இன்னாசெய்தார்க்கும் இனியவேசெய்த இறைநேசர்!

8

 

மேகலா இராமமூர்த்தி

திருச்சிற்றம்பலம்

ஒ‌வ்வொரு மாதமு‌ம் தே‌ய்‌பிறை‌யி‌ல் வரு‌ம் ‌சது‌ர்‌த்த‌சி நா‌ள் ‌சிவரா‌த்‌தி‌ரி எ‌ன்று கருதப்படு‌கின்றது. மா‌சி மாத‌த்‌தி‌ல் தே‌ய்‌பிறைக் கால‌த்‌தி‌ல் வரு‌ம் சதுர்த்தசி நாளையே நா‌ம் மகா ‌சிவரா‌த்‌தி‌ரியாகக் கொண்டாடி வருகின்றோம்.  இந்த மகா சிவராத்திரியின் வரலாறு குறித்துப் பல்வேறு புராணக் கதைகள் கூறப்படுகின்றன.

சிவனின் கண்களைப் பார்வதிதேவி விளையாட்டாக மூடியதால் ஈரேழு உலகங்களும் இருளில் மூழ்கின; அந்த நாளே சிவராத்திரி என்பர் பௌராணிகர் சிலர். ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் ’திருநீலகண்டர்’ எனப் பெயர் பெற்றார். அன்றைய தினத்தன்று இரவு தேவர்கள் பரமேஸ்வரனை வணங்கித் துதித்தனர்; அந்நாளே சிவராத்தரி எனக் கூறுகின்றனர் வேறு சில அருளாளர்கள். சிவனாரின் அடிமுடி காணமுடியாமல் நின்ற திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் நெருப்புப் பிழம்பாகச் சிவன் காட்சி தந்த தினமே சிவராத்திரி என்றொரு கருத்தும் கூறப்படுகின்றது.

சிவராத்திரி விரதமும் சிவதரிசனமும் மறலி பயத்தையும், மரண பயத்தையும் போக்கி முக்திக்கு வழிவகுக்கும் என்பது நாயன்மார்களின் கூற்று. இப்புண்ணிய நன்னாளில் சிவபக்திச் செல்வத்தால் உயர்ந்த – சிவனின் திருவருளுக்குப் பாத்திரமான ஓர் அருட்செல்வரின் வரலாற்றைச் சிந்திப்பது பொருத்தமாக இருக்கும் அல்லவா! அவ்வடியாரின் வரலாற்றை அறிந்துகொள்வோம் வாருங்கள்!

திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துவந்த மலையமான் வழித் தோன்றல்களில் ஒருவர் மெய்ப்பொருள் நாயனார். சிவனடியார்களின் திருநீற்றுக் கோலமும், உருத்திராக்கமுமே மெய்ப்பொருள் சின்னங்கள் என்று எண்ணிச் சிவனடியார்கள்பால் மிகுகாதல் கொண்டு அவர்களைப் போற்றியபடியால் ‘மெய்ப்பொருள்’ என்ற பெயர் அவருக்கு ஏற்பட்டிருக்கவேண்டும் என எண்ணுகின்றேன். சிவபக்தியில் திளைத்தவராயிருந்தபோதிலும் வாள்வலியிலும் தோள்வலியிலும் சிறந்த பெருவீரராயும் மெய்ப்பொருளார் திகழ்ந்தார். அதனால் திருக்கோவலூரை அவர்தம் பகைவர்களால் கனவிலும் நெருங்க முடியவில்லை.

அத்தருணத்தில், மெய்ப்பொருளாருடன் பலமுறைப் போரிட்டும் வெற்றி மங்கையைத் தழுவமுடியாமல் தோல்வியையே முத்தமிட்டுவந்த ’முத்தநாதன்’ என்ற பகையரசன் அவரைச் சூழ்ச்சியால் வெல்லக் கருதினான். அதற்கு என்ன வழி என்று அல்லும் பகலும் சிந்தித்தவனின் மனத்தில் அருமையான திட்டம் ஒன்று உதயமானது. ’ஆமாம்! அதுதான் சரி!’ என்று தனக்குள் கூறிக்கொண்டவன் சற்றும் தாமதியாமல் செயலில் இறங்கினான்.

தன் உடலெங்கும் திருநீற்றைக் குழைத்துப் பூசிக்கொண்டான். கையினில் ஓர் புத்தகப் பையை எடுத்துக்கொண்டு அதிலே கொலைக் கருவியாம் கத்தியை மறைத்து வைத்துக்கொண்டான். திருக்கோவலூரை நோக்கிப் புறப்பட்டான். அவன் பொய்த்தவ வேடம் எப்படி இருந்தது தெரியுமா? விளக்கானது வெளியில் சுடர்விட்டு ஒளிதந்தாலும் அதன் அடிப்பகுதியில் கருமை கொண்டதாய் இருக்குமல்லவா? அதுபோலவே முத்தநாதனின் பொய்த்தவ வேடமும் வெளியில் சிவச்சின்னங்களுடன் திகழ்ந்தாலும் மனத்திலே வஞ்சம் எனும் கருமைகொண்டு திகழ்ந்தது என்கிறார் தெய்வச் சேக்கிழார். அப்பாடல் வரிகள்…

மெய்யெலாம் நீறுபூசி  வேணிகள் முடித்துக் கட்டிக்

கையினிற் படைக ரந்த புத்தகக் கவளி யேந்தி

மைபொதி விளக்கே யென்ன மனத்தினுட் கறுப்புவைத்துப்

பொய்த்தவ வேடங்கொண்டு புகுந்தனன் முத்தநாதன்.’ (பெரியபுராணம்)

 

இத்தகைய பொய்க்கோலத்துடன் சென்றவனைக் கண்ட திருக்கோவலூர் மக்கள் அவனை உண்மைச் சிவனடியார் என்றே எண்ணி வணங்கினர். அவன் நடந்துசென்ற வழிகளிலெல்லாம் அவனுக்கு அரசமரியாதை கிடைத்தது. எளிதில் மன்னரின் அரண்மனையை அடைந்தவனைக் காவலாளிகள் அனைவரும் தொழுது ‘தேவரீர் எழுந்தருள்க!’ என்று முகமன் கூறி வரவேற்றனர். அரண்மனையின் பல வாயில்களையும் இலகுவாகச் கடந்து உள்ளே சென்றவன், அந்தப்புர வாயிலை அடைந்து உள்ளே செல்ல எத்தனித்தான். அங்கே காவல் புரிந்துகொண்டிருந்த அரசரின் மெய்க்காப்பாளனான ‘தத்தன்’ என்பவன் முத்தநாதனைத் தடுத்து, ‘ஐயா! சமயமறிந்து உள்ளே செல்ல வேண்டும்! மன்னர் பெருமான் உறங்கிக் கொண்டிருக்கின்றார். இப்போது உள்ளே செல்வது முறையில்லையே?’ என்றான். அவனைத் தீயெழ நோக்கிய அப்பொய்த்தவ வேடத்தான், ‘நான் அரசர்க்குச் சிவனாரின் உறுதிப்பொருள் ஒன்றை உரைக்க வந்துள்ளேன், என்னைத் தடுக்காதே!’ என்று கூறியவாறே உள்ளே புகுந்தான்.

சிவனாடியாரைக் கண்டதும், உறங்கிக்கொண்டிருந்த மெய்ப்பொருளாரின் அருகில் அமர்ந்திருந்த அரசமாதேவியார் துணுக்குற்று எழுந்தார். தம் கணவரையும் உடனே எழுப்பினார். உறக்கம் கலைந்து எழுந்த மெய்ப்பொருளார், அடியாரைக் கண்டதும் ஆண்டவனையே கண்டதாய் அகமும் முகமும் மலர்ந்தார். ‘ஐயனே! தாங்கள் இங்கு எழுந்தருளியது யாது கருதியோ?’ என்று அன்போடு வினவினார். மர்மப் புன்னகை பூத்த முத்தநாதன், ’சிவபெருமான் பண்டைக் காலத்தில் திருவாய் மலர்ந்தருளிய ஆகமநூல் ஒன்று என்வசம் உள்ளது. அதனை உனக்கு உபதேசிக்கவே இங்குவந்தேன்’ என்றான். பரவசமடைந்த திருக்கோவலூர் அரசர், ’பேறு எனக்கு இதன்மேல் உண்டோ? உடனே உபதேசித்து அருளுங்கள்!’ என்று மகிழ்வோடு கூற, முத்தநாதனோ அருகிருந்த தேவியாரை ஒரு பார்வை பார்த்துவிட்டு, ‘அரசே! நீயும் நானும் தனித்திருக்கும் வேளையிலேயே இவ்வாகமத்தை உபதேசிக்கவேண்டும்!’ என்று கூறக் குறிப்பறிந்த மன்னவன் தேவி உடனேயே அவ்விடம்விட்டு அகன்றார்.

 Untitled

மெய்ப்பொருளார் முத்தநாதனை ஓர் உயர்ந்த ஆசனத்தில் அமர்த்திவிட்டுத் தாம் பணிவோடு வெறுந்தரையில் அமர்ந்துகொண்டார். ‘ஐயனே! அந்த உயர்ந்த ஆகமத்தை அடியேனுக்கு இப்போது உபதேசிக்கலாமே!’ என்று குனிந்தவண்ணம் அவர் தொழுதிருந்த வேளையில், முத்தநாதன் எனும் அந்த மூர்க்கநாதன் தன் புத்தகக் கவளியில் மறைத்து வைத்திருந்த கொலைக் கருவியை எடுத்துத் தான் செய்ய நினைந்த அப்பரிசே செய்தான்(கத்தியால் குத்தினான் என்பதே இதன் பொருள்) என்கிறார் சேக்கிழார் பெருமான். (அவன் கத்தியால் குத்தினான்; கொலை செய்தான் என்பன போன்ற அமங்கலச் சொற்களை மறந்தும் நாம் பெரிய புராணத்தில் காணமுடியாது; நயத்தகு நாகரிக மொழிகளாலேயே தீச்செயல்களைக் கூடச் சேக்கிழார் விளக்கியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.) முத்தநாதனால் குத்தப்பட்ட மெய்ப்பொருளார் ’மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள்’ என்று கூறியவண்ணம் இரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

இந்நிகழ்வு நமக்குத் தெய்வப் புலவரின் ’பகைவர்கள் வணங்கித் தொழுகின்ற கையினுள்ளும் கொலைக் கருவி மறைந்திருக்கும்; அவர்கள் அழுது சொரியும் கண்ணீரும் அத்தன்மையானதே!’ எனும் பொருள்தரும் குறளை நினைவுபடுத்துகின்றது.

 

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

அழுதகண் ணீரும் அனைத்து. (குறள்: 828)

 

சிவனடியார்பால் கொண்ட காதல் காரணமாக, வந்தவர் உண்மையான சிவனடியாரா? இல்லை…பகைவனா? என்பதை மெய்ப்பொருளார் ஆராய மறந்துவிட்டார்!!

முத்தநாதனின் கொடூரச் செயலை விவரிக்கும் சேக்கிழாரின் பாடல்…

’கைத்தலத் திருந்தவஞ்சக் கவளிகை மடிமேல் வைத்து

புத்தக மவிழ்ப்பான்போன்று புரிந்தவர் வணங்கும்போதில்

பத்திரம் வாங்கித் தான்முன் னினைந்தஅப் பரிசேசெய்ய

மெய்த்தவ வேட மேமெய்ப்பொரு ளெனத்தொழுது வென்றார்.’ (பெரியபுராணம்)

 

தரையில் சரிந்த மன்னரின் குரல்கேட்டு, வாயிலில் காவல் புரிந்தபோதிலும் தன் கவனம் முழுவதையும் உள்ளேயே வைத்திருந்த மெய்க்காவலன் தத்தன் உள்ளே பாய்ந்துவந்தான். அரசரின் நிலைகண்டு வெகுண்டவன் தன் உடைவாளை உருவி முத்தநாதனைக் கொல்லமுற்பட, அப்போதும் முத்தநாதன்பால் மாளாத அன்புகொண்ட மெய்ப்பொருளார் தன் காவலனைத் தடுத்து, ‘தத்தா நமரே காண்! (தத்தா! அவர் நம்மவர்(சிவனடியார்) அவரை ஒன்றும் செய்யாதே!) எனக் கூறவே, செய்வதறியாது திகைத்த தத்தன், ‘பெருமானே! இப்போது நான் என்ன செய்ய?’ என்று நாத்தழுதழுக்க, கண்ணீர்மல்க மெய்ப்பொருளாரை வினவினான். ’இந்த அடியாருக்கு யாதொரு தீங்கும் நேராவண்ணம் நம் ஊரின் எல்லையில் கொண்டுபோய் விட்டுவா, இது என் ஆணை!’ என்றார் மாசிலா மாணிக்கமாம் மெய்ப்பொருள் நாயனார்.

மன்னரின் கட்டளையைச் சிரமேற்கொண்ட தத்தன், (மன்னரின் நிலையறிந்து)  முத்தநாதனைக் கொல்லவிழைந்த மற்ற காவலர்களிடமிருந்து அந்தப் பொய்வேடத்தானைக் காத்து, ஊரெல்லையில் அவனைப் பத்திரமாகக் கொண்டுசேர்த்துவிட்டு விரைந்துவந்தான் அரசரைக் காண! அவன் திரும்பி வரும்வரையில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்த மெய்ப்பொருளார், தம்மை நோக்கி விரைந்து வந்துகொண்டிருந்த தத்தனின் முகத்தை ஆவலோடு நோக்கினார். தத்தனும் குறிப்பறிந்து, ‘அரசர் பெருமானே! தங்கள் ஆணைப்படி அடியாரை இடையூறு ஏதுமின்றி ஊரெல்லையில் பத்திரமாகச் சேர்த்துவிட்டேன்!’ என்றுகூறிப் பொங்கிவந்த அழுகையை அடக்கிக் கொண்டான். தத்தனை அன்புமீதூறப் பார்த்த நாயனார், ‘ஐயனே! இன்று நீ எனக்குச் செய்த இவ்வரிய உதவியை இனி யாரே செய்வார்?’ என்று அவனைப் பாராட்டிவிட்டுத் தம்மைச் சூழ்ந்துநின்ற சுற்றத்தார், அமைச்சர் பெருமக்கள், அரசியார் அனைவரையும் நோக்கி, ’திருநீற்றினிடத்து (சிவனடியார்களிடத்து) வைத்த அன்பினைச் சோர்வு வாராது பாதுகாத்து உலகிலே கொண்டு செலுத்தக் கடவீர்!’ என்று அன்புக் கட்டளையிட்டுவிட்டுச் சிற்றம்பலத்திலே ஆனந்தக் கூத்தாடும் அம்பலவாணரின் அழகிய கழலணிந்த திருவடிகளைச் சிந்தித்தவண்ணமே கண்மூடியிருந்தார். அப்போது, மெய்ப்பொருளாரின் சிந்தையில் கொலுவீற்றிருந்த அம்பலவாணர் சிவகாமியம்மை சகிதம் தம்மினிய தொண்டர்க்குச் காட்சிதந்து நீங்காமல் தம் திருவடிகளில் தங்கியிருக்கும் பெரும்பேற்றையும் மெய்ப்பொருளார்க்கு அளித்தார் என்பது மெய்ப்பொருள் நாயனார் வரலாறாகும்.

’பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே!’ என்ற மகாகவியின் வாக்கிற்குச் சான்றாகவும், வள்ளுவப் பெருந்தகையின்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்.

மற்றும்

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு. என்ற குறட்பாக்களுக்கும் இலக்கணமாய்த் திகழ்கின்றார் மெய்ப்பொருள் நாயனார் என்பது அவர் வரலாறு வாயிலாய்ப் புலனாகும் செய்திகளாகும்.

சிவபரம்பொருளுக்குப் பெரிதும் உகந்த இச்சிவராத்திரித் திருநாளில் சித்தத்தைச் சிவன்பால் வைத்துப் பிறவாப் பெருநிலையை அடைந்த சிவநேசச் செல்வர்களைச் சிந்தித்துப் பயன்பெறுவோம்.

திருச்சிற்றம்பலம்

படத்திற்கு நன்றி: தினமலர்

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “இன்னாசெய்தார்க்கும் இனியவேசெய்த இறைநேசர்!

  1. சிவன் இராத்திரியை முன்னிட்டு மெய்ப்பொருள் நாயனார் அவர்களின் வாழ்க்கையை விளக்கியிருப்பது நன்று. இதற்கு முன் தாங்கள் கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி எழுதி இருந்த பொழுதே, தங்கள் வாயிலாக அனைத்து நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றையும் அறியும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன். நேரம் அனுமதிக்குமாயின் மேலும் சில நாயன்மார்களைப் பற்றி தாங்கள் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி!

  2. //// இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயம் செய்து விடல்.

    மற்றும்

    இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
    என்ன பயத்ததோ சால்பு. ////

    இந்திய விடுதலைப் பிதா, அண்ணல் மகாத்மா காந்தியின் அகிம்சை நெறியை இதோ 2000 ஆண்டுக்கு முன்பே வள்ளுவர் வகுத்துள்ளாரே.

    உன்னத கருத்தைப் பகிர்ந்ததற்குப் பாராட்டுகள், மேகலா.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்

  3. அன்பே சிவம் என்று வாழ்ந்து காட்டிய இறைநேசர் மெய்ப்பொருள் நாயனார் கதையை விளக்கிய கட்டுரை சிவரா‌த்‌தி‌ரிக்குப் மிகவும்பொருந்தும் வகையில்  அமைந்துள்ளது  மேகலா.

    நல்லதோர் கட்டுரையின் மூலம் இறையாண்மையின் மெய்ப்பொருளை உணர்த்திவிட்டீர்கள்.   அருமையான பகிர்வு, வாழ்த்துகளும் பாராட்டுகளும்..

  4. கட்டுரையைப் படித்துத் தங்கள் கருத்துக்களையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ள அன்பு நண்பர்கள் திரு. சச்சிதானந்தம், ஜெயபாரதன் ஐயா, தோழி தேமொழி ஆகியோர்க்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
    வாய்ப்புக் கிடைக்கும்போது வேறுசில நாயன்மார்களின் வரலாற்றையும் ’வல்லமை’யில் பகிர்ந்துகொள்கின்றேன்.

    அன்புடன்,
    மேகலா

  5. மேகலாவின் அருமையானதொரு பகிர்வு!..  ஒவ்வொரு மடலாக, மொட்டவிழ்ந்து பூ மலர்வது போல, தெளிவாக, மிக அழகாக, விளக்கியிருக்கிறீர்கள்!..இதை அப்படியே நாடகமாக்கி விடலாம்!.. காட்சியமைப்புகள், உணர்வுகளின் வெளிப்பாடு என அனைத்தும் கனகச்சிதமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.. இதை ‘மேகலாவின் பாணி’ என்றே சிறப்பிக்கலாமோ!.. மிக்க நன்றி மேகலா!..

  6. கட்டுரை குறித்த கருத்துக்களை மிகச் சிறந்த சொற்களால் வடித்திருக்கும் அன்புத் தோழி பார்வதிக்கு என் நன்றிகள்!

  7. இதுவரை அறிந்திராத மெய்ப்பொருள் நாயனார் வரலாற்றை பெரிய புராணப் பாடல்களோடும் பாடல் சிறப்போடும்  தெள்ளந்தெளிவாக வழங்கி அறியத் தந்தமைக்கு நன்றி மேகலா.

  8. தங்கள் பாராட்டு மொழிகளுக்கு நன்றி கீதா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *