நான் அறிந்த சிலம்பு – 118
மதுரைக் காண்டம் – 11. காடு காண் காதை
இடப்பக்கத்துச் செல்லும் வழி
அந்த வலப்பக்கம் செல்லாது
இடப்பக்கம் செல்வீராயின் அங்கே
செவ்வழிப் பண் இசைத்துச் சத்தமிடும்
சிறகுள்ள வண்டுகள் திரிகின்ற
குளிர்ச்சி பொருந்திய பூஞ்சோலை,
தாழ்ந்த வயல்கள், குளங்கள்
இவற்றைக் கடந்து,
கடப்பதற்கு அரியனவாக இருக்கும்
வழிகளையுடைய காட்டுப் பகுதியைக் கடந்து
அழகர் மலை சென்று சேர்வீர்கள்.
அங்கு, பொதுவாக மனிதர்களுக்கு ஏற்படும்
மயக்கத்தைப் போக்க வல்ல குகை ஒன்றுண்டு.
அங்கு, தேவர்களால் புகழ்ந்து போற்றப்படும்
மிக்க வியப்பை ஏற்படுத்தக்கூடிய
மூன்று பொய்கைகள் காணப்படும்.
பொய்யாத சிறப்புடைய
புண்ணிய சரவணம், பவகாரிணி, இட்டசித்தி
இம்மூன்று பொய்கைகளும் அருகருகே காணப்படும்.
புண்ணிய சரவணப் பொய்கையில் நீராடுவீராயின்
விண்ணவர் தலைவனாம் இந்திரனால்
அருளிச் செய்யப்பட்ட
ஐந்திரம் என்னும் இலக்கண நூலறிவு பெறுவீர்கள்.
பவகாரணிப் பொய்கையில் மூழ்கி நீராடுவீராயின்
இந்தப் பிறவிக்குக் காரணமாயுள்ள
உங்கள் முற்பிறப்பினைப் பற்றி அறிவீர்கள்.
இட்டசித்திப் பொய்கையில் நீராடுவீராயின்
உங்களுக்கு விருப்பமானதை எல்லாம்
அடையப் பெறுவீர்கள்.
அங்கே காணப்படும்
குகைக்குள் நுழைய முற்பட்டால்,
ஓங்கி உயர்ந்த மலையில் எழுந்தருளியுள்ள
மேலான இறைவனை வணங்கி,
மனதில் அவன் அடிகளை எண்ணித் துதித்து,
அம்மலையை மூன்று முறை வலம் வரவேண்டும்.