மென்மைகள்!
-பத்மநாபபுரம் அரவிந்தன்
அதிகாலை உதயத்தில்
அரசமரத் தளிரிலை
மென் காற்றில் அசைகையில்
மரக்கிளையமர்ந்து அவசரமற்று
செவ்வளை மூக்கால்
உடலிறகு தூய்மை செய்யும்
பச்சைக் கிளி, மாலையில் மெதுவாய்
மொட்டவிழ்ந்து காலையில்
மொத்தமாய் மணம் பரப்பும்
நித்ய கல்யாணிச் செடியிடை
உடல் வளைத்து முகம் புதைத்துத்
தூங்கும் வெண்ணிறப் பூனைக்குட்டி,
மடி கனத்து மெல்ல வரும் பசு மாட்டின்
மேலமரும் இரட்டைவால் குருவி,
குளித்து ஈரத் தலைமுடித்துக்
கோலமிடும் இளம் பெண்கள்,
மெல்லக் கம்பூன்றி
நடந்து வரும் முதியவர்கள்,
மெத்தென்ற பெரும் பாதம்
அழுத்தமாய்ப் பதித்துக்
கம்பீர நடை நடந்து
வருகின்ற கோவில் யானை,
முலை சப்பும் ஞாபகத்தில்
வாயசைத்துத் தூங்கும் சிறு குழந்தை,
தூரத்தில் கேட்கும் நாதஸ்வர இன்னிசை..
இன்னும் எத்தனையெத்தனையோ
மென்மைகள் நிறைந்த அழகிய அதிகாலை
விடியலின் அழகே அழகுகளில் அழகு!