திருமால் திருப்புகழ் (75)
கிரேசி மோகன்

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
———————————————————-
’’கண்ணன் காப்பு’’….
————————————

பொன்னிற வண்ணப் புழுதி எழுந்துயர்,
விண்ணவர் கண்ணில் விழுந்திட, -செந்நிற
சாயங்கா லத்தில் , சகாக்களுடன் வீடேகும்,
காயாம்பூ வண்ணனே காப்பு….
காளியன் குட்டையில் மூளியாய் மூழ்கஅவன்,
தோளினில் ஆடிய தெய்வமே, -காளியின்
அண்ணனே, கைமாறி ஆயர் குலம்புகுந்த
கண்ணனே, வேண்டினேன் காப்பு….
பூதனை மார்பை புசித்தவள் ஆவியை,
வேதனை இன்றி விரட்டியவா, -தீதினை
ஓட்டவும், தர்மம் உயரவும், பாண்டவ
கூட்டம், பிணைந்தவா காப்பு….
தாய்க்குப் பணிந்தன்று, தாம்பில் புகுந்துமரம்
சாய்க்க, உரலிழுத்த சாகஸா, – வாய்க்குள்,
மாதா மகிழ மகோன்னதம் காட்டிய,
கீதா உபதேசா காப்பு….
எதுரா எதுராவென, எங்கெங்கோ தேடும்,
புதிராம் புவிவாழ்வு போதும், – மதுரா
நகரொளிந்த தெய்வம், நவனீதக் கண்ணன்,
குகனணைந்து ஐவரானோன் காப்பு!!
—————————————————————————————————
படங்களுக்கு நன்றி :
http://kamadenu.blogspot.in/