பாரதிப் புலவனைப் போற்றுவோம்!
மேகலா இராமமூர்த்தி
அடிமை யிருளது அகன்றிட
அக்கினிக் குஞ்சென வந்தவன்!
மடமை எனும்களை அழித்திட
அறிவுக் கோடரி யானவன்!
சுதந்திர தேவிதன் துயிலெழப்
பள்ளி யெழுச்சியைப் பாடினான்!
மதத்தின் பெயரினால் சண்டைகள்
செய்பவர் தம்மையே சாடினான்!
கண்ணனைக் காதலி ஆக்கியே
கண்டு மகிழ்ந்திட்ட கோமகன்!
எண்ணத்தில் உறைந்தவள் சக்தியே
என்று உரைத்தநல் பாமகன்!
ஆணும் பெண்ணுமே நிகரென
வீர முழக்கத்தை எழுப்பினான்!
நாணும் அச்சமும் நாய்கட்கே
நங்கையர்க் கெதற்கென வினவினான்!
பைந்தமிழ்த் தேர்ப்பாகன் ஆகியே
பா ரதம் ஓட்டிய பாவலன்!
நைந்திடும் உள்ளங்கள் ஒளிபெற
பாரதம் கண்டமா கவியிவன்!
செத்தபின் சிவலோகம் எண்ணாமல் இப்போதே நாடு அறிவைதேடு என்ற மீசைக்கவிஞனின் பிறந்ததினம் அவனை போற்றி வந்த கவிதையில்
“பைந்தமிழ்த் தேர்ப்பாகன் ஆகியே
பா ரதம் ஓட்டிய பாவலன்!” என்ற வரிகளில்
பா ரதம் அருமையான சொல்லாட்சி பாராட்டுக்கள்
///பா ரதம் ஓட்டிய பாவலன்!
நைந்திடும் உள்ளங்கள் ஒளிபெற
பாரதம் கண்டமா கவியிவன்!///
அருமை … அருமை ….மேகலா
பாரதிப் புலவனைப் போற்றும் தங்கள் கவிதை வரிகள் மிகவும் அருமை. குறிப்பாகக் கடைசி நான்கு வரிகள் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.
கவிதையை வாசித்துப் பாராட்டிய நண்பர்கள் தனுசு, சச்சிதானந்தம், தோழி தேமொழி ஆகியோருக்கு நன்றிகள்.