தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே
கவிஞர் காவிரி மைந்தன்
தூளியிலே ஆடவந்த
தாய் ஒருத்தி மட்டும்தான் இன்னும் பால்போல் தூய்மையாய் இருக்கி்றாள் இந்தத் தரணியில்! தன் குழந்தை – தன்னுதிரம் என்னும்போதிலே தன்னையே தருகின்ற தாய்மைக்கு நிகராக ஏதுமில்லை! கண்போல் வளர்த்திட வேண்டுமென யாரும் அவளுக்குப் பாடம் கற்றுத் தருவதில்லை! இயல்பாய் அவளின் பரிணாமம் தாய்மைப் பேற்றோடு பின்னிப்பிணைந்திருக்கிறது! எத்தனை துன்பமென்றாலும் அதையெல்லாம் தான் ஏற்று, தன் செல்வம் அனைத்து வகைகளிலும் பாதுகாப்பாய் இருக்க வேண்டி, விரதம் இருப்பதுமுதல்.. மேனியிளைப்பதுவரை.. எதையும் தாங்குகிறாளே தாய்..அவளின் அன்பிற்கு.. கருணைக்கு, சேவைக்கு எங்கே மாற்று?
அம்மா என்கிற ஒற்றைச் சொல்லில் குழந்தை அழுவதும் சிரிப்பதும் எனத் தொடங்கி, காலூன்றி நடக்கின்ற அழகெல்லாம் தன் கண்ணே பட்டுவிடப் போகிறதென்று திருஷ்டிகழித்து அவள் ஒவ்வொருநாளும் உனக்காக தன் கண்ணுறக்கம் மறக்கின்ற உலகில் எத்தனை வகையான உறவுகள் வந்தென்ன வாழ்ந்தென்ன? தாயே உனக்கு நிகராக கடவுள்கூட என் கண்ணில் படவில்லையே!
அவள் தந்த தாலாட்டில் உறங்கியிருந்து.. அவள் தந்த பாலில் உடல் வளர்த்து… அவள் இமையின் நிழலில் படுத்துறங்கி, அவள் பட்ட பாடுகளையெல்லாம் கண்ணுற்று, அவளை தெய்வமென்று கருதாமல் என்ன செய்ய?
கவிதை இழையோடும் பாடலா? இது இசையில் அசைந்தாடும் கீதமா? மழலைக் கண்மூட தாலாட்டா? கேட்கும்போதே நாமும் உறங்க வேண்டும் எனத் தோன்றும் கானமா? தாயின் பாசத்தையும் மகன் கொண்ட நேசத்தையும் பாமர வரிகளில் பந்தலிட்டு, ‘சின்னத்தம்பி’ திரைப்படத்திற்காக இசைஞானி இளையராஜா இசையில் தவழ்ந்துவரும் கவிஞர் வாலி அவர்களின் பாட்டு! மனோ அவர்களின் குரலில் இந்தப் பாடல் வழங்கப்பட்டிருக்கிறது! உலகமெங்கும் மொழிபெயர்க்கப்பட்டால் இந்தப் பாடல் அகிலமெங்கும் பவனி வரும் என்பதில் ஐயமொன்றில்லை!
பெண்குரலிலும் இந்தப் பாடல் மழை பொழிகிறது.. சித்ரா அவர்களின் குரலில் படத்தின் பெயர்போடும்போது.. இந்த முத்தான பாடல் நம் நெஞ்சில் பதிகிறது!!
பாடல்: தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே
திரைப்படம்: சின்னத்தம்பி
பாடியவர்: மனோ
இயற்றியவர்: வாலி
இசை: இளையராஜா
ஆண்டு: 1991
தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே
ஆடியிலே கண்டெடுத்த அற்புத ஆனிமுத்தே
தொட்டி மேலே முத்து மாலை
சின்னப் பூவே விளையாடா
சின்னத் தம்பி இசைப் பாட…
தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே
ஆடியிலே கண்டெடுத்த அற்புத ஆனிமுத்தே
தொட்டி மேலே முத்து மாலை
சின்னப் பூவே விளையாடா
சின்னத் தம்பி இசைப் பாட…
பாட்டேடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர் சுரக்கும்
ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்
ஏழு கட்ட எட்டு கட்ட தெரிஞ்சா நான் படிச்சேன்
நான் படிச்ச ராகமெல்லாம் யார் கொடுத்தா சாமிதான்
ஏடு எடுத்து படிக்கவில்லை சாட்சியன்ன பூமிதான்
தொட்டி மேலே முத்து மாலை
சின்னப் பூவே விளையாடா
சின்னத் தம்பி இசைப் பாட…
தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே
ஆடியிலே கண்டெடுத்த அற்புத ஆனிமுத்தே
தொட்டி மேலே முத்து மாலை
சின்னப் பூவே விளையாடா
சின்னத் தம்பி இசைப் பாட…
சோறு போடத் தாயிருக்க பட்டினியை பார்த்ததில்லை
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்கும் போனதில்லை
தாயடிச்சு வழிச்சதில்லை இருந்தும் நான் அழுவேன்
நான் அழுதா தாங்கிடுமா உடனே தாய் அழுவா
ஆக மொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ள நான்
வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்லதான்
தொட்டி மேலே முத்து மாலை
சின்னப் பூவே விளையாடா
சின்னத் தம்பி இசைப் பாட…




