தலையங்கம்

அட்சய திருதியையும், மூட நம்பிக்கைகளும்

பவள சங்கரி

தலையங்கம்

அட்சய திருதியை என்ற இந்நாளை நம் இந்துக்கள் மற்றும் சமணர்கள் புனித நாளாகக் கருதுகின்றனர். இந்த அட்சய திருதியை பஞ்சாங்கம் கணிக்கப்பட்ட காலத்திலிருந்து இருக்கக்கூடிய ஒரு சிறப்பான நாள். ஆனால் இந்த ஐந்தாறு வருடங்களாகத்தான் மிக அதிகமான விளம்பரங்கள் மூலமாக மக்கள் மனதைக் கெடுத்து வியாபாரம் செய்ய ஆரம்பித்துள்ளவர்கள் நகைக் கடைக்காரர்கள். இதனை வியாபார யுக்தியாகப் பயன்படுத்தியவர்கள், இரண்டு கிராம் தங்கம் வாங்கி வீட்டில் வைத்தால் கூட அது 200 கிராமாக விரைவில் வளரும் என்று பாமரர்களை எளிதாக மூளைச்சலவை செய்கிறார்கள். இதை நம்பி தங்கள் வாழ்வும் வளமாக மாறும் என்ற ஆசையில் தங்களுடைய கடைசி பைசாவைக் கூட குறிப்பிட்ட அந்த நாளில் நகைக் கடையில் சென்று கொட்ட ஆரம்பித்துள்ளார்கள்.. கொட்டியவர்களின் வாழ்க்கை வளமானதோ இல்லையோ, நகைக் கடைக்காரர்களின் வாழ்க்கை வளமானது. மக்கள் மணிக்கணக்காக நீண்ட வரிசையில் நின்று நகை வாங்க கையிருப்பைத் துடைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பார்த்த வெள்ளி வியாபாரிகளும் தங்கள் பங்கிற்கு, வெள்ளி என்றால் ‘சுக்கிரன்’ அதனால் அன்று வெள்ளி வாங்கினால் சுக்கிர திசை தேடி வந்து செல்வந்தனாக்கும், அதனால் அட்சய திருதியையில் வெள்ளி வாங்குங்கள் என்று விளம்பரம் செய்ய அங்கும் மக்கள் கூட்டம்! இதே போல துணிக் கடை, மின் சாதனங்கள், தொழில்நுட்பச் சாதனங்கள் போன்ற அனைத்தையும் பாரபட்சமில்லாமல் அட்சய திருதியையில் சேர்த்துவிட்டார்கள், அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையையும் வளர்க்கிறார்கள். ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூசையிடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் ஊக்குவிக்கிறார்கள். அந்த வகையில் நில விற்பனையாளர்களும் இதில் பங்குபெற்றுள்ளனர்.

இதையெல்லாம்விட மோசமான கொடுமை ராஜஸ்தானில், ஜெய்ப்பூர் அருகிலுள்ள பாகான் – கி- தானி என்ற கிராமத்தில் மக்கள் இதை நியாயப்படுத்துவதோடு அவர்கள் மேற்கொண்ட செயலைக் கேட்கும்போது உள்ளம் பதறுகிறது. பால் மனம் மாறாத பச்சிளம் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார்கள். காரணம் அட்சய திருதியையில் திருமணம் செய்தால் வாழ்க்கை பூத்துக் குலுங்கும் என்று எவரோ கிளப்பி விட்டதைக் கேட்டு, பலர் அவசர அவசரமாக, சட்டத்திற்குப் புறம்பாக, தங்கள் வீட்டுச் சிறுவர்களுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். எட்டு வயது சிறுவனுக்கும், 5 வயது சிறுமிக்கும் உள்பட இது போன்று பல திருமணங்கள் நடந்தேறியுள்ளன. ஜெய்ப்பூர் மாட மாளிகைகள் மற்றும் அரண்மனைகள் என்று ஒரு புறம் செல்வச் செழிப்போடு காணப்பட்டாலும், மறு புறம் மக்கள் பொருளாதாரச் சூழல்களைக் கருத்தில்கொண்டு, திருமணச் செலவை குறைப்பதாக எண்ணிக்கொண்டு, 7 வயது சிறுமிக்குத் திருமணம் செய்வதே தவறு என்ற போதிலும், அவளுடைய இளைய சகோதரிகளான 4, 5 வயது நிரம்பாத இளம் குழந்தைகளுக்கும் அதே மேடையில் திருமணம் செய்திருக்கிறார்கள்.

காலச் சூழலில் சிக்கி அல்லாடும் மக்கள் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருப்பவர்களின் மன உணர்வுகளை விலை பேசும் ஒரு கூட்டம் புதிது புதிதாகத் தங்கள் வியாபார யுக்திகளைப் பெருக்குகிறார்கள். பிரதோசக் கால வழிபாடு, பௌர்ணமி பூசை, கிரிவலம் போன்ற அனைத்து ஆன்மீக நம்பிக்கைகளும் இன்று வியாபார நோக்கிலேயே செயல்படுவது நல்லதொரு மாற்றம் அல்ல. மனித உணர்வுகளைப் பணயம் வைத்து தங்கள் சுய இலாபங்களைக் கருதி திட்டம் போட்டு மக்களை ஏமாற்றுபவர்கள் மனித நேயத்தோடு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். நாமும் மூட நம்பிக்கைகளில் சிக்காமல் சுய உணர்வுடன், சிந்தித்து செயல்பட விழித்துக் கொள்ள வேண்டும். ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். சேமிப்பு என்பது அத்தியாவசியமான ஒன்றுதான் என்றாலும், அது நம்மைச் சார்ந்ததாக இருக்க வேண்டும். அவரவர், தத்தம் சூழ்நிலைகளுக்கேற்ப அமைவதாக இருந்தால்தான் வளமான வாழ்வு கிடைக்குமேயொழிய விளம்பரத்தைக் கண்டு மயங்கி நின்று ஏமாந்தால் அதனால் வளம் பெறப் போகிறவர்கள் விளம்பரதாரர்கள் மட்டுமே என்ற விழிப்புணர்வும் வேண்டும்.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க