இப்படியும் சில மனிதர்கள்! – 6
தஞ்சை வெ. கோபாலன்
தில் வீட்டில் சாமிநாதனின் பெண்ணுக்கு தினந்தினம் நரக வேதனைதான். என்ன செய்வது? பெற்றோர்களும் மனதைக் கல்லாக்கிக் கொண்டனர். நாம் வருந்துவது தெரிந்தால் அவளுக்கும் வருத்தம் அதிகமாகும், ஆகையால் அங்கு அவள் படும் துன்பங்கள் தங்களுக்குத் தெரியாதது போல நடந்து கொள்ளத் துவங்கினர். ஆனால் அவள் தன் தம்பியிடம் போனில் பேசி தன்னை எப்படியாவது இந்த நரகத்திலிருந்து வெளியே கொண்டு வாடா, நீயும் நானும் எவ்வளவு அன்பாக, ஆசையாக விளையாடிக்கொண்டு நம் வீட்டில் சுதந்திரமாக இருந்தோம். நான் இங்கே சாப்பிட்டு இரண்டு நாள் ஆச்சுடா. நேத்து ராத்திரி இவா என்னைப் படுத்தின பாடு தாங்காம எங்கேயாவது போய் செத்துப் போயிடலாம்னு தெருக்கடைசில போயி நின்னுண்டிருந்தேன். எங்கே போறது, எப்படி சாகறதுன்னு தெரியலை. மறுபடி வீட்டுக்கே வந்து அழுதுண்டே படுத்துத் தூங்கிட்டேன். என்னை ஏண்டா அப்பா இப்படியொரு பாழும் கிணற்றில் கொண்டு வந்து தள்ளிவிட்டு, அவர் பாட்டுக்கு இருக்கிறார் என்று அழுதிருக்கிறாள். தம்பிக்கு வருத்தம் தாங்கவில்லை. நெஞ்சு வெடித்துவிடுவது போல துக்கம் அவனை வாட்டியது. உடனே ஓடிப்போய் அக்காவை அந்த கொடுங்கோலர்களிடமிருந்து மீட்டுவிட வேண்டுமென்ற வெறி. பி.காம் ஃபைனல் இயர் படிக்கும் அந்த இளைஞன் தன் அக்காவின் மேல் அளவற்ற பாசம் வைத்திருந்தான். அப்பாவிடம் சொல்லிவிட்டுத் தான் போய் அக்காவைப் பார்த்துவிட்டு வருவதாகத் தன் பைக்கை எடுத்துக் கொண்டு மாம்பலம் சென்றான்.
அக்காவின் வீட்டையடைந்த சமயம் அங்கு அக்காவுக்கு ஏதோ அர்ச்சனை நடந்து கொண்டிருந்தது. திவானா தலையை ஆட்டி ஆட்டி ஏதோ கடுமையாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். எங்க மாமியார் எனக்குச் சொல்லிக்கொடுத்தபடிதான் நான் நடப்பேன். நீ என்ன? படிச்சுட்டோம்கிற திமிர்ல பதில் பேசறே. அப்பாவை நான்கூட எதிர்த்து ஒருவார்த்தை பேசினது கிடையாது, எனக்கும் கல்யாணமாகி புக்ககம் வந்து இதோட முப்பது வருஷம் ஆச்சு. நீ ஒவ்வொண்ணுக்கும் பதில் சொல்லிண்டு நிக்கறயே. அவரை யார்னு நினைச்சே. அவா கம்பெனி எம்.டிக்கு அவர் பி.ஏ. தெரியுமா. அவர் நெனைச்சா எந்த காரியமும் சாதிக்க முடியும். அவரைப் போய் நீ எதிர்த்து பதில் பேசறது நன்னா இல்லை. நன்னா வளர்த்திருக்கா பெண்ணை என்று முனகிக் கொண்டு வாசல் புறம் திவானா வரவும் அங்கு மருமகளின் தம்பி வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
தன் அக்கா ஆதரவில்லாத அனாதையா என்ன? இந்தக் கிழவி வாயில் வந்ததெல்லாம் சொல்லி திட்டிக் கொண்டிருக்கிறாளே. என் அம்மா கூட தன் பெண்ணை ஒரு வார்த்தை அதிர்ந்து பேசினது கிடையாது. அவளுக்குக் கல்யாணம் பண்ற வரையிலும் கூட அவளைத் தன் மடியில் தலை வைத்து படுக்கச் சொல்லி அவளைக் கொஞ்சிக் கொண்டிருப்பாளே. அப்பாவுக்குக் கூட தெரியாமல் பெண் மீது செல்லம் கொடுத்து, அவள் வேண்டியதை யெல்லாம் வாங்கித் தருவாளே. அவள் காலேஜ் விட்டு வீட்டுக்கு வருவதற்கு முன்பாக அவளுக்கு ஸ்பெஷலா டிபன் பண்ணிக் கொடுப்பாளே. அவள் பசி தாங்க மாட்டான்னு அவளுக்கு மட்டும் அம்மா எவ்வளவு கரிசனத்தோடு பரிந்து பரிந்து எல்லாம் செய்து கொடுப்பாள். அவள் கால் தரையில் பட்டால் கூட அடடா, வலிக்குமே என்று வருந்தும் அந்தத் தாய் எங்கே, இங்கே சதா திட்டித் தீர்க்கும் இந்த ‘இடும்பி’ போன்ற சூன்யக்காரக் கிழவி எங்கே? அவனுக்குத் தாளமுடியாத கோபம் வந்தது.
கிழவி தன் எதிரில் வந்து நிற்கவும் அவன் கோபம் தலைக்கேறிவிட்டது. இளைஞனல்லவா? பக்குவமாய் தன் கோபத்தை வெளிப்படுத்தத் தெரியவில்லை. “என்ன மாமி. என்ன நீங்க பாட்டுக்கு என் அக்காவை ஓட்டு ஓட்டுன்னு ஓட்டிண்டு இருக்கீங்க. நான் எல்லாத்தையும் கேட்டுண்டுதான் வந்து நிக்கறேன். எங்க வீட்டிலே எங்களுக்கெல்லாம் மரியாதைன்னா என்னன்னு சொல்லிக்கொடுத்துதான் வளத்திருக்காங்க. நீங்க ஒண்ணும் புதுசா மரியாதை சொல்லித் தர வேணாம். உங்க ஆத்துக்காரர் எம்.டிக்கு பி.ஏ.வாக இருக்கலாம். எங்க அப்பா, ஃபாக்டரி மானேஜர். உங்க வீட்டுக்காரரை விட அதிக சம்பளம். அதிக அதிகாரம். பெரிய கம்பெனி. தெரியுமா?” என்றான்.
“இப்ப என்னடா ஆயிடுத்து. வந்து நுழைந்தும் நுழையாம மல்லுக் கட்டிண்டு சண்டைக்கு வரயே. இதெல்லாம் உங்காத்துல வச்சுக்கோ. இப்போ உன்னை இங்கே யாரு வெத்தல பாக்கு வைச்சு அழைச்சா?” என்றாள் திவானா.
பையனின் கோபம் இன்னும் அதிகமாகியது. “அதிகமா பேசினேள்னா தெரியும் சேதி. நான் உங்க புருஷன் இல்ல. உங்க வாய்க்கு பயந்து தொப்புக்கரணம் போட, நாக்கைப் புடிச்சு இழுத்து வச்சு அறுத்துடுவேன்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே தில் வந்து பின்புறமாக நின்று கொண்டிருந்ததைக் கண்டான்.
தில்லுக்கு மகா கோபம். “அறுப்பேடா, அறுப்பே, போடா வெளியே, யூ கெட் அவுட்” என்று கத்தினார்.
இந்த விவகாரத்தை உள்ளேயிருந்து பார்த்துக் கொண்டிருந்த சாமிநாதனின் மகள் ஓவென்று அழுது அரற்றினாள். தன் தம்பிக்கு ஏற்பட்ட சங்கடத்தை நினைத்து அவள் துக்கம் தாங்க முடியாமல் போனது. என்ன செய்வாள் பாவம். “டேய், சுரேஷ், போயிடுடா, நீ ஆத்துக்குப் போயிடு. அவாகிட்டே நின்னு பேசிண்டு இருக்காதே, அவா அப்படித்தான் பேசுவா” என்றாள்.
“நீ போடி உள்ளே. வந்துட்டா தம்பிக்கு பரிஞ்சுண்டு” என்று உத்தரவு போட்டாள் திவானா.
சுரேஷுக்கு எல்லை மீறிவிட்டது கோபம். தன்னை ‘கெட் அவுட்’ என்று சொன்ன தில்லைப் பார்த்து “என்னய்யா சொன்னே?” என்றான்.
“போடா வெளியே, கெட் அவுட்” என்று தலையைக் குனிது, கையை நீட்டி, கண்ணை மூடிக்கொண்டு அதிகார தோரணையில் அவர் விரட்ட, சுரேஷ் விட்டான் ஒரு அறை அவர் கன்னத்தைப் பார்த்து. தில் கிழம் ஆடிப்போய் விட்டது.
“என்னையா அடிச்சே, அடேய், உன்னை சும்மா விடமாட்டேண்டா, போலீசைக் கூப்பிடறேன்” என்று சொல்லிக்கொண்டே, திவானைவைப் பார்த்து “என்னடி பாத்துண்டு நிக்கறே, போயி அக்கம் பக்கத்துல இருக்கறவாள கூட்டிண்டு வா, சின்னப் பய இவன் என்னை கன்னத்துல ஓங்கி அடிச்சுட்டான், போடி” என்று பதறினார். திவானா கூண்டுக்குள் அடைக்கப்பட்ட மிருகம் மாதிரி உருமிக்கொண்டு அங்கும் இங்குமாக உலவினாள். உள்ளே மருமகள் ஓவென்று பெருங்குரல் எழுப்பி அழத்தொடங்கியிருந்தாள்.
சுரேஷ் தில் மீது பாய்ந்து அவரைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டு வெளியே வந்து தனது பைக்கை எடுத்துக் கொண்டு விர்ரென்று தன் வீடு நோக்கிப் பயணமானான் தன் அப்பா அம்மாவை அழைத்து வர. அது சின்னத் தெரு, தில் எதிர்பார்த்தது போல ஒருவரும் இவருடைய உதவிக்கு வரவில்லை. எல்லோரும் வாசலில் வந்து நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்தார்கள். அடுத்த வீட்டு மாடி ஃப்ளாட்டில் இருக்கும் பெரியவர் மட்டும் வீட்டு வாசலுக்கு வந்து, சின்ன குழந்தைகள் அவாளோடு சரிசமமா நின்னு சண்டைக்கு நிக்கறேளே. நீங்க இல்லாதபோது உங்காத்து மாமி பேசற பேச்சை அந்தக் குழந்தையாகக் கொண்டு கேட்டுண்டு பொறுமையா இருக்கு. அந்தப் பையன் அடிச்சுட்டான்னு கத்தறேளே, வெட்கமாயில்லை. வீட்டுக்கு வந்த மாட்டுப்பொண்ணை நல்லபடியாக அன்பா நடத்தத் தெரியலை, நீரெல்லாம் ஒரு பெரிய மனுஷன், தூ” என்று காறித் துப்பிவிட்டுப் போய்விட்டார். மற்ற வீட்டுக்காரர்கள் சிரித்துக் கொண்டு தங்கள் வேலையைப் பார்க்கப் போய்விட்டனர்.
அடிபட்ட தில்லுக்குப் பொறுக்கவில்லை. சின்ன பையன் அடித்தது ஒருபுறம், பக்கத்து வீட்டு பெரிசு வந்து தன்னை திட்டிவிட்டுப் போனது அவருக்கு மேலும் கோபம். தெருக்காரர்களும் ஒருத்தரும் ஆதரவாகப் பேசவில்லை, தில்லும் திவானாவும் கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே போய்விட்டனர். தெருக்காரர்கள் மீது இருந்த கோபம் முழுவதும் இப்போது அந்த அனாதை மருமகள் பெண்ணின் மீது பாய்ந்தது. சர்க்கஸ் கூண்டுக்குள் இருக்கும் புலி சிங்கத்துக்குப் போடப்படும் மாமிசத்தை அவை எப்படிக் கடித்துக் குதறுமோ அப்படியொரு குதறல் தாழிட்ட வீட்டுக்குள். பலியானது அந்தச் சின்னஞ்சிறு பெண். பாவம்!
மாலை ஆயிற்று. தில் திவானாவின் மகன் வீட்டுக்கு வந்தான். உள்ளே நுழைந்ததும் மயான அமைதியில் வீடு இருப்பதைக் கண்டான். தில்லும் திவானாவும் அவர்கள் அறையில் உட்கார்ந்து கொண்டு ‘குசுகுசு’ வென்று தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். அவன் மனைவி எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை. அவர்கள் அறைக்குச் சென்று பார்த்தான். அங்கு அவன் மனைவி தரையில் அழுது ஓய்ந்து போய் விசும்பிக் கொண்டு படுத்திருந்தாள்.
“என்னமா ஆச்சு, ஏன் இப்படி தரையிலே படுத்திண்டுருக்கே” என்று அன்போடு தன் மனைவியை எழுப்பினான் அந்தப் பையன். அவள் எழுந்து ஒன்றும் சொல்லாமல் அவன் மார்பில் சாய்ந்து கொண்டு, “என்னை கொன்னு போட்டுடுங்கோ, இந்த வீட்டிலே என்னால ஒரு நிமிஷம் கூட இருக்கமுடியாது, இல்லைன்னே எங்க வீட்டுக்குப் போறேன்” என்றாள்.
இதைக் கேட்டுக் கொண்டே அறை வாயிற்படியருகில் நின்று கொண்டிருந்த திவானா, அழிச்சாட்டியக்காரி, என்னமா டிராமா போடறா பாரு என்று சொல்லிக் கொண்டே, தன் மகனைப் பார்த்து, “இதைப் பாருடா, பொண்டாட்டி அழறான்னு உடனே அவளை சமாதானப் படுத்திண்டு இருக்கிறே. இவ தம்பி என்ன செஞ்சான் தெரியுமா? உன் அப்பாவை கை நீட்டி ஓங்கி அறைஞ்சுட்டு ஓடிப்போயிட்டான். அதைக் கேளு முதலில்” என்றாள்.
“அடிச்சுட்டானா. அவன் இங்கே வந்திருந்தானா? எதுக்கு அப்பாவை அடிச்சான்? அவன் அடிக்கும்படியா இவர் ஏதாவது சொன்னாரா?” என்றான் மகன்.
“ஆமாண்டா. பொண்டாட்டியையும் மச்சினனையும் விட்டுக் கொடுப்பியா. அப்பாவை அடிச்சுட்டாண்டான்னு சொன்னா, அவர் அதுக்கு என்ன தப்பு பண்ணினார்னு கேட்டுண்டு நிக்கறியே. ஒனக்கு அப்பா மேல கொஞ்சமாவது பாசம் இருக்கா?” என்றாள் திவானா.
“அதெல்லாம் எனக்குத் தெரியும். என்ன நடந்தது. யார் என்ன பேசினாங்கன்னு விசாரிச்சுட்டுத்தான், தப்பு யார் மேல இருந்தாலும் அவாளைக் கண்டிக்கணும். கண்ணை மூடிண்டு எதையும் என்னால செய்ய முடியாது. என்ன நடந்தது, அதை முதலில் சொல்லு” என்றான் தன் தாயைப் பார்த்து.
மகனைத் தங்கள் அறைக்கு அழைத்துக் கொண்டு போய், அவன் மனைவியும், அவள் தம்பியும் தங்களைக் கொல்ல வந்தது போலவும், இவர்கள் சத்தம் போட்டு ஊரைக்கூட்டியதும் அவன் பயந்து கொண்டு ஓடிவிட்டதாகவும் கதை அளந்தாள். நடந்த முழு விவரங்களையும் அவள் சொல்லப்போவதில்லை என்று தெரிந்து கொண்ட பையன் உடனே தன் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு சாமிநாதன் வீட்டுக்கு விரைந்தான். அங்கு போய் தன் மைத்துனனை விசாரித்தால் நடந்த விவரம் தெளிவாகத் தெரியும். மனைவியோ அழுதுகொண்டு பேச மறுக்கிறாள். அவன் மாமனார் வீடு நோக்கிப் போனான். அங்கு சாமிநாதன் தன் மகன், மனைவியோடு இவர்கள் வீட்டுக்குக் கிளம்பி வந்து கொண்டிருந்தார். மாப்பிள்ளையைப் பார்த்ததும் வீட்டுக்குத் திரும்ப அழைத்துக் கொண்டு போய் நடந்த விவரங்களை ஒன்று விடாமல் சொன்னார்கள்.
“என்னதான் அவங்க மரியாதைக் குறைவா பேசியிருந்தாலும், நீ அவரை அடித்திருக்கக்கூடாது. அவங்க பேசினது, நடந்தது எல்லாம் தப்புத்தான். அதே போல நீ அவரை அடிச்சதும் தப்புத்தான், சரி என்ன செய்யணுமோ அதைச் செய்யறேன். நீங்க இப்போ அங்கே வந்து பேசினா சண்டை இன்னும் பெரிசாகும். அதனால நான் மட்டும் போறேன்” என்றார் மாப்பிள்ளை.
“இல்லை மாப்பிள்ளை, நானும் வரேன். என் பிள்ளை செஞ்ச தப்புக்கு நான் அவர் கிட்டே மன்னிப்பு கேட்டுக்கறேன். என்ன இருந்தாலும் சின்ன பையன், இவன் அவரை கைநீட்டி அடித்திருக்கக்கூடாது, மகா தப்பு” என்றான் சாமிநாதன்.
“வேண்டாம். சொன்னா கேளுங்க. உங்க பெண்ணுக்கு நான் பாதுகாப்புக் கொடுத்துப் பார்த்துக்கறேன். தயவு செஞ்சு நீங்க இப்போ வந்து புதுசா எந்த பிரச்சினையும் ஏற்படக் காரணமா இருக்க வேண்டாம்” என்று சொல்லிவிட்டு அவர் மட்டும் போய்விட்டார். சாமிநாதன், அவன் மனைவி, சுரேஷ் ஆகியோருக்கு வருத்தம், பசியில்லை, தூக்கம் இல்லை, கவலை அவர்கள் மனதைப் பாறாங்கல் போல அழுத்திக் கொண்டிருந்தது.
அங்கே வீடு திரும்பிய மாப்பிள்ளை நேரே திவானாவிடம் போய், “அவன் அப்பாவை அடிச்சது தப்புத்தான். அவன் அதுக்காக அவர்கிட்டே மன்னிப்பு கேக்கறேங்கறான். அவா அப்பாவும் மன்னிப்புக் கேட்கறேங்கறார். ஆனா, இவ்வளவுக்கும் நீ பேசினதுதான் காரணம்னு தெரியறது. உனக்கு அவள் மருமகளா எதிரியா. ஏன் எப்போ பார்த்தாலும் அவளைப் போட்டு ரணப்புடுங்கல் புடுங்கறே” என்றார்.
“ஓகோ, மாமனார் மாமியார் சொல்லிக் கொடுத்து இங்க வந்து என் மேலயே குத்தம் சொல்லறியா. போ, போ உன் மாமனார் வீட்டுக்கே உன் பொண்டாட்டியையும் அழைச்சுண்டு போ. அப்பா அடிபட்டுட்டார்னு கவலை இல்லாம, மச்சினனுக்கும், பொண்டாட்டிக்கும் பரிஞ்சுண்டு பேச வந்துட்டியா” என்று கத்திக் கொண்டிருக்கும்போதே உள்ளேயிருந்து தில் திடீரென்று தோன்றி, தன் மகனிடம் ஆத்திரத்தோடு, “பொண்டாட்டிக்குப் பரிஞ்சு பேசிண்டு இங்கே இருக்க வேண்டாம். போகச்சொல்லு அவனை வெளில. இந்த வீட்டிலே அவாளுக்கு இடம் இல்லை. இது என் வீடு. என் சம்பாத்தியத்துல கட்டினது. அவன் மச்சினனை மட்டும் ‘கெட் அவுட்’னு சொல்லல. இவனையும்தான் சொல்றேன். போகச்சொல்லு, ‘கெட் அவுட்” என்று கத்தினார்.
மாப்பிள்ளை ஒரு நிமிஷம் மெளனமாக நின்றார். ஏதோ முடிவுக்கு வந்தது போல சரியென்று தலையாட்டிவிட்டுத் தன் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். அங்கு தன் மனைவியுடன் ஏதோ ஆலோசித்துவிட்டு ஒரு மணி நேரத்துக்குப் பிறகு கையில் பெட்டி, பைகளோடு இருவரும் வெளியே வந்தனர். தில்லும் திவானாவும் தங்கள் அறைக்குள் உட்கார்ந்து கொண்டு என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
மாப்பிள்ளை மட்டும் பெட்டியோடு ஒருவரிடமும் ஒன்றும் பேசாமல் வாயில்புறம் போனார். சாமிநாதனின் மகள் மட்டும் தில், திவானா இருக்கும் அறைக்குப் போய் மாமனார் மாமியாருக்கு ஒரு நமஸ்காரத்தைச் செய்துவிட்டு எழுந்து, அவர் எங்கேயோ அழைச்சிண்டு போராராம். அங்கேதான் நாங்க இருக்கப் போறோம். நான் வரேன்” என்று சொல்லிவிட்டு அவர்கள் பதிலுக்கு எதிர்பாராமல் விறுவிறுவென்று வந்து மாப்பிள்ளையுடன் அவர் ஸ்கூட்டரில் உட்கார்ந்துகொண்டு போய்விட்டாள்.
இருவரும் மாப்பிள்ளையின் நெருங்கிய நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றார்கள். அவர்கள் கோடம்பாக்கம் அருகில் ஒரு பலமாடிக் கட்டடத்தில் ஒரு ஃபிளாட்டில் குடியிருந்தனர். அவரிடம் சென்று நடந்ததெல்லாம் சொல்லி தங்களுக்கு ஒரு வீடு தேவை என்று கேட்டனர். அதற்கு அவர் ‘நல்ல காலம் இப்போ வந்தே. நம்ம எதிர் பிளாட் இப்போ காலியாத்தான் இருக்கு. அதன் ஓனர் எங்கிட்டே சொல்லி, நல்ல டெனண்ட் வந்தா குடிவைக்கச் சொல்லியிருக்கார். நீங்க ரெண்டு பேரும் இங்கேயே இருக்கலாம். நீங்க நன்னா செட்டில் ஆற வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் எங்காத்துல கெஸ்ட்” என்றார் அவர்.
மாப்பிள்ளை அவரிடம் சொன்னார். “ரொம்ப நன்றி. உன்னை நம்பித்தான் வெளியே போன்னு அவர் சொன்னதும் பெட்டியோடு வந்துட்டேன். எனக்கு நெற்குன்றத்துல ஒரு இடம் இருக்கு. நாளைக்கே போயி அந்த இடத்தைப் பார்த்துட்டு பாங்க் லோன் போட்டு வீட்டை கட்டிடறேன். ஒரு ஆறுமாசத்துல கட்டிட முடியாதா?” என்றார்.
“நல்ல கண்ட்டிராக்டர்னா ஆறுமாசத்துல முடிச்சுக் கொடுத்துடுவார். தாராளமா செஞ்சுடலாம். நீ கவலைப்படாதே. உனக்கு என்ன உதவின்னாலும் நான் செய்யறேன். என்னால முடியாவிட்டாலும் எனக்கு வேண்டியவங்ககிட்டே சொல்லி ஏற்பாடு செய்யறேன். நீ கவலைப்படாதே. நீ உன் காலில் நிற்கறதுன்னு முடிவு பண்ணின உன் துணிச்சலைப் பாராட்டறேன். உன் மனைவி சின்னப் பொண்ணூ. அதுக்குள்ள அவளுக்கு இத்தனை துன்பம் கூடாதுடா. அவளைக் கண்கலங்காமப் பாத்துக்கறது உன் கடமை. நான் இருக்கேன் உனக்கு வீடு கட்டறதுக்கு என்ன வேணுமோ எல்லாம் செய்யறேன் ” என்றார் நண்பர்.
அதன்பின் நெற்குன்றத்தில் தனிவீடு கட்டிக்கொண்டு இவர்கள் குடிபோனபோது மரியாதைக்காக மாப்பிள்ளை அவருடைய பெற்றோர்கள் தில், திவானாவையும் அழைத்தனர். அவர்களும் ஒன்றுமே நடக்காதது போல வந்து வாயில்படிக்கு சந்தனம் குங்குமம் இட்டு, மாவிலைத் தோரணம் கட்டி, அருகிலிருந்த ஒருவரிடமிருந்து பசுமாடு கன்றை ஓட்டிக்கொண்டு வந்து சாமிநாதனிடமும், அவன் மனைவியிடமும் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டு கிரஹப்பிரவேசம் நடந்தது. சாமிநாதனின் மகன் மட்டும் இவர்கள் பக்கம் பார்க்காமல் நின்றிருந்து விட்டுப் போய்விட்டான். அதன் பின் தில் திவானா மாம்பலம் திரும்பினர். சாமிநாதனின் மகளும் மருமகனும் நெற்குன்றத்தில் தனியாகக் குடித்தனம் செய்தனர்.
அப்பாடா விட்டது தொல்லை என்று இருக்கமுடியவில்லை. தில் திவானாவின் விஷமம் தொடர்ந்து கொண்டிருந்தது.
(தொடரும்)