பவள சங்கரி

தலையங்கம்

1989ம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி, பெய்ஜிங், டியானமென் (Tiananmen) சதுக்கத்தில் மாபெரும் போராட்டம் நடந்தது. சுதந்திரத்திற்கு ஆதரவாகப் போராடிய பல ஆயிரம் மாணவர்களை தங்களுடைய இரும்புக் கரம் கொண்டு கொன்று குவித்து அந்தச் சுதந்திரப் போராளிகளை நசுக்கினர். அதன் பிறகு இந்த 25 ஆண்டு காலத்தில் எந்த விதமான போராட்டங்களோ, ஜனநாயகம் பற்றிய பேச்சோ இல்லாமல் கவனமாக பார்த்துக்கொண்டனர். ஜனநாயகத்திற்காகப் போராடிய அந்த மாணவர்களை நினைவுகூர வேண்டிய காலமிது. அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் விடுதலைக்காகப் போராடி ஜனநாயகத்தை மீட்டுக் கொண்டு வந்து தலைவரானவர் ஆபிரகாம் லிங்கன் அவர்கள். இன்று பாரக் ஒபாமா அவர்கள் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள். இவ்வாறு ஒரு சாதாரண தனி மனிதனும் தலைமைப் பொறுப்பில் வர முடியும் என்று காட்டிய அமெரிக்காவின் ஜனநாயகம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களால் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமர் ஆட்சி நடைமுறையில் இருப்பினும், அங்கு இருப்பது மன்னராட்சி முறை. அதாவது, மகாராணி, அவருடைய மகன், பேரன் என்று பரம்பரையாக ஆட்சி செய்யும் முறையே உள்ளது. அதனுடைய காமன்வெல்த் நாடாகிய ஆஸ்திரேலியாவில், இங்கிலாந்து அரசியாரின் பிரதிநிதி தலமையில்தான் ஆட்சி நடைபெறுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கும் சுய ஆட்சி போராட்டங்கள் நடந்து அது தோல்வியைக் கண்டது. தாங்கள் பிரித்தானிய ஆட்சியின் கீழ் வாழ்வதையே விருப்பம் கொண்டிருக்கிறார்கள்.

மாபெரும் ஜனநாயக நாடான நம் இந்தியாவிலும் ஜனநாயக ஆட்சி என்ற பெயரில் பரம்பரை ஆட்சி நடைபெற்றது. காந்தியடிகள் கைகாட்டுதலால் பிரதமரான நேரு, அவர்களுக்குப் பிறகு அவரது மகன் ராஜீவ் காந்தி, அவருடைய மனைவி சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி என்று வரிசையாக ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். சுதந்திரப் போராட்டம் முடிந்த பிறகு இந்த காங்கிரசு கட்சியை கலைத்துவிடலாம், ஒவ்வொரு தலைவரும் அவரவர்கள் கொள்கையின் மூலம் மக்களுக்குப் பணி செய்து ஆட்சி செய்ய வரட்டும் என்ற நிலையை தொடராமல் விட்டதால் பரம்பரை ஆட்சி வந்தது. ஆனால் இன்று நம்முடைய இந்திய ஜனநாயகம், மிகப் பெரிய மாறுதலை ஏற்படுத்தி ஒரு சாதாரண தனி நபர் இந்தியாவை ஆட்சி செய்யும் அளவிற்கு வளர முடியும் என்பதை நிரூபித்துள்ளது. அதற்காக நம் இந்திய ஜனநாயகத்திற்கும், உயர்திரு மோடி அவர்களுக்கும் நம் பாராட்டுகள். பாராளுமன்றத்தில் இரண்டே உறுப்பினர்களை மட்டுமே கொண்ட ஒரு கட்சி இன்று ஆலமரமாக வளர்ந்து வரலாறு படைத்திருப்பது பாராட்டுதலுக்குரியது. இந்த ஜனநாயகத்தால் பிரதமர் மோடி அவர்களுக்குக் கிடைத்த இந்த மாபெரும் வெற்றியை மனதில்கொண்டு மக்களுக்காகப் பணியாற்றினால் மக்கள் அவர்களை காலத்திற்கும் மறக்காமல் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் வாய்ப்பை அளிப்பார்கள் என்பது உறுதி. காங்கிரசு பேரியக்கமே என்றாலும் இன்றைய மோசமான தோல்வியால் துவள வேண்டியதில்லை. உடனடியாக, நல்ல மக்கள் தலைவரை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதும் உண்மை. மீண்டும் அடி மட்டத்திலிருந்து கட்டமைப்பை உருவாக்க வேண்டிய இந்த நேரத்தில் தோல்விக்கு யார் பொறுப்பு என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காமல் மக்களுக்குப் பணியாற்ற ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் காங்கிரசு கட்சியின் நிலை கேள்விக்குறி ஆகிவிடும் அபாயம் உள்ளது என்பதே நிதர்சனம்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “ஜனநாயகம்

  1. குடியாட்சி என்று சொல்லி குடும்ப முடியாட்சிக்கு ஒரு முற்று புள்ளி வைத்தது இந்த‌
    தேர்தல் 2014.  ஒன்று/இரண்டு  உறுப்பினர்களைக் காட்டி மக்கள்சபையில் மந்திரிகள் வாங்கிய‌
    ஆட்சிகள் தான் இத்தனை காலமும் கண்டுள்ளோம். 
    பெருபாண்மை பெற்றதனால் கூட்டு ஆட்சிக்கும் ‘குட்பை ‘ சொல்லிவிட்டு
    தனது கட்சி மந்திரிகளாக வைக்காது தேர்தல் முன் கூட்டுகளுக்கும் மந்திரி
    சபையில்  இடமளித்தது  ‘தலைவன் என்பவன் இவன் தானெனும் ‘ தரத்திற்கு ஒரு சான்று.
    இங்கே  புதிய‌ மந்திரிகள் அநாவசிய செலவினங்களும் ஆடம்பர நவீனங்களும்
    செய்யாமல் கண்ணியமாக இருப்பது  நேரில் பார்த்த எனக்கும் உங்களின் நம்பிக்கைக்கும் அச்சாரம்.

  2. முதன் முறையாக நேரடியாக, தலைவனுக்காக கட்சி என்றில்லாமல் கொள்கைக்காக கட்சி எனும், கட்சி தொண்டர்களால் தேர்ந்து எடுக்கப்படாவிட்டாலும்  தொண்டர்களின் கருத்தை உணர்ந்து பிரதமர் வேட்பாளர் ஆனவர் என்பதாலும் புதிய வரலாறு படைத்த டீ மாஸ்டர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *