பெண் மகவு. அக்குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று மாதவியின் குலத்தைச் சேர்ந்த கணிகையர் அனைவரும் யோசித்திருக்கும் வேளையில் கோவலன் ஓர் சிறந்த பெயரைத் தேர்ந்தெடுக்கின்றான்; அப்பெயரைத் தான் தேர்ந்தெடுத்த காரணத்தையும் அனைவருக்கும் அறியத் தருகின்றான்.

    ”முன்பொரு காலத்தில் எம்குல முன்னோனான வணிகன் ஒருவன் கடற்பயணம் செய்தபோது அவனுடைய மரக்கலம் பேரலைகளினால் தாக்கப்பட்டு உடைய, கரையை அடையமுடியாமல் அவன் துயருற்றான். அப்போது அவன்முன் தோன்றிய ’மணிமேகலா தெய்வம்’ என்ற பெண்தெய்வம் அவனுக்கு ஏற்பட்ட ஆபத்திலிருந்து அவனைக் காத்துக் கரை சேர்த்தது. அத்தெய்வமே எங்கள் குலதெய்வம் ஆகும். அத்தெய்வத்தின் பெயரையே என் மகளுக்குச் சூட்டுக” என்கின்றான் கோவலன்.

    அதுகேட்டு, அங்குக் கூடியிருந்த ஆயிரம் கணிகையரும் (ஆயிரம் பேர் என்பது கவிச்சுவைக்கான மிகைப்படுத்தலாயிருக்கலாம்) அக்குழந்தைக்கு “மணிமேகலை” என்ற அழகிய பெயரைச் சூட்டி வாழ்த்தினர். இதனை இளங்கோவடிகள்,

        “அணிமே கலையார் ஆயிரம் கணிகையர்,
    மணிமே கலையென வாழ்த்திய ஞான்று(அடைக்கலக் காதை: 38-39) எனக் குறிப்பிடுகின்றார்.

    மகிழ்ச்சி நிறைந்திருந்த அவ்வேளையிலே அழகிய மடந்தையாகிய மாதவியோடு சேர்ந்து செம்பொன்னைத் தானம் பெறுவதற்காக அங்கு வந்திருந்தவர்கட்கெல்லாம் வாரி வாரி வழங்குகின்றான் கோவலன்.

    அப்போது அங்கே அச்சம் தரத்தக்க ஓர் காட்சி தென்படுகின்றது. நிறைந்த ஞானத்தையுடைய வயது முதிர்ந்த அந்தணர் ஒருவர் கையில் கோலூன்றியபடித் தானம் பெறுவதற்காகக் கோவலன் இல்லத்தை நோக்கி வந்துகொண்டிருக்கின்றார். கோவலன் இல்லத்தில் குழுமியிருந்த அனைவரும் அம்முதியவரையே அச்சத்தோடும், கவலையோடும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஏன்…அவருக்கு ஏதேனும் ஆபத்து நெருங்குகிறதோ? நம் யூகம் சரியே! தள்ளாடியபடியே நடந்துவரும் அப்பெரியவரைப் பாகனிடமிருந்து தப்பித்த மதம் கொண்ட யானை ஒன்று துரத்தி வருகின்றது; அத்தோடு நில்லாமல் அவரைத் தன் துதிக்கையில் பற்றியும் கொண்டுவிட்டது. அதனைக் கண்டோர் அனைவரும் செய்வதறியாது பயத்துடன் திகைத்து நிற்க, அதுகண்ட கோவலன் பாய்ந்துசென்று ’ஒய்’யென்ற (யானையைத் திட்டும் ஆரிய மொழி) ஒலி எழுப்பியபடியே மின்னல் வேகத்தில் அந்த முதிர்ந்த அந்தணரை யானையின் பிடியினின்றும் விடுவித்து அவர் உயிரைக் காக்கின்றான்; அத்தோடு நிறுத்தவில்லை. அந்த யானையின் வளைந்த துதிக்கையின் இடையே புகுந்து அதன் மதத்தையும் அடக்கிக் ’கருணை மறவனாக’த் திகழ்கின்றான். இங்குப் பயன்படுத்தப்பட்டுள்ள ’கருணை மறவன்’ என்ற சொல்லாட்சிப் புதியதாகவும், சுவையாகவும் இருக்கக் காண்கிறோம்.

    அந்த முதிய அந்தணர் மீது கொண்ட கருணையால்தானே தன் உயிரையும் துச்சமாக மதித்து ’மறவனாக’ மாறி மதயானையை அடக்கி வீரனாகத் திகழ்கின்றான் கோவலன். ஆகவே ’அருள்வீரன்’ என்னும் பொருள்பட அமைந்த ’கருணை மறவன்’ என்ற பெயர் அவனுக்குச் சாலப் பொருத்தமானதுதானே?

    ”…………………………உயர்பிறப் பாளனைக்
    கையகத்து ஒழித்ததன் கையகம் புக்குப்
    பொய்பொரு முடங்குகை வெண்கோட்டு அடங்கி,
    மையிருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்பப்
    பிடர்த்தலை இருந்து பெருஞ்சினம் பிறழாக்
    கடக்களிறு அடக்கிய கருணை மறவ!”  (அடைக்கலக் காதை: 48-53) என்பவை மேற்சொன்ன நிகழ்வை விளக்கும் இனிய வரிகள்.

    இவ்வாறு அளவற்ற அருளாளனாகத் திகழும் கோவலன் ஓர் அபலைப் பெண்ணுக்கு அரிய உதவி ஒன்றைச் செய்து அவள் வாழ்வைக் காக்கின்றான். அது என்ன?

    (தொடரும்)

    Share
  • சிந்தாமணிக் கடலில் ஒரு சிறு பயணம்!

    மேகலா இராமமூர்த்தி

    ஐம்பெருங்காப்பியங்களில் கதை அடிப்படையில் காலத்தால் மூத்ததும் காப்பியத்திற்கான இலக்கணங்கள் அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றதுமான தலைசிறந்த நூல் ‘சீவக சிந்தாமணி’ ஆகும். சத்திர சூடாமணி, கத்திய சிந்தாமணி ஆகிய வடமொழி நூல்களைத் தழுவி இக்காப்பியத்தைச் சமண முனிவரான திருத்தக்க தேவர் தமிழில் இயற்றியுள்ளார். ’சிந்தாமணி’ என்பதற்கு நெஞ்சில் பொதிந்துவைத்துக் காக்கவேண்டிய தேவருலக மணி என்று பொருள் கூறுவர்; அது கற்பகத்தரு மற்றும் காமதேனு போன்று கேட்டதைத் தரும் இயல்புடையதாகும். அதனால்தான் சீவகனுடைய கதையைக் கூறும் சிந்தாமணி போன்ற காப்பியம் என்னும் பொருளில் இந்நூலுக்குச் சீவக சிந்தாமணி எனப் பெயரிட்டார் இக்காப்பிய ஆசிரியர் என்கின்றனர் தமிழ்ச் சான்றோர்.  இந்நூலின் சிறப்பை நோக்கும்போது இப்பெயர் இதற்கு நூற்றுக்கு நூறு பொருத்தமே என்பதில் சற்றும் ஐயமில்லை.

    இக்காப்பியத்தின் தலைவனாகிய ’சீவகனுக்கு’ அவனுடைய தாயாகிய ‘விசயை’ முதன் முதலாக இட்டு விளித்த பெயர் ’சிந்தாமணி’ என்பதே ஆகும். ’சீவகன்’ என்னும் பெயர்  பின்னர் வானொலியாகத் (அசரீரி) தோன்றிய ‘சீவ’ என்னும் வாழ்த்துச்சொல் கேட்டு ’கந்துக்கடன்’ என்னும் வணிகன் (சீவகனின் வளர்ப்புத் தந்தை) இட்ட பெயரே என்பது இக்காப்பியம் கூறும் செய்தியாகும்.

    மனித வாழ்வின் பண்பாகவும், பயனாகவும் கருதப்படும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் இச்சிந்தாமணிக் காப்பியம் இனிதே எடுத்துரைப்பதனால் இதனை ’முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள்’ என்றும் கூறுவர்.

    சிந்தாமணியை ’விருத்தப்பா’ என்னும் யாப்புநடையில் திருத்தக்க தேவர் அழகுற அமைத்துள்ளார். இவ்விருத்தப்பா சிறந்த ஓசைநயமும், சொல்லழகும் உடையது. செய்யுள் இயற்றுவதிலே ’விருத்தம்’ என்னும் ஓர் புதிய பாதையை முதன்முதலில் இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை திருத்தக்க தேவரையே சாரும். அதற்குப்பின் வந்த இலக்கியங்கள் தேவரின் பாணியையே (பெரும்பாலும்) பின்பற்றி அதில் வெற்றியும் கண்டன எனலாம்.

    இவ்விருத்தப்பாவை தேவருக்குப் பிறகு பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர் கம்பரே ஆவார்; அவருடைய கம்பராமாயணம் முழுவதும் விருத்தப்பாவில் படைக்கப்பட்டு இன்றளவும் பெரும் பாராட்டையும், வரவேற்பையும் தமிழ்கூறு நல்லுலகில் பெற்றிருப்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. கம்பருக்கு ‘inspiration’ திருத்தக்க தேவரே என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை அல்லவா? ‘சிந்தாமணிக் கடலில் சிறிது முகந்துகொண்டேன்’ என்று கம்பநாடனே கூறியுள்ளதாக ஒரு செவிவழிச் செய்திகூட உண்டு.

    இனி, சீவக சிந்தாமணிக் காப்பியம் குறித்துச் சில செய்திகள் நம் சிந்தனைக்கு…

    சிந்தாமணியில் நாமகள் இலம்பகம் தொடங்கி முத்தி இலம்பகம் ஈறாக மொத்தம் 13 இலம்பகங்கள் உள்ளன. இலம்பகம் என்பது அத்தியாயம் என்பதுபோல் காப்பியத்தின் உட்பிரிவைக் குறிப்பதாகும்; இந்நூலில் மொத்தம் 3145 பாடல்கள் உள்ளன.

    காப்பியத்தின் முதல் பகுதியாக வருவது ’நாமகள் இலம்பகம்’. இவ்விலம்பகத்தில் ’ஏமாங்கதம்’ என்றழைக்கப்படும் நாட்டின் இயற்கை வளமும், அந்நாட்டை ஆண்ட மன்னன் சச்சந்தன் (சீவகனின் தந்தை), விசயை (சீவகனின் தாய்) ஆகியோரின் வாழ்வில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களும் அழகிய பாடல்கள் வடிவிலே விளக்கப்பட்டுள்ளன.

    அரசனாகிய சச்சந்தன் அவனுடைய அமைச்சனான கெடுமதி படைத்த கட்டியங்காரனால் அநியாயமாகக் கொல்லப்பட்டது; கருவுற்றிருந்த அரசமாதேவி ’விசயை’ மயிற்பொறி எனும் வானஊர்தி ஒன்றில் பறந்து சென்று அரண்மனையில் பிறக்கவேண்டிய அரசிளங்குமரனான சீவகனைச் சுடுகாட்டில் ஈன்றது; பின்பு கந்துக்கடன் என்ற வணிகன் குழந்தை சீவகனைப் பத்திரமாக எடுத்துச்செல்வதைக் கண்டபின் அவள் துறவறம் பூண்டது எனப் பல துன்பியல் நிகழ்வுகளை வரிசையாகப் பட்டியலிட்டு அவலச்சுவையை நாம் முற்றாகச் சுவைக்குமாறு செய்துவிடுகின்றது இந்நாமகள் இலம்பகம். எனினும் இதில் இடம்பெற்றுள்ள ஏமாங்கத நாட்டின் இயற்கை வளம் கூறும் பாடல்கள் தேனில் தோய்த்தெடுத்த பலாச்சுளைகளாக இனிக்கவே செய்கின்றன; அவற்றிலிருந்து ஒன்று நாம் சுவைக்க:

    காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் நெற்றிப்
    பூமாண்ட தீந்தேன் தொடைகீறி  வருக்கை போழ்ந்து
    தேமாங் கனிசி தறிவாழைப் பழங்கள் சிந்தும்
    ஏமாங் கதமென்று இசையால்திசை போயது உண்டே.” (நாமகள் இல: பாடல்: 31)

    நன்றாகக் காய்த்த தென்னைநெற்றானது (தேங்காய்) தான் கீழே வீழும்போது கமுகின் உச்சியிலுள்ள தேன்போலும் இனிய நீரையுடைய குலையைக் கீறி, பலாப் பழங்களைப் பிளந்து பின்னர்த் தேமாங்கனிகளைச் சிதறச்செய்து, வாழைப் பழங்களையும் சிந்தச் செய்யும் வளம்பொருந்திய நாடு ஏமாங்கதம் என்று இந்நாட்டின் வளம் சுவைபடக் கூறப்பட்டுள்ளது எண்ணி எண்ணி இன்புறத்தக்கது.

    நாமகள் இலம்பகத்தை அடுத்து வரும் இலம்பகங்களில் காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எட்டுப் பெண்களைத் தன் பல்வேறு திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்திக் காப்பிய நாயகன் சீவகன் மணம் செய்துகொள்வது விரிவாகப் பேசப்படுகின்றது. இத்தனைத் திருமணங்களை நாயகன் (அலுக்காமல்!) செய்துகொள்வதாலேயே இந்நூலுக்கு ‘மணநூல்’ என்ற சிறப்புப்பெயரும் உண்டு. பின்னர்த் தன்னருமைத் தந்தையைக் கொன்று ஏமாங்கத நாட்டைக் கைப்பற்றிய கொடுங்கோலனான கட்டியங்காரனைத் தன் தாய்மாமன் கோவிந்தனின் துணையோடு போரில் வீழ்த்தித் தன் நாட்டை மீண்டும் கைப்பற்றுகின்றான் சீவகன்; நாட்டின் மன்னனாகி நல்லாட்சி புரிகின்றான். நன்மக்கட்பேறு வாய்க்கப் பெறுகின்றான்.

    image descriptionஇக்காப்பியத்தைப் படிப்போர்க்கு ’ஒரு சமணத் துறவி அறக்கருத்துக்களையும், துறவுநெறியையும் வலியுறுத்திக் காப்பியம் படைப்பதை விடுத்துக் ‘காமச்சுவை’ மிகுந்த ஓர் காப்பியத்தை இயற்றுவானேன்?’ என்ற ஐயம்கூட எழலாம். தேவர் இக்காப்பியத்தை இயற்றியதற்கான காரணமாகச் சொல்லப்படுவது….ஒரு சமயம் திருத்தக்க தேவரிடம் மற்ற புலவர்கள், ’துறவியான உம்மால் துறவறக் கருத்துக்களை மட்டுமே பாட இயலும்; அகப்பொருள்சார் பாடல்களைப் பாட இயலாது’ என்று இகழ்ந்துகூற அதனைப் பொய்யாக்கவே அவர் ‘அகப்பொருள்’ செய்திகள் செறிந்த இக்காப்பியத்தைப் படைத்தார் என்று கூறுகின்றனர் அறிஞர் பெருமக்கள். கவிஞர் என்றானபின் காதலைப் பாடவேண்டிய கட்டாயம் காவியுடை தரித்தவர்க்கும் வந்துவிடுகின்றது பாருங்கள்!

    சிந்தாமணியின் கதைப்போக்கினைக் கூர்ந்து நோக்கும்போது அஃது திருமால் அவதாரக் கதைகளில் ஒன்றான கண்ணன் கதையையே பெரிதும் ஒத்திருப்பதை நம்மால் உணரமுடிகின்றது. கண்ணன் ஆயர்பாடியில் கோபியர்களுடன் ’இராச லீலைகள்’ பல நிகழ்த்தினான்; போர் செய்தான்; அரசாட்சி செய்தான்; அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் உதவினான்; மன்னுயிர் ஓம்பினான். இத்தனைத் தொழில்களும் செய்துகொண்டே அவன் உலகப் பற்றின்றி மெய்வாழ்க்கை நடத்திக் காட்டினான். அதுபோலவே இக்காப்பியத் தலைவன் சீவகனும் பல மகளிரை மணக்கின்றான்; போர் செய்கின்றான்; அரசாளுகின்றான்; மக்களைத் தீங்கின்றிக் காக்கின்றான். இத்துணைச் செயல்களுக்கு மத்தியிலும் அவன் வாழ்வின் நிலையாமையை நன்குணர்ந்தவனாய் ’படநாகம் எப்படித் தன் தோலை உரிக்குமோ’ அதுபோல் உலகப்பற்றை உரித்துவிட்டுத் தன் மனைவியர் எண்மருடனும் துறவு பூணுவதாகவும், தவமியற்றி வீடுபேற்றை அடைவதாகவுமே காப்பியத்தை முடித்துள்ளார் ஆசிரியர்.

    இக்காப்பியத்தின் இறுதிப் பகுதியாகிய ’முத்தி இலம்பகம்’ பல அரிய அறக்கருத்துக்களை, வாழ்வியல் உண்மைகளை எடுத்தியம்பி மனித மனத்தை பக்குவப்படுத்துகின்றது. ஒழுக்கம் என்பதற்கு விளக்கம் கூறும் ஓர் இனிய பாடல்..

    உள்பொருள் இதுவென வுணர்தல் ஞானமாம்
    தெள்ளிதின் அப்பொருள் தெளிதல் காட்சியாம்
    விள்ளற இருமையும் விளங்கத் தன்னுளே
    ஒள்ளிதின் தரித்தலை யொழுக்கம் என்பவே.” (முத்தி இல: பாடல்: 2845)

    உண்மைப் பொருள் எதுவென உணர்தலே ஞானம் எனப்படும். அப்பொருளின் தன்மை இது எனத் தெளிந்திடுதல் காட்சியாகும்; அத்தகைய ஞானத்தையும், தெளிந்த காட்சியையும் ஒருவன் தன் மனத்திலே சிறப்புற நிலைபெறச் செய்வதே ஒழுக்கம் ஆகும் என்கிறார் திருத்தக்க தேவர். ஞானம், காட்சி, ஒழுக்கம் இம்மூன்றினையும் மும்மணிகள் (இரத்தினத்திரயம்) என்பர் சமணர்கள். இப்பாடலின் கருத்தை நோக்கும்போது,

    எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு. (குறள்: 355) 

    பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்

    மருளானாம் மாணாப் பிறப்பு. (குறள்: 351)

     

    என்ற இரு குறள்கள் நம் நினைவுக்கு வருகின்றன அல்லவா?

    இவ்வினிய தமிழ்க் காப்பியத்தைக் கற்று அதன் சுவையில் மனத்தைப் பறிகொடுத்த வெளிநாட்டுத் தமிழறிஞர் ஜி.யு. போப் அவர்கள் கிரேக்க மொழியின் மாகாவியங்களான ‘இலியட், ஒடிசி’ ஆகியவற்றிற்கு இணையானது இச்சிந்தாமணிக் காப்பியம் என்று புகழாரம் சூட்டியுள்ளார். ’தேம்பாவணி’ என்னும் தீந்தமிழ்க் காவியம் படைத்த வீரமாமுனிவர், இக்காப்பிய ஆசிரியர் திருத்தக்க தேவர் ’தமிழ்க் கவிஞருள் சிற்றரசர்’ என்று வியந்து பாராட்டியுள்ளார். தொல்காப்பியத்திற்கும், பத்துப்பாட்டிற்கும் அற்புதமான உரை வரைந்தவரும், தமிழ்ச் சான்றோரால் ’உச்சிமேல் வைத்துப் போற்றப்படுபவருமான’ பெரும்புலவர் நச்சினார்க்கினியர் இந்நூலுக்கு அழகிய உரை எழுதிச் சிறப்பித்துள்ளார். இவ்வாறு எண்ணரும் சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்டொளிரும் ஒப்பற்ற காப்பியமாம் சீவக சிந்தாமணியை நாமும் படித்தின்புறுவோமே!

    படத்திற்கு நன்றி: https://www.nhm.in/shop/978-81-8493-465-6.html

    Share
  • அபிராமியம்மன் பதிகம்

    மேகலா இராமமூர்த்தி

     

    Abirami_Ma

    கல்வி நலந்தரு கன்னிகை நீயே!

    செல்வ வளந்தரு செல்வியும் நீயே!

    வல்லியே நிதமுனை வணங்குகின் றேனே

    நல்லவை எண்ணிடும் மனமருள் வாயே!

     

    அதிசயம் நிகழ்த்திடும் அன்னையே உன்னை

    மதியினில் வைத்தே மனமகிழ்ந் திடுவேன்

    விதியினை மாற்றிடும் விமலையே என்றும்

    கதியென்று நினைத்தேன் நின்பதம் தனையே!

     

    துணையற்ற மனிதர்க்குத் துணையாகும் தாயே!

    இணையற்ற உன்னருட் பார்வையி னாலே

    தீராத துயர்களைத் தீர்த்திடு வாயே

    வாராது வந்திட்ட மனோன்மணி நீயே!

     

    விடமுண்ட கண்டனின் இடப்பாகத் திருந்தே

    இடர்களை கின்றாய் இப்புவி சிறக்க!

    தொடரும் இருவினை எனுமிருள் நீக்கிச்

    சுடரே நிலவே ஒளிதரு வாயே!

     

    காலனும் உனைக்கண்டு அஞ்சிடு வானே!

    வேல்விழி கண்டால் விரைந்தோடு வானே!

    தோல்விகண் டறியாத் தூயவள் உனையே

    பால்போல் சொற்கொண்டு போற்றிடு வேனே!

     

    நிலையில்லாப் பொருட்செல்வப் பற்றினை யறுத்து

    விலையில்லா அருட்செல்வம் அளித்திடு தாயே!

    மலைமகள் உன்னடி பணிகின்ற பக்தர்

    கலையாத கல்வியைப் பெற்றிடு வாரே!

     

    அழகரசி உந்தன் எழில்தனைப் பருக

    விழியிரண்டு போத வில்லையே அம்மா!

    தொழுதிடு வேனுனைத் தவறாது நித்தம்

    குழவியென் பிழைகளைப் பொறுத்தருள் வாயே!

     

    மணியின் ஒளியாய்ச் சுடர்விடும் அன்னாய்!

    பிணிகள் நீக்கிடும் மாமருந் தனையாய்!

    பணிந்தே போற்றிடும் பாமர னுக்கும்

    துணிந்தே அருளும் பரமனின் துணைவி!

     

    பந்த பாசங்கள் எனும்தளை நீக்கி

    வந்த வினைகள் ஓடிடச் செய்வாய்!

    கந்த வேளினை இப்புவி தனக்கே

    சொந்த மாக்கிய சுந்தர வல்லி!

     

    அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுத்திட

    அகமது தூய்மையாய் என்றும் திகழ்ந்திட

    மறவாது பற்றினேன் நின்னடி தனையே

    பிறவாமை நல்கியே பேரின்பம் காட்டு!

     

    Share
  • புறநானூற்று வழிப் புலனாகும் அரசியல் சிந்தனைகள் – பகுதி 4

    (அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டுப் புறநானூற்று மாநாட்டில் நான் ஆற்றிய உரையின் தொடர்ச்சி)

    -மேகலா இராமமூர்த்தி

    ’வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி’ என்று பட்டினப் பாலை ஆசிரியரால் பாராட்டப்பெறுகின்ற காவிரியன்னை தாலாட்டும் சோழவள நாட்டின் அரசனாய்ப் புலவர்கள் போற்றும் சிறப்போடு விளங்கியவன் நலங்கிள்ளி. அவனுக்கு நெருங்கிய உறவினனான நெடுங்கிள்ளி என்பவன் உறையூரைத் தலைநகராய்க் கொண்டு சோழநாட்டின் மற்றோர் பகுதியை ஆண்டு வந்தான். யாது காரணத்தாலோ அவர்கள் இருவருக்கும் சுமுக உறவு நிலவவில்லை.

    பெருவீரனாய் விளங்கிப் புகழ்பெற்றான் நலங்கிள்ளி. அவனுடைய உடன்பிறந்த தம்பியான ‘மாவளத்தானும்’ போர்களிலும், இன்னபிற அரசியல் செயற்பாடுகளிலும் அண்ணனுக்குப் பெரிதும் உதவி வந்தான். ஆனால் நெடுங்கிள்ளியைப் பெருவீரன் என்று சொல்வதற்கில்லை. அரசியல் பகையினால் நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்குமிடையே அடிக்கடிப் போரும், பூசலும் நிகழ்ந்தவண்ணமே இருந்தது.

    ஒருமுறைச் சோழநாட்டைச் சார்ந்த ’ஆவூர்’ என்ற இடத்தில் நெடுங்கிள்ளி தங்கியிருந்தபோது ‘மாவளத்தான்’ ஆவூரை முற்றுகையிட, அதுகண்டு அஞ்சிய நெடுங்கிள்ளி தனக்குச் சொந்தமான ‘உறையூருக்கு’ச் சென்றான்; அங்கும் அவனைத் துரத்திச் சென்றனர் நலங்கிள்ளியும் அவன் தம்பியும். நெடுங்கிள்ளியின் நிலை இரங்கத் தக்கதாய் இருந்தது. அவன் தன் கோட்டைக்குள்ளேயே அஞ்சிப் பதுங்கியிருந்தான்.

    இந்நிகழ்வுகளையெல்லாம் கண்டும், கேட்டும் பெரிதும் வருத்தமுற்ற செந்தமிழ்ப் புலவரும் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி இருவர்மாட்டும் பேரன்பு கொண்டவருமான ‘கோவூர் கிழார்’ நலங்கிள்ளியின் அரண்மனைக்குச் சென்று அவனைக் கண்டார். கோவூர் கிழாரிடம் பெருமதிப்புக் கொண்டிருந்த ‘நலங்கிள்ளி’ அவரை அன்போடு வரவேற்று ஆரத்தழுவிக் கொண்டான். பின்பு,”‘புலவர் பெருமானே! அவசர வேலையாக உறையூர் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன்; அதனால் உங்களோடு அதிகநேரம் அளவளாவ அவகாசம் இல்லை; மன்னித்து விடை கொடுங்கள்!” என்று பரபரப்போடு பேசியபடியே அவையிலிருந்து நகர முயன்றான்.

    அவன் எங்கு அவ்வளவு அவசரமாகப் போகிறான் என்பதை நன்கு அறிந்த புலவர்பெருமான், “பொறு நலங்கிள்ளி! இவ்வளவு அவசரமாக எங்கேயப்பா புறப்பட்டுவிட்டாய்? உன் உறவினான நலங்கிள்ளியோடு போர் புரியத்தானே?” என்றார் அமைதியாக.

    ஆச்சரியத்தோடு புருவத்தை உயர்த்திய நலங்கிள்ளி புலவரை நோக்கி, “அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது?” என்று வினவினான்.

    ”எனக்கு மட்டுமா…..சோழ நாட்டிலுள்ள அனைவருக்குமே தெரிந்த செய்திதானே உங்கள் இருவரின் பகை” என்றார் குரலில் வேதனை தொனிக்க.

    “என்ன செய்வது புலவரே….? ஆதியிலிருந்தே எனக்கும் நெடுங்கிள்ளிக்கும் ஒத்துவரவில்லை. அதனால் முற்றுகையும், போரும் தவிர்க்க இயலாதவையாகிவிடுகின்றனவே….?”

    “நீ இப்படிப் பேசுவது நன்றாகயில்லை, நலங்கிள்ளி. இஃது உன் பேராண்மைக்கும் அழகன்று! போகட்டும், நான் கேட்கின்ற சில கேள்விகளுக்கு மட்டும் பதில்சொல்லிவிட்டு நீ புறப்படு! நான் தடுக்கவில்லை.”

    ”கேளுங்கள் புலவரே…உங்கள் கேள்விகளுக்குப் பதில்சொல்லிவிட்டே புறப்படுகின்றேன்”

    “நல்லது நலங்கிள்ளி!” என்ற கோவூர் கிழார் தொடர்ந்து….”நீ ஒருவனை முற்றுகையிடச் செல்கிறாயே, அவன் பனம்பூ மாலை (பனம்பூ – சேரர்களின் அடையாளப்பூவாகக் கருதப்பட்டது)அணிந்த சேரனா?”

    ”இல்லை”

    ”அப்படியானால்….ஒருவேளை வேப்பம்பூ மாலை (வேப்பம்பூ – பாண்டியர்களின் அடையாளப்பூவாகும்) அணிந்த பாண்டியனோ?”

    “இல்லவேயில்லை புலவரே!”

    ”அப்படியானால் அவனும் உன்னைப்போல் ஆத்தி மாலை (ஆத்தி(ஆர்) – சோழர்களின் அடையாளப்பூவாகும்) அணிந்தவன்தானா?”

    ”கோவூர் கிழாரே! என்னைப் பரிகாசம் செய்கிறீர்களா என்ன..? நெடுங்கிள்ளியும் என்னைப்போல் ஆத்தி மாலை அணிந்த சோழ குலத்தவன்தான் என்பது தாங்கள் அறியாததா?”

    ”அறிவேன் நலங்கிள்ளி; நன்றாக அறிவேன். அதனை உனக்கு ஞாபகப்படுத்தவே இவ்வாறு கேட்டேன். அவனும் உன்னைப்போல் ஆத்தி மாலை அணிந்த சோழர் தொல்குடியைச் சேர்ந்தவன்தான்; அதனை நீ மறந்துவிட்டுப் போருக்குப் புறப்படுகிறாயே? இதன் பின்விளைவுகளை நீ உணரவில்லையே! என்ற வருத்தம்தான் எனக்கு.”

    ”என்ன சொல்லவருகிறீர்கள் புலவர்பெருமானே! சற்று எனக்கு விளங்குமாறு சொல்லுங்கள்!”

    ”தெளிவாக….உடைத்தே சொல்லிவிடுகிறேன் நலங்கிள்ளி. நீ யாரோடு போர் செய்ய விரும்புகிறாயோ, அவனும் உன்னைப் போலவே புகழ்வாய்ந்த சோழர்குடியைச் சேர்ந்தவனே. நீங்கள் இருவரும் மேற்கொள்ளப்போகும் போரில் இருவரும் வெற்றிபெறுவது என்பது இயற்கையில் நடவாத காரியம்; உங்களில் யார் தோற்றாலும் தோற்கப்போவது என்னவோ சோழர்குடிதான்! உங்கள் இருவரின் பகையும், பூசலும் உம்குடிக்குப் பீடுதருவதன்று! அதுமட்டுமா? ’கொடியால் பொலிகின்ற தேருடன் பவனிவருகின்ற’ உம்மைப் போன்ற மற்ற வேந்தர்களுக்குப் பேருவகையையும், பெருமகிழ்ச்சியையும் கொடுக்கக் கூடியது நும் பகை; இதனை மறவாதே!” என்றார் கோவூர் கிழார்.

    அனுபவமும், அறிவும் செறிந்த கோவூராரின் மொழிகள் நலங்கிள்ளியைச் சிந்திக்க வைத்தன. அதன்காரணமாக அவன் நெடுங்கிள்ளிமீது மேற்கொள்ளவிருந்த முற்றுகைப் போரைக் கைவிட்டான். தனக்கு நல்லறிவு புகட்டிய புலவரை மீண்டும் அன்போடு அணைத்துக் கொண்டான்.

    நலங்கிள்ளியின் மனத்தை மாற்றிப் போரைக் கைவிடவைத்த கருத்தாழம் மிக்க அப்பாடல் இதுவே..

    “இரும்பனை   வெண்தோடு   மலைந்தோ   னல்லன்

    கருஞ்சினை   வேம்பின்   தெரியலோ   னல்லன்

    நின்னகண்ணியும்   ஆர்மிடைந்   தன்றே,   நின்னொடு

    பொருவோன்   கண்ணியும்   ஆர்மிடைந்   தன்றே

    ஒருவீர்   தோற்பினுந்   தோற்பதுங்   குடியே

    இருவீர் வேறல்   இயற்கையு   மன்றே,   அதனால்

    குடிப்பொரு   ளன்றுநும்   செய்தி   கொடித்தேர்

    நும்மோ   ரன்ன   வேந்தர்க்கு

    மெய்ம்மலி   யுவகை   செய்யுமிவ்   விகலே.” (புறம்: 45)

    கோவூர் கிழாரின் பாடலை இன்றைய அரசியலோடு பொருத்திப் பார்க்கும்போது பல்வேறு எண்ண அலைகள் மனக் கடலில் கொந்தளிக்கவே செய்கின்றன. நம் தமிழர்கள் மட்டும் சாதி, மதம், அரசியல் என்ற பல்வேறு அற்பக் காரணங்களின் அடிப்படையில் சிதறிக் கிடக்காமல், தம் (அரசியல்) சுயலாபத்தை நோக்கமாகக் கொள்ளாமல் மனிதாபிமானத்தோடும், ஒற்றுமையோடும் ஒருமித்துக் குரல் எழுப்பியிருந்தால் – தம் எதிர்ப்பைப் பலமாக வெளிப்படுத்தியிருந்திருந்தால்… அண்டை நாட்டில் நம் சகோதரத் தமிழர்கள் இப்படி இலட்சக் கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கமாட்டார்களே..! அதனைத் தவறவிட்டுவிட்டோமே! அவ்விழப்பை எப்படி ஈடுசெய்யப் போகிறோம்? அதனை எண்ணும்போது விழியோரம் அருவி பொழியவே செய்கிறது.

    இனியாவது தமிழர்களாகிய நாம் நமக்குள்ளிருக்கும் இனச் சண்டை, மதச் சண்டை, அரசியல் காழ்ப்பு ஆகியவற்றை உதறித் தள்ளிவிட்டு வெளியேவராமல் தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டே இருப்போமானால் பேரழிவு நமக்குத்தான் என்பதில் எள்முனையளவும் ஐயமில்லை!

    இக்கருத்தையே நம் மகாகவியும்,

    “ஒன்றுபட் டாலுண்டு வாழ்வே – நம்மில்

    ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

    நன்றிது தேர்ந்திடல் வேண்டும் – இந்த”

    ஞானம்வந் தால்பின் நமக்கெது வேண்டும்?” என்று எளிய தமிழில் எடுத்தோதினான்.

    புறநானூற்றுப் புதையலை ஆராய, ஆராய அதிலிருந்து முத்துக்களாகவும், மணிகளாகவும் வெளிப்படும் அரசியல் சிந்தனைகளுக்கும், அறநெறிசார் வாழ்வியல் கோட்பாடுகளுக்கும் அளவேயில்லை. எனினும் காலஅளவு கருதி ஒருசிலவற்றை மட்டுமே தொட்டுக்காட்ட இயலுகின்றது.

    ஒன்றுமட்டும் உறுதியாகக் கூறமுடியும்! புறநானூற்றைப் படித்தால் கோழையும் வீரனாவான்; அறிவிலியும் அறிஞனாவான்; சுயநலவாதியும் பொதுவுடைமையைப் போற்றுவான். எனவே தமிழர்களாகிய நாம் புறநானூற்றைக் கற்போம்; மற்றவர்க்கும் கற்பிப்போம். எலிப்பொறியில் சிக்குண்ட எலிபோல் எப்போதும் கணிப்பொறியே கதியென்று கிடக்காமல் சமயம் கிடைக்கும்போதெல்லாம் சங்கத் தமிழையும் சற்றே பருகுவோம். ‘புத்தகங்கள் வெறும் காகிதங்கள்தான்; ஆனால் படிக்கப் படிக்க அவை ஆயுதங்களாக மாறும்!” என்பார் கவிக்கோ அப்துல் ரகுமான். நம் சங்கத்தமிழ் நூல்களும் அப்படிப்பட்டவையே!

    என்னருமைத் தமிழ்மக்களே! நல்ல தமிழை நாளும் கற்போம்; வாழ்வில் உயர்வோம்!

    வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்; வாழிய பாரத மணித்திரு நாடு!!

    (முற்றும்)

    Share