Author: editor

  • வெகுமதிகள் தேவைதான்…..

    பவள சங்கரி

    தலையங்கம்

    மும்பை மாநகரில் இணையத் தொடர்பு அனைத்துப் பகுதிகளிலும் இலவசமாக கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது நல்ல செய்தி என்றால் அதைவிட நல்ல செய்தி அனைத்துக் கட்சியினரும் இணைந்து இந்த நல்லதொரு பணியை செய்திருப்பதுதான். வாக்குகளுக்காக இலவசங்களும், வெகுமதிகளும் வழங்குவதைக்காட்டிலும் இது போன்று ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவது வரவேற்புக்குரியது. இந்தியாவிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் இது போன்ற மாற்றம் ஏற்பட்டால் அதுதான் நம் நாட்டின் பொன்னான காலம். . நாடும் வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போடும் என்பதும் உறுதி..

    பத்தாண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தில் ஏற்பட்ட சோக நிகழ்விற்கு இப்போதுதான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காலங்கடந்த தீர்ப்பு.. இனிமேலும் இது போன்ற அவலங்கள் தொடராமல் இருக்க வேண்டும் என்ற உண்மையான நல்லெண்ணம் கொண்டவர்களாக இருப்பின், பொதுப்பணியில் இருக்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் சேர்ந்தோ அல்லது தனித்தோ அந்தப் பள்ளி மற்றும் இது போன்ற மோசமான நிலைகளில் இருக்கும் மற்ற கல்வி நிலையங்களையும் தத்து எடுத்துக்கொண்டு நிலையான கட்டிடங்களைக் கட்டிக்கொடுத்தால் எவ்வளவு சிறந்த செயலாக அது இருக்கும். ”தேர்தலுக்கு முன்பே நாங்கள் செய்து காட்டிவிட்டோம் தேர்தலில் எங்களைத் தேர்ந்தெடுத்தால் நாங்கள் இன்னும் உற்சாகமாகப் பணியாற்றுவோம்” என்று இப்படி ஆதாரப்பூர்வமாகக் கூறினால் மக்கள் அவர்களை தேர்ந்தெடுக்காமல் விடுவார்களா என்ன?

    மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் ஒரு கிராமமே மண்ணில் புதையுண்டு உள்ள, மனதை உலுக்கும் சோக சம்பவம் நடந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 82 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 100 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இன்னும் எத்தனை சடலங்கள் கிடைக்குமோ தெரியவில்லை. ஒரு நாளில் மாற்றம் ஏற்பட்டு சரிவை ஏற்படுத்தக்கூடிய தன்மையுடைய மண் அல்ல அது. இலகுவான தன்மை கொண்ட மண் என்பதால் எப்போதும் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படலாம் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியிருக்கும்போது மழைக் காலம் வருவதற்கு முன்பே அந்தப் பகுதியைச் சார்ந்த அரசியல் கட்சிகள் அந்த கிராமத்தின் மீது தங்கள் முழு கவனத்தையும் செலுத்தி, நிலையான கட்டுமானப் பணிகளைச் செய்திருந்தால் இந்த கோரச் சம்பவம் நிகழாமல் தடுத்திருக்கலாம். எச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால் இந்த கோரச் சம்பவத்தால் உயிர் சேதம் ஏற்பட்டதை தவிர்த்திருக்கலாம்.

    kosi_PTI_2036476hஇந்த நிகழ்வுகளின் சோகம் மறைவதற்கு முன்பே அடுத்த நிகழ்வும் தயாராகிவிட்டது. கோசி நதியின் வெள்ளப் பெருக்கால் பீகாரில் 6 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு 1 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேபாள நாட்டில் உற்பத்தியாகும் கோசி நதியில், அங்கு பெய்யும் தொடர் மழை காரணமாக திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது கோசி ஆற்றில் 12 மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் வந்து கொண்டு இருக்கிறது. கோசி நதி, பீகார் மாநிலத்தின் 6 மாவட்டங்கள் வழியாக மேற்கு வங்காளத்தில் சென்று வங்கக் கடலில் கலக்கிறது. கோசி நதியின் குறுக்கே உள்ள பிர்பூர் அணையில் இருந்து இப்போது வினாடிக்கு 2½ லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    கோசி நதியின் வெள்ளப்பெருக்கும், இதே போன்ற நிலச் சரிவும் நேபாளத்தையும், நமது பீகார் மாநிலத்தையும் பெரிதும் தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 13 கரையோர மாவட்டங்களைச் சார்ந்த ஒரு இலட்சத்து முப்பதினாயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பேரிடர் களையும் குழுக்கள் நேபாளத்திற்கு ஒன்றும், பீகாருக்கு ஆறு குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளன. கங்கைக்கு 2500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது போன்று இந்த மாவட்டங்களின் புனரமைப்பிற்கும் அந்த நதியை சீரமைப்பதற்கும் சில கோடிகள் ஒதுக்கினால் வருமுன் காக்க முடியும். கடந்த 2008–ம் ஆண்டு நேபாளத்தில் பெய்த மழையால் கோசி நதியில் இதே போல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பீகாரில் பேரழிவும் ஏற்பட்டது. அதில் நூற்றுக் கணக்கானோர் பலியானதும், 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதோடு, 8 லட்சம் ஏக்கரில் பயிர்கள் சேதம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

    மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லக்கூடிய மலைப்பாதையும் இது போன்ற இலகுவான மண் அமைப்பைக் கொண்டதே. மழைக் காலம் என்றால் பாதையில் சரிவு ஏற்படுவதும், மரங்கள் வேரோடு சாய்வதும், ஆண்டுதோறும் ஏற்படக்கூடிய நிகழ்வுகள் தான் என்று அனைவருக்கும் தெரியும். இருப்பினும் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்பட்ட பின்புதான் நாம் அதைப்பற்றி கவனம் கொள்கிறோம். இது போன்ற மண் அமைப்புதான் மூணாறிலும் உள்ளது. மக்களுக்காகச் சேவை செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளும், தொண்டர்களும் சிந்திக்க வேண்டிய விசயம் இது. மக்களுக்கான இது போன்ற பாதுகாப்பு மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை வெகுமதியாகத் தருபவர்களுக்கு வாக்களிக்க மக்களுக்கு என்ன தடை இருக்கப் போகிறது. எந்தக் கட்சியாக இருந்தால் என்ன.. உண்மையான சேவை செய்யும் கட்சி மட்டுமே மக்களைக் கவர முடியும் என்பதே சத்தியம். வருமுன் காக்க வாருங்கள் நல்லுள்ளங்களே!

    Share
  • அடுக்குமாடி குடியிருப்புகளும், ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    சென்னையில் மீண்டும் ஒரு அவலம். நில அதிர்வாலோ அல்லது சுனாமியாலோ ஏற்பட்ட பேரழிவு அல்ல. அரசு அலுவலர்களின் அலட்சியப் போக்கால் ஏற்பட்ட அவலமே இது. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பாதுகாப்புச் சட்டங்கள் பல இருக்கின்றன. அவைகள் சட்ட அளவில் மட்டும் இருக்கும் போல் உள்ளது. கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி அளிப்பதற்கு முன்பு முறையான மண் பரிசோதனை, நில ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா என்று தெரியவில்லை. அந்த இடத்தில் ஆறு மாடிகள் கட்டலாம் என்று வல்லுநர்களின் அத்தாட்சி பெற்ற பின்புதான் பதினொரு மாடி கட்டப்பட்டது என்றால் பதினொரு மாடி கட்டி முடிக்கும் வரை அரசு பொறியாளர் எங்கு சென்றுவிட்டார். அவருடைய கவனத்திற்கு இந்தச் செய்தி எப்படி எட்டாமல் இருந்திருக்கும்? அவருடைய அலட்சியப்போக்கின் விலையாக இன்று எத்தனை உயிர்களை பலி வாங்கிவிட்டது. இந்தக் கட்டுமானப் பணியில் பயன்படுத்தப்பட்ட பொருட்களுக்கான தரச் சான்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இது மாநகராட்சி அலுவலர்களின் அலட்சியப் போக்கால் ஏற்பட்ட அவலம். குடியிருக்க ஒரு வீடு சொந்தமாக வேண்டும் என்ற ஆசையில் எங்கோ இருந்துகொண்டு சிரமப்பட்டு, வாயைக்கட்டி, வயிற்றைக் கட்டி ஒரு வீட்டை வாங்குபவர்களும், இந்த கட்டுமானப் பணிகளுக்காக, வயிற்றுப்பாட்டிற்காக பீகார், ஆந்திரா, மத்திய பிரதேசம் போன்ற இடங்களிலிருந்து குடும்பத்துடன் வேலைக்கு வந்தவர்கள் என இரு சாராரும் இன்று கடுமையாகப் பாதிக்கப்பட்டு வேதனையின் உச்சத்தில் இருக்கிறார்கள். இறந்த பிறகு அவர்களுடைய பிணங்களை வந்துப் பார்த்து ஆறுதலளிப்பதைவிட, அமைச்சர் பெருமக்கள் தங்களுக்குக் கீழ் உள்ள நிர்வாக அதிகாரிகளை சரியான முறையில் பணியாற்றச் செய்திருந்தாலே இந்த கோர சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம். கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்யாமல், இனியாவது சென்னை மாநகரைச் சுற்றி கட்டிக்கொண்டிருக்கும் குடியிருப்புகளை ஆய்வு செய்து, தரச் சான்றிதழ்கள் தருவார்களா மாநகராட்சி அலுவலர்கள் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    10514583_1459257254331310_1997140068682654040_n

    தமிழக அரசும், கட்டுமான நிறுவனங்களும், கட்டிடங்கள் கட்டுவதற்காக தங்களுடைய வயிற்றுப்பாட்டிற்காக வெளியூரிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு, உயிர் காப்பீடும், மருத்துவக் காப்பீடும் உறுதி செய்ய மனதுவைக்க வேண்டும். பல லட்சம் மதிப்புள்ள இந்தக் கட்டிடங்களை வாங்குபவர்களின் பாதுகாப்பிற்காகவும் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு காப்பீடு செய்யப்பட வேண்டும். இதில் பயன்படுத்தப்படக்கூடிய சிமெண்ட், மின்பொருட்கள், இரும்புப் பொருட்கள் போன்றவைகளின் தரம் பரிசோதிக்கப்பட வேண்டும். இனியாவது இது போன்ற மோசமான அழிவுகள் ஏற்படாமல் இருக்க அரசு ஆவண செய்ய வேண்டும். தமிழக அரசு நியமித்துள்ள ஒரு நபர் ஆணையம் இதன் போக்கில் எந்த அளவிற்கு ஆக்கப்பூர்வமாகச் செயல்படப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன் – கட்டுரைப் போட்டி முடிவுகள்!

    அன்பு நண்பர்களே,

    கண்ணதாசன்-பிறந்தநாள்-நக்கீரன்-படம்5

    இதோ நாமெல்லாம் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த, நடுவர் திரு வ.வே.சு. அவர்கள் வழங்கியுள்ள  “என் பார்வையில் கண்ணதாசன் – கட்டுரைப் போட்டி” முடிவுகள் இதோ 

    10247260_435875026549812_5280102860535261571_n

    போட்டியில் உற்சாகமாக பங்கெடுத்துக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். வெற்றி பெற்ற அனைவருக்கும்M.-RAVI-KAVIRI1-150x150 பாராட்டுகள். போட்டியை முன்மொழிந்துள்ள கவிஞர் திரு காவிரி மைந்தன், தம்முடைய இடைவிடாத பணிச்சுமையிலும், நடுவர் பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்று, வல்லமையுடன் தம் தீர்ப்பை சிறந்த முறையில் வழங்கியுள்ள கவிஞர் திரு வ.வே.சுப்பிரமணியம் அவர்களுக்கும் மற்றும் அனைத்து எழுத்தாளர்களையும், ஊக்குவித்தும், உற்சாகப்படுத்தியும், மென்மேலும் சிறப்பாக காவியம் படைக்க உந்து சக்தியாகத் திகழும் நம் வாசகப் பெருமக்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. பரிசு பெற்றவர்கள் தங்கள் உள்நாட்டு முகவரிகளை vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் பரிசுத் தொகை அனுப்பி வைக்கப்படும்.

     

    தீர்ப்புக் கட்டுரை- நடுவர் வ.வே.சு

    ஒரு முக்கியமான சேதியை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

    கவியரசரின் பெயரைச் சொல்லி எது கேட்டாலும் நான் மறுக்காமல் ஒத்துக் கொண்டு விடுவேன்.  இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பது, காவிரிமைந்தன் கேட்ட உடனேயே கட்டுரைகளைத் தேர்வு செய்யும் நடுவராக இருக்க நான் ஒத்துக் கொண்டதிலிருந்து நிரூபணமாகிவிட்டது..

    அப்புறம் கொஞ்சம் யோசித்துப் பார்த்த பிறகே நான் இந்தப் பணிக்குத் தகுதியானவனா என்ற ஐயம் வலுத்தது. இந்தத் தன்னிலை விளக்கத்திற்கும் தன்னடக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை என்னை அறிந்தவர்கள் நன்றாகவே அறிவார்கள்.

    பிறகு என்னதான் பிரச்சனை? கவியரசரின் வரிகளுக்குள்ளேயே ஆழ்ந்துவிட்டதுதான் பிரச்சனை. ஒரு புறம் அவருடைய ஒற்றைச் சொல்லை ஒருவரியில் பாராட்டி எழுதினாலே எங்கள் சொத்தை எழுதி வைக்கும் கூட்டம் நாங்கள். இன்னொரு புறம் அவருடைய ஒருவரியைப் பத்து பக்கங்கள் எழுதிய பின்னாலும் இன்னும் நூறு பக்கங்கள் ஏன் எழுதவில்லை என்று குறைபட்டுக் கொள்ளும் கூட்டம் நாங்கள். இதில் எப்படி நடுவராக இருந்து இது முதல் இது அடுத்தது என்று தேர்வு செய்ய..? கவியரசரின் இரசிகனாக, அனுப்பப்பட்ட அனைத்து கட்டுரைகளுக்கும் முதலிடம் என் நெஞ்சில் கொடுக்கப்பட்டுவிட்டதை அறிவிப்புச் செய்கிறேன்.

     கவியரசரை எழுத்தெண்ணிப் படித்தும் கேட்டும் இரசித்த என்னை போன்றவனுக்கு, பிறர் அவரை இரசிப்பதை அருகிருந்து பார்க்கக் கூடிய அரிய வாய்ப்பை வழங்கிய எனது இனிய நண்பர் காவிரி மைந்தனுக்கும், போட்டியை நடத்தும் வல்லமை குழுவுக்கும் ஆசிரியர் பவளசங்கரிக்கும் நிரம்ப நன்றி.

    இனி கட்டுரைப் போட்டியின் நடுவராக என் பணி முடிவுகள்:

    மொத்தம் வந்த கட்டுரைகள் முப்பது. அத்தனையும் முத்துக்கள்; இரத்தினங்கள். காரணம் அனைவருமே கண்ணதாசனென்னும் ஆழ்கடலுள் மூழ்கி முக்குளித்து எழுந்தவர்கள். யாரும் சோடை போகவில்லை. கவியரசரின் வரிகளை இடைகட்டித் தொடுத்த பிறகு எந்த மாலைதான் மணம் வீசாதிருக்கும்? எனில் தரம் பிரிப்பது எவ்விதம்? எல்லார் கைகளிலும் ஆணிப்பொன் தான். ஆனால் அதை எப்படிப்பட்ட ஆபரணமாக ஆக்கியிருக்கிறார்கள்? அங்குதான் கொஞ்சம் வேறுபாடு. அதற்குக் காரணம் அணுகுமுறை.

    சிலர் கவியரசரின் வாழ்க்கையை மட்டுமே எழுதியுள்ளனர்; சிலர் அதில் தம் வாழ்க்கை பிணைந்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். சிலர் பொது வாழ்க்கைத் தத்துவமே அதில் அடங்கியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளனர். சில கட்டுரைகளில் இலக்கிய ஊடாடல்களும் ஒப்புமைகளும் அதிகம் இருந்து சுவை கூட்டின; சிலவற்றுள் கவியரசரின் வரிகள் கண்ட வாழ்க்கை அனுபவங்கள் அருகு நெருங்கி அரவணைத்துக் கொண்டன. சிலவற்றில் கண்ணதாசன் மீது காதல்; சிலவற்றில் பக்தி; இன்னும் சில கட்டுரைகள், கவிதை வரிகளின் இடைபயிலும் மோனத்திற்குக் கூட மெட்டமைத்துப் பார்த்துள்ளன.

    அணுகுமுறை,.கருத்துத் தெளிவு, மொழி ஆளுமை, போட்டி விதிமுறைகளுக்கு உட்பட்ட கட்டுரை நீளம் ஆகிய துணை அலகுகளைக் கொண்டுதான் கட்டுரைகளை வரிசைப்படுத்தியுள்ளேன். ஆனால் இதையும் தாண்டி ஒரு பரவசத்தையும், துள்ளலையும் உயிரோட்டத்தையும் எந்தப் படைப்பில் பார்த்தேனோ அதைத்தான் பரிசுக்காகத் தேர்ந்தெடுத்துள்ளேன்.

     

    மூன்று முதலிடங்கள்

    1. 1.   விசாலம்” அற்புதமான கற்பனை நேர்காணல். இரவு எட்டு மணிக்குக் கவியரசரோடு பேசத் தொடங்கி அருகிலுள்ள கோயிலின் இரவு மணியோசை மறையும் வரை பேசியதைப் பதிவு செய்துள்ளார். எடுத்த உடனேயே கவிஞரின் அழகு முகத்தைப் படம் பிடித்து நம் நெஞ்சில் இடம்பிடிக்கிறார். வான்நிலா என்று தொடங்கி, கவிஞரின் வாழ்க்கைப் பாதையோடும் அவர் படைப்புகளோடும் நம்மைப் பயணிக்க வைக்கிறார். இதற்குக் கண்ணதாசனே சாட்சி.! தெரிந்தாலும் பலர் வெளிச்சம் போடாத சேதி. நடமாடும் தெய்வமாக வாழ்ந்த காஞ்சி முனிவரோடு கவிஞருக்கு நிகழ்ந்த சந்திப்பைச் சொல்லியிருக்கிறார். கண்ணதாசன் என்ற அந்த ஆளுமையைக் கற்பனையிலேனும் அருகே கண்டு பேசுவதுதான் கட்டுரைக்கு உயிர் கொடுக்கும் என்ற இவரின் அணுகுமுறை பாராட்டுக்குரியது. பொதுவாக நேர்காண்பவர் குறைவாகவும் பதிலளிக்கும் பிரபலம் அதிகமாகப் பேசுவதும் மரபு. இங்கே அது தலைகீழ்; காரணம் கவிஞரின் மவுன சம்மதத்தில் இவரே அவர் சார்பில் பதில்களைக் கொடுத்துள்ளார். இந்த நெருக்கம் கட்டுரையின் உயிர்ப்புக்கு அடித்தளம் அமைக்கிறது.
    1. 2.   அருமையான இன்னொரு கட்டுரை; ஜெயஸ்ரீ ஷங்கர் எழுதியுள்ளார். கண்ணதாசனை எப்போது நினைத்தாலும் இவர் பரவச உணர்வில் ஆழ்ந்துவிடுவார் என்ற அறிவிப்பினை அவர் எழுத்துக்களே செய்துள்ளன,, உதாரணம்: ”ஆம். அவரது எண்ணங்களே வளைந்து  வில்லானது; வில்லிலிருந்து சீறிய அம்பானது; உருவிய வாளானது; சுழலும்  பம்பரமானது; சாட்டையடியானது; பறக்கும் பட்டமானது; உயர்த்தும் ஏணியானது;  கரை சேர்க்கும் தோணியானது; பாதை உணர்த்தும் கைவிளக்கானது; கொட்டும் அருவியானது; காட்டாற்று வேகமானது; மகுடிக்கு ஆடும் பாம்பானது; துடித்த மனத்திற்கு மயிலிறகானது; எழுத்துகள் எல்லாம் அவருக்கு அடிமை பூதமானது” இனியும் மேம்படுத்த இயலாத எல்லைச் சொல் ஓவியம். “’யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது…?’

    இந்த ஒரு வரியில், காதல் நுழைந்த இதயத்தின் முதல் துடிப்பை இதைவிட அழகாக யாராலும் சொல்லிவிட முடியாது.” எப்படி இரசித்திருக்கிறார் பாருங்கள். வாணி ஜெயராம் குரலில் இப்பாடலைக் கேட்டவர்கள் ஒரு கோப்பை அமுதக் குழம்பைக் குடித்தவர்கள்.

    1. 3.   அடுத்து பாண்டியன்.ஜி ( வில்லவன் கோதை) படைத்த கட்டுரை. அவரே இது வித்தியாசமான பார்வை எனக் குறிப்பிட்டிருக்கிறார். கவியரசரின் வாழ்க்கையை மிகச் சரியாக, ஓர் எழுத்தோவியமாகக் கொண்டு வந்துள்ளார். அநாவசிய மாலை சூட்டல்களும் , சிக்கித் திணறும் பாராட்டு மொழிகளும் இன்றி, ஒரு மாபெரும் கவிஞனை, அவன் வாழ்ந்த வாழ்க்கையின் போக்குகளைக் கொண்டும் எழுத்துகளைக் கொண்டும், கொண்ட கொள்கைகளை வைத்தும் தன்னுடைய அளவுகோலால் உண்மையாக எடை போட்டிருக்கிறார். உதாரணம் காட்டாமல் இருக்கமுடியாது.

     

    “ஐம்பத்தி நான்கு ஆண்டுகளே வாழ்ந்த கண்ணதாசன் எழுதிக்குவித்த கதை கவிதை கட்டுரைகள் ஏராளம். பத்தாயிரத்துக்கு அதிகமான கவிதைகளையும் இசைப் பாடல்களையும் எழுதியவர் .முன்னூறுக்கு அதிகமான நூல்கள் விற்பனையில் வலம் வருகின்றன. கண்ணதாசன் தொடாத அரசியல் வாழ்வியல் துறைகள் அரிது .அவைகளெல்லாம் இன்றைய வாசகர் தொட்டுணராத பொக்கிஷங்கள். கவிஞர் பேசிய ஆத்தீகமும் நாத்திகமும் ஒதுக்கமுடியாதவை. பத்தாண்டு பகுத்தறிவு வாசத்துக்குப்பிறகு அவர் படைத்த மதம் சார்ந்த நூல்கள் இன்றும் விற்பனையில் முன்நிற்கின்றன.”வாசிப்பு திறன் மங்கிப்போன இந்நாளில் கவிஞரை நிரந்தரமாக வாழவைப்பது இசைக்கேற்ப அவர் எழுதிய திரைப்படபாடல்களே.

    ”கவிஞரது வாழ்க்கை ஒருசுவாரசியமான எவருக்கும் கிட்டாத அநுபவம். ஆனால் அது இன்னொருவர் வாழத்தக்கதல்ல. கவிஞரது எழுத்து எவருக்கும் கிடைக்காத வரம். அது காலமெல்லாம் மெய்சிலிர்க்கவைக்கும் ஒரு அதிசயம்.”

    ஆக (27)விசாலம், (1) ஜெயஸ்ரீ ஷங்கர், (13) பாண்டியன்.ஜி ஆகிய மூவரையும் முதல் பரிசுக்குரிய இடத்தில் வைக்கிறேன். மூவரும் சமமே.

    இரண்டாவது இடம்:  ஷைலஜா (6)

    ஆயிரம் சொற்களுக்குக் குறைந்திருந்தாலும் அர்த்தமுள்ள கண்ணதாசனைக் காட்டுவதில் எந்தக் குறையுமில்லாத கட்டுரை. இலக்கிய ஒப்புமைகளும் , கவியரசரின் கவிதைக் களங்களின் இடம் சுட்டிகளும் இவரது ஆழமான அணுகுமுறைக்குச் சான்றாகின்றது.

    “அழகான சிறிய வீடு அடுக்காகப் புத்த கங்கள்
    பழங்கால ஓவியங்கள் பஞ்சணை குளிர்ந்த காற்று
    தொழத்தக்க இளைய கன்னி தொண்டுக்கோர் சிறியபையன்
    எழிலான காகி தங்கள் எழுதுகோல் பழுதில் லாமல்!”

    என்கிறார் நம் கவிஞர்!

    “தொழத்தக்க இளைய கன்னி” என்பதில் வெறும் காமத்தைத் தாண்டிப் பெண்மையின் மீதான பெருமதிப்பையும் காட்டுவதை உணரமுடிகிறது” என்று திரையிசை தாண்டிய கவிதை வரிகளை நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார். முதலிடத்திலுள்ள இட நெருக்கடியால் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

     

    மூன்றாவது இடம்:  கீதா மதிவாணன்(7)

    இலக்கியத் தரம் வாய்ந்த இனிய  கட்டுரை.” இலக்கியப் பாற்கடலைக் கடைய கதியற்ற பாமரர்களுக்காக கவிஞர், தானே கடைந்தெடுத்துக் கொண்டுவந்த கவி வெண்ணெயை நம் நாவிலும் தடவி ருசிக்கச்செய்கிறார். அத்தன்மையதான அமரத்துவம் வாய்ந்தவையன்றோ இலக்கியஞ்சார்ந்த அவரது அமுதகானங்கள்?” என ஒரு களம் அமைத்துக் கொண்டு சங்க காலம் தொடங்கி பல அழகிய இலக்கிய வரிகளை கவிஞரின் வரிகளோடு ஒப்பிட்டிருக்கிறார். “இலக்கியத்தின்பால் என்னை வழிநடத்தி அழைத்துச்சென்றவை கண்ணதாசன் பாடல்களில் காணப்பட்ட இலக்கியச்சுவடுகளே.” என்று தனது எழுத்து அனுபவத்திற்கான பின்னணியையும் கொடுத்துள்ளார். முதல் தரமான இந்தக் கட்டுரையும் இடநெருக்கடியால்தான் மூன்றவதாக உள்ளது.

    கவியரசரின் கவிதை வரிகளினாலேயே கட்டப்பட்ட ஒரு கட்டுரை மண்டபத்தைக் காகிதத்தில் வரைந்து, முன்னுரையிலிருந்து முடிவுரைவரை பல உரைகளை உள்ளடக்கி  நம்மை இனிய ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள திரு சத்தியமணி (23) அவர்களுக்கும்

    ”அவரின் கவிதைகள், காலத்தின் சாத்திரங்கள்; அவரின் நான்காயிரம் கவிதைகள் ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ஏழு தொகுதிகளையும் படித்த நான் எல்லாக் கவிதைகளுக்கு முத்தாய்ப்புக் கவிதையாக போற்றுவது கண்ணதாசன் எழுதிய:

    சுடுகாட்டு எலும்புகளை
    சோதித்து பார்த்ததிலே
    வடநாட் டெலும்பென்று
    வந்த எலும் பில்லையடி!
    தென்னாட் டெலும் பென்று
    தெரிந்த எலும் பில்லையடி
    எந்நாட் டெலும் பென்றும்
    எழுதிவைக்க வில்லையடி
    ஒரு நாட்டு மக்களுக்குள்
    ஓராயிரம் பிரிவை
    எரியூட்ட வில்லையெனில்
    எந்நாளும் துன்பமடி

    என்ற கவிதையைத்தான். இந்தக் கவிதையை இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்த்து ஒவ்வொரு இந்தியனின் இல்லத்திலும் அவன் உள்ளத்திலும் மாட்டி வைத்தால் போதும்! இனச் சண்டை சாதிச் சண்டை என்றும் வராது!”

    என்ற வைர வரிகளையும், கவியரசரின் வசனங்களைப் பற்றியும் சிறப்பாக எழுதி, நம் மனதில் இடம் பெறும் எஸ். கிருஷ்ணசாமி (24) அவர்களுக்கும்

    என் மனத்தில் ஒதுக்கப்பட்ட சிறப்பிடங்களைப் போட்டி அமைப்பார்களும் ஒதுக்க வேண்டுமென்று , பரிந்துரை செய்கிறேன்.

    இதைத் தவிர,

    சொந்த வாழ்க்கை அனுபவத்தையே கவிஞர் வரிகளோடு பிணைத்துவிட்ட ஞா.கலையரசி, (2)

    அறிவு பூர்வமாகக் கவியரசரை அணுகியுள்ள ஜெயராம் சர்மா,(3)

    இயல்பு வாழ்க்கையோடு இணைந்த கவிஞர் வரிகளின் நயம் பாராட்டியுள்ள ராஜலட்சுமி பரமசிவம், (11)

    “கடவுளின் செல்லப் பிள்ளையோ” ”என்ன தவம் செய்தனோ”, “கற்பனையில் முளைத்த காதலோ” என அற்புதமான துணைத்தலைப்புகள் கொடுத்து அசத்தியுள்ள ஸ்வேதா மீரா கோபால்,(12)

    கவிதைக்கும் கடலுக்கும் சிலேடை எழுதிக் கலக்கியுள்ள எஸ்.பழனிச்சாமி,(21)

    நான் போகுமிடமெங்கும் போற்றிப் பேசுகின்ற “பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்” என்ற அட்சர லட்சக் கவிதையைக் குறிப்பிட்டுள்ள மேகலா இராமமூர்த்தி,(20)

    கவியரசரின் கோடானுகோடி இரசிகர்களைக் கவர்ந்த  வாடாமலர்க் கவிதைகளை இரசனையோடு அளித்துள்ள தமிழ்முகில் நீலமேகம்(26)

    ஆகியோரின் கட்டுரைகள் பாராட்டுக்குரியவை.

    பங்கெடுத்துக் கொண்ட அனைவரும் கவியரசரை இதயத்தால் இரசிப்பவர்கள் என்ற உண்மையைக் கட்டுரையின் ஒவ்வொரு ஒற்றைச் சொல்லும் உறுதி செய்திருப்பதைக் காணும் போது

    “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை” என்ற வரிகளின் ஆழம் நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்துகின்றன.

    வவேசு

    03/07/2014

    சென்னை-83

    இந்தப் போட்டியை அறிவித்த கவிஞர் திரு காவிரி மைந்தன் அவர்களுக்கும், சிறப்பான முறையில் வெற்றியாளர்களை   தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ள கவிஞர் திரு வவேசு அவர்களுக்கும் எனது நன்றிகள்.

    வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுகள். 

    அன்புடன் என்றும்,
    அண்ணாகண்ணன்

     

    Share
  • விலைபோகும் விளை நிலங்களும், தொடரும் தவறான அணுகுமுறைகளும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    வாய்க்கால் பாசனம் பெறக்கூடிய விளை நிலங்கள் இன்று விற்கப்பட்டு அவைகளில் உயர்ந்த கட்டிடங்கள் கட்டப்பட்டோ அல்லது மாற்று வழி பயன்பாட்டிற்கோ கொண்டுவரப்படுகின்றன. குளங்களும், வாய்க்கால்களும் தூர் வாரப்பட்டு பாசனத்திற்கு பயன்படுத்தும் நிலை மாறி அவைகள் அழிக்கப்பட்டு மனை நிலங்களாகப் பிரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. நல்ல குளப் பாசனங்கள் பெறும் ஒரு சில விளை நிலங்களும் மனைகளாகப் பிரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இந்த நிலை பாரபட்சமில்லாமல் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறுகின்றன. இதனை எந்த அதிகாரிகளும், கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. இவ்வாறு விவசாய விளை நிலங்கள் மாற்று வழிகளுக்குப் பயன்படுத்தப் பட்டால் இன்னும் குறுகிய காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்பதில் ஐயமில்லை. அரசு இதில் கவனம் செலுத்தி விலை நிலங்கள் காக்கப்பட்டு வருங்காலத்தில் உணவுப் பஞ்சம் ஏற்படாமல் காக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது. அரசு, இந்த விற்பனையை உறுதி செய்பவர்கள், ஆவண பதிவாளர்கள் போன்றவர்கள் மூலமாகவோ அல்லது கிராம நிர்வாக அதிகாரிகள் மூலமாகவோ விளை நிலங்கள் பாழ்படுவதைத் தவிர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டியது உடனடித் தேவை.

    ரயில்வே நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே இன்று பயணிகள் கட்டணம் 14.2 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சரக்குக் கட்டணமும் 6.5 சதவிகிதம் கூட்டப்பட்டுள்ளது. இதற்கு நிர்வாகம் கூறக்கூடிய காரணம் நிதி பற்றாக்குறை என்பதே. ஒவ்வொரு அரசும் நிதிநிலை பற்றாக்குறை என்று கூறி பயணிகள் கட்டணத்தையும், சரக்குக் கட்டணத்தையும் உயர்த்துவதே வழமையாகக் கொண்டுள்ளது. பற்றாக்குறையை சரி செய்வதற்கு மாற்று வழியை சிந்திக்க வேண்டியதை விடுத்து கட்டணத்தைக் கூட்டி மக்களின் தலையில் சுமையை அதிகரிப்பது வருத்தத்திற்குரிய விசயம். பயணிகளுக்குப் பயன்படும் தனியார் உணவகங்கள் அனைத்து புகைவண்டி நிலையங்களிலும் கொண்டுவருதலும், அங்கு பயன்படுத்தாமல் இருக்கக்கூடிய பரந்த இடங்களில் எரிபொருள் விற்பனை நிலையங்கள் கொண்டு வருதலும், மின்சார ரயில் அதிகமாகப் பயன்படுத்தும் நேரங்களில் சூரிய ஒளி மின்சாரம் பயன்பாட்டிற்குக் கொண்டு வருதலும், நவீன முறையில் விளம்பரங்கள் செய்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தினால் கிடைக்கும் அதிகப்படியான வருமானம் மூலமாக இந்தப் பற்றாக்குறையை சரி செய்ய முடியும் . இது போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளில் அரசு ஈடுபடுவதால் மக்கள் சுமை ஏறாமல் இருப்பதோடு, வேலை வாய்ப்புகளும் கூடுகிறது.

    மற்ற ஆட்சிகளைப் போலவே பாரபட்சமே இல்லாமல் விலை உயர்வுக்கு வரி விதிப்பே இந்த ஆட்சியிலும் காரணமாகியிருக்கிறது. சர்க்கரை ஆலைகளில் 4000 கோடி ரூபாய் வட்டி இல்லாத கடனாக அளித்து விவசாயிகளின் பாக்கிகளை நேர் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதுவுமின்றி அவர்கள் கட்ட வேண்டிய சுங்க வரி செலுத்துதலையும் ஐந்து ஆண்டுகள் வரை காலக்கெடு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆலைகளுக்கு கரும்பு வந்தவுடன், அதிலிருந்து சர்க்கரை எடுக்கப்பட்டு, ஆலைகளை விட்டு அது வெளியேறும்போது சுங்க வரியுடனும், அவர்களுடைய இலாபத்துடனும், பணமாகப் பெற்றுக்கொண்டு அதற்குப் பிறகே சர்க்கரை வெளியேறுகிறது. இது ஒரு கிலோ சர்க்கரையாக இருப்பினும் அல்லது 120 மூட்டை (12 டன்) ஏற்றக்கூடிய அளவாக இருப்பினும் ஆலை முதலாளிகள் பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகே சர்க்கரை வெளியேறுகிறது. இப்படி ஒரு நிலையில் 4000 கோடி ரூபாய் வட்டியில்லாத கடன் அளித்தும், சுங்கவரி கட்டுவதற்கும் காலக்கெடுவை நீட்ட வேண்டிய தேவை என்ன என்ற ஐயமும் எழுகிறது. ஏழை விவசாயிகளின் கரும்புக்குத் தர வேண்டிய தொகையைக் கொடுக்காமல் இயங்கக் கூடிய ஆலைகளின் நிர்வாகத்தை சீர் செய்யவேண்டியதும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டியதும் அரசின் கடமை. அது போலவே ஆலைகளில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களைக் காப்பதும் அரசின் கடமை. நிர்வாகங்கள் செய்யக்கூடியத் தவறுகளால் வறுமையின் காரணமாகத் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் விவசாயிகளைக் காக்க வேண்டியது அவசியம். திரு மோடி அவர்களின் அரசு மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்திருக்கும் நிலையில் இது போன்ற முக்கிய பிரச்சனைகளில் அரசு கவனம் செலுத்தி நம் பொருளாதார நலிவுகளுக்கு முக்கிய காரணமாக இது நாள் வரை இருந்த நிர்வாகச் சீர்கேடுகளை சீர் செய்து வளமான பொருளாதாரத்திற்கு வழி வகுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இறக்குமதி செய்யக்கூடிய சர்க்கரைக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தியதால், ஒரு கிலோவிற்கு 10 ரூபாய் விலை ஏற்றம் மக்களுக்குச் சுமையாகியுள்ளது. விலை ஏற்றத்தைத் தவிர்க்காமல் விலை ஏற்றத்திற்கு அரசு துணை போவதால் பண வீக்கம் அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாமல் போகும்.

    Share
  • மலேசிய இந்து சங்கத்தின் மூலம் கப்பலோட்டிய தமிழன் பெயரனுக்கு வாழ்நாள் சாதனயாளர் விருது

    பவள சங்கரி

    வாழ்நாள் வல்லமையாளர் விருது பெற்ற ஐயா திரு ப. முத்துக்குமார சாமி அவர்களுக்கு  வல்லமையின் பாராட்டுகள்.

    mum1

    திரு. ப. முத்துக்குமார சுவாமி அவர்கள் திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்திலும், தருமபுரம் பல்கலைக் கல்லூரியிலும் கல்வி பயின்றவர். அரசுப் பணியிலிருந்து 1993 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர். ஆன்மீகம், சுய முன்னேற்றம், திறனாய்வு இலக்கியம், ஒப்பீட்டு இலக்கியம், இதழ் தொகுப்புகள், அறிஞர்களின் வாழ்வியல், சரிதை நூல்கள், உலக அறிஞர்களின் பொன்மொழித் தொகுப்புகள் என நூறு நூல்களை தமிழுக்குத் தந்தவர்.

    Mum

    1972 இல் ‘கவியரசர் கண்ணதாசன் கவிதைகள் ஒரு மதிப்பீடு’ என்ற திறனாய்வு நூலுக்கு மாநில அளவில் முதர்பரிசினைப் பெற்றவர். வேளாண் விஞ்ஞானி டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களது வாழ்வியல் சரிதைகளையும், வேளாண் துறை ஆய்வுகளையும் விளக்கிப் படைத்த இவரது நூலுக்கு மேனாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு கே.ஆர்.நாராயணன் அவர்கள் விரிவான அணிந்துரை வழங்கி பாராட்டியுள்ளார். 2004 ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த நூலுக்கான முதற் பரிசினையும் , திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் முதற் பரிசும், விருதும், மலேசியா நாட்டின் அபூர்வாஸ் நிறுவனத்தின் 2005 ஆம் ஆண்டின் நிறுவன நாள் விருதும், 2008 ஆம் ஆண்டு சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் சிறந்த நூலுக்கான விருதும், 2009 ஆம் ஆண்டு சென்னை ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் சான்றோர் விருதும், 2011 ஆம் ஆண்டு தில்லி தமிழ்ச் சங்கத்தின் விருதினையும் பெற்றவர்.

    mum2

    எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழுக்கும் , சைவத்திற்கும், நாட்டு விடுதலைக்கும் நாயகனாக முன்னின்று நாளெல்லாம் உழைத்து, பொருளெல்லாம் இழந்து, புகழ் சேர்த்த கப்பலோட்டிய தமிழன் என்று வையகமே பாராட்டும் வ.உ. சிதம்பரனாரின் வம்சாவளிப் பெயரன் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Share
  • ஜனநாயகம்

    பவள சங்கரி

    தலையங்கம்

    1989ம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி, பெய்ஜிங், டியானமென் (Tiananmen) சதுக்கத்தில் மாபெரும் போராட்டம் நடந்தது. சுதந்திரத்திற்கு ஆதரவாகப் போராடிய பல ஆயிரம் மாணவர்களை தங்களுடைய இரும்புக் கரம் கொண்டு கொன்று குவித்து அந்தச் சுதந்திரப் போராளிகளை நசுக்கினர். அதன் பிறகு இந்த 25 ஆண்டு காலத்தில் எந்த விதமான போராட்டங்களோ, ஜனநாயகம் பற்றிய பேச்சோ இல்லாமல் கவனமாக பார்த்துக்கொண்டனர். ஜனநாயகத்திற்காகப் போராடிய அந்த மாணவர்களை நினைவுகூர வேண்டிய காலமிது. அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் விடுதலைக்காகப் போராடி ஜனநாயகத்தை மீட்டுக் கொண்டு வந்து தலைவரானவர் ஆபிரகாம் லிங்கன் அவர்கள். இன்று பாரக் ஒபாமா அவர்கள் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள். இவ்வாறு ஒரு சாதாரண தனி மனிதனும் தலைமைப் பொறுப்பில் வர முடியும் என்று காட்டிய அமெரிக்காவின் ஜனநாயகம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களால் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமர் ஆட்சி நடைமுறையில் இருப்பினும், அங்கு இருப்பது மன்னராட்சி முறை. அதாவது, மகாராணி, அவருடைய மகன், பேரன் என்று பரம்பரையாக ஆட்சி செய்யும் முறையே உள்ளது. அதனுடைய காமன்வெல்த் நாடாகிய ஆஸ்திரேலியாவில், இங்கிலாந்து அரசியாரின் பிரதிநிதி தலமையில்தான் ஆட்சி நடைபெறுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கும் சுய ஆட்சி போராட்டங்கள் நடந்து அது தோல்வியைக் கண்டது. தாங்கள் பிரித்தானிய ஆட்சியின் கீழ் வாழ்வதையே விருப்பம் கொண்டிருக்கிறார்கள்.

    மாபெரும் ஜனநாயக நாடான நம் இந்தியாவிலும் ஜனநாயக ஆட்சி என்ற பெயரில் பரம்பரை ஆட்சி நடைபெற்றது. காந்தியடிகள் கைகாட்டுதலால் பிரதமரான நேரு, அவர்களுக்குப் பிறகு அவரது மகன் ராஜீவ் காந்தி, அவருடைய மனைவி சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி என்று வரிசையாக ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். சுதந்திரப் போராட்டம் முடிந்த பிறகு இந்த காங்கிரசு கட்சியை கலைத்துவிடலாம், ஒவ்வொரு தலைவரும் அவரவர்கள் கொள்கையின் மூலம் மக்களுக்குப் பணி செய்து ஆட்சி செய்ய வரட்டும் என்ற நிலையை தொடராமல் விட்டதால் பரம்பரை ஆட்சி வந்தது. ஆனால் இன்று நம்முடைய இந்திய ஜனநாயகம், மிகப் பெரிய மாறுதலை ஏற்படுத்தி ஒரு சாதாரண தனி நபர் இந்தியாவை ஆட்சி செய்யும் அளவிற்கு வளர முடியும் என்பதை நிரூபித்துள்ளது. அதற்காக நம் இந்திய ஜனநாயகத்திற்கும், உயர்திரு மோடி அவர்களுக்கும் நம் பாராட்டுகள். பாராளுமன்றத்தில் இரண்டே உறுப்பினர்களை மட்டுமே கொண்ட ஒரு கட்சி இன்று ஆலமரமாக வளர்ந்து வரலாறு படைத்திருப்பது பாராட்டுதலுக்குரியது. இந்த ஜனநாயகத்தால் பிரதமர் மோடி அவர்களுக்குக் கிடைத்த இந்த மாபெரும் வெற்றியை மனதில்கொண்டு மக்களுக்காகப் பணியாற்றினால் மக்கள் அவர்களை காலத்திற்கும் மறக்காமல் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் வாய்ப்பை அளிப்பார்கள் என்பது உறுதி. காங்கிரசு பேரியக்கமே என்றாலும் இன்றைய மோசமான தோல்வியால் துவள வேண்டியதில்லை. உடனடியாக, நல்ல மக்கள் தலைவரை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதும் உண்மை. மீண்டும் அடி மட்டத்திலிருந்து கட்டமைப்பை உருவாக்க வேண்டிய இந்த நேரத்தில் தோல்விக்கு யார் பொறுப்பு என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காமல் மக்களுக்குப் பணியாற்ற ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் காங்கிரசு கட்சியின் நிலை கேள்விக்குறி ஆகிவிடும் அபாயம் உள்ளது என்பதே நிதர்சனம்.

    Share
  • மன நல ஆலோசனைகள்

    அன்பு நண்பர்களே,

    vimalaஇன்று முதல் (23-05-2014) நம் வல்லமையில் மன நலம் என்ற புதிய பகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருமிகு. எம். விமலதாரணி, ஹோமியோபதி மருத்துவம் மற்றும் மன நல ஆலோசகர் உளவியல் சார்ந்த பல கருத்தரங்குகளை நடத்தி வருபவர், மற்றும் திரு. ஆ.கார்த்திகேயன் , வழக்கறிஞர், மன நல ஆலோசகர் ஆகிய இருவரும் நம் வல்லமை வாசகர்களுக்கான மன நலம் சார்ந்த ஆலோசனைகளை வழங்க இசைந்துள்ளனர். இவர்கள் சென்னை அண்ணா நகரில் (மேற்கு) காவியா ஹெல்த் ஹோம் எனும் மனநல ஆலோசனை மையம் நடத்தி வருகின்றனர். இம்மையத்தில் மாணவர்களுக்க்கான சிறப்பு மன நல ஆலோசனை, கல்வி மற்றும் தொழில் சார்ந்த வழிநடத்தல், குடும்ப நல ஆலோசனை வழங்கப்படுகிறது. இவர்கள் உளவியல் மற்றும் சட்டம் சார்ந்த பல கருத்தரங்குகளை நடத்தி வருகின்றனர். திரு ஆ. கார்த்திகேயன் மற்றும் திருமிகு எம். விமலதாரணி ஆகியோரிடம் தங்கள் பதிலைப் பெறுவதற்கு, vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு தங்கள் வினாக்களை அனுப்பலாம். பெயர் குறிப்பிட விரும்பாவிட்டால் அதையும் தெரிவிக்கலாம். இவர்களிடம் அண்மைக் காலத்தில் கேட்கப்பட்ட சில கேள்விகளும் அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் இங்கே:

    கேள்வி:1

    எனக்கு வயது 21. என் அக்காவிற்குத் திருமணமாகி விட்டது. என் அப்பா பத்து ஆண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்துKarthi விட்டார். 43 வயதான என் தாய் சமீப காலமாக வேறு நபருடன் நட்பாக பழகி வருகிறார். எங்கள் உறவினர்களில் சிலர் இதை தவறாகப் பேசுகின்றனர். இதைப் பற்றி அம்மாவிடம் கேட்கவும் பயமாக இருக்கிறது. சகித்துக் கொள்ளவும் முடியவில்லை. என்ன செய்வது?

    பதில்: நமது சமூகத்தில் ஆண் பெண் நட்புறவை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். அதுவும் விதவைப் பெண் ஒரு ஆணுடன் நட்பாக பழகினாலும், தவறான ஒரு ஆணுடன் நட்பாகப் பழகினாலும் தவறான நோக்கிலான பார்வைகளே அதிகம். உங்களுக்கு உங்கள் தாயை பற்றித் தெரியாதா? மற்றவர்கள் தவறாக பேசுகின்றனர் என்பதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டியதில்லை. நீங்களும், உங்கள் தமக்கையும் உங்கள் தாயாரிடம் பேசலாம். அந்த நபர் நல்லவராகவும் உங்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் மீது அக்கறை உடையவராகவும் அவரின் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் இந்த நட்பை சரியாகப் புரிந்து கொள்கின்றனர் என்றால் இதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

    கேள்வி: 2

    எனக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. நானும் என் மனைவியும் எதோ இயந்திரம் போல ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறோம். பெற்றோர்களின் கட்டாயத்தின் பேரில் எங்கள் திருமணம் நடந்தது. இந்த இரண்டு ஆண்டுகளில் எங்களுக்குள் எந்த ஈடுபாடும் வளரவில்லை. நாங்கள் இருவருமே மனப்பூர்வமாகப் பிரிந்து விட நினைத்தாலும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் கட்டாயப்படுத்தலும் மிரட்டலும் எங்களுக்கு சமீப காலமாய் விரக்தியை ஏற்படுத்துகிறது.

    பதில்: உங்களிடம் எந்த ஈடுபாடும் இல்லை என்கின்றீர்களேத் தவிர உங்களுக்குள் வெறுப்பு உள்ளது எனச் சொல்லவில்லை. நீங்கள் ஈடுபாடு எனச் சொல்வது தாம்பத்திய வாழ்விலா?அல்லது பொதுவான அனைத்து விஷயங்களிலுமா என்பது பற்றி உங்கள் கேள்வியில் தெளிவில்லை. சரி விவாகரத்து பெற்று விடுகிறீர்கள் என வைத்து கொள்வோம். பின்னர் என்ன செய்வதாக உத்தேசம்? மறுமணமா?அல்லது தனியாகவே இருந்து விடப் போகிறீர்களா?

    உங்களுக்கு கட்டாய மணம் செய்துவிட்டனர் என்ற கோபம் கூட தற்போதைய ஈடுபாடில்லா வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கலாம் அல்லவா? நீங்களும், உங்கள் மனைவியும் மனம் விட்டு இதுபற்றிப் பேசி இருக்கிறிர்களா? உங்கள் இருவரின் வாழ்விலும் வேறு நபர் குறிக்கீடு ஏதும் இல்லை என்றால், பிரச்சனை என்னும் மாய வலையிலிருந்து உங்களால் மிக எளிதாக வெளியே வந்து விட முடியும். மனநல ஆலோசகரை அணுகுங்கள்.

    கேள்வி : 3

    என் கணவருக்கு நான் இரண்டாம் தாரம். மூத்த மனைவி இறந்து விட்டார். அவருக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறான். நான் அவனை கண்டிப்பதால் மற்றவர்கள் என்னைத் தவறாக நினைப்பார்களா?

    பதில்: அந்தப் பையனை நீங்கள் உங்கள் சொந்த மகனாகத்தான் கருத வேண்டும். அப்படி நினைத்தால் இந்த பயமே உங்களுக்கு தோன்றாது. குழந்தைகள் தவறு செய்யும் போது கடமை உணர்வோடு அவர்களைத் திருத்த வேண்டும். அதே போல் அந்தப் பையனையும் தவறு செய்தால் திருத்துங்கள் அரவணைக்கும் போது பாசமும் காட்டுங்கள். குழந்தைகளைக் கண்டித்தும், அரவணைத்தும் வளர்த்தால் அவர்கள் பாதுக்காப்பாக உணர்வார்கள். அதே நேரத்தில் கண்டிப்பு என்பது குழந்தையின் மனநிலைக்குத் தக்கப்படி அளவோடு பக்குவமாக இருக்க வேண்டும்.

    கேள்வி : 4

    எனக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. நான் என் மனைவியிடம் பாசமாக இருக்கிறேன். எதேச்சையாக அவள் பெட்டியில் அவள் மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற சீட்டை கண்டுபிடித்தேன். ஆனால் அவளோ, அவள் பெற்றோரோ இதைப் பற்றி எதுவும் கூறாததால் அவர்கள் என்னை ஏமாற்றி விட்டதாக நினைக்கிறேன். மேலும் என் மனைவி மன நோயாளியாக இருப்பதால் அவளிடம் நான் எப்படி நடந்து கொள்வது?.

    பதில்: உங்கள் மனைவிக்கு எத்தகைய பாதிப்பு இருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் இது அச்சத்துக்கோ, ஆபத்துக்கோ உரியது இல்லை. மன நோயும் உடல் நோயைப் போலவே குணப்படுத்தக் கூடியது தான். உங்களிடம் உங்கள் மனைவி இதை மறைத்ததற்கு காரணம் அவளுடைய நோய் குணமாகி இருக்கலாம். அல்லது நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு அவரை வெறுத்து விடலாம் என்பதற்காகக் கூட இருக்கலாம் அல்லவா? எப்படி ஆனாலும் உங்கள் மனைவிக்கு இப்போது எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதால் நீங்கள் இதைப் பெரிதுப்படுத்த வேண்டாம். தேவையெனில் அவரிடம் பேசி அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டு அவசியம் ஏற்பட்டால் நீங்களே ஒரு நல்ல மனநல மருத்துவரைப் பார்க்கலாம்.

    Share
  • வென்றிடும் பாரதம்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    031810_1447_narendradam1 (1)

    16 வது மக்களவைக்கான தேர்தல் திருவிழா நிறைவடைந்து, மக்கள் பெருவாரியாக வாக்களித்து நிலையான ஆட்சிக்குத் தோதான ஒரு தலைமையைத் தேர்ந்தெடுத்து தங்கள் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றியுள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும்! தனிப்பெருங் கட்சியாகத் தலை நிமிர்ந்து ஆட்சியைப் பிடித்து, பிரதமர் இருக்கையை அலங்கரிக்கப்போகும் உயர்திரு நரேந்திர மோடி அவர்கள் தம்முடைய மகத்தான வெற்றிக்குப் பிறகு ஆற்றியிருக்கும் உரையில், எந்தப் பாகுபாடுமின்றி அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவானதொரு பிரதமராகச் செயல்படப் போவதாகக் கூறியிருப்பது நம் இந்திய மக்களுக்கிடையே பெரும் நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிலையானதொரு ஆட்சியை அமைத்து சரித்திரம் படைக்கும் பி.ஜே.பி. அரசு போலி மதச்சார்பின்மைவாதிகளின் பொய்யானப் பிரச்சாரத்திற்கு அழுத்தமான முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அரசும், கட்சியும் இணைந்து மிகச் சிறந்ததொரு ஆட்சியை வழங்கமுடியும் என்று நிரூபிக்கும் அந்த பொற்காலத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்கள் கூட்டம். கட்சியின் வண்ணம் காவியாக இருப்பினும் எண்ணம் பசுமையாக வளமான வாழ்க்கையை அளிக்கப்போவதாக இருப்பதும் உறுதியாகத் தெரிகிறது.

    ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கொள்கையைப் பின்பற்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உயரிய கொள்கையை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையும் துளிர்விட ஆரம்பித்துள்ளது. கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ஒரே இந்தியா, ஒரே சட்டம், என்ற நிலை ஏற்படுத்தப்படவேண்டும். நம் நாடு, நம் மக்கள் என்ற நிலை இருந்தால் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்ட சட்டங்கள் தேவையில்லை. கன்னியாகுமரியில் இருக்கும் ஒரு தமிழன் காஷ்மீரிலோ அல்லது இமாசலப் பிரதேசத்திலோ, இந்தியாவின் எந்தப் பகுதியிலும் சென்று குடியேறி தனி மனித சுதந்திரத்திற்குப் பங்கம் வாராத நிலையை எட்டக்கூடிய உரிமையைப் பெற வேண்டும். 370 வது சட்டப்பிரிவுகள் தேவையில்லை என்ற நிலை வர வேண்டும்.

    பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் போல பிற்படுத்தப்பட்ட மாநிலங்களும் முதல்நிலை மாநிலங்களாக மாறும் வகையில் தெளிவான அணுகு முறைகளும், அதற்கு ஏற்றாற்போலத் திட்டங்களும் அமைத்தால், இந்தியா வல்லரசாக ஆகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதே சத்தியம். அதற்கான அனைத்து வளங்களும் நம் நாட்டில் கொட்டிக்கிடப்பதும் மறுக்க இயலாத உண்மை.

    கடுமையாக உழைக்கக்கூடிய மக்களும், சரியான வழிகாட்டுதலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அந்த வகையில் எந்த குழப்பமும் இல்லாமல், எவருக்கும் அடிபணிய வேண்டிய தேவையில்லாமல் தனிப்பெரும் சக்தியாக, தன்னிச்சையாக நல்ல ஆட்சியை நடத்தும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் உயர்திரு மோதி அவர்களின் சரியான வழிகாட்டுதலால் விரைவில் இந்தியா வல்லரசாகும் என்று நம்பும் காலம் வந்துவிட்டது. சிதைந்து கிடக்கும் பொருளாதாரத்தைச் சீர் செய்வதும், சமதர்ம சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டியதும் போன்ற மிகப்பெரும் பொறுப்புகள் அவசரகால நடவடிக்கைகளாகக் காத்துக்கிடக்கிறது.

    சோசலிசம் என்றால் அனைவரும் ஏழையாவது அல்ல, அனைவரும் வளமாக வாழ்வது என்பதை நிரூபிக்கப்போகும் அரசை வாழ்த்தி வரவேற்போம்! அனைவருக்கும் இலவசக் கல்வி, ஆய்வகங்களைப் பயன்படுத்தும் உரிமை போன்றவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறோம். 30 கோடி மக்கள் முகமுடையாய் என்று பாரதி பாடினான். இன்று 130 கோடி மக்களுக்கும் ஒரே தலைவராக இருந்து வழி நடத்தப்போகும் உயர்திரு மோதி அவர்களை மனமார வாழ்த்தி வரவேற்போம்! வெல்க பாரதம்.

    படத்திற்கு நன்றி:

    Narendra Damodardas Modi: The man who gets “famous” for EVERYTHING he does …

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன் – கட்டுரைப் போட்டி!

    அன்பு நண்பர்களே,

    நம் வல்லமை இதழின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு, ‘என் பார்வையில் கண்ணதாசன்’ என்ற கட்டுரைப் போட்டியை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம்.

    kana1நம் அன்றாட வாழ்வின், சுக, துக்கங்கள் அனைத்திலும் கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் நம் உடன் பயணிப்பவை; அவரது இலக்கியப் படைப்புகள், தனித்த புகழ் வாய்ந்தவை. அவரது அர்த்தமுள்ள இந்து மதம், இன்றும் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தின் சமூக. அரசியல் களத்திலும் கண்ணதாசன், தீவிரமாகப் பங்கேற்றார். கண்ணதாசனை நினைக்குந்தோறும் நமக்கு எவ்வளவோ எண்ணங்கள் தோன்றும். கண்ணதாசனை எப்படிப் பார்க்கிறீர்கள்? அவரது பங்களிப்பு என்ன? உங்களுக்கு அவரிடம் பிடித்தவை என்னென்ன? உங்கள் வாழ்க்கையில் அவரது பாடல்கள், எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன? இப்படியாக, எந்தக் கோணத்திலும் உங்கள் கட்டுரைகள் அமையலாம். என் பார்வையில் கண்ணதாசன் என்ற பொதுத் தலைப்பில் அவற்றைத் தெளிவான கட்டுரையாக நம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். பரிசுகளையும் வெல்லுங்கள்.

    கண்ணதாசன் மீது ஆழ்ந்த பற்றும் அன்பும் கொண்ட கவிஞர் காவிரி மைந்தன் அவர்கள், இப்போட்டியை வல்லமையுடன் இணைந்து நடத்துகிறார். வழமை போல இந்தப் போட்டியிலும் நம் வாசகர்கள் திரளாகக் கலந்துகொண்டு வெற்றியடையச் செய்வீர்கள் என்று நம்புகிறோம். போட்டி குறித்த விவரங்கள் இதோ:

    வல்லமை இதழ் நடத்தும், கவியரசு கண்ணதாசன் கட்டுரைப் போட்டி
    இணைந்து வழங்குபவர்கள்: கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் (பம்மல்) சார்பாகக் காவிரிமைந்தன் மற்றும் கிரி ஐங்கரன்

    தலைப்பு – “என் பார்வையில் கண்ணதாசன்”

    கட்டுரைகள் பெறப்படவிருக்கும் காலம் – 16.05.2014 முதல் 15.06.2014 வரை..M.-RAVI-KAVIRI

    வல்லமைக்குப் புதியவர்கள் உள்பட, எவரும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.

    கட்டுரை 1000 வார்த்தைகளுக்குள் அமைய வேண்டும்.

    கட்டுரைகள் – முழுக்க முழுக்கப் படைப்பாளரின் சொந்தப் படைப்பாக, இதுவரை வேறெந்தத் தளத்திலோ. அச்சிதழிலோ வெளியிடப்படாத படைப்பாக அமைதல் வேண்டும்

    நடுவர் பொறுப்பேற்று கட்டுரைகளை நமக்காகத் தேர்வு செய்யும் பொறுப்பினை முனைவர் வ.வே.சுப்பிரமணியன் (கவிஞர் வ.வே.சு.) அவர்கள் ஏற்றிருக்கிறார்.

    ஒருவர் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

    பரிசுத் தொகை குறித்த விவரம்:

    முதல் மூன்று பரிசுகள் தலா ரூ.1000 வீதம்

    இரண்டாம் பரிசு ரூ.750

    மூன்றாம் பரிசு ரூ.500

    10247260_435875026549812_5280102860535261571_nபரிசு பெறுபவர், இந்தியாவுக்கு வெளியில் இருந்தால், அவரது இந்திய முகவரிக்குப் பரிசுத் தொகை அனுப்பப்படும்.

    போட்டிக்கு வரும் கட்டுரைகளிலிருந்து நடுவர் மற்றும் வல்லமை ஆசிரியர் குழு பரிந்துரைக்கும் கட்டுரைகள், புத்தகமாக வெளியிடப்படும்.

    உங்கள் கட்டுரைகளை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

    தலைமுறை தலைமுறையாகத் தமிழ்ச் சமூகத்தின் மீது அழுத்தமான தாக்கம் செலுத்தி வரும் கண்ணதாசனைக் கொண்டாட, இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்தப் போட்டியில் அனைவரும் பங்கேற்றிட அன்போடு அழைக்கிறோம்.

    Share
  • கடித இலக்கியப் போட்டி முடிவுகள்!

    பவள சங்கரி

    அன்பு நண்பர்களே,

    வணக்கம். இதோ நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கடித இலக்கியப் போட்டியின் முடிவுகள். தன்னுடைய இடையறாத பணிகளுக்கிடையேயும் திரு. இசைக்கவி இரமணன் அவர்கள் போட்டியின் முடிவுகளை குறிப்பிட்ட நேரத்தில் முடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அவருக்கு நம் வல்லமையின் மனமார்ந்த நன்றி உரித்தாகுக. போட்டியை அறிவித்த தேமொழி அவர்களுக்கும், உற்சாகமாகக் கலந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும். பரிசு பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள். நாம் ஏற்கனவே அறிவித்திருந்திருந்த முதல் மூன்று பரிசுகள் மற்றும் மூன்று ஆறுதல் பரிசுகளுடன், திரு இரமணன் அவர்கள் மேலும் ஆறு பேர்களுக்கு தலா ரூ. 200 வீதம் ஆறுதல் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார்கள். பரிசு பெற்றவர்கள் தங்கள் உள்நாட்டு முகவரிகளை vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் பரிசுத் தொகை அனுப்பி வைக்கப்படும்.

    இதோ திரு இரமணன் அவர்களின் போட்டி முடிவுகள் :

    இசைக்கவி இரமணன்

    imagesஉலகம் அழகானது. ஆனால், வாழ்க்கைக்கு அதனளவில் அழகேதும் கிடையாது. வைக்கோலைத் தின்று வெந்நீர் குடிக்கும் சுவாரசியமே உள்ள இந்த வாழ்க்கையில், பிறந்த கணத்திற்கு முன்பிருந்தே உயிரின் பிடரியை மரணம் கவ்விக் கிடக்கும் இந்தக் கணநேரக் கூத்தில் என்ன அழகு இருக்க முடியும்?

    வாழ்க்கை வேறு, வாழுதல் வேறு. நன்கு வாழுவதன் மூலமே ஒன்றுமற்ற வாழ்க்கை ஒளிபொருந்தியதாக மாறுகின்றது. அதுதான் வாழ்வாங்கு வாழுதல். அதற்கு இரண்டு அம்சங்கள் தேவைப்படுகின்றன. ஒன்று, நேயம். இன்னொன்று கலை.

    நேயம், மனிதனை மனிதனாக்குகிறது. கலை, மனிதனுக்கும் இறைவனுக்கும் பாலம் போடுகிறது. வாழ்க்கை, காட்டாறாக இருந்தாலும், பாலத்திலிருந்து பார்க்கும்போது நமக்குப் பதற்றமில்லை. கலை, எல்லாவற்றையும் படைத்து இயக்கும் பரமசக்தியிடமிருந்தே வருகிறது. அந்தப் பரம்பொருள், மனிதனில் தன்னை நேயம் என்றே பதிவு செய்துகொண்டுள்ளது.

    சேதி சொல்லும் இயற்கை, நியதி காட்டும் கோள்கள், பாதி சொல்லும் உயிரினங்கள், பாடம் சொல்லும் வாழ்க்கை, இவையே கலைகள் விளங்கும் தளங்கள். இயற்கையிலும் வாழ்க்கையிலும் ஏற்கனவே தென்படுவதை, நேயமென்னும் தூரிகை ஏந்தி ஓவியன் சித்திரம் தீட்டுகிறான். கவிஞன் கவிதை பாடுகிறான். இன்னொருவன் கல்லை தெய்வமாக்கிக் காட்டுகிறான்.

    கலைகளில் கடிதமும் அடக்கம் என்பது உண்மை. பேசும் சொல்லும், பதியும் எழுத்தும் கலை வயப்படுவது இயல்புதானே? கலை மிளிரும் எழுத்தே இலக்கியம். எனவேதான், வல்லமைக் குழுமத்தார், ஒரு கடித இலக்கியப் போட்டியை அறிவித்தார்கள். வந்து குவிந்தன கடிதங்கள். வம்பாய், என்னைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். எதையும் தட்டிக் கொடுப்பவன் எதைத் தட்டிப் பார்த்து எப்படித் தெரிந்து எதனை எடுப்பான்?

    ஆனால், வந்து சேர்ந்த கடிதங்கள் எல்லாம் சுசீந்திரத்துத் தூண்கள் போலானதால், தட்டி மகிழ்ந்தேன். அவற்றை, நான் நன்று, மிக நன்று, மிக மிக நன்று என்றே வகைப்படுத்த முடிந்தது.

    அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்று பற்பலரும் பலவித வண்ணம் காட்டியிருக்கிறார்கள். முதலில், அவர்கள் அனைவருக்கும் என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சரி, எந்த அடிப்படையில் நான் பரிசுகளுக்கு உரியவை இன்னின்னவை என்று தேர்ந்தெடுத்தேன்?

    • சொந்த அனுபவம், சற்றே அறிவு, கொஞ்சம் கற்பனை, நிறைய நேசம், இவை கலந்துவரும் கடிதங்களே மனதில் நிற்க வல்லவை. அல்லவா?
    • ஒரு கடிதத்தின் நீளம், அது தாளில் எடுக்கும் இடத்தைப் பொறுத்தல்ல, மனதில் பிடிக்கும் இடத்திற்கு ஏற்பவே நிச்சயிக்கப்படுகிறது. அமைப்பாளர்கள், இரண்டு பக்கங்கள் என்பதாக ஓர் அளவை நிர்ணயம் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த அளவோடு நிறுத்திவிடுவதாலேயே அந்தக் கடிதம் சரியான நீளத்தில் இருப்பதாகக் கருதிவிட முடியாது. வளவளவென்று போகுமானால், ஒரு பக்கத்திற்கும் குறைவான கடிதம் கூட நீளமாகவே தெரியும்.
    • நமக்குத் தெரிந்தவற்றையெல்லாம் கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்னும் ஆவல் மேலிடும் போது, கடிதம் சுமையாகி விடுகிறது
    • கட்டுரை, கடிதமாகாது. கவிதையும் அப்படித்தான்! கடிதம், உரைநடையின் தளம். அதில், கவிதையின் தறுவாய் தென்படலாம். கட்டுரையின் சாயல் தட்டுப்படலாம்.
    • நமது அனுபவத்தைச் சார்ந்திருந்து, அன்பின் அடிப்படையில் வருகின்ற சொற்கள், நேரடியான அறிவூட்டும் நடவடிக்கைகளை விட மேலானவை.
    • ‘இவருக்கு நண்பர்கள் வேண்டாம், முகவரிகள் போதும்!’ என்று சொல்லும் அளவுக்குச் சில கடிதங்கள் இருக்கின்றன. சொல்ல நினைத்ததைச் சொல்வதற்கு பதிலாக, என்ன கேட்க விரும்புவார்கள் என்று அன்பார ஊகித்தல் கடிதங்களை அழகாக்கும்.

    இவ்வளவு சொன்னால் போதும் என்று தோன்றுகின்றது.

    எப்படி இருப்பினும், என்னுடைய தேர்ந்தெடுப்பு என்னுடைய ரசனை, புரிதல், அறிவு இவற்றிற்கேற்பத்தான் இருக்குமே அன்றி, இதுதான் சரியான முடிவு என்பதாக இருக்க முடியாது. ஏனெனில், நான் சராசரிக்கும் குறைவான சாதாரண மனிதன்.

     

    முதற்பரிசு:

    கவாகம்ஸ்

    கடிதத்தின் இறுதியில்தான் அது ஒருவர் தனக்கே எழுதிக்கொண்ட கடிதம் என்பது விளங்குகிறது. ஓர் அறிவியல் புனைவும், ஆழமான காதலும் கலந்து மிகவும் விறுவிறுப்பாகவும் மிளிர்கின்றது இந்தக் கடிதம். கொஞ்சம் கூட சுருதி விலகாத பாடல் போன்று இருக்கின்றது.

    இரண்டாம் பரிசு: 

    மாதவன் இளங்கோ

    இது தனது ரசிகைக்கு ஓர் ஓவியர் எழுதிய கடிதம். இந்தக் கோணமே மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. ஒரு கலைஞனின் மனம், அவனுடைய படைப்பைக் காட்டிலும் எத்தனை நுண்மையானது, பரிசைக் காட்டிலும் அவன் எப்படி ரசனையைத்தான் நம்பி வாழ்கிறான் என்பதெல்லாம் இந்தக் கடிதம் சிறப்பாக உணர்த்துகின்றது.

     

    மூன்றாம் பரிசு :

    ரஞ்சனி நாராயணன்

    அம்மாவுக்கு மகன் எழுதிய கடிதம். நெஞ்சைத் தொட்டது.

     

    ஆறுதல் பரிசுகள்:

    1. கீதா மதிவாணன்: அம்மா, தன் மகனுக்கு எழுதிய அழகான கடிதம்
    2. விசாலம் : மகளுக்குத் தாய் எழுதிய மனதைத் தொடும் கடிதம்
    3. சரஸ்வதி ராஜேந்திரன்: அம்மா, மகளுக்கு எழுதிய அன்புக் கடிதம்

     

     திரு. இரமணன் அவர்கள் வழங்கும் சிறப்புப் பரிசு ரூ. 200 பெறுபவர்கள்

     

    1. நந்திதா : தாய்க்கு எழுதிய அருமையான வரலாற்றுக் கடிதம்
    2. வி. பாலகுமார் : ஒரு கணவன் மனைவிக்கு எழுதியிருக்கும் அன்புக் கடிதம்
    3. கலையரசி : பெண்ணைப் பெற்றவள் தோழிக்கு எழுதிய கடிதம்
    4. ராஜலஷ்மி பரமசிவம் : தோழிக்கு எழுதிய கடிதம்
    5. சங்கர் சுப்ரமண்யன் : காதலிக்கு – சமர்ப்பிக்கப்படாத மடல்
    6. புதுவை பிரபா : ஹாஸ்டலில் சேர்த்த மகளுக்கு அப்பா எழுதியது

    எழுதுகோலை எடுக்கும் முன்பே, இதயத்தைத் திறந்துவிடுவோம்! அன்பு காட்டும் வழியில் வந்து விழட்டும் சொற்கள்!

    அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

    வாய்ப்பளித்த வல்லமைக்கு வணக்கம் கலந்த நன்றி.

    அன்புடன்,

    ரமணன்

     

    இந்தப் போட்டியை அறிவித்த தேமொழிக்கும்  தேர்ந்தெடுத்துக் கொடுத்த திரு ரமணன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

    வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுகள். 

    அன்புடன் என்றும்,
    அண்ணாகண்ணன்

    Share
  • அட்சய திருதியையும், மூட நம்பிக்கைகளும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    அட்சய திருதியை என்ற இந்நாளை நம் இந்துக்கள் மற்றும் சமணர்கள் புனித நாளாகக் கருதுகின்றனர். இந்த அட்சய திருதியை பஞ்சாங்கம் கணிக்கப்பட்ட காலத்திலிருந்து இருக்கக்கூடிய ஒரு சிறப்பான நாள். ஆனால் இந்த ஐந்தாறு வருடங்களாகத்தான் மிக அதிகமான விளம்பரங்கள் மூலமாக மக்கள் மனதைக் கெடுத்து வியாபாரம் செய்ய ஆரம்பித்துள்ளவர்கள் நகைக் கடைக்காரர்கள். இதனை வியாபார யுக்தியாகப் பயன்படுத்தியவர்கள், இரண்டு கிராம் தங்கம் வாங்கி வீட்டில் வைத்தால் கூட அது 200 கிராமாக விரைவில் வளரும் என்று பாமரர்களை எளிதாக மூளைச்சலவை செய்கிறார்கள். இதை நம்பி தங்கள் வாழ்வும் வளமாக மாறும் என்ற ஆசையில் தங்களுடைய கடைசி பைசாவைக் கூட குறிப்பிட்ட அந்த நாளில் நகைக் கடையில் சென்று கொட்ட ஆரம்பித்துள்ளார்கள்.. கொட்டியவர்களின் வாழ்க்கை வளமானதோ இல்லையோ, நகைக் கடைக்காரர்களின் வாழ்க்கை வளமானது. மக்கள் மணிக்கணக்காக நீண்ட வரிசையில் நின்று நகை வாங்க கையிருப்பைத் துடைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பார்த்த வெள்ளி வியாபாரிகளும் தங்கள் பங்கிற்கு, வெள்ளி என்றால் ‘சுக்கிரன்’ அதனால் அன்று வெள்ளி வாங்கினால் சுக்கிர திசை தேடி வந்து செல்வந்தனாக்கும், அதனால் அட்சய திருதியையில் வெள்ளி வாங்குங்கள் என்று விளம்பரம் செய்ய அங்கும் மக்கள் கூட்டம்! இதே போல துணிக் கடை, மின் சாதனங்கள், தொழில்நுட்பச் சாதனங்கள் போன்ற அனைத்தையும் பாரபட்சமில்லாமல் அட்சய திருதியையில் சேர்த்துவிட்டார்கள், அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையையும் வளர்க்கிறார்கள். ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூசையிடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் ஊக்குவிக்கிறார்கள். அந்த வகையில் நில விற்பனையாளர்களும் இதில் பங்குபெற்றுள்ளனர்.

    இதையெல்லாம்விட மோசமான கொடுமை ராஜஸ்தானில், ஜெய்ப்பூர் அருகிலுள்ள பாகான் – கி- தானி என்ற கிராமத்தில் மக்கள் இதை நியாயப்படுத்துவதோடு அவர்கள் மேற்கொண்ட செயலைக் கேட்கும்போது உள்ளம் பதறுகிறது. பால் மனம் மாறாத பச்சிளம் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார்கள். காரணம் அட்சய திருதியையில் திருமணம் செய்தால் வாழ்க்கை பூத்துக் குலுங்கும் என்று எவரோ கிளப்பி விட்டதைக் கேட்டு, பலர் அவசர அவசரமாக, சட்டத்திற்குப் புறம்பாக, தங்கள் வீட்டுச் சிறுவர்களுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். எட்டு வயது சிறுவனுக்கும், 5 வயது சிறுமிக்கும் உள்பட இது போன்று பல திருமணங்கள் நடந்தேறியுள்ளன. ஜெய்ப்பூர் மாட மாளிகைகள் மற்றும் அரண்மனைகள் என்று ஒரு புறம் செல்வச் செழிப்போடு காணப்பட்டாலும், மறு புறம் மக்கள் பொருளாதாரச் சூழல்களைக் கருத்தில்கொண்டு, திருமணச் செலவை குறைப்பதாக எண்ணிக்கொண்டு, 7 வயது சிறுமிக்குத் திருமணம் செய்வதே தவறு என்ற போதிலும், அவளுடைய இளைய சகோதரிகளான 4, 5 வயது நிரம்பாத இளம் குழந்தைகளுக்கும் அதே மேடையில் திருமணம் செய்திருக்கிறார்கள்.

    காலச் சூழலில் சிக்கி அல்லாடும் மக்கள் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருப்பவர்களின் மன உணர்வுகளை விலை பேசும் ஒரு கூட்டம் புதிது புதிதாகத் தங்கள் வியாபார யுக்திகளைப் பெருக்குகிறார்கள். பிரதோசக் கால வழிபாடு, பௌர்ணமி பூசை, கிரிவலம் போன்ற அனைத்து ஆன்மீக நம்பிக்கைகளும் இன்று வியாபார நோக்கிலேயே செயல்படுவது நல்லதொரு மாற்றம் அல்ல. மனித உணர்வுகளைப் பணயம் வைத்து தங்கள் சுய இலாபங்களைக் கருதி திட்டம் போட்டு மக்களை ஏமாற்றுபவர்கள் மனித நேயத்தோடு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். நாமும் மூட நம்பிக்கைகளில் சிக்காமல் சுய உணர்வுடன், சிந்தித்து செயல்பட விழித்துக் கொள்ள வேண்டும். ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். சேமிப்பு என்பது அத்தியாவசியமான ஒன்றுதான் என்றாலும், அது நம்மைச் சார்ந்ததாக இருக்க வேண்டும். அவரவர், தத்தம் சூழ்நிலைகளுக்கேற்ப அமைவதாக இருந்தால்தான் வளமான வாழ்வு கிடைக்குமேயொழிய விளம்பரத்தைக் கண்டு மயங்கி நின்று ஏமாந்தால் அதனால் வளம் பெறப் போகிறவர்கள் விளம்பரதாரர்கள் மட்டுமே என்ற விழிப்புணர்வும் வேண்டும்.

    Share
  • குண்டு வெடிப்பும் நம் மெத்தனமும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    சென்னை இரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு ஏற்பட்ட பிறகு மிக விரைவாக நமது ஆய்வினைத் துவக்கியுள்ளோம். பெங்களூரூ இரயில் நிலையத்தில் குறிப்பிட்ட அந்தப் பயணி ஏறியிருக்கலாம் என்று முதல் தகவல் அறிக்கை மூலம் அறிய முடிகிறது. இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாகவே உளவுத் துறையின் மூலமாக நமக்குக் கிடைத்த தகவலின்படி, தென்னிந்தியாவில் இது போன்ற தீவிரவாதம் நிகழ்வுகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கை செய்துள்ளனர். அதை அலட்சியப்படுத்தாமல் இருந்திருந்தால் இன்றைய இந்த இழப்பைச் சந்திக்காமல் இருந்திருக்கலாம். மற்றுமொரு தகவல் அறிக்கையின்படி தினசரி ஒரு இலட்சத்து நாற்பதினாயிரம் மக்கள் பயனிக்கக்கூடிய இது போன்ற மிகப்பெரும் இரயில் நிலையங்களில், பயணிகளைச் சோதிப்பது எங்கனம் சாத்தியம் என்கின்றது. சென்னை இரயில் நிலையத்தில் ஒளிவருடிகள் (ஸ்கேனர்கள்) மற்றும் கண்காணிப்புக் கருவிகள் இருந்தபோதிலும் அவைகள் பயன்படுத்தப்படுவதில்லை. சாலைப் போக்குவரத்தில் ஒரு வழிப்பாதை அமைப்பது போல இந்த கண்காணிப்பான் வழியாகத்தான் பயணிகள் அனைவரும் செல்ல வேண்டுமென்பதை கட்டாயமாக்க வேண்டியது அவசியம். இரயில் நிலையத்தின் உள்ளே வருபவர் மட்டுமன்றி வெளியேறுபவர்களும் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள்தான். பெரும் திரளாக மக்கள் வெளியேறக்கூடிய சூழலில் அவர்களையும் கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது. இரயில் நிலையங்கள் சிறியதோ அல்லது பெரியதோ அவைகள் ஒரு முனைப்படுத்த வேண்டியது அவசியம். மக்கள் பெருமளவில் கூடுகின்ற இடங்களான திரையரங்குகள், வணிக வளாகங்கள், நீதி மன்றங்கள், மருத்துவமனைகள், போன்ற இடங்களிலும் இத்தகையக் கட்டுப்பாடுகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். கண் கெட்ட பிறகு சூரிய வழிபாடு பயன் தராது! பொது இடங்களிலும், உள் கட்டமைப்புகளை அதிகப்படுத்தி, அமைதிப்பூங்காவான நம் தமிழ் நாட்டையும், இந்தியாவையும் காப்பாற்றும் முயற்சியில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம். . தனி நபராக இருப்பினும், மத்திய, மாநில கூட்டமைப்புகள் தனித்தனி அமைப்புகளாக இருப்பினும் நாட்டின் பொது நலன் கருதி அவைகளின் உதவிகளையும் கோரிப் பெற்று தீர்வு காண்பதில் தயக்கம் காட்ட வேண்டியதில்லை. .  ஜெய்ஹிந்த்!

    Share
  • தமிழ்நாட்டில் சுபமாக முடிந்த தேர்தல் திருவிழா!

    பவள சங்கரி

    தலையங்கம்

    தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா சுபமாக முடிந்துள்ளது. அடுத்த வானவேடிக்கை தேர்தல் முடிவுகள் வந்தவுடன் கோலாகலமாகத் தொடரும்! சென்ற முறையைவிட இந்த முறை தேர்தலில் பங்களிப்புகள் அதிகமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய 14 சதவிகிதம் அதிகப்படியான வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. பின் தங்கிய மாவட்டங்களில்தான் அதிகப்படியான வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 81 சதவிகித வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. தனித் தொகுதிகளிலும் அதிகப்படியான வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. வட மாவட்டங்கள் என்று குறிப்பிடப் படக்கூடிய சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் வாக்குப் பதிவுகள் குறைந்துள்ளன. குறிப்பாக படித்த மத்தியதர மக்கள் அதிகம் வாழக்கூடிய தென் சென்னையில் தமிழ்நாட்டிலேயே மிகக் குறைவான வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. இது படித்த சமுதாயத்தின் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது. பல்வேறு ஊடகங்கள், அமைப்புகள், நிறுவனங்கள் போன்றவைகளின் தனிப்பட்ட முறையிலான வேண்டுகோள்களுக்குப் பிறகும் இந்த அளவிற்குக் குறைவான வாக்குப் பதிவுகள் தென் சென்னையில் நடைபெற்றுள்ளது வெட்கத்திற்குரிய விசயம்.

    இந்தத் தேர்தலின் முக்கியமான அம்சமாக அதிகப்படியான வாக்குப் பதிவுகள் இளைய சமுதாயத்தினரிடமிருந்து வந்துள்ளது என்பதுதான். நல்லதொரு மாற்றமான இதனால் தேர்தலின் கணிப்புகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இவ்வளவு விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்குப் பிறகும் பணப் பரிமாற்றங்கள் மிக அதிக அளவில் நடைபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் மக்கள் தெளிவான சிந்தனையில் இருக்கிறார்கள் என்பதும் விளங்குகிறது. முடிவுகளும் அவ்வாறே வரும் என்று நம்பலாம். மும்பையில் நடைபெற்ற தேர்தலில் எல்லோரும் பாராட்டும் வகையில் 55 சதவிகித வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. இதுவரை 40 முதல் 44 சதவிகித வாக்குப்பதிவுகளே நடைபெற்றிருக்கிறது. இதுவும் அவமானகரமான விசயம். பாண்டிச்சேரியில் 82 சதவிகிதமும், மேற்கு வங்காளத்தில் 80 சதவிகிதமும் வாக்குப்பதிவுகள் நடைபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் என்று 100 சதவிகித வாக்குப் பதிவுகள் நடைபெறுகின்றதோ அன்றுதான் அது நமது ஜனநாயகத்திற்குக் கிடைத்த முழு வெற்றியாக எடுத்துக்கொள்ள முடியும். பணப் பரிமாற்றங்கள் அறவே இல்லாத ஒரு தேர்தலாகவும் அது இருக்க வேண்டும். இன்றுவரை அது சிம்ம சொப்பனமாகவே இருந்து வருவதும் வேதனைக்குரிய விசயம். வாழ்க ஜனநாயகம்!

    ஜனநாயகம் வேரூன்ற வேண்டுமென்றால் வாக்களிப்பதில் இளைய சமுதாயத்தினரின் பங்களிப்பு அதிகரித்துள்ளது போலவே அரசியலிலும் அவர்களுடைய பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்!

    ஜெய்ஹிந்த்

    Share
  • இயேசு கிறித்து உயிர்த்தெழுந்த நாள் வாழ்த்துகள் – நோட்டா ஒரு விளக்கம்

    பவள சங்கரி

    தலையங்கம்

    இயேசு கிறித்து உயிர்த்தெழுந்த நாள் வாழ்த்துகள். மக்களுக்காக வாழ்ந்த மதபோதகர் இயேசு நாதர் மீண்டும் உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மக்கள் நல்வாழ்விற்காகச் சிலுவையைச் சுமந்து, கல்லடிபட்டு மரித்த இயேசு பிரான் மக்கள் நல்வாழ்வு வேண்டி மீண்டும் உயிர்த்தெழுந்த நாள் இந்நாள். அவரை நினைவுகூர்ந்து போற்றுவோம். அன்றிலிருந்து இன்றுவரை கிறித்துவம் என்றால் சேவை என்ற மனப்பான்மையுடன் வாழுகின்ற கிறித்துவ சகோதர, சகோதரிகளுக்கு நம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.

    சுண்ணாம்புக் காளவாயில் நாவுக்கரசரைப் போட்டபோதும், கல்லோடுக் கட்டி கடலில் தூக்கிப் போட்டபோதும் இறையருளால் அந்தக் கல்லே தெப்பமாக மிதந்து வந்து அவரைக் காத்தது. அவரும்  மக்கள் நல்வாழ்விற்கு வழிகாட்டினார்.

    அரியணையைத் துறந்த புத்தர் அன்பே இறைவன் என்று கூறியதால் மாபெரும் மத போதகரானார். எந்தச் சமயமாக இருப்பினும் ‘சமயம்’ என்றால் ‘வழிகாட்டுதல், நன்னெறிப்படுத்துதல்’ என்றே பொருள் கொள்ளப்படுகிறது.

    நோட்டா ஒரு விளக்கம்

    நோட்டா என்பது நமக்கு விருப்பமில்லையென்றாலும், நம் கடமையிலிருந்து தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவும் நமது தொகுதியில் நிற்கக்கூடிய வேட்பாளர்கள் நம் கொள்கைகளுக்கு உடன்பாடாக இல்லாமல் இருப்பவர்களாக இருந்தால், அவர்களுக்கு வாக்களிப்பதில் நமக்கு விருப்பமில்லை என்பதைச் சுட்டிக் காட்டும் விதமாகவும் மற்றும் நமது தொகுதியில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் மக்களுடைய பிரச்சனை, எந்தவொரு கட்சி ஆட்சியில் இருந்தாலும் அது அப்படியே தீர்க்கப்படாமலே இருக்கும் பட்சத்தில் நம்முடைய எதிர்ப்பைக் காட்டுவதற்காகவும் நோட்டோவைப் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட ஒரு தொகுதியியில் நோட்டோ பதிவு முறையைப் பயன்படுத்தி குறிப்பிட்ட சதவிகிதத்திற்கு மேல் பதிவு ஏற்பட்டிருப்பின், அந்தத் தொகுதிக்கு மீண்டும் மறு தேர்தல் வைக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் கொண்டுவர வேண்டியது அவசியம்.

    தற்போது நடந்து கொண்டிருக்கும் தேர்தலில், ஐந்து தனித் தொகுதிகளில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் வேட்பாளர்களாக இருப்பதால் மற்ற சாதியைச் சார்ந்தவர்கள் வாக்களிப்பதைத் தவிர்த்திருக்கிறார்கள் என்ற செய்தி வருத்தத்திற்குரியது. டாக்டர் அம்பேத்கார் போன்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த தலைவர்களின் சாதனைகளையும் மனிதாபிமானச் சேவைகளையும் நாம் நினைவுகூர வேண்டியது அவசியம். அந்தக் குறிப்பிட்ட ஐந்து தொகுதிகளிலும் 7 முதல் 11 சதவிகிதம் வரையிலான மக்கள் வாக்களிப்பதைத் தவிர்த்திருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மெத்தப் படித்த மேதாவிகளே வாக்களிக்கும் கடமையிலிருந்து தவறுவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மனப்பான்மை மாறி, அனைவரும் சமம் என்ற உணர்வுடன் தேர்தலைச் சந்தித்து நமது கடமையை நிறைவேற்றுவோம்.

    ஜெய் ஹிந்த்!!!

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

    Share
  • மக்களுக்காக, மக்களின் கேள்வி (10)

    பவள சங்கரி

    தலையங்கம்

    மரியாதைக்குரிய இந்திய தேசத்தின் மக்களே,

    பல தன்னலமற்ற தலைவர்களால், குண்டடிபட்டு, தடியடிபட்டு இரத்தம் சிந்தி பல போராட்டங்களுக்குப் பிறகு நமக்குக் கிடைத்ததே இந்த சுதந்திரம். நம்மை நாமே ஆள்வதற்குக் கிடைத்த ஒரு அத்தாட்சி. மக்களாட்சி என்பது மக்களால், மக்களுக்காக, மக்கள் ஆளும் ஆட்சி. மிகப் பெரிய பொறுப்புகளில் இருந்தவர்கள் கூட அரசியல் ஆதாயங்களுக்காகவும், அதிகாரத்தின் மேல் உள்ள ஆசையாலும், தாங்கள் இருந்த உயரிய நிலையை மறந்து இன்று தேர்தலில் நின்றுள்ளார்கள். இந்தப் பதவி தரக்கூடிய சுகத்திற்காக ஆங்கிலேயர் போல மக்களைப் பிரித்தாவது தங்கள் வாக்குகளை சேகரித்து வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முனைகின்றனர். தனி மனித ஒழுக்கம், சேவை மனப்பான்மை, உயரிய இலட்சியங்கள் போன்ற அனைத்தும் காற்றில் பறக்க விடப்படுகின்றன. ’வெற்றி வெற்றி’ என்ற ஒன்றுதான் அரசியல்வாதிகளின் தாரக மந்திரங்களாக இருக்கின்றது. அந்த வெற்றியை அறுவடை செய்வது ஒன்றையே தங்கள் இலட்சியமாக வைத்துக்கொண்டு செயல்படுபவர்களும் இருக்கிறார்கள். வாக்குகள் வாங்கப்படுகின்றன.. விற்கப்படுகின்றன. இந்தச் சந்தையில் காந்தி கண்ட ராமராஜ்ஜியம் கிடைக்குமா? சுயராஜ்ஜியம் நிர்ணயிக்கப்படுமா. சிந்தித்து செயல்படுவோம்.. நமக்கானவர்களைத் தேர்ந்தெடுக்கும் வல்லமை நம் கைகளில்தான் இருக்கிறது.

    நேர்மையானவர்களையேத் தேர்ந்தெடுப்போம்
    திறமையானவர்களை அங்கீகரிப்போம்
    நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்பவர்களுக்கு ஆதரவளிப்போம்

    வாக்களிப்பது நமது கடமை
    தவறாமல் வாக்களிப்போம்

    ஜெய்ஹிந்த்

    Share