இலக்கியம்கவிதைகள்

அபிராமியம்மன் பதிகம்

மேகலா இராமமூர்த்தி

 

Abirami_Ma

கல்வி நலந்தரு கன்னிகை நீயே!

செல்வ வளந்தரு செல்வியும் நீயே!

வல்லியே நிதமுனை வணங்குகின் றேனே

நல்லவை எண்ணிடும் மனமருள் வாயே!

 

அதிசயம் நிகழ்த்திடும் அன்னையே உன்னை

மதியினில் வைத்தே மனமகிழ்ந் திடுவேன்

விதியினை மாற்றிடும் விமலையே என்றும்

கதியென்று நினைத்தேன் நின்பதம் தனையே!

 

துணையற்ற மனிதர்க்குத் துணையாகும் தாயே!

இணையற்ற உன்னருட் பார்வையி னாலே

தீராத துயர்களைத் தீர்த்திடு வாயே

வாராது வந்திட்ட மனோன்மணி நீயே!

 

விடமுண்ட கண்டனின் இடப்பாகத் திருந்தே

இடர்களை கின்றாய் இப்புவி சிறக்க!

தொடரும் இருவினை எனுமிருள் நீக்கிச்

சுடரே நிலவே ஒளிதரு வாயே!

 

காலனும் உனைக்கண்டு அஞ்சிடு வானே!

வேல்விழி கண்டால் விரைந்தோடு வானே!

தோல்விகண் டறியாத் தூயவள் உனையே

பால்போல் சொற்கொண்டு போற்றிடு வேனே!

 

நிலையில்லாப் பொருட்செல்வப் பற்றினை யறுத்து

விலையில்லா அருட்செல்வம் அளித்திடு தாயே!

மலைமகள் உன்னடி பணிகின்ற பக்தர்

கலையாத கல்வியைப் பெற்றிடு வாரே!

 

அழகரசி உந்தன் எழில்தனைப் பருக

விழியிரண்டு போத வில்லையே அம்மா!

தொழுதிடு வேனுனைத் தவறாது நித்தம்

குழவியென் பிழைகளைப் பொறுத்தருள் வாயே!

 

மணியின் ஒளியாய்ச் சுடர்விடும் அன்னாய்!

பிணிகள் நீக்கிடும் மாமருந் தனையாய்!

பணிந்தே போற்றிடும் பாமர னுக்கும்

துணிந்தே அருளும் பரமனின் துணைவி!

 

பந்த பாசங்கள் எனும்தளை நீக்கி

வந்த வினைகள் ஓடிடச் செய்வாய்!

கந்த வேளினை இப்புவி தனக்கே

சொந்த மாக்கிய சுந்தர வல்லி!

 

அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுத்திட

அகமது தூய்மையாய் என்றும் திகழ்ந்திட

மறவாது பற்றினேன் நின்னடி தனையே

பிறவாமை நல்கியே பேரின்பம் காட்டு!

 

Print Friendly, PDF & Email
Share

Comments (3)

 1. Avatar

  மேகலா இராமமூர்த்தி அவர்களே!

  அபிராமி அம்மனின் மேல் துதிப்பாடல் அற்புதம்; ஆனந்தம் கோபாலன்

 2. Avatar

  அபிராமி அன்னையிடம் பிறவாமை வேண்டும் பாடல்கள் அருமை. வாழ்த்துக்கள் சகோதரி.

 3. Avatar

  அருமை, மேகலா. 
  அன்னையினருள் பூரணமாக தங்களுக்கு உண்டு.
  நவராத்திரி வாழ்த்துக்கள்.

  …… புவனேஷ்வர்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க