விலைபோகும் விளை நிலங்களும், தொடரும் தவறான அணுகுமுறைகளும்

2

பவள சங்கரி

தலையங்கம்

வாய்க்கால் பாசனம் பெறக்கூடிய விளை நிலங்கள் இன்று விற்கப்பட்டு அவைகளில் உயர்ந்த கட்டிடங்கள் கட்டப்பட்டோ அல்லது மாற்று வழி பயன்பாட்டிற்கோ கொண்டுவரப்படுகின்றன. குளங்களும், வாய்க்கால்களும் தூர் வாரப்பட்டு பாசனத்திற்கு பயன்படுத்தும் நிலை மாறி அவைகள் அழிக்கப்பட்டு மனை நிலங்களாகப் பிரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. நல்ல குளப் பாசனங்கள் பெறும் ஒரு சில விளை நிலங்களும் மனைகளாகப் பிரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இந்த நிலை பாரபட்சமில்லாமல் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறுகின்றன. இதனை எந்த அதிகாரிகளும், கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. இவ்வாறு விவசாய விளை நிலங்கள் மாற்று வழிகளுக்குப் பயன்படுத்தப் பட்டால் இன்னும் குறுகிய காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்பதில் ஐயமில்லை. அரசு இதில் கவனம் செலுத்தி விலை நிலங்கள் காக்கப்பட்டு வருங்காலத்தில் உணவுப் பஞ்சம் ஏற்படாமல் காக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது. அரசு, இந்த விற்பனையை உறுதி செய்பவர்கள், ஆவண பதிவாளர்கள் போன்றவர்கள் மூலமாகவோ அல்லது கிராம நிர்வாக அதிகாரிகள் மூலமாகவோ விளை நிலங்கள் பாழ்படுவதைத் தவிர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டியது உடனடித் தேவை.

ரயில்வே நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே இன்று பயணிகள் கட்டணம் 14.2 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சரக்குக் கட்டணமும் 6.5 சதவிகிதம் கூட்டப்பட்டுள்ளது. இதற்கு நிர்வாகம் கூறக்கூடிய காரணம் நிதி பற்றாக்குறை என்பதே. ஒவ்வொரு அரசும் நிதிநிலை பற்றாக்குறை என்று கூறி பயணிகள் கட்டணத்தையும், சரக்குக் கட்டணத்தையும் உயர்த்துவதே வழமையாகக் கொண்டுள்ளது. பற்றாக்குறையை சரி செய்வதற்கு மாற்று வழியை சிந்திக்க வேண்டியதை விடுத்து கட்டணத்தைக் கூட்டி மக்களின் தலையில் சுமையை அதிகரிப்பது வருத்தத்திற்குரிய விசயம். பயணிகளுக்குப் பயன்படும் தனியார் உணவகங்கள் அனைத்து புகைவண்டி நிலையங்களிலும் கொண்டுவருதலும், அங்கு பயன்படுத்தாமல் இருக்கக்கூடிய பரந்த இடங்களில் எரிபொருள் விற்பனை நிலையங்கள் கொண்டு வருதலும், மின்சார ரயில் அதிகமாகப் பயன்படுத்தும் நேரங்களில் சூரிய ஒளி மின்சாரம் பயன்பாட்டிற்குக் கொண்டு வருதலும், நவீன முறையில் விளம்பரங்கள் செய்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தினால் கிடைக்கும் அதிகப்படியான வருமானம் மூலமாக இந்தப் பற்றாக்குறையை சரி செய்ய முடியும் . இது போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளில் அரசு ஈடுபடுவதால் மக்கள் சுமை ஏறாமல் இருப்பதோடு, வேலை வாய்ப்புகளும் கூடுகிறது.

மற்ற ஆட்சிகளைப் போலவே பாரபட்சமே இல்லாமல் விலை உயர்வுக்கு வரி விதிப்பே இந்த ஆட்சியிலும் காரணமாகியிருக்கிறது. சர்க்கரை ஆலைகளில் 4000 கோடி ரூபாய் வட்டி இல்லாத கடனாக அளித்து விவசாயிகளின் பாக்கிகளை நேர் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதுவுமின்றி அவர்கள் கட்ட வேண்டிய சுங்க வரி செலுத்துதலையும் ஐந்து ஆண்டுகள் வரை காலக்கெடு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆலைகளுக்கு கரும்பு வந்தவுடன், அதிலிருந்து சர்க்கரை எடுக்கப்பட்டு, ஆலைகளை விட்டு அது வெளியேறும்போது சுங்க வரியுடனும், அவர்களுடைய இலாபத்துடனும், பணமாகப் பெற்றுக்கொண்டு அதற்குப் பிறகே சர்க்கரை வெளியேறுகிறது. இது ஒரு கிலோ சர்க்கரையாக இருப்பினும் அல்லது 120 மூட்டை (12 டன்) ஏற்றக்கூடிய அளவாக இருப்பினும் ஆலை முதலாளிகள் பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகே சர்க்கரை வெளியேறுகிறது. இப்படி ஒரு நிலையில் 4000 கோடி ரூபாய் வட்டியில்லாத கடன் அளித்தும், சுங்கவரி கட்டுவதற்கும் காலக்கெடுவை நீட்ட வேண்டிய தேவை என்ன என்ற ஐயமும் எழுகிறது. ஏழை விவசாயிகளின் கரும்புக்குத் தர வேண்டிய தொகையைக் கொடுக்காமல் இயங்கக் கூடிய ஆலைகளின் நிர்வாகத்தை சீர் செய்யவேண்டியதும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டியதும் அரசின் கடமை. அது போலவே ஆலைகளில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களைக் காப்பதும் அரசின் கடமை. நிர்வாகங்கள் செய்யக்கூடியத் தவறுகளால் வறுமையின் காரணமாகத் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் விவசாயிகளைக் காக்க வேண்டியது அவசியம். திரு மோடி அவர்களின் அரசு மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்திருக்கும் நிலையில் இது போன்ற முக்கிய பிரச்சனைகளில் அரசு கவனம் செலுத்தி நம் பொருளாதார நலிவுகளுக்கு முக்கிய காரணமாக இது நாள் வரை இருந்த நிர்வாகச் சீர்கேடுகளை சீர் செய்து வளமான பொருளாதாரத்திற்கு வழி வகுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இறக்குமதி செய்யக்கூடிய சர்க்கரைக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தியதால், ஒரு கிலோவிற்கு 10 ரூபாய் விலை ஏற்றம் மக்களுக்குச் சுமையாகியுள்ளது. விலை ஏற்றத்தைத் தவிர்க்காமல் விலை ஏற்றத்திற்கு அரசு துணை போவதால் பண வீக்கம் அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாமல் போகும்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “விலைபோகும் விளை நிலங்களும், தொடரும் தவறான அணுகுமுறைகளும்

  1. Article is good . It  pointed out the challenges and embedded with solutions. Good news to you all. Now all ministries are asked to open social media account  for  encouraging feedback from citizens.  You can feed this too directly to the concerned ministry’s link.  NOW EVERY ONE CAN PARTICIPATE WITH THE e-GOVERNANCE. 

  2. விளைந்தது விலையேற வியாபாரம் விண்ணேற‌
    விளைநிலமும்  விலைபோக  விவசாயம்  தலைத்தாழ – நீர்
    ஏற்றதுடன்  இருந்ததெலாம்  கட்டிடமாய் மாறியதால்
    ஏற்றுமுகம்  கண்டதிந்த  விலையேற்றம் பணவீக்கம்
    பயணச்சுமைத் தீர்க்க கட்டணம் ஏற்றிவிட்டால்
    மின்ச்சுமையைத் தீர்க்க மின்(சார) கட்டு ஏற்றிவிட்டால்
    வரிச்சுமையைத் தீர்க்க  வருவாயை  ஏற்றிவிட்டால்
    பரிஎதற்கு பட்டம் எதற்கு அரியணையும் தான் எதற்கு ?
    கண்மூடி கொண்டதனால் காசினியும் இருட்டாமோ
    மண்மூடி புதைந்திருப்பின் மாற்றுவழி தான்வருமோ?
    எங்கே குற்றம்?  எங்கே குறை ?
    யாரிதை சீர்திருத்துவார் ? பதிலாய்
    அந்தநாள் வந்தது உங்களின் கருத்துகளூம்
    ஆள்பவர் அறிந்திடுவர், ஆவனம் செய்திடுவர்! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *