கிரேசி மோகன்

ஓவியம் ; கிரேசி மோகன்
ஓவியம் ; கிரேசி மோகன்

அப்பர் தமிழ்கேட்டு வெப்பக் களவாயை
அப்பிய சந்தனமாய் ஆக்கியோய் -தப்பில்
குதியிட்டுத் தாழ்ந்தேன் மதியில் சதங்கை
ஜதியிட்டுத் தாண்டவ மாடு….
அசையும் உயிரில் அசைவாய் இருந்து
அசையாது நிற்கும் அரனே – இசைந்து
பசையாய் இடபாகம் பற்றிய உமையும்
அசைந்திடத் தாண்டவ மாடு….
இல்லையென்று சொல்வோர்(கு) இயம்ப பதிலில்லை
தில்லையில் என்வீட்டுத் திண்ணையில் -இல்லையேல்
கொல்லையில் நான்மட்டும் காண்பதற்கு இல்லையென்று
சொல்லாது தாண்டவம் ஆடு….
இல்லம் புகந்தன்று பிள்ளைக் கறியுண்டு
வெள்ளை மனச்சிறுத் தொண்டர்தம் -உள்ளத்தை
சோதித்த ஆண்டவா சொக்கநாதா என்நெஞ்சில்
தாதித்தை தாண்டவம் ஆடு….
கால்கட்டு சுந்தரர்க்கு கைகட்டு போட்டவரின்
மால்கட்(டு) அவிழ்த்த மகாதேவா -நூல்கட்டி
ஆட்டுவிக்கும் அம்பலனே ஆடுமிந்த பொம்மையை
ஆட்படுத்த தாண்டவம் ஆடு….

மண்சுமந்து பிட்டுக்குப் புண்சுமந்தாய் மேனியில்முக்
கண்சுமந்து கந்தனைக் கண்டெடுத்தோய் -பெண்சுமந்த
பாகத்தோய் நஞ்சுண்ட தாகத்தோய் என்நெஞ்சில்
ஆகமத் தாண்டவம் ஆடு….
முடவனன்று வேண்ட தடதடவென்(று) ஓடி
குடமுழுக்(கு) ஆடிய கும்பேசா -விடமுண்டோய்
ஆடை கரித்தோல் அணிந்தெனது நெஞ்சமாம்
மேடையில் தாண்டவம் ஆடு….
நாம்நமதை விட்டு நமச்சிவாய நாமத்தை
ஒம்நமஹ சேர்த்தென்றும் உச்சரிப்போர் -காமமதை
வென்றிடக் கைகொடுக்கும் விஸ்வேசா என்நெஞ்ச
மன்றிடைத் தாண்டவம் ஆடு….

நாரதன் தும்புரு நந்தி மிருதங்கம்
பாரதி வீணை பயின்றிட -வாரிதி
வானைப் பிடித்திட வையம் அறிந்திட
தாணுவே தாண்டவம் ஆடு….
நாவாரப் பைந்தமிழில் தேவாரப் பிள்ளைக்குப்
பாவூற வைத்த பரமசிவா -பூவாரம்
கொன்றையும் கங்கையும் கொண்டையில் சூடியோய்
என்றென்முன் தாண்டவம் ஆடு….

பதினாறைப் பெற்றோன் பெருவாழ்வைப் போக்க
அதிகாரம் செய்த எமனை -குதிகாலால்
எட்டி உதைக்க எழுந்த பதமென்மேல்
பட்டிடத் தாண்டவம் ஆடு….
பெரிய புராணம் படித்தறி யேனே
நரியைப் பரியாக் கியவா -இறைவாநான்
நாயன்மார் ஆகிஉன் நாமம் ஜபித்திட
நீயென்மார் தாண்வம் ஆடு….
பிரிவோடு வாழ்ந்த திருநீல கண்டன்
உறவோடு சேர உகந்தோய் -திருவாரூர்
த்யாகேசா தில்லை நடராசா நெஞ்சத்(து)
ஆகாசம் தாண்டவம் ஆடு….
பூசலா நாயனாரின் மாசிலா நெஞ்சத்து
வாசியாக கோயில் வளர்த்தோய் -காசிக்கு
வந்துன்னைக் காண்போரை வாழ்விப்போய் என்நெஞ்சில்
தந்தனத்தோம் தாண்டவம் ஆடு….

தேனிக்குப் போட்டியாய் மாணிக்க வாசகன்தன்
ஆணிப்பொன் பாக்கள் அருந்தியுந்தன் -தீவிக்கும்
கண்டத்து நஞ்சை அமுதாக்கிய சங்கரா
பண்டைஊழ் தாண்டவம் ஆடு….
விழிமலர்த் தூவி வழிபட்ட வேடன்
அழிவிலா நாயன்மா ராக -வழிவகுத்தோய்
நானார் அறிந்திட நீயென்னுள் ஆனந்தக்
கோனாராய் தாண்டவம் ஆடு….

அஞ்சை அடக்கிடலாம் அஞ்சா(து) இருந்திடலாம்
அஞ்சிரெண்டு மாதகர்பம் ஆட்படாய் -அஞ்சிலொன்றில்,
அஞ்சிலொன்றைத் தாண்டிய அஞ்சனசேய் அம்சமான
அஞ்செழுத்துக் காரன் அளிப்பு
————————————————————————————————————————–

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *